28/10/13

இந்த ஆண்டு கல்கி திபாவளி மலர் எனது 3 கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இது சினிமா100 க்கான சிறப்பு கட்டுரை 

கனவுலகத்தின் நவீன பிரம்மாக்கள்







நவீனமாகிறது  நமது கனவு தொழிற்சாலை

நூறாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ் சினிமாவின் பரிமாண வளர்ச்சியில் வெவ்வேறு கட்டங்களில் அது ஸ்டுயோ முதலாளிகள், தயாரிப்பாளர்கள்,  டிரிஸ்டிபியூட்டர்கள்,  கதாநாயகர்கள், டைரக்டர்கள் போன்றவர்களால் ஆளப்பட்டுவந்தது.  இன்று தமிழ் சினிமாவின் அத்தனை பகுதிகளையும் ஆளுவது டெக்னாலாஜி.  நம்ப முடியாத அளவிற்கு  சினிமாவின் பல முகங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் நம் திரையுலகத்தின் நவீன பிரம்மாக்கள். மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பது உண்மையானாலும்  நவீன தொழில்நுட்பங்களுடன் மிக வேகமாக நிகழும் மாற்றங்கள் நம்மை பிரமிக்க செய்கிறது.கடந்த ஆண்டு தயாரான படங்கள் 197. அதை இப்போதே கடந்தவிட்ட நிலையில் இந்த ஆண்டு 250 படங்கள் வரும் என்பது எதிர்பார்ப்பு. தமிழ் திரையுலகம் பல ஆண்டுகள் அனுபவம் நிறைந்த ஜாம்பவான்களிடமிருந்து நழுவி புலிபாய்ச்சலில் மாற்றியோசிக்கும் இளைஞர்களின் கைகளுக்கு போய்க்கொண்டிருப்பதற்கு இந்த நவீன தொழில் நுட்பமும் ஒரு  முக்கிய காரணம்.
கம்யூட்டர்கள் கதை சொல்லுகின்றன.
திரைக்கதை எழுதுவதிலிருந்து தியட்டர்களில் படம் காட்டப்படுவதுவரை அனைத்திலும் டிஜிட்டல் டெக்னாலஜி புகுந்து விளையாடுகிறது. சினிமா தயாரிப்பின் முதல் கட்டம் திரைக்கதை எழுதுவது. கதாசிரியர், அல்லது திரைக்கதை எழுதுபவர் இதற்காக பலநாட்கள் உழைப்பவர். ஒரு வெள்ளைபேப்பர் நீள் வசத்தில் இரண்டாக மடித்து பிரிக்கபட்டு அதில் ஒரு புறம் காட்சிகளின் இடம்,அமைப்பு, பாத்திரங்கள், அவர்களின் இடம் உடை,காலம் போன்றவைகளும்  எதிர்புறம்   அந்த காட்சி வசனங்களுடனும் விவரிக்கபடும். இது போல ஒவ்வொரு காட்சிகளும் எழுதப்படும். இன்று இதை எளிதாக, விரைவாக கம்யூட்டர்களில் செய்கிறார்கள். திரைக்கதை எழுதுவதெற்கென்றே தனி சாப்ட்வேர்கள் வந்துவிட்டன. தற்போது மார்க்கெட்டில் 27 வகையான சாப்ட்வேர்கள் கிடைக்கின்றன.  இவற்றில் சில இலவசம். இதை முதலில் தமிழ் சினிமாவிற்கு கொண்டுவந்தவர் கமல்ஹாசன். அவரது விருமாண்டி படம் தயாரிப்பில் இதை பயன்படுத்த துவங்கினார்.  படம் சம்பந்தபட்டவர்களிடம் பேசும்போது தன் லேப்டாப்பிலிருந்து  மூவி மேஜிக்  என்ற சாப்ட்வேர் மூலம் அமைக்கபட்ட திரைகாட்சிகளின் மூலம்  விபரங்களை காட்டினார். தொடர்ந்து மணிரத்தினம்  பைனல் டிராப்ட் என்ற சாப்ட்வேரை பயன்படுத்த துவங்கினார். ஆனால் இவைகளில் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதமுடியும்.. தமிழ் மொழியில் நேரடியாகவோ அல்லது தமிழ்வடிவ எழுத்துகளை பயன்படுத்தவோ முடியாதவை.  இம்மாதிரியான சாப்ட்வேர்களில் சில ஒப்பன் சோர்ஸ் என்ற முறையில் இலவசமாகக் கிடைப்பவை. அவற்றில் ஒன்று செல்டெக்ஸ்(celtx)  டாலர் தேசம் போன்ற பல புத்தகங்களை எழுதியவரும் டிவி சீரியல்களுக்கு திரைக்கதை எழுதுபவருமான    திரு    பா.ராகவன்


 இந்த சாப்ட்வேரின் மொழியை கற்றுகொண்டு அதை அக்குவேறாக பிரித்து ஆராய்ந்து தமிழில் எழுதும் வசதியையும் அமைத்தார். தனது தொடர்ந்த ஆராய்ச்சிகளினால் அதை மேலும் செம்மைபடுத்தியிருக்கிருக்கும். இந்த எழுத்தாளர் மென்பொருள் வல்லுனர் இல்லை. ஆர்வத்தால்.பல இரவுகள் முழித்து மாற்றியமைத்த இந்த இலவச மென்பொருள்,  இன்று  தமிழ் திரையுலகில் பலரால் பயன்படுத்த படுகிறது. ”கம்யூட்டரின் உதவி இல்லாமல் இனி திரைக்கதை எழுத முடியாது என்ற நிலை ஏற்பட்டுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் காட்சிஅமைப்பு விபரங்களை திரும்ப திரும்ப எழுதவேண்டியதில்லை, அது விரல்நுனியிலிருந்து விரியும் என்பது மட்டும் இல்லை. பல்வேறு விஷயங்களுக்கும் உதவுகிறது. ஒரு நடிகர் எத்தனை காட்சிகளில் எவ்வளவு நேரம் தேவைப்படுவார். அவரது காஸ்ட்டியூம், மேக் அப் எந்தவிதமாக செட் அமைக்கபடவேண்டும் அதில் எவ்வளவு காட்சிகள் எடுக்க படவேண்டும், எந்த மாதிரி லைட்கள் எப்போதெல்லாம் தேவை போன்ற பலவிஷயங்களை முதலிலியே தீர்மானிக்க முடியும்.சினிமா தயாரிப்பில் 60க்கும்மேற்பட்ட பிரிவினருக்கு உதவும்.  இதனால் தயாரிப்பு நேரம்,செலவுகளை சரியாக திட்டமிடவும் உதவுகிறது.” என்கிறார் ராகவன். இவர் இன்று ஒரே நேரத்தில் இதன் உதவியால் 5 டிவி சீரியல்களுக்கு திரைக்கதையும் வசனங்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்.  திரைக்கதை எழுதுவதில் மட்டுமில்லை  கதை  காட்சி அமைப்பு பற்றிய விவாதங்களில் கூட இன்று கம்யூட்டர்கள் நுழைந்திருக்கிறது. உதவி டைரக்டர்கள்,அசோசியட்களுடன் இரவு நேரங்களில்  இண்டர்னெட் வீடியோ சாட்டில் விவாதிக்கிறார் ஒரு டைரக்டர். காதாசிரியர்களை,கத்தைகதையாக பேப்பர்களுடனும் கிளிப்போர்டுடனும்  செட்களில் பார்த்த காட்சி மாறி இன்று லாப்டாப்புடனும்,டேப்லட்களுடனும்  ஐ பேட்களுடனும் பரபரப்பாக இயங்கும் இளைஞர்களை பார்க்க முடிகிறது.

எலக்டிரானிக் திரை இசை

ஒரு திரைபடத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் ஒரு முக்கிய காரணம். பல ஆண்டுகளுக்கு முன் எம் எஸ் விஸ்வநாதன் ”எங்கே நிம்மதி” என்ற பாடலுக்கு  நூற்றுக்கும் மேற்பட்ட வாத்தியங்களை பயன்படுத்தினார். அந்த பாடலுக்காக பலநாட்கள் பயற்சி, பலமுறை ரீடேக் எல்லாம். ஆனால் இன்று திரைப்பட ஸ்டூடியாக்களில்  ரிகார்டிங் தியட்டர்களில் லைவ் ரிகார்டிங் என்பதே குறைந்து விட்டது. ஏ ஆர் ரஹ்மான் போட்ட பிள்ளையார் சுழியை தொடர்ந்து இன்று அனேகமாக எல்லா பெரிய இசைஅமைப்பாளார்களும்  சொந்த  நவீன ரிகார்டிங் தியட்டர்கள் வைத்திருக்கிறார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்  உடன் பாடவேண்டியவருக்குபதிலாக வேறு குரலை  டிராக்கில் பதிவு செய்து அதை பின்னர் மாற்றிக் கொள்வது புதிய தொழில் நுட்பமாக அறியபட்டது. இன்று 60 டிராக்கள் வரை வசதிகள் இருப்பதால் பாடுபவருக்கே தன் பாடல் எப்படி  வரும் என்பது சிடி உருவாகும் வரை தெரியாது. தனியாக பதிவு செய்யபட்ட பின்னணி இசையுடன் சில இசைக்கருவிகளின் இசை,இடையே வரும் ஒலிகள்  எல்லாம் கம்யூட்டகளின் உதவியுடன் மிக்ஸ் செய்யபடுகிறது. இதை கையாளும்போது தன் இசைஞானத்தை சரியான இடத்தில் அதி நவீன டெக்னாலஜியுடன் இணைத்து பயன்படுத்துவதினால் ஏ.ஆர் ரெஹ்மான் உலக சினிமாவையே தன் வசப்படுத்துகிறார். இன்று பல இசை  அமைப்பாளர்கள் இவரைப் பின்பற்றி தங்கள் தியட்டர்களை  நவீன ரெக்கர்டிங் டெக்கானலிஜிகளுடன் புதுபிக்கிறார்கள்.  டிஜிட்டல் தொழில்நுட்பம் இசையிலும் செயல்பட ஆரம்பித்ததின் பலன், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், விஜய் ஆண்டனி, கே எனப் பல இளைஞர்கள் அடுத்தடுத்து தமிழ் திரையிசை உலகில் நுழைந்திருக்கிறார்கள். இன்று தமிழ் இசையமைப்பாளர்களின் சராசரி வயது 25 என்பது ஆச்சரியமான உண்மை.

ஒப்பற்ற ஒலிப்பதிவு  

 இசையை அடுத்து இன்று ஒரு படத்தின் வெற்றியை நிர்ணையக்கும் பல விஷயங்களில் ஒன்று ஒலிப்பதிவு. “இப்போது ஸ்டீரியோ ஒலிப்பதிவிலிருந்து வெகுதூரம் வந்து விட்டோம். அதுவும் 2000 ஆம் ஆண்டு டிஜிட்டல் வந்ததிலிருந்து தொடர்ந்து மாற்றங்கள்.  ஒன்றை நன்றாக கற்றுகொள்வதற்கு புதிதாக ஒரு டெக்னலாஜி வந்துவிடுகிறது. ஒலிப்பதிவு செய்யபட்ட டேப்பக்ளுடன் போராடி அனலாக் முறையில் ரிகார்டிங் செய்ததெல்லாம் மலையேறி போய்விட்டது. இன்று தமிழ் சினிமாவில் இதுவரை பயன்படுத்தபட்டு வந்த 5.1 மிக்ஸ்ர்கள் மாறி ”டோல்பிஅட்மோஸ்,7.1,” அரோ 3 டி11.2 போன்ற நவீன முறைகளில் ஒலிப்பதிவுகள் செய்யபடுகிறது, இவைகள் ஹாலிவுட்டில் பயனபடுத்தப்படுபவை என்கிறார் திருமதி கீதா


 இவர் 350 திரைப்பாடங்களுக்கு மேல் ஒலிப்பதிவு செய்தவர். டோல்பி அட்மோஸ் என்ற  அதிநவீன ஒலிப்பதிவு முறையை  இந்தியாவில். முதலில் பயன்படுதியவர். சிவாஜி, ஷோலே போன்ற படங்கள் 3D யில் மறுபிறவி எடுக்கும்போது 3டி ஒலிப்பதிவை அமைத்தவர். டெக்னாலாஜி மட்டுமில்லை,டைரக்டர்களூம் நிறைய மாறியிருக்கிறார்கள். தங்களுக்கு தேவையானதை தெளிவாக சொல்லுகிறார்கள். வெங்கட்பிரபு தன் கோவா படத்தில் ஒலியும் படத்தின் காலத்தை சொல்ல வேண்டும் என்றார். அதனால் முதலில் வரும் 40 நிமிட கிராமகாட்சிகளில் பழையபாணிஸ்டிரியோ ஒலியும் பின்னர் கோவா காட்சிகளில் 5.1 முறையையும் பயன்படுத்தினேன்.  ஆனால் இந்த துல்லிய ஒலிவேறுபாட்டை சரியாக எல்லா தியட்டரிலும் கேட்கமுடியாததால். முதல் 40 நிமிடம் ஒலிப்பதிவு சரியில்லை என்றும் நகர் புறங்களிலிருந்து விமர்சனம் எழுந்தது.டெக்னாலிஜியினால் இம்மாதிரி பிரச்சனைகளும் வருவதுண்டு.  என்கிறார், ஒலிப்பதிவு மேதை ஸ்ரீதரிடம் பயிற்சி பெற்ற  இந்த இந்தியாவின் முதல் பெண் டிஜிடல் சவுண்ட் டிசைனர்..
பிலிமே இல்லாத சினிமா.
திரைப்பட தயாரிப்பில் மிக முக்கிய செலவு ரா ஸ்டாக் என்று சொல்லப்படும் பிலிமாக்கானது. இன்றைய டிஜிட்டல்யுகத்தில் பிலிம் என்பதே கிடையாது. படங்கள் டிஜிட்டலில் எடுக்கபடுகிறது.  துவக்கத்தில் சிலபகுதி டிஜிட்டல் சிலபகுதி பிலிம் என்று எடுத்து  இணைத்துகொண்டிருந்தார்கள். இன்று முழுப்படமுமே டிஜிட்டல் முறையில் தான் எடுக்க்படுகிறது. முழுவதும் டிஜிட்டலில் எடுக்கபட்ட  முதல் தமிழ்படம் பிஸி ஸ்ரீராமின் வானம் வசப்படுமும் கமலின் மும்பாய் எக்ஸ்பிரஸும்.. டிஜிட்டலில் படமெடுப்பது  இன்றைய தயாரிபாளர்களுக்கு வரப்பிரசாதம். ஒரு 3 மணி நேர படமெடுக்க 18000 அடி பிலிம் தேவை., பிலிமுக்காக பலகோடிகள் செலவாகும் இதை டிஜிட்லில் எடுத்தால் 10 லட்சம் தான் ஆகும் பிலிமுக்கு ஆகும் செலவு இல்லாதது மட்டுமில்லை. பிரிண்ட்களுக்காக செலவழிக்கவும் வேண்டாம். வேறு பல வதிகளும் இருக்கின்றன.

சினிமாவை எடுக்கும்போதே பார்க்கலாம்

எடுத்துகொண்டிருக்கும் காட்சியை எடுக்கும்போதே மானிட்டர் என்ற சின்ன டிவி திரையில் பார்க்க முடியும்  அவசியமானால் காட்சிகளை மாற்றி அமைத்துகொள்ள முடியும். பிலிமாக இருந்த காலத்தில் எடுத்ததை  லாபிற்கு அனுப்பி பிரிண்ட் எடுத்து ரஷ் போட்டு பார்க்க எவ்வளவு வேகமாக செய்தாலும் இரண்டு நாள் ஆகும்.  இதனால் நிறைய நேரம் மிச்சமாகிறது. காட்சிகளை கச்சதிமாக திட்டமிட்டபடி  அதிக ரீஷூட் இல்லாமல் எடுக்கமுடிகிறது.  என்கிறார்கள் டைரக்டர்கள்.
. டிஜிட்டல் சினிமாவில் மிகப்பெரிய பங்கு இப்போது  ஒளிப்பாதிவாளர்கள் பயன்படுத்தபடும் நவீன கமிராகளுக்கு இருக்கிறது என்கிறார். ஒளிப்பதிவாளார் திருவிஜய் ஆர்ம்ஸ்டிராங்.


 ரெட்ஒன் என்ற கமிராவின் பலவகைகளிலிருந்து  லேட்டஸ்டாக அறிமுகபடுத்தபட்ட எபிக் கேமிராக்கள்வரை தமிழ் படங்களில் பயன்படுத்தபடுகிறது.  ஆரம்பத்தில் டிஜிட்டல் கேமிராக்கள்  மீது பல அவநம்பிக்கைகள் இருந்தன. பிலிமுக்கு மாற்றாக இருக்குமா? தரம் இருக்குமா? என்ற கேள்விகள் எழுப்பட்டன. டிஜிட்டல் தொழில் நுட்பம் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பெற்றுவிட்டது என்பதற்கு  வழக்கு எண், அட்டகத்தி,பீட்சா, போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமில்லாமல் பில்லா-2 மாற்றான், துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற மெகா பட்ஜெட் படங்களிலும் டிஜிட்டல் கேமிராக்கள் பயனபடுத்தபட்டிருப்பதை சுட்டி காட்டுகிறார். நொடிக்கு 200பிரேம்கள்,குறைந்தவெளிச்சத்தில் படம் சிறிய இடங்களில் கூட கேமிராவை வைப்பது போன்ற பல வசதிகள் இருப்பதால் இனி டிஜிட்டல் கேமிராக்களை பயன்படுத்தாமல் படங்கள் உருவாகாது என்கிறார் விஜய் ஆர்மஸ்டிராங். இவர் பத்திரிகை புகைப்படக்காராக  துவங்கி திரைப்பட ஓளிப்பதிவளாராக உயர்ந்திருப்பவர்.  டிஜிட்டல் கேமிராக்களை ஆராய்ந்து விபரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். புதிய ஓளிப்பதிவாளார்களின் உதவிக்காக தன் ஓளியுலகம் வலைபக்கத்தில்  எழுதிவருவர்.

கத்திரி பயன்படுத்தாத எடிட்டிங்.

இதைபோலவே எடிட்டிங் துறையிலும் டிஜிட்டிலினால் மிகப்பெரிய மாற்றம். பிலிம் சுருள்களை வெட்டி ஒட்டி நீளத்தை குறைப்பதெல்லாம் இல்லை. வெட்டபடவேண்டிய காட்சிகள் மாற்றவேண்டிய காட்சிகள் என பட்டியலிடபட்டு ஒரே நேரத்தில் கம்யூட்டரின் மூலம் இணைக்கபடுகிறது, இதிலும் பல நவின கருவிகள் பயனபடுத்தபடுகிறது. எடுத்த காட்சிகளில் வண்ணம் சேர்க்க, மெருகுட்ட டிஜிடல் டெக்னாலஜி உதவுகிறது. விருமாண்டி படத்தில்   இரவின் நிலவொளியில் கமலும் நாயகியும் ஒரு மொப்பட்டில் பயணம் செய்யும் பாடல் காட்சி பகலில் படமாக்கபட்ட ஒன்று. அதை இரவாக  நாம்பார்த்தது கம்யூட்டரின் உபயம்.

பிரமிக்கவைக்கும் மாஜிக்குகள்

டிஜிட்டல் டெக்னளாஜி எழுப்பியிருக்கும் இன்னொரு அலை படங்களின் காட்சிகளில் ஆச்சரியங்களை காட்டுவது. டிரிக்‌ஷாட் என்று சொல்லபட்ட தந்திரகாட்சிகள் கம்யூட்டர் கிராபிக்ஸ் என்று அறிமுகமாகி இன்று விஷுவல் எபெக்ட் ஆக  வளர்ந்திருக்கிறது. சிறிதும்பெரிதுமாக பல VFX ஸ்டுடியாக்கள் இயங்குகின்றன. ஸ்டூயோக்கள் மட்டுமில்லை திறமையான தொழிநுட்ப கலைஞர்களும் பெருகிவருகின்றனர். தமிழின் முதல் 3 டி படமான அம்புலியில் பணியாற்ற வந்த ஒரு ஹாலிவுட் டெக்னிஷியன்  இங்குள்ள  தொழிநுட்ப கலைஞர்கள் ஹாலிவுட்கார்ர்களுக்கு  இணையாக பணியாற்றுவதாக சொல்லி பாராட்டினார்.  ஹாலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்கும் இடையேயான இடைவெளி சுருங்கிவிட்டது.  இன்று பல ஹாலிவுட் படங்களுக்கு VFX பணிகள் சென்னையிலும் பங்களுருவிலும் நடைபெறுகிறது. VFX டெக்னாலாஜியை  சரியாக பயன்படுத்தினால் பெரிய ஹீரோக்கள் இல்லாமலே ஒரு சூப்பர் சக்ஸ்ஸ் படத்தை கொடுக்க முடியும் என நிருபித்தது “ஈ’  படம்.  அதன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தவர் 10 ஆண்டுகளுக்கும்               மேல் இந்த துறையில் அனுபவம் மிகுந்த  திரு கமலகண்ணன்.
ஹாலிவுட் திரைப்படங்களில் வெற்றிபெற்ற படங்களில், பத்தில் ஒன்பது படங்கள் விஷுவல் எபெக்ட்டை பயன்படுத்தியதாகவே இருக்கும். ரஷ்யாவில் கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக இந்த நிலைமை உள்ளது. ஈரானிய படங்களில் இந்த தொழில்நுட்பத்திற்கு பெரிய வேலை இல்லை. இந்திய திரைப்பட உலகைப் பொறுத்தவரை ஒரு படத்தில் அனைத்து அம்சங்களையும் சேர்க்கவேண்டிய நிலை உள்ளது. வெறும் நகைச்சுவை, வெறும் ஆக்ஷன் என்ற வகைகளில் இங்கே முழுமையாக வரவில்லை. கதையில் விஷுவல் எபெக்ட்ஸை சேர்க்கும் நிலைதான் இருந்திருக்கிறது. விஷுவல் எபெக்ட்ஸை அடிப்படையாக வைத்தே கதை சொல்லும் படங்கள் இங்கு அதிகம் வரவில்லை. அப்படி பெரிய அளவில் வந்த படமாக தெலுங்கில் மஹதீராவைச் சொல்லலாம். தசாவதாரம் படத்தையும் குறிப்பிடவேண்டும். இப்போது இந்தியாவில் விஷுவல் எபெக்ட்ஸை அடிப்படையாகக் கொண்டே திரைக்கதையை சிந்திக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.  என்கிறார். வரப்போகும் கோச்சடையான் இன்னும் லேட்ஸ்டான டெக்னலாஜியான  மோஷன் கேப்சர் என்னும் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி வரப்போகிறது.  ஒரு நடிகரின் நடை உடை பாவனைகளை கணிப்பொறியில் உருவாக்கி ஒரு பொம்மை மேல் செலுத்தி அதை அசையவைக்கும் இந்த டெக்னலாஜியில்  நடிகரின் குணபாவம் அந்த பொம்மைக்கு மாறும். நான் இதை எளிதாகச் சொல்கிறேன். நிறைய சிக்கல் உள்ள தொழில்நுட்பம் இது”   என்று சொல்லும் கமலகண்ணன் வரும் காலங்களில் காலத்தின் கட்டாயத்தால் தமிழ் படத்தில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்கிறார்.
பரிட்சை எழுதிய மாணவன் ரிஸல்ட்க்காக காத்திருப்போல் தயாரிப்பாளார்களும், படம் எப்படியிருக்கிறது என்பதை முதல்நாளே பார்க்கத்துடிக்கும் ரசிகனும் எதிர்நோக்கியிருக்கும் திரையிடல் தான் சினிமா தயாரிப்பின் இறுதி கட்டம். திரையரங்குகளில், ‘பொட்டிக்காகக் காத்திருந்த காலம் எல்லாம் காலாவதியாகிவிட்டன..இபோது  இந்த  ரீல் என்ற ஃபிலிம் சுருளே கிடையாது. திரைப்படம் டிஜிட்டல் ஆகிவிட்டதால் சேட்டிலைட் மூலமாகவும், கியூப் என்ற ஹார்டு டிஸ்க் மூலமாகவும் திரையிடும் நவீன புரஜெக்டர்கள், சிறுநகரங்களில் இருக்கும் அரங்குகளுக்குக்கூட வந்துவிட்டன.  தயாரிப்பளார்கள் தரும் பாஸ்வேர்ட்களை பயன்படுதினால் தான் படத்தைபுரஜக்டர்களில் காட்டமுடியும். அதுவும் ஒப்பந்த காலத்திற்கு பின்னர் தெரியாது. அவசியமானால் பணம்கட்டி அல்லது புதிய ஒப்பந்தம் போடவேண்டும். தயாரிப்பாளர்களுக்கு தெரியாமல் சில காட்சிகள் ஓட்டுவது என்பதெல்லாம் இனி முடியாது. ஓடிய காட்சிகளின் விபரங்கள் தினசரி கம்ப்யூட்டர் பதிவு செய்து கொள்ளும்.
பலநகர்புறங்களிலும், சிறுநகரங்களிலும் பல தியட்டர்கள் மூடபட்டதிற்கு டிஜிட்டல் டெக்னலாஜியும் ஒரு காரணம். வளர்ந்துவரும் தொழில் நுட்ப சவால்களை சமாளிக்க புதிய டிஜிடல் ப்ரொஜக்டர், ஒலி அமைப்புகளில் முதலீடுசெய்ய  முடியாமல் ரியல் எஸ்டேட் பக்கம் போய்விட்டார்கள் சிறு தியட்டர்காரகள். பல திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் கலாசாரம் உருவெடுத்து நாடுமுழுவதும் பிரமாண்டமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.  இன்று இந்தியாவில் 1400 மல்டிபிளக்ஸ் இருக்கிறது. தமிழகத்தில் 50.   நல்ல ரம்மியமான சூழலில், சுத்தமான டாய்லெட் வதிகளுடன் இருக்கும் இந்த வகை தியட்டர்களுக்கு  சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது  என்கிறார். திருமதிஅர்ச்சனா கல்பாத்தி.



  இவர் சென்னையில் இரண்டு பெரிய மல்டிபிளக்ஸ் தியட்டர்களை நிறுவி நடத்துபவர். தமிழ் நாட்டில்   வரும் 5 ஆண்டுகளில் மல்டிபிளக்ஸ்தியட்டர்கள் மூலம்  100 திரைகளை உருவாக்க திட்டமிட்டிருப்பவர்.. ”ஒரே புரெஜக்கடர் ரூமிலிருந்து பல தியட்டர்களுக்கு படம் காட்டும் வசதியிருப்பதால் நிர்வாக செலவு குறைவதோடு கண்கணிப்பதும் எளிது” என்று சொல்லும் இவர்  இம்மாதிரி ஆடம்பர தியட்டர்களில் கட்டணம் அதிகம் என்பதை ஏற்கவில்லை. சதாரண தியட்டர்களை போல மல்டிபிளக்ஸில் முதல் நாள் அதிக கட்டணம் கிடையாது, ஆன்லைன் டிக்கட் முறை பாப்புலாரக இருப்பதால் பிளாக் மார்கெட் டிக்கெட், நீண்டகீயூ என்பதும் கிடையாது  என்கிறார். மாநில முழுவதும் பல திரைகளில் ஒரே படம் திரையிடப்படுவதால் முதல் வார கலெக்‌ஷனே  முன்காலங்களில் 100 நாள் ஓடிய கலெக்‌ஷன்களை விட அதிகம் என்கிறார் திருமதி அர்ச்சனா.   அமெரிக்காவில் ஆர்ட்பிஷியல் இண்ட்லிஜென்ஸும், நிர்வாக இயலும் படித்திருக்கும் இவர் இந்தியாவில் பல மல்டிபிளக்ஸ்களை உருவாக்கி நிர்வகிக்கும் முதல் பெண் நிர்வாகி..

எதிர்காலம் எங்கள் கையில்,

டிஜிட்டல்சினிமா இளைஞர்களை ஈர்க்கிறது. டிவி சானல்கள்குறும்படங்களை மதிக்கின்றன. அதனால்  ஆர்வம் மிக்க நன்கு படித்த இளைஞர்கள் துணிவுடன் தங்கள் தயாரிப்பை யூடியூபில் விசிட்டிங் கார்டுகளாக்கி தடம் பதிக்க துவங்கியிருக்கிறார்கள். டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் சினிமாவை மாற்றமுடியும். ஆனால் கோடிகளை கொட்டி அதிநவீனமாக தயாரிக்கபட்டிருந்தாலும் கதையும் நடிப்பும் கவரவில்லை என்றால் ஒரே வார்த்தையில் விமர்சிக்கும் ரசிகனின் மனதை மட்டும் மாற்றமுடியாது. .

25/10/13

ரஜனியை அமெரிக்காவிற்கு அழைத்த அமெரிக்க அமைச்சர்


அமெரிக்காவில் மெரிலாண்ட் மாநிலம் தலைநகர் வாஷிங்டன் அருகில் இருக்கும் ஒரு சின்ன செல்வாக்குள்ள பணக்கார மாநிலம் அந்த மாநிலத்தில் ”செகரிட்டரி ஆப் ஸ்டேட்” என்ற அரசின் உயர்ந்த பதவிவகிக்கும் நடராஜன் ஒரு  இந்தியர். தமிழர். நம் மாநில காபினெட் அமைச்சருக்கு நிகரான இந்த பதவியில்  ஒரு அமெரிக்க மாநிலத்தின் கவர்னரால்  நியமிக்கபட்டிருக்கும் முதல் இந்தியரும் இவரே.  .

அமெரிக்காவில்  மாநிலங்கள்  நாட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கேற்ப  தங்கள் மாநில வெளியுறவுதுறையை அமைத்துகொள்ளும். மெரிலாண்டில் அயல் நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பது,  தொழில் வளர்ச்சிக்கு அவர்கள் மூலம் உதவுவது, தொழில் நுட்ப பறிமாற்றம், அன்னிய முதலீடுகள செய்வது, , பெறுவது போன்ற விஷயஙகளை கவனிக்கும் துறையை கவனிப்பவர் இவர். இந்தியா உள்பட 10 நாடுகளை கவனிக்கும் இவர்  மாநில கவர்னர் இந்த நாடுகளுக்கு பயணம் செய்யும் முன்னதாக  சென்று முன் ஆயுத்த பணிகளையும் செய்பவர்.
பல புலம்பெயர்ந்த இந்தியர்களைபோல சவாலாக துவங்கி உழைப்பை மட்டுமே நம்பி உயர்ந்தவர் இவர்.     சென்னை பல்கலைகழகத்தில் பயோ டெக்கில் பிஹெச்டி முடித்த பின் 1989ல் அமெரிக்கா வந்து. மிக்சிக்கன் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானியாக பணியாற்றிய பின் இளம் வயது கனவான பிஸினஸ் செய்ய தன்னை தயார்செய்துகொள்ள ஏம்பிஏ படித்தவர். . துவக்கிய தொழிலில் கிடைத்தது தோல்விகள் உட்பட பல அனுபவங்கள். பின்னர், பல பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், தலைவராகவும் இருந்த  இவருக்கு நிறைய தொழில் அதிபர்களின் அறிமுகங்களும். ஆசிய பசிபிக் நாடுகளின் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராகும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.  இதிலும் இந்தியா ரவுண்ட்டேபிள், மேரிலாண்ட் சேம்பர்ஸ் போன்றவைகளிலும் நிறைய ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்த நேரத்தில் அந்த மாநில  கவர்னர் தேர்தல் வந்தது. அதற்கு போட்டியிட்ட மார்ட்டின் ஒமேலாவுக்காக(Martin o’malley) ஆதரவு திரட்டியிருக்கிறார். ஏற்கனவே ஒபாமாவின் மாநில தேர்தல் குழுவில் பணியாற்றிய  இவரது அனுபவம்  கவர்னர் ஒமேலாவின் வெற்றிக்கும் உதவியிருக்கிறது.
அமெரிக்க அரசியலில் . மக்களால் தேர்ந்தெடுக்க படும் அமெரிக்க அதிபரும்,மாநில கவர்னர்களும்  நிர்வாகத்தை செம்மையாக நடத்த தகுதியுள்ள ஒழுக்கமான, மக்களுடன் அதிகம் தொடர்புள்ள திறமையானவர்களை தேர்ந்தெடுத்து தங்களுக்கு உதவ அமைச்சர்களாக நியமித்துகொள்வார்கள். தேர்ந்தெடுக்கபட்ட கவர்னர்  கடந்த ஆண்டு ராஜனை வெளியுறவு  துறைக்கு இணைச்செயலாளாராக நியமித்திருக்கிறார்.
மெரிலாண்டிலுள்  பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆலோசனைகள் வழங்கி அதுகுறித்து இந்திய தொழில் முனைவோரிடமும் நம் மாநில அரசுகளுடனும் தொடர்ந்து தொடர்பிலிருக்கும் இவர் மெரிலாண்ண்டில் பல விதமான தொழில்களுக்கு வாய்ப்பிருப்பதாகவும் ,விரும்புவோருக்கு உதவ காத்திருப்பதாகவும் சொல்லுகிறார்.

இவர் தன் சமீப பயணத்தில் சந்தித்தது  ரஜினிகாந்த்தை.. மாநிலமக்கள் சார்பில் கவர்னர் அளித்த வாழ்த்து மடலையும் தங்கள் மாநிலத்திற்கு வருகை தர அழைப்பும். அளித்த  ராஜனிடம்  ரஜினி சொன்னது” ஒரு தமிழன் அமெரிக்காவில் மந்திரியாகயிருப்பது தமிழ் நாட்டுக்கு பெருமையான விஷயம்”
 புதுகோட்டை மாவட்டத்திலுள்ள முத்துகாடு  என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் மின்சார வசதி  இல்லாத காலத்தில் கஷ்டங்களுடன் படித்து வளர்ந்த ராஜன் தான் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி, இந்தியா வரும்போது  தவறாமல் தன் கிராமத்திற்கு வரும் ராஜன் தான் படித்த பள்ளியில் தேசத் தலைவர்கள் படங்களுக்கிடையே  முன்னாள் மாணவர் என்று என் படமும் மாட்டபட்டிருப்பது  அமெரிக்க அரசில் அமைச்சராக இருப்பதை விட பெருமையான விஷயமாக நினைக்கிறேன்.” என்கிறார்.
கல்கி 03/11/13
              

13/10/13

ரோபோக்கள் புத்திசாலிகள்

நிஜமாகவே  ஒரு சிட்டியை சிருஷ்டிக்கிறார் இவர் 

எந்திரன் படத்தில் வந்த “சிட்டி”யை நினைவிருக்கிறதா?  எழுத்தாளார் சுஜாதாவின் கற்பனையில் பிறந்த, இயக்குனர் சங்கரின் கைவண்ணத்தில் எழுந்த அந்த சிந்திக்கும் எந்திரனை நிஜமாகவே உருவாக்கியிருக்கிறார்  ஒரு விஞ்ஞானி.   திரு. ஜெகன் நாதன் சாரங்கபாணி.  தமிழ் நாட்டுகாரர். அமெரிக்க மிஸ்சோரி பல்கலை கழகத்தில்  நீண்ட நாட்களாக ஆராய்ச்சி பணியிலிருப்பவர்.  ரோபோட்க்களை வடிவமைப்பதிலும், அதை மேம்படுத்துவதிலும் உலகின் பல இடங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுகொண்டிருந்தாலும்  முன்னணியில் இருப்பது இவருடையது தான்.  சொன்னதை செய்வது ரோபோட். சொல்லாமலேயே மனிதனை போல  பணியிலிருக்கும்  போதே தன்னிச்சையாக சிந்தித்து  ரோபோக்களை செயல்பட வைக்க முடியமா? என்பது தான் இவரது  ஆராய்ச்சி.  நீண்ட கால தொடர் முயற்சிகளுக்கு பின்னர் இவரது தலமையில் குழுவினர் உருவாக்கியிருப்பது ரோபோக்களுக்கான மூளை.. மனித மூளையில் இருக்கும் கட்டுபாட்டுகேந்திரத்தைபோல வடிவமைக்கப்பட்ட ஒரு குட்டி கம்யூட்டர்முளை பொருத்த பட்ட  ரோபோட் மனிதனைபோலவே சிந்தித்து, தேவையானதை புரிந்து  கொண்டு வேலைகளை செய்யும். இவரது  தலமையில் இயங்கும் ஒரு 14 ரோபோடிக்ஸ் விஞ்ஞானிகளின் குழு இதை சாதித்திருக்கிறது. இந்த வகை ரோபோட்க்களுக்கு  செய்ய வேண்டிய பணிகளையும் இலக்குகளையும் சொல்லிவிட்டால் அதைபுரிந்து  கொண்டு தேவையானதை செய்துகொள்ளும். ஒரு பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்    பத்து புல்டோசர்களை   கட்டளைகளின் படி இயக்கி கட்டுபடுத்துகின்ற தலைவன் ரோபோட் அவைகளில் ஒன்று சரியாக இயங்கவில்லை என்றால்  உடனே அதை பழுது பார்க்கும் பணியிலும் ஈடுபடும். அல்லது மாற்று ஏற்பாடுகளுக்கு கட்டளைகள் கொடுக்கும். தலமைரோட்டுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே அடுத்த ரோபோ தலமைப்பொறுப்பை ஏற்கும்.  

இதன் இந்த அலசும், சிந்திக்கும் திறனைகள படிப்படியாக உயர்த்துவதற்கான ஆராய்சிகளை தொடர்ந்து கொண்டிருக்கும்  ஜகன்நாதன் வரும்காலங்களில் ரோபோட்டால் மனிதனைப்போல சிரிக்க முடியும், கோப பட முடியும்,செயற்கையாக அமைக்கபட்ட பைபர் முகத்தில்  உணர்வுகளைகூட காட்ட முடியும் என்கிறார். சொல்லாதைவைகளையும் புரிந்து கொண்டு செயலாற்றும் ரோபோட்களை உருவாக்குவதுதான் எங்கள் ஆராய்ச்சியின் இலக்கு என்று சொல்லும் ஜெகன்நாதன் சாரங்கபாணி அமெரிக்கா வாழ் தமிழர். படிப்பில் புலி. பள்ளிக்காலத்திலிருந்தே எல்லா  வகுப்புகளிலும் முதல் மாணவர். தொடர்ந்து மெடல்களும் பரிசுகளும் பெற்ற இவர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் 3  தங்க மெடல்களூடன்  பி.ஈ படிப்பு முடித்த பின் அமெரிக்காவிற்கு படிக்க சென்றார்.  அங்கும் படிப்பில் பல வெற்றிசாதனைகளை படைத்தவர். முதல் டாக்டரேட் பெற்றவுடேனேயே முழுநேர ஆராய்ச்சி பணிகளை விரும்பி ஏற்ற இவர்  கம்ப்யூட்டர் சயின்சை தொடர்ந்து ரோபோட்டிக்ஸ்ஸில் ஆர்வம் அதிகமாகி புதிய படைப்புகளை உருவாக்கி  அதற்கான காப்புரிமைகள் பெற ஆரம்பித்தார்.
இப்படி இதுவரை பெற்றிருப்பது 20 உரிமைகள். போயிங் போன்ற பல பெரிய நிறுவனங்களிலும், அமெரிக்க ராணுவ துறையில் அவைகள் பயன்படுத்தபடுகின்றன. 109 ஆராய்சிகட்டுரைகளயும், பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.  அமெரிக்க பல்கலைகழங்களில் ஆராய்ச்சி பணிகளை தொடரும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான நிதி ஆதாரத்தை அதன் துறை தலைவர்களுக்குதான் அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் வழங்கும்.  அந்த வகையில் இவர் பொறுப்பிலிருக்கும் நிதி 13 மில்லியன் டாலர்கள். இவரிடம் ஆராய்ச்சி மாணவராக இருப்பதே மிகப் பெரிய கெளவரமாக கருதப்படுவதால் உலகின் பலநாடுகளின் ஆராய்ச்சி மாணவர்கள் சேர காத்திருக்கின்றனர்.  இந்த துறையில் சாதிக்க இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன வாருங்கள் என ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறார்.


சிந்திக்கும், சிரிக்கும், கோப்படும் ரோபோட்க்கள் காதலிக்குமா?  ”நாங்கள் படைக்கும் ரோபோக்கள் புத்திசாலிகள்” என்கிறார் ஜகன்நாதன்.


கல்கி 30/10/13

5/10/13

ஒபாமாவின் அதிரடியினால் ஆடிப்போன அமெரிக்கா !

அமெரிக்க அதிபர் ஒபமா அறிவித்திருக்கும்ஷட்-ட்வுன்”  மூலம் 8 லட்சம் பேர் ஒரேநாளில் வேலையிழந்திருக்கின்றனர்  அமெரிக்கபொருளாதாரம் ஆடிப்போயிருக்கிறது ஏன்?
 --ஒரு அலசல்

உலக பொருளாதாரத்தையே மாற்றியமைக்ககூடிய சர்வ வல்லமை வாய்ந்த அமெரிக்க நாட்டின் அரசாங்கம் ஒரே இரவில் செயலிழந்து நிற்கிறது. வழக்கம் போல் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த பலர்  வேலை போன செய்தியை காலையில் டிவியில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்., காரணம்.  அதிபர் ஒபாமாவினால் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டிற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறமுடியவில்லை.



 அரசின் கஜானாவிலிருந்து அரசாங்கத்தினால் பணம் எடுக்க முடியாத நிலையில் அரசின் பலதுறைகள்  இழுத்து  மூடபட்டு    8 லட்சம் நேரடிஊழியர்களுக்கும் 10 லட்சம் பகுதிநேர ஊழியர்களுக்கும் அடுத்த 6 மாதம் வரை சம்பளம் இல்லாத விடுமுறை அறிவிக்கபட்டிருக்கிறது. முதியோர் பென்ஷன்கள் நிறுத்திவைக்கபட்டிருக்கிறது.

ஏன் பட்ஜெட் நிறைவேறவில்லை?                    

அமெரிக்க நாடளுமன்றத்தில் இரண்டுசபைகள். ஓன்று நமது மக்களவைக்கு நிகரான பிரதிநிதிகளின் சபை. இதில் குடியரசு கட்சிதான் மெஜாரிட்டி. மற்றொன்று நமது மேலவைக்கு நிகரான செனட், இதில் ஒபாமாவின் கட்சியான ஜனநாயக கட்சிக்குதான் மெஜாரிட்டி.  கடந்த அதிபர் தேதலில் ஒபாமா முன்வைத்த ஒரு விஷயம். நமது அரசு காப்பீட்டு வசதி.போல  ”ஒபாமா ஹெல்த்கேர்” என்ற சாமானியனுக்கு மருத்துவ இன்ஷ்யூரன்ஸ் திட்டம்.  மருத்துவ செலவு மிகமிக அதிகமாகயிருக்கும் அமெரிக்காவில் இந்த இன்ஷ்யூரன்ஸ் அரசு, தனியார்பணியிலிருப்பவர்கள் மற்றும்  வேலையில்லாத, எளிய மக்களுக்கு உதவப்போகும் என்பதினால்  மக்களிடம் ஆதரவு இருந்தது ஒமாபா வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.   ஆனால்  வரி பணத்தை வரியே செலுத்தாதவர்களுக்கு சமூகநலதிட்டங்கள் என்ற பெயரில் செலவழிப்பதை  குடியரசு கட்சி எதிர்த்தது. அதிபர் தேர்தலில் அதன் கட்சி வேட்பாளார்  வெற்றிபெறாதாதால் இந்த திட்ட்த்திற்கு தங்கள் எதிர்ப்பை காட்ட ஒரு  சந்தர்ப்பதிற்காக காத்திருந்தது. அதனால் பட்ஜெட்டை நிறைவேற்றாமல் இழு பறி செய்தது கொண்டிருந்தது.
நிதிமசோதா நிறைவேறவேண்டுமானால் ”ஒபாமாகேர்” திட்டத்தில் திருத்தங்கள் அல்லது ஒராண்டு தள்ளிவைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை  எதிர்கட்சியான குடியரசு கட்சி கொண்டுவந்து தன் மெஜாரிட்டி பலத்தால் நிறைவேற்றியும் விட்டது.
 ஆனால்   ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி தாங்கல் மெஜாரிட்டியாக உள்ள செனட் சபையில் இந்த தீர்மானத்தை தோற்கடித்தது..  நிதியாண்டின் கடைசி நாளான செப் 30ல். வருடாந்திர பட்ஜெட் நிறைவேறாவிட்டால், குறுகிய கால அவசர செலவிற்காக அரசுக்கு நிதிதர நாடாளுமன்றம் அனுமதி தரவேண்டும். தங்கள் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதில் கடுப்பாகிபோன குடியரசு கட்சி இந்த தீர்மானத்தை கொண்டுவரவேண்டுமானால் காப்பீட்டு திட்ட செலவை  குறையுங்கள்  அல்லது ஒராண்டு தள்ளிப்போடுங்கள் என மிரட்டியது   ஒபாமா பணிய மறுத்து நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் பிரச்சனையை மக்களிடம் கொண்டுபோவேன் என பதிலுக்கு மிரட்டினார்.
  . செப் 30ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை நீடித்த இந்த போராட்டம் முடிவுக்கு வருவதற்குள் நிதியாண்டு முடிவுக்குவந்துவிட்டது. ஆளும் கட்சி காலியான கஜானாவுடன் ஆட்சியை தொடரவேண்டிய நிர்பந்தம். அதன் விளைவுதான் இந்த ஷட்-டவுன்”அறிவிப்பு. சுருக்கமாக சொன்னால் இரண்டுகட்சிகளும் தங்கள் கொள்கையை விட்டுகொடுக்க மறுத்த அகம்பாவத்தின் விளைவு இது.

 மக்கள் வேலையிழப்பு ஏன்?

அமெரிக்க நாடாளமன்ற நடைமுறைப்படி பட்ஜெட் நிறைவேறாதுபோனால் உடனே அரசு ராஜினாமா செய்யவேண்டியதில்லை. 6 மாதத்திற்குள் எப்படியாவது சமாளித்து பட்ஜெட்டை நிறைவேற்றவேண்டும், அதுவரை செலவினங்களை குறைக்கவேண்டும். எளிதான வழி அரசு பணியாளார்களுக்கு சம்பளமில்லாத விடுமுறை. அதைத்தான் இப்போது ஒபாமாவின் அரசு செய்திருக்கிறது. தொழிற்சங்கங்கள் கொதித்து எழதோ?  அமெரிக்க அரசுபணியில் இருப்பவர்கள் அரசாங்கம் பொருளாதார, மற்றும் போர் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தால் இம்மாதிரியான நிர்பந்தளை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் பணியமர்த்தபடுகிறார்கள்.  இம்மாதிரி நெருக்கடிகளில் அரசாங்கபணிகளை அவசியமானவை, அவசியமில்லாதவை என வகைப்படுத்தி அதை அறிவித்துவிடுவார்கள். நள்ளிரவுக்கு பின் எடுக்கபட்ட பல அதிரடி முடிவுகள் அதிகாலையில் அமுல்படுத்தபட்டன,  பல அரசு அலுவலகங்கள்,தேசியபூங்காக்கள்,மியூசியங்கள்,  நியூயாரக் சுதந்திர தேவி சிலை, வாஷிங்டனிலுள்ள ஸ்மித்ஸன்யன் மீயூசியம், நினைவு சின்னங்கள் எல்லாம் மூடபட்டன.




இவைகள் ஈட்டும் வருவாயை விட இதன் நிர்வாக செலவு அதிகமாம்.  நாஸாவில் மட்டும் 97 % (18000க்கும்மேல்) பணியாளர்களுக்கு லீவு. வருமானவரி துறையில் பணீயாளர்கள்  இல்லாததினால் வரி வருமானம் குறையும். அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும்,பங்குசந்தை தடுமாறும். அதன் தாக்கம் மற்றநாடுகளின் பங்கு சந்தைகளில் எதிரொலிக்கும்.

இது புதிதில்லை

அமெரிக்க அரசியலில்  இப்படி அரசை முடக்குவது என்பது இதற்கு முன்பே 17 முறை நிகழந்திருக்கிறது. ரீகன், புஷ், கார்ட்டர் காலங்களிலும் ” அரசு மூடல்” நடந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் சில நாட்களிலேயே சரியான விஷயம், 17 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்கா சந்திக்கும் இந்த அதிர்ச்சி சில வாரங்களாவது நீடிக்கும் என்பது வல்லுனர்களின் மதிப்பிடு. அதுவரை அமெரிக்க பொருளாதாரம் இழக்கபோவது வாரத்துக்கு நூறுகோடி டாலர்கள்!

 அரசியல் நாடகமா?

அடுத்த சில மாதங்களில் பிரநிதிகள் சபை தேர்தல் வருகிறது. அதிலும் தன் கட்சி மெஜாரிட்டியை பிடிக்க,  இம்மாதிரி ஒரு சூழ்நிலைக்கு பொறுப்பில்லாத, மக்கள் நலம் விரும்பாத குடியரசு கட்சிதான் காரணம் என்பதை மக்கள் உணர்ந்து அவர்கள் மீது வெறுப்பு அதிகரித்து அவர்களுக்கு ஓட்டு அளிக்கமாட்டார்கள் என்பதற்காக  ஒபமா நடத்தும் அரசியல் நாடகம் இது. இந்த நாடகத்தில்  அரசு ஊழியர்களை பகடைக்காயாக்கிவிட்டார். ஒபாமா கேர் திட்டத்தை எதிர்க்கபோய் எதிர்பாராதவிதமாக குடியரசு கட்சி சிக்கிகொண்டு திண்டாடுகிறது என்றும் சில அமெரிக்க தினசரிகள் எழுதிகின்றன.

இந்தியா பாதிக்கபடுமா?

இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் அமெரிக்க பெடரல் அரசின் பணிகளை அதிகம் செய்வதில்லை. அதனால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் நிலமை நிடித்தால் அரசாங்க பணிகளை செய்யும் நிறுவனங்களுக்கு உதவும் இந்திய நிறுவனங்கள் பாதிக்கபடும். என்கிறார். சோம் மிட்டல் இவர்  இந்திய கம்ப்யூட்டர் தொழில் கூட்மைப்பின் தலைவர். அமெரிக்க ஆஸ்பத்திரிகளுக்கு அதிகம் மருந்து ஏற்றுமதி செய்வது நாம் தான். பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதனால்  மிக பாதிப்புக்குள்ளாகும்..  
எப்போது நிலமை சரியாகும்?
இரண்டு கட்சிகளும் கூடிப் பேசி நிலைமை சரி செய்து பட்ஜெட்  நிறைவேற்றவேண்டும். அதற்கு எவ்வளவு நாளாகும்? என்பது எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி. ஆனால் 1996ல் கிளிண்ட்னை  மண்டியிட குடியரசுகட்சி இதே முறையை கையாண்டதில் மக்கள் வெறுப்புற்று கிளிண்டனை ஆதரித்தார்கள். அதேபோல் பல முனைகளில் தோல்வியை சந்தித்து மக்களின் செல்வாக்கை இழந்துவரும் ஒபாமா விற்கு அதை மீட்க குடியரசு கட்சியின் இந்த பிடிவாதம் உதவபோகிறா?  உலகம் பார்த்துகொண்டிருக்கிறது.
கல்கி 13/10/13