8/11/13

இந்த ஆண்டு கல்கி திபாவளி மலர் எனது 3 கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இது அதில் ஒன்று. 














தமிழால் பெருமை பெற்ற ஜப்பானியர்.

 ஆதித்யா

இந்திய அரசின் உயர்ந்த கெளரவமான பத்ம விருதுகள் குடியரசு தலைவரால்  டில்லி ராஷ்டிரபதி பவனத்தில் மட்டுமே வழங்கப்படும். இது ஒரு சில வெளி நாட்டவருக்கும் வழங்கபட்டிருக்கிறது.   இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கபட்ட ஜப்பானியர் ஒருவர்   உடல் நல குறைவினால் விருதுவழங்கும் விழாவில் பங்கேற்க இயலவில்லை.  நம் பிரதமர் மன்மோகன் சிங்  தனது ஜப்பான் பயணத்தின் போது  இந்திய குடியரசு தலைவர் சார்பாக .பத்ம ஸ்ரீ விருதை அவருக்கு வழங்கினார். அவர் திரு. நொபொரு கராஷிமா  (Noboru Karashima). நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் சார்பாக வெளிநாட்டில் நேரில் ஒருவருக்கு விருது வழங்குவது இதுதான் முதல் முறை. இத்தகைய விசேஷ கெளரவத்தை பெற்ற  திரு நொபொரு கராஷிமா  ஒரு ஜப்பானிய வரலாற்றாசிரியர்.  எழுத்தாளரும் கூட. தமிழ் நாட்டுக்கு வந்து சென்னை பல்கலைகழகத்தில் தமிழும், கல்வெட்டு ஆராய்சிகலையையும் பயின்று பட்டம் பெற்றவர்.  இலக்கண சுத்தமாக தமிழ் எழுத,படிக்க பேச தெரிந்தவர்.  தென் இந்திய சரித்திரத்தை ஆராய்ந்து பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். தெனிந்திய கல்வெட்டுகளின் ஆராய்ச்சிகளில் வல்லுனராக மதிக்கபடுபவர்.  1964ல் டோக்கியோ பல்கலை கழகத்தில் சேர்ந்த இவர் 1974ல் அதன் தெற்காசிய வரலாற்று துறையின் தலவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர்.  இன்றும் டோக்கியோ பல்கலை கழகத்தில் கெளரவ சிறப்பு பேராசரியராக தன் ஆராய்ச்சிபணிகளை தொடர்ந்து கொண்டிருக்கும் இவருக்கு வயது 80. நொபொருகராஷிமா சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்(IATR) முன்னாள் தலைவர்,1985ல் தஞ்சாவூரில் 8 வது உலக தமிழ் மாநாட்டை தலைமையேற்று நடத்தியவர். இவரது கல்வி சேவைக்காகவும் தமிழ் பணிக்காவும் பத்மஸ்ரீ வழங்கபட்டிருக்கிறது. அவருடன் உரையாடியபோது..  
பத்மஸ்ரீ  விருது பெற்றதற்காக கல்கியின் வாழ்த்துக்கள். விருதைப் பெற்றபோது  எப்படி உணர்ந்தீர்கள் ?
மிகமிக மகழ்ச்சியடைந்தேன். உடல்நிலை ஒத்துழைக்காததால் டெல்லி போகமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதை பாரத பிரதமர் கையால் என் நாட்டிலேயே பெற்றதை மிகப்பெரிய கெளவரமாக, நான் பெற்ற விருதுகளிலேயே  இதை மிக அறிதானதாக  கருதுகிறேன்.  இது தமிழ் மொழியினால் எனக்கு கிடைத்த பெருமை. இந்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றியை  பதிவு செய்ய விரும்புகிறேன்.

சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின்   துவக்க காலத்திலிருந்தே  உலக தமிழ் மாநாடுகளில் பங்கேற்று  தமிழுக்காக நல்ல பணிகளை செய்துவந்த நீங்கள் ஏன்  கோவையில் 2010ல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை புறக்கணித்தீர்கள் ?
புறகணிப்பு என சொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. உலக தமிழ் மாநாடுகள்  சரியாக திட்டமிடபட்டு ஆராயச்சியாளார்கள் கட்டுரைகள் தயாரிக்க  ஒராண்டாவது கால அவகாசம் அளிக்க பட்டபின்னரே நடத்தபடவேண்டும் என்பது  சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் கொள்கை. கோவையில் நடந்த  மாநாடு  மிக அவசரமாக  திட்டமிடபட்டு ஒரு அரசியல் நிகழ்ச்சியாக நடத்தபட்டதில் எனக்கு உடன்பாடில்லை.  அதிக அவகாசம் தர இயலாதற்கு  தேர்தல் ஒரு காரணமாக சொல்லபட்டது. ஒரு சர்வதேச ஆராய்ச்சி நிருவனம் இதெற்கெல்லாம் அப்பாற்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.  இது பற்றி மிக விளக்கமாக அந்த கால்கட்டத்திலேயே இந்து நாளிதழுக்கு ஒரு பேட்டி அளித்து விளக்கியிருக்கிறேன்.. சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின்  நிர்வாக குழு உறுப்பினர்களிடையே இது குறித்து கருத்து ஒற்றுமை இல்லாதாதால் நான் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டேன்.  ஆராய்ச்சிகழகத்தின் முக்கிய குறிக்கோளான தமிழ் மொழிக்கு சர்வதேச அந்தஸ்த்து அளிக்கபடவேண்டும்  என்பது   நன்கு  உணரப்பட்ட நிலை  இன்று ஏற்பட்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.  இப்போது சர்வ தேச தமிழ் ஆராய்ச்சி கழகம் புதிய தலவர்களின் தலைமையில் புதிய அவதாரம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

இன்றைய இளம் தலைமுறையினர், உங்களைபோல ஒரு மொழியின், அதன் சமூக சார்ந்த சரித்திரத்தை ஆராய்ச்சி செய்வதில் நாட்டம் கொள்கிறார்களா?

 ஆர்வம் குறைந்து வருவது உண்மையாக இருக்கலாம் ஆனால் அறேவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது. நல்ல ஆசிரியர்களின் பல்கலைகழகங்களின் அரசின் ஆதரவு இல்லாமல் இதைச் செய்யமுடியாது. 1961ல் நான் மெட்ராஸ் யூனிவர்ஸிட்டியில் தொல்லியல் மாணவனாக சேர்ந்த போது நீலகண்ட சாஸ்த்திரி, வெங்கட்டரமணய்யா போன்ற மேதைகள் தங்கள் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்துகொண்டு எங்களுக்கும் கற்பித்தார்கள். இன்று அத்தகையவர்கள் இல்லை. பல்கலைகழகங்களும் இதை இன்னும் ஒரு  ”பாடமாக” தான் மதிக்க துவங்கிவிட்டார்கள். ஆராய்ச்சியாளர்களை அரசாங்கள் கெளரவித்தால் சமூகத்தில் அவர்களின் மதிப்பு உயரும்.

இப்போது மொழி வளர்ச்சிக்காக பல ஆராய்ச்சி நிறுவனங்கள், தனிபல்கலைகழங்கள் அரசின் உதவியுடன் துவங்க பட்டிருக்கின்றனவே. ?
இருக்கலாம். ஆனால் அவைகளின் விசித்திரமான நிலை எனக்கு ஆச்சரியமளிக்கிறது. பணம் ஒதுக்கி ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி அதற்கு ஒரு ஐ ஏ ஸ் அதிகாரி நியமிக்க படுகிறார், இந்திய தொல் பொருள் துறையின் தலைவராக நியமிக்க படுபவர்களுக்கு கல்வெட்டுக்களின் மொழியை  படிக்க தெரியாது. அதேபோல் மாநில தொல்பொருள் ஆராய்சி நிறுவனங்களிலும்  தலமை நிர்வாகிகள் அதுபற்றி அறியாமல் இருப்பது துரதிர்ஷ்டமே. கல்வெட்டு எழுத்துகளை ஆராய்ந்து நகல் எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டிருக்கும்  குறிப்புகளிலிருந்துதான் இன்று பலர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது வருத்த்ததிற்குரிய விஷயம். சமீபத்தில் தமிழ் பலகலை கழகம் தொல்பொருள் துறையினருடன் இணைந்து கல்வெட்டுகளின் டிஜிட்டல் பதிவுகளை மைசூர் ”மொழியில் கழகத்தில்” சேமிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நல்ல பணி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றிகரமாக  தொடர வேண்டும்.

வரும் தலைமுறையில் தமிழ் மொழி படிப்பவர்களும்,எழுதுபவர்களும் குறைந்துவருவதால்   மொழியே அழிந்துவிடும் என்ற அபாயம் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறதே?
அரசாங்களின் அணுகு முறையினால், கல்விமுறைகளினால் தாய்மொழியின் பயன்பாடு குறைந்து வருவது உலகின் பல பழைய மொழிகள் சந்திக்கும் ஒரு பிரச்சினை. ஆசிரியர்களும் குறிப்பாக பெற்றோர்களும் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷயம் இது. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் பயன்பாட்டிலிருக்கும் ஒரு மொழி அழிந்து போய்விடும் என்பதை ஏற்பதிற்கில்லை.  ஒரு நாட்டின் பாரம்பரியங்களும் கலாசாரங்களும் பல தலமுறைகளாக தொடர்வது போல மொழியும் தொடர்ந்து வளர்ந்து செழிக்கும், அதுவும் நிச்சியமாக தமிழ் மொழி நீடித்து நிலைத்து நிற்கும் என நான் நமபுகிறேன்.
நேரம் ஒதுக்கியதற்கு நன்றி
நன்றி  விழா நாள் வாழ்த்துகள்
 








கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்