15/1/14

கங்கைக் கரை ரகசியங்கள்





  இன்னும் இருள் பிரியாத,  ஒளி பிறக்காத காலைப்பொழுது. சில்லிடும் காற்று மிதந்துபோகும் மெல்லிய பனிப்புகை. கண்ணெதிரே கடலாக விரிந்திருக்கும் கங்கை. அதன்பிரமாண்டம் நம்மை பிரமிக்கசெய்கிறது. மறுகரையே கண்ணில் தெரியாத அந்த மகாநதி அந்த இருட்டிலும்,நிசபத்திலும் தன் கம்பீரத்தை சொல்லுகிறது.  காசி நகரில் புனித கங்கையின் கரையில் அந்த அதிகாலைப்பொழுதில் ஆதவனின் வருகையின் போது தரிசிக்க காத்திருக்கிறோம். நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பலர் துறையின் படிக்கட்டுகளில் நடுங்கும் குளிரிலும் ஆதவனை தரிசித்தபின்  முழ்கிகுளிக்க காத்திருக்கின்றனர். மெல்லிய குரல்களில் பலமொழிகளில் பிராத்தனைகள் ஸ்லோகங்கள் கேட்கின்றன.  “கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்" என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.  எல்லா குளிக்கும் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இவைகளின் இடையில் நமக்கோர் இடத்தை கண்டுபிடித்து நிற்கிறோம். ஓடும் கங்கையின் வேகத்தை கால்கள் நமக்கு சொல்லுகிறது. மனம் கங்கையில் இறங்கியிருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பிரவாகத்தில் இருக்கும் வாழும் நதியில் இன்று நாமும் இறங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது. நிற்கும் படகுக்காரர்களும் அந்த நேரத்தில் நகராத  படகில் உட்கார்ந்து தியானிக்கவிரும்பும்   வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்க காத்திருக்கிறார்கள் .பளிச்சென்று பெரிய ஆரஞ்சு வண்ணபந்தாக எழுந்து தங்க தாம்பாளமாக விரிந்து  சிலநிமிடங்களில் ஓளியுடன் உயிர்பிறக்கிறது அந்த நதியில். மெள்ள வளரும் காலை ஓளியில் கங்கையின் வண்ணங்கள் மாறுகின்றன.  அழகான ஒவியமாக பரவும் அந்த சூரியயோத காட்சியில் மனதை பறிகொடுத்து நிற்கும்  நாம் அருகிலிருப்பவர்கள் குளிக்க துவங்கியதைப்பார்த்த பின்னர்தான்  நாம் காத்திருந்ததும் அதற்குதானே என்பது உறைத்து. உடனே மூழ்கி எழுகிறோம். தெளிந்தோடிக்கொண்டிருக்கும் கங்கை அன்னையின் அழைப்பு அலைகள். நீண்ட நேரம் நீராடச்சொல்லுகிறது.

.
இரு கைகளால் கங்கயை ஜலத்தை எடுத்து சூரியபகவானுக்கு நதியிலேயே அர்பணம் செய்யும் பலர்,  கூப்பியகைகளை தலைக்குமேல் உயர்த்தி நிஷ்டையில் நிற்பவர்கள், தன் சின்னகுழந்தையை மிக்கவனமாக பிரார்த்தனையோடு குளிப்பாட்டும் அன்னை என அந்த இடமே கங்கயின் நீரைப்போல பக்தியால் நிரம்பியிருக்கிறது.  மெல்லகூட்டம் வரத்துவங்குகிறது. எங்கிருந்தோ ஒலிக்கும் பக்திபாடல்கள் சூழலின் அமைதியைக்கலைக்கிறது படிக்களை கடந்து சாலைக்கு வருகிறோம். காசிநகரம் விழித்துகொள்ள ஆரம்பிக்கிறது. இந்த காசி நகரம் எப்போது உருவானாது? இந்த கேள்விக்கு இன்னும் சரியான விடைகிடைக்கவில்லை.
மனித சமுதாயம் உருவான காலம்தொட்டே உலகில் பல்வேறு நகரங்கள் நாகரீகம் மற்றும் ஆன்மீகத்தின் உச்சியை அடைந்தன.  சில ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சுவடே இல்லாமல் அழிந்துவிட்டன. கிரேக்க, எகிப்து, ரோமாபுரி நாகரீகங்கள் சில உதாரணங்கள். இவற்றிக்கு எல்லாம் முன்பே கலாச்சாரத்திலும், ஆன்மீகத்திலும் அறிவியலிலும் . தனது மேன்மைக்கு பல இடையூறுகள் வந்தபோதும், ஒவ்வொரு முறையும் சரிவில் இருந்து மீண்டு எழுந்திருப்பது பாரதம்.. இதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இந்த புண்ணிய பூமியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல ஆயிரம் கோயில்களில் சக்தி அதிர்வுகள் இந்த கலாச்சாரத்தின் வேர்களாக இருப்பது. இவற்றில் மிக முக்கியமான ஷேத்திரமாக திகழ்வது காசி. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் காசி நகரம் பன்னிரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே உருவாகியிருக்க கூடும் என்று சொல்கின்றனர்.

காசி என்ற பெயருக்கு பிரகாசமானது என்று பொருள். ஸ்கந்தபுராணத்தில்  பதினைந்தாயிரம் பாடல்கள் பாடப் பெற்றது காசி. நூற்றுக்கணக்கான  சக்திவாய்ந்த கோயில்களால் சூழப்பட்டு ஒரு க்தி வளையமாக திகழ்கிறது  ஆயுர்வேதம் காசியில்தான் எழுதப்பட்டது. யோக அறிவியலின் தந்தையாக போற்றப்படும் பதஞ்சலி முனிவர் இங்குதான் யோக சூத்திரத்தினை இயற்றினார். துளசிதாசரின் ராமசரிதம் மானசம் உருவானதும் இங்குதான்.

 காசி நகரமே ஒரு யந்திர வடிவில் அமைந்திருக்கிறது. இந்த வடிவில்
நானூற்றி அறுவத்தெட்டு முக்கிய கோவில்கள் உள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலை மையமாக கொண்டு இக்கோயில்கள் ஐந்து அடுக்குப் பாதைகளில் அமைந்திருக்கின்றன. காசி காண்ட புராணத்தில் காசி நகரமே சிவனுடைய திரிசூலத்தின் மீது இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. திரிசூலத்தின் மூன்று முனைகளை போல், காசியின் சக்தி வடிவத்திற்கும் மூன்று கோயில்கள் மையமாக இருக்கின்றன. இவை வடக்கில் ஆம்கார் ஈஸ்வரர், மையத்தில் விஸ்வநாதர் மற்றும் தெற்கில் கேதார் ஈஸ்வரர். இந்த ஒவ்வொரு கோயிலும் தனியாகவும், ஒன்று சேர்ந்தும் தங்களுடைய சக்தி பிரவாகத்தை வெளிப்படுத்துகின்றன  இந்த  பயணத்தில் இந்த கோவில்களில் நல்ல தரிசனம் கிடைக்கவேண்டும் என்று எண்ணியபடியே சாலையில் நடக்கிறோம். கங்கைநதியின் படித்துறைகளுக்கு வரும் நகரின் அந்த சாலைகளில் எந்த வாகனங்களுக்கு அனுமதியில்லாதால் சாலை முழுவதும் மக்கள். வேகமாக நதியையை நோக்கி நடந்துகொண்டிருக்கிறார்கள். பலமாநில முகங்கள், மொழிகள். குறிபிட்ட இடம் வரை நடந்தபின்னர் சைக்கிள் ரிக்‌ஷாவில் நாம் தங்கியிருக்குமிடத்திற்கு திரும்புகிறோம். காசியில் தினசரி வரும் டூரிஸ்ட்களின் எண்ணிக்கைவிட அதிக அளவில் இருப்பது சைக்கிள் ரிக்‌ஷாக்கள்.பல இடங்களில் இவர்கள் வாகனத்திற்கு மட்டுமே அனுமதி என்பதால் சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறாமல் நீங்கள் காசியில் எதையும் பார்க்கமுடியாது. கட்டணபேரம் சண்டை சத்தம் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டுகார்களுக்கு அநியாயத்துக்கு குறைந்த கட்டணமாக இருக்கிறதே என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அளவில்தான் கேட்கிறார்கள்.:. நீங்கள் அதிகம் கொடுக்க விரும்பினாலும் பலர் ஏற்க மறுக்கிறார்கள். ஏற்றுகொள்பவர்கள் மிகுந்த பணிவுடன் பலமுறை நன்றி சொல்லுகிறார்கள். ஹோட்டலுக்கு வந்த பின்னர் நம்மோடு இந்த பயணத்தில் பங்கு  கொள்ள வந்துசேர்ந்திருக்கும் புதிய நண்பர்களை சந்திக்கிறோம்.
ஈஷா அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக புனித பயணங்கள் (Sacred walks) என்ற திட்டத்தில் அதன் உறுப்பினர்களை இந்த தேசத்தின்  மிகபுனிதமான இடங்களான கைலாஷ். காசி, ரிஷிகேஷ், பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.ஏதோ மத நமபிக்கைகளின் அடிப்படையில் வெறும்சடங்குகள், சம்பிராத்யங்களை மட்டுமே நோக்கமாய் கொள்ளாமல் அந்த இடத்தின் பெருமை, சக்தி அதை முழுமையாக உணர பயிற்சி போன்ற விஷயஙகளுக்கு சத்குருவின் வழிகாட்டுதலுடன் இந்த  புனித பயணங்கள் நடத்படுகின்றன. இந்த ஆண்டு  200க்கும்மேற்பட்டவர்களுடன் கங்கையின் கரையில் காசிக்கும் தொடர்ந்து அங்கிருந்து புத்தரின் தேசத்திற்கும்  பயணம் செய்தகுழுவுடன் இணைந்து நாமும் இந்த புனித  பயணத்தில் பங்குகொள்ள போகிறோம்.
பேராசியர்கள், டாக்டர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் வாழ்க்கையை துவக்கியிருக்கும் இளைஞர்கள், வெளிநாட்டில் படிப்பைதொடர போகும் மாணவர்கள், வயதான பெற்றோர்களை அழைத்துவந்திருக்கும் இல்லத்தரசிகள் வெளிநாட்டவர்கள், என பலதரப்பட்டவர்கள் நிறைந்த பெரிய குழு அது. அனைவரும் ஒரே இடத்திற்கு அழைக்கபட்டு இந்த பயணத்தில் பங்கேற்பவர்களுக்காக சத்குரு பேசிய விடியோ காட்டபடுகிறது.  பின் குழுதலைவர் ஸ்வாமி பிரோபோதா பயணத்தில் குறிப்பாக காசியில் செய்யவேண்டியது கூடாது பற்றி விளக்குகிறார்.  அன்றிரவு 2.30 மணிக்கு எல்லோரும்  காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு போகப்போவதையும் அதற்காக எல்லோரும் இரவு 1.30க்கு பஸ்சில் இருக்கவேண்டும் என்பதையும் அவர் அறிவிக்கிறார்.  இரவு 1.30க்காக? ஏன் அந்த நேரம்? என அந்த கூட்டத்திலிருந்த  எவரும் கேட்கவில்லை. ஒரு சின்ன முணுமுணுப்புகூட இல்லை. காரணம் அவர்கள் ஈஷாவில் பயிற்சிபெற்றவர்கள். நேரதிட்டமிடலின் அவசியத்தையும் சத்குரு தீர்மானித்திருக்கும் நேரத்தின் அருமையையும் உணர்ந்தவர்கள். அன்றிரவு 1.30க்கு  5 பஸ்களிலும் அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தனர். ஒரு பஸ்சின் டிரைவர் மட்டும் வராததால் காத்திருக்கிறோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

சத்குரு, வாழ்க்கையில் ஒரு முறையாவது  காசிக்கு போகவேண்டும் என சொல்லுகிறீர்கள். எதற்காக அங்கு  போகவேண்டும் ?

ல காலமாக என்னை அறிந்திருப்பவர்கள் சத்குரு ஏன் காசி யாத்திரை செய்யச் செல்கிறார்? வயதாக ஆக அவர் சற்றே மென்மையானவராக ஆகி வருகிறாரோ,” என்று யோசிக்கத் துவங்கி விட்டனர். சரி, எதற்காக இந்த காசி யாத்திரை?
இந்த படைப்பை அடிப்படையாக இரண்டு விதங்களில் பார்க்கிறார்கள். ஒரு விதம் எங்கோ ஒர் இடத்தில் கடவுள் இருப்பதாகவும், அவருக்கு வேலை ஒன்றும் இல்லாத பட்சத்தில் அவர் இந்த படைத்தலை செய்கிறார் என்பது. இது ஒருவிதமான நம்பிக்கை முறை. இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், கடவுள் என்று மக்கள் எதை அழைக்கிறார்களோ அது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி. அவர் படைத்தலுடன் தொடர்பில் இல்லை, படைத்தல் என்பது அவர் வீசி எறியும் ஒரு சமாச்சாரம்.
படைத்தலை மற்றொரு விதத்தில் பார்ப்பதை – “காஸ்மோஜெனிக்என்று சொல்லலாம். காஸ்மோஜெனிக்” (Cosmogenic) என்னும் வார்த்தை இரண்டு வார்த்தைகளில் (Cosmo+Genic) இருந்து தோன்றியுள்ளது. கிரேக்க மொழியில் காஸ்மாஸ்என்றால் ஒரு திட்டத்தின்படி உருவாக்கப்பட்டதுஎன்று பொருள். அதாவது எதேச்சையாக நிகழவில்லை. இது யாரோ ஒருவர் வாயிலிருந்தோ அல்லது கையிலிருந்தோ வந்து விழவில்லை. மாறாக விழிப்புணர்வுடன் உருவாக்கப்பட்டது. கொஞ்சம் கவனம் செலுத்தும் யாரொருவருக்கும் இந்த படைப்பு ஏனோ தானோவென்று நிகழவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.
இந்த பிரபஞ்சத்தை தனக்குள்ளேயே உருமலர்ச்சியும் எல்லையில்லாமல் விரிவடையும் சாத்தியமும் கொண்டதாக பார்த்த யோகிகள், அதே இயல்பை தங்களுக்கும் உரித்தாக்கிக் கொள்ளத் தூண்டப்பட்டனர். பல அற்புதமான முயற்சிகள் இந்த தேசத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகின் வேறு சில பகுதிகளிலும் இம்முயற்சி நடந்துள்ளது.கிரேக்க நாட்டில் டெல்ஃபி நகரில் காசியை போன்ற சிறு பிரதிபலிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அடிப்படையாக இது எதைக் குறிக்கிறது என்றால், இங்குள்ள படைத்தல் ஒவ்வொன்றுமே, ஏதோ ஒரு விதத்தில், இந்த பிரபஞ்சத்தின் சிறு நகல் என்பதைத்தான். இது மனித உடலுக்கும் பொருந்தும். படைப்பில் உள்ள ஒவ்வொன்றுமே அளப்பரிய சாத்தியம் உடைய இந்த பிரபஞ்சத்தின் சிறிய நகல்தான். இந்த அடிப்படையில் பல விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன.
காசியில், ஒரு நகரின் தோற்றத்தில் ஒரு குறிபிட்ட வகையான இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். காசியை போன்ற ஒரு நகரத்தை உருவாக்குவது மதிமயக்கமுறச் செய்யும் அசாத்திய கனவு. இதனை அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தினர். மனித உடலில் 72,000 நாடிகள் இருப்பதைப் போல காசியிலும் அப்போது 72,000 கோயில்கள் இருந்தன. இந்த முழு செயல்முறையுமே அகண்ட அண்டத்தின் உடலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக பிரம்மாண்டமான மனித உடல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. இதனால் தான், “நீங்கள் காசிக்கு போனால் போதும், எல்லாம் முடிந்துவிட்டது,” என்னும் நம்பிக்கை உருவானது. நீங்கள் காசியை விட்டு வெளியே வரவே விருப்பப்பட மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அண்டத்தின் உயிராற்றலுடன் தொடர்பில் இருக்கும்போது, வேறெங்கு செல்ல விருப்பப்படுவீர்கள்?

கல்கி 18/01/14


I

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்