14/2/14

மன்மோகன் சிங்

New post on ஆழம்

மன்மோகன் சிங் பாவங்களும் சிலுவைகளும்

by ரமணன்
பிரதமர் கனவு இல்லாத ஓர் அரசியல்வாதியைச் சுட்டிக்காட்டச் சொன்னால் நாம் திணறவேண்டியிருக்கும். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தொடங்கி சிறையில் இருக்கும் அந்தப் பழம்பெரும் அரசியல்வாதி வரை அனைவரும் பிரதமர் பதவியையே குறிவைத்து கனவு கண்டு வருகிறார்கள். ஒரே விதிவிலக்கு அந்தப் பதவியில் ஏற்கெனவே அமர்ந்திருக்கும் மன்மோகன் சிங். சமீபத்திய ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியுற்றதால் கலைந்துவிட்ட கனவல்ல இது. மாறாக, தொடக்கம் முதலே மன்மோகன் சிங் பதவியாசை இல்லாதவராகவே இருந்திருக்கிறார். இருந்தும் அவருடைய விருப்பத்துக்கு மாறாக சூழ்நிலைகள் அவரை இந்த  அளவுக்கு உயர்த்தியிருக்கின்றன. மீண்டும்,  அவர் விருப்பத்துக்கு மாறாக அதே சூழ்நிலைகள் அவரை இப்போது படுகுழியிலும் தள்ளியிருக்கின்றன. இதற்கு ஒருவகையில் அவரும்கூட காரணம். இந்திய அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு சிக்கலான, விநோதமான கதை அவருடையது.
1991ல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி நரசிம்ம ராவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அப்போது மன்மோகன் சிங் அரசியல் களத்திலேயே இல்லை. இருந்தும் அவரைச் சென்று சந்தித்து, பிரதமர் உங்களை நிதியமைச்சராக நியமிக்க விரும்புகிறார், தயாராக இருங்கள் என்று காபினட் செயலர் சொல்லியிருக்கிறார். மன்மோகன் சிங் இதை நம்பவில்லை. மறுநாள்  நரசிம்ம ராவ் நேரடியாக மன்மோகனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நேற்று ஏன் என்னைச் சந்திக்க நீங்கள் வரவில்லை? மதியம் அசோகா ஹாலுக்கு வந்துவிடுங்கள். பதவியேற்புக்குத் தயாராகிவிடுங்கள். அப்போதும் மன்மோகன் சிங்குக்குப் புரியவில்லை. எதற்காக இந்தத் திடீர் அழைப்பு? எதற்காகப் பதவி நியமனம்? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே நிதித்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யப்படுகிறார் மன்மோகன் சிங்.
தான் அரசியல்வாதியான கதையை 2005ல் பிபிசிக்கு விவரித்தபோது அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார். ஓர் அரசியல்வாதியாக இல்லாமல் இருந்தும் நேரடியாக நிதியமைச்சராக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கமுடியும். அவருடைய கூர்மையான அறிவுத் திறன்.
மிக எளிமையான குடும்பப் பின்னணி அவருடையது. பள்ளியிலிருந்தே எல்லா வகுப்பிலும் முதல் மாணவர். அதனால் கிடைத்த ஸ்காலர்ஷிப்புகள் வாயிலாக கல்லூரியில் இணைந்தார். பிஏ பல்கலைக்கழக முதல் மாணவனாக தங்கப் பதக்கம் வாங்கியதால் எம்ஏ படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஒரு தங்கப் பதக்கம் வாங்கியதால் லண்டன் கேம்பிரிட்ஜில் முழு ஸ்காலர்ஷிப்புடன் இடம் கிடைத்தது. அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று இந்தியா திரும்பினார். தனது மாநிலமான பஞ்சாபில் ஒரு கல்லூரியில் இணைந்தார். இதுதான் அவருடைய கனவு.
மூன்றாண்டு பேராசிரியர் பணிக்குப் பின்னர், மேற்கொண்டு படிக்கும் உந்துதலில் மன்மோகன் 1960ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பில் இணைந்தார். அதையும் வெற்றிகரமாக முடித்து இந்தியா திரும்பி டெல்லியில் தன் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். லண்டனிலுள்ள  கேம்பிரிட்ஜ் பேராசிரியரின் சிபாரிசால் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான யுஎன்டிஏசிடியில் ஆய்வுப் பணி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பணியைத் திறம்படச் செய்துவந்த சமயத்தில் எல்.என். மிஸ்ரா என்ற மத்திய அமைச்சரை அவர் அடிக்கடி சந்தித்து வந்தார். மன்மோகனின் திறமையைக் கூர்ந்து கவனித்த அவர் தன் அமைச்சரவைக்கு ஆலோசகராக வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அப்பொதெல்லாம் அரசாங்க ஆலோசகர் என்பது இன்றுபோல செயலாளருக்கு நிகரான பொறுப்பல்ல. ஆனாலும் ஆய்வுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மன்மோகன் இந்த அழைப்பை ஏற்றார்.  அரசியல்வாதியாக இல்லாமலேயே பின்னாளில் அமைச்சரானதைப்போல ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமலேயே அதிகாரிகள் வர்க்கத்தில் அவர் அன்று நுழைந்தார். தொடர்ந்து பல அமைச்சகங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றி பலருடைய கவனத்தை ஈர்த்தார்.
ஒரு கட்டத்தில் நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவருக்கு உயர்வு கிடைக்கிறது. 1976ல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்படுகிறார். இது அவருடைய வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்பம். நாட்டின் பொருளாதார நிலைமை சீராகவில்லை, அதை சரிசெய்ய மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று துணிச்சலுடன் அரசுக்குச் சொன்ன முதல் ரிசர்வ் வங்கி கவர்னர் இவரே. அதனாலேயே அந்த வழிமுறைகளை அரசுக்கு அதிகாரபூர்வமாகச் சொல்ல திட்ட கமிஷனின் உதவித் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி நிதியமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் நெருக்கத்தை வளர்க்க உதவியது.
அதே சமயம், இந்தியா கிட்டத்தட்ட திவாலாகிக்கொண்டிருக்கிறது என்று அறிவிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் மன்மோகன் சிங். பொறுப்புக்கு வந்தவுடனேயே மிக மோசமான ஒரு செய்தியை அறிவிக்கவேண்டிய நிர்பந்தம். மிகப் பெரிய அடிப்படை மாற்றங்களைக் கொள்கையளவில் கொண்டுவந்தாலொழிய மீள்வது சிரமம் என்பதே மன்மோகன் சிங்கின் ஆலோசனையாக இருந்தது. அதை அவர் தயங்காமல் நரசிம்ம ராவிடம் பகிர்ந்துகொண்டார். நரசிம்ம ராவும் தயாராகவே இருந்தார். தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான உரிமை மன்மோகனுக்கு வழங்கப்பட்டது.
சுதந்தர இந்தியா சந்தித்த மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சியை மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். உலகமே பார்த்து வியந்த ஒரு விஷயம் இது.  வெளி நாடுகளிலிருந்து, பன்னாட்டு நிதி ஆணையங்களில் இருந்து கடன் பெறமுடியாத பரிதாபகரமான நிலையில் இருந்த இந்தியா ஐந்தே ஆண்டுகளில் முதலீட்டுக்கான ஒரு நல்ல களமாக மாறிப்போனது. காரணம், மன்மோகன் சிங்.
பொருளாதாரம் மளமளவென்று வளரத் தொடங்கியது. இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு உலக வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது என்னும் நிலைக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இந்தியாவைப் பொருட்படுத்தியே தீரவேண்டிய அவசியத்துக்கு வல்லரசுகள் வந்து சேர்ந்த காரணம், மன்மோகன் சிங்.
ஆனால் இதை அடைய உள்நாட்டில் அவர் பல எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருந்தது. பல்வேறு சந்தேகங்களை அவர் கடக்கவேண்டியிருந்தது. பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மீண்டும் அமர்ந்ததற்குக் காரணமாக இருந்தார் மன்மோகன் சிங். அன்று மீடியாவின் டார்லிங் அவர்தான்.
எந்த மீடியா அவரை உச்சத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்ததோ அதே மீடியா இன்று அவரை எள்ளி நகையாடிக்கொண்டிருக்கிறது. அவரது முழுமுற்றான வீழ்ச்சியை எதிர்நோக்கி ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது. எந்தப் பொருளாதாரப் புரட்சியை அமைதியாக அவர் அரங்கேற்றினாரோ அந்தப் புரட்சியின் நோக்கங்கள் இன்று கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. மன்மோகனின் அமைதியான அணுகுமுறை அன்று பாராட்டப்பட்டது. இன்று  அவருடைய அமைதி கேலி செய்யப்படுகிறது. அதிகம் சாதிக்காத பிரதமர் என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதுகிறது வாஷிங்டன் போஸ்ட்.
ஏன் ஏற்பட்டது இந்த நிலைமை? ஆழ்ந்து நோக்கினால் மூன்று காரணங்கள் தெளிவாகப் புலப்படும்.
1) தேசமல்ல, கட்சியே பிரதானம்!
இதற்கு இன்னொரு பெயர் அதர்மம். காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எதையும் செய்யத் தயாராக இருந்தது. தேசத்தின் நலன் முக்கியமா அல்லது ஆட்சியில் நீடிப்பது முக்கியமா என்னும் கேள்வியை காங்கிரஸ் எழுப்பியதாகவே தெரியவில்லை. அதற்கான விடையை அது தெளிவாகவே அறிந்திருந்தது. கூட்டணி கட்சிகளின் பேரங்கள் அனைத்துக்கும் செவிகொடுத்தது. இதற்கெல்லாம் காரணம் கட்சியின் தலைவர் சோனியா காந்திதான் என்று ஒருவர் சொல்லிவிடலாம். ஆனால் அமைதியாக இருந்து அனைத்தையும் அனுமதித்த ஒரே காரணத்துக்காக மன்மேகன் சிங்கும் இதற்கு காரணமாகிறார் என்பதை மறுக்கமுடியாது.
இந்தியாவின் பிரதமராக அல்லாமல், கட்சியின் காவலராகவே மன்மோகன் சிங் கடந்த இரு ஆட்சிக்காலத்திலும் செயல்பட்டிருக்கிறார். தேசத்தின் குரலைவிட தன் கட்சித் தலைவரின் குரல் அவருக்கு முக்கியமாகப் பட்டிருக்கிறது. தேசத்தின் தேவைகளைவிட கட்சியின் தேவைகள் முக்கியமாகிவிட்டன. அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார். அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவந்த நிலையிலும்கூட மன்மோகன் சிங் கட்சியைக் காக்கும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டார். தேசத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் அல்ல.
2)நாற்காலியை விடமாட்டேன்!
அவரை மிகக் கடுமையாக விமரிசிப்பவர்களும்கூட மன்மோகன் சிங்கை ஊழல் கறை படியாதவர் என்று ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். நிலம், பூமி, காற்று என்று தொடங்கி பஞ்ச பூதங்களிலும் காங்கிரஸ் ஊழல்கள் பல செய்தபோதும் தனிப்பட்ட முறையில் குற்றமற்றவராகவே மன்மோகன் சிங் பலரால் பார்க்கப்படுகிறார். இது ஆச்சரியம்தான். அதே சமயம், கட்சியின் தவறுகளுக்குத் தார்மிக அளவிலாவது பொறுப்பேற்று அவர் ஏன் ராஜிநாமா செய்யவில்லை என்னும் கேள்வியை எழுப்பாதவர்களே இல்லை.
ஏன் கட்சி மேலிடத்தை எதிர்த்து ஒருவார்த்தைகூட அவரால் பேசமுடியவில்லை? தன்னளவில் சுத்தமாக இருந்தும் களங்கப்பட்டுப்போன தன் கட்சியை ஏன் அவரால் எதிர்க்கமுடியவில்லை? அவர் ஒரு பலிகடாவாக மாற்றப்பட்டுவிட்டாரா? அல்லது தானாகவே முன்வந்து இந்தப் பதவியையும் அவர் ஏற்றுக்கொண்டுவிட்டாரா?
இரண்டாவதுதான் சரி என்று தோன்றுகிறது. காங்கிரஸும் குறிப்பாக சோனியா காந்தியும் தனக்கு அளித்த மரியாதைகளையும் அங்கீகாரங்களையும் அவர் இன்னமும் மறக்கவில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்னும் உணர்வை அவரால் உதறித் தள்ளமுடியவில்லை. தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை, கட்சியை மீட்டெடுக்கவேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார் போலும்.
3)தலைமைத்துவம்
அறிவாற்றல்மிக்க பொருளாதார நிபுணர்தான் என்றபோதும் தேசத்தைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் தனிச்சிறப்பான இயல்புகள் மன்மோகன் சிங்கிடம் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கட்சியின் தவறுகளை அவரால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. தவறிழைத்த அமைச்சர்களைக் கேள்வி கேட்க இயலவில்லை. தறிகெட்டு ஓடும் நிர்வாகத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அமைச்சரவை கூடி எடுத்த முடிவொன்றை கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் கிழித்தெறிந்து பேசியபோதும்கூட மன்மோகன் சிங் அமைதியே காத்திருக்கிறார். இதை அவருடைய மாண்பாகவும் நல்லியல்பாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்றபோதும், ஒரு தலைவராக அவருடைய தோல்வி பளிச்சென்று புலப்படுவதை அவராலும் தடுக்கமுடியவில்லை.
1999ல் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் நின்று போட்டியிட்டு தோற்றார் மன்மோகன் சிங். அப்போது தேர்தல் செலவுக்காக குஷ்வந்த் சிங்கிடம் அவர் கடன் வாங்கியிருக்கிறார். அதை மறுநாளே தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த மன்மோகன் சிங்கை ஆச்சரியமான மனிதன் என்று அழைக்கிறார் மன்மோகன் சிங். இத்தகைய பல அபூர்வமான விஷயங்களைப் பலர் அவரிடம் கண்டடைந்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் களத்தில் மன்மோகன் சிங் அபூர்வமானவர் என்பதில் மாற்று கருத்தில்லை. இருந்தும் அவர் இன்று வருத்தப்பட்டு சுமக்கும் பாரங்கள் தனிப்பட்ட முறையில் அவரை அழுத்திக்கொண்டிருக்கின்றன, கீழே கீழே பிடித்து இழுத்துக்கொண்டிருக்கின்றன.
நடப்பு அரசியல்வாதிகளோ ஊடகமோ எதிர்க்கட்சிகளோ அல்ல, வரலாறு என்னை மதிப்பிடும் என்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறார் மன்மோகன் சிங். உண்மைதான். கால ஓட்டத்தில் அவர்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் தூசுகள் உதிர்ந்துபோகக்கூடும். அவர் செய்தவை அல்லது செய்யத் தவறியவை மன்னிக்கப்படலாம். ஆனால் அவருடைய சாதனைகள், குறிப்பாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அவர் பெயரை உயர்த்திப் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. அப்போது அவர் புத்துயிர் பெறுவார்.
ரமணன் | February 13, 2014 at 2:50 pm | URL: http://wp.me/p2eZn6-Zr

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்