4/6/14

எம்ஜிஆரை நிராகரித்த ஹாலிவுட் டைரக்டர்

இந்திய சினிமாவுக்கு 100 வயதானதை  நம்மவர்கள் ஆராவாரங்களுடன் பிரமாண்ட மேடைகளில் மெகா சைஸ் கலக்குழுக்களுடன் ஆடிப்படி, கொண்டாடி மறந்து போய்விட்ட நிலையில், அமைதியாக தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒரு அமெரிக்க டைரக்டர் பற்றி  ஒரு அருமையான ஆவணபடத்தை  எடுத்திருக்கிறார். திரு.கரண்பாலி இவர் புனா பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தவர் விளம்பர, ஆவணபடங்கள் எடுப்பவர். என்பதை தாண்டி இந்திய சினிமாவை  காதலிப்பவர். . ராஜீவ் மேன்னின் திரைப்பட கல்லூரியிலும்,எல்.வி பிராசாத்  இன்ஸ்டியூட்டிலும் அழைப்பின் பேரில் வகுப்புகள் நடத்துபவர்.
தமிழ் சினிமாவுடன் நேரடி தொடர்பு இல்லாத இவருக்கு எப்படி தமிழ் படங்கள் இயக்கிய இந்த டைரக்டரை பற்றி ஒரு ஆவணபடம் எடுக்கும் எண்ணம் வந்தது ?.
நான் சென்னையில் படித்தவன் என்பதால் தமிழ் சினிமா பற்றி ஒரளவு தெரியும். தமிழ் சினிமாவின் வளர்ச்சி பற்றி ஒரு கட்டுரையை என் தளத்தில் வெளியிட செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது பால்வில்லியம் என்பவரின் “என்சைகோளாபிடியா ஆப் இந்திய சினிமாவில் முதலில் டங்கன் பற்றி அறிந்தேன். தொடர்ந்து செய்திகள் சேகரிக்க  துவங்கியபோது பிரமித்துப் போய் தமிழ் சினிமாவிற்கு இத்தனை செய்திருக்கும் இந்த அமெரிக்கரைப்பற்றி ஒரு டாக்குமெண்ட்டிரி எடுத்தால் என்ன என  தோன்றியது.   எம். கே ராதா, பாலையா,என். எஸ் கிருஷ்ணன் எம் ஜி ஆர் ஆகியோர்களை தமிழ்திரைக்கு அறிமுகம் செய்திருக்கும் இந்த டைரக்டர் டெக்னிக்லாகவும் பல விஷயங்களை, இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.  டிராமா வடிவில் இருந்த தமிழ் சினிமாவை “சினிமாவாக” ஆக்கியிருக்கிறார்.  கேமிராக்கள் ஸ்டூடியோவை விட்டு வெளியே மட்டுமில்லை. ஸ்டூடியாக்களிலேயே அசையாமல் இரே இடத்தில் இருந்த  தமிழ் சினிமாவில். புதிய ஓளி, ஒலி முறைகள் உடைகள் நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவற்றை அறிமுகப்படுதியவர். இன்று படமெடுக்க பயன்படுத்தும் டிராலி ஷாட்களுக்கான டிராலியை இவர்தான் வடிவமைத்திருகிறார். அதனால் தான் அது டங்கன் டிராலி என இன்றும் அழைக்கபடுகிறது. குளோசப்காக தனி லென்ஸ், அந்த காட்சிகளுக்கு விசேஷ மேக்கப் பயன்படுத்தியவரும் இவர்தான். என்பதையெல்லாம் அறிந்த போது ஆர்வம் அதிகமாயிற்று.   
  ஐரிஷ் வம்சாவளி அமெரிக்கரான டங்கன், சினிமாகலையை  பிரான்ஸில் படித்தவர். அப்போது இந்தியாவிலிருந்து வந்து அங்கு அவருடன்  படித்து கொண்டிருந்த ஒரு மாணவர் எம். ஆர் டாண்டன்.  தன் தந்தை பம்பாயில் ஒரு புதிய ஸ்டூயோ   துவங்கப்போவதால் உடன் வந்து 6 மாதம் உதவி செய்யும்படி அவர் கேட்டதின் பேரில் 1935ல் இந்தியா வந்தார்..  ஆனால் அந்த ஸ்டுடியோ துவங்க படாதால், கல்கத்தாவில் ஷூட்டிங் நடந்து  கொண்டிருந்த ஒரு தமிழ் படத்தில் டாண்டனின் உதவியுடன் உதவி இயக்குனரானார்.. அந்த படம் நந்தனார். அதன் மூலம் தமிழ் சினிமாவால்  ஈர்க்கபட்டு அடுத்த 15 ஆண்டுகள் 1950 வரை தமிழ் நாட்டில் தங்கி  சினிமாவில் பெரும் புரட்சிகளை செய்திருக்கிறார்.  15 ஆண்டுகளில் இவர் இயக்கியது 17 தமிழ் படங்கள் அனைத்தும் ஹிட் படங்கள்.  எம். கே ராதா, பாலையா,என். எஸ் கிருஷ்ணன் எம் ஜி ஆர் ஆகியோர்களை தமிழ்திரைக்கு அறிமுகம் செய்தவரும் இவர்தான்.
இந்த ஆவணபடத்தின் மூலம் அறிந்து கொள்ளும் சில விஷயங்கள் ஆச்சரியமாகயிருக்கிறது. எம்ஜி ஆர் ரின்  முகத்தில்,கீழ் தாடைப்பகுதியில் ஒரு சின்ன குழி இருந்ததால் அவர் முகம் சினிமாவிற்கு ஏற்ற முகவெட்டுடன் இல்லை என டங்கனால் நிராகரிக்கபட்டிருக்கிறார்.  ஆனால் படத்தயாரிப்பாளார் மருதாசலம் செட்டியார். ”படத்தின் வசனகர்த்தாவின் வசனங்களை நம்பிதான்  இந்த படமெடுக்கிறேன்.  இந்த நடிகர் அவரால் சிபார்சு செயபட்டவர்.. அவர் சிபார்சை தட்ட முடியாது.” என்றவுடன். ஒரு சின்ன ஒட்டு தாடியின் மூலம் அந்த குழியை மறைத்து எம்ஜியாரை அறிமுகபடுத்தியிருக்கிறார் டங்கன். அந்த வன கர்த்தா - கலைஞர் !. படம் சதி லீலாவதி. அந்த படம் ஹிட்டானதில் எம்ஜிஆருக்கு பல வாய்ப்புகள்  கிடைத்தன.
ஆங்கில மட்டுமே அறிந்த இவர் எப்படி தமிழ்படங்களை டைரக்ட் செய்தார்?  தமிழில் தெரிந்த மிக சில வார்த்தைகள்  கொண்டு பணியாளர்களை சமாளித்தாலும்,படங்களின் கதையை ஆங்கிலத்தில் தயாரித்து கொண்டு, பேசும் வசனங்கள் புரியாவிட்டாலும் கதையை நன்கு புரிந்துகொண்டு வசனங்களை சரிபார்க்க அந்த கதாசிரியர்களை எப்போதும் உடன் இருக்கும்படிசெய்திருக்கிறார். கல்கி, சதாசிவம், இளங்கோ போன்றவர்கள் பெரிதும் உதவியிருக்கின்றனர்.  டெக்கினிக்லாக பல விஷங்களை செய்து டிராமா வடிவில் இருந்த தமிழ் சினிமாவை “சினிமாவாக” ஆக்கியிருக்கிறார்.  கேமிராக்கள் ஸ்டூடியோவை விட்டு வெளியே மட்டுமில்லை. ஸ்டூடியாக்களிலேயே அசையாமல் இரே இடத்தில் இருந்த  தமிழ் சினிமாவில். புதிய கோணங்கள். ஓளி, ஒலி முறைகள் உடைகள் நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவற்றை அறிமுகப்படுதியவர். இன்று படமெடுக்க பயன்படுத்தும் டிராலி ஷாட்களுக்கான டிராலியை இவர்தான் வடிவமைத்திருகிறார். அதனால் தான் அது டங்கன் டிராலி என இன்றும் அழைக்கபடுகிறது. குளோசப்காக தனி லென்ஸ், அந்த காட்சிகளுக்கு விசேஷ மேக்கப் பயன்படுத்தியவரும் இவர்தான்.  , இவர் படங்களில் காதல் காட்சிகள் நெருக்கமாக இருந்தற்காக கடுமையாக விமர்சிக்கபட்டிருக்கிறார்.


எம் எஸ் சுப்புலட்சுமி நடித்து டங்கள் இயக்கிய மீரா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவுடன் அதை இந்தியிலும் டைரக்ட் செய்தவர் இவர். மீரா படத்தில் எந்த கோணத்தில் நாயகியின் முகத்தை அழகாக காட்டமுடியும் என்பதை  முகத்தை மட்டும் பிளாஸ்டாபாரிஸில் சிலையாக செய்து பல கோணங்களில் காமிராவழியாக பார்த்து தீர்மானித்திருக்கிறார். இன்று செய்யபட்டு கொண்டிருக்கும் பல டெக்னிக்கல் விஷயங்களை இந்த மனிதர்  அன்றே முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார். இன்றும் அவ்வப்போது டிவி சானல்களில் வரும் மந்திரிகுமாரி படத்தில் பவுர்ணமி நிலவொளியில் ”வாராய் நீ வாராய் பாடலுடன்” வரும்  படகு காட்சி பகல் இரண்டு மணிக்கு படமாக்கபட்டிருக்கிறது. எடிட்டிங்கில் அது இரவாக்கபட்டிருக்கிறது. இவர் படங்களின் போஸ்டர்களில் கதாநாயகர்களின் பெயரைக்கூட போடமல் டைரக்க்ஷன் எல்லிஸ். ஆர் டங்கன் ஹாலிவுட்  என விளம்பர படுத்தியிருக்கிறார்கள்.  அந்த அளவுக்கு பிரபலமான இயக்குனாராக இருந்திருக்கிறார்.
 இன்று ஒரு படம் ”உருவான கதை”  ஒரு தனிப்படமாக்க பட்டு விளம்பரங்களில் பயன் படுத்தபடுகிறது. 1940களிலேயே டங்கன் தான் படமெடுப்பதையே படமாக்கியிருக்கிறார். குடும்ப சுழ்நிலை காரணமாக,1950ல் அமெரிக்கா திரும்பிய டங்கள் அங்கு ஹாலிவுட் படங்களுக்கு இந்தியா பற்றிய ஆலோசனைகள் வழங்கும் வல்லுனாராக  தன் இறுதிக்காலம் வரை பணியாற்றியிருக்கிறார்
இந்த டாகுமெண்ட்ரிக்காக , தகவல்களை சேகரிப்பது எளிதாக இல்லை. என்கிறார் கிரண்பாலி. தமிழ் சினிமாக்களை பொருத்துவரையில் ஒரு நல்ல ஆவணகாப்பகம், இல்லை. தகவல்கள் தருபவர்களை பற்றிய பட்டியலும் இல்லை. தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதியிருக்கும் திரு தியோடர் பாஸ்கரன் அவர்களை எனக்கு தெரியும். அவர் 2001ல்  டங்கன் இறந்த ஆண்டு அவர் சுய சரிதை வெளியாகியிருப்பதாக சொன்னார். ஆனால் அவரிடம் அந்த புத்தகம் இல்லை. ஒரு பிரதி சிவேந்திரா சிங் என்பவரிடம் இருப்பது தெரிந்தது. இவர்  புனே இன்ஸ்டியூட்  ஆவணகாப்பக பாதுகாவலர் நாயர் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்தவர். அவரைத்தொடர்பு கொண்டு அந்த புத்தகத்தை வாங்கி படித்தேன். அந்த நூலின் இணை ஆசிரியர் பார்பாரா ஸ்மிக் என்ற பெண்மணி. கூகுளில் அலசி அவரது இ மெயிலை கண்டுபிடித்து தொடர்பு கொண்டேன்.  டங்கன் அவரது குறிப்புகளையும், படங்களையும் வெஸ்ட் வெர்ஜியா பல்கலைகழகத்திற்கு கொடுத்துவிட்ட விபரங்களை அவர் சொன்னார்.  என்நோக்கம் தமிழ் சினிமாவிற்கு டங்கனின் பங்களிப்பு பற்றி  அதிகம் சொல்லவேண்டும் என்பதால் அவரது சுயசரிதையை விட அவருடைய படைப்புகளை பற்றி அதிகம் ஆராய்ந்து  கொண்டிருந்தேன். பல்கலைகழகத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் நிறைய உதவினார்கள். படத்தின் அவுட் லைன் ரெடியாகி தயாரிப்பை துவங்கும் நேரத்தில் தியோடர்பாஸ்கர் பங்களுரில் வசிக்கும் எம். எஸ் சுப்புலக்‌ஷ்மியின் மகள் ராதாவிஸ்வநாதனை அறிமுகபடுத்தினார். இவர் சகுந்தலை, மீரா படங்களில் சிறு குழந்தையாக நடித்தவர். டங்கனின் இயக்கத்தை பார்த்தவர். அவர் சொன்ன தகவல்கள் படத்தை சிறப்பாக்கியது. மந்திரி குமாரி படம் தயாரிக்கபட்டபோது டங்கனுடன் பணிசெய்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.இன்றும் அவ்வப்போது டிவி சானல்களில் வரும் மந்திரிகுமாரி படத்தில் பவுர்ணமி நிலவொளியில் ”வாராய் நீ வாராய் பாடலுடன்” வரும்  படகு காட்சி பகல் இரண்டு மணிக்கு படமாக்கபட்டது. என்ற தகவலையும், எடிட்டிங்கில் அது இரவு காட்சியாக மாற்றபட்டது என்பதையும் சொன்னார்.
படம்  தயாராவது தெரிந்ததும் பலர் தகவல் அனுப்பினார்கள். ஆனால்  நான் சரியான, ஆதாரபூர்வமான விஷயங்களை மட்டுமே பதிவு செய்வதில் கவனமாக இருந்தேன். சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகை அலுவலகங்களை/ நிருபர்களை/சினிமாபற்றி எழுதுபவர்களையெல்லாம்  நானே நேரடியாக தொடர்பு கொண்டேன். சிலர் உதவினார்கள். ஒரு  மூத்த சினிமா பத்திரிகையாளார் தன்னிடம் தகவல்கள் இருப்பதாகாவும் ஆனால் உதவ முடியாது என்றும் சொன்னது ஒரு ஆச்சரியம்.
டங்கன் படங்கள் இயக்கிய காலத்தில் ஸ்டூடியோக்கள் இருந்த இடங்களை காட்டி,, அவர் அறிமுகபடுத்திய டிராலிகள் போன்ற பல தகவல்கள் கொடுத்தவர் நண்பர் நடிகர் மோகன் ராம். இவர் தமிழ்சினிமாவின் தகவல் சுரங்கம்.  தமிழ் சினிமாவை ஆராய்ந்து டாகடர் பட்டம் வாங்கியிருக்கும் திருமதி உமா வாங்கலும் நிறைய தகவல்கள் தந்து உதவினார். இந்த நண்பர்களின் உதவியினால்தான்  பேட்டிகள், காட்சிகள் இணைப்பு உரைகள்  என அழகான தொகுப்பாக  படம் உருவாகியிருக்கிறது.” என்கிறார் கிரண்பாலி. தமிழ் சினிமாவை  நேசிப்பவர்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.இது.
அமெரிக்காவில் டங்கனின் ஊரில் முதலில் திரையிடபட்டு இப்போது பல  இந்திய, அமெரிக்க நகரங்களின் பிலிம்சொஸைட்டிகளில் திரையிடபட்டிருக்கிறது.  .
தமிழ் சினிமாவின்  வளர்ச்சிக்கு  முக்கிய பங்களித்த அமெரிக்கர் டங்கன் பற்றிய ஆவணப்படம் தயாரிக்க பட்டிருப்பது  சந்தோஷமாக இருந்தாலும் அந்த படத்தையும் அதைத் தயாரித்தவரை தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.
கல்கி 1/06/14)


1 கருத்து :

  1. எல்லிஸ் ஆர் டங்கன் பற்றிய பல விஷயங்கள் புதியது
    அவர் பற்றிய விஷயங்களை , மூத்த பத்திரிகையாளர் பகிர்ந்தளிக்காதது வியப்பும் வருத்தமும் பட வைக்கின்றன

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்