3/1/15

புத்தாண்டின் முதல் நாள் காலையில்


புத்தாண்டின் முதல் நாள் காலையில் முதலில் படித்த பதிவு இது. நண்பர் சரவணின் விமர்சனம். ஒரு அருமையான பதிவாக கருதுகிறேன். எழுதியிருப்பதை சொல்லிவிட்டு விடுபட்டிருப்பதை அவர் பார்வையில் பேசியிருக்கிறார். எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது. இந்த புத்தாண்டுதினத்தில் அந்த சந்தோஷத்தை கொடுத்த நண்பர் சரவணுக்கு நன்றி.





பூ.கொ. சரவணன்
நேருவின் ஆட்சி- பதியம் போட்ட 18 ஆண்டுகள் புத்தகத்தைப் புத்தாண்டின் முதல் புத்தகமாக வாசித்து முடித்தேன். நேருவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட காலத்தைப் பதிவு செய்துவிட்டு, சீனா,காஷ்மீர் சிக்கல்கள் ஆகியவற்றில் நேரு சொதப்பினார் என்று சொல்வதோடு நேருவின் ஆட்சிக்காலத்துக்கு முற்றும் போட்டு முடித்துவிடுவதே பெரும்பாலும் நடக்கிறது. நேருவின் இந்தப் பதினெட்டு ஆண்டுகால ஆட்சி பற்றித் தனியான புத்தகங்கள் வந்ததில்லை என்கிற பெரிய குறையை ஆசிரியர் தீர்க்க முயன்றிருக்கிறார். நூலின் உள்ளடக்கம் பற்றிப் பேசிவிட்டு பின்னர் விமர்சனங்களுக்குள் செல்கிறேன் :
தனியாக முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் என்று சொல்லி வெறுப்பை விதைத்து அறுவடை செய்த ஜின்னாவுக்கே நாட்டின் பிரதமர் பதவியைக் கொடுத்து சிக்கலைத் தீர்க்கலாம் என்று காந்தி சொன்ன பொழுது அதை நேரு ஏற்க மறுத்தார். கிருபாளினி, படேல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நேருவை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதைக் காந்தி உறுதி செய்திருந்தாலும் எல்லாச் சமயத்திலும் அவர் சொல்வதே தான் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதை நேரு செய்து காண்பித்தார். இந்திய விடுதலையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் முதலிய பலபேர் எதிர்க்க உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் உணர்ச்சியும், உண்மையும் கலந்த ஒரு உரையை நிகழ்த்தி நாடாளுமன்ற அனுமதி பெற்று தனியான தேசமாக இந்தியா உருவாவதை சாதித்தார்.
பிரிவினைக்குப் பிறகு தேசம் உருவாகிறது. நேரு விடுதலை நாளுக்குத் தயாராக வேண்டும். தேச விடுதலைக்கு முக்கியக் காரணமான காந்தி மதத்தின் பெயரால் வெட்டிக்கொண்டிருந்த மக்களிடையே அமைதியை கொண்டுவர போயிருந்தார். லாகூரில் இந்துக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்து சேர்ந்து கண்ணீர்விட்டு அழுத நேரு எப்படி மக்கள் முன் உரையாற்றப் போகிறோம் என்று உள்ளுக்குள் கலங்கிக்கொண்டு இருந்தார். எந்தத் தயாரிப்பும் இல்லாமல், வெறுப்பை விடுத்து சகோதரர்களாக இணைந்து புதுத் தேசம் படைப்போம் என்பதை ‘விதியோடு சந்திப்புக்கு ஒரு ஒப்பந்தம்’ உரையில் நேரு தேச மக்களின் மனதில் விதைத்தார். மவுண்ட்பேட்டனிடம் நேரு கொடுத்த அமைச்சரவை பட்டியல் என்று பெயரிடப்பட்ட உறைக்குள் வெறும் வெள்ளைத்தாள் தான் இருந்ததாம்.
சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்கும் பணியில் படேல், மேனன் ஆகியோர் ஈடுபட்ட பொழுது நேரு உறுதுணையாக இருந்தாலும் சமயங்களில் முரண்டும் பிடித்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நிஜாம் ஆண்டுகொண்டிருந்த ஹைதரபாத்தை உடனே தாக்குவது இந்திய முஸ்லீம்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் என்று அமைதி காத்த நேருவை மீறி அங்கே ரஸாக்கர்களின் அட்டூழியத்தை ஒழிக்கப் போலீஸ் நடவடிக்கை தேவை என்று படேல் வாதிட்ட பொழுது ‘நீங்கள் மதவாதி!’ என்று சொல்லிவிட்டு நேரு வெளியேறினார். பின்னர் ராஜாஜி கிறிஸ்துவக் கன்னியாஸ்திரிகள் வன்புணர்வுக்கு ரஸாக்கர்களால் உள்ளாக்கப்பட்டு இருப்பதாக அயல்நாட்டு தூதுவர் அனுப்பிய கடிதத்தைக் காண்பித்ததும் நிலைமையின் வீரியம் உணர்ந்து நேர்ந்த அவலங்களால் ஏற்பட்ட கண்ணீரை அடக்க முடியாமல் போலீஸ் நடவடிக்கைக்கு அனுமதி தந்தார் நேரு. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜூனாகாத்தை ஜின்னா தந்திரமாகப் பெற்ற பின்னர் அதை இந்தியாவோடு இணைத்த பின்பு அங்கே வாக்கெடுப்பு நடத்தி இணைத்துச் சிக்கல்களை நேரு தவிர்த்தார்.
காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதி பதான்கள் நுழைந்த நிலையில் இந்தியாவின் உதவியை ஹரிசிங் கேட்டதும் ராணுவத்தை நேரு அனுப்பி வைக்கலாமா வேண்டாமா என்று நீண்ட நெடிய கூட்டத்தை நடத்தி, போரைத் தவிர்க்கலாம், ரஷ்ய உதவி, ஆப்ரிக்க மாதிரிகள் என்று ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார். ராய்புச்சர் என்கிற ஆங்கில அரசை சேர்ந்த ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும் நடந்தது. படேல் தீர்க்கமாகக் காஷ்மீர் நோக்கி ராணுவம் செல்லும் என்று சொன்னதோடு, ராய் புச்சர் பதவி விலகிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு பிரதேசங்களுக்கு இடையே பிரிந்திருக்க வேண்டும் என்பதையே பிரிட்டன் விரும்பியிருக்கிறது. அடித்துக்கொண்டு கிடப்பார்கள் என்பது ஒருபுறம், காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டால் பாகிஸ்தானை அது விழுங்கிவிடும் என்றும் அஞ்சியிருக்கிறார்கள். காஷ்மீர் சிக்கலை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்று உள்நாட்டு சிக்கலாக முடிந்திருக்க வேண்டிய அதைச் சர்வதேச சிக்கலாக நேரு மாற்றினார் என்பதோடு, வாக்கெடுப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார். பாகிஸ்தான் முழுமையாக விலகிய பிறகே வாக்கெடுப்பு என்பதைப் பாகிஸ்தான் கேட்கத்தயாராக இல்லை என்பதால் முதல் போர் முடியாத போராக இருக்கிறது.
காந்தியின் படுகொலைக்குப் பின்னர்ப் படேல், நேரு இணைந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தடை செய்யப்படுவதை உறுதி செய்ததன் மூலம் இந்தியா இந்து பாகிஸ்தான் ஆவதை தடுத்தார்கள். விடுதலைக்குப் பின்னர் ஜனநாயக ரீதியிலேயே தேர்தல் நடக்கவேண்டும் என்று சொல்லி கம்யூனிஸ்ட் பாணியிலான அரசையோ, ராணுவ அரசையோ, சர்வாதிகார போக்கையோ நேரு முன்னெடுக்காமல் உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தி சாதித்தார்.
இந்துப் பெண்களுக்கு ஜீவனாம்சம், விவாகரத்து பெற உரிமை, சொத்துரிமை ஆகியவற்றை வழங்கும் இந்து பொதுச்சட்டங்களை நேரு நிறைவேற்ற முயன்ற பொழுது இந்து மதத்தின் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அதை எதிர்த்தன. ஆனால், அவற்றை நிறைவேற்றி சீர்திருத்தங்களுக்குச் சட்டரீதியான முகம் கொடுத்தார் நேரு.
மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிவினை ஏற்படுத்திய ரணத்தால் முதலில் மறுத்த நேரு அதற்குப் பரவலான ஆதரவு இருந்ததால் அப்படியே அமைக்க ஜனநாயகரீதியில் ஒத்துக்கொண்டார். ‘நியாயமான முறையில் நியாயமான தேசத்தைக் கட்டமைத்தேன்.’ என்று நேரு சொன்னது பெரும்பாலும் உண்மையே. பழங்குடியினர், பட்டியல் ஜாதியினர் ஆகியோருக்கு உதவிகள் தேவை என்கிற எண்ணம் கொண்டிருந்தவர் நேரு. அதேசமயம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைக்கூட அவர் விரும்பவில்லை. திறன் குறையும் என்று அவர் கருதினார். எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்க அவர் முயற்சிக்கவில்லை. அதேசமயம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற பரிந்துரையை அதைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரே நிராகரித்ததால் கிடப்பில் போட்டார்கள்,
முழுமையாகச் சோஷலிசம் என்று பாயாமல் நேரு ஜனநாயக சோசலிசத்தை முன்னெடுத்தார் என்பதே உண்மை. அவரின் ஆரம்பகால வேகத்தைப் பார்த்துக் கம்யூனிஸ்ட்களே அஞ்சினாலும் அவர் அத்தனை வேகமாகச் சோசியலிசம் நோக்கிப் பயணப்படவில்லை என்பதே உண்மை. கல்வி, நிலப்பங்கீடு ஆகியவற்றில் மகத்தான சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் மீது காவல்துறை பாயத்தடை என்று இயங்கிய நம்பூதிரிபாட் அரசை கலைக்கச் சொல்லி உத்தரவிட்ட நேருவின் செயல் அவரின் ஜனநாயகப்பண்பில் கரும்புள்ளியாக விழுந்தது.
சீனச்சிக்கலில் கிருஷ்ணமேனனை நம்பிக்கொண்டு என்ன நடக்கிறது என்றே கவலைப்படாமல் நேரு இருந்தார். சீனா பல்வேறு பகுதிகளில் நுழைந்து கையகப்படுத்தி இருந்த பொழுது சீனப்படைகளைத் தூக்கி எறிவேன் என்று நாடாளுமன்றத்தில் சவால் விட்டுக்கொண்டிருக்கிற அளவுக்கு அறியாமை கொண்டிருந்தார் அவர். கவுல், முல்லிக் முதலிய திறனற்ற தளபதிகள் ஜீப் ஊழலில் சிக்கிய கிருஷ்ணமேனனின் தயவில் களத்தில் நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரழக்க முக்கியக் காரணமானார்கள். தலாய்லாமாவை இந்தியாவுக்குள் அனுமதித்த நேரு சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் நம்பிக்கையை அவர் பெறவே இல்லை என்பதைச் சீனப் போர் நிரூபித்தது. போரில் இந்தியா சிக்குண்டு திணறிய பொழுது அமெரிக்காவே பேருதவி செய்தது. ஆயுதங்கள் தந்ததோடு நில்லாமல், விமானப்படையை அனுப்புவதாகவும் அது பயமுறுத்தியதும் சீனா போரை முடித்துக்கொள்ளக் காரணம்.
அணிசேராக்கொள்கையை உருவாக்கி சுதந்திரமான அயலுறவுக்கொள்கையை நேரு சாதித்தார். இந்தியை தென்னகத்தின் மீது திணிக்கிற வேலையை அவர் செய்யவில்லை. நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணை மொழியாகத் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். சீனப்போர் தோல்விக்குப் பின்னர்த் தான் பெருந்தோல்வி அடைந்த கே ப்ளான் வந்தது. இடதுகையில் பக்கவாதம், சீராகச் செயல்படாத சிறுநீரகம் இவற்றோடும் இந்திய மக்களுக்காக உழைத்த ஆளுமையாக நேரு திகழ்ந்தார். 150 பக்கங்களில் இத்தனை பெரிய வாழ்க்கையை அடக்கியதற்கு ஆசிரியருக்கு பூங்கொத்து. மேலும் பல இடங்களில் பின்புலத்தைத் தொட்டுவிட்டே நேரு கால அரசியலுக்கு வந்து அசத்துகிறார். நேரு பற்றி தமிழில் வந்த புத்தகங்களிலேயே ( மொழிபெயர்ப்பான இந்தியா காந்திக்குப் பிறகை தவிர்த்து ) சிறந்த புத்தகம் இதுவே.
சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடு
ஆசிரியர் : ரமணன்
பக்கங்கள் :152
விலை : 115
புத்தகத்தை வாங்க http://www.wecanshopping.com
---------------------------------------------------------------------------------------------------
இனி விமர்சனங்கள் :
படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தார் என்று எழுதுகிற பகுதியில் நேரு எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எப்பொழுதும் சந்தேகத்தோடு பார்த்தார், அது சார்ந்து அவருக்கும் படேலுக்கும் இருந்த கருத்துப் பேதங்களைப் பதிவு செய்யவில்லை ஆசிரியர். படேல் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். தடைக்கு முழுக்காரணம் என்பது போன்ற பிம்பம் எழுகிறது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகர் பெண்ணின் மணவயதை ஏற்றியதை ஆதரிக்க மறுத்தது ஆச்சரியமே என்று எழுதுகிற ஆசிரியருக்கு திலகர் பசுவதைக்கு ஆதரவாகத் தீவிரமாக இயங்கியதும், அவரின் கணபதி, சிவாஜி விழாக்கள் மதரீதியாக மாறி இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு வழிவகுத்தது தெரிந்திருக்கும். மத ரீதியாகப் பழமைவாதியாகவே அவர் இருந்தார் என்கிற பொழுது எப்படி இப்படி ஆச்சரியப்பட்டார் என்று தெரியவில்லை.
ஷேக் அப்துல்லா பகுதியில் ஒரு வரலாற்றுப் பார்வைக்குப் பதிலாக ஆசிரியரின் சொந்தப் பார்வையே மிகுந்துள்ளது வருத்தமான ஒன்று. ஷேக் அப்துல்லாவை துரோகி என்று சொல்கிற அளவுக்கு ஆசிரியர் சென்றுவிட்டார். அந்த வாதத்துக்குள் போக விரும்பாவிட்டாலும் ஜனசங்கம் காஷ்மீரில் செய்த குழப்பங்கள் அப்துல்லாவை தனிக் காஷ்மீர் என்பதை நோக்கி தீவிரமாகத் தள்ளியது என்பதையும் சமநிலையோடு ஆசிரியர் பதிவு செய்திருக்க வேண்டும். ஐந்தில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் என்பதையும், அவர்கள் நிலை ஹரிசிங் காலத்தில் மோசம் என்பதையும் பதிந்துவிட்டு ஷேக் அப்துல்லா கொண்டுவந்த நில சீர்திருத்தங்கள் காஷ்மீரை முஸ்லீம் தேசமாக மாற்றியது என்பது சாய்வான வாதம் இல்லையா ? ஷேக் அப்துல்லா மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடித்துக் கலவரங்கள் என்பதை மத ரீதியாக நடக்காமல் தடுக்கிற முக்கியமான சக்தியாக அவர் காலத்தில் இருந்தார். தேர்தலில் தொகுதிகளை விரும்பியபடி வரைந்து கொண்டார் அவர் என்று எழுதும் ஆசிரியர் ஜனசங்கம் ஜெயித்திருக்குமே என்கிற ஆதங்கத்தோடு எழுதியதாகப் படுகிறது. பல தொகுதிகளில் எதிர் வேட்பாளர்கள் நிற்பதை தேர்தல் மனுக்களை நிராகரித்துத் தவிர்த்ததில் நேருவுக்குப் பங்கில்லை என்று மறுத்துவிட முடியாது. ஷேக் அப்துல்லா பக்கம் பட்ட பார்வை ஷ்யாம் பிராசத் முகர்ஜி பக்கமும் சென்றிருக்கலாம். நூலின் கனத்தை அசைக்கிறது இப்பகுதி.
அதே போலச் சீனாப் பக்கம் நேரு சாதகமாக இருந்தார் என்று எழுத வந்ததற்குக் கொரியப் போரில் அவர் செய்த விமர்சனத்தை எடுத்துக்காட்டாகக் காட்டியதற்குப் பதிலாக ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாகச் சீனாவை ஆக்கச்சொல்லி கேட்டதையோ வேறு எதையோ குறிப்பிட்டு இருக்கலாம். இந்தியா கொரியப்போரில் இடதுசாரி அரசுகள் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளின் விமர்சனங்களை ஒருங்கே பெறுகிற அளவுக்கு நடுநிலையோடு செயல்பட்டது என்பது பலரின் பார்வை.
இட ஒதுக்கீட்டை நேரு விரும்பவில்லை என்பதை மட்டும் பதியும் ஆசிரியர், இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்று சொல்ல வந்து அதற்குத் தற்கால மருத்துவ மதிப்பெண்கள் எடுத்துக்காட்டைத் தருகிறார். நேரு காலத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் தேவைப்பட்டது என்று சொல்லித்தானே இடஒதுக்கீட்டுக்கான தேவையைப் பற்றிய வாதத்தை முன்வைப்பது சரியாக இருக்க முடியும்? நேரு கால வரலாற்றை எழுதுகிறோம் என்பதை அங்கே மறந்துவிட்டார் ஆசிரியர்.
சோஷலிசம் பற்றிய பக்கங்களில் நேரு அவ்வளவாகத் தீவிரமாகச் செயல்படுத்தாத நில சீர்திருத்தங்கள் பற்றியும், ஆரம்பக்கல்விக்கு அளிக்கப்படாத முன்னுரிமை பற்றியும் பேசவில்லை. அவர் காலத்தில் எழுந்த வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இன்னமும் ஆழமாகப் பேசியிருக்க முயன்றிருக்கலாம். குறைந்தபட்சம் அவற்றைப் பற்றிக் குறிப்பிடவாவது செய்திருக்கலாம்.
  • Shah Jahan //எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது.//சரியாகச் சொன்னீர்கள்.
  • Vedha Gopalan # எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது #

    Very correct.! அனுபவப்பூர்வமாக உண்ர்ந்திருக்கிறேன்! ஆனால் இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது இன்னும் பெரிய சந்தோஷம் அளிக்கிறது


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்