27/6/16

பொன்மாலைப் பொழுதுகள் 6


பிரமாண்டமான ஷாப்பிங் மால்களினால் நிறைந்த நகரம் துபாய் என்ற எண்ணத்தை மாற்றியது இந்தப் பயணம். உலகின் மிகச்சிறந்த விஷயங்களை எல்லாம் இங்கே கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசரின் நிர்வாகம், , மனித உழைப்பை மிகப்பெரிய அளவில் வளரும் தொழிநுட்பத்துடன் பயன்படுத்தி நாட்டை நாளொரு வண்ணமாகவும் பொழுதொருமேனியாகவும் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது 15 லட்சம்  சுற்றாலப்பயணிகள் வரும் இந்தக் குட்டி தேசத்துக்கு 2020க்குள் அதை இருமடங்காக்க திட்டமிட்டிருக்கிறார்கள்> அப்போது வரப்போகும் EXPO 2020 என்ற உலக கண்காட்சியை இங்கே நடைபெறப்போகிறது. அதற்காக இப்போதிலிருந்தே திட்டமிடுகிறார்கள்.
இங்குச் சுற்றாலத்துறை தனியாரால் இயக்கப் படுகிறது. இங்கு அனைத்து நிறுவனங்களிலும் அரசின் முதலீடும், நிர்வாகத்தில்பங்கும் இருக்கிறது. அதனால் அரசின் எண்ணங்கள் சிறப்பாகச் செயலாகின்றன.
நகரை சுற்றிப் பார்க்கப் பலவிதமான பஸ்கள் முழுவதும் ஏர்கண்டிஷன், பாதிமூடியது, மொட்டைமாடி பஸ் எனப் பலவகை. இயக்குவது லண்டனிலிருக்கும் BIG BUS என்ற நிறுவனம். எல்லாபஸ்கலிலும் இந்தி உள்பட 14 மொழிகளில் ஆடியோ அமைப்பு. தேவையான மொழியைத் தேர்ந்தெடுத்து காதில் போனை சொருகிக்கொண்டால் நாம் பார்ப்பதை அது விவரித்துச் சொல்லும். நாம் தேர்ந்தெடுக்கும் இடங்களில் இறங்கிக்கொண்டு நாம் விரும்பியபடி பார்த்தபின் அடுத்துவரும் பஸ்ஸில் ஏறிக்கொள்ளலாம். படங்கள் எடுக்க வசதியாக இருப்பதால் நான் மொட்டைமாடி பஸ்ஸை தேர்ந்தெடுத்தேன்.

வண்ணமயமான வானுயர்ந்த நவீன கட்டிடங்களைக் கடந்து நகரின் மறுகோடியிலிருக்கும் பகுதியில் பழைய அரேபிய கட்டிடகலையின் மிச்சங்களைப் பார்க்கமுடிகிறது. வெளிப்புற சுவர்களில் அழகான வண்ணகோலங்கள். அங்குள்ள மீயூசியத்தில் இறங்கி சிலமணிநேரங்களை செலவிட்டேன். பலநாடுகளில் மீயூசியம் என்பது வெறும் கட்டிடத்தில் பொருட்களாக இல்லாமல் மிக அழகாக ஆவலைத்தூண்டும் விதமாக அமைத்திருப்பார்கள். துபாய் மீயூசியம் அதுபோல்தான். நுழைவாயிலில் ஒரு படகு அதன் பின்னே ஒரு பழைய கோட்டையில் மீயூசியம். துபாய் நகரம்/தேசம் பிறந்து வளர்ந்த கதையைச்சொல்லும் தத்ரூபமான ஃபைபர் பதுமைகள் இதமான ஓளி/ஒலி அமைப்பில். முத்துக்குளிக்கும் நகரமாக இருந்ததை நமக்குக் காட்ட, மீயூசியத்தின் நிலவறைப்குதியில் கடலின் அடியில் இருப்பது போல ஒரு சூழல். மெல்லிய கடல்நீல வெளிச்சம், அலைகளின் மெலிதான ஓசை நீரின் அடியில் நீந்தும் மனிதர்கள் என அசத்துகிறார்கள். வெளியே வரும்போது கடலிலிருந்து தரைக்கு வந்த உணர்வு.

தொடர்ந்த பஸ் பயணத்தில் பழைய துபாயை நினைவுட்ட நிர்மாணிக்கப்பட்ட பகுதி இதை souk என்று அழைக்கிறார்கள். மார்க்கெட் என்று அர்த்தம். சிறிய கடைகள் ஒரு கிராம சூழ்நிலையில் மிக நெருக்கமாக, ஒரே வரிசையில் அமைந்திருக்கிறது. போர்டுகள் கூடப் பழைய பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன. மார்கெட்டின் கட்டிட அமைப்பும், பழமையைப் பறை சாற்றுகிறது சூடான காற்றை வெளியேற்றும் வசதிக்காகக் குறுக்கு கட்டைகள் பொருத்தப்பட்ட பாரம்பரிய மண் சுவர் கோபுரங்கள் கூட இருக்கிறது.
. கோல்ட் சூக் என்ற பகுதியில் பலசரக்கு கடைகளில் தொங்கும் ஷாம்ம்பு பாக்கெட் சரங்கள் போலக் கொத்து கொத்துக்காகத் தொங்கும் தங்கச்சங்கலிகள். வளையல்கள். எப்படிப் பாதுகாக்கிறார்கள்? என்பது ஆச்சரியம்.
வெளியே பிரதான சாலையில் எல்கேஎஸ், பீமாஸ். ஜாய் ஆலுக்காஸ் போன்று நமக்கு அறிமுகமான பெயர்களில் வழக்க்மான பாணி ஷோ ரூம்கள். ஆனால் தி நகர் ஆடம்பரம் இல்லை.

அருகிலேயே spice souk வாசனை திரவிய பொருட்கள் அனைத்து நிரம்பி வழியும் கடைகள். குங்குமப்பூ, கிராம்பு மட்டுமில்லை. காய்ந்த ரோஜா இதழ்கள் இதழ்கள் மட்டுமில்லை காய்ந்த ரோஜா மொட்டுக்ககளைக் கூடக் கிலோகணக்கில் விற்கிறார்கள். டூரிஸ்ட்கள் வேடிக்கை பார்க்கிரார்கள் உள்ளுர்காரர்கள் வாங்குகிறார்கள்

தொடர்ந்து பஸ்ஸில் ; பயணித்துத் தேரியா துபாய் , மற்றும் ஃபர் தூபாய் எனத் துபாய் நகரை இருபகுதியாகப் பிரிக்கும் அமையதியான கடல் பகுதியில் creek dhow படகில் பயணம். இரு பக்ககங்களில் இருக்கும் பிரமாண்ட கட்டிடங்கள் வழியனுப்பிய மெதுவான படகுசவாரி. கரைகளில். பெரிதும் சிறிதுமாக ஏராளமான ஆடம்பர படகுகள். அணிவகுத்து நிற்கின்றன. சில பெரிய படகுகள் பாலிவுட் இளவரசர், இளவரசிகளுக்குச் சொந்தம் என்றார்கள்

...
  
அரேபிய இசை, ஸ்நாக்ஸ், டீயுடன் மெல்ல மிதக்கும் படகு படகு ஒரு ரவுண்ட் அடித்துத் திரும்பியது. கரைக்குவந்து காத்திருந்து, பஸ்சில் பயணம் தொடர்கிறது. வெளியில் வெயில் கொளுத்தினாலும் பஸ் ஸ்டாப்கள் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருப்பதால் காத்திருந்த கஷ்டம் தெரியவில்லை.

ஒரு சிறிய தீவாக இருந்த துபாயின் நிலப்பரப்பை விரிவாக்கி நகரைப் பெரிதாக்கும் திட்டத்தின் ஒரு பகுதி palm jumairah. நடுப்பகலில் ஒரு ஈச்சமரத்தின் நிழல் தரையில் விழுவதைக் கற்பனை செய்து பாருங்கள்.
அப்படியொரு அமைப்பைக் கடலில், மண்கொட்டி நிரப்பி அதன் மீது ஒரு நகரத்தையே எழுப்பியிருக்கிறார்கள்:. ஈச்சை மரத்தின் உடல் பகுதியைப் போலக் கடல் நீரின் நடுவில் நீண்ட பாதை. அதன் முனையிலிருந்து விரிந்துவழியும் இலைகளின் மட்டைகள்போல இருபுறமும் அமைக்கப்பட்ட சிறிய சாலைகள் அதில் வீடுகள், பங்களாக்கள், குட்டி அரண்மனைகள். எல்லம். . இதுதான் எங்கள் வீட்டு பீச் எனக் காட்டிக்கொள்ள எல்லோருக்கும் கொஞ்சம் கடலும் மணலும். உலகின் மிக விலையுர்ந்த நிலப்பரப்பாக வர்ணிக்கப்படும் இந்தப் பகுதியில் உலக பணக்கார்கள் பட்டியலில் இருப்பவர்கள் வீடுவாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நமது பாலிவுட் கான்களுக்கு கூட வீடுகள் இருக்கிறது. தீவின் இறுதியில் ஆடம்பர ஹோட்டல்கள். ஹெலிபேட் வசதிகளுடன். இவற்றை நகருடன் இணைக்கும் மோனோ ரயில்.

அட்லாண்ட்டிஸ் தி பாம் என்ற அந்தப் பெரிய கட்டிடத்தின் நடுவில் ஒரு மாளிகையின் விதானத்தின் வடிவில் வெற்றிடத்துடன் ஒரு பிரம்மாண்ட ஹோட்டல். கனவுலகமாக அதன் வரவேற்பு கூடம் உள் அலங்காரங்களினால் ஜொலிக்கிறது

இப்போது துபாயில் வெளிநாட்டவர்கள் நிலம்வாங்கி கட்டிடம் கட்டி தங்கள் தொழில்களைக் கொண்டுவர வரவேற்கிறார்கள். இதற்காகப் பலவிதமான சலுகைகள். உலகின் பல நிறுவனங்கள் இந்த சலுகைகளைப் பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நமது இன்போஸிஸ், டாடா, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் கட்டிடங்களில் முதலீடு செய்து பரவிக்கொண்டிருக்கிறார்கள். Knowledge city என்ற பகுதியில் உலகின் பிரபல யூனிவர்சிட்டிகளின் கல்லூரிகள். நமது பிட்ஸ், எஸ் பி ஜெயின் மேனேஜ்மென்ட் கல்லூரிகளும் இருக்கின்றன.
2020க்குள் துபாயை உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் மிக மும்மரமாக இயங்குகிறது. ஹாலிவுட்டில் யூனிவர்சல் சினிமா நகரம் இருப்பது போல நமதுபாலிவுட் நகரம் பல சினிமா செட்டுகளுடன் தயாராகிறதாம். நேரம் இல்லாதால் பார்க்க இயலவில்லை.

இறுதிக்கட்டமாகப் பஸ்சில் பாலைவனத்தின் ஒரு மூலைக்கு அழைத்துச்சென்று அரேபிய பாலைவன வாழ்க்கையை சாம்பிள் காட்டுகிறார்கள்:. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பறந்து கிடக்கும் மணல் வெளியில் தார் இடப்படாத சாலை. வால்வோ பஸ்ஸே திணறும் அளவு மேடு பள்ளங்கள். சாலையின் குறுக்கே ஓடிய மான்கள். ஆம்! இந்த இடத்தில் இந்த வெப்பம் மிகுந்த பாலைவனத்தில் மான்கள்:.!

தொலைவில் மணற்கோட்டையின் உள்ளே ஹோட்டல். விருந்தினரை வாசலிலேயே ஒரு கூடாரத்தில் வரவேற்று அரபியா காபி கொடுத்தார்கள். ஒரு வளைந்த நீண்ட மூக்குடன் இருக்கும் பெரிய கெட்டிலிலிருந்து கொஞ்சுண்டு ஒரு சின்ன --மிகவும் சின்னக் கப்பில் கொடுத்தார்கள். அவ்வளவுதான் சாப்பிட வேண்டுமாம். சுவை தெரிவதற்குள் விழுங்கி விட்டதால் எப்படியிருந்தது எனச் சொல்லத்தெரியவில்லை. ஒட்டக சவாரி, குதிரைச் சவாரிகளில் ஒரு சுற்று வரலாம் மணற்தரையில் போடப்பட்டிருக்குக் திண்டுகளில்; சாய்ந்து கார்ப்பெட்டில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு பார்த்த அழகான சூர்ய அஸ்தமனம் இப்போதும் நினைவில் நிறைந்திருக்கும் காட்சி
மாலை மயங்கியவுடன், பாதைகளில் தீவட்டிகள் ஏற்றப்படுகிறது. ஏதோ சினிமா செட் போல ஆகிவிட்டது அந்த இடம், இரவு பார்ட்டிக்கு தயாராகிறதாம். குளிர் நம்மைத் தொட ஆரம்பித்தவுடன் நகருக்கு திரும்பச் செல்ல அழைக்கிறார்கள். திரும்பும் நம்மை மின் விளக்குகளில் மிதந்து கொண்டிருக்கிறக்கும் துபாய் ஆச்சரியப்படுத்துகிறது. பெரிய சிறிய எல்லாக் கட்டிடங்களிலும் வெளிப்புறத்தில் விளக்குகள். ஈச்சமரங்கள் எல்லாம் மின்விளக்கு புடவை உடுத்திக்கொண்டிருக்கின்றன. முக்கிய சந்திப்புக்களின் பாதைகளில் வண்ண மின்விளக்கு பார்டர்கள். இவர்களுக்கு மின்சாரம் என்பது உற்பத்தி செலவு மட்டுமே அவசியமான கச்சாப்பொருளான எண்ணையை ஆண்டவன் அள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் அதனால் தண்ணீராக – கடல் தண்ணீராக- செலவழிக்கிறார்கள். .


மறு நாள் காலையில் சென்னை திரும்ப விமான நிலையத்துக்கு வந்துகொண்டிருந்தபோது நண்பர் பார்க்கதவறிய மிராகள் கார்டன் போன்ற இடங்களையும் நண்பர் குழுக்களையும் பட்டியிலிட்டார்.அடுத்தமுறை மேலும் சிலநாட்கள் தங்கும்படி திட்டமிட்டு வாருங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது விமான நிலைய நுழை வாயிலில் தெரிந்த வாசகம்.      Tomorrow never stops exploring
“நாளை நமதே” என்பதுதான் எவ்வளவு நம்பிக்கையைத் தரும் வாசகம்
 ( இந்தப் பயணம் நிறைந்தது)







25/6/16

பொன்மாலைப் பொழுதுகள் 5


இன்னிக்கு நான் உன் நடனத்தை வீடியோ எடுக்கப் போறேன். அழகாக ஆடணும். கொஞ்சம் பின்னாடி போய் கிராஸ் லைட் இல்லாத ஏரியாவிற்குள் போய் ஆடுகிறாயா?” 

என்ன ரமணன்? . எங்களூர் மயிலிடம் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டீர்கள்? 
“4 நாளில் நல்லபிரண்டாகிவிட்டது அதற்குத் தமிழ் புரிகிறது 
என்ற என் பதிலைக்கேட்டு நண்பரும் அவர் மனைவியும் அந்தத் தோட்டமே அதிரும்படி சிரித்தார்கள். துபாய் நகரின் பரபரப்பான வீதியிலிருக்கும் பல உயர்ந்த கட்டிடங்களுக்கு நடுவே நிற்கிறது எமிரேட் டவர்ஸ் என்ற இரட்டைப்பிறவி உயர்ந்த கட்டிடங்கள்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கூட நடித்திருக்கிறதாம், அதில் ஹோட்டல்கள், கார்பேர்ட் அலுவலகங்கள், பேங்க் கிளப்கள் எல்லாம் இருக்கிறது. அந்தக் கட்டிடங்கள் இருக்கும் வளாகம் ஒரு அழகான சோலையாக இருக்கிறது, பச்சை கார்ப்பெட்டாக புல்வெளி. பல வண்ணங்களில் சிரிக்கும் மலர்கள் சில வண்ணத்துப்பூச்சிகள், அடர்ந்து உயர்ந்திருக்கும் மரங்கள் அதன் பின்னே உயர்ந்த கட்டிடங்கள் என அந்த இடமே ரம்மியமாக இருக்கிறது. இந்த இடத்தில் அனுமதிபெற்றவர்கள் காலையில் காலாற நடக்கலாம். நண்பர் வாக்கிங்க்காக முதல் நாள் அழைத்துபோன இந்த இடத்தைப் பார்த்து அசந்து போனேன். அந்தச் சோலையில் மயில்கள். அரை டஜனுக்கும்மேல் ஆடிக்கொண்டிருந்த ஆச்சரியம். மயிலாடும் துபாயை நான் எதிஎபார்க்கவில்லை. இந்த சோலைகளைப் பார்த்து வளரும் இன்றைய தலைமுறையினர் . துபாய் நகரம் பாலைவனத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது என்று சொன்னால் நம்பமாட்டார்கள். நகரில் பல இடங்களில் பசுமை கொப்பளிக்கிறது. சாலைஒரங்கள், சாலைச் சந்திப்புக்கள், எனப் பல இடங்களில் பசும் புல், மலர் படுக்கைகள். இந்த மண்ணிற்கு தகுந்த விதைகள், செடிகள் அதற்கு சொட்டு நீர் பாயச்சும் டெக்னிக் எல்லாம் இஸ்ரேல் தந்திருக்கும் தொழில்நுட்பம். .


.தினமும் காலையில் வாக்கிங்கில் மயில்களைப் படமெடுத்தேன்.மயில்களை ஆடும் நேரத்தில் படமெடுப்பதின் கஷடம் போட்டோகிராபர்களுக்கு புரியம். . அருகில் போனால் தோகையை மடக்கிக்கொண்டு முறைக்கும். தள்ளிநின்றால் நல்ல படம் கிடைபது கஷ்டம். ஆனால் இங்கே தொடும் தூரத்தில் சமர்த்தாகச் சொன்னபடி கேட்டுக்கொண்டிருக்கிறது. ஸ்டைல் காட்டி சைட் அடிக்கும் பையன்களை கவனிக்காத கல்லூரி பெண்கள் போல அழகாக ஆடிக்கொண்டிருக்கும் இவைகளைகவனிக்காமல் பெண்மயில்கள் சற்று தள்ளி தங்கள் வேலைகளில் பிசியாக இருந்தது. 

வளாகத்தின் உள்ளே நடக்கும் சாலைகள் பளிச்சென்று எப்போதும் சுத்தமாக இருக்கிறது. ஹார்ன் கேட்டால் பதறிபறக்காமல் சற்று ஒதுங்கி வழி விட்டு மறுபடியும் சாலையில் வந்து ஆடுகிறது. துபாயில் பொதுஇடங்களில் குப்பை போட்டால் பைன் என்று அந்த மரங்களுக்குக்கூட தெரியுமோ எனத் தோன்றியது.
நகரின் பெரிய சாலைகளைக் கடக்க தனிப் பாதை-பாலங்கள் கிடையாது. அருகிலுள்ள மெட்ரோ நிலையங்களிலிருந்து வெளியே வரும் பாலங்களைத்தான் பயன்படுத்தவேண்டும். காலை 6 மணிக்கு அதன் சுத்தமும் ஏசியின் இதமும் நடக்கும் தொலைவை மறக்கச்செய்கிறது. 
நகரிலுள்ள மால்களில் எல்லாவற்றிலும் ஆடம்பரமான விலையுர்ந்த பொருட்களை விற்க தனிப் பகுதியிருக்கிறது.. ஆனால் பணக்காரர்கள் மட்டுமில்லை சும்மா பார்க்க வந்தவர்களும் மற்ற கடைகளில் எதையாவது வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். விலைகள் மலிவு என்று சொல்ல முடியாது. ஆனால் சேல் என்பது நிஜமான சேலாக இருக்கிறது. உள்ளுர்கார்கள் உதவினால் புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்யலாம். மால்களில் என்னை கவர்ந்தவிஷயம். அதன் ஒவ்வொரு மாலின் மாறுபட்ட டிசைன்களும் உட்புற அலங்காரங்களும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பகலிலேயே மின்சார விளக்குகளின் வெள்ளத்தில் மிதக்கும் ஒரு மாலில் மேலிருந்து சூரிய ஒளி உள்ளே அழகாக விழும் அமைப்பு. ஒரிடத்தில் பல வண்ணக்குடைகளைக்கொண்டே திறந்த வெளியை நிரப்யியிருக்கிறார்கள்.
மால்களின் உள்ளே நம் நேரத்தையும் பணத்தையும் சாப்பிடப் பல விஷயங்கள். எமிரேட்டிஸ் ஏர்லயனின் புதிய விமானமான ஏர் பஸ்ஸின்(380) விமானியின் அறையில் உட்கார்ந்து பார்க்கலாம். பனிச்சறுக்கில் விளையாடலாம். எல்லாவற்றிருக்கும். கட்டணங்கள் உள்ளூர் வாழ்க்கைத்தரத்திற்கே கூட அதிகம் தான். 
உலகின் சிறந்த புத்தக கடைகளில் ஒன்று kinokuniya book world ஜப்பானிய நிறவனமாக இது உலகின் பல முக்கிய நகரங்களில் இருக்கும் புத்தககடல். (ஜப்பானில் மட்டும் 60 கடைகள்) துபாய் மாலில் 68000 சதுர அடியில் (நம் புத்தக் கண்காட்சி சைஸ்). 5 லட்சம் புத்தகங்கள் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள். சும்மா பார்க்கவே ஒரு நாளாகும். உட்கார்ந்து படிக்க வசதி உதவ கைட்கள். தேவையான புத்தகம் எங்கேயிருக்கிறது என்று நீங்களே தேட கம்யூட்டர்கள். என பல வசதிகள்.
துபாய் உருவான கதையைச்சொல்லும் Christopher Davidson, என்ற ஆசிரியர் எழுதிய Dubai: The Vulnerability of Success புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். கைட் அருகில் வந்து மேனேஜர் என்னைப்பார்க்க விரும்புவதாகச் சொன்னார். எதற்கு என்ற ஆச்சரியத்துடன் அவரைச் சந்தித்தேன்.
முதல் கேள்வி நீங்கள் டூரிஸ்ட்டா?
நீங்கள் தேடும் புத்தகத்தில் இருக்கும் சில வரிகள் இந்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருப்பதால் இங்கு தடை செய்யப்பட்ட புத்தகம்”. தேடாதீர்கள். இந்த தடை உள்ளுர்கரார்களுக்கு தெரியும். நீங்கள் வெளிநாட்டில் வாங்கிக்கொள்ளுங்களேன் என்றார். அவ்வளவு பெரிய புத்தக கடையை அனுமதித்திருக்கும் அரசு எப்படி அதை கண்காணிக்கிறது என்ற ஆச்சரியம் என்னைத் தாக்கியது. மிகுந்த நட்புடன் பேசிக்கொண்டிருந்த அந்த லெபனான் நாட்டுக்காரர்இன்று இங்கு வெளியான மன்னர் புத்தகங்களைப் பாருங்களேன்எனக் காட்டினார். நாட்டின் மன்னர் எழுதிய புத்தகம் அங்கு அன்றுதான் வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாள மொழி பதிப்புடன். விழா, கூட்டம் எதுவும் கிடையாது. கடையில் முன்னால் தனி மேசையில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான் வெளியீடு. நம் வெளியீட்டு விழாக்கள் கண்ணில் மின்னி மறைந்தது. விற்கும் இந்திய புத்தகங்கள் பற்றி கேட்டேன். கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் தொடர்ந்து நல்ல விற்பனையில் இருப்பதாகச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. நல்ல ஆங்கில இதழ்கள் வெளியான அடுத்த மாதம் பாதி விலைக்குக் கிடைக்கிறது. அதற்காகவே காத்திருந்து வாங்குகிறார்களாம். இந்தப் பயணத்தில் மிக மகிழ்ச்சியாகக் கழித்த நேரங்களில் இந்தப் புத்தக உலகமும் ஒன்று.



இந்த மாலில் ஒரு மிகப்பெரிய மீன்கள் காட்சியகம் இருக்கிறது. அந்த இடத்தின் வெளிச்சுவரே -40 அடி உயரம் 60 அடி நீளத்தில் ஒரு மீன் தொட்டியின் கண்ணாடிச்சுவராக இருப்பதால் அதில் தெரியும் பலவித மீன்கள் நெளிந்து வளைந்து ஆடி நம்மை அழைக்கின்றது. உள்ளே ராட்சத சைஸ் கண்ணாடி குழாய்கள் வழியே நடக்கும் போது அவைகள் நம்மைசுற்றி வந்து நம்மைப் பார்த்து கண்ணாடிச் சுவர்களின் வழியே ஹலோ செல்லுகிறது. எப்போதும் நீரில் வாழும் இனம் நம்முடன் அருகில் அதன் சூழலிலேயே நீந்திக்கொண்டிருப்பதை இருப்பதைப்பார்த்தவண்ணம். நடந்ததும் வெளியே அந்தக் கண்ணாடி சுவரின் அருகில் அமர்ந்து சாப்பிட்டதும் வினோதமான அனுபவம்.

பளிச்சென்று இரண்டுவரிகவிதைகள். பொன்மொழி, ஜோக்குகள்(சில கடி), சொந்த அனுபவங்கள், சூழ்நிலைகளில் கற்றது, சும்மாத்தோன்றியது என்று தன் செல்பி படங்களுடன் முகநூலைத் தினசரி கலக்கிக்கொண்டிருக்கும் சுமிதா ரமேஷ். (அவர் பதிவு போடவில்லை என்றால் FB லீவு என்று எடுத்துக்கொள்ளலாம்) குடும்பத்தினரை அன்று மாலை சந்திக்க திட்டம், அவர்கள் வசிப்பது 40 கீமீயிலுள்ள அடுத்த தேசமான ஷார்ஜாவின்
எல்லையில். .நண்பர் ரமேஷின் பணியிடம் துபாய். ரமேஷ் அவர்களைச் சென்னையில் சந்தித்திருக்கிறேன். நண்பர் சுதாங்கனுக்கு நெருக்கமானவர். தங்கியிருந்த இடத்திற்கு வந்து என்னையும் மனைவியையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நண்பர் ரமேஷ். “டிராபிக் அதிகம் இல்லை என்றால் 25 நிமிடம்என சொல்லி கூட்டிப்போனார். அவரின் பேச்சு சுவாரசியத்தில் முக்கால் மணீயானது தெரியவில்லை. எங்களைச் சந்தித்த திருமதி சுமித்திராவின் சந்தோஷம், அவர் கண்களில் தெரிந்தது. நீண்ட நாள் தெரிந்த நண்பர்களின் உணர்வை ஏற்படுத்தினர் அந்தத் தம்பதியினரும் அவர்களுது குழந்தைகளும். .சுமித்திரா தமிழ் குஷி காம் என்ற இணைய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர். ஒவ்வொரு செவ்வாயும் முகநூல் நண்பர்களின் விருப்பத்தின் வரிசையில் பாடல்களை ஒலிபரப்புகிறார். இதைத்தவிர இவருக்குப் பல முகங்கள். தன் வீட்டு பால்கனியில் வந்து முட்டையிட்டிருந்த ஒரு புறாவைப்பற்றி இவர் பத்திரிகையில் எழுதியதில் ஒரு சிறுகதையின் சாயலைப்பார்த்தேன். இப்போது சுஜாதாவின் பாணியில் இவர் எழுதிய ஒரு கதை வெளிவந்திருக்கிறது. இனி நிறைய எழுதுவார் என நம்புகிறேன். எல்லாவற்றிருக்குமேல் இவரது காரியங்கள் யாவிலும் கைகொடுக்கும் அன்பான கணவரைப் பெற்ற அதிர்ஷடசாலியான பெண்மணி..
அழகான குடும்பம். மகன் ஹரிஷ் முதல் பார்வையிலேயே எங்களைக் கவர்ந்தவர். இந்தியாவிலிருக்கும் NIT க்கான நுழைவுத்தேர்வில் எல்லாப்பாடங்களிலும் 100/100 வாங்கியிருக்கிறார். அட்மிஷன் நிச்சியம் என்றாலும் துளி அலட்டல் இல்லை. என்ன படிக்க வேண்டும்? எங்குப் போகவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். நிச்சியமாக இந்த இளைஞன் உயரங்களைத்தொட்டுப் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பார். மகள் ஶ்ரீநிதி மிகச் சிறிய பெண். பாடப்பிடித்திருக்கிறது. நல்ல குரல்வளம். அம்மாவின் சிறப்பான கவனத்தில் உருவாகிக்கொண்டிருக்கிறார். அவரைபோலவே வருவார் என நம்பிக்கை அளிக்கும் அழகான பெண்குழந்தை. அவர்கள் உபசரிப்பைப்போலவே உணவும் அருமையாக இருந்தது. பேச்சு தொடர்ந்து 

இரவு நீண்டு கொண்டிருந்ததால் துபாய் திரும்பினோம். சொன்னபடி ரமேஷ் 25 நிமிடத்தில் துபாய்.. அந்த நேரத்திலும் சுமிதா எங்களுடன் பயணித்துத் தங்கியிருக்கும் இடம் வரை வந்துவிடையளித்தது நினைவில் என்றும் நிற்கும் நெகிழ்ச்சியான நேரம். 
நாளை வாக்கிங்கில் எல்லா மயில்களையும் சேர்த்து ஒரு குருப் போட்டோ எடுக்கமுடியுமா? என நினைத்துக் கொண்டே தூங்கப் போனேன்.