1/6/16

பயணம் பொன்மாலைப்பொழுதுகள் 2





சின்னஞ்சிறிய பஹரைன் நகரில் பாதிக்கும்மேல் பெரிய சாலைகள். பல இடங்களில் 6 வழிப்பாதைகள். எதிர்புறம் இருக்கும் ஒரு மாலுக்குள் நுழைய ஊரில் பாதியைப் பிரதட்சணம் செய்ய வேண்டும். சாலைகளை இணைக்கும் சந்திப்பு வட்டங்கள் எல்லாம் பசுமையாக ஆனால் காலியாகத்தான் இருக்கிறது. எதிலும் சிலைகள் இல்லை. (மன்னராட்சியின் கீழ் இருந்தாலும் எந்த இடத்திலும் மன்னர்களின் சிலையில்லை. சில உயரமான கட்டிடங்களின் முகப்பில் மிகப்பெரிய அளவில் ஃபிளெக்ஸில் அச்சிடப்பட்ட தற்போதைய மன்னரின் படங்களைப் பார்க்க முடிகிறது.) இப்படி அடிக்கடி செய்து கொண்டிருந்த பிரதட்சணங்களில் ஒரு சந்திப்பு வட்டத்தில் மட்டும் தத்ரூபமான இரண்டு ஓட்டகங்களின் சிலைகள் பார்த்தேன். “இங்கு நிஜமான ஒட்டகங்கள் இருக்கின்றனவா? பார்க்கமுடியுமா? என்று நகர்வலத்துக்குக் கூட்டிவந்த நண்பரைக்கேட்டேன்.

“மன்னரின் அரண்மனை வளாகத்திலிருக்கிறது என்று தெரியும் ஆனால் நான் பார்த்ததில்லை. அனுமதி பெற வேண்டியிருக்கும். முயற்சிப்போம். எனது கெஸ்ட்களிலேயே ஒட்டகத்தைத் தேடிப்பார்க்க விரும்பியவர் நீங்கள் மட்டும்தான்” என்றார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவருடைய டிரைவர் “எனக்கு அந்தச் சீப் செக்யூரிட்டியை தெரியும். பாஸ்எதுவும் இல்லாமல் நான் ஒட்டகப்பண்ணைக்குச் சாரை கூட்டிப் போகிறேன்” என்றார். அதிகாரத்தின் அருகில் இருப்பவர்களுக்கு எப்போதுமே சலுகைகள் என்பதற்கு இந்தத் தேசமும் விலக்கு இல்லை போலிருக்கிறது என நினைத்துக்கொண்டேன். இங்கு 25 வருடத்திற்கு மேல் டிரைவர் பணி செய்து கொண்டிருக்கும் அவருக்கு அரேபிய நண்பர்கள் அதிகம். 
ஒரு கோட்டையினுடையதைப் போலப் பெரிய நுழை வாயில். பலத்த செக்யூரிட்டி. கடற்கரையின் அருகே மன்னர் வாழும் மிகப்பெரிய அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதி இந்த ஒட்டகப் பண்ணை. நமது பஸ் நிலையங்களில் பஸ் நிற்கக் கட்டப்பட்டிருப்பதைப் போல உயரமான மண்டபங்கள். சில கான்கீர்ட் மேல்தளத்துடனும், சில மேற்கூரையே இல்லாமலும் சில மெல்லிய பிளாஸ்ட்டிக் வலைக் கூரைகளுடன் செயற்கை மழைபெய்யும் வசதிகளுடன் வரிசைகட்டி நிற்கிறது. அவற்றின் உள்ளேயும் வெளியேயும் ஒட்டகங்கள். இந்த வாரம் பிறந்த குட்டியிலிருந்து அதன் அப்பா, தாத்தா பெரிய தாத்தா பாட்டியென எல்லாச் சைஸ்களிலும் வயசுகளிலும். 
மொத்தம் எவ்வளவு இருக்கும்? சரியாகச் சொல்லத்தெரியாத அந்தத்தொழிலாளி 400க்கும் மேல்- நீங்கள் டாக்டரிடம் கேளுங்கள் என்கிறார். 
அந்தக் குட்டியைத் தொட்டுப்பார்க்கலாமா? படம் எடுக்கலாமா? 
“தொடலாம். ஆனால் சில சமயம் பொறுப்பு இல்லாமல் கடிக்கும்.” 
அன்றுதான் ஒட்டக குட்டி கடிக்கும், அதுவும் பொறுப்பு இல்லாமல் கடிக்கும் எனத் தெரிந்து கொண்டேன்
.அது பார்த்து மிரளும் டெலிபோட்டோ லென்ஸை நான் பொறுப்பாய் கழட்டிவைத்துவிட்டதனால் என்னுடன் நட்புடன் தான் இருந்தது. வளாகம் மிகப்பெரிது. இந்த ஒட்டகங்களில் சிலவற்றை அன்றைய அட்டவணைப் படி வாட்டர் கன்களை வைத்துக் குளிப்பாட்டுகிறார்கள். டாக்டர்கள்குழு செக் அப்செய்கிறார்கள். விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட உயரமான லாரிகளிலிருந்து உணவு கொடுக்கிறார்கள். எலக்டிரிக் டிரிம்மர்களில் அழகாக்கிவிடுகிறார்கள். இதைச்செய்ய ஒரு தனிப் பார்லர் மண்டபம்! ஒரு குட்டி படையே பணி செய்துகொண்டிருக்கிறது. 
எதற்கு இவ்வளவு ஒட்டகங்கள்? (பலகாலங்களாக இவை சுமைதூக்கிகளாக இருந்தன. இப்போது இவைகளே லாரிகளில்தான் பயணிக்கின்றன.) கேட்டதற்குச் சரியான விடை கிடைக்கவில்லை. உணவுக்கு ஓரளவு என்றும் பக்கத்து அரபு நாடுகளில் நடக்கும் ரேஸ்களில் பங்கேற்க, பல நாட்டு ராணுவங்களுக்கு விற்க எனப் பலவிதமான பதில்கள். ஒருபதில்- இதையும் டாக்டரிடம் கேளுங்கள். 
ஒட்டகங்களும் ஈச்சை மரமும் இங்கு பாரம்பரிய மதிப்பு மிக்க செல்வங்கள்.கார் ஓட்டும்போது விபத்தினால் ஒர் ஒட்டகமோ ஈச்சை மரமோ சேதமானால் பெரிய அளவில் அபராதம் தவிர. அந்த இடத்தில் வேறு அதே வயதுள்ள புதிய மரம் நடும் செலவையும் தர வேண்டும் என்பது தண்டனையாம். ஒர் உள்ளூர் நண்பர் இதைச் சொன்னபோது வலிமையான ஒட்டகம் உதைத்தால் நம் கார் அல்லவா சேதமாகும்? என்று நினைத்துக்கொண்டேன். அவரிடம் கேட்கவில்லை. 
ஒட்டகங்கள் உட்கார்ந்த நிலையில் தூங்கும் எனத்தெரியும். நல்ல ஷவர்பாத் எடுத்த நன்றாகச் சாப்பிட்டபின் நான்கு கால்களையும் நீட்டித் தூங்கிக்கொண்டிருந்த ஒட்டகங்களையும் பார்க்க முடிந்தது, ஒட்டகம் எப்படிக் கத்தும் என்பதைக் கேட்க விரும்பிய என்னை, ஒரு குட்டி கூடக் கத்தாமல் அன்று ஏமாற்றி விட்டது. மாலையில் நண்பர்கள் சந்திப்பு டின்னர் எனத் திட்டமிட்டிருந்ததால் கத்தும்வரை காத்திருக்கமுடியவில்லை. முதலில் பார்த்த ராஜாவீட்டு ஒட்டக குட்டியைத் தேடிப்போய் ஒரு பை சொல்லிவிட்டுத் திரும்பினோம் 
இம்முறை பயணங்களில் புதிய நண்பர்களைச் சந்திக்க பழக வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மார்க்க்கு ஒரு தாங்கஸ் சொல்லியே ஆகணும். நம்மில் பலர் அடிக்கடி முகநூலில் சந்திக்கும் ஶ்ரீதரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஓவியர்களும், சிற்பிகளும் மிகச் சீரியஸான, மூடியான மனிதர்கள், குறைவாகவே பேசுபவர்கள் என்று நான் நினைப்பதுண்டு. மாறாக இந்த ஓவியர் ஶ்ரீதர் சந்தோஷமாக நிறையப் பேசுகிறார். அவருக்கு நிறைய நண்பர்கள். நிறைய என்றால் அந்த “ய” வைப்பலமுறை போட வேண்டும். அவ்வளவு நண்பர்கள். அவர் ஒரு CA ஓரு மிகப்பெரிய விற்பனை நிறுவனத்தின் குழுமத்தின் GM. ஆனால் அது சற்றும் தொனிக்காதவகையில் பழுகுகிறார். திருமதி ஶ்ரீதர். கணனி பொறியாளர். உள்ளூர் கல்லூரி ஒன்றில் ஆசிரியாராகப் பணி. நட்பு பாராட்டுவதில் கணவரைத் தோற்கடிக்கிறார். செயற்கையான ஹலோவாக இல்லாமல் உள்ளன்போடு பேசுகிறார். அவர் எங்களுக்காகக் கொடுத்த விசேஷ ஸ்வீட்டின் ரெசிப்பை கேட்டுவாங்கிவந்த என் மனைவி அந்தக் கருப்பு அரிசியைத்தேடிக்கொண்டிருக்கிறார். 
பஹைரினில் 400க்குமேற்பட்ட CAகள் இருக்கிறார்கள். பலர் இந்தியர்கள், அதில் தமிழர்களுக்கு நல்ல மதிப்பு என்கிறார் ஶ்ரீதர். 20, 30 ஆண்டுகளுக்கு முன் வந்த CAகள் விதைத்த நம்பிக்கை விதைகள் இன்று விருட்சமாகியிருக்கிறது என்கிறார். என்னுள் -நம்ப தமிழன்- என்ற கர்வம் சற்று தலைதூக்கப்பார்த்தது. 
ஶ்ரீதர் அவருடைய CA வட்டத்தில் மட்டுமில்லாமல் பக்தி, இலக்கியம், ஓவியம் எனப் பல சர்க்யூட்டில் பிசியாக இருப்பவர். பஹரினிலிருக்கும் பக்தி குரூப்கள் பற்றித் தனி அத்தியாமே எழுதலாம். அவ்வளவு விஷயங்கள். நான் சந்தித்த அன்று ஒரு நண்பர் வீட்டில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் மலர் சொறிதல் விழாவிற்காக விமானத்தில் பெருமளவில் மலர்கள் வந்து சிறப்பாகக் கொண்டாடியதை திரு ஶ்ரீதர் சொன்னார். ஆண்டுத் தோறும் புத்தாண்டுவிழாவிற்கு விநாயகர் சிலையை ஏதாவது ஒரேமாதிரியான பொருட்களைகொண்டு புதிய பாணியில் வடிவமைத்துக் கொடுக்கும் பணியை இந்தத் தம்பதியினர் சந்தோஷமாகச் செய்துகொண்டிருக்கின்றனர் காபி குடிக்கும் பேப்பர் டம்பளர்களினால்/ பிஸ்கட்களினால் மட்டுமே விநாயகரை செய்யமுடியுமா? ஶ்ரீதர் செய்திருக்கிறார். (படம் அவர் ஆல்பத்திலிருந்து சுட்டது)
மோடியை இவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பது அவரை வரைந்து தள்ளியிருப்பதிலிருந்து தெரிகிறது. சும்மா சொல்லக் கூடாது, தினமும் டிரிம் செய்துகொள்ளும் மோடியின் தாடிகூட அதே அளவில் படத்தில் இருக்கிறது. தன் படங்களை ஒரு அறையில் கேலரியாகவே வைத்திருக்கும் திரு ஶ்ரீதரின் வீட்டில் என்னைக் கவர்ந்தது அவர் மகன்களின் பரிசுகளின் கேலரிதான். அப்பப்பா.. நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் எத்தனை கப்புகள், மெடல்கள், ஷீல்ட்கள்! அவற்றை கண்ணாடிச்சிறையில் அடைக்காமல் தொட்டு எடுத்துப்பார்க்கும்படி வைத்திருக்கிறார்கள். மின்னும் தங்க பளபளப்பு திருமதி ஶ்ரீதரின் கவனமான பராமரிப்பைச் சொல்லுகிறது. தன் மகன்களைச் சான்றோர்கள் எனப் பலமுறை கேட்ட தாய், தந்தை இவர்கள். அப்பாவைப் போல இரண்டு மகன்களும் CA யாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். 
நீண்ட நாள் பழகியவர்கள் என்ற உணர்வை, நல்ல நட்பாகத்தொடரும் என்ற நம்பிக்கையை முதல் சந்திப்பிலேயே ஏற்படுத்தியவர்கள் இந்தத் தம்பதியினர். 
இந்த சந்திப்புக்கு பின் மற்றொரு நண்பர், 20+ ஆண்டுகள் பஹரைனில் வாழ்ந்து தமிழகம் திரும்பும் வெங்கட் தம்பதியினருக்காக ஏற்பாடு செய்யபட்டிருந்த ஒரு டின்னருக்கு போனோம். இது பேங்க்கர்களின் சர்கிள். இதில் ஒரு விளையாட்டு என்னை கவர்ந்தது. அந்த தம்பதியினரைப்பற்றி வந்திருக்கும் நண்பர்கள் 4 வரி எழுதிக்கொடுக்க வேண்டும் ஆனால் அதில் எழுதியவரின் பெயர் இருக்ககூடாது. அதுபடிக்கப்பட்டவுடன் அந்த வார்த்தைகளிலிருந்து எழுதிய நண்பர் யார் என்பதை அந்த தம்பதியினர் சொல்ல வேண்டும். கவுண்ட்டவுனுக்குள் சரியாக சொல்லமுடியாது போனால் நண்பர் அந்த தம்பதியினருக்கு ஒரு விசேஷ பரிசு கொடுக்க வேண்டும்(அப்போது அவர்கள் எழுதியதை சரியாக நினைவில் வைத்துகொள்வார்களாம்) வெங்கட் தம்பதியினர் எல்லாப் பெயர்களையும் சரியாகச் சொல்லி கலக்கினார்கள்.
நம்மைப்பற்றிய பிம்பம் நம் நண்பர்களிடையே எப்படி இருக்கிறது, அதை எந்த அளவுக்கு நாம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை பரிசோதித்துக்கொள்ளும் ஒரு விஷயமாக நான் இதைப் பார்த்தேன். 
முகநூலில் செலவழித்த நேரங்களினால்
நான் கற்றதும், பெற்ற நட்புகளும் இனிதாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.




2 கருத்துகள் :

  1. 29You, Sumitha Ramesh, Vedham Puthithu Kannan and 26 others
    7 comments
    1 share
    Comments
    Ruthra Moorthy
    Ruthra Moorthy அந்த ஒட்டக பண்ணையில் காலை 8.00மணிக்கு முன்பு சென்றல் ஒட்டக பால் வங்காலம்.
    Like · Reply · 2 · 16 May at 06:40

    Isha Mala replied · 2 Replies
    Sridhar Trafco
    Sridhar Trafco ஒட்டகத்திற்காக தனிப்பதிவு ப்ரமாதம். பயணக்கட்டுரை விவரணை அருமை. எங்கள் வீட்டிற்கு வருகை தந்ததுபற்றி எழுதியது எங்கள் பாக்கியம்..🙏
    Like · Reply · 1 · 16 May at 09:27

    Isha Mala replied · 1 Reply
    Isha Mala
    Isha Mala //ஒரு மாலுக்குள் நுழைய ஊரில் பாதியைப் பிரதட்சணம் செய்ய வேண்டும். சாலைகளை இணைக்கும் சந்திப்பு வட்டங்கள் எல்லாம் பசுமையாக ஆனால் காலியாகத்தான் இருக்கிறது. எதிலும் சிலைகள் இல்லை. (மன்னராட்சியின் கீழ் இருந்தாலும் எந்த இடத்திலும் மன்னர்களின் சிலையில்லை// என...See more
    Like · Reply · 1 · 16 May at 09:40

    Vedha Gopalan replied · 1 Reply
    N.Rathna Vel
    N.Rathna Vel பயணம்
    பொன்மாலைப்பொழுதுகள் 2 - ஒட்டகம் & பஹ்ரைன் பற்றி விரிவான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Ramanan Vsv
    Like · Reply · 16 May at 16:44
    Rajalakshmi Doraiswamy
    Rajalakshmi Doraiswamy · 4 mutual friends
    We used to enjoy Sridhars story abt others.U have given short and sweet biography abt the family and their meticulous hospitality. Enjoyed the narration
    Like · Reply · 3 · 16 May at 18:22
    Arvind V Mani
    Arvind V Mani Ivalluvu seithigala? !!!
    Like · Reply · 16 May at 18:51
    Sumitha Ramesh
    Sumitha Ramesh Ramanan Vsv sir awesome smile emoticon , ஒட்டகத்தின் மேல் இத்தனை க்காதலுடன் பெருமைப்படுத்திவிட்டீர்கள் ! இங்கு..அடுத்தமுறை வரும் போது போகலாம் ! Al ain , Ra's Al khaima போகும் வழியில் நிறையப்பார்க்கலாம். Sridhar Trafco அழகான அறிமுகத்துடன் ! உங்களுடன் நாங்களும் வந்துப்பார்த்த உணர்வைத்தருகின்றன எழுத்துகள் ! smile emoticon
    எப்படி சார்.. பார்க்கும்போதே..இத்தனையும் பதிந்தனவா..அபார நினைவாற்றல்..அசத்தும் நடை smile emoticon

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்