22/6/16

வெற்றிப் பயணமா? வெறும் பேச்சா?





பதவியேற்றதிலிருந்து பறந்துகொண்டேயிருக்கிறார். பார்லிமெண்டில் நாற்காலியில் உட்கார்ந்தால் கூட சீட் பெல்ட்டைத் தேடுகிறார் என்று சமுக ஊடகங்களில் கிண்டல் அடிக்கப் படும் மோடியின் வெளிநாட்டுப்பயணங்களில் லேட்டஸ்ட் “5 நாடுகளின் பயணம். அதிலும் குறிப்பாக அமெரிக்கப் பயணம். இது மிகவும் வெற்றிகரமான பயணம், NSG அமைப்பில் இந்தியா இணைந்து அணு உலகிற்குள் அடி எடுத்துவைக்கப் போகிறது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்பதைப் பார்க்கும் முன் அது என்ன என்.எஸ் ஜி? அதில் இந்தியா இடம்பெற வேண்டியது அவசியமா?? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அணு எரிபொருள் வினியோக கூட்டமைப்பான NSG(nuclear supply group)யில் இப்போது உறுப்பினராக 48 நாடுகள். அணுசக்தி தொடர்பான வர்த்தகங்களைத் தொழில்நுட்பங்களை இவை தங்களுக்குள்ளாகவே பரிமாறிக்கொள்கின்றன. வளர்ர்சியடைந்த நாடுகளூம், வல்லரசுகளும் உறுப்பினராக இருக்கும் இதில் இந்தியா உறுப்பினராக அனுமதிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் நாம் அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டம் என்று உலகின் பல நாடுகள் ஒப்புக்கொண்ட விதிகளை நாம் ஏற்கவில்லை. இதில் கையெழுத்திடாதால் இந்தியாவை என்.எஸ்ஜியில் சேர்க்கக் கூடாது என்ற தடுத்தவர் அன்றைய அமெரிக்க அதிபர் புஷ். அவரைத்தொடர்ந்து வந்த அமெரிக்க அதிபர்களும் இதே நிலையைத்தான் தொடர்ந்தார்கள். இந்திரா காலத்திலிருந்தே இந்தியாவும் தன் நிலையில் அணுஆயுத பரவல் சட்டத்தை ஏற்கமாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருந்தது. தனித்து இருந்தோமா, தனிமைப்படுத்தப்பட்டோமா என்பது வேறு விவாதம்.
இப்போது காலம் கனிந்திருக்கிறது, காட்சிகள் மாறப் போகிறது. என்.பி.டியில் கையெழுத்திடாமலேயே என்.எஸ்.ஜியில் அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளின் ஆதரவோடு இந்தியா உறுப்பினராகப் போகிறது. இதற்கான அறிவிப்புக்கள் வெளியாகியிருப்பது தான் இந்தப் பயணத்தின் வெற்றி. ஆனால் இந்த நிலைக்கான முழுப்பெருமையையும் மோடி எடுத்துக்கொள்ள முடியாது. என்றாவது ஒரு நாள் இந்த நிலைவரும் என்று நம்பி பிடிவாதமாக இருந்த இந்திரா, நரசிம்மராவ், மன்மோகன் போன்ற முந்தைய பிரதமர்களுக்கும் பங்கு இருக்கிறது, ரிலே ரேசில் கடைசியாக ஓடி வெற்றி கோட்டைத் தொடும் வீரன் கைதட்டல் பெறுவதுபோல நிகழ்ந்திருக்கும் விஷயம் இது.
இப்படி இந்தியாவிடம் தீடிரென்று அமெரிக்கா கரிசனம் காட்டுவதற்குக் காரணம் மோடியின் கோரிக்கையும் பயணமும் மட்டுமில்லை. சும்மா ஆடாத சோழியனின் குடுமி போல அமெரிக்கா எதையும் பலன் இல்லாமல் செய்யாது.
சீனா என்.எஸ்ஜியில் இந்தியா இடம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. உலக போலீஸாக தன்னை கருதிக்கொள்ளும் அமெரிக்கா, தென் பசிபிக் கடல் பிரதேசத்தில் இந்தியாவுடன் இணைந்து கூட்டாகப் பாதுகாப்பு பணிகளைச் செய்யது சீனாவிற்கு செக் வைக்க விரும்புகிறது.. இதற்காகத் தரவேண்டிய விலையாக இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு ஆதரவுநிலையை எடுத்திருக்கிறது.
அதைவிட முக்கியமான விஷயம் சர்வ தேச சந்தையில் டாலரின் மதிப்பு சரிந்து யூரோ எழுச்சி பெற்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம் விழுந்துகொண்டிருக்கிறது என்ற இன்றைய நிலையில் அமரிக்காவிற்கு அதன் வெளிநாட்டு வாணிகத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் ஏற்றுமதியில் முக்கிய இடம் மற்ற நாடுகளின் ராணுவத்திற்கான ஆயுதம் மற்றும் தளவாடங்கள்தான். 60 சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்யும் இந்தியாவில். ஆட்சிக்குவந்தவுடனேயே இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்படும் என்ற மோடியின் அறிவிப்பினால் முழித்துக்கொண்டது அமெரிக்கா.
தொடர்ந்து ராணுவ அமைச்சராகப் பொறுப்பேற்ற மனோகர் பரேக்கர் முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட ஆயூத சப்ளை காண்டிராக்ட்களை நிறுத்திவைத்தார். அமெரிக்கா. இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது எனத் திட்டமிடத்தொடங்கியது. அதற்காக இந்தியாவை எதையாவது செய்து தஜா செய்ய வேண்டிய நிலைக்கு வந்தது. மேலும் இந்தியாவின் மின் உற்பத்தியில் அணு உலைகள் முக்கிய இடத்தைப்பிடிக்கபோவது திட்டங்களில் வெளியாகியிருப்பதால் அணுசக்தி துறைக்கு உதவக்கூடிய கட்டுமானம் மற்றும் இதர தொழில் நுட்பத் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் நீண்ட கால முதலீடு செய்யும் வாய்ப்புகளையும் உணர்ந்திருக்கிறது. அணு உலைகளுக்கான மூலப்பொருள் தராளாமாகக் கிடைக்காவிட்டால் இந்த வாய்ப்பு அவைகளைத் இப்போது இந்தியாவிற்குத் தந்து கொண்டிருக்கும் வேறு நாடுகளுக்குப் போய்விடும்.

இந்த அமைப்பில் சேருவதனால் இந்தியாவிற்கு என்ன பயன்?
அணுசக்தி ஆராய்ச்சிக்கு முக்கிய தேவை யுரேனியம். இது இந்தியாவில் மிகக் குறைவாகவே கிடைப்பதால், நாம் இறக்குமதியைச் சார்ந்திருக்கிறோம். இந்த என்.எஸ்ஜி அமைப்பைபில் இடம் பிடித்துவிட்டால் நமக்குத் தாராளமாக யுரேனியம் கிடைக்கும். அணுஆயுதம் அல்லாத, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பொதுப் பயன்பாட்டு திட்டங்களுக்கு மூலப்பொருட்களையும், தொழில் நுட்பத்தையும் பெற இந்த அமைப்பில் உடனடியாக உறுப்பினராவது அவசியம் என்ற நிலைப்பாட்டை, வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற்ற விரும்பும் மோடியின் அரசு எடுத்திருக்கிறது அணுதொடர்பான நமது ஆராய்ச்சிகள் இனி புலிப் பாய்ச்சலில் இருக்கும். ஏவுகணை தொழில் நுட்பத்தில், அக்னி, பிரமோஸ் பிருத்வி போன்ற உலகத்தரம் வாய்ந்த ஏவுகளைகளை செலுத்தி உலக அரங்கில் நம் திறனைக் காட்டியிருக்கும் நாம் அந்த டெக்னலாஜிகளை உறுப்பு நாடுகளுடன் வணிக ரீதியாக விற்பனை செய்ய முடியும்.

இந்தப் பயணத்தின் உடன் விளைவாக 6 புதிய அணுமின்நிலையங்களை இந்திய அணுமின்கழகமும் அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனமும் அமைக்கப் போகின்றன. இதன் மூலம் உடனடியாக, அமெரிக்காவும், கட்டமைப்பு பணிகளில் ஈடுபடப்போகும் அதானி, ரிலெயன்ஸ் நிறுவனங்கள்தான் என்ற குரல் எழு ஆரம்பித்திருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் அணு உலைகளின் ஆபத்துகுறித்து குரல்கள் வலுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தப் பயணம் உண்மையிலேயே வெற்றிதானா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கப் போகிறது.

பாக்ஸ் 1 சில் வரவேண்டியது

Nuclear Non-Proliferation treaty எனப்படுகிற (NPT)) அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்கைய்ழுத்து இடும் நாடுகள் எவ்வித நிபந்தனையுமின்றி தங்கள் அணு ஆயுத தயாரிப்பு வசதிகளைச் சர்வ தேச அணுசக்தி ஏஜின்சியின் சோதனைக்கு அனுமதிக்க வேண்டும். அணு ஆயுத உற்பத்தியையும் அடையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா,சீனா, பிரான்ஸ் பிரிட்டன் போன்ற நாடுகள் அணு ஆயுதங்களைத் தயாரித்து அடுக்கி வைத்துக்கொண்டு வளரும் நாடுகளைத் தடுப்பது நியாமில்லை என்று இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட  மறுத்து  கொண்டிருக்கிறது.

பாக்ஸ் 2ல் வரவேண்டியது
1968 என் பி டியி கையெழுத்திடமாட்டோம் என அறிவிக்கப்பட்டது
1974-முதல் அணுகுண்டு சோதனை
1998-இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனைகள் (5 முறை நடந்தது)
2006-அமெரிக்க செனட் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு சட்டத்தை நிறைவேற்றியது
2007= இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் 123 கையெழுத்தானது
2016 -என்.எஸ்.ஜியில் இந்தியா இணைய அமெரிக்கா ஆதரவை அறிவித்தது.

(கல்கி 23/06/16 இதழலில் இருந்து)





/


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்