31/5/17

யார் நமது அடுத்த ஜனாதிபதி ?


இரு அணிகளின் இணைப்பு  நிகழாதிருப்பதைக் கண்டு  ஒபிஎஸ் கலங்கியிருப்பதற்கும், இபிஎஸ் கவலைப்படாதிருப்பதற்கும்  திமுகவின் செயல் தலைவர் திரு ஸ்டாலின் கலைஞரின் வைரவிழாவினை அகில இந்திய  கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக கொண்டாடத் திட்டமிட்டிருப்பதற்கும் ஒரே  காரணம் 

இந்தியாவின் 14வது ஜனாதிபதி யார்? என்ற கேள்விதான்.  
திரு பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017 ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் நடைமுறைகளை ஜூனில் தொடங்க வேண்டும். 
வெற்றிக்குதேவையானஓட்டுகள்
ஜனாதிபதி தேர்தல் நடந்தால் இந்தியாவில் உள்ள 4120 எம்எல்ஏக்கள் மற்றும் 776 எம்பிக்கள் வாக்களிப்பார்கள். எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த வாக்குமதிப்பு 5,49,474. எம்பிக்களின் வாக்கு மதிப்பு 5,49,408. ஒட்டுமொத்தமாக எம்பி, எம்எல்ஏக்கள் என 4896 பேர் வாக்களிப்பார்கள். அவர்களின் வாக்குமதிப்பு 10,98,882. இதில் பாதிக்கும் மேல் அதாவது 5,49,442 வாக்கு பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த 5 மாநில தேர்தல்  முடிவுகளில் உபியை பா.ஜனதா ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்ட பின்னர்  அதன்  ஜனாதிபதி தேர்தல் வாக்கு வலிமை அதிகரித்துவிட்டது  

தற்போதுள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணி பலம் மக்களவையில் 2,37,888ஓட்டுகளும், ராஜ்யசபையில் 49,560 ஓட்டுகளும், மாநில சட்டப்பேரவையில் 2,39,923 ஓட்டுகளும் உள்ளன. மொத்தம் பா.ஜனதா அணிக்கு தற்போது 5,27,371 ஓட்டுகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் பிறகட்சிகளுக்கு 5,68,148 ஓட்டுகள் உள்ளன. எனவே வித்தியாசம் 40,777 ஓட்டுகள் தான்.
இந்த  40777 ஒட்டுக்களை எப்படியாவது சேகரித்து தங்கள் வலுவைக் காட்ட  பா.ஜனதா களம் இறங்கியுள்ளது. அதன் முதல் குறி அதிமுக. காரணம் ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் 50 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த ஓட்டு மதிப்பு 58,984. இந்த ஓட்டுக்கள் முழுமையாகவோ அல்லது கணிசமாகவோ கிடைத்தால்தான்  பா. ஜா காவின் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யமுடியும் 

ஜெயலிதா இருந்திருந்தால் இந்த நிலையையே காட்டி பாஜாகாவையே மிரட்டியிருப்பார். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதைக்கூட கையில் எடுத்திருப்பார்.. ஆனால் மாறாக  இன்று  தற்போதைய சூழலில் அதிமுக  இரு அணிகளுமே  பா.ஜனதாவைப் போட்டி போட்டுகொண்டு ஆதரிக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகத்தில் அதிமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல அமைச்சர்கள் முறைகேட்டில் சிக்கிய புகார்கள் வருகின்றன. இதனால் உருவாகியிருக்கும்  ஒரு நிலையற்ற தன்மையை தங்களுக்க சாதகமாக பயன்படுத்தக் காய் நகர்த்தத் துவங்கியிருக்கிறது பாஜக . தங்கள் பதவியையும், அரசையும் காப்பாற்ற ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை  ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

காங்கிரஸின் கணிப்பு  
தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ்  2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை ஒட்டுமொத்தமாக ஒரே அணியில் திரட்ட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. இந்த  ஜனாதிபதி தேர்தலை அதற்கு முன்னோட்டமாகப் பயன்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. . உடல் நலிவுற்ற நிலையிலும் இந்தப் பணிகளில் சோனியாகாந்தி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். முதல்கட்டமாக ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பா.ஜனதாவுக்கு எதிரான அத்தனை எதிர்க்கட்சிகளையும் குறிப்பாக உபியில் எதிரும் புதிருமாக திகழும் முலாயம், மாயாவதி, மேற்குவங்கத்தில் மம்தா மற்றும் கம்யூனிஸ்ட் ஆகியோருடனும் கூட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டார்.  தொடர்ந்து திமுக வின் ஆதரவைகேட்ட நிலையில் எழுந்த எண்ணம் தான்  ஜூன் 3ல் கருணாநிதி பிறந்ததினம் மற்றும் சட்டமன்ற வைரவிழாவை முன்னிட்டு சென்னையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பங்கேற்கச்செய்யும் வகையில் தங்கள் பலத்தைக் காட்ட ஒரு மெகா ஷோ..   அது ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய முன்னோட்டமாக அமையும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசனைகள்முடிந்துவிட்டது. .. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மகாத்மா காந்தியின் பேரன் கோபால் காந்தி, முன்னாள் சபாநாயகர் மீராகுமார் மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இவர்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.
 இந்த முயற்சியில் . காங்கிரஸ் வெற்றி பெற்றால் , அது பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு பெரிய அணியை உருவாக்கி விடும். அது 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஆபத்தாகக் கூட முடியலாம்  என்பதைக் கணித்த பாஜக  மிக வேகமாக வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது.  மத்திய அரசின் அமைச்சர்கள் மாநிலங்களுக்கு அடிக்கடி பறக்கிறார்கள். அறிக்கை மழை கொட்டுகிறது
.தெலங்கானா மாநில நலனுக்காக பா.ஜனதா வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்து விட்டார்.  வருமானவரி வழக்கில் சிக்கியிருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜனதா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து விட்டார்.  வரும் வாரங்களில்  மேலும் சில கட்சிகள்   பா.ஜனதாவின் மறைமுக விளையாட்டில் சிக்கிவிடும் தற்போதைய சூழலில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற 20 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே தேவை.

யார் நமது  அடுத்த ஜனாதிபதி ?


இதனால் இந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புதான் பிகாசமாகயிருக்கிறது.   அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், சுஷ்மா சுவராஜ், திரளெபதி மர்மு, மோகன்பகவத் பெயர்கள் அடிபட்டன. பகவத் மறுத்திருக்கிறார். அத்வானி மீது பாபர் மசூதி வழக்கு மறுபிறப்பெடுத்திருக்கிறது.   ஓடிசா மாநில பழங்குடி இனத் தலைவரும் தற்போதைய ஜார்கண்ட் கவர்னருமான திருமதி திரளெபதி மர்மு    இந்த அதிகாரமிக்க ஆசனத்தை அலங்கரிக்கலாம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்