2/9/17

100 வருடங்களாகத் தினமும் போட்டோ!





மெல்ல நம்மைத்தொட்டுச்செல்லும் இனிய தென்றலின் இதத்தில் வழியெங்கும் புன்னகைக்கும் பூக்களைப் பார்த்தவண்ணம் நடக்க பாதைகள். பசுமையாகப் பரந்திருக்கும் மலைசிகரங்களை தொட்டு மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேகங்கள். அமைதியாகயிருக்கும் அழகான ஏரி. வெள்ளிக்கம்பிகளாக அவ்வபோது பாய்ந்து கொண்டிருக்கும் மழைச்சாரல் என இயற்கை தந்த “கொடையாக” நாம் அறிந்திருக்கும் கொடைக்கானல் தான், கடந்த நூற்றாண்டில் விண்வெளி இயற்பியலில்(ஆஸ்ட்ரோபிஸிக்ஸிக்கில்) ஒரு மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்ந்த இடம் என்பதும், அந்த வான் மண்டல கண்காணிப்பு தொலை நோக்கு நிலையம் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினசரி சூரியனின் நிலையைப் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதும் பலருக்குத் தெரியாத செய்தி
.
நாள்தோறும் ஆதவன் ஒய்வு இல்லாமல் தன் பணியைச்செய்வதைப் போல நிறுவப்பட்ட நாளிலிருந்து சூரியனை தினமும் படமெடுத்துகொண்டிருக்கும் இந்த வான் மண்டல கண்காணிப்பு மையத் (0bservatory).திற்கு வயது 118. உலகில் நிறுவப்பட்டஇடங்களிலேயே நிலைத்து தொடர்ந்து 100 ஆண்டுகளுக்குமேல் தங்கள் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் 3 மையங்களில் இது முதன்மையானாது. 1899ம்ஆண்டு சூரிய மண்டலத்தை ஆரயாய நிறுவப்பட்ட இந்த நிலயத்திலிருந்தது தினசரி சூரியனை படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆம்! 100ஆண்டுகளாக தினசரி சூரியனை படமெடுத்து பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். உலகெங்குமிருக்கும் பல வான் மண்டல ஆராய்ச்சியாளார்கள் அதைப் பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்
“ஓரு பேரிடரினால் சில நன்மைகளும் உண்டாகும்” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப 1890-95 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சத்தின் பின் விளவுகளில் ஓன்று தான் இந்திய வான் ஆராய்சி மையங்கள். கிழக்கிந்திய கம்பெனி தன் சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விஸ்தரித்துகொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில், எற்பட்ட மிக மோசமான பஞ்சத்திற்கு காரணம் தொடர்ந்து மழைபொய்த்ததும், அந்த நிலையை முன்கூட்டிய அறிய வாய்ப்பில்லாது போனதுதான் என்று உணர்ந்த நிர்வாகம் வானிலை ஆராய்சி நிலையங்களைத் துவக்கியது.


ஜான் எலியட் என்ற அதிகாரி கண்டுபிடித்த “தூசி மறைக்காமல் வானம் தெளிவாகத் தெரியக்கூடிய இடமான பழனி மலைத்தொடரின் இந்தப் பகுதி” தேர்ந்தெடுக்கபடுகிறது. பின்னாளில் இது சென்னை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டபின் இது சூரியனை ஆராயும் நிலையமாக மாற்றபட்டிருக்கிறது.


“இந்தக் கட்டிடத்தில் ஜனவரி 9ம் நாள் 1909 ஜான் எவர்ஷெட் சூரியனிலிருக்கும் கரும்புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட சுழற்சிமுறையில் உருமாறுவதை கண்டுபிடித்தார்” என்ற பதிவுக்கல் வரவேற்கும் அந்தச் சிறிய கூடத்திலிருக்கும் டெலிஸ்கோப் மூலம் தான் சூரியனின் படம் தினசரி பதிவு செய்யப்படுகிறது.
சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் 11ஆண்டுகளுக்கு ஒருமுறை உருமாறிக் கொள்வதும் அதன் விளைவாக நிகழும் மாற்றங்கள் தான் பருவ நிலை மாறக்காரணம் என்ற இவரது கண்டுபிடிப்பு “எவர்ஷெட் எபஃக்ட்’ என்ற அழைக்கப்படுகிறது. இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் பல ஆராய்ச்சிகளுக்கு இது தான் அடிப்படை.

வட்டவடிவ கட்டிடத்திற்கு கோளவடிவ ஹெல்மெட் போட்டதைப் போன்ற அமைப்பு. அந்தக் கோள வடிவ மேற்கூரையை நகரும் கதவுகளுடன் கோள வடிவத்தில் (2300ரிவிட்கள்!) அமைக்கவேண்டியிருந்த அந்தப் பணிக்கு உள்ளுரில் திறமையான தொழிலாளிகள் இல்லாதால் தானே தினந்தோறும் உழைத்து அமைக்கிறார் இதன் முதல் அதிகாரியான மைக் ஸ்மித்.


சுழுலும் சக்கர கைப்பிடிகளினால் எளிதாக இயக்கித் திறக்ககூடிய இந்தக் கதவுகள் இன்றும் இயங்குகிறது. சூரியன் நகரும் பாதையை நோக்கி மட்டும் திறக்கப்படும் இதன் கதவுகளின் வழியே டெலிஸ்கோப் சூரியனைபார்க்கிறது. 1901ல் நிறுவப்பட்ட 6” டெலிஸ்கோப் சிறந்த பாரமரிப்பினால் இன்றும் பணி செய்வதை விட ஆச்சரியம் அதன் மூலம் எடுக்கபட்ட அத்தனை படங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது தான்
1999ம் ஆண்டு இதன் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டபொழுது உலகெங்குமிருந்து 50 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.



எப்படி படமெடுக்கிறார்கள்?. சூரியனை கேமிரா வழியாகக் கூட நேரடியாகப் பார்க்கமுடியாது. அதற்காக ஒரு மூன்று அடுக்கு அமைப்பு. மேல் மாடியில் சூரியனைப்பார்க்கும் டெலிஸ்கோப் தான் பார்ப்பதை ஒரு வட்டகண்ணாடியில் பிரதிபலிக்கிறது. அங்கிருந்து அது 45 டிகிரி கோணத்தில் இரண்டாவது மாடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் தெரிகிறது.  அது மீண்டும் தரையின் கிழே பூமிக்கடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் பட்டு அதன் முன்னே 60 அடி தொலைவில் இருக்கும் ஒரு வெண்திரையில் பிரதிபலிக்கிறது. அதை அதன் முன் நீண்ட பாதையில் நகரும்படி அமைக்கப்பட்டிருக்கும் கேமிரா படம்பிடித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு வினாடி கூடத் தவறாமல் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி படம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. கிராப் பேப்பர்களில் கோடுகளாகப் பதிவு செய்து கோண்டிருந்த இது இப்போது டிஜிட்டலாக்கபட்டு கம்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. 150 மில்லியன் கீமிக்கு அப்பால் இருக்கும்(ஒரு மில்லியன் 10 லட்சம்) சூரியனின் முழூ உருவத்தைக் கைக்கெட்டும் தூரத்தில் கண் கூசாமல் பார்க்கிறோம்

.
இப்படி சூரியனைத் தொடர்ந்து கண்காணிக்கும் மையம் உலகிலேயே இது ஒன்று தான் என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இந்த மைய இயக்குனர் திரு செல்வேந்திரன். விண்வெளியியலில் சிறப்புப் பட்டங்கள் பெற்றிருக்கும் இவர் இந்தத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். மிக அழகாக நமக்கு எளிதில் புரியும்படி விளக்குகிறார். பென்சிலில் இடப்பட்ட புள்ளிபோல வெண்திறையில் நமக்குத் தெரியும் இந்தக் கருப்பு புள்ளிகள் தான் பிளாக் ஸ்பாட் எனப்படும் கரும்புள்ளிகள். ஒவ்வொன்றும் பூமியைவிடப் பெரிது என்கிறார்.
வளாகத்திலிருக்கும் கட்டிடங்களில் ஒரு சிறு நூலகமும், அருங்காட்சியகமும் இருக்கிறது மிகுந்த கஷ்டங்களுக்கிடையே காடாக இருந்த இடத்தில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது போன்ற பல தகவல்கள், ஓரு சுவையான நாவலைப் போல எழுதப்பட்ட பல குறிப்புகள்அடங்கிய புத்தகங்கள், 1000க்குக் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதால் போதிய இடமில்லாதால் மேற்கூரை வரை அடுக்கியிருக்கிறார்கள் தேவயையானபோது பெரிய ஏணிகள் மூலம் எடுப்பார்களாம்

பல அரிய படங்கள் கருவிகளின் மாதிரிகள், படங்கள் கொண்ட அந்த அருங்காட்சியகத்தில் மனமும் நேரமும் இருந்தால் நாள் கணக்கில் செலவழிக்கலாம்.


எல்லோருக்கும் டெலிஸ்கோப் இருக்கும் கட்டிடத்திற்குள் அனுமதி இல்லை என்பதால் அது எப்படி செயல் படுகிறது என்பதை இந்த அருங்காட்சியகத்தில் அதன் சிறிய மாதிரியை அமைத்து ஒரு சிறிய டெலிஸ்கோப் வழியாகச் சூரியனின் பிம்பத்தைக் காட்டி அருமையாக விளக்குகிறார்கள் திரு செல்வேந்தரனின் உதவியாளர்கள்.

சென்னை SIET கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரே வகுப்பில் படித்தவர்கள் தங்கள் நீண்டகால நட்பைக் கொண்டாட கொடைக்கானல் வந்த குழு ஒன்று கேட்ட கேள்விகளினால் நாம் பல விஷயங்களைப் புரிந்து கொள்கிறோம். அவர்கள் கணிதத்துடன் வானியல் படித்தார்களாம். ஆர்வத்துக்கு வயது இல்லை என்பது புரிகிறது

.

வானியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு நடந்த இடம், 100 வருடங்களுக்கும் மேலாக ஆதவனை அலுக்காமல் பார்த்து உலகின் வானவியல் வித்தகர்களுக்குத் தொடர்ந்து புதிய செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் ஒரே இடத்தை நாம் பார்த்தோம் என்ற பெருமிதத்தோடு வெளியே வருகிறோம்.

 


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்