30/12/17

கண்ணுறாங்காக் காவல் வெளீயீடு திருச்சி 24/12/2017


 தமிழ் படைப்பிலக்கியவாதிகளில் மொழிபெயர்ப்பாளனுக்கு பொதுவெளியில் அங்கீகாரம் கிடைப்பது என்பது அரிதான விஷயமாகயிருக்கும் இன்றைய காலகட்டத்தில் திரு ப. சிதம்பரம் அவர்களின் ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழாக்கம் செய்த எழுத்தாளர்களை அவரது “எழுத்து” இயக்கம் சார்பில் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழா மேடையில் அவரே கெளரவித்தது தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கிடைத்த கெளரவம்.

.நான் பல ஆண்டுகளாகக் கண்டுபிரமித்துப் போயிருக்கும் ஆளுமைகளில் முக்கியமானவர் திரு. ப சிதம்பரம். அவரது உரைகளில் ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி அது பாராளுமன்றத்தின் விவாதங்களாகயிருக்கட்டும், இலக்கிய சிந்தனை, அல்லது கம்பன் கழக விழாவாக இருக்கட்டும். தங்கு தடையின்றி அழகான, தேர்ந்தெடுத்த சொற்களில் தனது ஆழமான அழுத்ததமான கருத்தைத் தெளிவான குரலில் சொல்லுவார்.அவரது ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தவுடன் மிக மகிழ்ந்து போனேன். காரணம் அவரது ஆங்கிலத்தைபோலவே அரசியல் பார்வைவைகளையும் ரசித்துக்கொண்டிருப்பவன் நான். (சில சமயங்களில் ஏற்காவிட்டாலும் கூட).அரசியல், சட்டம், பொருளாதாரம் நன்கு அறிந்த திரு சிதம்பரம் அவர்களின் ஆங்கிலம் எளிதானது. ஆனால் சொல்லும் கருத்தின் வலிமையை, ஆளுமையை வெளிப்படுத்த அவர் பயன் படுத்தியிருக்கும் சில ஆங்கிலச்சொற்களை எளிதில் தமிழ்படுத்த முடியாது.
ஒவ்வொரு மொழியிலும் ஒரு குறிபிட்ட வார்த்தை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும். அதை மொழிமாற்றம் செய்வது சவாலான சிக்கலான ஒரு பணி ஒரு சிறிய தவறு கூட வீபரீத விபத்தாக மாறிவிடக்கூடிய ஆபத்துண்டு . இதுபற்றி நானும் என்னுடன் அவருடைய மற்றொரு புத்தகத்தை இதே சமயத்தில் மொழியாக்கம் செய்த நண்பர் வெங்கிடேஷும் அடிக்கடி விவாதித்திருக்கிறோம்இந்தப்பணியை அவர் எனக்குத் தரும் முன், அவரே தேர்ந்தெடுத்த இரண்டு அத்தியாங்களை மொழியாக்கம் செய்து அனுப்பச்சொன்னார். அது ரோஹித் சக்ரவர்த்தி வெமூலா, என்ற தலித் இளைஞன் தற்கொலை தொடர்பாக எழுந்த பிரச்னை. உணர்ச்சியின் கொந்தளிப்பாகக் கடுமையான ஆங்கில வார்த்தைகளில் அரசைச் சாடிய கட்டுரை.
என்னுடைய மொழியறிவு, மொழிசார் பண்பாடுகுறித்த புரிதல், படைப்பின் தொனி, படைப்பு மொழியின் சிக்கல் போன்றவற்றில் என் உள் வாங்கும் திறனுக்கான சோதனை அது எனப் புரிந்துகொண்டேன். கஷ்டமான கணக்கைக்கொடுத்து மாணவனைச் சோதிக்கும் ஒர் ஆசிரியரை அதில் நான் பார்த்தேன்.சவாலான அந்தக் கட்டுரயை படைப்பின் தொனி மாறாமல், தமிழ் மொழியின் மரபுகளுக்கேற்ப மொழியாக்கம் செய்து அனுப்பினேன். தலைப்பையும் தமிழ் மரபிற்கேற்ப மாற்றியிருந்தேன். விமானப் பயணம் ஒன்றில் அதைப்படித்துவிட்டு நன்றாக வந்திருக்கிறது பணியைத்தொடருங்கள் என்று செய்தி அனுப்பினார். இது அவரது தமிழ் மொழி ஆளூமையையும் ஒரு படைப்பாளியின் உழைப்பை பாராட்டும் பண்பையும் காட்டுகிறது.


மூல நூலின் ஆசிரியர் தமிழ் அறிந்தவர் மட்டுமில்லை, எழுத்தாளரும் கூட என்பதினால் பணி இன்னும் சவாலானது என்பதை உணர்ந்து செய்த 6 மாத உழைப்பு அரங்கத்தில் அங்கீகரிக்கபட்டதில் மகிழ்ச்சி
புத்தக வெளியீட்டில் விழாவில் பங்கேற்ற கனையாழி ஆசிரியர் முனைவர் ராஜேந்திரன், திருவைரமுத்து. திரு ப.சிதம்பரம் அனைவரும் மொழிபெயர்ப்பைப் மிகப் பாராட்டினார்கள். திரு ப. சிதம்பரம் சொன்னதை எங்களால் வாழ்க்கையில் மறக்கமுடியாதது. “நானே தமிழில் எழுதியிருந்தால் இத்தனை அழகாகச் செய்திருக்க மாட்டேன்”
இந்தப் மொழியாக்கப் பணியில் நான் பார்த்து வியந்த விஷயம் அவர் பல இடங்களில் பிரச்சனைகளை ஆக்பூர்வமான விமர்சனத்துடன் குறிப்பிட்ட தீர்வும் சொல்லுகிறார். ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்பற்றிய கட்டுரையில் திரு. சிதம்பரம். ஐக்கிய முன்னணி அரசில் கருத்து ஒற்றுமை யில்லாததால் தன்னால் அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முடியவில்லை என்பதை நேர்மையாக ஒப்புகொள்கிறார். இதன் மூலம் அவர் எந்த அரசியல் ஆதாயத்தையும் அடைந்துவிடவில்லை. அரசியல் வாதிகளின் நேர்மையைப் பற்றி விமர்சிக்கப்படும் இன்றைய கால கட்டத்தில் இவரது துணிவு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது துணிவு என்பது முன்னெடுப்பது மட்டுமில்லை. முடியாதவற்றின் பொறுப்பை ஏற்பதும் தான் என்பதைப் புரிய வைக்கிறார்.
இந்த விழாவிற்கு முக்கிய காரணம் இந்தப் புத்தகத்தை அழகாக வடிவமைத்து வெளியிட்டிருக்கும் பதிப்பாளர் திரு சொக்கலிங்கம். அவர் எங்களைப் போன்ற எழுத்தாளர்களின் எழுத்தை மட்டுமின்றி அவர்களது உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவர். அவரது கவிதா வாயிலாக எனது இந்த எழுத்துக்கள் வெளியானதைப் பெருமையாகக் கருதுகிறேன்.புத்தகம் இப்போது கவிதாவிலும், கண்காட்சியிலும் கிடைக்கும்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்