8/5/18

70 வது மணநாளைக்கொண்டாடிய அரசி








உலகின் மிகச்சிறந்த பாராளுமனற நடைமுறைகளை உருவாக்கிப் பாராளுமன்ற ஜனநாயகத்தை கடைப்பிடித்தாலும் இங்கிலாந்து நாட்டின் தலைவர் அதன் அரச பரம்பரையில் வந்திருக்கும் அரசி இரண்டாம் எலிசபெத் தான்.

இம்மாதத்தில் (பிறப்பு ஏப்பரல் 21 1926) இவரது 92 வது பிறந்த நாளைக்கொண்டாட லண்டன் தயாராகிக்கொண்டிருக்கிறது நகரின் பெரிய கட்டிடங்களில் வண்ண விளக்குகளில் வாழ்த்துச்செய்திகள் மின்னுகின்றன.  .அரசி அன்று என்ன வண்னத்தில் உடையணிவார். அவரது கணவர் என்ன பரிசு கொடுக்கபோகிறார்? போன்ற கட்டுரைகளைப் பத்திரிகைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.

தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மறைவுக்குப் பிறகு 1952ம் ஆண்டு, இரண்டாம் எலிசபெத் மகாராணி ஆனார். இவர். அன்று தொடங்கிய மகாராணி வாழ்க்கை, இன்றும் தொடந்து இங்கிலாந்து வரலாற்றில் நீண்ட காலமாகத் தொடரும் மகாராணி என்னும் பட்டத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இங்கிலாந்தின் நீண்ட நாள் அரசியாக இருந்தவர் அரசி விக்டோரியா. இந்தியாவை இங்கிலாந்து ஆண்டுகொண்டிருந்த காலங்களில் இந்திய அரசியலில் நிகழ்ந்த பல திருப்பு முனைகளுக்குக்காரணமாகயிருந்தவர் விக்டோரியாஅரசி.  தொடர்ந்து 63 ஆண்டுகள் அரசியாக இருந்தவர். அந்தச் சாதனையை சில ஆண்டுகளுக்கு முன் முறியடித்தவர் இங்கிலாந்தின் இன்றைய அரசி இரண்டாம் எலிசபெத்.   இந்த ஆண்டுடன் அவர் அரசியாகி 65 ஆண்டுகளாகிறது
.
அரசரின் குடும்பத்தில் பிறந்த முதல் பெண்குழந்தையான இவர் இங்கிலாந்தின் அடுத்த வாரிசு என்று அறிவிக்கப் பட்டபோது இவருக்கு வயது. 14.    பிறந்தபோது அவரது கொள்ளுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோர்களின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலக்ஸான்ட்ரா மேரி என்ற நீண்ட பெயர் சூட்டப்பட்டது. குடும்பத்தினரால் சூட்டப்பட்ட செல்லப்பெயர் லில்லிபெத். ஆனால் அரசியாகப் பட்டம் சூட்டப்பட்டபோது அறிவிக்கப்பட்ட பெயர். எலிசபெத். ஏற்கனவே அந்தப்பெயரில் ஒர் அரசி இருந்ததால் இரண்டாம் எலிசபெத் என்றழைக்கப்படுகிறார்.
லண்டனில் 1947ம் ஆண்டு, நவம்பர் 2௦ம் தேதி, இங்கிலாந்து இளவரசி எலிசபெத் கடற்படை அதிகாரி பிலிப்பை திருமணம் செய்துக்கொண்டார். இது காதல் திருமணம். இந்தத் தம்பதியினர் கடந்த ஆண்டு தங்களது 70 வது திருமண ஆண்டுவிழாவை மிக எளிய முறையில் கொண்டாடினர். 70 ஆண்டுகள் கடந்த பிறகும், தற்போது 91 வயது அரசி எலிசபெத்தும் 96 வயது பிலிப்பும் இன்றுவரை சிறந்த தம்பதியினராகவே வாழ்ந்து வருகின்றனர்

இங்கிலாந்தின் ராணி என்று அறியப்பட்டாலும் மேலும் 16 சிறு நாடுகளுக்கு அரசியாகயிருப்பவர் இவர்.  அந்த நாடுகளின் உள்நாட்டு அரசியலில் தலையீடுவதில்லை என்றாலும் இவர் தான் அந்த நாடுகளின் சட்டபூர்வமான அரசி. இதைத்தவிர இந்தியா உள்பட 54 நாடுகள் உருப்பினர் நாடுகளாக இருக்கும் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவியும் இவர்தான்.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உலகநாடுகளில் நிகழந்த பல அரசியல் மாற்றங்களுக்குச் சாட்சியாக இருக்கும் இந்த அரசி காலத்திற்கேற்ப பக்கிங்ஹாம் அரண்மனையின் நிலைப்பாடுகளைத் துணிந்து மாற்றிஅமைத்தவர். பல வரலாற்று சிறப்பு மிக்கபயணங்களையும் சந்திப்புகளையும் நிகழ்த்தியவர். அதில் முக்கியமானது அயர்லாந்து பயணம். நீண்ட நாட்களாக எந்த இங்கிலாந்து அரசரோ அல்லது அரசியோ செய்யாத அந்தப்பயணத்துக்கு பின்னர் இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு மலர்ந்தது. அதேபோல் தனது ஆளுகைக்குட்பட்ட சிறு நாடுகளில் குடியரசுமுறை வளரக் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்த மாற்றங்களை, அதிகார பகிர்வுக்கான மாற்றங்களை வரவவேற்று ஆதரித்தவர், கனடா நாட்டின் அரசியலில் நிகழ்ந்த மிகப் பெரிய அரசியல் மாற்றமான கனடிய அரசியல் சட்டத்தின் திரும்பப்பெறுதல் போன்றவைக்களுக்கு ஆதரவு தந்தவர்
.
வட அயர்லாந்து போராட்டங்கள், பாக்லாந்து போர், ஈராக் போர் மற்றும் ஆப்கானித்தான் போர்களை மிகத்திறமையுடன் இங்கிலாந்து சந்திக்க நேர்ந்ததும் இவரது ஆட்சிகாலத்தில் தான்.
சுருக்கமாகச் சொல்லுவதானால், பரவலான அதிகாரங்கள் கொண்ட மன்னராட்சி முறை உலகில் மெல்ல மறைந்து போகும் என்பதை உணர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கும் அரசி இவர்.

பிள்ளைகளின் திருமணமும், பேரக்குழந்தைகளின் பிறப்பு, வேல்சு இளவரசரின் முடிசூடல் மற்றும் ஆட்சியின் மைல்கற்களாக அமைந்த வெள்ளி (1977), தங்க (2002), வைரவிழா (2012)க் கொண்டாட்டங்கள் போன்ற சந்தோஷமான விஷயங்களை சந்தித்திருக்கும் இந்த அரசி ஒரு குடும்பத்தலைவியாகச் சோகங்களையும் சந்தித்திருக்கிறார்.

எலிசபெத் பிலிப் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். மூன்று மகன்கள் ஒரு பெண். இதில் சிறப்பாக நடைபெற்ற இளவரசர் சார்லஸ் டயானா திருமணம் முறிவில் முடிந்தது. அதேபோல் இளவரசி ஆனின் திருமணமும் முறிவில் முடிந்தது. தொடர்ந்த சில ஆண்டுகளில் மூன்றாவது மகன் ஆண்ட்ரூவின் திருமணமும் மணமுறிவில் முடிந்தது.  பொதுவாக இங்கிலாந்து அரச குடும்பங்களில் மண முறிவுகள் நடப்பதில்லை. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த மரபுகள் தன்காலத்தில் மீறப்பட்டிருப்பதில் அரசியாருக்கு ஆழந்த வருத்தம்
.
இந்த வயதிலும் திட்டமிட்டபடி உடற்பயிற்சி, அரசுப்பணிகள் பாராளுமன்ற கூட்ட துவக்க நாள் நிகழ்ச்சி எனச் சுறுசுறுப்பாக  இயங்கி ஆச்சரியப்படுத்துகிறார்.
விக்டோரியா அரசியின் நீண்டநாள் அரசி என்ற சாதனையை இவரது ஆட்சி முறியடித்தபோது இங்கிலந்து பாரளுமன்றம் வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக ஒரு விசேஷ கூட்டத்தைக் கூட்டியது அதில் அன்றைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் தெரிவித்த வாழ்த்து



“ நிலை மாறும் உலகில் நிலையான ஆட்சி செய்யும் மகாராணி”




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்