6/6/18

பழையகோவிலில் புதிய கடவுள்



அஹமதாபாத் நகரில் பிரமாண்டமான கோவிலைத் தலமையகமாக்கொண்டு இயங்கும் ஸ்வாமி நாரயாயணன் ஸன்ஸ்தான் என்ற அமைப்பு உலகின் பல நகரங்களில் ஸ்வாமி நாராயணன் கோவில்களை நிறுவி வருபவர்கள். இந்தக் கோவில்கள் அஹமதாபாத்திலும், டில்லியிலும் இருப்பதைப் போன்ற அக்ஷரதாம் ஒவ்வொரு நாட்டிலும்  மிக அழகாக வெளிர் ஆராஞ்ச் வண்ணத்தில் இந்திய சிற்ப, கட்டிட கலை மிளர அமைக்கபட்டிருக்கும்
.
ஓவ்வொரு இடத்திலும் செல்வச் செழுமையை பறை சாற்றும் இந்தக் கோவில்கள் முழுவதும் பிரமாண்ட சாண்டிலியர்கள், தானியங்கி கதவுகள், சன்னதியில் நீங்கள் நிற்கும் நேரம் மட்டும் தானே ஒலிக்கும் பிரார்த்தனை, லேசர் ஷோ, இசை நீருற்று என அமர்களபடுத்துவார்கள்.
இந்தியக்கோவில்களில் இரு புறமும் ஒலி ஒளி காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும் அவர்களின் முதல் குருவின் வாழ்க்கை கதையைப் பார்க்க அமைக்கபட்டிருக்கும் செயற்கை கால்வாயில் திரிலிங்கான படகுப் பயண வசதியும் இருக்கும். 3D  சினிமாக்கூட உண்டு 
.
இவர்கள் அமெரிக்காவில் ஏற்கனவே இதுபோல இருக்கும் கோவில்களைத் தொடர்ந்து இப்போது மேலும் சில புதிய கோவில்களை உருவாக்கிவருகிறார்கள் என்ற செய்தியில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் இவர்கள் அங்குள்ள பழைய சர்ச்களை வாங்கி அதைப் புதுப்பித்து ஸ்வாமிநாரயாணன் கோவில்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியம்.
கலிபோர்னியா, கென்டகி மாநிலங்களில் உள்ள இரண்டு நகரங்களில் சர்ச்களில் ஸ்வாமி நாரயணனைக்குடியமர்தியிருப்பதைப் போல அண்மையில் அமெரிக்காவின் டெலவேர் என்ற மாநிலத்தில் பேர் (bear) என்ற நகரில் ஒரு 50 ஆண்டு பழமையான சரச்சை வாங்கி வினாயகரை பிரதிஷ்டை செய்து கணபதி பூஜையுடன் கடந்த ஆண்டு புதுபிக்கும் பணியைத் துவக்கி இபோது முடித்திருக்கிறார்கள். இதற்கான கோபுர முகப்புகளும் விதானங்களும் இந்தியாவில் செய்து அனுப்பபட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பயணம் செய்த இந்த அமைப்பின் தலைவர் புருஷோத்மபிரியதாஸ் ஸ்வாமிகள் அமெரிக்காவில் பல நகரங்களிலும் ஸ்வாமி நாரயாண கோவில் அமைக்க ஆர்வம் கொள்ள வேண்டும் எனப் பக்கதர்களை கேட்டுகொண்டதின் விளைவாக முனைப்புடன் செயல்பட்ட பக்தர்கள் கண்டுபிடித்த விஷயம், பெரிய வழிபாட்டுக் கூடம் பலர் சாப்பிடும் வசதியுடன் இருக்கும் சமயலறையுடன் இருக்கும் இந்த சர்ச் விற்பனைக்கு வருகிறது என்பது தான்.

யேசு நாதர் வாழ்ந்த வீடாக இருந்தாலும் பரவாயில்லை அதை ஸ்வாமி நாராயணன் கோவிலாக மாற்ற ஆட்சேபணை இல்லையென இந்திய தலமை சொல்லிவிட மளமளவென எழுந்துவிட்டது கோவில்
இதுவரை செலவழித்திருப்பது 14 லட்சம் டாலர்கள். டெலவேர் மாநிலம் அமெரிக்காவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்று.  அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட முதல் மாநிலம் என்பதால் பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும் மாநிலம். டெலவேரில் 800 இந்தியர்களே இருந்தாலும் நியூஜெர்ஸி, மெரிலான்ட், பென்ஸ்லிவேனியா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து இது ஒரு மணி நேரப்பயணம் என்பதால் அந்த பகுதிகளில் வாழும் அதிகமான இந்தியர்களிடையே பிரபலமாகிக்கொண்டிருக்கும் கோவில் இது.


மிகப்பெரிய நிலப்பரப்பை வாங்கி அதில் பிரமாண்டமாகக் கோவில்களை எழுப்பும் இவர்கள் இப்படி சர்ச்களை வாங்கி புதுபித்து இந்து கோவில்களாக மாற்றுவதற்கு காரணம் அமெரிக்க வழிபாட்டு தலங்களின் விதிகள் என்கிறார்கள். அமெரிக்காவில் எந்த மத்தினர் கோவில் போன்ற வழிபட்டுதலங்கள் அமைக்க அரசிடம் லைசென்ஸ் பெற வேண்டும். எந்தக்கோவிலாக இருந்தாலும் சர்ச் என்ற பெயரில் தான் அனுமதி வழங்கப்படும். சில மாநிலங்களில் இப்போது புதிய வழிபாட்டுதலங்களுக்கு அனுமதியில்லை. அதனால் சர்ச் அனுமதியிள்ள கட்டிட்டத்தை வாங்கி புதிப்பது என்ற அணுகு முறையை இவர்கள் கையாளுகிறார்கள்.

சரி ஏன் சர்ச்சுகளை அதுவும் 50 அல்லது 80 ஆண்டுகள் பழமையான சர்ச்களை விற்கிறார்கள்? சர்ச்களை விற்க முடியுமா?

அமெரிக்காவில் பல மாநிலங்களில் பல சர்ச்கள் எந்தவித கூட்டமைப்பின் கீழ் இல்லாமல் தனிச்சையாக இயங்கும் அதிகாரம் பெற்றவை. அந்த சர்ச்சும் அது சார்ந்த இடங்களுக்கும் அதன் தலைமைப் பாதிரியார் தலமையில் இயங்கும் குழுவினர்தான் உரிமையாளர்கள்.
அதிக அளவில் பிரார்த்தனை கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை. வருபவர்களுக்கு இவ்வளவு பெரிய இடம் அவசியமில்லை என்றும் உயர்ந்துவரும் இன்றைய நில மதிப்பினால் கிடைக்கும் பெரும் தொகையை அவர்களது கல்வி சமூகப்பணிகளுக்கு செலவிட முடியும் என்றும் காரணங்கள் சொல்லபடுகிறது. சமூக பணிகளுக்குச்செலவிட்டால் வரிவிலக்குகளும் இருக்கின்றன. என்ற காரணமும் சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகச் சர்ச்களுக்கு தனியார் கொடுத்துவரும் நன்கொடைகள் குறைந்து கொண்டே வருகிறது முன்போல் சர்ச் திருமணங்கள் என்பது இப்போதில்லை. பெரிய அளவில் இருக்கும் சர்ச்களை பராமரிக்க அதிகம் செலவாகிறது என்பதும் ஒரு காரணம் 80 சதவீத  அமெரிக்கர்கள் கடவுளை நம்புபவர்களாக இருந்தாலும் வார இறுதி விடுமுறை நாளை சர்ச்சில் கழிக்க விரும்புவதில்லி. 
.

சில ஆண்டுகளுக்கு முன் நியார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் சாலை சீரமைப்பு பகுதிக்காகப் பல தனியார் கட்டிடங்களை நகர நிர்வாகவம் வாங்கியதில் அந்ததெருருவிலிருந்த ஒரு பழைய சர்ச்சையும் வாங்கினார்கள்.  அதற்கு நகர நிர்வாகம் தந்த விலை பல பழைய சர்ச் நிர்வாகங்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.
இப்போது அமெரிக்காவின் பல நகரங்களில் பழைய சர்ச்களை விற்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோல்ட் வெல் என்ற பிரபல அமெரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் பழைய சர்ச்கள் விற்பனைக்கென்றே ஒரு தனி இணைய தளத்தைத்துவங்கி சர்ச்சின் படங்களுடன் விளம்பரபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். இது பல மில்லியன் டாலர் பிஸினஸ் என்பதால் வேறுசில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.




அதனால் இந்துக் கோவில்கள் தவிர தனிப்பட்டமுறையில் ஆசிரமங்கள் நடத்தும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் அமைப்பினர்களும் இந்த சர்ச்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
அமெரிக்க மக்களிடம் இந்த சர்ச் விற்பனைகளுக்கு மத ரீதியாகக் கூட எந்த எதிர்ப்பும் எழவில்லை. சொத்தின் உரிமையாளார்கள் அதை விற்கிறார்கள். என்ற ரீதியில் தான் பார்க்கிறார்கள். சர்ச்களை ச்ர்ச்சையில்லாமல் விற்றுகொண்டிருக்கிறார்கள்
 தீவிர மதபக்தியுள்ளவர்களில் சிலர் மட்டும் ஏற்கனவே சர்ச் வழிபாடுகள் குறைந்து வரும் இன்றைய நிலையில் இம்மாதிரி விற்பனைகள் இளைஞர்களுக்கு சர்ச்களை விட்டு விலகும் எண்ணத்தை அதிகரிக்கும் என சில நாளிதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
.
ஸ்வாமி நாரயணன் கோவில் நிர்வாகம் அமெரிக்காவில் மட்டுமில்லை இங்கிலாந்திலும் இரண்டு நகரங்களில் சர்ச்களை வாங்கி கோவில்களை நிறுவியிருக்கிறார்கள் என்ற செய்தி ஐரோப்பவிலும் மெல்ல இந்த பழைய சர்ச்களின் விற்பனை ஜுரம் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது
.
முன்பு இங்கு இருந்தது  யாராகயிருந்தால் என்ன? உலகெங்கும் நிறைந்திருக்கும் எங்கள் கடவுள் இப்போது இங்கு இருக்கிறார் என்பதைச்சொல்ல சர்ச்சாக இருந்த கட்டிடங்களையும்  ஏற்று  இந்து மதத்தின் பெருந்தன்மையை உலகிற்கு காட்டியிருக்கிறார்கள் ஸ்வாமி நாரயாயணன் ஸன்ஸ்தான்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்