தொடர்கள்

பயணங்கள் முடிவதில்லை.

நம் வாழ்வின் இனிய அனுபங்களில் பயணங்களும் ஒன்று. எவருக்கும் எதாவது ஒரு பயணமாவது வாழ்நாள் முழுவதும் மனதில் நிலைத்திருக்கும். பாடபுத்தகத்தின் வழியாக பதின் வயதில் அறிமுகமான பயணங்களின் அனுபங்களை  நேரில் அனுபவிக்க விரும்பிய எனனை தனியாக அந்த வயதில் இளைய சகோதரனுடன்  மதுரையிலிருந்து கன்னியாகுமரிக்கு அனுப்பிவைத்தனர்  பயணங்களை நேசிக்கும் என் அன்பு தந்தையும் தாயும் அன்று கொண்ட வேட்கை இன்றளவும் தொடர்கிறது.
இந்த  இனிய இந்திய தேசம் . அற்புதமானது எனபதை என் பயணங்கள் எனக்கு புரியவைத்திருக்கின்றன,அழகிய மலைகள், ஆறுகள்,காடுகள், பாலைவனங்கள், கடல்கள்,  தீவுகள் போன்ற எழில் கொஞ்சும் இடங்களும், நிகழந்த சரித்திரத்தின் சான்றாக நிற்கும் பழைய நகரங்கள், கிராமங்கள் புதிதாக எழுந்த நரங்கள், வழிபாட்டுதலங்கள்,  நூறு மொழிகள், ஆயிரம் உணவு வகைகள்,பல்வேறுபட்ட சமுக வாழ்க்கை முறைகளுடன் வாழ்ந்தாலும் தேசததை நேசிக்கும் மக்கள் இப்படி அனைத்தும் நிறைந்து பரவிக்கிடக்கும் இந்த தேசத்தில் சொந்த நாட்டை முழுவதுமாக பார்க்காமல் வெளிநாடுகளில் பயணம் செய்தவர்கள் அதிகம். 2000 ஆண்டு சரித்திரத்தை சொல்லுமிடங்கள் பல இருக்கும் இங்கு, 300 வயதை அடையாத அமெரிக்காவை பற்றி எழுதியவர்கள் அதிகம்.
பெற்றோர்களுடன் பயணித்த பயண்ங்களினால் எழுந்து,தொடர்ந்த தணியாத ஆர்வம், சார்ந்திருந்த வங்கித்தொழில், என்னைப்போலவே பயணங்களை நேசிக்கும்மனைவியை அடைந்த நல்வாய்ப்பு ஆகியவை இந்த தேசத்தின் பல எல்லைகள் வரை என்னை அழைத்து சென்றிருக்கிறது. பல விஷ்யங்களை கற்றுகொடுத்த இந்த பயணங்களில் மனதாலும் பார்த்து மயங்கிய மறக்கமுடியாத இடங்கள் பல..
இதில் பல கல்கி வார இதழலில் வெளியானவை. காசிபற்றிய முதல் கட்டுரையை படித்தவுடன் போன் செய்து பராட்டி தொடர்ந்து அது போல எழுத ஊக்கம் தந்தவர் கல்கி குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை ஆசிரியர் திருமதி சீதா ரவி. அவருக்கும், இதை பதிப்பித்திற்கும்     பதிப்பாளருக்கும் என் நன்றியை பதிவு செய்வதில் சந்தோஷமடைகிறேன்.
என் எண்ணற்ற இனிய பயணங்களில் பல இடங்களில் தங்கியது உண்டு. அவற்றில்  மனதில் தங்கிவிட்ட சில இடங்கள் தான் இந்த..        

                                                                 இங்கே

1

கங்கை கரையினிலே..

காலையில் பெய்த மழையினாலா அல்லது எப்போதுமே இப்படித்தானா என்று தெரியவில்லை.  கல் பாவிய அந்தச் சிறிய பாதையெல்லாம் நசநச வென்றிருக்கிறது.  எதிரே வரும் மனிதர்கள் அருகில் வரும் சைக்கிள் அல்லது மாடு…. இல்லாவிட்டால் ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கும் கடையின் பலகைகள் இப்படி எதிலாவது இடித்துக்கொள்ளாமல் தம்மால் நடக்க முடியவில்லை.  இடையிடையே பயமுறுத்தும் மோட்டார் சைக்கிள்கள் வேறு! இப்படி இடித்துக்கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்ற ரீதியில் நடக்கும் மக்கள்.  வாரனாசியில் சிறிய சந்துகளைப் பற்றி.. நிறையப் படித்திருந்தாலும் பார்க்கும் போது ஆச்சரியத்தைத் தவிர்க்க முடியவில்லை.
உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.  ’இந்தச் சந்தில் போனால் 5 நிமிடம்என்று உள்ளூர்காரர் சொன்னதை நம்பி கடந்த 15 நிமிடங்களாக நடந்து கொண்டிருக்கிறோம்.  ஒவ்வொரு சந்தின் முடிவிலும் கோணல் மாணலாக எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களையும் அம்புக்குறிகளையும் கடந்து சற்றே பெரிதாக இருக்கும் அந்தக் குறுகிய தெருவில் ஒரு நுழைவுவாயில்.  பிரம்மாண்டம், ஆடம்பரம் எதுவும் இல்லாத அந்த நுழைவாயிலின் அருகிலிருக்கும் போலீஸ் சோதனைச் சாவடிகள், கெடுபிடிகள் எல்லாம் அதுதான் கோயில் என்பதைத் தெரிவிக்கின்றன.
 [1]வெள்ளை சலவைக்கல் விரிந்திருக்கும் ஒரு பரந்த முற்றத்தில் நடுவே நான்குபுறமும் வாயில்கள் கொண்ட ஒரு மண்டபம் அதுதான் சன்னதி நடுவே தரையின் நடுவில் தரையிலேயே மூர்த்தி. சுற்றி நான்கு புறமும் பூஜை செய்யும் அர்ச்சகர்கள், அவர்கள் தங்கள் உடலாலும், பூஜைப் பொருட்களாலும் நுழைவு வாயிலை மறைத்துக்கொண்டிருப்பதாலும் அதற்கு வெளியே மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நிற்பதாலும் நமக்கு சன்னதி, ஸ்வாமி எதுவும் தெரியவில்லை.  அபிஷேகம் ஆரத்தி முடிந்து கூட்டம் கலைந்தபின் அருகில் சென்று பார்க்கிறோம்.  வெள்ளியிலான நாக கவசம் அணிவிக்கப்பட்டு, பளீரென்று சிவப்பு மஞ்சள் மலர்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் விஸ்வநாதர்.  தரிசனத்துக்குப் பின்னர் வெளியே வந்த நாம் இப்போது மற்றொரு சந்தின் தொடக்கத்திலிருக்கிறோமென்பதைப் புரிந்து கொள்ள சில நிமிடங்களாகின்றன.
மகாகவி பாரதியார் இங்கு சிலகாலம் வாழ்ந்திருக்கிறார்.  அந்த இடத்தில் அவருக்குச் சிலையிருப்பது அறிந்து பார்க்கத் தேடிச்செல்கிறோம்.  அதிகம் பேர் அறியாத அந்த சிலையிருக்குமிடத்தை அருகிலிருக்கும் பால் கடைக்காரர் ஆக்கிரமித்திருக்கிறார்.  நெஞ்சுபொறுக்குதில்லையே …. இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துஎன்று புலம்புவதைத் தவிர வேறு வழியில்லை.  நண்பர்கள் சொல்லியிருந்த மணிகர்ணிகா கட்டம் அருகிலிருப்பதை அறிந்து போனோம்.
இந்த மணிகர்ணிகா கட்டத்தில் குளிப்பது மிகப் பெரிய புண்ணியம், சிவபிரான் ஸ்நானம் செய்த கட்டம், இதன் அருமை பலருக்குத் தெரியாது.  நீங்கள் கட்டாயம் குளியுங்கள் புண்ணியம்என்று சொன்ன அந்த ரிக்‌ஷாக்காரரை அனுப்பிவிட்டு குறுகிய பாதையின் முடிவிலிறங்கும் படிக்கட்டுகளைக் கடந்து கங்கையைப் பார்க்கும் நமக்கு ஏமாற்றம்; கலங்கிய கறுப்பு வண்ணத்தில் மிக மோசமாக, குப்பைகளுடன் வரும் கங்கை நகரின் கழிவுநீரை நதியுடன் இணைக்கும் ராட்சத சைஸ் குழாய்கள் நிர்வாகம் எப்படி இந்தப் படித்துறையில் குளிக்க அனுமதிக்கிறதுஎன்பதை விட, புண்ணியம் தேடும் வெறியில் புத்திசாலித்தனத்தையே இந்த மனிதர்கள் இழந்து விட்டிருக்கிறார்களே என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
மணிகர்ணிகா கட்டம் அருகிலேயே காசிநகரின் இடுகாடு. தினசரி 50-100 உடல்கள் தகனம் செய்யப்படும் இந்த இடத்தில் வசூலிக்கப்படும் கட்டணம்உலகப்புகழ் பெற்றது.  விலை உயர்ந்த சபாரி சூட், கையில் தங்கப்பட்டையில் கடிகாரம், சட்டைப் பையில் தங்கப் பேனா, கையில் தொடர்ந்து ஒலிக்கும் செல்ஃபோன் என ஒரு பிஸினஸ் மேன் போலக் காட்சியளிக்கும் அந்த மனிதர்தான் இந்த இடத்தின் ராஜா.  ஆமாம்; அவர்தான் தலைமை வெட்டியான் சத்திய நாராயண சௌத்திரி. பரபரப்புடன் இயங்கும் அவரின் கீழ் ஆறு உதவியாளர்கள் எரியும் சிதைகளை கவனித்துக்கொண்டிருந்தனர்.
மெலிந்த உயர்ந்த உருவம், தீர்க்கமான முகம், பளிச்சென்ற கண்களுடனிருக்கும் அந்தச் சிறுவன், ‘படகில் சென்று சுத்தமான கங்கையில் நிம்மதியாகக் குளிக்க விரும்புகிறீர்களா?’ என்று பணிவான ஆங்கிலத்தில் கேட்டவிதம் எவரையும் யெஸ்சொல்ல வைக்கும்.  படகில் ஏறிய பின்னர்தான் தெரிகிறது ஓட்டப்போவது அந்தப் பையன் இல்லை, அவரது குடும்பப் படகுக்கு அவர் மார்க்கெட்டிங் அதிகாரி என்பது’. பரந்து விரிந்திருக்கும் அந்த கங்கைக் கடலின் சீறி வரும் புது வெள்ளத்தில் சீரான வேகத்தில் படகு சென்று நிற்கும் இடம் ஒரு மணல் திட்டு. ஒரு கரையில் ஸ்நான கட்டங்களும் மறுகரையில் பழைய பனாரஸ் நகருமிருக்கும் கங்கை நதியின் நடுவே, இது போல பல திட்டுக்கள்.  சொன்னது போலவே நதி சுத்தமாக ஓடுகிறது.  இறங்கிக் குளிக்க வசதியாக, பாடகிலிருந்து கயிறு கட்டிக் தருகிறார்கள், எப்படி பாதுகாப்பாகக் குளிக்க வேண்டும் என சொல்லித் தருமிந்த படகோட்டிகள் கங்கையிலேயே பிறந்து வளர்ந்து மடிபவர்கள்.
மாலையில் கங்கா ஆரத்தியை நதியிலிருந்தே பார்க்கலாம் என அழைத்துப் போகிறார்கள்.  சில்லென்ற காற்றின் சுகத்தில் படகுப் பயணத்தை அனுபவித்துக்கொண்டே ஆரத்தி கட்டத்தை நெருங்குகிறோம்.
படிகளிடையே பலகையினால் நிறுவப்பட்ட சிறிய மேடையின் தங்கமாய் மின்னும் ஒரு குட்டி மண்டபம் உள்ளே முகம் மட்டும் தெரியும் கங்காமாதா அருகில் பூஜை சாதனங்கள்.  பக்கவாட்டில் பக்கத்துக்கு இரண்டாக நாலு சிறிய மேடைகள்.  அதிலும் பூஜை பொருட்கள். இரவு ஏழு மணி நெருங்குகிறது.  படிகளில் கூட்டம் வழிகிறது. மின்விளக்கு வெளிச்சத்தில் தகதகவெனப் பளபளக்கும் ஆரஞ்சு நிறப் பட்டாடையில் பூஜை மேடை அருகே கம்பீரமாக நிற்கும் இளைஞர்கள். டாணென்று ஏழுமணிக்கு அறிவிப்பைத் தொடர்ந்து நடுமேடையில் வந்தமரும் தலைமைப் பூசாரி பூஜையைத் தொடங்குகிறார்.  தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
 [2]இசைக் குழுவில் ஆரத்திப் பாடல் ஒலிக்கிறது.  ஒவ்வொன்றாக ஏழுவிதமான தீபங்கள், படியிலிருந்து கங்கையை நோக்கி மூன்று திசைக்களுக்கும் காண்பிக்கப்படுகின்றன.  ஒவ்வொரு முறையும் ஐந்து பேரும் இசையுடன் இணைந்து துல்லியமான அசைவுகளைக்கூட ஒரு பிசிறில்லாமல் தேர்ந்த நடனக் கலைஞர்களைப் போல நேர்த்தியாக செய்யும் அந்தக் காட்சி நம்மைப் பிரமிக்கவைக்கிறது.  கனமான அந்த கொதித்துக் கொண்டிருக்கும் தீபங்களை ஒருகையில் தூக்கிச் சுழற்றிக் கொண்டே மறுகையில் கனமான மணியை அடித்துக்கொண்டே ஒரு காலில் மண்டியிட்டு நான்கு பேரும் ஒரே நேரத்தில் வினாடி பிசகாமல் திரும்புகிறார்கள்.
இறுதியில் பல அடுக்கு விளக்குகளுடன் ஆரத்தி.  உச்சஸ்தாயியில் இசைக்குழுவின் குரல்.  பக்திப் பரவசத்தில் மக்களின், ‘கங்காமாதாகீ ஜேஎன்று ஓங்கி ஒலிக்கும் குரல்களின் பின்னணியில் மூன்று முறை சுழற்றப்படும் அந்தப் பெரிய தீபம் மக்களை நோக்கிக் காட்டப்பட்டு, பிறகு அணைக்கப்படுகிறது.  காத்திருக்கும் மக்கள் தங்கள் கைகளில் புஷ்பங்களுடன் இலைகளில் வைத்திருக்கும் சிறு தீபங்களை மிதக்க விடுகிறார்கள்.  சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கில் நம் படகைக் கடந்து செல்லும், மிதக்கும் அந்த மின்னும் நட்சத்திரங்களை ரசித்த வண்ணம் கவனமாக அருகில் நிற்கும் படகுகளில் மாறிமாறி நடந்து கரையிலிருக்கும் அந்த ஆரத்தி இசைக் கலைஞர்களை நெருங்குகிறோம்.  ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே பாடியவரையும் தபேலா வாசித்த கலைஞரையும் பாராட்டக் கை நீட்டும் நாம், அவர்கள் முகத்தைப் பார்த்ததும் சற்று அதிர்ந்து போகிறோம்.  தினசரி பல ஆயிரம் கண்கள் பார்க்கும் அந்த அற்புதமான ஒளி வழிபாட்டுக்கு உயிர் தரும் இசையை வழங்கும் அந்தச் சகோதரர்களால் அதைப் பார்க்க முடியாது.  ஆம்; அவர்கள் விழிகளில் ஒளியில்லை.
மனித வாழ்க்கைதான் எவ்வளவு ஆச்சரியங்களைக் கொண்டதாயிருக்கிறது !






2

பிரார்த்தனைகளின் சங்கமம்                                

சற்றே சரிவாக வழுக்கும் ஈரக்களிமண்ணாகயிருக்கும் அந்த பாதையில் மிக கவனமாக நம்மை நடத்தி  நதியின் கரையிலிருக்கும் படகுக்கு அழத்து செல்லுகிறார் அந்த முதியவர்.  செம்மண் நிறத்தில் ஒரு ஏரியைப் போல் சலனமில்லாமல்    அமைதியாகயிருக்கிறது கங்கை.  படகு  மெல்ல செல்லுகிறது பத்து நிமிடப் பயணத்தில் சட்டென்று  நதியின் நிறம் மாறுகிறது. அதன் வேகத்தை படகிலிருக்கும்  நம்மால் உணரமுடிகிறது. இங்குதான் யமுனை கங்கா மாதாவுடன் சேருகிறார்,  
கண்ணுக்கு தெரியாமல் சரஸ்வதி நதி  இணையும் சங்கமத்திற்கு இன்னும் போகவேண்டும் என்கிறார் படகுகாரார்.  வெளிர்நீல நீர் பரப்பில் அருகே செல்லும் சற்றே பெரிய படகுகளும் அதைத்தொட்டு   சிறகடித்துபறக்கும் வெள்ளைப்பறவைகளும் அந்த  காலைப்பொழுதை ரம்மியமாக்கின்றன. தொலைவில் நிற்கும் நிறைய படகுகள். அவற்றில் பறக்கும் பல வண்ண  கொடிகள்.
அருகில் போனபின் தான் அந்த இடம்தான்  திரிவேணி சங்கமம் என அறிந்துகொள்ளுகிறோம் .கங்கையும், யமுனையும், கண்ணுக்தெரியாத சரஸ்வதியும்  ஒன்றாக இணைந்து சங்கமிக்கும்  உன்னதமான இடம். இந்த இடத்தில் நீராடுவதும் வழிபடுவதும் மிகபுண்ணியம் என இந்தியாவின் எல்லா பகுதிகளிருக்கும் இந்துக்களாலும் போற்றப்படும் புனிதமான இடம்.. மாறுபட்ட திசைகளிலிருந்து வேகத்தோடு  நதிகள் இணையும்  அறுபது அடி ஆழமிருக்கும்,அந்த நடு ஆற்றில்  எப்படி நீராடமுடியும். என திகைத்துகொண்டிருக்கும், நாம் செய்யப்பட்டிருக்கும் எற்பாடுகளை பார்த்து அசந்துபோகிறோம். சங்கமம் என அடையாளம் காணப்பட்டிருக்கும் அரைகிலோ மீட்டர் பகுதியில் பல  பெரிய படகுகள் நங்குரமிடபட்டிருகின்றன. அவைகள் ஜோடிகளாக  இரண்டிற்குமிடையில் 6அடி இடைவெளி இருக்கும் வகையில் இரண்டு மூங்கில்களால் இணைக்கபட்டிருக்கின்றன. இந்த இடைவெளியில்  நாலு பக்கமும் பிடித்துக்கொள்ள வசதியான ஃபிரேமுடன் ஒரு சதுர மேடை தொங்குகிறது. கவிழ்த்து போடப்பட்ட  மேஜை போன்ற   தொட்டி. நதியின் உள்ளேமுழ்கியிருக்கும் இதை   இணைக்கும் நீண்ட நைலான் கயிறுகளை படகிலிருக்கும் உதவியாளார்கள் இயக்க   நதியில் மிதக்கும் அந்த குளிக்கும் மேடையில் இறங்கி  நாம் நீருக்குள் முழுகுகிறோம். முதல்  முழுகலில் பயம் தெளிந்து அமைப்பின் பாதுகாப்பு புரிந்திருப்பதால், பலமுறை ஆனந்தமாக முழ்கி திளைக்கிறோம். குளிக்கும்போது உள்ளே யமுனைநதிநீர்   மேல்பரப்பு செல்லும் திசைக்கு குறுக்காக பாய்ந்து செல்வதை உடல் நமக்குச்சொல்லுகிறது. வெளியே ஒரு படகில் பளபளக்கும் பித்தளை தட்டில் சாமந்தி பூக்களுடனும், பூஜை சாமான்களுடனும் காத்திருக்கும் பண்டா  ஈர உடைகளுடனேயே பிராத்தனை செய்ய அழைக்கிறார். பக்கத்து படகுகளில் அணிந்திருக்கும் சபாரி உடையின் மீதே பூணுலும், மாலையை அணிந்தமஹராஷ்ட்டியர், கைநிறைய வளையல்கள் அணிந்த ராஜஸ்தான் பெண்கள், பஞ்சகச்ச வேஷ்டியில் கையில் ஸ்படிக மாலையுடன்  தெனிந்தியர் என பலபேர். அந்த இடமே பிராத்தனைகளின்        சங்கமாகயிருக்கிறது.   மற்றொரு படகில் பக்கங்களும் மேற்கூரையும் பிளாஸ்டிக் துணியால் முடப்பட்ட டிரெஸ்சிங் ரூம். கண்ணாடி கூட வைத்திருக்கிறார்கள். அந்த படகின் நடுவில் குஷன்கள் இடப்பட்ட பெஞ்ச் நாற்காலியில் தலைப்பாகை அணிந்து கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் படகின் சொந்தக்காரர். அவரது ஆசனத்தின் பின் நிற்கும் கம்பத்தில்தான் கொடிபறக்கிறது. இது போல பல படகுகள். பல வண்ணகொடிகள்.  கரையிலிருந்து நம்மை அழைத்து வரும் சின்ன படகுகாரர்களுக்கு அவர்களின்  குரூப் அடையாளம் தெரிவதற்காக இந்த  கொடிகளாம். வருபவர்களுக்கு நல்ல வசதிகள் செய்துதரும் இந்த படகுக்காரர்கள் ஒடும் நதியில் பகுதிகளை பிரித்து பங்கிட்டு உரிமை கொண்டாடி சம்பாதிக்கும்  சாமர்த்தியசாலிகள். நீராடித்திரும்பும் போது பின் காலைப்பொழுதாகவிட்டதால்,யமுனைநதி நீரின் உயரமும் வேகமும் அதிகரித்திருப்பதால் படகு சீக்கிரமாக கரையைத்தொடுகிறது.

 மொகலாய கட்டிடக்கலையின் மிச்சங்களை ஆங்காங்கே அடையாளம் காட்டும் அலகாபாத் இந்தியாவின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்று. பெரிய பல்கலைகழகம்,மாநில தலைநருக்கு வெளியே  துவக்கப்பட்ட ஹைகோர்ட் என பல கெளவரவங்களை பெற்றிருந்தாலும், நகரம் என்னவோ களையிழந்துதான் காணப்படுகிறது. பளபளக்கும் வண்ணத்துணியில்  பூ வேலைகளுடன் வட்ட கண்ணாடிகள் பதிக்கப்பட்ட ஆடம்பரமான  மேல்கூரையும் பின்திரையுமிட்ட சைக்கிள் ரிக் ஷாக்கள்களை ஒட்டும் சட்டையணியாத ரிக் ஷாகாரர்கள், மேற்கூரையில் பயணிகளுடன் மினிபஸ் போன்ற வினோதங்களை ரசித்தவண்ணம் விசாரித்து வழியறிந்து நாம் செல்லுமிடம் ஆனந்த பவன்.
பரந்த பசும்புல்வெளியின் மறுகோடியில் வெளிர்மஞ்சள் நிறத்தில்  நிற்கும் கம்பீரமான இந்த இரண்டு அடுக்கு மாளிகையில் தான், மூன்று தலைமுறையாக நேரு குடும்பத்தினர் வாழ்ந்திருக்கின்றனர். இந்திரா காந்தி இதை அரசுக்கு நன்கொடையாக தந்து அருங்காட்சியகமாகயிருக்கிறார். அண்ணல் காந்தியடிகள் பலமுறை வந்து தங்கியிருக்கும் இந்த மாளிகையின் அறைகளை அந்த காலகட்டதிலிருந்தது போல், பயன் படுத்திய பொருட்களுடன்  நிர்மாணிக்கபட்டிருக்கும் அறைகளைப் பார்க்கிறோம். மாடியில் .நேருவின் படுக்கை அறையில் அலமாரியிலிருக்கும் புத்தகங்களின் முதுகில் அச்சிடபட்டிருக்கும் பெயர்களைக்கூட படிக்க முடிகிறது. எழுதும் மேசையிலிருக்கும் பார்க்கர் பேனாவும், வெளிநாட்டு தயாரிப்பான சின்ன சூட் கேஸும் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.  இந்திராவின் எளிமையான அறை, அண்ணல் காந்தியடிகள் காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டத்தை நடத்திய இடம், எல்லாவற்றையும் பார்த்தபின் கிழே வரும் நம்மை, கவர்வது  கிழ்தளத்தின் வராண்டாவில், ‘இந்திராவின் திருமணம் நடைபெற்ற இடம்' என்ற அறிவிப்புடனிருக்கும் ஒரு சின்ன மேடை. திருமணம், மிக எளிமையாக நடைபெற்றிருக்கிறது எனபதை கண்காட்சியிலுள்ள படம் சொல்லுகிறது.
 அல்லிதாடகம், அழகான பூச்செடிகள்,அருமையாக பராமரிக்கப்படும் புல்வெளி என்ற அந்த சூழலை ரசித்தவண்ணம் வெளியே வரும் நம் கண்ணில் படுவது,  முகப்பில் காவிவண்ணத்தில் நிற்கும்   ஒரு பெரியபாறையும், அதில் நேர்த்தியாக பொருத்தபட்டிருக்கும் பட்டயமும் தான். பட்டயதில்  செங்கலாலும்,சுண்ணாம்பாலும் எழுப்பட்ட வெறும் கட்டிடம் மட்டுமில்லை இது. தேசத்தின் சுதந்திர போராட்டத்துடன் மிக நெருங்கிய உறவு கொண்டது. இதன்  சுவர்களக்கிடையே மிகமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.மிகப்பெரிய நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன.என்ற பித்தளை  எழுத்துகள் மின்னுகின்றன.
மனதைத் தொட்ட மணியான வாசகங்கள்.






3

கடவுளின் காலடியில்....


 சற்றே கலங்கி மண்ணின் வண்ணத்தை காட்டியபடி சீறிப்பாய்ந்து வரும்  கங்கையை ஹரித்துவாரின் அந்த பாலத்துலிருந்து பார்க்கும்போது அதன் கம்பீரம் நம்மை கவர்கிறது. அமைதியாகயிருந்தாலும் ஆராவராமாமிருந்தாலும் கங்கைக்யென்று ஒரு தனி கம்பீரம் இருக்கதான் செய்கிறது.. பத்தாயிரம் அடி உயரத்தில் உருகிய பனியாக துவங்கும் கங்கை 250கீமி தூரம்  மலைகளின் வழியே வந்து முதலில் தரையைத் தொடும் இடம் ஹரித்துவார். மன்னர் விக்கரமாதித்தியனால்(கீமூ1ம் நூற்றாண்டு) கட்டப்பட்டதாக சரித்திரம் சொல்லும் இந்த நீராடும் துறையில் பல நூற்றாண்டுகளாக நீராடிய பலகோடி பேரை போல இன்று நாமும் நீராடபோகிறோம்.. பாலம் முழுவதும் மக்கள் வெள்ளம். நகரும் கூட்டத்தோடு பாலத்தைக்கடந்து படிகளிலிறங்கி கறுப்பு வெள்ளை  பளிங்கு சதுரங்களாக விரிந்திருக்கும் நதிக்கரையின் தளத்தையும்  அதைத்தொட்டடுத்திருக்கும் படித்துறைக்கும்  போக முயற்சித்து கொண்டிருக்கிறோம். கொடுத்த மிதியடிகளுக்கு டோக்கன் வாங்க முண்டியடித்துக்கொண்டிருக்கும்  கூட்டதையும்,குவிந்திருக்கும் செருப்புமலைகளையும் கடந்து ஒரு வழியாக ஒடும் கங்கயையை உட்கார்ந்து பார்க்க படிகளில் ஒரிடம் பிடிக்கிறோம். மணி மதியம் இரண்டு.     
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் நீடித்த அந்த  சூரிய கிரகண நாளில்  கிரகண காலத்தில் ஹரித்துவாரில் ஹர்-கி-பெளரி  (Har-Ki-Pauri.) கட்டத்தில் காத்திருக்கிறோம். நகரில் 30க்கும் மேற்பட்ட ஸ்நான கட்டங்களிலிருந்தாலும் இங்கு சிவன், விஷ்ணு கங்காதேவி கோவில்களிருப்பதால் இது கடவுளின் காலடியாக கருதப்படுகிறது.  கிரகண காலம் துவங்கிவிட்டதால் கரையிலுள்ள கோவில்கள் முடப்பட்டிருக்கிறது. கங்கையில் இறங்க எல்லோரும் காத்திருக்கிறார்கள். எப்போதும்  பலர் குளித்துக்கொண்டிருக்கும் அந்த புனித நதி அந்த பொழுதில்  யாருமில்லாமலிருக்கிறது. கங்கை   மிக பெரும் ஓசையுடன் வேகமாக பாய்ந்து  ஓடிக்கொண்டிருக்கிறது. அசையும் அந்த அறுந்து தொங்கும்  பாதுகாப்பு சங்கலிகள் நதியின் வேகத்தை  சொல்லுகிறது. . நிறுவப்பட்டிருக்கும் கண்காணிப்பு கோபுரத்தில் பைனாகுலர்களுடனும், நதியில் போலீஸ் என்று எழுதப்பட்டிருக்கும் லைப் ஜாக்கட்களுடன்  காவலர்கள். ஓயாது  தினசரி பலரை குளிப்பட்டிக்கொண்டிருக்கும் அந்த நதிக்கு இது ஒரு நல்ல ஒய்வாகயிருக்குமோ என்று தோன்றுகிறது.இந்த கிரகண நாளில் 12ஆண்டுகளுக்கு ஒரு முறை வரு கும்மமேளாவும் துவங்குகிறது. இமயமலைச்சரிவுகளிலிருந்து வரும் சாதுக்கள்  நீராட தனியிடம் ஒதுக்கியிருப்பதால் அவர்கள் கூட்டம் இங்கில்லை.
இந்தியாவின் பல மாநில முகங்கள். நிறைய இளைஞர்கள்.குழந்தைகளுடன் குடும்பங்கள் பல மொழிகளில் பிரார்த்தனைகள்,சிலர் வாய்விட்டுப்படிக்கும் ஸ்லோகங்கள். அந்த படிக்கட்டுகளில் பரவிக்கிடக்கும் அத்துனைப்பேரும் எதோ ஒருவகையில் தங்கள் மனதை ஒருமுகப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தாலும் அந்த இடம் மிகுந்த இரைச்சலுடன் தானிருக்கிறது. கிரகண காலம்முடிந்த பின் குளிக்க அனுமதிக்கப்படும் அதுவரை குளிக்க முயற்சிக்கவேண்டாம் போன்ற அறிவிப்புகள் அந்த  சத்தத்தில் கரைந்துகொண்டிருக்கிறது.எதிர்கரையின் நடுவே நிற்கும் உயர்ந்த  காவி வண்ண மணிக்கூண்டின் கடிகாரத்தின் மீது பல கண்கள். வானம் கறுத்துக் கொண்டிருக்கிறது.
சற்று தொலைவில் விளம்பரங்களுக்கிடையே பெரிய திரையில்  மாறி.மாறி வரும் கனியாகுமரி, ராமேஸ்வர கிரகண காட்சிகள்.  கருவட்டதை சுற்றி மின்னும் முழு வெள்ளி  வளயமாக சூரியன் தோன்றிய அந்த வினாடி அத்துனைபேரும்  நீரில்.  அந்த அளவு கடந்த கூட்டத்திலும் சில்லென்று    நம்மை வேகமாகத் தொட்டுச்செல்லும் கங்கையினால் சிலிர்த்து நிற்கிறோம்.ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வின் போது இப்பபடியொரு இடத்தில் இருக்கும் வாய்ப்பைப் பெற்றதற்கு ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்திக்கிறோம். பெரும் மணியோசைக்கு பின் ஆர்த்தி துவங்குகிறது. இன்று கிரகணம் என்பதால் முன்னதாகவே மாலைக்கால ஆர்த்தி. கோவில்கள் திறக்கபபட்டு அபிஷகங்ககளும் பூஜைகளும் துவங்குகின்றன. வெளியே வர மனமில்லாமல் குளித்துக்கொண்டிருப்பவர்கள் அவர்களைத் தள்ளிக் கொண்டு, பூஜைக்கு செல்ல அவசரப்படுவர்கள் என கூட்டம் கலகலத்துக்கொண்டிருக்கிறது.
சூரிய கிரகணம் என்பது  சுழலும் பூமிக்கும்  சூரியனுக்கும் இடையே நிகழும் கோள்களின் நிலை மாற்றத்தைக் காட்டும் இயற்கையான நிகழ்வு. அந்த நேரத்தில் கடைப்பிடிக்கும் சம்பிராதாயங்களுக்கு  விஞ்ஞானபூர்வமான விளக்கம் எதுவும் இல்லை என்பது இந்த கூட்டதிலிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த மக்கள் வெள்ளம்- இந்துமதம் என்பது  ஒரு வாழ்க்கை முறை அந்த பாரம்பரியம்  பல காலம்காலமாக  தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த கங்கையைப்போல தொடர்ந்து  வந்து கொண்டிருக்கிறது  என்பதை நமக்கு புரிய வைக்கிறது.





 
4

புனிதமான போர்க்களம்    

             

இந்திய தேசிய நெடுஞ்சால எண் ஒன்று  என்ற கெளவரத்தைப் பெற்றிருக்கும்  பரபரப்பான டெல்லி -ப்தான்கோட்  6 வழிச்சாலையில் சென்றுகொண்டிருக்கும் நம்மைக் சட்டென்று கவரும் அந்த பிரமாண்டமான நுழைவாயிலும் அதன் மீதிருக்கும் கீதோ உபதேச சிற்பமும் நாம் பார்க்க போய்க்கொண்டிருக்கும் குருஷேத்திராநகர் அதுதான் என்பதைச் சொல்லுகிறது. பல பஞ்சாப்-ஹ்ரியான கிராமங்களைப்போல குருஷேத்திராவும் மெல்ல தனது கிராம முகத்தை இழந்து நகரமாகிக் கொண்டிருப்பது  அதன் வீதிகளில் தெரிந்தாலும், நகர் முழுவதிலும் சாலைச் சந்திப்புகளில் (*)     காணப்படும் அர்ஜுனன்சிலை, விஷ்ணுசக்கரம் தாங்கிய பகவானின் விரல், கீதையின் வாசகங்கள் பாதிப்பிக்கபட்ட பாறைகள் அந்த இடத்தின் பாரம்பரியத்தை அழகாகச் சொல்லுகிறது.
புனித கீதை பிறந்த இடத்தைப் பார்க்க எப்படி போகவேண்டும்?” என்ற நமது கேள்விக்கு அதற்கு 10கீமீ போகவேண்டும் -எங்களூரில்அதைத்தவிரவும் பார்க்கவேண்டிய பல முக்கிய இடங்களிருக்கிறது பார்த்து விட்டு அங்கே போங்களேன்  டைட்டான ஜீன்ஸும்,முழுக்கை சட்டையும் அணிந்திருந்த அந்த பஞ்சாபி பெண் சொன்ன போது முகத்தில் சொந்த மண்ணின் பெருமை தெரிந்தது.
அவர் தந்த பட்டியலில் முதலிடம் இந்த தீர்த்தம்.(*)  1800 அடிநீளம் 1800அடி அகல பரப்பில் பறந்து விரிந்திருக்கும்  இந்த பிரம்மஸரோவரைப் பார்த்து பிரமித்து நிற்கிறோம். சரியாகத்தான் பெயரிட்டிருக்கிறார்கள்.(ஸ்ரோவர்என்றால் கடல்.)நீண்ட படித்துறைகள் அகன்ற பாதை, உடைமாற்றிக்கொள்ள வசதியாக கட்டப்பட்ட மண்டபங்களால் இணைக்கப்பட்ட  சுற்று புற பிராகாரம் அதன் மேல் தளத்திற்குப் போக படிகள்  அங்கே வசதியாக உட்கார்ந்து இந்த அழ்கான அமைதிக்கடலை ரசிக்க ஆசனங்கள் எல்லாவற்றிக்கும்மேல் பளிச்சென்ற பராமரிப்பு. ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவுமிருக்கிறது. (*)கிரகணகாலங்களில் இங்கு நீராட பல லட்சம் பத்தர்கள வருகிறார்கள் என்ற தகவல் பிரமாண்டத்திற்கான காரணத்தைப் புரிய வைத்தது. தீர்த்தின் நடுவே ஒரு சிவன் கோவில். தீவாகயிருந்த இதற்கு  இப்பொது எளிதில் போக ஒரு சின்ன பாலம். ஏரியில் நீர் ஏறினாலும் உள்ளே நீர் புக முடியாத வகையில் அமைக்கபட்டிருக்கிருக்கும்  அழகிய அந்த சின்னஞ்சிறு கோலில்  பெரிய நீர் பரப்பில் மிதக்கும் சின்ன படகைப்போலிருக்கிறது.
இந்த புனித நீராடுமிடம் நகரின் நடுவிலிருப்பதால் விழாக்காலங்களில் மட்டும்  வாகனங்கள் பயன் படுத்த கரைகளை இணைத்து கட்டப்பட்டிருக்கும் அந்த பெரிய பாலத்தில், நீர்பரப்பைத்தழுவி வரும் குளிர்ந்த காற்றில் நடந்து மறுபுறம் வரும் நம்மை தாக்கும் மற்றொரு ஆச்சரியம்  அங்கே கம்பீரமாக நிற்கும்  பிரமாண்டமான  அந்த வெண்கல சிற்பம். குழம்பிய முகத்துடன் நிற்கும் அர்ஜுனன்,  வலது கரத்தில் குதிரைகளின் கடிவாளங்களை லாகவமாக பிடித்தபடி முகத்தை சற்றே திருப்பி அவருடன் பேசும் கண்ணண், சிறீப் பாய தாராகயிருக்கும் குதிரைகள் என்று ஒவ்வொரு அங்குலத்திலும்  உயிரோட்டத்தைக் காட்டும் அந்த பிரமாண்டமான கீதாஉபதேச காட்சி சிற்பத்தின் செய்நேர்த்தி நம்மை அந்த இடத்திலியே கட்டிப் போடுகிறது.. ஓடத் துடிக்கும் நான்கு குதிரைகள் காட்டும்  வெவ்வேறு முக பாவனைகள்,  பறக்கும்கொடிதாங்கிய ரதத்தின் குடையின் முகப்பில் சிறிய ஆஞ்னேயர் உருவம்,குடையிருந்து தொங்கும் சிறுமணிகள்(*) போன்ற சின்னசின்ன விஷயங்கள் கூட நுட்பமாக வடிக்கப்பட்டிருப்பதில் உருவாக்கிய கலைஞர்களின் ஆத்மார்த்தமான உழைப்பை உணருகிறரோம்.. எத்தனைபேர், எத்தனை நாட்கள் உழைத்தார்களோ. என்று வியக்கிறோம். (*)அந்த வாளகத்தைவிட்டு வெளியே வந்து நடக்கும்  வீதி முழுவதும் பல அறக்கட்டளைகள் நிறுவியிருக்கும் கீதா மந்திர்கள். அம்புப்படுக்கையில் கிடக்கும் பிஷ்மருக்கு தன் பாணத்தல் அர்ஜுனன்,  நீலத்திலிருந்து நீர் வழுங்கும் காட்சியையும், தன் குருதியாலேயே  முதியவருக்கு கர்ணன்   தானம் தரும் காட்சியையும் சிலைகளாக்கி முகப்பில் நிறுத்தியிருக்கும்  அந்த பிர்லா அறக்கட்டளையின் மந்திருக்குள் நுழைகிறோம்.(*) நிறுவிய காலகட்டதில் நவீன மாகயிருந்திருக்கும் நகரும் பொம்மைகளாலான மாஹபாரதகாட்சிகள் இன்று பொலிவிழந்தும் செயலிழந்துமிருக்கிறது.
இவ்வளவு பெரிய அறக்கட்டளை இதையேன் கவனிக்காமல் விட்டிருகிறார்கள் என்று எண்ணிய படியே நகரின் நடுவேயிருக்கும் அந்த உயரமான பெரிய  சிலிண்டர் வடிவ கட்டிடத்திலிருக்கும் ஸ்யன்ஸ் செண்ட்டருக்குள்நுழைகிறோம்.(*) முதல் தளத்தின் வட்ட சுவர் முழுவதிலும் தரையிலிருந்து மேற்கூறைவரை வரை 35அடி உயர பாரதப்போரின் காட்சிகள் முப்பரிமாணசித்திரமாக நிற்கிறது. ஓளியமைப்பு, தொலைவில் ஒலிக்கும் மரண ஒலங்கள் மெல்ல கேட்கும் கீதை, சுற்றியிருக்கும்  அந்த 18 நாள் போர்காட்சிகள்,எல்லாம்  நடுவில் நிற்கும் நமக்கு ஒரு போர்களத்திலிருக்கும்.உணர்வை எழுப்புகிறது. அந்த சூழ்நிலைதரும் மனஅழுத்தம் அந்த தரமான ஒவியங்களை ரசிக்க முடியாமல் செய்கிறது.
தரைத்தளத்திலிருக்கும் அந்த கருவூலத்தைப் பார்த்தபின் தான் பாண்டவ, கவுரவர்களின் மூதாதையர்களான குரு வம்சத்தினரரின் முதல் அரசர் தவமிருந்து வரம்பெற்று உருவாக்கியது தான் பரத நாடு, குருஷேத்திற்கு வந்த சீன யாதிரிகர் யூவான் சூவாங் தனது குறிப்பில் இந்த நகரைப் புகழ்ந்திருப்பதும், இந்த இடம் முகமதியர், சீக்கியர்  புத்த மத்தினருக்கும்  முக்கியமான வழிபாட்டுதலம், கெளதம புத்தர், குரு கோவிந்தசிங், வந்திருக்கிறார்கள், போன்ற பல வியப்பான தகவல்களை அறிந்து கொள்கிறோம்.
நகரில் 300மேற்பட்ட கோவில்களிருப்பதைவிட ஆச்சரியம் அவற்றில் தினசரி வழிபாடு நடைபெறுவதுதான், புனிதமான் கீதைபிறந்த இடத்தைப்பார்க்க பயணத்தை தொடரரும்  வழியில் நாம் நிற்கும் இந்த பத்திரகாளிகோவில் தான் மிகமிக பழமையான சக்திபீடம். கிருஷ்ணரே வழிபட்டதாக அறியப்பட்டது. வேண்டிக்கொண்டபடி போரில் வெற்றி அருளியதால் பாண்டவர்கள் தங்கள் குதிரைகளையே அன்னைக்கு காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள்.இன்றும் வேண்டுதல் பலித்தால் பத்தர்கள் சிறிய மண்குதிரை பொம்மையை காணிக்கையாக படைக்கிறார்கள். சன்னதியில் மலர்ந்த தாமரையில் நிற்கும் ஒரு தூண்டிக்கப்பட்ட கால், தேவியின் உடல் வெட்டி வீசப்பட்டு விழுந்தஇடங்கள் எல்லாம் சக்திபீடங்கள் என்றும் இங்கு விழுந்தது கால் என்றும் அறிகிறோம்.(*) இப்படி தனியாக அங்கம் மட்டும் வேறுஎங்காவது பூஜிக்கப்படுகிறதா என எண்ணிக்கொண்டே பயணத்தைத் தொடர்கிறோம்.
அறுவடைமுடிந்து காய்ந்து கிடக்கும் நிலங்களையும் குடிசை  வடிவில் அடுக்கபட்டிருக்கும் வைக்கோல் போர்களையும், நகரநாகரிகத்தின் நிழல்படாத சில அசலான ஹ்ரியானா கிராமங்களையும் கடந்து நாம் வந்திருக்குமிடம் ஜ்யோதிஷர்.     
 மாங்கனி வடிவத்தில் பச்சை வண்ணத்தில் நீர் நிறைந்த ஒரு குளம். ஒரு புறத்தில் அல்லி பூத்திருக்கிறது, அதன் ஒரு கரையில் வழவழப்பான தரையுடன் பெரிய அரை வட்ட மேடை..அகலமான படிகள். நடுவே  வலையிட்டு மூடிய ஒரு ஆலமரம்.(குளத்தில் அதன் இலைகள் விழாமலிருக்கவும் பறவைகள் வந்து அமைதியைக்குலைத்து விடாமலிருக்கவும்) மரத்தைச் சுற்றி   வெண்சலவைக்கல் மேடை. அதன் மீது  கண்ணாடி கதவிடப்பட்ட சிறு மண்டபம்.உள்ளே சலவைக்கல்லில்  கீதா உபதேசகாட்சி. மலர்கள் பரப்பிய  தரையில் எரியும் ஒற்றை அகல். மரத்தின் அடியில் நடப்பட்டிருக்கும்  சிறு கல். கொண்டுவந்த சிறு கீதைப்புத்தகங்களை மரத்தின் அடியில்வைத்து பூஜிப்பவர்கள்.சற்றுதொலைவில் அமர்ந்து கீதை வாசிப்பவர்கள். தியானம் செய்பவர்கள். சன்னமான  ஒலியில் ஸ்லோகம். என அழகான அந்த இடம் ஒரு தெய்வசன்னதியைப்போல இருக்கிறது. கீதையின் முதல் ஸ்லோகத்தின் முதல் வரியில் சொல்லபட்டிருக்கும்தர்மஷேத்திரம்இதுதான். இந்த குளமும். ஆலமரமமும் தான் நடந்த பாரதப்போருக்கும், பஹவான் கிருஷ்ணர் அர்ஜுனனக்கு கீதையை உபதேசித்தற்குமான சாட்சி.. அந்த மரத்தின் விழுதுகளில்   வழித்தோன்றலாக எழும் மரங்களை பலஆயிரமாண்டுகளாக போஷித்து பாதுகாத்துவருகிறார்கள். தொடர்ந்து  பராமரிக்கபடும் குளத்தையும், மரத்தையும் தரிசிப்பதை புண்ணியமாக கருதி வருபவர்களுக்கு, அருகிலேயே கீதைபிறந்த கதையை  தினசரி இரவில் ஒலி,ஒளிக்காட்சியாக   காட்டுகிறர்கள்(*)
ஒருபுறம் ஆராய்ச்சியாளார்கள் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தை  நிருபிக்க சான்றுகளைத் தேடி சர்ச்சை செய்துகொண்டிருப்பதையும், மறுபுறம் காலம் காலமாக செவிவழிசெய்தியாகச் சொல்லபட்ட இந்த  சாட்சிகளே தெய்வமாக மதிக்கபடும் வினோதத்தையும்  என்ணிக் கொண்டே திரும்புகிறோம்..   கீதை எப்போது சொல்லபட்டது என்பது நமக்கு முக்கியமில்லை.அதில் என்ன சொல்லபட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்என்ற விவேகானந்தர் எழுதியிருப்பது நினைவிற்கு வந்தது. எவ்வளவு அற்புதமான வாசகங்கள்.!




5

அழைத்து அருள் தரும் தேவி..


மெல்ல பனிவிலகி வெளிச்சம் பரவிக்கொண்டிருக்கும் அந்த காலைப் பொழுதில் அந்த இடம் மிகபரபரப்காக இயங்கிக்கொண்டிருக்கிறது.இந்தியாவின் பலபகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் பலதரபட்டமக்கள், பெரும்பாலும் குடும்பங்கள்.எல்லோர் முகத்திலும் எதோ ஒரு எதிர்பார்ப்பு படிந்திருக்கிறது. எல்லா கோவில் நகரங்களைப்போல மொய்க்கும் சிறு வியாபாரிகள் கூட்டம், ஒலிபெருக்கியில் புரியாத அறிவிப்புகள். நம் அருகில்  இன்றைக்கு என்னவோ இவ்வளவு கூட்டம் நம் எல்லோருக்கும் பாஸ் கிடைக்கவேண்டிக்கொள்ளுங்கள்என பஞ்சாபியில் சொல்லுவது நமக்கு கேட்கிறது. ஜம்மூவிலிருந்து   50கீமி தொலைவிலிருக்கும் கத்ரா நகரின் பஸ் நிலையத்திருக்கருகே.  தேவி அழைத்தால் மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிட்டும்' என நம்பப்படும், ஆண்டுக்கு 50 லட்சம் பக்தர்களை ஈர்க்கும் வைஷ்னோ தேவி கோவிலுக்கு செல்ல அதன் முதல் கட்டமான கத்ரா நுழைவாயிலருகில் குவிந்திருக்கும் அந்த கூட்டதில் நின்றுகொண்டிருக்கிறோம்
இமயத்தின் மடியில், திரிக்கூட மலைச்சரிவில் 5200  அடி உயரத்திலிருக்கும் இந்த கோவிலுக்குப்போகும் பாதை இங்கிருந்து  துவங்குகிறது. இங்கு வழங்கப்படும் அனுமதிசீட்டு இல்லாமல் யாரும் மேலே போகமுடியாது. பக்தர்கள் இங்கு பதிவு செய்துகொள்ளவேண்டும் இலவசமாக வழங்கப்படும் இந்த அனுமதிசீட்டு பெற்றவர்களுக்கு 1லட்சம் ரூபாய் இன்ஷுயுரஸ் பாதுகாப்பு உண்டு.இந்த ரிஜிஸ்ட்டிரேஷன் சுவுண்ட்டர் கணணீமயமாக்பபட்டிருப்பதால். பிரமாதமாக நிர்வகிக்கிறர்கள் அதிகபட்சம் 22000  பேர் தான் மலையில் இருக்கமுடியுமாதலால்.தரிசனம் செய்துதிரும்பியவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக மட்டுமே  புதிய அனுமதி சீட்டுகள்  வழங்கபடுகிறது. அதனால் எப்போதும் கூட்டம் காத்திருக்கிறது. மூன்று இடங்களில் தீவிர சோதனைகளுக்குபின்  நடந்தோ, குதிரையிலோ. பல்லக்கிலோ போவதற்கு வசதியாக அமைக்கபட்டிருக்கும் அந்த 12 கீமீ   பாதையில் மலைப்பயணம் துவங்குகிறது. பெரும்பா¡லான இடங்களில் மேற்கூரையிடப்பட்டிருக்கும் அந்த நீண்ட பாதையில் தாத்தாவின் கைபிடித்து நடக்கும் பேரன்கள், அணிஅணியாகச்செல்லும் பக்தர் குழுக்கள். குடும்பங்கள். உரசிக்கொண்டு போகும்குதிரைகள் இவர்களுக்கிடையே  நாமும் மெல்ல செல்லுகிறோம். மலையில் பயன்படுத்தும் அத்தனைப்பொருட்களும் கிழிருந்துதான் போகவேண்டுமாதாலால் அவற்றை அனாசியமாக தூக்கிகொண்டு வேகமாகச் செல்லும் கூலிகளுக்கும் இதே பாதை தான். வழியில் சில சின்ன கிராமங்கள், கோவில் நிர்வாகத்தில் நன்கு பரமரிக்கபடும் போஜனலாய்ங்களில் மலிவான விலையில் சாப்பாடு ஓய்வெடுக்ககூடங்கள் என  பல வசதிகள்.. ஜம்மூவிலிருந்து இப்போது ஹெலிகாப்ட்டர் வசதியிருப்பது  என்ற விபரம் வழியில் பார்க்கும் அந்த ஹெலிபேட் மூலம் தெரிகிறது.பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை,,தொடர்ந்து செய்யப்படும் துப்பரவுபணி ஆகியவற்றால் பாதை முழுவதும்  படு சுத்தமாகயிருப்பது சந்தோஷத்தை தருகிறது. சிவ பெருமானை அடைய வேண்டி பார்வதி தேவி தன் உருவத்தை மறைத்து கடும்தவம் செய்ததும்,தவத்தை கலைக்க முயற்சித்த காலபைரவனை காளிவடிவம் எடுத்து அழித்ததாகவும் புராணம்.பிராதான கோவிலின் முகப்பிற்கு 1கீமீ தூரத்தில் சன்னதியில் தேவி தன்னை மூன்று  பிண்டிகளாக (சுயம்புக்களாக) தன்னைவெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.சிலைகளோ அல்லது மூர்திகளோ கிடையாது.எனவே கர்ப்பகிரஹத்தில் நுழைந்தவுடன்  அந்த பிண்டிகளை  கவனமாக பாருங்கள்என்ற அறிவிப்பு காணப்படும் அந்த இடம் பரபரப்பாகயிருக்கிறது. நீண்ட  6 மணி நேரப்பயணத்திற்குபிறகு கோவிலின் முகப்பிலிருக்கும் மிகப்பெரிய கூடம். இங்கு மீண்டும்   சோதனைகளுக்கு பின்னர் நமது அனுமதிசீட்டிற்கான குருப் எண்ணைப் பெற்று  வரிசையில் காத்திருக்கிருக்கும்போதுதான் கால்வலிப்பதை உணரமுடிகிறது. குளோஸ்சர்க்கூயூட் டிவியில்  காட்டப்படும் விபரங்களிலிருந்து எந்த குரூப் வரை சன்னதி வரை அனுமதிக்கபட்டிருக்கிறது என்பதுதெரிவதால் நமது முறைவரும் நேரத்தை கணக்கிட்டுகொண்டிருக்கிறோம்.
வரிசையிட்டுச்செல்லும் வழியின் இறுதியில் கண்னாடிசுவர்களாலான அறையில் கொட்டிக்கிடக்கும் கரன்சி நோட்டுகளும், காசுகளும் எண்ணப்பட்டுகொண்டிருக்கின்றன.,அதற்குஅருகில் வரிசையின் இறுதிக்கட்டம். சில மீட்டர் தூரத்தில் சன்னதி. மீண்டும் ஒரு சோதனை. சில காலம்முன்வரை தவிழ்ந்து செல்லவேண்டிய குகையாகயிருந்தை இப்போது பாதையாக மாற்றியிருக்கிறார்கள். நுழைந்தவுடன்   சில்லிடும் ஏசி அறை போல் மெல்லிய குளிர், காலடியில் கடந்துசெல்லும் சுனை நீர். வரிசை மெல்ல நகர்கிறது.


அந்த நீண்ட பாதையின் கடைசியிலிருக்கும் திருப்பத்தில் ஒரு சிறுகுகை அதில்தான் சன்னதி, அடுத்தவரின் கழுத்துஇடுக்குவழியாக பார்த்துகொண்டே அருகில் வந்தசில வினாடிகளுக்குள் அவசரபடுத்துகிறார்கள்.சரியாகபார்ப்பதற்குள் நமது தலையில் கையைவத்து (சற்று பலமாகவே) ஆசிர்வதித்து அனுப்பிவிடுகிறார்கள்.நுழைந்தமாதிரியே மற்றொரு நீண்ட பாதைவழியாக வெளியே வருகிறோம். கவலைப்படாதே! அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்என்று ஆங்கிலத்தில்   யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில்விழுகிறது.ஒரு வினோதமான உணர்வுடன் திரும்பும் பயணத்தை துவங்கும் நம்மிடம்    வழியிலுள்ள  காலபைரவர் கோவிலுக்கு போகவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார்  ஒரு பக்தர்.  அவரையும்தரிசித்துவிட்டு  மற்றோர்பாதைவழியாக  கத்ரா திரும்புகிறோம்.

கத்ராவிலிருந்து ஜம்மூவிற்கு  வந்து  நகரை சுற்றிபார்த்துக்கொண்டிருக்கும் போது  சாலை சந்திப்பில் கம்பீரமான அந்த  சிலை.நம்மை கவர்கிறது. அது 18ம் நூற்றாண்டில் பல சிறு ஜமீன்களை இணைத்து ஜம்மூகாஷ்மீர சம்ஸ்தானத்தை உருவாக்கிய ராஜா அமர் சிங் என்பதையும் அவரது அரண்மனை அமர்மஹால் நகருக்கு வெளியே இருப்பதையும் அறிந்து அதை பார்க்க செல்லுகிறோம்.  நகரின் வெளியே மரங்களடர்ந்தஒரு சிறிய குன்றின் மேல் பரந்த புல்வெளியின் நடுவே கம்பீரமாக பிரஞ்ச் பாணி கோட்டைவடிவில் ஒரு அரண்மனை.1862 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு கலைஞர்களினால் வடிவமைக்கப்பட்டு  தாவி நதிக்கரையில் ஒரு அழகான ஒவியம் போல நிற்கிறது. அதன் நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாததகா இருந்தாலும்,  காட்சி நாமிருப்பது காஷ்மீர் மாநிலம் என்ற நிதர்சனத்தைப் புரியவைக்கிறது
 அரச குடும்பத்தின் வழித்தோன்றலின் கடைசி வாரிசான முனைவர் கரன்சிங்(முன்னாள்மத்திய அமைச்சர்) இந்த அரண்மனையை கருவூலமாக மாற்றி தேசத்திற்கு அர்பணித்திருக்கிறார்.ஒரு அறகட்டளை நிர்வகிக்கும்  இதில் ஒரு நூலகம், ஓவிய காட்சி கூடம்.அரச குடும்பத்தின்  தலைமுறைகள் சேர்த்த   பலவையான  அற்புதமான ஓவியங்களும்  அழகாக காட்சியக்கபட்டிருக்கின்றன. தர்பார் ஹாலில் மன்னர் குடும்ம்ப படங்களைத்தவிர, மினியெச்சர் என்று சொல்லப்படும் சிறிய படங்களில் நள தமய்ந்தி சரித்திரம் முழுவதும். மார்டன் ஆர்ட் பகுதியில் தாசாவதரத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் கடவுளின் உருவமோ அல்லது மனித முகமோ இல்லாமல்   காட்சியாக்கியிருக்கும் ஒரு கலைஞனின் கைவண்னத்தைக்கண்டு வியந்துபோகிறோம். 60களில் பலரது வீடுகளை அலங்கரித்த ஜவஹர்லால் நேரு படத்தின் ஒரிஜினல் பிரதியை ரசித்துக்கொண்டிருக்கும்  நம்மை கைடு அடுத்த அறைக்கு அழைத்துச்சென்று காட்டியது மன்னர் பரம்பரையினர் பயன் படுத்திய சிம்மாசனம். 120 கிலோ தங்கத்தாலனாது என்ற தெரிந்த போது அந்த அரச பரம்பரையின் செல்வசெழிப்பும் தொடர்ந்த வந்த தலைமுறையின் பரந்த மனப்பான்மையும் புரிந்தது.முதல் தளத்தில் 25000புத்தகங்களுடன் நூலகம். புகழ்பெற்ற பெர்ஷ்ய கவிஞர்களின் கையெழுத்துபிரதியிலிருந்து இன்றய இலக்கியம் வரை கொட்டிகிடக்கிறது.
 மன்னர்கள் எழுப்பிய கற்கட்டிடங்களை விட செய்த நல்ல காரியங்கள்தான் உண்மையான நினைவுச்சின்னங்கள்என்ற வாசகம் நினைவிற்கு வந்தது,


               

6

தேவதாரு காடுகளின் தேவதைகள்

பசுமையான மரங்கள் அடர்ந்துபரவியிருக்கும் அந்த மலச்சரிவுகளுக்கிடையே மரகதப்பச்சை வண்ணத்தில் அமைதியாக அழகாக பரந்து விரிந்திருக்கும்  நைனிதால் ஏரியும் அதன் மீது  அமர்வதற்காக மெல்ல மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேக கூட்டங்கள் அழகான வண்ண பாய்மரப்படகுகளை   மறத்தும், காட்டியும்  ஆடும் கண்னமூச்சி  ஆட்டம் இங்கிருந்து பார்க்க மிக அழகாகயிருக்கிறது. அதன் ஒரு கோடியிலிருக்கும் நைனா தேவியின் கோவிலும் அதன் கொடியும் தெளிவாக தெரிகிறது அதன் அர்சகர் சொன்னதுபோல நைனிதால் ஏரி ஒரு கண் வடிவிலிருப்பது புரிகிறது. "இது மற்ற இந்திய கோடை வாஸஸ்தலம் போல பிரிட்டிஷ் காரர்களல்  கண்டுபிடிக்கபடவில்லை. இந்த பகுதி முழுவதும் இந்து மத புராணங்களுடன் சம்பந்தபட்டது, தெய்வங்களும், தேவர்களும் தேவதைகளும் வாழ்ந்த பூமி. 1000 கோவில்களுக்குமேலுள்ள மலத்தொடர்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  மன்னர் ஆட்சியில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த ஏரி பார்வதிதேவின் கண்விழுந்த இடம். அதனல் தான் நைனிதால் எனப்பெயர். 100 மைல் தூரத்தில் ஆதி ஜோதிலிஙமிருக்கிறது. போய் பாருங்களேன்." என்று அந்த அர்ச்சகர் சொன்னதைத்
தொடர்ந்து சேகரித்த தகவல்களில் புரிந்துகொண்ட விஷயம்- உத்திரபிரேதசத்திலிருந்து பிரித்து உருவாக்கபட்ட இந்த உத்திராஞ்சல்  மாநிலத்தின் இந்த மலைப்பகுதி ஒரு சுற்றாலத்தலமட்டுமில்லை, புராதன புண்ணிய பூமி என்பது.   12 ஜோதி லிங்ககளில் ஒன்றான ஜோகிஸ்ஹ்வரை தரிசிக்க் போய்க் கொண்டிருக்கிறோம். ஒரு மாநிலத்தலை நகர் என்ற எந்த பந்தாவும் இல்லாத அந்த சின்னஞ்சிறிய ஊரின் நடுவே இருக்கும் நைனிதால் ஏரியின் கரையில் ஒருபுறம் தான் சாலை. அது மக்கள் நடக்க மட்டுமே.வாகனங்களுக்கு அனுமதியில்லை.நடக்கமுடியாதவர்களுக்கு  சைக்கிள் ரிக்ஷா.அதற்கு Q வில் நின்று டோக்கன் வாஙகவேண்டும். (பீரிப்பெய்டு சைக்கிள்ரிக்ஷாக்கள்!.  வாகனங்களக்கு  என ஒதுக்கபட்ட  ஒரு வழிபாதையில் கட்டணம் செலுத்தி (மாலை நேரங்களில் இரட்டிப்பு     கட்டணம்) இதனால் நகரை ஒரு சுற்று சுற்றி கிளம்பிய இடத்தினிருகிலிருக்கும் பாதைக்கே மீண்டும் வந்து       பயணத்தை துவக்கிறோம். வழியில்  தூரத்தில் மலையிருக்கும்  மிருககாட்சிசா¨யின் ZOO என்ற ராட்சத  பெயர்பலகை அடர்ந்த மரங்களுக்கிடையே பளிச்சென்று தெரிகிறது. இந்தமலை வாஸஸ்தலத்தில் ஒரு ஜுவா? என     ஆச்சரியத்துடன் உள்ளே போன நமக்கு மேலும் பல ஆச்சரியங்கள். இயற்கையான வனச்சூழலில் அமைந்துள்ள அந்த அழகிய பூங்காவில் அபூர்வமான விலங்குகள்.  இந்தியாவில் பார்க்கமுடியாத பனிலைக்காடுகளில்
மட்டுமே காணமுடியும் சைபீரியன் புலிகள், பனிகரடிகள் எல்லாம் கம்பீரம்மாக நம்மைப்பார்த்து சந்தோஷப்பட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறது. என்ன-பார்க்க ஒரு 200 படி ஏற வேண்டும்  படி இருக்குமிடத்திற்கு நிர்வாகம் அழைத்துப்போகும் ஜீப்பில் 5கீமீ போகவேண்டும் அவ்வளவுதான்.

வளைந்து, வளைந்து செல்லும் மலைப்பாதை, இதமான குளிர் சாலையின்  இரண்டுபுறமும்   பளபளக்கும்  பச்சை பட்டாடை விரித்ததுபோல பசுமையான காடு. பார்க்குமிடமெல்லாம் நின்தன் பச்சைநிறம் தோன்றுதடா என பாடவைக்கிறது. சிறு சிறு மலை கிராமங்களை கடந்துபோய்க் கொண்டிருக்கும் நம்மை அருகில்  பள்ளதாக்கில் தெரியும் ஒரு கிராமம் சட்டென்று கவர்கிறது.
அல்மெடா (ஆங்கிலத்தில் அல்மோரா என எழுதுகிறார்கள்) என அறிவிக்கும் வரவேற்பு பலகையின் அருகில் ராமகிருண மடத்து இலச்சினையுடன் ஒரு சிறிய போர்டு. ஆச்சரியப்பட்டு விசாரித்து மெல்ல அந்த மலைச்சரிவில் இறங்கினால்..
அழகான பள்ளத்தாக்கை எதிர் நோக்கி  எளிமையான கட்டிடங்களுடன் அமைக்கப்பட்ட ஆஸ்ரமம். மற்ற ஆஸ்ரமங்களைப்போல அமைதியும்,அழகும் மிளிரும் வழிபாட்டுகூடம். புத்தகங்களும், ராமகிருஷ்ண மடத்தலைவர்களின் பெரிய படங்களும் நிறைந்த அந்த தலைவரின் அறையின் ஜன்னல்கள் வழியே தெரியும் பள்ளதாக்கு ஒரு ஒவியம் போலிருக்கிறது. காத்திருக்கும்,  முன்பின் தெரியாத நம்மை கனி¢வுடன் வரவேற்ற தலைவர் நமக்கு உணவு அளிக்கவும்  ஏற்பாடு செய்யதைவிட ஆச்சரியமானது அல்மோடா பற்றி ஸ்வாமிஜி தெரிவித்த பல தகவல்கள்.   பேச அழைக்கபட்ட சுவாமி விவேகானந்தர் இந்த இடம் தியானசெய்ய சிறந்த இடம்
என தேர்ந்தெடுத்து மட நிறுவ ஏற்பாடு செய்து அதற்காக அல்மோடாவிற்கு இரண்டுமுறை வந்திருக்கிறார்.அண்ணல் காந்திஅடிகள் இந்த அருமையான இடத்தைவிட்டுவிட்டு நம் மக்கள் ஏன் ஐரோப்பாவிற்கு போகிறார்கள் என எழுதியிருக்கிறார் நேரு அன்னிய ஆட்சியில் இங்குள்ள சிறையில் சிறை வைக்கபட்டிருக்கிறார். தாகூர் பல கோடைகாலங்களில் தங்கி நிறைய எழுதியிருக்கிறார். நடன மேதை உதய்சங்கர் இங்கு திறந்தவெளி நடன அரங்கம் நிறுவியிருக்கிறார்.இசைமேதை பண்டிட் ரவிசங்கர் இந்த ரம்மியமான சூழ்நிலையில் புதிய ராகங்களை உருவாக்கியிருக்கிறார். - இப்படி பல தகவல்களை  தந்து,
நாம் பார்த்துகொண்டிருக்குமிடம் அழகானதுமட்டுமில்லை வரலாற்று முக்கியமானது என்பதை புரியவைக்கிறார். 5000அடி உயர்த்தில் ஓரு மாவட்ட தலைநகரமாக உருவாகியிருக்கும் இது  அண்டைய மலைப்பகுதிகளின் விளைபொருட்களான பலவகை பழங்களுகான பெரிய மார்க்கெட்டாகி வருகிறது.  சாலை ஒரக்கடைகளில் கூட  இதுவரை நாம் பார்க்காத பல பழங்கள் மலிவாக கிடைக்கின்றன. ஆண்டு முழுவதும் 18வகை பழங்கள் கிடைக்குமாம்.

மெல்ல முடிய பனிமேகங்கள் சட்டென்று விலகி பளிச்சென்று வெய்யில் தாக்கும்  ஒரு வினோதமான வானிலையில் பயணத்தை தொடர்கிறோம். வழிநெடுக சிறிதும் பெரிதுமாக கோவில்கள். உள்ளுர் காவல் தெய்வங்களலிருந்து சிவபெருமான் வரை பலவிதமான கோவில்கள். அதில் ஓன்று சிட்டை என்ற இடத்திலிருக்கும் கொலுதேவதா கோவில் வித்தியாசமாக இருக்கிறது.  நுழைவாயில், பாதை,
மேற்கூரை கோவிலின் தூண்கள் மரங்கள் என்று எங்கு பார்த்தாலும் பெரிய,சிறிய மணிகள் கொத்துகொத்தாக தொங்குகிறது. விசாரித்ததில் நீதி தேவதையான அந்த தேவியிடம் கோர்ட் வழக்கு விவகாரங்கள்,வசூலிக்கமுடியாதகடன்,நிறைவேராத ஒப்பந்தங்கள் போன்றவைகளின்,    நகலுடன்  ஒரு சிறிய மணியை இனைத்து கட்டி, நல்ல முடிவு வேண்டி பிரார்த்தித்து, வேண்டுதல் நிறைவேறியதும் பெரியமணிகட்டுவதாக வேண்டிக்கொள்கிறார்கள் என்று தெரிந்தது. கோவில் வாசலில் பிராசாதப்பொருட்களுடன் சிறிய பெரிய மணிகள் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். அதிக அளவில் கட்டப்பட்டிருக்கும் பெரிய மணிகளின் எண்ணிக்கையிலிருந்து  கோவிலின் கூட்டத்திற்கான காரணம் புரிகிறது.  இந்த கோவிலினால் நீதிமன்றத்திற்கு வெளியே முடிக்கபடும் வழக்குகள் அதிமாகியிருக்கிறதாம்.

பல சரிவுகளையும் ஏற்றங்களையும்  கொண்ட அந்த 35 கீமி மலைச்சாலையைக் கடக்க 2மணி நேரத்திற்கு மேலாகிறது. சந்தன காடுகளுக்கே உள்ள மணம் நாசியைத்தாக்குகிறது. அடர்த்தியாக ஒங்கி வளர்ந்திருக்கும் தேவதாரு மரங்களும் வீசும் குளிர்ந்த காற்றும்  அதிக உயரத்திற்கு    வந்துவிட்டதை உணர்த்துகிறது.

இங்கிருந்து ஜோகேஷ்வர் வளாகம் துவங்கிறது என்ற தொல்பொருள் துறையினரின்அறிவிப்புடன் நம்மை வரவேற்கிறது செக்போஸ்ட்.   நூற்றாண்டுகளில் பல காலகட்டங்களில் எழுப்பட்டதாகவும்  முக்கியமான ஜோதிர்லிங்கம் இருக்கும் பெரிய கோவில் 3கிமி தொலைவில் இருப்பதாக சொல்லும் அந்த குறிப்பைப்பார்த்துவிட்டு பயணத்தை தொடர்கிறோம்
சட்டென்று திரும்bபிய ஒரு திருப்பத்தின்  பள்ளத்தாக்கில் பசுமையான தேவதாரு மரங்களின் பின்னணியில் சிறிதும், பெரிதுமாக கும்பலாக பல கோவில்கள். சதுரமானகீழ்பகுதியாக துவங்கி,நுழைவாயிலைத்தவிர வேறு எந்த திறப்போ மாடமோ இல்லாமல் இறுக்கி அடுக்கிய கல்கோட்டையாக உயர்ந்து கோபுரமாக குவிந்த உச்சியின்  மீது மரத்தால் செய்த சிறிய மண்டபத்தை தொப்பியாக அணிந்திருக்கும்  ஒரு பெரிய கோவில். அதேவடிவத்தில் சிறிதும் பெரிதுமாக அருகருகே பல கோவில்கள்.வேகமாக நடந்தால்  இடித்துக் கொள்ளு மளவிற்கு நெருக்கமாக பல குட்டி(100கும்மேலிருக்கும்)கோவில்கள்.  அருகே சென்றதும் ஒரு கிராமத்திருவிழாவிற்குள் நுழைந்த உணர்வு. விழாக்காலமானதால் கோவிலிருக்கும்
சாலையில் மலை வாழ்மக்களக்குகாக அரசு அமைத்திருக்கும் பொருட்காட்சி தான் காரணம் என்று புரிகிறது. அன்று பிரதோஷ நாளானாதால் உள்ளுர்/வெளியூர் கூட்டம்.
கோவில் தொல்பொருள் சின்னம் என அறிவிக்கபட்டிருந்தாலும் பூஜைகள் உண்டு. பிரதான கோவிலில் ஜோகெஷ்வர் சுய்ம்புவாக எழுந்த லிங்கம். தரையிலிருந்து 2அடி உயரமிருக்கும் மூர்த்தியைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் பக்தர்கள் பொறுமையுடன்         கர்ப்பககிரத்தில்         உட்கார்ந்திருக்க, பளபளக்கும் ஆரஞ்சு வண்ன உடையில் அர்ச்சகர் வந்தமர்கிறார். பாலில் தோய்த்த அரிசி தேவதாரு இலைகளுடன் அரளிப்பூ எல்லோருக்கும் தருகிறார்.
அபிஷகம் முடிந்ததும் மெல்லிய்ய குரலில் உள்ளூர் மொழியில் ஒரு ஸ்லோகம் சொல்லுகிறார் இடையிடையே அவர் அர்சிக்கும்போது நாமூம் அர்ச்சிக்கிறோம்.  முடிவில் தீபாரதனை.     பூஜைக்கு கட்டணம் விஐபி தரிசனம் எதுவும் கிடையாது. நம் அருகிலிமர்ந்து பூஜை செய்தவர் உயர்மன்றநீதிபதி என்பதை வெளியில் வந்தபின்  அவருக்குள்ள பாதுகாப்பை பார்த்தபின்தான் தெரிந்துகொள்கிறோம்.
அருகில் ஒரு சின்ன குன்றின் மேல் குபேரனுக்கு ஒரு கோவில். மூர்த்தி லிங்க வடிவிலிருக்கிறார். வாயிலில் வேண்டியவர்களுக்கு செல்வம் சேரும்என எழுத பட்ட வாசகங்கள். அருகிலுள்ள ஜோகேஷ்வருக்கு அவ்வளவு கூட்டமிருந்தும் ஏன் இங்கு அதிகமில்லை என்ற நமது கேள்விக்கு அந்த அர்ச்சகர் தந்த பதில் பற்றி சிந்திதுக்கொண்டே நைனிதாலுக்கு திரும்பும் பயணத்தை துவக்கிகிறோம். வேடிக்கைக்காக சொன்னதோ அல்லது வேதனையில் சொன்னதோ நம்மை சிந்திக்கவைத்த அந்த வார்த்தைகள்
"செல்வம் சேர்ந்தால் பிரச்சனைகள் வரும் பிரச்சனைகளினால் வேதனை உண்டாகும் என்பதால் தேடிப்போய் வேண்டி வேதனையை வாங்கிக்  கொள்வானேன் என்று பலர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்"

               



7

இமயத்தின் மடியில் (1)


இருள் பிரிந்துகொண்டிருக்கும், சற்று அதிகமாக குளிர் தாக்கிகொண்டிருக்கும் அந்த விடிகாலைப்பொழுதில்  ரிஷிகேஸிலிருந்து துவங்கியது அந்த பயணம்.   சிறிய மலைச்சாலையில் செல்லும்போது மெல்லிய வெளிச்சத்தில் கடலாய் பறந்திருக்கும் கங்கையும் லக்‌ஷமண் ஜுலா பாலமும் தெரிகிறது. முந்திய நாள் மாலையில் ஹரித்துவாரில் பார்த்த  அழகான கங்கா ஆர்த்தி காட்சி இன்னும் மனதில் நிறைந்திருக்க  அந்த வேனில் பத்ரி நாத்க்கு பயணபட்டிருக்கும் அனைவரும் ஏதோ பிராத்திக்கொண்டிருக்கிறார்கள்.  குறுகிய கொண்டை வளவுகள் நிறைந்த பாதையில் 3 மணி நேர பயணத்தில் 70 மைல் சென்ற பின் நின்ற இடம் தேவபிராயக் என்ற சின்னஞ்சிறிய மலைகிராமம். மைல்கல் 2700அடி உயரம் எனபதைச்சொல்லுகிறது.  அங்கிருந்து  மலையின் கிழே பிரமாண்டமான இரண்டு  நதிகள் இணையும்  ரம்மியமான காட்சி அந்த காலை வெய்யிலில் பளிரென்று தெரிகிறது. உடனே அருகில் போக மனம் துடிக்கிறது.  அலக்நந்தா நதியும்  பாகீரதி நதியும்  ஒரே நதியாக இணைந்து  “கஙகையாவது இந்த இடத்தில்தான். கங்கோத்திரியில் கங்கை உற்பத்தியானாலும் கங்கையாக அழைக்கபடுவது இங்கிருந்துதான். கடல் கரும்பச்சை நிறத்தில் பாகீரதியும்,  இளம் செம்மண் நிறத்தில்  சீறிப்பாயும் அலக்கநந்தாவின் நிறங்கள் துல்லியமாக வேறுபட்டும், இணைந்தபின் இரண்டுமில்லாத ஒரு புதிய வண்ணத்தில் கங்கையாக ஒடுவதும் கண்கொள்ளா காட்சி. அரைமணி பயணதிற்கு பின்னர்  நதிக்கு  அருகிலிருக்கும் பாதைக்கு செல்லுகிறது வேன்.  சரிவான மண்பாதைக்குபின்  சில படிகளை தொடர்ந்து சரியாக பராமரிக்கபடாத பாதையின் முடிவில் மிக சிறிதாக ஒரு மேடை. பயப்படுபவர்களும்,  ரத்த அழுத்தம் அதிகமிருப்பவர்களும் குளிக்கமுயற்சிக்க வேண்டாம் என்றும். துணிந்து குளிக்கவிரும்புவர்கள் தங்கள் பொறுப்பில் செய்யலாம் என்றும் சொல்லபட்டிருந்த்தது.  கான்கீர்ட் சுவரில் பொறுத்தபட்டிருக்கும் சங்கலியை பிடித்த வண்ணம் இரண்டு நதி மாதாக்களும் சேருமிடத்தில் துவங்கிய  அந்த குளியல் முதல் நிமிட பயம விலகியபின்   சந்தோஷமான, வாழ்நாள் முழுவதும் நினைத்தாலே  உடல் சிலிர்க்கும் ஒரு இனிய அனுபவம். சில அடிகள் காலை நகர்த்தினாலே இரண்டு நதிகளின் வெவ்வேறு வேகங்களை உணர முடிகிறது.  மறு கரையில் அழகிய படிகளுடனும் துறையுடனும்  தெரியும் ஒருகாவிவண்ண கோவில். ரகுநாத்ஜி கோவில் என்றார்கள். அதிலிருந்து எழும் மணிஓசை துல்லியமாக கேட்கிறது. நதியிலிருந்தே அந்த கோவிலை நோக்கி  வணங்கி பிரார்த்தித்த பின் பயணத்தை  தொடர்கிறோம்.  நாள் முழுவதும் நீண்ட பயணம்.  இமயமலைத்தொடரின் ஒரு பகுதியான நர- நாராயணபர்வதங்களின் மடியில் இருக்கிறது பத்திரிநாதர் கோவில். 108 திவ்வியதேசங்களில் ஒன்றான இதை அங்கு 7ம் நூற்றாண்டில் ஆதிசங்கரால் நிறுவினார் எனகிறது வரலாறு.  இமயமலைச்சாரலில் இருக்கும் 4 முக்கிய கோவில்களில் (கங்கோத்திரி,யமுனோத்திரி கேதார் என்ற சார் தாம்) ஒன்றாக கருதப்படும் இந்த கோவில் ஆண்டுக்கு 6 மாதம் மட்டுமே மே முதல் நவம்பர் வரை திறக்கபட்டிருக்கும்.  ஒவவொரு ஆண்டும் திறக்கும் மூடும் நாட்கள் நிர்ணயக்கபட்டபின் அறிவிக்கப்டுகிறது. 11000 அடிஉயரத்திலிருக்கும் இந்த கோவிலுக்குதான் இப்போது போய்கொண்டிருக்கிறோம்.  மாறி மாறி சாலையின் இரண்டுபக்கங்களிலும் வளைந்து நம் கூடவே வரும் அலக்நந்தா நதியையை ரசித்துகொண்டிருக்கும் நமக்கு  சட்டென்று தாக்கும் குளிர் மலையின் உயரத்தை  சொல்லுகிறது.  வேனிலிருந்து இறங்கியவுடன் சட்டென்று சென்று நம் கண்ணில் படுவது  பளீச்சிடும் நீலகண்ட் பனிச்சிகரம் தான். நாம் கற்பனைசெய்ததிருந்தற்கு முற்றிலும் மாறாக  மிக குறைவான உயரத்தில்    கண்ணை உறுத்தும் அழுத்தமான பல வண்ணங்களிடப்பட்ட  நீளமான கட்டிடமாக இருக்கிறது கோவில்.  அதன் முன்னே ஒரு சிறிய பாலம், அடியில்  பாய்ந்து செல்லும் அலக்நந்தா.
பாலத்திற்கு நுழையும்முன் பக்கவாட்டில் தப்த்குண்ட்,சூரியகுண்ட்என்ற இரண்டு வெந்நீர் சுனைகள்.   பனிசிகரங்கள் நிறைந்த மலைகளின் மடியில் இயற்கை தந்திருக்கும்     ஆச்சரியம் இது. ஆவி பறக்க கொதிக்கும் நீர், ஊற்றாக வந்துகொண்டேயிருக்கிறது.  (55டிகிரிc) குளிருக்கு இதமாக இருந்தாலும் அதிக நேரம் குளிக்க்காதீர்கள் என்று சொல்லுகிறார்கள். சோப்பு, எண்ணை பயன்படுத்தி இந்த புனித நீரை பாழ் செய்யாதீர்கள் என்ற அறிவிப்பையும், ஆனால் அதன்கீழேயே அதை பயன்படுத்தபவர்களையும் பார்க்க நேர்ந்தது. ஏன் தான்  நம்நாட்டில் மட்டும்  எல்லா பகுதியிலும் இப்படி பட்ட மனிதர்கள்  தவறாமல் இருக்கிறார்களோ.?
பாலத்தினை கடந்து  போய் பல படிகள் ஏறிப்போனால் கோவிலின்  நுழைவாசல்.  கடந்து உள்ளே செல்லும் வழியில் இரு புறமும் சாய்ந்துகொள்ளும் வசதியான  நாற்காலிகளில் ஸ்வெட்ட்ர், கோட், குல்லாய் அணிந்த அமர்ந்திருந்த  நான்குபேர் ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கூர்ந்து கவனித்ததில் அது விஷ்ணு சகஸ்ரநாமம் என புரிகிறது. கணிரென்ற எம்எஸ் அம்மாவின் குரலில்  ராகத்தில் மட்டுமே கேட்டு பழகிவிட்ட நமக்கு அது வித்தியாசமாகவும் பக்திக்குள்ள கம்பீரத்துடன் இல்லாது போல தோன்றுகிறது. ஒரு மண்டபத்தை கடந்து உள்ளே சன்னதியில் மிக சிறிய  அளவில் மூலவர் மூர்த்தி. பத்திரிநாராயணர். மூன்று அல்லது நாலுஅடி உயரம் தானிருக்கும். மிக அபூர்வமான கறுப்பு சாளகிராமத்தில் செதுக்கபட்டது. பெருமாள் பத்மாஸானத்தில்  தியானத்திலிருக்கிறார். இது இப்படி சிலைவடிவிலேயே ஆதிசங்கருக்கு அலக்நந்தாவில் நீராடும்போது கிடைத்ததாகவும் அதை தப்தகுண்ட் அருகே ஒரு குகையில் நிறுவி அவர் பூஜை செய்ததாகவும் பின்னர் மனார்கள் எழுப்பிய இந்த கோவிலில் எழுந்தருளியிருப்பதாகவும்  ஸ்தலபுராணம். கர்ப்பகிரஹத்தில், நர நாரயாணர், மண்டியைட்ட நிலையில் நாரதர், கருடர், குபேரர் வெள்ளியில் ஒரு பிள்ளையார் எல்லாம்.  சற்று சிரமபட்டால் தான் எல்லோரையும் தரிசிக்கமுடியும். நடக்கும் பூஜையை வெளியே தர்ஷன் மண்டபத்திலிருக்கும் ஒருவர்  மைக்கில் ஹிந்தியில் விளக்கி  சொல்கிறார். அது கார்வாலி கலந்த ஹிந்தியாக இருப்பதால் புரிந்து கொள்வது  சற்று சிரமமாகயிருக்கிறது.  சிறிய பிரகாரம் சுற்றிவரும்போது சனனதி தங்க கூரையிடபட்டிருப்பது தெரிகிறது.
கர்ப்பகிரஹத்தில் பூஜை செய்பவர் நம்பூதிரி. பிரம்மச்சாரி. 8ம் நூற்றாண்டில சங்கராச்சாரியார் துவக்கியதிகிருந்து பல நூறாண்டுகளாக தொடரும் சம்பிராதயம் இது. கார்வார் மன்னரும் திருவனந்தபுரம்ன்னரும் தேர்ந்த்தெடுக்கும் இவரை ராவல் மஹாராஜ் என அழைக்கிறார்கள். உத்திர பிரதேச, உத்திராஞ்சல் மாநிலங்களின் அரசு மரியாதைகளை  பெறும் அந்தஸ்த்திலிருக்கும் இவருக்கு மட்டும்தான்  இங்கு பூஜை செய்யும் உரிமை.
திருவனந்தபுர மற்றும் கார்வால் மன்னர்கள் தேர்ந்த்டுக்கபடுபவர் இவர். பாரதத்தின் தென் கோடியிலிருந்து வரும் ஒருவருக்கு அதன் வடகோடியிலிருக்கும் இந்தமுக்கியமான கோவிலில் இத்தகைய உரிமைகள் வழங்கபட்டிருப்பதின் மூலம் நமது முன்னோர்கள் பக்தியினால் இப்படி தேசத்தை இணைத்திருப்பது இந்தியர்களுக்கு பெருமை தரும் ஒரு விஷயம்.
  கோவிலின் கீழே  முன்பு குகையாகயிருந்து இபோது ஒரு  அறையாக மாற்றபட்டிருக்கும் இடத்தில் வசிக்கும் இவர் கோவில்திறந்திருக்கும் 6 மாத காலத்திற்கு நதியை தாண்டிப்போககூடாது. தங்குமிடத்திலிருந்து தினசரி பூஜைக்கு வரும் போது ராஜக்களைப்போல விசேஷமான ஆடைகளில் சகல மரியாதையுடன் அழைத்துவரப்படுகிறார். அவர் வரும் போது யாராவது  குறுக்கே நடப்பது கூட அவமரியாதையாக கருதபடுகிறது. பூஜை இல்லாத நேரங்களில்  வேஷ்டி, குர்த்தா  தொப்பி அணிந்திருக்கும் அவரை எளிதாக் சந்தித்து பேசமுடிகிறது.  ஆங்கிலம், ஹிந்தி மலையாளம் கன்னடம் தெரிந்திருக்கிறது.  காலை 4.30,  மணிக்கு இவர் செய்யும் அபிஷகத்துடன் பூஜை துவங்குகிறது. கேரள சம்பிரதாயப்படி சம்ஸ்கிரதத்தில் தான் பூஜை. பிரசாதமாக சர்க்கரையில் செய்யபட்ட சிறு பொறிஉருண்டைகளும், பாதம் பருப்பும் தரப்படுகிறது. நாம் அர்ச்சனை தட்டுகள் தர முடியாது. சன்னதியில் குபேரர் காலடியில் வைத்து எடுத்த காசுகள் வீட்டிலிருந்தால் செல்வம் பெருகும் எனபதால் பலர் காசுகளை வைக்க கொடுத்து வாங்கிகொள்கிறார்கள். பலகாசுகளை ஒரு சின்ன டப்பா அல்லது கிண்ணத்தில் கொடுத்தால் ஏற்க மறுக்கிறார்க்ள். உடன் வந்த நண்பர்  துணியில்  கட்டங்களுக்கிட்டையே ஒவ்வொரு காசுகள் வைத்து  தைத்த  ஒரு பட்டு துணியை கொண்டுவந்திருந்தார்.   குபேரருக்கு அதை  சார்த்தி பெற்று பின் அதை  வெட்டி  பலருக்கும் கொடுத்தார். மாற்றி யோசித்த இந்த  மனிதரை  பயணத்தில் வந்த பலரும் பாராட்டினர்.
. கோவிலுக்கு முன்னே உள்ள ஒரே தெரு முழுவதும் கடைகள். இந்தியாவின்  அனைத்து மொழிகளிலும்  (பலவற்றில் பிழைகளுடன்) எழுதபட்ட போர்டுகளுடன்  உணவு சாலைகள்.   அடர்ந்த தாடி மறைக்குளவிற்கு உத்திராட்ச மாலைகள் பல அணிந்து, எதிரே வரும் ஒரு சாமியார் நமக்கு விஸிட்டிங் கார்டு தருகிறார். கார்டை பார்த்தபின்தான் புரிகிறது அவர் சாமியார் இல்லை என்பது. ருத்திராட்சம். ஸ்படிகம் வாஙக உதவும் கன்ஸெல்ட்ண்ட்டாம்.  “கடைகாரர்கள் ஏமாற்றுவார்கள் நான் அவைகள் பற்றி  நன்கு அறிந்தவன் நான் வாங்கிக்கொடுக்கிறேன்.  தொடர்ந்து  சந்தித்த பல கன்ஸெல்ட்ண்ட்களிடம் பேசியதில் தெரிந்த விஷயம். கடைகாரர்கள் தங்கள் எஜெண்ட்களுக்கு தந்திருக்கும் பெயர் கன்ஸெல்ட்ண்ட். 
மாலை  துவங்கிய உடனேயே இருள் பரவதொடங்கிவிடுகிறது.   பயணிகளின்  இரைச்சல்  அடங்கியிருப்பதால்  ஓடும் அலக்நந்தா நதியின் ஒசை தெளிவாக கேட்கிறது.  மெல்ல பரவும்  மெல்லிய வெண்பனி மேகங்களின் இடையே  மங்கிய விளக்கொளியில்  கனவு காட்சியாக தெரிகிறது  கதவுகள் மூடப்பட்ட  பத்ரிநாதரின் கோவில்.  

                        

8

இமயத்தின் மடியில், . (2)

பத்திரிநாத் கோவிலில் கிடைத்த அருமையான தரிசனத்தினலோ அல்லது மிக குளிரான புதிய சூழ்நிலையினாலோ நல்ல தூக்கமில்லாமல் கழிந்த அந்த இரவிற்கு பின் மறுநாள்  தொடர்ந்த பயணம் கேதார்நாத் கோவிலுக்கு. கேதாரும் இமயத்திலிருந்தாலும் அது வேறு ஒரு மலைபகுதியிலிருப்பதால், பத்திரிநாத்திலிருந்து கிழே இறங்கி மீண்டும் மற்றொரு மலைச்சாலையில் பயணம் செய்ய வேண்டும். கேதார்நாத்திலிருக்கும் சிவன் கோவில் மிகப்பழமையானது, உருவான காலம் பற்றிய குறிப்புக்கள் எதுவும்  கண்டுபிடிக்கபடவில்லை என்றாலும் பாரதப்போருக்குபின் பாண்டவர்கள் வழிபட்ட தலம் என்கிறது புராணகதைகள்.மிகவும்சக்தி வாய்ந்த இந்த சன்னதியை கண்டுபிடித்து முதலில் ஆராதித்தவர் ஆதிசங்கரர் எனறும் இபோது இருப்பது அவர் எழுப்பிய கோவில் என்றும் நம்பப்படுகிறது. 
பத்திரி நாத்திலிருந்து கிழே இறங்கிவரும் மலைப்பாதை பல இடங்களில் மண்சரிவினால் மிகமோசமாக இருந்ததினால் திட்டமிட்டபடியில்லாமல் பயணம் தமாதமாயிற்று. அனாசியமாக இங்கு பஸ்களையும் வேன்களையும் ஒட்டும் சர்தார்ஜிக்கள் ரோட்களின் சின்ன சேதங்களை, அவர்களே மற்ற டிரைவர்களின் உதவியடன்  சரி செய்து கொண்டு மேலே பயணத்தை தொடர்கிறார்கள். நீண்ட பயணத்திற்குபின்  சீதாப்பூர் என்ற இடத்திற்கு போகும்போது  மாலையாகிவிட்டதால்  அங்கு தங்கி மறுநாள் காலையில் தொடர்ந்த பயணத்தில் அடைந்த இடம் கெளரிகுண்ட் என்ற  மிக சின்ன மலைகிராமம். இங்கு ஒரு வெநீர்சுனை. சுனையிலிருந்து வரும் சுடுநிரை ஒரு முகப்புவழியாக வரும்படி வசதியாக அமைத்திருக்கிறார்கள்.குளிருக்கு இதமான அந்த குளியலுக்குபின் மலையேற்றம். கேதார் கோவில் வரை  வாகனங்கள் செல்ல சாலைகிடையாது.  இந்த  இடத்திலிருந்து 15 கீமீ மலைப்பாதையில் நடக்க வேண்டும். அல்லது குதிரையில் போக வேண்டும், அது நல்ல பாதையாகயில்லை எனபதால் நடக்க எல்லோரும் ஒரு தடி வாங்கிகொள்கிறார்கள். மட்டரக குதிரைகள். நூற்றுகணக்கில் இருக்கினறன.  ஆனால் அதில் அமைக்கபட்டிருக்கும் சேணமும் குதிரையைப்போலவே மோசமாக இருப்பதால் முதல் முறை முயற்சிப்பவர்கள் கஷ்டபடுவார்கள். கோவில் நிர்வாகம்  நிர்ணயத்திருக்கும் கட்டணங்கள் போர்டுக்கு மட்டுமே. கூட்டம்,கால்நிலை உஙகள் அவசரம் உடல்எடை போன்றவைகளின் அடிப்படையில்  ரேட்டுக்கள் பேசப்படுகிறது. பேரம் பேச உங்கள் நல்ல ஹிந்தி உதவவாது.  டோலிகளும் நிறைய. வசதியான சாய்வு நாற்காலிகளில் கூட இருக்கிறது. குதிரைகளின் கூடவே ஒரு கைடு வருகிறார். 12. வயது பையன்கள் கூட இப்படி கைடாகயிருக்கிறார்கள். வரும்போது பேசிக்கொண்டே வருகிறார்கள். பயப்படவேண்டாம் இது நல்ல குதிரை எனபது போல ஏதேதோ. நடுவிலியே அவர்கள் குதிரையுடனும் பேசுவதால், சொல்வது நமக்கா குதிரைக்கா எனபது புரியவில்லை. கரடுமுரடான பாதையில் அந்த குதிரையில் போகும் போது காணும் காட்சிகள் எவரையும் கவிஞனாக்கிவிடும். தொலைவில் பளிச்சிடும் நீல்கண்ட் சிகரம், பனிமூடிய பல சிகரங்கள், அருகில் பசுமையான மலைகளின் இடையே சிலநாட்களுக்கு முன் பெய்த மழையினால் ஆங்காங்கே தோன்றியிருக்கும் அருவிகள், மலயின் கீழே பள்ளதாக்கில் மந்தாகினி நதி  மலைக்காடுகளுக்கே உரியமணம், தீடிரென வந்து நம்மை கடந்து மிதந்துபோகும்  பனிமேகங்கள். அவ்வப்போது படபடவென வந்து பயமுறுத்தும் மழைச்சாரல்கள்  எல்லாம் நம் முதுகுவலியை மறக்கசெய்கிறது.  டோலிகளை தூக்கிவருபவரும் 4 பேரும் ராணுவ ஸ்டைலில் மிக சீராக பக்கவாட்டில்மட்டுமே அடிகள் வைத்து இம்மி பிசகாது நடை போட்டவண்ணமே முன்னோக்கி வேகமாக நடக்கிறார்கள்  நம்மால் சாதாரணமாக கூட  அப்படி நடக்கமுடியாது. செங்குத்தான பாதையாக இருப்பதாலும்  இப்படி லாகவகமாக நடப்பதால் பளு தெரியாதது மட்டுமில்லை பாதுகாப்பானதும் கூட என்கிறார்கள். அவர்கள் அப்படி மிக அருகில் வரும்போது நம் குதிரைகள் தாமகவே சற்று ஒதுங்கி நிற்கிறது. நடுவில் இரண்டு  சிறு கிராமங்களில் சற்று ஓய்வு நமக்கும் குதிரைக்கும். ஒரிடத்தில் குதிரைகள் சாப்பிட தனியாக வரிசையாக தொட்டிகள் கட்டபட்ட  ஒரு அமைப்பு. அவைகளுக்கும் சாப்பிட  டோக்கன். நம் குதிரைகாரர் நம்மை வாங்கிதர சொல்லுகிறார். ரேட்டை பார்த்து அதிர்ந்த நாம் இதை ஏன் முதலில் சொல்லவில்லை என கேட்டதற்கு அவர் தந்த பதில்  “பயணத்தில் உடன்வருபவருக்கு நாம் சாப்பிடும்போது உணவுவாங்கித் தருவது உலக வழக்கம் தானே! “
கேதாரை அடைந்தபோது மாலை 4 மணி. ஆனால் நன்கு இருட்டிவிட்டது. குதிரைகள் அனைத்தும் ஒரிடதில் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து ஒரு கீமீ நடக்க வேண்டும். பின்னர் வருவது நாம் ஆவலுடன் பார்க்க காத்திருந்த கேதார் கோவில் இருட்டில் அதிக விளக்குகள் இல்லாதால் அந்த சின்ன கோவிலை சரியாக் பார்க்கமுடியவில்லை. இருக்கும் ஒரே மின்விளக்கின் வெளிச்சத்தில் பளீச்செனறு தெரியவில்லை.. மாலைபூஜைகள் முடிந்துவிட்டதால் கோவில் மூடபட்டிருந்தது. மாலை ஆர்த்தி பார்க்க முடியாத வருத்தத்துடன். மறு நாள் காலை பூஜைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம். எல்லா கட்டளை கட்டணங்களும் அதிகம்.ஆனாலும் எல்லோரும் எதாவது ஒரு பூஜைக்கு பணம் செலுத்துகிறார்கள். பகல் 12 மணிக்கு கூட குளிர்தாக்கும் இந்த இடத்தில் காலை 5.30க்கு  மணிக்கு பூஜை 5 மணிக்கு வந்துவிடவேண்டும் என்றார்கள்.
மறு நாள் காலையில் அரையிருட்டில் தெளிவாக தெரியாத  அந்த கோவிலின் கதவுகள் முன் காத்திருக்கிறோம். கல்பாவிய தரையின்   ஜிலிர்ப்ப்பு உள்ளங்காலிலிருந்து  உச்சந்தலைவரை பாய்கிறது., விறைக்கும் குளிரில் நனைந்த சால்வையின் கிழ் ஸ்வெட்டர்க்குள் நடுங்கும் உடல்.  கண்மூடி காத்திருந்தபோது மணிகளின் ஓசையையுடன்  திறக்கபட்ட அந்த கதவுகள் நிஜமாகவே  கைலாயத்தின் கதவுகளாகவே  தெரிந்தது. உள்ளே சற்று விஸ்தாரமான் ஹால்..  மூடியே இருந்ததாலோ அல்லது கட்டிட அமைப்பினாலோ சற்று வெதுப்பாக  இருக்கிறது. கர்ப்பகிரஹம் சன்னதி, மூர்த்திகள் எதுவும் இல்லை. தரையில்துண்டுதுண்டாக வெவேறு வடிவத்தில்  பாறைகள். அவைகள் தான் கேதரநாதரின் வடிவங்கள். சதுரமான அந்த இடத்தை சுற்றி நான்குபுறமும் சிவப்பு கம்பளி விரிப்புகள். ஒவ்வொரு புறத்திலும் தம்பதிகளாக வந்திருப்பவர்களை உட்கார்த்தி வைத்து  நட்சித்திரம் கேட்டு சங்கல்பம் செய்வித்துவிட்டு நீங்களே பூஜை செய்துகொள்ளுங்கள் என்கிறார்கள். நாமே அபிஷகம் செய்வித்து மலர் சாத்தி ஆராதிக்கவேண்டும். தீபாராதனை எதுவும் கிடையாது. இதைப்போல நான்கு பக்கங்களிலும் காத்திருப்பவர்கள் வரிசையாக செய்கிறார்கள். நம்முறை வந்தவுடன் பூஜை செய்கிறோம்.அவர்வர்களுக்கு தெரிந்த மந்திரத்தையும் சொல்லி பூஜிக்கலாம். பத்திரியைப்போலவே இங்கும் ராவல் இருக்கிறார். அவரும் தெனிந்தியாவிலிருந்து வருபவர். கர்நாடகத்திலிருந்து சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் வணங்காத லிங்காயாத்  இனத்தவர். நேரடியாக பூஜை செய்வதில்லை. அங்கு பூஜை செய்யும்  “பண்டா களின் பணியை மேற்பார்வையிடுகிறார்.  அதிகம் பேசுவதில்லை. பூஜைகள்  ,முடித்து பக்க வாயில் வழியாக வெளியே வரும் போது பொழுது புலர ஆரம்பித்திருக்கிறது. சூரிய ஓளியில் கோவிலை நன்கு பார்க்க முடிகிறது. சின்ன கோவில்தான். சன்னதியாக கருதி நாம் வழிபட்ட இடத்தின் மேற்கூரை கோபுரமாக கட்டபட்டிருக்கிறது. கோவிலின் மற்ற இடங்கள் கல்லால ஆன கட்டிடம்.  மேற்கூரை இரும்புத்தகடுகளால் மூடபட்டிருக்கிறது. பனிஉறையும் காலங்களில் இதுதான் பாதுகாப்பானதாம். முகப்பில் படிகள் ஏறி நுழையுமிடத்தில் இரும்பு கம்பிகளாலான ஒரு வரவேற்பு வாயிற்தோரணம் அதில் ஒரு பெரிய மணி. பூஜை துவங்குபோது மட்டுமே அடிக்கபடும், சற்று தள்ளி நந்தி. சிறியது ஆனால் அழகாக வடிக்கபட்டிருக்கிறது சிலையில் தமிழ நாட்டு சாயல்.  கோவிலின் வெளிப்புறத்தில்  திறந்த வெளியாக ஒரு சின்ன பிரஹாரம். அதன் பக்க சுவர்களில் திருஞானசம்பந்தர் உருவத்துடன் இந்த ஸ்தலத்தை பற்றி அவர் அருளிய பாடல்கள்  கருங்கல்லில்   தமிழில் பொறிக்கபட்டிருக்கிறது. இத்தனை  உயரத்தில், சிறப்புமிக்க இடத்தில் தமிழ் எழுத்துக்களை அதுவும் சம்பந்தர் பாடல்களை பார்த்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை பதிபிக்க ஏற்பாடு செய்த புண்ணியவாளார்கள் காசி திருபனந்தாள் மடத்தினர்.  அதே பிரஹாரத்தின் இறுதியில் ஒரு  மலைபாதை பின்னணியில் பெரிய செங்கல்சுவர். அதில்  மணிக்கட்டிலிருந்து தெரியும் ஒரு வலது கையின் பிடியிலிருக்கும் ஒரு சன்யாஸியின் தண்டம் சிற்பமாக வடிக்கபட்டிருக்கிறது.  ஆதிசங்கரர் தனது இறுதி நாளில் இங்கு தவமிருந்து பின் தன் தண்டத்தை களைந்து விட்டு இறைவனுடன் கலந்துவிட்டதாக வரலாறு. அதை குறிக்க் இந்த சின்னம் எழுப்பபட்டிருக்கிறது.
அந்த சின்ன கேதார் கிராமத்தில் அனைவர் வாழக்கையும் கோவிலுடன் எதாவது ஒருவகையில் சம்பந்தபட்டிருக்கிறது. வாழும் குடுமபத்தினர் வரும் டூரிஸ்ட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் வியாபராங்களைச்செய்கின்றனர். அன்போடு பேசும் இவர்கள்  உணவு வகைகளை வியாபாரத்திற்காகசெய்தாலும்  நாம் கேட்கும் வகையில்  சந்தோஷமாக செய்துதருகிறார்கள். தண்னீரை தவிர எல்லாமே நாம் வந்த கரடுமுராடன பாதையில் தலைச்சுமையாகதான்  வந்திருக்கிறது எனபதை நினைத்த கணத்தில் விலையை பற்றிய எண்ணம் மறைந்துபோகிறது.
உலகின் பல இடங்களில். பனிமலைகள் அழகான விடுமுறைதலங்களாகவும். சுக வாச ஒய்வு தலங்களாகவும் இருக்கின்றன.  இயற்கையின் அழகிலியே ஆண்டவனை காணும்  நம் நாட்டில் மட்டும்தான் அந்த அழகான பனி  மலைகள், வாழ்வில் ஒருமுறையாவது போக வேண்டும் என பல இந்துக்கள் விரும்பும் புனிதமான வழிபாட்டு தலஙகளாக இருக்கிறது.


                                
9

வரப்போகும் லாமாவிற்காக காத்திருக்கும் பறக்கும் தொப்பி

மாநிலத் தலைநகரின் பிராதான சலையான அது மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும் பளிச்சென்று படுசுத்தமாக இருக்கிறது அந்த சாலையில் எந்த வாகனத்திற்கும்  அனுமதியில்லாதால்,  ஹாரன் ஒலியே இல்லை.நடைபாதையில் செல்பவர்களும் மெல்லப்பேசிக்கொள்வதினாலும் எதோ வெளிநாட்டின் நகர் ஒன்றிலிருக்கும்  உணர்வைத்தோற்றுவிக்கிறது அந்த இந்திய நகரம். அந்த சாலையில் துப்பவோ, சுத்தமான சூழ்நிலையை பாதிக்கும் வகையில் எதாவது செய்தாலோ தண்டனை என அறிவிக்கப்பட்ட,  நம் நாட்டின் முதல் தூய்மைப்பிரேதேசம் காண்டாக் நகரம்.
8000மீட்டர் உயரத்தில் இமயத்தின் மடியிலிருக்கும் மாநிலம் சிக்கிம்.மூன்று அயல் நாடுகளின் எல்லையை மாநில எல்லையாக கொண்டிருக்கும் இந்த  குட்டி மாநிலத்தின்(மாநில பரப்பளவே7000 சதுர கீமிதான்)  குட்டி தலைநகர் காண்டாக்.  தலைநகரை இணைக்கும் ரயில் பாதையோ, விமானநிலயமோ கிடையாது.  மாநிலத்தின் பிற பகுதிகளை இணைக்கும் சாலையும்,பஸ் நிலையமும் நகருக்கு வெளியே தான். நகருக்குள் மாருதி வேன்கள் தான் டாக்ஸிகளாக அனுமதிக்கபட்டிருக்கின்றன
பளிங்குவெள்ளையாய் பனி மூடிய  கஞ்சன் ஜிங்கா சிகரத்தின் பின்னணியில்  பரவிக்கிடக்கும் பசுமையை ரசித்தபடி அந்த  மலைநகரத்தில் இதமான குளிரில் நடப்பது சுகமாகயிருக்கிறது வெள்ளை மாளிகையென அழைக்கப்படும் சட்டமன்ற கட்டிடத்தை தவிர சில.சின்ன சின்ன சத்தமில்லாத அரசாங்க கட்டிடங்கள்,ஆடம்பரமில்லாத கடைகள் மலைச்சரிவின் நடுவே ஒருபெரிய கட்டிடத்தினுள்ளே அமைந்திருக்கும்  அழகான ஆர்கிட் வகை பூக்களுக்காகவே (பலநாட்கள் வாடமிலிருக்கும் வகை) நிறுவப்பட்டிருக்கும் தோட்டம், அருகிலேயே நகரைப்பெருமைப்படுத்திய ஒரு நேப்பாள கவிஞரின் சிலையுடன் அழகிய பூங்கா,  மக்கள் மாலைப்பொழுதை  நகர போலீஸ் பேண்டின் இசையுடன் அனுபவிக்க காலரிகள் அமைக்கபட்ட பெரிய சதுக்கம். இப்படி எல்லாவற்றையும்  நடந்தே  4 மணி நேரத்தில் சுற்றிப்பார்த்த பின் நாளை என்ன செய்யலாம் என்பதை பற்றி  அந்த புத்தக கடையில் சுற்றிக் கொண்டிருந்தபோது  பேசிக்கொண்டிருக்கிறோம். அதைக் கேட்ட அந்த  கடையின்(100ஆண்டுகளுக்கும்மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது] இன்றைய தலைமுறை உரிமையாளர்   ரூம்டெக் என்ற வரலாற்று சிறப்புமிக்க மிகப் பெரிய புத்த மாடத்தையும் அங்கு நடைபெறும் திருவிழாவையும் பற்றிச் சொல்லி மறுநாள் அதைபார்க்க ஏற்பாடு செய்துகொடுக்கிறார்.
மறு நாள் அழைத்து செல்ல வந்த டாக்ஸிக்கரார் திபெத்தியர்.அந்த மாருதி வேனில் பெரிய அளவில் தலைலாமா படம்,பிரார்த்தனை வாசகங்கள். இங்கு அனேகமாக எல்லா கடைகளிலுமே தலைலாமாவின் படங்கள் அவரை கடவுளாகவே மதித்து வழிபடுகிறார்கள்.திபேத் ஒருநாள் சுதந்திர நாடகிவிடும் என்ற நம்பிக்கயை கைவிடாதிருக்கிறார்கள். அதேபோல சீன கலாசாரத்தின் சாயல் பல இடங்களில் தெரிகிறது.டிரைவர் தனக்கு  உள்ளுர் மொழி தவிர நேபாளிமட்டும் தான் தெரியும் என்பதால் நமக்கு உதவ ஆங்கிலம் தெரிந்த உதவியாளரை அழைத்துவந்திருந்தார்.
நகருக்கு 23கிமீவெளியேஒரு மலைச்சரிவிலில் வனப்பகுதியில்அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவின் அருகிலிருக்கும் அந்த புத்தமடத்திற்கு சென்ற மோசமான பாதை  நாம் இருப்பது இந்தியா தான், பார்க்கபோவது ஒரு இந்திய கிராமத்தைதான் என்பதை உறுதிப்படுத்தியது.போகும் வழியெல்லாம் பல வண்ணங்களில் கொடிகள். அவைகட்சிக்கொடிகள் இல்லை,அத்துனையும் பிராத்தனைகளுக்காக என்பதையும்,திருமணம், செல்வம் கல்வி உடல்நலம் போன்ற ஒவ்வொன்றிருக்கும் ஒரு வண்ணக்கொடி நடுவார்கள் என்பதையும் கைடு மூலம் அறிகிறோம்

நீங்கள் பார்க்கப்போவது  புத்தமத்தினரின் மிகமுக்கியமானஇடம். புண்ணியம் செய்த புத்தமத்தினருக்கே கிடைக்கும் அறிய வாய்ப்பு.பல நூறு ஆண்டுகளுக்கு முன் கடுந்தவம் செய்து அந்த மடத்தலைவர் தேவதைகளின் ஆசியுடன் பெற்ற இறகு தொப்பி அங்கேயிருக்கிறது. அணிந்துகொண்டவர் எந்த இடத்திற்கும் பறக்கும் சக்தியைப் பெறுவார். மன்னரைவிட உயர்ந்த மடத்தலைவரான லாமா மட்டுமே அதை அணிய முடியும்.  இந்த மடத்தின்  இன்றைய  தலவர் திபெத்திலிருக்கிறார்.அவரோ அல்லது அவரது அடுத்த வாரிசோ வந்து அணிந்துகொள்வார்கள்.  அங்குள்ள தர்மசக்கரா புத்தமாடத்தில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் கடும் பயிற்சிக்கு பின்னர் தான் பிட்சுக்களாக அறிவிக்கபடுவார்கள்.என்ற  அந்த உதவியாளாரின் பில்டப் நம் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.ஓரு மலைப்பதையின் அருகே இறக்கிவிட்ட அவர் இங்கிருந்து நடந்து செல்லுங்கள் நான் புத்த மடங்களுக்குள் வருவதில்லை என்கிறார். மெல்ல நடக்கும் நாம் 10 நிமிடத்தில்  மடத்தின் நுழைவாயிலைப்பார்க்கிறோம். கேரள கோவில்கலின் முகப்பை நினைவுபடுத்தும் பக்கங்களலில் நீண்ட இரண்டு திண்னைகளுக்கு நடுவே உயர்ந்து  சீனப்பாணி வண்ண ஒவியங்களுடன்  நிற்கும் திறந்த மரக்கதவுகள்.நுழைந்தவுடன் நான்குபுறமும் மரக்கூறையுடனும் திண்ணையுடனும் தாழ்வாரம் நடுவில் மிகப்பெரிய முற்றம். முற்றத்தின் நடுவே உச்சியில் விளக்குடன்  உயர்ந்து நிற்கும்  ஒருகல் தூண். மறுகோடியில்   திபெத்திய கட்டிடகலையில் எழுப்பபட்ட நான்கு  அடுக்கு மண்டபம். அடிக்கும் ஆரஞ்சு சிவப்பு, மஞ்சள் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.. தாழ்வாரத்தில் காத்திருக்கும் கூட்டத்தில் பல வெளிநாட்டவர்கள்.சில டூரிஸ்ட்கள்,உள்ளுர் மக்கள்.பூஜை துவங்க காத்திருக்கிறார்கள். நடிகர் விஜய் படத்தின்  குருப் நடனகாட்சிக்கு போட்ட செட் மாதிரி இருக்கும் இந்த திறந்த வெளியில் என்ன பூஜை  எப்போது செய்யப்போகிறார்களோஎன்று நாம் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அருகிலிருந்த வெளிநாட்டுகாரார் அப்படியெல்லாம் கமெண்ட் அடிக்காதீர்கள்.இது உலகத்தை தூர் தேவதிகளிடமிருந்து காப்பற்ற அவர்கள் செய்யும் மிக முக்கிய பூஜை.குருவின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். கிடைத்தவுடன் துவக்குவார்கள்என்கிறார். உங்களுக்கு எப்படித்தெரியும் என்ற தொனிதெரிந்த நம் பார்வையை புரிந்துகொண்டு நான் இரண்டு வருடங்களாக ஆராய்சி செய்துகொண்டிருப்பது இவர்களைப் பற்றிதான்என்று அடக்கத்துடன் சொன்ன அந்த அமெரிக்கரை கண்டு ஆச்சரியப்பட்டு. மரியாதையுடன் அறிமுகப்படுத்திகொண்டு  அவர்அருகில் அமர்ந்துகொள்கிறோம். அமெரிக்காவில் அயவோ பல்கலைகழக பேராசிரியாரான எரிக் ரிச்சர்ட் புத்த மதத்தின் பிரிவுகளைப் பற்றி ஆராய்ந்து எழுத வந்திருப்பவர் என அறிந்துகொள்கிறோம்
புத்தர் நிர்வாணம் அடைந்த பின் 100 ஆண்டுகளில் அவரது சித்தாந்த விளக்கங்களில் எற்பட்ட மாறுபட்ட கருத்துக்களினால் புத்தமத்தில் 20க்கு மேற்பட்ட பிரிவுகள் தோன்றின. அவற்றில் 10க்கும்மேல் திபெத்தில் பிறந்தவை. அவைகளில் அழிந்ததுபோக இருக்கும் சிலவற்றில் ஒரு முக்கிய பிரிவு  கார்க்யூப்பா பிரிவு புத்தமதம். மாந்திரிகம், தந்திரம் எந்திரம் போன்றவற்றை போற்றுபவர்கள்.உலகில் எதையும் மந்திரத்தால் சாதிக்கலாம் என நம்புவர்கள்.  தலமைப்பீடம் திபெத்திலிருக்கிறது. சீன ராணுவம் அதை அழித்துவிடக்கூடும் என கருதி அங்கிருந்து கொண்டுவந்திருக்கும் பல பூஜை, தந்திர ரகசியங்களுடன் தலமைப்பீடத்தின் அச்அசலான மாதிரியில் அன்றைய சிக்கிம் அரசரின் ஆசியுடன் இந்த மடத்தை  இங்கு நிறுவியிருக்கிறார்கள்.இது வெறும் மடம் மட்டுமில்லை.புத்தமதத்தின் தத்துவங்களை கற்பிக்கும் கல்விக்கூடம். குருகுல பாணியைப் பின்பற்றி 11ம் நூற்றாண்டிலிருருந்து பாடங்களை வாய்மொழியாகவே கற்பிக்கிறார்கள்.அவசியமானபோது  மடத்தின்  தலைவர் லாமா வருவார்.என பல தவகல்களை பேராசிரியர்  எரிக் தந்தபோது  சந்தோஷமாகவும் வெட்கமாகவும் இருந்தது. சந்தோஷம் தெரிந்துகொண்ட பல விபரங்களுக்காக வெட்கம் புத்தமதத்தை உலகிற்கு தந்தவர்கள் நாம், ஆனால் அதன்  பல விபரங்களை ஒரு அமெரிக்கர் மூலம் அறிந்து கொள்ள நேர்ந்தற்காக.
திடுமென  உரத்து சங்கு ஒலிக்கிறது.  மஞ்சள் ஆடை அணிந்த ஓரு மூத்த பிட்சு கையில் கொண்டுவந்திருக்கும் நீரை முற்றம் முழுவதும்  மந்திர உச்சாடனங்களுடன் இரைக்கிறார். நடுவில் நிறுவப்பட்டிருக்கும் மேடைக்கு மாலை அணிவிக்கிறார். சில வினாடிகளில் பிராதான மண்டபத்திலிருந்து  முற்றத்திற்கு நீல பட்டாடை அணிந்த குழு ஒடி வந்து நடனத்தை துவக்குகிறது. இவர்கள் புத்த பிட்சுக்கள் இது அவர்கள் வழிபாட்டுமுறை. இந்த இசையும் நடனமும் அவர்களுக்கு கற்பிக்கபடுகிறது.என்று விளக்குகிறார் எரிக். குழுவில் சிலர் விதவிதமான முகமூடிகள் அணிந்திருக்கின்றனர்.அவை துர்தேவதைகளாம். இசையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் நடனம் உக்கிரமாகிறது. மண்டபத்திலுருந்து வினோதமான வடிவில் தங்க வண்ண தொப்பியும் சிவப்பு ஆடையும் அணிந்த பிட்சுக்கள் கைகளில் பலவிதமான சரவிளக்குகளுடனும், சாம்பிராணி புகை கக்கும் குப்பிகளுடனும் அவர்களில் சிலர் ஷனாய் போன்ற கருவியை இசைத்தவண்ணம் ஊர்வலமாக வருகிறார்கள். அவர்களுக்கு காவலாக பெரிய தடிகளுடன் புத்தபிட்சுக்கள்! ருத்திர தாண்டவம் ஆடும் துர்தேவதைகளின் முன் கூடிநிண்று மந்திர உச்சாடனம் செய்து பின் அவை ஒவ்வொன்றாக மயங்கி விழுகிறது.இசையின் வேகம் குறைகிறது. பிராத்தனைக்குபின்னர் புத்தபிட்சுக்கள் மண்டபத்தின் உள்ளே செல்லுகிறார்கள். இசை நிற்கிறது,முதலில் வந்த பிட்சு மீண்டும் வந்து நீர் தெளிக்கிறார்.பூஜைமுடிகிறது, தூண் உச்சியில் எறிந்துகொண்டிருந்த விளக்கு, கிழே ஒரு கவணிலிருந்து இருந்து லாகவகமாக வீசப்படும் கவண் கல்லால் அணைக்கப்படுகிறது.
பிராதான மண்டபத்தினுள் நுழைந்ததும் நம்மை கவர்வது அழகான டிசைன்களுடன் தொங்கும் கண்ணைப் பறிக்கும் பல பட்டு திரைச்சீலைகள் தான். அந்த மடத்தின் கடந்த தலைமுறை மடத்தலைவர்களின் ஒவியங்கள் வண்ண கண்ணாடி விளக்குகள் எனஆடம்பரமாக இருக்கிறது. 1001 குட்டி தங்க புத்தர்கள். நடுவில் பிரம்மாண்டமாக புத்தரின் சன்னதி. அருகில் பிராத்தனை சக்கரங்களை உருட்டிக்கொண்டு பிட்சுகள், இளம் மாணவர்கள்.சுவர்களில் திபெத்திய எழுத்துக்கள். பறக்கும் தொப்பி பற்றி விசாரிக்கிறோம்.அடுத்தஅறையை காட்டுகிறார் ஒரு துறவி. உள்ளே, பட்டு துணியால் மூடப்படிருக்கும் ஒரு அழகான மரபெட்டி.' “தொப்பியை பார்க்கமுடியாதா?” என்ற நமது கேள்விக்கு எடுத்தவுடன் தலைவர் அணிந்துகொள்ள வேண்டிய அதை அவர் இல்லாதபோது எடுத்தால் பறந்துபோய் விடும் என்பதால் திறப்பதில்லைஎன்ற அந்த இளம் துறவியின் பதிலை கேட்டு நமக்கு சிரிப்பு எழுகிறது.தெய்வ சன்னிதானமாக் போற்றப்படும் அந்த இடத்தின் சூழ்நிலை நம்மைக்கட்டுப்படுத்துகிறது.
மெல்ல இரவு பரவும் அந்த பொழுதில் காண்டக் நகருக்கு திரும்புகிறோம்.  பறக்கும்தொப்பியை பார்க்கமுடியாததைப்பற்றி அந்த கைடு இடம் சொன்னபோது .  தொப்பி இருக்கும் விபரத்தைதான் சொன்னே தவிர  பார்க்க முடியம் என்று    சொல்லவில்லையே   என்ற அசத்தலான பதிலைச்சொன்னவர்  கவலைப் படாதீர்கள் இன்று இரவு கனவில் அதைப் பார்ப்பீர்கள்என்றார்.
நம்புங்கள் அன்று கனவில் அந்த தொப்பி வந்தது.
          
  10                                                

மெளனத்தின் ஒசை கேட்கிறது இங்கே..



திருவண்ணாமலையிலிருந்து பங்களூரு செல்லும் பரபரப்பான சாலையிலிருக்கும் அந்த இடத்தில் நுழைந்தவுடனேயே அமைதியும் பசுமைச் சூழலும் நிறைந்த ஓர் அழகான கிரமத்திற்குள் வந்து விட்டதைப்போல் உணர்கிறோம். வாயிலில் நிழல்பரப்பி நிற்கும் வயதான வேப்ப மரம்- பல ஆண்டுகளாக அந்த ஆஸ்ரமத்திற்கு வந்தவர்களை வரவேற்றது போலவே- நம்மையும் பார்த்து மெல்ல தன் இலைகளை அசைக்கிறது. ஒருபுறம் அலுவலகங்களும் புத்தகசாலையும்; மறுபுறம் உயர்ந்த தென்னைகளுடன் பசுஞ்சோலையாகப் பரந்து கிடக்கும் தோட்டம்; கீரிச்சீடும் பறவைகள், மற்ற இடங்களில் அபூர்வமாகவே காணப்படும் வெள்ளை மயில்கள். இடையிலிருக்கும் அந்த அகன்ற பாதையைக் கடந்து கோயிலாகவே நிறுவப்பட்டிருக்கும் ரமண மகரிஷிகள் வாழும் சமாதியை தரிசிக்கச் செல்கிறோம் இடதுபுறமுள்ள ரமணர் சன்னதியின் வாயிலுக்கு நுழையும் முன் அந்தக் காட்சி நம்மை மெய்மறந்து நிற்கச் செய்கிறது
பவித்திரமாகப் போற்றிப் பாதுகாக்கபடும் ஆஸ்ரமத்தின் பழைய கட்டிடங்களுக்கும் தென்னங்கீற்றும் வைக்கோலும் மேற்கூரையாகப் பரப்பிய எளிமையான விருந்தினர் விடுதிக்கும் இடையே பளீரென்று தெரியும் திருவண்ணாலையின் தரிசனம். அந்தத் தெய்வ மலை நம்மைக் கூப்பிட்டு, நிற்க வைத்து ஆசிர்வாதம் செய்வதைப்போல் ஒரு சிலிர்ப்பு. ரமணர் சிலகாலம் வாழ்ந்த விருபாட்ச குகை உள்ள அந்தப் புனித மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த ஆஸ்ரமத்திற்கு வரும் பக்கதர்களுக்கு இந்தத் தரிசனம் ஒரு பாக்கியம்
கண்ணை உறுத்தாத வண்ணத்தில் சலவைக்கல் தரையிடப்பட்டிருக்கும் நீண்ட ஹாலின் மறுமுனையில் மரகதப்பச்சை வண்ணத்தில் வெள்ளைப்பூக்களுடன் கம்பீரமாக நிற்கும் மண்டபம். நடுவில் மீளாத்தூக்கத்திலாழ்ந்த ரமணரின் பூத உடல் அன்னை பூமிக்கு சமர்ப்பிக்கப்பட்ட இடத்தில் எழுப்பட்ட மேடை. தாமரை இதழ்களின் நடுவில் லிங்கம். பூஜிக்கபடும் அதைச் சுற்றி வந்து வழிபாடு செய்பவர்களுக்கு ஏற்ப வசதி. அந்தப் பாதையில் ஒளியூட்டப்பட்ட ரமணரின் வண்ணப் படஙகள். அமைதி ஆக்ரமித்திருக்கும் அந்தப் பெரிய மண்டபத்தில் ஆங்காங்கே கண்மூடி, பிரார்த்தனையில் பக்தர்கள்; அதில் பலர் வெளிநாட்டினர்
அருகில் பகவான் ரமணர் தன் தாயாருக்கு எழுப்பிய ஆலயம். ஆகம விதிகளின்படி எழுந்திருக்கும் அந்த ஆலயத்தின் பளிச்சென்ற தூய்மை அதைப் பேணுகிறவர்களின் நேசத்தைப் பேசுகிறது. ஆலயத்தின் முகப்பில், பகவான் வாழ்ந்த காலத்தில், வந்தவர்களை சந்தித்த கூடம். நடுவே அவர் அங்கு அமர்ந்திருந்த நிலையில் எடுத்த படம். அருகில் தியானம் செய்யும் நிலையில் சிலையாக ரமணர், அந்தக் கண்களில் தெரியும் தீட்சண்யம் நம்மைத் தாக்குகிறது. தொடர்ந்து பலர் வந்து தரிசித்துக் கொண்டிருப்பதினால் அங்கே எழும் சைகளினாலும் அசைவுகளினாலும் சற்றும் பாதிக்கப்படாமல் தியானத்திலிருக்கும் சிலர். மெல்ல கோயிலின் வெளிச்சுற்றுப் பாதையில் நடந்து வரும் நம் கண்ணில்படும் பெரிய மலர்த்தோட்டத்தின் நடுவே அந்தக் குளமும் அதன் அசையாத நீரில் பிரதிபலிக்கும் அண்ணாமலையின் தோற்றமும் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. பாதை இட்டுச் செல்லுமிடம், முகப்பில் ஓட்டுக் கூரையிட்ட தாழ்வாரத்தினுடனிருக்கும் தியான அறை. பகவான் வாழ்ந்த காலத்தில் பல நாள்கள், பல மணி நேரங்கள் தியானம் செய்த பழைய அறை. சிறிய சிறிய சதுரக் கருப்புக் கடப்பா கற்கள் பதிக்கபட்ட அந்தத் தரை அப்போதுதான் கழுவிவிட்டதுபோல சில்லென்றிருக்கிறது. அறையின் ஒரு மூலையில் கால்நீட்டி அவர் அமர்ந்திருந்த அதே சோபாவில் இன்று அந்த நிலையில் பகவானின் பெரிய படம்; நம்முடன் பேசுவதுபோலிருக்கிறது. வெளிச்சம் சற்று குறைவாகயிருக்கும் அந்த அறையில் தியானம் செய்யும் பலர். சிலையாகச் சமைந்திருக்கும் வெளிநாட்டுப் பெண்மணி. எவரையும் தியானம் செய்யத் தூண்டும் அந்தச் சூழ்நிலையில் நாமும் சிறிது நேரம் முயற்சிக்கிறோம். நம் சுவாசத்தின் மெல்லிய ஒலி கேட்குமளவிற்கு அமைதி. ஆழ்ந்த மெளனத்திற்கு அழைத்துபோகும் அந்தச் சீரான ஓசை அந்த நேரத்தில் அந்த இடத்தில் ஏற்படுத்திய நிச்சலனத்தையும் நிம்மதியையும் அனுபவித்து உணர்ந்தால்தான் புரிந்து கொள்ளமுடியும்
தியான அறைக்கு வெளியே சிறிய தோட்டத்தில் ஆடாமல் மெல்ல நடைபழகிக்கொண்டிருக்கும் மயில்கள். தோகைவிரித்து அது ஆடாதா எனக் காத்திருக்கும் சிலர். மரங்களில் மெள்ள, பேசும் கிளிகளைத் துரத்தும் குரங்குகள். தோட்டத்தின் ஒரு பகுதியில், நம் புருவத்தை உயர்த்தசெய்யும் சில விலங்குகளின் சமாதிகள். பசு லஷ்மி, நாய் ஜாக்ஸன் என்று பகவான் ரமணர் வாழ்ந்த காலத்தில் அவருடனே சுற்றிகொண்டிருந்த இவர்கள் அண்ணாமலையில் வாழும் சித்தர்கள் என ரமணரால் அடையாளம் கண்டுகொள்ளபட்டதால் இந்த கெளரவம் பெற்றிருப்பதை அறிகிறோம்.
அருகில் போஜனசாலை எனப் பதிப்பிக்கப்பட்ட நீல எனாமல்போர்டு- அது தமிழ் வார்த்தையாகக் கருதப்பட்ட காலத்தில் எழுந்த கட்டிடம் அது என்பதைச் சொல்லுகிறது. பரந்து விரிந்திருக்கும் அந்தக் கல் கட்டிடக் கூடத்தில் சுவர் முழுவதும் படங்கள். அதில் ரமணர் வாழ்ந்த காலத்திலிருந்த அரசியல் பிரமுகர்களை, அரசர்களைக் காணமுடிகிறது. கூடத்தின் நடுவில் பகவான் சாப்பிடும் நிலையில் ஒரு படம். தரையில் அமர்ந்து தையல் இலையில் பரிமாறப்படும் எளிமையான, சுவையான சாப்பாட்டைப் பிரசாதமாக ஏற்கிறோம்

காலை 5.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திட்டமிட்ட அட்டவணைப்படி நிகழ்சிகள் நடைபெறும் இந்த ஆஸ்ரமத்தின் விதிகள் எவருக்காகவும் தளர்த்தப்படுவதில்லை. அரசியலில் சிக்கலான நேரத்தில் இந்திரா காந்தி இங்கு வந்திருக்கிறார். வருகையைத் தெரிவித்துவிட்டு வரும் அன்பர்களுக்கு அருகிலுள்ள வசதியான கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கும் வசதியும் ஆஸ்ரமத்தில் உணவும் அளிக்கப்படுகிறது. கட்டணமாக எதுவும் வசூலிப்பதில்லை. கொடுக்கும் நன்கொடைகள் மற்றுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நாங்களாக யாரிடமும் ஆஸ்ரமத்திற்கு நன்கொடைகள் வேண்டுவதில்லை. சில நாள்கள் லட்சகணக்கில் பணம், எதுவுமே இல்லாத    சில நாள்கள் என இருந்தாலும் பகவானின் அருளினால் இடைவிடாது ஆஸ்ரமத்தின் பணிகள் சீராக இயஙகுகிறது,” என்கிறார் இதன் தலைவர், திரு.வி.எஸ்.ரமணன் இவர் பொதுத்துறையில்    உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்
ஐரோப்பா, கனாடா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் அன்பர்களால் வழிபாட்டுமையங்கள் நிறுவப்பட்டிருக்கும் இந்த ஆஸ்ரமத்திற்கு அமெரிகாவில் மட்டும் இருபதுக்கும்மேல் மையங்கள். நவீன தொழில் நுட்பத்துடன் ஜெர்மனி நாட்டு ஆஸ்ரம அன்பர்கள் இங்கு நிறுவியிருக்கும் ஆவணக் காப்பகம், அவற்றை இணயத்தில் இ-லைப்ரரியில் பார்க்க வசதி, தமிழ், ஆங்கில, ஐரோப்பிய மொழிகளில் புத்தகங்கள் நிறைந்த நூலகம், புத்தகங்கள் சிடிக்கள் டிவிடிகள் தயாரிக்கும் வசதியுடன் பதிப்பகம், விற்பனை நிலையம் எல்லாம் எந்த விளம்பரச் சத்தமும் இல்லாமல், வெளியே ஒரு போர்டு கூட இல்லாமல் அமைதியாக இயங்குகின்றது
பயணம் செய்யும்போது பல இடங்களில் நாம் தங்குவது உண்டு. அவற்றில் சில இடங்கள் நம் மனதில் தங்கிவிடும். திருவண்ணாமலை ரமணாஸ்ரம். அதில் ஒன்று



11                                                

ஆழமில்லாத கட்லும் ஆழமான நம்பிக்கைகளும்

ஆளரவமில்லாத பரந்த வெண்மண்பரப்பு. சற்றே தொலைவில் சலமனற்று இருக்கும் அமைதியான கடல். ஒருகாலத்தில் தினசரி ரயில் ஒடி நின்ற ரயில் நிலையத்தின் அடையாளமாக  சிதிலமாக நிற்கும் ரயில் நிலையத்தின் சுவடுகள். சற்று நடந்தால  மணியில்லாமல்  மாட்டிய மணியை அடையளாம் காட்டும் முகப்பு சுவர் மட்டுமே நிற்கும் சர்ச்.  செதுக்க பட்ட பெயருடன் குட்டி கல் சுவராக நிற்கும் போஸ்டாபீஸ். எங்கும்  என்றோ நிகழ்ந்த அழிவின் எச்சங்கங்களின் மிச்சங்கள் வாசனைகளுடன். இந்து மஹாசமுத்திரத்தமும் வங்காளலவிரிகுடாவும் சங்கமிக்கும் தனுஷ்கோடி
கடற்கரையிலிருக்கிறோம். மாலை நேரம் நெருங்குவதால் கடற்காற்று சற்று வேகமாக நம்மை தொட்டுச்செல்லுகிறது. ஆனால் கடல் எந்த ஆராவாரமும் இல்ல்லாமல்தான் இருக்கிறது. 60களின் துவக்கத்தில் பள்ளியிலிருந்த காலத்தில் பேசபட்ட ஆழிப்பேரலையின் சீரழிவு நினைவலகளாக எழுந்தபோது இந்த அமைதியான கடலா அப்படி செய்தது
? என எண்ணவைக்கிறது. பயணிகளுடன் ஒரு ரயிலும், மக்களுடன் ஒரு நகரமும் வினாடிகளில் காணாமல் போன தமிழ் நாட்டின் துயரம் அது. மறந்தே போன அந்த விஷயம்  இங்கே வந்த பின் நினைவலைகளாக  மனதைத்தாக்குகிறது.  ஏன் இன்னும் செப்பனிடமால் இருக்கிறார்கள்? எனபது இந்த தேசத்தில், விடை கிடைக்காமல் இருக்கும்  பல கேள்விகளில் ஒன்று. வருவதற்கு  ரோடு என்று எதுமில்லாதால் வரவிரும்புவர்களை  ஒரு ஜீப்பில் அழைத்து வருகிறார்கள். காலயில் நம்மை அழைத்துவந்த ஜீப் ஓட்டுனர் இது தான் கடைசி டிரிப், இரவில் இந்கு தங்ககூடாது என அழைக்கிறார். கடலின் சீற்றத்தால் முன்னமே அழிந்தவிட்ட ஆனால்  அந்த கடற்கரை கிராமத்தை சூனாமி தொடத அதிசயம் கடல் அன்னையின் கருணையோ என எண்னியபடி  ராமேஸ்வர நகரதிற்குள்  நுழைகிறோம். ராமயணத்துடன் தொடர்புள்ள தனுஷ்கோடியை கடல் விழுங்கியதால்  இந்த நகரின் கடற்கரை அதன் முக்கியத்தவத்தை பெற்று வழிபட்டுதலமாகிவிட்டிருக்கிறது.  கம்பீரமான கோவில் கண்ணில் படுகிறது.  கிழக்கு நோக்கியிருக்கும் அதுதான் ராஜகோபுரம் என அறிகிறோம்.  நுழைந்தவுடன் நம்மை ஸ்தமிக்க வைக்கிறது அந்த பிரமாண்டமான  அதிகார நந்தி. கண்ணில் தெரியும் கோபம் சிற்பியின் கைவண்ணமா அல்லது  நமது பிரமையா என புரியவில்லை.  அதிலிருந்து விடுபடுவதற்குள் இடதுபுறமிருக்கும் நீண்ட பிரகாரம் நம்மை அழைக்கிறது. உலகின் மிகப்பெரிய கோவில் பிரகாரம்  என வர்ணிக்கப்படும் இந்த பிராம்மாண்டமான பிரகாரத்தில்1200க்கும் மேற்பட்ட தூண்கள்.  மிஷினில் தயாரித்து ஒர்நேர்கோட்டில் நிறுத்தபட்டதை போல நிற்கிறது. அத்துணையும் தனிமனிதர்கள் தங்கள் கைகளினால் உருவாக்கிய படைப்புகள் எனபதை நினைக்கும் போது அதன் நேர்த்தியின் பின்னே இருக்கும் நேர்மையான உழைப்பு புரிகிறது.  உயரமான பிரகாரமாகயிருப்பதால் நல்ல வெளிச்சத்தில் அந்த கல்தூண்கள் பளீரென தெரிகிறது. ஒளியும் நிழலும் ஒளிந்து விளையாடுவதை ரசித்துகொண்டு வந்ததில் மேற்கூறையிலிருக்குக்கும் அழகான வண்ணங்களில் மலர் ஓவியங்களைப் பார்க்க தவறியதை நண்பர் சொன்னபின்தான் கவனிக்கிறோம். கழுத்து வலித்தாலும்  எழுதிய ஒவியனின் வலியை நினைத்த் வினாடியில்  நம் வலி மறந்துபோகும் அத்துனை அழகு. பிரகாரத்தின் இறுதியில் இராமநாதபுர அரசர் முத்துராமலிஙக் சேதுபதியின் சிலை. அதன் கீழ் தூண்களில்  யாளிகளும் அவற்றின் கீழ் மிருகங்கள்.பட்சிகள். தாவரங்கள்.
கூறைக்கொட்டகையாகயிருந்த, ராமர் வழிபட்ட  இடத்தை பெரிய சிவ லிங்கத்துடன் கோவிலாக்கி வழிபட 1153ம் ஆண்டு  தலைமன்னாரிலிருந்து மன்னர் பரகிராமபாகு எனற இலங்கை அரசன், படகில் கற்தூண்களை கொண்டுவந்து  ஒரு சிறிய கோவிலை  ராமநாத அரசர் சேதுபதி அனுமதியுடனும், உதவியடனும் நிறுவியதாகவும் பின்னாளில் சேதுபதி அரசபரம்பரயினரின் வாரிசுகள் தொடர்ந்து கோவிலை பிரமாண்டமாக நிர்மாணித்தாகவும் வரலாறு சொல்லுகிறது. ஆனால் ராஜராஜசோழனையும், திருமலை நாயக்கரை அறிமுகபடுத்தும் வரலாற்று பாடங்கள் பள்ளி மாணவர்களுக்கு இன்றும் இந்த பிரமாண்ட படைப்பினைப் பற்றிச் சொல்லாததின் மர்மம் புரியவில்லை.
52 பாடல்பெற்ற ஸ்தலங்களில் 7வது இடத்தில் மதிக்கப்படும் இந்த கோவிலின் பெருமைகளை திருஞானசமபந்தரும், திருநாவுகரசரரும் போற்றியிருக்கிறார்கள். இந்தியாவின் பல பாகங்களில் பரவியிருக்கும் 12 ஜோதிலிங்களில் ஒன்றான  இந்த தலம் பற்றி அதிகம் அறிந்திருப்பவர்கள் நம்மைவிட வட இந்தியர்கள் என்பது இங்கு வரும் கூட்டத்தைப் பார்கும்போதும் அவர்கள்  பேசுபவற்றை கேட்கும்போதும் புரிகிறது. 
பெரிய பிரகாரங்களில் பல இடங்களில் தீர்த்தங்கள் என அழைக்கபடும் சிறு சிறு  22 கிணறுகள். இவற்றை தவிர கடலிலும் கிணற்றின் வடிவில் சில தீர்த்தங்கள். மொத்தம் 36. தீர்த்தங்கள்.  அனைவற்றிலும் மிக சிரத்தையுடன் குளித்தபின் சன்னதிக்கு பிராத்தனைக்கு வருகிறார்கள் பலர். நேபாளமன்னர்களின் குடும்ப கோவிலாகவும் அந்த குடுபத்தின் எந்தவைபமுவும் இந்த கோவிலின் ஆசி, பிரசாதங்களுடன் தான் நடைபெறுகிறது என்ற செய்தி அறிந்து ஆச்சரியபடுகிறோம்.
கோவிலின் வெளியே அருகிலிருக்கும் கடல்  நாம் ஒரு தீவில் இருப்பதை நினைவுபடுத்துகிறது. அதிக ஆழமில்லாத அந்த கடல் பகுதியில்  இந்த தேசத்தின் பல பகுதிகளில் வாழும் இந்துக்கள் தங்கள் பெற்றோர், முதாதையர்களுக்கு  இறங்கி நின்று தர்ப்பணம் என்று அழைக்கபடும்  அஞ்சலியை செலுத்துகிறார்கள். எண்ணற்ற இந்திய மொழிகளின் தொனியில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்கமுடிகிறது.  இங்கு செய்யும் இந்த புனித காரியத்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தியுடன் சொர்க்கம் அடையும் என்ற ஆழந்த நம்பிக்கை. வருபவர்களில் பலர் தங்கள் சிறுவயது குழந்தைகளுடன் வந்திருக்கும காட்சியை கண்டபோது  அந்த பிஞ்சுமனங்களில்  இப்படிவிதைக்கபடும் நம்பிக்கை விதைகள் தான்  இந்து மதம் என்ற அழியாத விருட்சம்  பல ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து வளர்கிறதோ என்ற எண்ணம் எழுந்த்தது.
ராமேஸ்வரத்தில் இந்தியாவின் அத்தனை வகை உணவு வகைகளும் கிடைக்க்கிறது. கைடுகள் சரளமாக பல் மொழிகளில் அசத்துகிறார்கள். மொழிகளை கற்றகொண்ட திறமையில் பாதியையாவ்து நேர்மையை கற்று கொள்ள செலவிட்டிருக்கலாம். தமிழ்நாட்டைபற்றிய தவறான எண்ணங்களை எளிதில் ஏற்படுத்தும் விஷயங்களை எந்த கவலையையும் இல்லாமல் இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு 60 ஆயிரத்திற்குமேல் சுற்றுலா பயணிகள் வருவதாக கணக்கு சொல்லும் துறை இதற்கும் நகரின் தூய்மைக்கும் எதாவது செய்யக்கூடாதா என்ற ஆதங்கம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

 ராமேஸ்வரம் நகரைவிட்டு வெளியே வரும் நம்மை நின்று கவனிக்க சொல்லுகிறது பாம்பன் பாலம். கப்பல்கள் வந்தால் திறந்துகொள்ளும், ரயில்வரும்போது மூடிக்கொள்ளும் தண்டவாளுங்களுடன் இரண்டு கீமீட்டருக்கு நீண்டு நிற்கும் இந்த பாலம் ஒரு இன்ஞ்சினியரிங் சாதனை.  உலகிலேயே இப்படிபட்ட பாலம் இது ஒன்றுதான். தனது 100வது பிறந்தநாளை இந்த கடலைபோல ஆர்பாட்ட இல்லாத இந்த கடலைப்போல அமைதியாக  சமீபத்தில் கொண்டாடியது. தொடர்ந்து மண்டபம் சாலையில் பயணிக்கும் நம்மை கவர்வது நீல கடலின் பின்ணணியில் காவிவண்ண முகப்புடன் கம்பீரமாக நிற்கும் அந்த மண்டபம். சிக்காகோவில் உலக பாராளுமன்ற கூட்டத்தில் உரை நிகழ்த்தியபின் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்து இலங்கை வழியே தாய் நாடு திரும்பிய விவேகான்நதர் முதலில் காலடி எடுத்தவைத்த இடம் இந்த  ராமேஸ்வரம் கடற்கரை பகுதிதான்.  விவேகானந்தர்  இந்தியா திரும்போது  முதன் முதலில் வரவிரும்பிய இடம் ராமனாதபுர சமஸ்தானம். காரணம்  சிக்காகோ கூட்டத்திற்கு தனக்கு வந்த அழைப்பை  தன்னைவிட தகுதி வாய்ந்தவர் என விவேகானந்தருக்கு அளித்து பயணத்திற்கு பணம் மற்றும் பல உதவிகளைச்செய்தவர் ராமநாத சமஸ்தானத்தின் மன்னர் பாஸ்கர சேதுபதி. 1897 ஜனவரி 26ல் இலங்கையிலிருந்து ஒரு நீராவிபடகில் பயணித்து பின் ஒரு சிறு படகில் கரையை அடைந்த விவேகானந்தரை வரவேற்க மக்களுடன் காத்திருந்த மனனர் படகின் அருகே  ஒருகாலை மடக்கி மண்டியிட்டு தன் கைகளில் விவேகானந்தரின் பாதத்தை பதித்து இறங்க வேண்டுகிறார். மிக லாவகமாக குதித்து அதை விவேகானந்தர் தவிர்த்து இறங்குகிறார். மக்கள் சார்பில் நடைபெறும் பெரிய  விழாவில் வரவேற்பு பத்திரம் வாசித்து அளிக்கபடுகிறது. மன்னரே மண்டியைட்ட அந்த இடம்  இன்று குந்தகால் என்று அழைக்கபடும் ஒரு மீனவர்களின் குடியிருப்பு. அங்கு ராமகிருஷண மிஷினும் தமிழக சுற்றுலாத்துறையினரும் இணைந்து 1 கோடி யில் ஒரு நினைவு மண்டபத்தை எழுப்பியிருக்கிறார்கள்.  கவருகிறது. அமைதியான அழகான கடற்கரையில்  மண்டபத்தின் உள்ளே கம்பிரமாக நிற்கும் விவேகானந்தர், பக்க சுவர்களில்  படங்களுடன் அவரது செய்திகள் ஒரு சின்ன அருங்காட்சியகம், பிரார்த்தனை கூடம் இவ்ற்றுடன்  மன்னர் பாஸ்கர சேதுபதியின் சிலையும். அந்த இடத்தில்வாசித்தளிக்கபட்ட வரவேறபுரையையும், அதற்கு  விவேகானந்தர் ஆற்றிய  நிண்ட ஆங்கில சொற்பொழிவையும் வைத்திருக்கிறார்கள். அதில் நம்மை கவரும் இந்த பகுதி
 மதிற்பிற்குரிய மன்னருக்கும் அன்பான ராமநாதபுர மக்களுக்கும் என் மனம்கனிந்த நன்றி. உங்களது உணமையான அன்பை புரிந்து கொள்ள  அன்பு மனக்களை  உணர எனக்கு மொழி  அவசியமில்லை. ராமநாத மன்னரே,  இந்த எளியவனால் மேலை நாடுகளில் நமது மதத்திற்கு எதாவது செய்ய முடிந்திருந்தால்,   நம்மக்களிடம் இதுவரை  அறியப்படாத பொக்கிஷமான் ந்ம் மதங்கள் பற்றிய உணர்வை தூண்ட முடிந்திருந்தால்,  நமது மதங்களின் பெருமையை மக்கள் உணர எதாவது செய்ய முடிந்திருந்தால் அந்த பெருமை அனைத்தும்  உங்களையே சேரும். அமெரிக்கா போகும் எண்ணத்தையும்,  அதற்கு அத்தனை உதவிகளையும் செய்து தொடர்ந்து பயணம் செய்ய வற்புறத்தியவர்கள் நீஙகள்.  நிகழப்போவதை அறிந்து  என்னை கைபிடித்து அழைத்து சென்று தொடர்ந்து உதவியிருக்கிறீர்கள். அதனால் என் பயண வெற்றியின் சந்தோஷத்தை தாய்நாட்டில் முதலில் உங்கள் மண்ணில் காலடிவைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
 காசியில் துவங்கும் புனித யாத்திரை ராமேஸ்வரத்தில் முடிய வேண்டும் அல்லது காசி சென்ற பலன் கிடைப்ப்தில்லை எனப்து இந்துகளின் நமபிக்கை. ராமர் கால்பட்ட, விவேகானந்தரை வரவேற்க மன்னன் மண்டியிட்ட, அந்தமேதை கால்பட்ட இந்த பூமியில் நம் தடங்களையும் பதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி, காசி நகருடன் துவக்கிய கட்டுரைகளை  மகிழ்வுடன் நிறைவு செய்வது இங்கே