3/2/16

உயிர் காப்பான் தோழன்.


நீர் நிறைந்த அந்த ஏரியின் நடுவே மிதக்கிறதோ என்ற எண்ணத்தை எழுப்பும் அந்த அழகான பிரம்மாண்டமான  அரண்மனையைக் கரையிலிருந்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். நீரில் நனைந்த பின் இதமாக நம்மைத் தொட்டுச் செல்லும் மெல்லிய காற்று. மெல்லிய குரலில் பேசிக்கொள்ளும் வெளிநாட்டு டூரிஸ்ட்கள். இந்தியாவின் அழகிய நகரங்களில் ஒன்றான உதய்ப்பூரில் பிச்சலோ ஏரி அருகே இருக்கிறோம். நகரில் இது போலப் பல ஏரிகள் இருந்தாலும் அத்தனையும் செயற்கையாக உருவாக்கப் பட்ட ஏரிகள் என்ற தகவல் ஆச்சரித்தை தருகிறது. நகரில் பல அழகிய அரண்மனைகள், மலைச்சரிவுகளிலிருக்கும் கோட்டைகள் அனைத்தும் ஆடம்பர ஹோட்டல்களாகி மன்னர் பரம்பரையினருக்கு டாலர்களை குவித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக எழுந்துகொண்டிருக்கும்  கட்டிடங்கள் கூட மன்னர் கால பாணியில் இருப்பதிலிருந்து ராஜஸ்தானியர்களுக்கு தங்கள் பராம்பரியத்தின் மீதுள்ள ஆர்வம் புரிகிறது.டூரிஸ்ட்களுக்கு  உள்ளூர் கைவினைப்பொருட்கள் விற்கும் கடைகள் நிறைந்திருக்கும்  பகுதியில்  நம்மைக் கவருவது  சாலைகளின் சந்திப்பில் இருக்கும் அந்தக் கம்பீரமான வெள்ளைக் குதிரையின் சிலை. வீரன் எவரும் இல்லாமல் தனியாக ஒரு குதிரையின் சிலை நிற்பது சற்று வினோதமாக இருந்தது. நகர சதுக்கங்களில் நிற்கும் குதிரை சிலைகளை வடிவமைப்பதில் உலகெங்கும் சில மரபுகள் கடைப்பிடிக்கபடுகிறது. குதிரையின் இரண்டுகால்கள் தரையிலிருந்து தூக்கிய நிலையிலிருந்தால் அதன்மீது இருக்கும் வீரன் போரில் இறந்தவர். ஒரு கால் மட்டும் தூக்கியிருந்தால் அதன் மீது இருக்கும் மன்னர் போரில் படுகாயமுற்றவர். நான்கு கால்களும் தரையிலிருந்தால் அதன் மீது இருக்கும் மன்னர் போரில் மரணமடையாதவர்.  இந்தச் சிவப்பு சேணமிட்டிருக்கும்  வெள்ளைக்குதிரை ஒற்றை காலைத் தூக்கி நிற்கிறது. ஏன் அதன்மீது மன்னர் எவரும் இல்லை என்று .விசாரித்ததில் அந்தக் குதிரையின் பெயர் சேத்தக். அது ராணாவுடையது. ரஜபுத்திரர்களின் பெருமைக்குரிய சின்னம் என்பதையும் சொன்னவர்  உள்ளூர் மீயூசியத்தில் மாலயில் நடைபெறும் ஒலிஒளி காட்சிக்குப் போனால் அதனுடைய வீரக்கதையை தெரிந்துகொள்ளலாம் என்றார். நம் ஆர்வம் அதிகமாகிறது.அந்த அருங்காட்சியகத்திலிருக்கும் ஒவியங்கள் ஒவ்வொன்றும் நம்முடன் பேசுகிறது. அத்தனை தத்ரூபம். ராஜ கம்பீரத்துடன் ராணாக்கள், தான் மணக்கப்போகும் நாயகனின் படத்தைப் பார்த்து நாணும் இளவரசி, கொழுந்துவிட்டு எரியும் தீயில் குதிக்க தயாராக ராஜகுடும்பத்தினர் என எல்லா ஒவியங்களுமே நம்மை மேலே நகரவிடாமல் நிற்க வைக்கிறது.ஒலி ஒளிகாட்சிக்கு அறிவிப்பு செய்யபட்டவுடன் குன்றின் மேல் பகுதிக்குச் செல்லுகிறோம். அங்கு ஒரு சதுக்கத்தில் ராணா பிராதப் சிங்க்கு நினைவுசின்னம். உயரமான மேடையில் ஒரு காலைத் தூக்கிய நிலையில் இருக்கும் குதிரையின் மீது ராணா ஈட்டியுடன் அமர்திருக்கிறார்.
மரணபூமி என்று அழைக்கபட்ட பாலைவனமும் பாறைகளும் நிறைந்த பூமிக்கு விரட்டபட்டு குழுக்களாக வாழ்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கை போராட்டதில் வென்று ரஜபுத்திர்கள் என்ற இனத்தை உருவாக்கிப் பின்னர் ராஜஸ்தான் தேசத்தையே உருவாக்கிய கதையைச் சொல்லும் ராஜஸ்தானி மொழி நாட்டு பாடலுடன் காட்சி துவங்குகிறது. எந்த வளமும் இல்லாத அந்தப் பகுதியிலிருக்கும் மார்வாரி என்ற குதிரைகளின் அபார திறன் கண்டு வியந்து அதை இனப்பெருக்கும் செய்து அண்டை நாட்டு மன்னர்களுக்கு விற்று செல்வம் சேர்த்து வளர்ந்தார்கள் என்று நீள்கிறது அந்தக் கதை. மொழி புரியாவிட்டாலும் இசையில் கிராமிய இசையின் மணமும் கனமும் புரிகிறது. ஆங்கிலத்தில் தொடரும் அந்த நிகழ்ச்சியில் ராணாவின் கதை சொல்லபடுகிறது. 1570 களில் ரஜபுத்தர்களின் தேசமான ராஜஸ்தானை ஆண்டுவந்தவர் ராண பிராதப் சிங். ராணா என்பது மன்னரின் பிரநிதி என்பதைக் குறிக்கும் சொல். அப்படியானால் மன்னர்யார்?. அங்குள்ள சிவபெருமான் தான் அரசர்  அவர் சார்பில் ராணாக்கள் தேசத்தை நிர்வாகம் செய்துவந்தார்கள்.சாம்ராஜ்ய எல்லைகளை விரிவாக்கத் துடித்த மொகாலய மன்னர்களின் இலக்கானது ராஜஸ்தான். அதனால் ரஜபுத்திரர்கள் தாங்கள் வாழ்ந்து வந்த ஆரவல்லி மலைக்குன்றுகள் மீது நீண்ட மதில் சுவர்களை அரணாக எழுப்பியிருந்தனர். எதிரிப் படைகள் மலைப்பகுதியில் ஏறி வந்தால் கூட மதில்களைப் படைகள் தாண்ட முடியாது என்பது அவர்கள் எண்ணம். அப்படியே வந்தாலும் போரிட பயிற்சி பெற்ற குதிரைகளையும் வைத்திருந்தார்கள். அதில் ஒன்றுதான் சேதக். ராணாவின் குதிரை.. ஆனால் இந்த பிரதேசத்தைத் தன் சாம்ராஜ்யத்துடன் இணைக்க முடிவு செய்த அக்பர் இவர்களைச் சமாளிக்க  யானைகள் கொண்ட ஒரு படை அணியை உருவாக்கிப் படையெடுத்து வருகிறார். நகருக்குள் நுழைவதற்காக ரஜபுத்திரர்கள் ஏற்படுத்தியிருக்கும் குறுகிய நுழைவாயிலை யானைப்படைகள் மூலம் தகர்த்துவிட்டு உள்ளே சென்று மலையிலிருக்கும் நகரைப்பிடிக்க திட்டம்அக்பரின் யானைப்படையை துணிவுடன் அவரது குதிரையான சேத்க்குடன் சந்திக்கிறார். ராணாபிராதப். .வெகுண்டு வரும் யானையைப் பாய்ந்து சென்று யானையின் கண்களைத் தன் குளம்புகளின் மூலம் பார்வையிழக்க செய்கிறது சேத்தக். கண் தெரியாமல் போனாலும் யானை தன் தந்தங்களினால் சேத்தக்கின் வயிற்றை கிழிக்கிறது. விழுந்த சேத்தக்கின் பின் கால்களில் ஒன்று முறிகிறது. உயரமான யானைமீது இருக்கும் தளபதியின் வேல் எளிதாக ராணாவை காயப்படுத்துகிறது.தன் மீது இருக்கும் ராணா காயமடைந்தவிட்டதால் உடனே சேத்தக் களத்தைவிட்டு ராணாவுடன் தப்பி ஓடுகிறது. மூன்று கால்களுடன் பலமைல்கள் ஒடி ஒரு சிற்றோடையை தாண்டி கடக்கும்போது அடிபட்டு இறந்துவிடுகிறது. நாட்டுடன் தன் அருமைத்தோழனை இழந்த துக்கத்தில் ராணா காட்டிலேயே நீண்ட நாள் வாழ்கிறார். அந்தக் குதிரை விழுந்த இடத்தில் சேத்தக்கின் விசுவாசத்தையும் புத்தி கூர்மையையும் பாராட்டி கல்வெட்டுடன் ஒரு சமாதியை நிறுவுகிறார். இன்றும் அது அங்கிருக்கிறது.குதிரைகளின் குளம்பொலிகளுடன் யானைகளின் பிளரியின் பின்னணியில்ராணா போரில் தோற்றிருக்கலாம் ஆனால் மார்வாரி சேத்தக் தன் ராஜவிசுவாச கடமையில் வென்றுவிட்டதுஎன்ற முதலில் கேட்ட நாட்டு பாடலுடன் நிகழ்ச்சி முடிகிறதுகாட்சி முடிந்து திரும்போது இரவில் மெல்லிய நீல வண்ண ஒளியில் மீண்டும் அதைப்பார்த்தபோது அதற்கு ஒரு சல்யூட் வைக்க வேண்டும் என்று தோன்றிற்று.