26/10/18

எங்க ஊர்ல திருவிழா.. வாங்க

 கலாச்சாரவிழாக்கள், கவியரங்கம், ஆன்மீக சொற்பொழிவுகள் இசை, நடன நிகழ்ச்சிகள் இலக்கியக் கூட்டங்கள் என நெல்லை நகரமே  விழாக்கோலத்துடன்  குலுங்கிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்களும், கலைஞைர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.  தினசரி வெளியூர்களிலிருந்து வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டிருப்பது அல்வாகடைகள் விற்பனையில்  தெரிகிறது.பொதிகை மலையில் புறப்பட்டுப் பாய்ந்தோடிவரும் தாமிரபரணி தமிழகத்திலேயே பிறந்து தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரு வற்றாத ஜீவ நதி. இதில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் “தாமிரபரணி மகா புஷ்கர விழா” அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அண்மையில் மலைத்தொடர்களில் தொடர்ந்து பெய்த மழையால் பாய்ந்துகொண்டிருக்கிறக்கும் புதுப்புனலைப் பார்க்கும்போது தாமிரபரணியே மகிழ்ச்சியில் பொங்குவது போலிருக்கிறது.தமிழகத்திலிருந்து மட்டுமில்லை இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவில் பக்கதர்கள் வந்துகொண்டிருக்கின்றனர் பொதிகையின் அடிவாரமான பாபநாசத்தில் தாமிரபரணியின் பிரவாகம் தொடங்குகிறது. பாபநாசத்தில் தொடங்கி அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர் எனப் பயணம் செய்யும், தாமிரபரணி நதியின் இருகரைகளிலும் உள்ள 200 புஷ்கரணி படித்துறைகள் (தீர்த்தக்கட்டம்) சீரமைக்கப்பட்டு, பக்தர்களின் தீர்த்தமாடுதலுக்காகத் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை தாமிரபரணி நதி பாய்ந்துசெல்லும் 127 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பக்தர்கள் தீர்த்தமாடலாம். தாமிரபரணி என்பது பல சிறிய நதிகளின் சங்கமம். மாஞ்சோலையில் மணிமுத்தாறு, கடனாநதி, ஜம்புநதி, ராமா நதி பச்சையாறு குற்றாலம் சிற்றாறு எனப் பலநிறு நதிகளை இணைத்துக்கொண்டு மாவட்டம் முழுவதும் பயணிக்கிறது இந்த நதி.
புஷ்கரம் என்ற சொல்லுக்கு தீர்த்தமாடுதல் என்று பொருள். புஷ்கரணி என்றால் தீர்த்த கட்டம். அதாவது குளியலுக்கான சாதாரண படித்துறை அல்ல. அதைவிடப் புனிதமான ஆன்மிக தீர்த்தமாடும் தலம்.. நதிகளை வணங்கும் விழாக்கள் 'புஷ்கரம்' என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நதி என்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 புண்ணிய நதிக்கரைகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்தப் புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.அதாவது, ஒவ்வொரு நதிக்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் நடைபெறும். அதுவே, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹாபுஷ்கரமாக கொண்டாடப்படுகிறதுபுஷ்கர விழாவுக்குப் பின்னால் ஒரு சுவையான புராணமிருக்கிறது. .புஷ்கரம் என்பது பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புனித தீர்த்தம். உலக மக்கள் நீராடிப் புண்ணியம் பெறுவதற்காக அந்தத் தீர்த்தத்தைப் பெற விரும்பினார் குருபகவான். அதற்காகப் பிரம்மதேவரை வேண்டித் தவம் இருந்தார். குருபகவானின் தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர், அவருக்கு முன்பு தோன்றி, ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார். குருபகவானும் 'பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர தீர்த்தம் வேண்டும்' என்றார்.புஷ்கர தீர்த்தத்தை குருபகவானுக்குத் தருவதில் பிரம்மதேவருக்குச் சம்மதம்தான். ஆனால், புஷ்கரமோ பிரம்மதேவரை விட்டுப் பிரிய சம்மதிக்கவில்லை. அதேநேரம் குருபகவானுக்கு ஏமாற்றம் அளிக்க விரும்பாத பிரம்மதேவர், புஷ்கரத்துக்கும் குருபகவானுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை செய்துவைத்தார். அதன்படி குருபகவான் எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் குறிப்பிட்ட காலம் புஷ்கரம் சேர்ந்திருக்கும் என்றும், அப்போது அந்த நதியில் நீராடினால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்றும் முடிவானது.ஒவ்வொரு ஆண்டும் குரு எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதிகளில் இவர் வசிப்பாராம். அப்படி வசிக்கும்போது அந்த நதிகளில் நீராடுவது புண்ணியமாகக் கருதப்படுகிறது. அதன் படி குரு மேஷத்தில் இருக்கும்போது கங்கா புஷ்கரம், ரிஷபத்திற்கு நர்மதா, மிதுனத்திற்கு சரஸ்வதி, கடகத்திற்கு யமுனா, சிம்மத்திற்கு கோதாவரி, கன்னிக்கு கிருஷ்ணா, துலாம் ராசிக்கு காவேரி, விருச்சிகத்திற்கு பீமா மற்றும் தாமிரபரணி, தனுசு ராசிக்கு தப்தி மற்றும் பிரம்மபுத்ரா, மகரத்திற்கு துங்கபத்ரா, கும்பத்திற்கு சிந்து நதி, மீன ராசிக்கு பிரன்ஹிதா என வரையறுக்கப்பட்டுள்ளது.தாமிரபரணியில் இதற்கு முன் புஷ்கர கொண்டாடியதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. இது இந்துவதாக் காரர்கள் கண்டுபிடித்துக் கொண்டாட வேண்டும் என்று சொல்லி மத உணர்வுகளை எழுப்புகிறார்கள் என்ற குரலும் எழுந்திருக்கிறது.முந்தைய நிகழ்வுகளுக்கு ஆதாரமாகப் பதிவுகள் இல்லாமலிருக்கலாம் ஆனால் இது பின்பற்றவேண்டிய ஒரு மரபு. கடந்த ஆண்டு துலாம் ராசியில் குரு இருந்தபோது, தமிழகத்தில் காவேரி புஷ்கரம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டபோதே இதுபற்றி விவாதிக்கப் பட்டுக் காஞ்சி, ஶ்ரீருங்கேரி மடாதிபதிகள், ஆன்மீக வாதிகளுடன் கூட்டங்கள் நடத்தித் தீர்மானிக்கப்பட்ட விஷயம்.இந்த ஆண்டு குரு விருச்சிகத்திற்கு வருவதால், தமிழ்நாட்டில் தாமிரபரணியிலும் மஹாராஷ்டிராவில் பீமா நதிக்கரையிலும் புஷ்கரம் நடத்த அந்தக் கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டது. . அதுமட்டுமில்லை. .2026 வரை நாட்டில் எந்தெந்த நதிகளில் இப்படி புஷ்கரம் கொண்டாடப்பட வேண்டும் என்ற பட்டியலையும் தயார் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் ஆன்மீகக் காவலர்கள்
தாமிரபரணி மகா புஷ்கரத்தையொட்டி அன்னை தாமிரபரணிக்கு தாமிரத்தால் ஆன இரண்டரை அடி உயரச் சிலை மற்றும் 1 அடி உயரத் தாமிர அகத்தியர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.மாநில அரசு இந்தப் புஷ்கரத்திற்கான ஏற்பாடுகளை சரியாகச் செய்யவில்லை எனப் பாஜக தலைவர் பேசியவுடன், இருக்கும் தலைவலிகளுடன் இதுவும் சேர வேண்டாமென்று எண்ணிய மாநில அரசு அவசர கதியில் பல படித்துறைகளை சீமைத்து பாதுகாப்பு, மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறது.
நம்பிக்கைகள் ஆயிரம் இருந்தாலும், புஷ்கரம் நடத்துவதன் மூலம், தாமிரபரணி போற்றப்படுவதும், சுத்தமாக்கப்பட்டு பாதுகாக்கப்படுவது ஒரு மகிழ்ச்சியான விஷயம்

இன்டர்போல் தேடும் அதன் தலைவர்


இன்டர்போல் என்ற  அகில உலக போலீஸ் நிறுவனத்தின் தலமையகம்  (Lyon, France) பிரான்ஸ் நாட்டின் லியான் நகரிலிருக்கிறது. இன்டர்போல் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டாலும்  இதன் பெயர் இன்டெர் நேஷனல் போலீஸ் கமிஷன்.  இன்டெர்போல் என்பது அதனுடைய பதிவுசெய்யப்பட்ட தந்தி விலாசம். உலக அளவில் கிரிமினல் குற்றஙளை தடுக்க, கண்டுபிடிக்க உதவும் 95 வயதாகும் இந்த  சர்வ தேச அமைப்பில்  இந்தியா உட்பட 192 நாடுகள் உறுப்பினர்கள். தனி நபர்களிடமிருந்து புகார்களை நேரிடியாக  பெறாத  இந்த அமைப்பிடம் அண்மையில் ஒரு பெண்மனி அளித்த புகார் “ ஒருவாரமாக என் கணவரைக் காணோம் தொடர்பு கொள்ள முடியவில்லை கண்டுபிடியுங்கள்”



அந்தப்பெண்ணின் கணவர்  மெய்ங் ஹாங்வாய். அவர்    இன்டர்போல் அமைப்பின்  தலைவர். ஆம். இன்ட்ர்போலின் தலைவர் காணாமல் போயிருக்கிறார். தகவல் கிடைத்த்தும் அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள்.

 இன்டர்போல் அதிகாரிகளின்  பயணங்கள் திட்டங்கள் ரகசியமானவையென்பதால்  திரு மெய்ங் ஹாங்வாய் அலுவலகத்திற்கு வராதால் அவர் பணி நிமித்தும் ஏதோ பயணத்திலிருக்கிறார் என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் காணாமல் போயிருக்கிறார் என்றதும் செயலில் இறங்கினர் பிரான்ஸ் போலீஸ் குழுவினர்
இந்த சர்வதேச காவல்துறையான இன்டர்போல் அமைப்பின் தலைவர் மெங் ஹாங்வெய் சீன நாட்டை சேர்ந்தவர் இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் லியான் நகரில்  வசித்து வருகிறார். இன்டர்போலின் தலமை அதிகாரி  உறுப்பு நாடுகளால் பரிந்துரைக்கப்பட்ட அவர்களின்  உயர் மட்ட போலீஸ் அதிகாரிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்
.அண்மைக்காலமாக சீனா சர்வ தேச  அமைப்புகளில் பங்கு பெறவும் தலமைப் பதவிகளைப் பெறவும் ஆர்வம் காட்டி வருகிறது  அதன்படி 2016ல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சீன நாட்டின் பாதுகாப்பு துணை அமைச்சராகயிருந்த மெங் ஹாங்வெய் தேர்ந்தெடுக்கபட்டார்.  இவரது பதிவிக்காலம் 2020 வரை. இன்டர்போலில்  இம்மாதிரி பதவி  பெற்றாலும் தங்கள் நாட்டின் போலிஸ் பதவியிலும் தொடர்ந்து நீடிப்பார்கள் இம்மாதிரி அதிகாரிகள்
இந்த நிலையில் தான் கடந்த  செப்மாத இறுதியில் இவர் காணாமல் போய்விட்டார்.  செல் போனில் தொடர்பு கொள்ள முயன்ற இவரது மனைவிக்கு எஸ்எம்எஸ்ஸில்  வந்தது ஒரு சின்ன கத்தியின் படம் (emogi)    . “நான் ஆபத்திலிருக்கிறேன்” என்பதின் ரகசிய அடையாளம் அது. . அதனால் அவர் உடனே இன்ட்ர்போல் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு காணவில்லை என்ற தகவலை சொல்லியிருகிறார். .
காணமல் போனவரைத்தேட ஆரம்பித்த பிரான்ஸின் போலீஸ் ஆராய்ந்து கண்டுபிடித்த விஷயம் அவர் கடைசியாக சீனாவிற்குப் பயணம் செய்திருக்கிறார் என்பது. இன்டர்போலின் கேள்விகளுக்கோ பிரான்ஸ் போலீஸின் விசாரணைகளுக்கோ  சீன அரசு உடனடி பதில் எதுவும் தெரிவிக்க வில்லை.
10 நாட்களுக்கு பின்னர்  இன்டர்போலுக்கு மெங் ஹாங்வெயின் ராஜினாமா கடிதம் இ மெயில் வந்தது. அதே நாளில்  சீன அரசிடமிருந்து இன்டர்போல் நிறுவனத்துக்கு  வந்த கடிதம்.  ‘திரு மெங் ஹாங்வெய்,, சட்ட விதிமீறல் குற்ற சந்தேகங்களை விசாரிக்கும் தேசிய கமிழனின் விசாரணியிலிருக்கிறார், என்றது. ..சீன அரசு அழைத்துப்போனாரா? அல்லது அழைத்துக்கொண்டு போகப்பட்டாரா? என்ற கேள்வி  இப்போது எழுந்திருக்கிறது.
சீனாவில் உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகளில் சிலர்  இப்படி  காணமல் போவதும்  சில நாட்களுக்குப் பின்னர் அவர்கள் விசாரணைக்காக அழைத்துசெல்லபட்டிருக்கிறார்கள் எனறு செய்தி வருவதும் வாடிக்கை. ஆனால் உலகின் உயர் போலீஸ் அதிகாரியாகயிருந்தாலும்  அதேதான் நிலை என்பது ஆச்சரியமாகயிருக்கிறது. 

18/10/18

இந்தோனிஷியாவை துரத்திய துயரம்


பால்வெண்மைநுரைகளை கரையிட்டஅலைகளை நீட்டும் கருநீலக்கடலும், பஞ்சுப்பொதியாக மேகங்கள் மிதக்கும்  நீலவானமும் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் மலைகளும் கொண்ட இந்தோனிஷியாவின்  அழகான இயற்கை அண்மையில்  தன் கோரமுகத்தை காட்டி உலகையே நடுங்க வைத்திருக்கிறது.
ஒரே நேரத்தில் சுனாமி, பூகம்பம் ஒரு இடத்தைத் தாக்கினால் என்னவாகும்? என்பதை உலகம்  முதல் முதலாகப் பார்த்து  அதிர்ந்த  காட்சி அது. இயற்கையின் கோரதாண்டவத்தால்  இந்தோனிஷியாவின் நகரங்களான பலு, டோங்காலா, மமுஜூ ஆகிய 3 நகரங்களை சுனாமி விழுங்கி உள்ளது. டோங்காலாவில் இந்த கட்டுரையை எழுதும் வரை  மீட்புக்குழுவினரால் நுழைய முடியாத அளவுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள லட்சக்கணக்கான மக்களின் கதி என்னவென்று தெரியவில்லை
இந்தோனிஷியாவிற்கு  சுனாமி புதிதல்ல, அனேகமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து விசாரித்துவிட்டுபோகும். பூகம்பமும் புதிதல்ல ஏதாவது ஓரிடத்தில் அவ்வப்போதுவெடிப்பது வாடிக்கை.  ஆனால் இரண்டும் ஒரே நேரத்தில் இந்தத் தீவுகளை தாக்கியிருப்பது, அதுவும் மிகப்பெரிய அளவில் தாக்கியிருப்பது இப்போதுதான் .  
இந்தோனேசியாவின் சுலாவேசி தீவின் மத்தியப் பகுதியில் அண்மையில் ஒரு மாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்தப் பூகம்பம், ரிக்டர் அளவுகோலில் 8.5 புள்ளியாகப் பதிவானது. இந்தப் பூகம்பத்தால் பலு, டோங்காலா  நகரங்கள் அதிர்ந்தன. அடுத்த சில நிமிடங்களில் பலு கடற்கரை பகுதியில் சுமார் 18 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து சுனாமி பேரலைத் தாக்கியது.
சுனாமியால் கடற்கரையை ஒட்டிய வீடுகள், கட்டிடங்களில் கடல் நீர் புகுந்தது. அங்குள்ள பிரமாண்ட மசூதி சுனாமி அலையில் இடிந்து தரைமட்டமானது. பூகம்பம், சுனாமியால் தகவல் தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டதால், உடனடியாக தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், . பலு நகரில் 3.5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோரைக் காணவில்லை. சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட பலரின் சடலங்கள் தொடர்ந்து கரை ஒதுங்குவதால், அந்நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது. சாலைகளிலும், திறந்தவெளி இடங்களிலும்  சடலங்கள் குவியல் குவியலாக சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளிலும், சேறு, சகதிகளிலும் குழந்தைகளின் சடலத்துடன் பலர் கதறி அழும் காட்சிகளை பிபிசிடிவியில் பார்த்தவர்கள்  நிச்சியம் பதறியிருப்பார்கள்.
 சுனாமி வந்தவுடன்  உயரமான கட்டிடங்களின்  உச்சிக்குச் சென்றுவிட வேண்டும் என்ற தற்காப்பு முறையறிந்த மக்கள் இவர்கள்.  ஆனால்  மிக உயரமான ராட்சஅலைகள்  பெரிய உயரமான   மால்கள், பெரிய கட்டிடங்கள்  எல்லாவற்றையுமே உருட்டிபோட்டது... பல இடங்களில் சாலைகள் தகர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் இருளில் தவிக்கின்றனர் பலுநகர விமான நிலையத்தின் ஓடுபாதைகள் சேதமடைந்துள்ளதால். மீட்புப் பணிகளுக்காக சென்ற விமானம் தரையிறங்கமுடியாமல் தவிக்கிறது. 
டோங்காலா நகரில்  சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள்  அனைவருமே பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நகரில் ஒரு மசூதியில் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரத்தில் உள்ளே புகுந்த சுனாமி,அவர்களோடு அந்த மசூதியையும் அழைத்துசென்றுவிட்டது
இந்த நகரில் கடற்கரை அழகானது. அங்கு கடலுக்கு நன்றி சொல்லும்  கடற்கரை திருவிழா  ஆண்டுதோறும் நடக்கும். இப்போது இதை டூரிஸ்ட்களை கவர  ஆர்ப்பாட்டமாக நடத்துகிறார்கள்.  வெளிநாட்டுப்பயணிகள் பலர் பங்குகொண்டிருந்த விழாவிற்கு அழையா விருந்தாளியாக  சுனாமியும் வந்து சேர்ந்து அனைவரையும் விழுங்கி சோகத்தில் விழாவை முடித்துவைத்திருக்கிறது. நிவராணபணிகளுக்கு அமெரிக்க பெரும்ளவில் நிதிமற்றும் இதர உதவிகள் செய்திருக்கின்றன. பல நாடுகள் நிவாரணப்பணி படைகளை அனுப்பிக்கொண்டிருக்கின்றன. அன்னிய உதவிகளை ஏற்பதில்லை என்ற தன் கொள்கைகளை இந்தோனிஷிய அரசு தளர்த்திக்கொண்டிருக்கின்றது

இந்த இந்தோனிஷியாவில்  மட்டும் ஏன் இந்த கோர தாண்டவம்?
“பசிபிக்கின் ‘நெருப்பு வளையம்’ என கூறப்படும் இந்தோனேஷியாவில் தான் உலகிலேயே அதிகளவில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் நடக்குமிடம். காரணம் இந்த நாடு ஒரு வினோதமான நில அமைப்பைக் கொண்டது.  கடல் சூழ்ந்த தீவுகளின் மேலே  எப்போது வேண்டுமானாலும் நெருப்பைக் கொட்டும் எரிமலைகள் சூழ்ந்த தேசம்.
ஒரு தேசத்தின் பகுதியாக சில தீவுகள் இருக்கும்.  ஆனால் பல தீவுக் கூட்டங்களே ஒரு தேசமாகியிருந்தால்? அது தான் இந்தோனிஷியா. (இந்த இடத்தில் எத்தனைத் தீவுகள் தெரியுமா 13000க்கும் மேற்பட்ட பல சைஸ்களில்  தீவுகள். மலைகளும் காடுகளும் நிறைந்த இந்த தீவுகூட்டத்தில் 6000 தீவுகளில்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். பல மொழிகள் இனங்கள் கலாச்சாரங்கள்  கொண்ட இந்தத் தீவுகளை இணைத்து உருவானது தான் இந்தத் தேசம் இதில் முக்கியதீவுகள் ஜாவா,சுமத்ரா,போர்னியோ சுலவாசி.
இந்த சுலவாழி தீவின் நகரங்களில் தான் இந்தப் பேரழிவின் உச்சகட்டம்..  இந்தத் தீவுகளில் பல இடங்களில் இருப்பது எரிமலைகள். இருக்கும் 400 எரிமலைகளில் 130 மலைகள “இயங்கும் நிலையிலிருப்பவை”. அதாவது  அது விரும்பும்போது  வெடித்து நெருப்பைக் கொட்டும். அப்படி வெடிக்கும் சில வினாடிகள் முன் பூகம்பம் வரும். இதே கடலிலுள்ள மலைகளில் நிகழ்ந்தால்  விளைவது சுனாமி. 
.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரிய, பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்கிறார்கள்  புவியியல் நிபுணர்கள்  இந்தத்  தத்துவப்படி  ஆஸ்திரேலியா பகுதியிலிருந்து நகர்ந்த பெருமலைகள் நின்ற இடம் இன்றைய இந்தோனிஷியாவென்றும் அந்த  மலைகள் இந்தப் பகுதி கடலுக்கு அடியிலிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மலைகளில் எழும் அதிர்வினால், நில நடுக்கத்தால் அதன் மேற்பரப்பான கடலில் அலை பொங்கி  மிகப்பிரம்மாண்டாமாக எழுந்து தரையை தாக்குகிறது.  அது தான் சுனாமி. 
இந்த பூவியல் அமைப்பினால் தான்  இந்தோனிஷியப்பகுதிகளில் மிக அதிக அளவில் பூகம்பமும் சுனாமிகளும் நிகழ்கின்றன.
முன்னதாக அறிய முடியாதா?
ஆழங்காணமுடியாத பிரபஞ்ச ரகசியங்களை அறிய, செவ்வாய் கிரகத்திற்கே பயணம் செய்ய கலத்தை உருவாக்க உதவும் தொழில்நுட்பங்கள் வளர்ந்தவிட்ட இன்றைய சூழலில் இந்தப் பேரழிவின் வருகையை கண்காணிக்க முடியாதா?  முடியும்  முயற்சிக்கொண்டிக்கிறார்கள். ஆனால் இயற்கையின் வலிமைக்கு முன் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாகப் பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்குக் காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1 அன்று ஹவாய் தீவைத் தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின. அமெரிக்கா 1949 ஆம் ஆண்டில் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு ஒன்றை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாகவே அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்கக் கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’. 
இது எப்படி வேலை செய்கிறது?
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள நுட்பமான கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள். இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.
ஆனால் இம்முறையில் தகவல் தரையை எட்டும்முன் சுனாமி அதைத் தொட்டுவிட்டது.  ஆழிபேரலையின் வேகம் சாட்டிலைட் அனுப்பும் சிகனல்களை வேகம் கொண்டது என்பதை நிரூபித்திருக்கிறது.  
அனுபங்கள் தான்  சிறந்த ஆசான். 
இந்த சோக அனுவபத்திலிருந்து ஆராய்ந்து அடுத்த சுனாமியும் நிலநடுக்கமும் எழும் முன்னரே  அந்தப்பகுதி எச்சரிக்கை பெறும் வழி வகைகளை நாசா போன்ற அமைப்புகள் செய்யும் என்று நம்புவோம்

23/9/18

அழியும் ஆபத்திலிருக்கும் ஆரண்முளா கண்ணாடிகள்


 




வரலாறு காணாத பெரும் இயற்கை சீற்றத்தின் விபரீத விளைவுகளினால் கேரளத்தில் மிகப்பெருமளவில் பாதிப்புக்குள்ளானது பல நதியோர கிராமங்கள்தான். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள். அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மெல்ல மீண்டுகொண்டிருக்கின்றனர்.
இப்படிப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று பம்பா நதிக்கரையிலிருக்கும் அழகான ஆரண்முளா கிராமம். பல கிரமங்களைப் போல வீடுகளையும் உடைமைகளையும் இழந்த இந்தக் கிராம மக்களின் துயரம் மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபட்டது. இவர்கள் தங்கள் மண்ணை இழந்தற்காகப் பெரிதும் கலங்கியிருக்கிறார்கள். மண் என்றால் அவர்களது நிலமில்லை. அவர்கள் சேமித்த பாதுகாத்து வந்த ஒரு வகை மண்.
அப்படி அந்த மண்ணில் என்ன விசேஷம்? என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கிராமத்தின் சரித்திரத்தையும் அங்கு உருவாகும் ஒரு கைவினைப் பொருளின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
சபரிமலைக்குப் பயணம் செய்யும் பலரும் முதலில் அதற்கு 75 கீமி முன்னிருக்கும் ஆரண்முளா பார்த்த சாரதியைத்தான் தரிசிப்பார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கொண்டப்படும் இந்தக் கோவிலில்தான்.
திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்குக் காணிக்கையாக வழங்கிய 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின்போது இங்கிருந்து அது ஊர்வலமாக மலைக்கு எடுத்தச்செல்லப்படும்.
இந்தக் கோவிலின் அருகில் வசிக்கும் இருபத்திரண்டு குடும்பங்களின் கலைஞர்கள் பரம்பரையாகச் செய்து வரும் ஒரு கைவினைப்பொருள் ஆரண்முளா கண்ணாடிகள். கண்ணாடி என்றால் நாம் சதாரணமாகப் பயன்படுத்தும் கண்ணாடிப் பலகைகளில் ஒருபுறம் பாதரசம் பூசப்பட்ட கண்ணாடிகள் இல்லை. இதில் கண்ணாடி என்ற பொருளே இல்லாமல் முழுக்க முழுக்க உலோகத்தால் ஆன கண்ணாடி. இந்தத் தயாரிப்பு முழுவதும் கைவினைக்கலைஞர்களால் எந்த இயந்திர உதவியும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. கேரளத்தின் கதகளி போல இந்தக் கண்ணாடிகள் மிகப்பிரபலமான ஓர் பாரம்பரியச்சின்னம்.
தமிழகத்திற்கு வரும் தலைவர்களுக்கும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கும் நமது கோவில், நடராஜர் உருவங்களை அரசின் சார்பில் பரிசளிப்பதைப் போல, கேரளாவில் அவர்களின் பாரம்பரிய சின்னமான இந்த ஆரண்முளா கண்ணாடியைத்தான் வழங்குவார்கள். யூன்ஸ்கோ பாரம்பரிய கலையைப்போற்றும் கிராமம் என்ற கெளரவத்தையும், இந்தக் கண்ணாடிகளுக்கு உலகளவிலான புவிசார்பு குறியீட்டையும் வழங்கியிருக்கிறது.


காண்பதைப் பல ஆண்டுகளுக்குப் பளிச்சென்று காட்டும் இந்த ஆரண்முளா கண்ணாடி கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பல கோவில்களிலும் ஆராதனைக்குப் பின்னர் தெய்வத்துக்குச்செய்யப்படும் உபசாரங்களில் முக்கிய இடம்பெற்றிருக்கும் ஒரு பொருள்.
இந்தக் கண்ணாடி உருவாக்கப் பயன்படும் உலோகத்தைத் தயாரிக்கும் முறை மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. வாரிசுகளுக்குமட்டும் சொல்லிக்கொடுக்கப்படும் இந்தப் பாரம்பரிய கலையைத்தொடர விரும்பாத வாரிசுகளுக்கு அந்தக் கிராமத்தில் இடம் இல்லை என்ற அளவில் ரகசியம் காக்கப்படுகிறது.


உலோகத்தைப் பளபளப்பாக்குவது என்பது கடினமான பணியில்லை என்றாலும் பல ஆண்டுகளானாலும் மங்காமல் தெளிவாகத் தெரியுமளவுக்கு எந்த எந்திர உதவியும் இல்லாமல் ஒரு உலோகத்தை உற்பத்தி செய்வதுதான் இந்தத் தொழிலின் சிறப்பு.
இந்தக் கண்ணாடிகள் சிறிய  வட்டவடிவில் வெவ்வேறு அளவுகளில் தயாரிக்கப் படுகிறது. பின்னர் அது ஓர் அழகான யானையின் முகம், சங்கு. மலர். போன்று தயாரிக்கப்பட்டிருக்கும் பல விதமான வெங்கல பிரேம்களில் பதிக்கப்படுகிறது.’ முதலில் கண்ணாடிகளின் அளவுகளுக்கேறப்ப வட்ட வடிவ அச்சு (மோல்ட்) உருவாக்கப்படுகிறது. இது ஒரு குடுவை போன்ற மற்றொரு அச்சினுள் பொருத்தப்படுகிறது. அந்தக் குடுவை அச்சின் மேல் பாகதத்தில் காரீயக் குண்டுகளும் வேறுசில பொருட்களும் இடப்படுகிறது. இந்த வேறு சிலபொருட்கள் என்ன என்பது தான் ரகசியம். இந்த மோல்டு மிக அதிக அளவில் வெப்பம் வெளியாகும் மண் அடுப்புக்களினுள் இடப்பட்டு இரண்டு நாள் முழுவதும் நெருப்பில் இருக்கிறது. இரண்டு நாட்களுக்குள் அந்தக் காரீயமும் பொருட்களும் உருகி உள்ளிருக்கும் வட்டமான கண்ணாடிக்கான வடிவ அச்சில் பரவி ஒர் உலோகத்தகடாகிறது. பின்னர் அச்சு உடைக்கப்பட்டு அந்தத் தகடு வெளியே எடுக்கப்படுகிறது. அந்த உலோகத்தகடு ஒரு சதுர மரக்கட்டையில் ஓட்டப்பட்டு ஒரு வழவழப்பானதேக்குப் பலகையில் தொடர்ந்து கைகளால் ஆறு மணி நேரம் தேய்த்து, தேய்த்து பளபளப்பாக்கப் படுகிறது. இறுதியாகத் தலைமை சிற்பி தன் புருவம் தெளிவாகத்தெரிகிறதா என்று பார்த்தபின் அதைக் கண்ணாடியாக அனுமதிப்பார். இந்தக் கண்ணாடிகள் சதுர மரக்கட்டையிலிருந்து கவனமாகப் பிரிக்கப்பட்டுப் பிரேம்களில் ஓட்டப்படுகிறது. இதற்கான பசைகளையும் இவர்களே தயாரித்துக்கொள்கிறார்கள்.  கோவில்களுக்கு சன்னதியின் முன்னே நிறுத்த பெரிய அளவுகண்ணாடிகளையும் தயாரிக்கிறார்கள். அப்படி 5 அடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்ட ஒரு கண்ணாடி லண்டன் மீயூசியத்திலிருக்கிறது.














 


ஒவ்வொரு முறையும் தயாரிப்பைத் துவக்கும் முன்னரும் கண்ணாடிகளாக உருவான பின்னரும் பார்த்தசாரதி கோவிலில் பூஜைகள் செய்த பின்னரே விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உள்நாட்டில் மட்டுமில்லை வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமாகியிருக்கும் இந்தக் கண்ணாடிகள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. அதற்காக வைத்திருந்தைவகளும் இப்போது அழிந்துவிட்டன. இழப்பு 1.5 கோடி. ஆரண்முளா பாம்புப் படகு போட்டிகளைப்பார்க்க வரும் வெளிநாட்டுப் பயணிகளில் வழக்கமாக இங்கு தேடி வந்து வாங்க வருபவர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது.



ஒவ்வொரு கண்ணாடியின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் கைவினைக்கலைஞர்களின் கடினமான, கவனமான உழைப்பு நிறைந்திருக்கும் இந்த ஆரண்முளா கண்ணாடி தயாரிக்கும் கிராமத்தினர் இந்த வெள்ளத்தில் ஒரே நாளில் அவர்களது இரண்டு மாத உழைப்பான 6000 கண்ணாடிகளை இழந்துவிட்டார்கள். “ வீட்டில் புகுந்த வெள்ளம் கண்ணாடிகளை அள்ளிக்கொண்டு போனது, மீட்க நீந்திப்போராடினேன் முடியவில்லை என்கிறார். தலைமை விஸ்வகர்மாவின் பேரன்.
இந்த ஆரண்முளா கலைஞர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக வழங்கி வரும் ஒரு செவி வழிச் செய்தியை அறிந்தபோது ஆச்சரியமாகியிருந்தது. இங்கிருக்கும் பார்த்தசாரதி கோவிலை நிர்மாணிக்கும் பணிக்கு வந்த பல தொழிளாளார்களில் தமிழ்நாட்டின் சங்கரன் கோவிலைச் சேர்ந்த சிலரும் வந்திருக்கிறார்கள். மன்னர் கோவில் பணிகளைப்பர்வையிட வந்தபோது வேலை செய்யாமல் இருந்த அவர்கள்மீது கடும் கோபம் கொண்டு பணியிலிருந்து அவர்களை நீக்கிவிட்டார். மன்னரைச் சமாதானப்படுத்தி மீண்டும் வேலையைப்பெற அவர்கள் அதுவரை யாரும் செய்யாத ஒரு பொருளை உருவாக்கிக் காட்ட தீர்மானித்தனர். அதன் விளைவாக ஒரு பளபளப்பான உலோகதகட்டை உருவாக்கி அதில் மன்னருக்கு ஒருகீரிடம் தயாரித்துக்கொடுத்தனர். அதைக்கண்டு வியந்த மன்னர் அதில் முகம் பார்க்கும் கண்ணாடிகள் தயாரித்துக் கோவிலுக்குக் கொடுக்கச் சொன்னார். அதன் விளைவாக எழுந்தது இந்தத் ஆரண்முளா கண்ணாடித் தொழில். அந்தத் தமிழர்களின் பரம்பரையினர் தான் இந்த விஸ்வகர்மாக்கள்.



தயாரிக்கப்பட்ட கண்ணாடிகள் வெள்ளத்தில் போனதைவிட இவர்கள் அதிகம் வருந்தி அழுவது தாங்கள் சேமித்த மண் கரைந்திவிட்டதற்காகத் தான். அடுப்புகளையும், அச்சுக்களையும் உருவாக்க இவர்கள் பயன் படுத்தும் மண்கலவை விசேஷமானது. நதிக்கரையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எடுக்கப்படும் அந்த மண் பல முறை சலிக்கப்பட்டு அதனுடன் சில பொருட்கள் சேர்க்கப்பட்டுச் சேமிக்கப்படும். அந்தச் சேமிப்பு பல ஆண்டுகள் உழைப்பில்  உருவானது. அதிலிருந்து தேவையானபோது மட்டும் மண் எடுத்து அச்சுச் செய்துகொள்வார்கள். அந்த மண் குவியல் தான் இப்போது ஆற்று வெள்ளத்தில் அழிந்துவிட்டது. மழையில்லாத நாட்களில் தேர்ந்தெடுத்துச் சேமிக்கப்பட்ட அந்த விசேஷ கலவை மண்ணை மீண்டும் உருவாக்க ஒராண்டாகும் என்கிறார்கள். அதோடு காரீயகுண்டுகளுடன் கலக்கத் தயாரித்து வைத்திருந்த விசேஷ கலவைப் பொருளும் அழிந்துவிட்டது.


காலத்தால் அழியாத கண்ணாடிகளைப் படைக்கும் இந்தக் கிராம மக்களின் தொழில் அழிந்திருக்கிறது, ஆனால் அவர்கள் “எங்கள் பரம்பரைக்கு வாழ்வளித்த எங்கள் தெய்வம் பார்த்தசாரதிப் பெருமாள் இதிலிருந்தும் மீண்டுவர உதவுவார்” என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

7/9/18

காவேரியின் சிற்றம்.



நேற்றைக்கு (02/9/18) ஶ்ரீரங்க விஜயம். . காவேரியில் வெள்ளம் 80 சதவீதத்துக்குமேல் வடிந்திருக்கிறது. இனி அவசியமில்லை என்றாலும் கொள்ளிடத்தில் உடைந்த மதகு பாலத்தின் பகுதியில் மணல் மூட்டைகள் போட்டு அடைக்கும் வேலைத் தொடர்கிறது. எதிர்காலத்தேவையை எண்ணி எடுத்த வேலையை முடிக்கவேண்டும் எனச்செய்கிறார்களோ அல்லது . காவிரியிடமிருந்து அளவுக்கு அதிகமாக எடுத்த மணலைக் கொஞ்சமாவது திருப்பித் தந்து மன்னிக்க வேண்டுகிறார்களோ என்ற எண்ணம் எழுந்தது.
இந்தப் பாலத்திற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு, அது குறித்து அண்மையில் புதிய தலைமுறையில் எழுதியது இது

அண்மையில் காவிரியில் வெள்ளம் பெருகி நீர் கொள்ளிடத்தின் வழியே கடலில் சேருவதைப் பற்றிய செய்திகளும் அதன் உச்ச கட்டமாக முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்தனால் நீர்ப் பெருக்கு அதிகரித்த செய்திகள் வந்தன, இந்த முக்கொம்பு கதவணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. தென்னிந்திய நீர்ப்பாசன தந்தையென அழைக்கப்படும் பிரிட்டிஷ் ராணுவ பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் இந்த அணையைக் கட்டினார். அவரைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆர்தர்காட்டனுக்கு முக்கொம்பில் சிலை வைக்கப்பட்டுள்ளது. காவிரி கரூர் மாவட்டம் கொடுமுடியில் அகண்ட காவிரியாக மாறுகிறது. அகண்ட காவிரியிலிருந்து தண்ணீரைத் தடுத்து பாசனத்துக்காகத் திருப்பிவிடத் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கதவணை கட்டப்பட்டது. 
சர் ஆர்தர் காட்டன் இந்த அணையைக் கட்டியதின் பின்னே ஒரு சுவையான வரலாறு இருக்கிறது. அவர், கல்லணையைக் கட்டிய சோழ மன்னர் கரிகாற்சோழனின் கல்லணை கட்டுமானத்தை ஆராய்ந்து வியந்து அதே முறையைப் பின்பற்றித்தான் இதைக் கட்டியிருக்கிறார். (அதை அவரே தன் புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்). 
காவிரி ஆறு கொள்ளிடத்தில் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று காவிரி, மற்றொன்று கொள்ளிடம்.. இந்த இரண்டு ஆறுகளுக்குமிடையே திருவரங்கத்தீவு இருக்கிறது. அத்தீவின் மேல் முனையில் அதாவது கொள்ளிடம் பிரியும் இடத்தில், கொள்ளிடத்தின் நிலமட்டம் காவிரியின் நிலமட்டத்தைவிட 6 அடி உயரமாக இருக்கிறது. ஆகவே வெள்ளம் வரும்பொழுது மட்டுமே கொள்ளிடத்தில் நீர் செல்லும். பிற காலங்களில் காவிரியில் மட்டுமே நீர் போகும். 
ஆனால் இத்தீவின் கீழ்முனையில் கொள்ளிடத்தின் நிலமட்டம் காவிரியின் நிலமட்டத்திற்குச் சமமாக உள்ளது.மேலும் கொள்ளிடத்தின் நிலமட்டச் சரிவு அதிகமாக உள்ளது. இவற்றின் காரணமாகத் திருவரங்கத்தீவின் கீழ்முனையில், வெள்ளம் வராத சாதாரணக் காலங்களில் கூட அடிக்கடி உடைப்பு ஏற்பட்டுக் காவிரியில் வரும் நீரும் கூடக் கொள்ளிடத்திற்கே வந்துவிடும். 
இதனால் காவிரியின் கீழ் உள்ள அனைத்து விளைநிலங்களிலும் அடிக்கடி நீர் இல்லாது போய்ப் பாசனம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.(இன்று பேசப்படும் கடைமடைப்பிரச்னை) இதனைத் தடுக்கக் கருதிய சோழ மன்னன் கரிகாலன், திருவரங்கத்தீவின் கீழ் முனையில் அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதியில் பெரும் பாறைகளால்ஆன கட்டுமானத்தைக் கட்டி காவிரியின் கரையைப் பலப்படுத்தி உடைப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தினான். அதன்மூலம் திருவரங்கத்தீவின் மேல்முனையில் காவிரிக்குப் பிரியும் நீர் வீணாகாது, எல்லாக் காலங்களிலும் பாசனத்துக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. 
இந்த கட்டுமானம் தான் கரிகாலன் கட்டிய கல்லணை எனப் போற்றப்படுகிறது. ஆனால்கரிகாலன் காவிரிக்குக் குறுக்கே அணையைக் கட்டவில்லை, அவன் காவிரிக்குக் கல்லால் ஆன ஒரு கரைதான் அமைத்தான் என்பதே உண்மை. கல்லால் ஆன கட்டுமானத்தைக் கட்டி நீரைத்திருப்பி விடுவதை அணைக்கட்டு அல்லது கற்சிறை எனப் பழந்தமிழர்கள் குறிப்பிட்டனர். எனவே கரிகாலன் கட்டியது ஒரு கற்சிறை தான் இன்றைய மொழியில் சொல்லுவதானால் check dam. இந்த அணையில் கையாளபட்ட தொழிநுட்பத்தின் அடிப்படையில் தான் ஆர்தர் காட்டன் மேல்ணையை எழுப்பினார். அப்படி என்ன தொழில்நுட்பம் என்கிறீர்களா? :: 
ஆழங்காண முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய பாறைகள் போடப்பட்டது. பாறைகளுக்கு அடியில் உள்ள மணல், ஆற்று நீரில் அரித்துச்செல்லப்பட்டதால் பாறைகள் மெதுவாக மணலுக்குள் இறங்கின. அவற்றின் மேல் களிமண் பூசப்பட்டு, அப்பாறைகளின் மேல் மீண்டும் பெரிய பாறைகள் வைக்கப்பட்டன. அதனால் கீழுள்ள பாறைகள் மேலும் ஆழத்திற்குள் புதைந்தன. பின் மீண்டும் களிமண் பூசப்பட்டு, பாறைகள் வைக்கப்பட்டன. கீழுள்ள பாறைகள் மேலும் புதைந்தன. கீழுள்ள பாறைகள் புதையப்புதையத் தொடர்ந்து பாறைகள் வைக்கப்பட்டன. இறுதியில் கீழுள்ள பாறைகள் கடினத் தளத்தை அடைந்தவுடன், பாறைகள் இறங்குவது நின்று போனது. இவ்வாறு ஒன்றின்மேல் ஒன்றாக வைக்கப்பட்ட பெரும்பாறைகளும், அவற்றுக்கிடையேயான களிமண் பூச்சுகளும் இணைந்தே கல்லணை என்ற மகத்தான நீர் சிறை (அணை) உருவாகியது இந்த தொழில் நுட்பத்தைப் பயன் படுத்திதான் மேலணையைக் கட்டியிருக்கிறார் ஆர்த காட்டன்.

இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சர் ஆர்தர் காட்டன் அவர்கள் 1874ம் ஆண்டுக் கோதாவரியின் குறுக்கே தௌலீஸ்வரம் என்ற அணைக்கட்டைக் கட்டினார். அது கோதாவரிச் சமவெளியை வளப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றது. நமது முல்லைப்பெரியார் அணைகட்டிய பென்னிகுக்கை நாம் கொண்டாவது போல் இவரை ஆந்திரமக்கள் கொண்டாடுகிறார்கள். தனக்குக் கிடைத்த பாராட்டுக்குக் காரணமான பழந்தமிழ் பொறியாளர்கள் குறித்து, அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் வாசகங்கள் இது. 
“ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழில்நுட்பத்தை இவர்களிடமிருந்து (தமிழர்களிடமிருந்து) தான் தெரிந்து கொண்டோம். எங்களால் செய்து முடிக்கப்பட்ட ஆற்றுப்பாசனத் திட்டங்கள் தான் உலகின் பொறியியல் பணிகளில் முதன்முதலான மிகப்பெரியஅளவில் செலவழிக்கப் பட்ட நிதிசம்பந்தமான வெற்றிப் பணிகளாகும். இவ்வெற்றிக்கான ஒரே காரணம் யாதெனில் நாங்கள் இம்மக்களிடம் கற்றுக்கொண்ட அடித்தளம் அமைப்பது குறித்த பாடங்களே ஆகும். இம்முறையைக் கொண்டு ஆற்றுப்பாலங்கள், அணைக்கட்டுக்கள் போன்ற பல பாசனப் பொறியியல் கட்டுமானங்களை எளிதாகக் கட்டி முடித்தோம் (இவர் ஆந்திராவி. அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.” இந்த புத்தகம் 1874ல் எழுதப்பட்டது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் 180 ஆண்டுகளுக்கு முன் எழுப்ப்ப் பட்ட மேலணை இன்று வெள்ளத்துக்குப் பலியாகிவிட்டது. . ஆனால் அதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகாலன் எழுப்பிய, பல வெள்ளங்களைப் பார்த்த தடுப்பணை அசையாமல் இந்த வெள்ளத்தையும் பார்த்த சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.



comments from face book 



Comments
Panneerselvam Natarajan
Panneerselvam Natarajan அருமையான தகவல்
1
Manage
LikeShow more reactions · Reply · 3d
N.Rathna Vel
N.Rathna Vel இதில் ஆச்சரியம் என்னவென்றால் 180 ஆண்டுகளுக்கு முன் எழுப்ப்ப் பட்ட மேலணை இன்று வெள்ளத்துக்குப் பலியாகிவிட்டது. . ஆனால் அதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகாலன் எழுப்பிய, பல வெள்ளங்களைப் பார்த்த தடுப்பணை அசையாமல் இந்த வெள்ளத்தையும் பார்த்த சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. - முக்கொம்பு உடைப்பு பற்றி அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Ramanan Vsv
1


Ramanan Vsv replied · 1 Reply
Shahjahan R
Shahjahan R அட்டகாசமான கட்டுரை.
2

Shahjahan R
Shahjahan R பிரிட்டிஷ் அரசின் விமர்சனங்களையும் மீறி ஆந்திரத்தில் அணைகள் கட்டி, வேளாண்மைக்கு வழி செய்தவர் ஆர்தர் காட்டன். நாடெங்கும் பஞ்சத்தைப் போக்கும் வகையில் இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னவரும் அவர்தான். ஆந்திரத்தை நெற்களஞ்சியமா…See More
8

Ramanan Vsv
Ramanan Vsv சக்கரகாலன் நூல் ஆசிரியர் ஷாஜஹான் .
6

Vijay S Krishnan
Vijay S Krishnan பொதுப் பணித் துறை 
என்ன அருமையான துறை
1
Manage

Vidya Subramaniam அருமை சார்

Artist ArjunKalai
Artist ArjunKalai மனல் கொள்ளையால் சரிந்தது கொள்ளிடம் பாலம். மற்றும் அனை.

Maragatha Mani படிக்க படிக்க ஆச்சரியமும் கர்வமும் மேலோங்குகிறது. நம் முன்னோர் பொறியியல் துறை அறிவு ஆங்கிலேயர்கள் பிரமிப்புடன் ஏற்றுக்கொண்டார்கள். நாம் மாற்றான் பெருமை பேசி பொறியாளர் துறையை இன்று கேலி கூத்தாகி கொண்டிருக்கிறோம்.

Sridhar Sivaraman Perhaps Karikalan expected Manal kollai and did a better job and Sir Arthur Cotton did not anticipate????
1
M3d

Ramanan Vsv replied · 1 Reply
Moorthy Athiyanan
Moorthy Athiyanan தண்ணீர் தண்ணீர் .....உண்மையான சேவை மனம் இனிமேல் வருமா சார்.....மிகவும் சிறப்பு சார்.

Vadakovay Varatha Rajan வழமைபோல் புதிய தகவல் .பாராட்டுக்கள்

Suresh Kumar S படிக்கும்போது சுவை சேதமாகாத அளவில் வெள்ளமாய்ப் பாய்ந்த தகவல்கள். அருமை, சார். இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்ட காட்டன் போன்றோரும் இருந்திருக்கின்றனர்.

Muthuswamy Krishnamurthy
Muthuswamy Krishnamurthy Very informative.நயமான தமிழ் நடை.
Manage

Ramanan Vsv replied · 1 Reply
Ranganathan Ganesh
Ranganathan Ganesh காவேரியில் வெள்ளம் 80 சதவீதத்துக்குமேல் வடிந்திருக்கிறது.// அப்போ இன்னும் சில தினங்களில் வறட்சி ன்னு சொல்லுங்க!

Mohan Aru அற்புதமான கட்டுரை.
1

Vmapathy Dayanandhan Fantastic information.Thank u sir. Our TN Minister says something which unbelievable and unrealistic.
1

Vijayakumar Somasundaram அஹா.... அற்புதம்.

Nac Ramani Nacramani அருமையிலு ம் அருமையான தகவல்களை அள்ளி வழங்கி இருக்கிறீர்கள் , சார் . மிக்க நன்றி !!!
Manage
LikeShow more reactions · Reply · 3d
Manthiramoorthi Alagu
Manthiramoorthi Alagu அருமையான செய்தி.

Suresh Srinivasan அருமையான பதிவு...தகவல்களுக்கு நன்றி...
Manage
LikeShow more reactions · Reply · 3d
Mohan
Mohan எனக்கு கொள்ளிடத்தின் அக்கரையில் உள்ள உத்தமர்கோவில் தான் இருந்து வளர்ந்த ஊர்.
அந்த இடிந்த பாலம்
எங்களுக்கு எங்கள்…See More


Ramanan Vsv replied · 1 Reply
Sankara Narayanan Iyer
Sankara Narayanan Iyer Wow ! Super Write-up
1

Sita Thaniga
Sita Thaniga அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி

Balrajerode Balraj
Balrajerode Balraj புதிய தகவல் நன்றி ஐயா

Rajendran S K அருமையான பதிவு. நன்றி.

Easwar Ramanathan அருமையான பதிவு..

Seralathan Manickam நல்ல பதிவு

Raman V Very Informative. Excellent.
Manage
L
Vipranarayanan Tirumalai அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி அழகாக தெரிவித்து இருக்கிறீர்கள்

Velayutham Muthukrishnan அருமையான பதிவு..! கரிகால் சோழ மன்னன் கட்டிய கல்லணையை மனதிற்கொண்டு முக்கொம்பு அணையையும் ஆந்திராவில் கோதாவரியின் குறுக்கேயும் அணையைக் கட்டி அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார் ஆர்தர் காட்டன். தற்கால கரிகாலர்கள் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறார்கள். அந்தோ பரிதாபம்.
1