2/10/19

அம்மா

அம்மா
அந்தப் பெரிய வீட்டில் முதல் முறையாகத் தனிமையை, வெறுமையை உணர்ந்தான் நாராயணன். பதினைந்து நாள் வரை அவனுடன் இருந்த அம்மா இப்போது இல்லை. உடன் இருந்தது அம்மா மட்டுமே என்றாலும் அவள் அந்த வீடு முழுவதும் நிறைந்திருந்தவள்.  79 வயதிலும் அத்தனை சுறுசுறுப்பு வீடு தோட்டம் மாடி என  எல்லா இடங்களிலும்   வளைய வந்துகொண்டிருந்தவள். எப்போது ஏதாவது ஒரு வேலை,அல்லது யாருக்காவது ஏதாவது கட்டளை என எப்போதும் தானும் பிஸியாயிருந்து அடுத்தவரையும் பிஸியாக்கிகொண்டிருந்த கோதை இன்று இல்லை.
இந்த வயதிலும்  படித்து திவ்ய பிரபந்தத்திற்காக மட்டும் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்,ஏவை 80+ மார்க்கில் வாங்கியவர். இமெயில். பேஸ்புக் ஸ்கைப் எனப் பலவற்றையும் கற்றுக்கொண்டு கையாளுபவர். வாரத்தில் மூன்று நாள் அமெரிக்காவிலிருக்கும் தோழியுடன் சேர்ந்து ஸ்கைப்பில் நாரணீயம் வாசிப்பவர். புதன் தோறும் தக்கர் பாபா ஸ்கூலில்  காந்தி ஸ்டடி சென்டர் மீட்டிங்க்குப் போகிறவர். 
இவ்வளவு  ஆக்டிவாகவும் ஆரோக்கியமாக, இருந்தவர் இரண்டுவாரங்களுக்கு முன் ஒரு நாள் மாலை “நாணா சித்த இங்க வா” என்று தன் கட்டிலுக்கு மகனை அழைத்து உட்காரவைத்து அவன் மடியில் தலையை சாய்த்துக்கொண்டு வினாடி நேரத்தில் எந்தக் கஷ்டத்தையும் காட்டாமல்  பெருமாளிடம் சேர்ந்துவிட்டார்.


நாணாவிற்கு அம்மா இறந்து போய்விட்டார் என்பது உறைக்கவே சற்று நேரமானது. பொதுவாக தன் உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பழகியிருக்கும் நாணா அன்று வெடித்து அழுதான். கோதையம்மாவிற்கு மூன்று மகன்களும் ஒரு பெண்ணும். கணவர் இறந்து 14 வருஷங்களுக்கும் மேலாகிறது. முதல்  பையன்  நாணா என்ற நாராயணன் ஆடிட்டர் உள்ளூரிலேயே செட்டிலாகிவிட்டவர். மனைவியை இழந்த அவருடன் தான் கோதை வசித்துவந்தார். இரண்டாவது மகன் பாலா அமெரிக்காவில் பெரிய யுனிவர்சிட்டியில் பேராசிரியர். அங்கேயே செட்டிலான வாழ்க்கை. உலகமறிந்த மேனேஜ்மென்ட் குரு எப்போதும் பிஸி. இரண்டாவது மகன் ரவி  ராணுவத்தில்  பெரிய பதவி. இப்போது மேகாலயாவில் போஸ்டிங். ஓரே பெண்ணுக்கு  ஆஸ்திரேலியாவில் அரசுப்பணி. எல்லோரும் அம்மாவிற்காக வந்திருக்கிறார்கள். திரும்ப தங்கள் இடங்களுக்குப் போகும் முன்  அவர்களுக்கிருக்கும் மற்ற வேலைகளைமுடிக்க தமிழ் நாட்டினுள்ளே  பயணங்களிலிருக்கிறார்கள்.

அம்மாவின் மரணத்துக்கு மறுநாள் அவரது படுக்கையை  சுத்தம் செய்ய முயன்ற போது அவரது தலையணைக்கு அடியில் இருந்த  கவரிலிருந்தது அந்தக் கடிதம். நிறுத்தி நிதானமாக கறுப்புஜெல் பேனாவால் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதம் போனவருடம் எழுதியது.  நாணாவிற்கு ஆச்சரியமாகயிருந்தது. அம்மா அவனிடம் எதையும் சொல்லாமலிருந்ததில்லை.  திங்கள் படுக்கை விரிப்பு மாற்ற, புதன் பாத்ரூம் மேட்களை வாஷ் செய்ய.  வியாழன் ஜன்னல்களைச் சுத்தம் செய்ய என்று எதற்கும் ஒரு டைம்டேபிளோடு வேலைகளைத் திட்டமிடுவதோடு அந்த வேலைகளைச் சரியாக வாங்கிவிடும் அம்மாவின் சாமர்த்தியத்தைக்கண்டு பல முறை வியந்திருக்கிறான் நாணா.  தனக்கு வந்த கடிதம் தான் அனுப்பிய பதில் எல்லாவற்றையும் அவனிடம் சொல்லும் அம்மா எப்படி இதைச் சொல்லாமல்  விட்டார். என்ற ஆச்சரியம், சந்தேகம் அழுத்திக்கொண்டேயிருந்தது. 
“எனக்கு உயில் எழுதுமளவுக்குச் சொத்து எதுவுமில்லை. ஆனால் நான் இறந்த போனால்  என் காலத்துக்குப் பின்  நாணா முன்னெடுத்து இதையெல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என்று  துவங்கியது அந்தக் கடிதம்.  தன்னுடைய பொன்னியின் செல்வன் பைண்ட் புத்தகத்தையும் மற்றபுத்தகங்களையும் அமெரிக்காவிலிருக்கும்  தோழி சகுந்தலாவின் பேத்திக்கு  என்பதிலிருந்து வேலாயி என்ற பெயர் போட்ட வெங்கலப்பானை யாருக்கு,  பணிப்பெண் காஞ்சனாவிற்கு வீடு கட்ட பாங்கிலிருக்கும் தன் டெப்பாஸிட் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும்  என்று ஒரு   பெரிய பட்டியல்.
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்  அரையருக்கு வருடம் தோறும் பணம் அனுப்ப வேண்டும்  தான் தினமும் படிக்கும் பிரபந்த ஸ்லோகத்தை புக் மார்க் வைத்திருக்குமிடத்திலிருந்து தினமும் நாணா ஒரு பாசுரம்  சொல்ல வேண்டும் என்பது வரை  பலவித இன்ஸ்டிரெக்ஷன்கள்.  ஆனால் அந்த கடிதத்தின் கடைசிப் பாராவில் சொல்லபட்டிருந்தது குறித்துத் தான் நாணாவின் கவலையெல்லாம்.

“இந்த வீட்டின் நிலம் உங்கள் தாத்தா நாராயண அய்யருக்குக்  காந்தியால் கிடைத்தது..  அவர் சுதந்திரப்போராட்டத்தில் ஜெயிலுக்கு பல தடவை சென்றதால் தியாகி பட்டயம் கொடுக்கும்போது  கொடுக்கப்பட்ட நிலம். அதில் அவர் சம்பாத்தியத்திலும் பின்னால் உன் அப்பா சம்பாத்தியத்திலும் கட்டிய வீடு இது. நீங்கள் எல்லாம் இங்கு  வளர்ந்த இன்று நல்ல நிலையில் இருக்கிறீர்கள். எல்லோருக்கும் வீடு இருக்கிறது. அதனால் இதைக் காந்தி ஆஸ்ரமத்துக்கு கொடுத்துவிட விரும்புகிறேன். ஆஸ்ரம டிரஸ்டிகள் அண்ணாமலையும், அவர் மனைவி பிரேமாவும் மிக சிரத்தையாக செய்கிறார்கள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம் என்று ஒரு  பத்திரமாகவே பதிவு செய்து அவர்களிடம் கொடுத்துவிடவேண்டும்” 


இதில் தான் நாணாவின் கவலை எழுந்திருக்கிறது, அம்மாவின் கடிதத்தைபார்த்தவுடன் சகோதர்களும் சகோதரியும் “அம்மா விஷ்படி செய்துவிடண்ணா” என்று சொல்லிவிட்டார்கள்.அவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகத்  தெரியவில்லை.  மறு  நாள் குடும்ப வக்கீல் தினகரனிடம் கேட்ட போது,  “அழகாகச் செய்துவிடலாம். பரம்பரைபாத்தியதையாக உன் அம்மாவிற்கும் இப்போது உங்கள் எலோருக்கும்  வந்த சொத்து இது.  நீங்கள் 4 பேரும் ஒரு கொடைப்பத்திரம் எழுதி ரிஜிஸ்டர் செய்து விடலாம். வாரிசுதாரர்கள்  எல்லோரும் ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு வந்து கையெழுத்துப் போடணும். ஒரிஜனல் பத்திரத்தை கொண்டுவா. . நான் கிப்ட் டீட் ரெடி பண்ணி வைக்கிறேன்” என்றார்.


அந்த ஒரிஜனல் பத்திரம் தான் இப்போது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு வாரமாக  வீடு முழுவதும் தேடியாகிவிட்டது. அம்மா அதை எங்கே தான் வைத்திருப்பாள்? என்ற கேள்விதான் நாணவை சில நாட்களாக கவலைக்குள்ளாகியிருக்கிறது. , மாதந்திர போன் பில்களை கூட ஒழுங்காக பைல் செய்வதிலிருந்து எதையும் சிஸ்டமாட்டிக்காக செய்யும் அம்மா நிச்சயம் இதை எங்கோ பத்திரமாக வைத்திருக்கிறாள் என்றது அவனுடைய உள்மனம். அது எங்கே? அந்தப் பத்திரம் இல்லாமல் சட்டப்பூர்வமாக எதுவும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார் தினகரன் 
அம்மாவின் அந்தக் கடிதத்தை, அனேகமாக மனப்பாடமே ஆகிவிட்டிருந்த அந்த கடித்ததை மறுபடியும் ஒரு முறை பார்த்தான் நாணா இதை எப்படிச்செய்யப்போகிறோம்? என்ற கவலை எழுந்தது. எதிரிலிருந்த பூஜை அறையிலிருந்த படத்தில் சிரிக்கும் காந்தி  அவனிடம் “கவலைப்படாதே” என்று சொல்லுவதுபோலிருந்தது.


ஆம். அம்மாவில் பூஜை படங்களில் பிரதான இடத்தில் இருப்பது காந்தி. யார் வீட்டிலும் காந்தியைப்  பூஜையில் வைக்க மாட்டார்கள். ஆனால் அம்மா மாறு பட்டவர், அவருக்குக் காந்தியும் கடவுள்.  தினசரி பூ போட்டு ஆராதனை காட்டுவார்.  கல்லூரி நாட்களில் திருநெல்வேலியில் வாழ்ந்த போது ஒரு நாள் நடந்தது இன்றும் நினைவிலிருக்கிறது. 


 நாணாவின் அப்பா தன் குழந்தைகள் படிப்புடன் உலகம் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று அவர்களை வளர்த்தவர். தினசரி உலக அரசியல் உள்நாட்டு அரசியல் கம்பன் பாரதி, ஆங்கில இலக்கியம்  பற்றியெல்லாம் குழந்தைகளுடன் பேசுவார். அவர்களையும் விவாதிக்கத்தூண்டுவார்.  அம்மாவும்  அவ்வப்போது கலந்துகொள்வார், தினசரி  அந்த டைனிங்டேபிள் ஒரு அலசல் மேடையாகவேயிருக்கும்  சாப்பாட்டைவிட இதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். சில நாளில் விவாதம்  சவால்களாவும் சண்டைகளாக கூட  முடிந்திருக்கிறது. அப்படி ஒரு நாள் காந்தியை பற்றி பேச்சு எழுந்தபோது “தன் மனைவி கஸ்தூர்பாவை சரியாக நடத்தாத மனிதன் காந்தி என சகோதரி சொல்ல சகோதரர்கள் அதை ஆதரித்துப் பேச, அம்மாவிற்குக் கோபம் எழுந்து ஒரு கூச்சல் போட்டு அவர்களை அடக்கி விட்டு பூஜையில் போய் உட்கார்ந்து “என் குழந்தைகளுக்கு நல்ல புத்தியைக் கொடு” என அழ  ஆரம்பித்துவிட்டார். அன்று பூரா சாப்பிட மறுத்துவிட்டார். எல்லோரும் அம்மாவிடம் மன்னிப்பைக் கேட்டுக் கெஞ்சிய பின்னர் இரவுதான் சாப்பிட்டார்.  அந்த அளவு காந்தியின் பக்தை. அதன் பின்னர் அந்த டைனிங் டேபிளுக்கு காந்தி வந்ததில்லை. 
காந்தி படத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்த  நாணாவில் கண்ணில் பட்டது அதன் மீது நகர்ந்து கொண்டிருக்கும் எறும்புக் கூட்டம்.  அருகில் போய் பார்த்த போது பூஜை ரூம் முழுவதும் ஒரே  எறும்பு. அம்மா மறைவுக்குப் பின் பூஜைரூம் கிளின் செய்யப்படவேயில்லை. என்பது. உரைத்தது. அம்மாதான் தினசரி செய்வார், பணிப்பெண் காஞ்சனா விற்கு அதற்குள் செல்ல அனுமதியில்லை..  நாணா அதை செய்ததேயில்லை. அதனால் 15 நாள் யாரும் தொடாத இடமாகியிருந்த அந்த அறைக்கு  எறும்பு தன் படைகளை அழைத்து வந்திருக்கிறது. நாளை இதைக்க்கீளின் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டே காந்தி படத்தின் மீதிருந்த எறும்பைத் தட்டிவிட அந்தப்   படம் கைநழுவி விழுந்து  சில் என்று  கண்ணாடி உடைந்தது. பழைய பிரேமாகயிருந்ததால் அதுவும் பிரிந்து விழுந்தது. சே!  என்று வருந்திவிட்டு நாளை நல்ல பிரேம் போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே கண்ணாடி சில்லுகளை ஒதுக்கி அந்தப் படத்தை எடுத்த போது அதன் பின்னே இருந்த அட்டையின் இடையிலிருந்து விழுந்தது ஒரு பிளாஸ்டிக் கவர். அதனுள்ளே ஒரு பிரவுன் கவர். அதைத் திறந்த போது  தமிழ்நாடு அரசு முத்திரை அச்சிடப்பட்ட திக்கான பச்சைப் பேப்பருடன்   டைப் செய்யப்பட்ட இரண்டு மெல்லிய மணிலா தாட்கள். தெளிவில்லாத ரப்பர்ஸ்டாம்ப்கள். கலர் கலராக இனிஷயல்கள்.  இரண்டாம் முறை படித்தாலும் எளிதில் புரியாத ஆங்கில ஆவணபாஷையில்  அது சொன்ன விஷயம்.  “அரசாங்க கெஜட் பக்கம் 18 பார 9ன் படி  தியாகி நாரயணய்யருக்கு இந்த நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது  அவருக்குப் பின்னர் அவரது வாரிசுகளுக்கு உரிமையானது.” 


அரசால் வழங்கப்படும் நிலங்கள் அந்தக் காலகட்டத்தில் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதப்படுவதில்லை. .  பச்சைமையில் கையெழுத்திடும்  அதிகாரம் பெற்ற அதிகாரியின்  கடிதம்தான் அதைத்தெரிவிக்கும். அது தான் சொத்து ஆவணம். இந்தப் பத்திரத்தை தான் வக்கீல் தினகரன் கேட்கிறார் என்பது மின்னலடிக்க, அவருக்குப் போன் செய்கிறான் நாணா. 
“உன் அம்மாவின் ஆசை நடக்காமல் போகாது. உடனே ஸ்கேன் செய்து அனுப்பு. நான் கிப்ட் பத்திரத்தை ரெடி செய்கிறேன். . திங்கள் அன்று  ரிஜிஸ்ட்ரேஷன் வைத்துக்கொள்ளலாம் வாரிசுதாரர்கள் எல்லோரும் வர வேண்டும் ,கொடையை வாங்குபவரும் வர வேண்டும் எல்லாவற்றையும் உடனே  ஏற்பாடு செய் என அவசரப்படுத்தினார். அவர்  வக்கீல் மட்டுமில்லை இந்தக் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர்.  எல்லோரையும் நன்கு அறிந்தவர். 


அம்மா ஏன் இந்தப் பத்திரத்தை இப்படி ஒளித்துவைத்திருக்கிறார்? என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் குழம்பிய நிலையிலும் எல்லோரும் ஊருக்குப் போகும்முன்னால் அவர் விரும்பியதைச் செய்து விட வேண்டுமே என்று   எல்லோரையும் போனில் தொடர்பு கொள்ள ஆரம்பித்தான். 
காந்திபடத்தில் இருந்த  எறும்புகளை விரட்டிய நாணா அன்றே பூஜை அறையைச் சுத்தம் செய்திருந்தால் அவன் தலையைக்குடைந்து கொண்டிருக்கும்  கேள்விக்கு விடை கிடைத்திருக்கும். “நாள்தோறும் நாலாயிரம்”  என்ற புத்தகத்திலிருந்து தினமும்  ஒரு ஸ்லோகம் படிப்பது கோதையம்மாவின் வழக்கம். அந்தப் புத்தகம் பூஜையிலேயே இருக்கும். இப்போது அதன் மீதும்   எறும்புக்கூட்டம். அதன் கடைசி பக்கத்தில் “ நாணா,  உன் சித்தப்பா பாலு இந்த வீட்டில்  அவருக்கும் பங்கு உண்டு என சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார் மோசமான மனிதனான .அவன் கண்ணில் படாமலிருக்க வீட்டுப்பத்திரத்தை காந்தியின் படத்தின் பின்னே அவரையேப்பார்த்துக்கொள்ளச் சொல்லி  வைத்து பிரேம் பண்ணிட்டேன். என்காலத்துக்குபின்  நீ பிரபந்தம்  படிக்க ஆரம்பிக்கும் போது    இதைப் பார்த்து  பத்திரத்தை எடுத்து வை.  நீ செய்ய வேண்டியதை ஒரு கடித்தில்  எழுதிவைத்திருக்கிறேன். .” என்று குறித்து வைத்திருப்பதை நாணா இன்னும் பார்க்கவில்லை.அம்மா விரும்பியதைச் செய்துவிட்டு ஊருக்குத்திரும்பப் போகிறோம்  என்ற நிம்மதியுடன் எல்லோரும் முதல் நாளே  சென்னை வந்து சேர்ந்துவிட்டர்கள். மறுநாள்  காலை  நல்ல நேரத்தில் ரிஜிஸ்ட்ரேஷன்.  
மறு நாள்  பதிவுசெய்யப்படப்போகும் அந்தப்  பத்திர காகிதங்களைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டிருக்கிறார் புதிய பிரேமிலிருந்த காந்தி.அந்தப் புன்னகை “கோதை. நீ விரும்பியதை சாதித்துவிட்டிங்க” என்று சொல்வதைப் போலிருக்கிறது..  


     
.