அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5/7/14

சர்வாதிகாரியின் சாபம்


நீண்ட நெடிய வரலாறு கொண்ட நாடு ஈராக். இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள செழிப்பான நிலப்பரப்பை கொண்டது. ஆங்கிலேயர் பிடியில் கொஞ்ச காலம் இருந்த ஈராக் மீண்டும் மன்னராட்சிக்கு திரும்பியது. ஆனால், 1958ல் நடந்த ராணுவ புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். 1978ல் சதாம் உசேன் ஈராக் அதிபராக பொறுப்பேற்றார். 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினரிடம் சிக்கும்வரை யாரும் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக சதாம் இருந்தார்.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ரசாயன ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக கூறி 2003ல் ஈராக்கை தனது ஆளுகையின் கீழ் அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகள் படை கொண்டு வந்தது.  இந்த போரின் இறுதியில்தான் தப்பியோடிய சதாம் உசேன் கண்டுபிடிக்க பட்டார். அப்போது, ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது. அவர்கள் சதாமை 2006ஆம் ஆண்டு தேசத்துரோகத்திற்காக தூக்கிலிட்டனர். சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர்.  ராணுவம், அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்தனர்.. இப்படி ஒதுக்கப்பட்ட சன்னி பிரிவினர் ஆயுதமேந்தி போராடத் தொடங்கினர். அப்போது தொடங்கிய கலவரம், 2011ல் அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறியதும் தீவிரமடைந்தது.
ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தி வந்த பயங்கர தாக்குதல்கள் இப்போது உள்நாட்டு போராகி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த போரை நடத்துவது சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பு இப்போது, ஷியாக்களுக்கு எதிராக நடத்தும் இந்த யுத்தத்துக்கு சிரியாவின் ஆசி உள்ளது. சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் இணைந்துவிட்டனர். பல நகரங்களை அடுத்தடுத்து பிடித்த தீவிரவாதிகள் இப்போது, தலைநகர் பாக்தாத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளனர். எங்கிருந்து இந்த தீவிர வாதிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வருகிறது ? விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது அமெரிக்க உளவுத்துறை

 ISIS என்ற இந்த அமைப்பின் தலைவர்  அப் பக்கர் அல் பாக்தாதி. அமெரிக்க படையெடுப்புகளினால் சதாம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, ஈராக்கில் அல்கைதா என்றொரு ஆயுதக் குழு ஒன்று இயங்கி வந்தது. அமெரிக்கப் படைகளுடனான மோதலில் அதன் தலைவர்கள் கொல்லப் பட்டனர். அப்போது அமெரிக்கப் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்ட போராளிகளில் ஒருவர் தான் அல் பாக்தாதி.
2005 முதல், Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். அப்போது, "உங்களை நியூ யார்க்கில் சந்திக்கிறேன்!" என்று சிறைக் காவலர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். விடுதலையான பின்னர் எஞ்சியிருந்த போராளிகளை ஒன்று திரட்டி ISISஐ     உருவாக்கியிருக்கிறார். .

2011ம் ஆண்டு, அல் பாக்தாதி, அமெரிக்கர்களால் "தேடப்படும் பயங்கரவாதி" என்று அறிவிக்கப் பட்டார். அவரது தலைக்கு விலையாக பத்து மில்லியன் டாலர் அறிவிக்கபட்டது..  அந்தக் காலகட்டத்தில் சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அல் பாக்தாதி குழுவினர், சிரியாவில், அரச படைகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக நம்பபட்டது.


. தீவிர வாதிகள் ஒடுக்கப்படாவிட்டால் ஈராக் இரண்டாக உடையும் அபாயமிருக்கிறது. ஈராக்கின் இந்த நிலைக்கு ஒரு வகையில் காரணமான அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இப்போது இந்த பிரச்னையில் தலையிட தயங்குகின்றன.. அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை காக்க 275 வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பபெறுவோம் என்ற அறிவிப்புடன் தேர்தலை சந்தித்த ஒபமா இனி போர் எதுவும் நிகழந்தால் அமெரிக்கா தலையிடாது என்று அறிவித்துவிருக்கிறார்.
ஆனால் தன்னை ”உலக போலீசாக” வர்ணித்துகொள்லும் அமெரிக்கா ஈராக்கின்  நிரந்தர பகையாளியான ஈரான் நாட்டின்மூலம் உதவி இன்னொரு போரை உருவக்கும் என்றும் சில ஐரோப்பிய பத்திரிகைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?
ஈராக்கில் தீவிர வாத தாக்குதல்களால் அரசு நிர்வாகம் அடியோடு சீர்குலைத்துவிட்டது.,  நிவாரண பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை. அகதிகள் நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது. ஈராக்கின் உள்நாட்டு போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது, கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பி உள்ள நமது பொருளாதாரத்தை  பாதிக்கும். பெட்ரோல் விலையேற்றம் நம் பர்சை பாதிக்கும், உள்நாட்டு போரால் பல லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தவிக்கின்றனர்.  அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் நிலைமை இன்னும் மோசம்.. ஏராளமான இந்தியர்கள்  ஈராக்கில் உள்ளனர். அவர்களில் பலர் தனியார் நிருவனங்களில் காண்ட்டிராக்டில் வேலைசெய்பவர்கள். எந்த நிமிடமும் சேமிப்புகள் பரிக்கபட்டு  அகதிகளாக வெளியேற்ற படலாம்.


8 ஆண்டுகளுக்கு முன் சதாம் உசேன் தூக்கிலிடப்படும் முன் நடந்த வழக்கில் சதாம் சொன்னது என்னை அமெரிக்க ஆதரவுடன் நீங்கள் தூக்கில் கூட போடலாம். ஆனால் நான் இறந்தாலும்  என் ஆவி என் மக்களை வழி நடத்தும்.  நடக்கபோகும் போரில் நீங்கள் தோற்பீர்கள் என்றார்.

.... இப்போது போர் நடக்கிறது.


ஆதித்யா (ரமணன்)
கல்கி07/0714 இதழில் எழுதியது

1/7/14

ஆச்சரியமான தாத்தா தான் !



அடுத்த மாதம் உங்களுடைய 90வது பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும்?. சொல்லுங்கள் என  கிழவரின் மகன், மகள், பேரக்குழந்தைகள் கொண்ட அந்த சந்தோஷமான பெரிய குடும்பத்தினர் கேட்டனர். ”பரிசெல்லாம் வேண்டாம். அன்று எல்லோரும் வந்துவிடுங்கள் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது” என்றார் தாத்தா.

அவர் 1989லிருந்து 93 வரை  அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ். பின்னாளில்இவரது மகன் புஷ்ஷும் ஜனாதிபதியாக இருந்த்தால்  இவரை சீனியர் புஷ் என பத்திரிகைகள் அழைக்கின்றன.  குடும்பத்தினர் சென்ற பின் புஷ் தன் மனைவியிடம் சொன்னது “ அன்று  நான் பாரசூட்டின் மூலம் குதிக்க விரும்புகிறேன். நண்பர்களிடம் சொல்லி ஏற்பாடுகள் செய்  விஷயம் ரகசியமாக இருக்கட்டும் என்றார். .
அவருக்கு  உயர் ரத்த அழுத்தம், நெஞ்சில் சளிகட்டுதல்,சர்க்கரை போன்ற  தொல்லைகள் இருப்பதால் இது ஆபத்தான முயற்சி வேண்டாம் என்றார்கள் டாக்டர்கள். முன்னாள் ஜனாதிபதி இத்தகைய செயல்களில் ஈடுபடுவது  அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரச்சனைகளை எழுப்பும் என ராணுவ அதிகாரிகள் சொன்னார்கள். இம்மாதிரி சாகஸ செயல்களுக்கு அவருக்கு இன்ஷ்யூரன்ஸ் இல்லை என்றார்கள் அவரது இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகாரர்கள்.
புஷ் தாத்தா எதைப்பற்றியும் கவலைப்படாமல் நண்பர்களின் உதவியுடன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்., அவரின் உடல் நிலை, வானிலை  போன்றவற்றால் எந்த நிமிடத்திலும் திட்டம் கைவிடப்படலாம் என்பதால். நிகழ்ச்சி பொதுமக்களுக்கு அறிவிக்க படவில்லை.  ஆனாலும் ஒரு சிலருக்கே தெரிந்த விஷயம் மெல்ல கசிந்துவிட்டது. புஷ் வேறு தனது டிவிட்டரில் இங்கு  பருவ நிலை இதமாக இருக்கிறது. பாராசூட்டில் குதிக்கலாம் போலிருக்கிறது என  கோடிகாட்டியிருந்தார்.
 பிறந்த நாள் அன்று காலை  அவரது விடுமுறைகால வீட்டு தோட்டத்தில் 6 மகன், மகள், 14 பேர குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் ,உறவினர்கள், நண்பர்கள், என 200பேர்  கேக் வெட்டி ஹாப்பி பெர்த்டே பாடிய பின்னர். காத்திருந்த ஹெலிகாப்டரில்  அவரது சக்கர நாற்காலியிலிருந்து ஏற்றபட்டார்.  ஆம்!. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் நடமாடுவது சக்கர நாற்காலியில் தான்.  தக்க உடைய அணிந்து கொண்டு ஹெலிகாப்டர் 6000 அடி உயரத்தை தாண்டியதும் பாராசூட்டுடன் குதிக்க தயாராக இருந்தார் புஷ்

  செய்தி பேஸ்புக், டிவிட்டர் மூலம்  பரவியிருந்ததால், திட்டமிட்டபடி இறங்க வேண்டிய இடமான உள்ளூர் சர்ச்சின் பின்னாலுள்ள புல் வெளியில்   ஆவலுடன் மக்கள் கூட்டம்.  வெள்ளை ஆரஞ்சு நிற பாரசூட் வானில் விரிய  ஆரம்பித்ததிலுருந்து இறங்கும் வரை  நகர மக்களின் ஆராவாரமும் கைதட்டலும் தொடர்ந்தது. 
பத்திரமாக தரையிறங்கினார் புஷ். அவரது முழங்காலுக்கு கீழே கால்கள் செயல்படுவதில்லை இல்லையாதாலால், அவரால் தறையிறாங்கியவுடன் பாரசூட்டுடன் ஓடவோ அல்லது நடக்கவோ முடியாமல் முன் புறமாக விழுந்து பாராசூட்டால் சில நிமிடங்கள் இழுத்து செல்லபட்டார்.  இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க விமான படையினர் பாதுகாப்புகாக உடன் பாராசூட்டில் பறந்து வந்தவர்கள் உடனே பாய்ந்து உதவிசெய்து அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்துவிட்டனர்.  ”ஆச்சரியமான தாத்தாதான். ஆனால் எனக்கு  பயமாக இருந்ததால் கண்களை மூடி.க்கொண்டுவிட்டேன்” என்றார் சிறுவயது கொள்ளு பேத்திகளில் ஒருவர்.
”அப்பா உங்கள் சாதனைகளில் இது முக்கியமானது. நான் கூட இதுபோல செய்யப்போகிறேன்” என்றார். மகன் புஷ். (இதை கிண்டலடித்து அமெரிக்காவில் நிறைய ஜோக்குகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன)   எல்லாவற்றையும் ஒரு யூகேஜி குழந்தையின் சிரிப்போடு ஏற்றுகொண்ட புஷ் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டார்.
பிறந்த நாளுக்கு ஏன் இந்த பாரச்சூட் குதிப்பு?.  ஜார்ஜ் புஷ் இரண்டாவது உலகப்போரில் பணியாற்றிய அதிகாரி. ஒரு கட்டத்தில்  சுட்டுவிழ்த்தபட்ட விமானத்திலிருந்து பாராசூட்டின் மூலம் குதித்து  வினாடி நேரத்தில் உயிர்தப்பியவர்.  டென்னிஸ் கோல்ப், பேஸ்கட்பால் என எல்லாவிளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். வெள்ளை மாளிகையில் வசித்தபோது ஜனாதிபதி ஜாகிங்க்காக தனி பாதை அமைத்தவர்,தனது 80 பிறந்தாநாளின் போதும் விமானத்திலிருந்து குதித்தவர். மனத்தளவில் நான் ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை சோதித்துகொள்ளவும், காட்ட விரும்பினேன் என்கிறார்.

 ”இதை உங்கள் வாழ்நாள் சாதனையாக பதிவு செய்திருக்கிறீர்கள்” என சொன்ன ஒரு நண்பரிடம், “ வாழ்க்கையை அதற்குள் முடித்துவிடாதீர்கள்.   95 வது பிறந்தநாளுக்கு 7000 அடியிலிருந்து குதிக்க போகிறார்” என்று சொன்னவர்  புஷ்ஷின் மனைவி பார்பாரா புஷ்
ரமணன்
(கல்கி 6/7/14)





19/4/14

மெளனம் கலைந்தது….மனைவி இருப்பது தெரிந்தது !



நாடளுமன்றத்தின் 543 சீட்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளார்களில் 5 ல் ஒரு பங்கினர் பிரம்மச்சாரிகள் என்கிறது தேர்தல் கமிஷனின் புள்ளிவிபரம். மிக முக்கிய பிரம்மச்சாரிகள் நரேந்திர மோடியும், ராகுல்காந்தியும். இப்போது அதில் ஒன்றை குறைத்து கொள்ள வேண்டும்.  மோடி தனக்கு திருமணமாகியிருக்கிறது என்பதை தனது வேட்பு மனுவுடன் சமர்பித்திருக்கும் பிரமாணபத்திரத்தில் தெரிவித்திருக்கிறார், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்
று சொல்லபடுவதுண்டு. மோடிக்கு மனைவி இருக்கிறாரா? என்பதே சந்தேகமாகயிருந்த ஒரு விஷயம்..

மோடி பிரம்மச்சாரி இல்லை அவருக்கு ஒரு மனைவி  கிராமத்தில் இருக்கிறார் என அவ்வப்போது  மிடியாக்களில் செய்தி அடிபட்டதுண்டு..  ஆனால் ஒரு முறை கூட மோடி அதை ஏற்றோ, மறுத்தோ பேசியதில்லை. கடந்த தேர்தல்களில் 2001,2002,2007, மற்றும் 2012 தேர்தல்களின்போது  இணைக்கப்படும் பிராமணப் பத்திரத்தில்  மனைவியின் பெயர் என்ற பகுதியில் வெற்றிடமாக விட்டுவந்தார்., இப்போது முதல் முறையாக தன்  மனைவியின் பெயர் ஐஷோட பென் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மனைவியின் சொத்து பற்றிய விபரங்கள் பகுதியில் “தகவல் இல்லை” no information என குறிபிட்டிருக்கிறார்.
திருமதி ஐஷோட பென், ஓய்வு பெற்ற குழந்தைகள் வகுப்புகான ஆசிரியை, மோடியின் சொந்த ஊரான வாத் நகரில் இருந்து 35 கீமீ தொலைவில் உள்ள பிரமன்வதா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்,  வயது 62,
நரந்திர மோடியின் மனைவி நான்தான் என சொல்லிகொண்டிருந்த இவரின் பள்ளி ஆவணங்களில் திருமதி ஐஷோட பென் நரேந்திர மோடிபாய் என்றுதான் இருக்கிறது.  அதனால் இவர்தான் மோடியின் மனைவி என்று சில மஹராஷ்டிர ஊடகங்கள் சில ஆண்டுகளுக்குமுன் எழுதிவந்தன. ஆனால் ஐஷோபென் பத்திரிகையாளர்களை சந்திக்க  தொடர்ந்து மறுத்துவந்தார். மோடி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கபட்டவுடன் இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியன் எகஸ்பிரஸ் நிருபர் சந்தித்தபோது முதல் முறையாக பேட்டிக்கு ஒப்புகொண்டவர் போட்டோக்கள் எடுக்க அனுமதிக்கவில்லை.
இந்த பரபரப்பு  பேட்டி பற்றி மோடி – மெளனத்தையே தன் பதிலாக தந்தார்.
தனது 17 வது வயதில் நடந்த அந்த திருமணத்திற்கு பின் 3 மாதங்கள் மட்டுமே அவருடைய குடும்பத்தாருடன் இருந்தேன். அந்த மூன்று மாதத்திலும் பல நாட்கள் மோடி வீட்டில் இருக்கமாட்டார். நான் பள்ளிப்படிப்பை 10ம் வகுப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து கொண்டிருந்தேன். மோடி என்னை அப்பாவீட்டிற்கு போய் படிப்பை தொடர சொன்னார்..  அவரது குடுமப்த்தினர் என்னை  வெறுக்க வில்லை. ஆனால் மோடிபற்றி மட்டும் எதுவும் பேசமாட்டர்கள், அப்போது இங்க்கெ வந்ததுதான். அப்பா, அண்ணனின் உதவியுடன், பள்ளிப்படிப்பையும், தொடர்ந்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்து உள்ளூர் பள்ளியில் வேலைக்கு சென்றேன், இப்போது ஒய்வும் பெற்றுவிட்டேன். என்று சொல்லும் ஐஷோட பென் தன் 14000ருபாய் பென்ஷனில் சிறிய வீட்டில் மிக சிம்பிளான வாழ்க்கையை  பலமணிநேரம் துர்க்கா பிராத்தனை மற்றும் மாணவர்களுக்கு டியூஷன் என கழிக்கிறார்..  திருமணமாணவுடனேயே கணவனை விட்டு பிரிந்து வாழவேண்டும் என்பது என் தலைவிதியானால் யார் என்ன செய்யமுடியும்? என்று சொல்லும் இவர் அதற்காக வருந்தவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மோடியை பற்றிய செய்திகளை மீடியாவில் பார்க்கிறார். அவர் ஒரு நாள் பிரதமர் ஆவார் என்று எனக்கு தெரியும் என்கிறார்.  பிரதமரானபின் டெல்லிக்கு  போய் அவருடன் வாழ்வாரா? அவர் விரும்பாத எதையும் நான் செய்யதயாராக இல்லை. எனப்து தான் இவர் பதில்
இவ்வளவு நாட்கள் இல்லாமல் இப்போது மோடி ஏன் இந்த விஷயத்தை பகிரங்கபடுத்தியிருக்கிறார்? சமீபத்தில் இவரது வாழ்க்கை குறிப்பு புத்தகங்கள் எழுதியிருப்பவர்களிடம் கூட இந்த திருமணம்,தனியாக வாழும் மனைவி பற்றி பேசியதில்லை. எனக்கு குடும்பம், குழந்தைகள் இல்லாதால் ஊழல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது என்றுதான் சொல்லியிருக்கிறார்.
இப்போது இப்படி அறிவிக்க வேண்டியது அரசியலினால் அவசியமாகிவிட்டது. மக்கள் பிரநிதி சட்டம் 1951ன்படி வேட்பாளார்கள் தங்களது, தங்கள் குடும்பத்தினர் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று சொல்லுகிறது,  தவறாண் தகவல் தரப்பட்டால் வேட்பாளர் மனு நிராகரிக்கபடும் ஆபத்துடன் சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கபடும் ஆபத்தும் இருக்கிறது. திருமணமானவரா என்ற கேள்வி இல்லை ஆனால் மனைவியின் பெயர், மற்றும் சொத்துவிபரம் கேட்கபட்டிருக்கும்.
கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் மோடியின் திருமண வாழ்க்கையை  ஒரு பிரச்னையாக்கி கொண்டிருக்கிறது. தன் திருமணத்தை மறைத்து, சொந்த மனைவியை ஒதுக்கிவைத்து அநீதி  இழைக்கும் இவர் எப்படி இந்திய தாய்குலத்தின் நலனில் அக்கரை காட்டுவார் என்றெல்லாம்  கேள்வி எழுப்பினார்கள். தேர்தல் மனுச்செய்த பின் இதை ஒரு ஆயுதமாக காங்கிரஸ் கையிலெடுக்கும். தேசிய அளவில் மகிளிர் அமைப்புகள் அதற்கு ஆதரவு கொடுக்கும் என்ற நிலையை தவிர்க்கவே இந்த ஒப்புதல் வாக்குமூலம் என்பது பரவலான கருத்து.  முந்தைய வேட்பு மனுக்களில் மறைக்கபட்டிருப்பது குற்றமாகாதா? தேர்தல் சட்ட நிபுணர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் இப்படி இளம்வயது திருமணம் சகஜம்.  எங்கள் ஏழைப்பெற்றோர்கள் படிக்காதவர்கள். அந்த சிறுவயதில் நாங்கள் பெற்றோர் சொன்னதைத்தான்  செய்வோம். இந்த திருமணமும் அப்படி நடந்த ஒன்று. சமூகதிற்காக செய்யபட்ட சடங்காக செய்யபட்ட நரேந்திரனுக்கு இஷ்டமில்லாத இந்த கல்யாணத்திலிருந்து உடனே ஒதுங்கிவிட்டான்.  என்கிறார் மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய். இந்த அறிவிப்பு பிஜெபி அலுவலகதிலிருந்து மீடியாக்களுக்கு வந்தது.
பொதுவாக வேட்பாளார்களின் பிரமாணபத்திரங்களின் நகல்கள்  மனுத்தாக்கல் முடிந்தவுடன் நோட்டிஸ்போர்டில் போடப்படும் . ஆனால் வடோதரா தேர்தல் அதிகாரி  அவரின் மேல் அதிகாரிகளின் உத்தரவிற்கு பின்னரே இதை வெளியிட்டார்.
செய்தி வெளியானதிலிருந்து திருமதி மோடியை மீடியாக்கள்  துரத்துகின்றன. ஆனால் அவர்கிராமத்தில் இல்லை. கட்சியால மோடி பிரதமர் வேட்பளாராக அறிவிக்கபடவேண்டும் என 1 வாரம் செருப்பணியாமல் நடந்தது, அரிசி சாதம் சாப்பிடாமல் விரதம் இருந்தது போல இப்போது தேர்தல் வெற்றிகாக பத்ரி- கேதார்- முக்திநாத் புனித பயணம் போயிருக்கிறார் என்கிறார்கள் அந்த கிராமத்தினர். ”இல்லை அவர்  மீடியாவை சந்திக்க முடியாமல் முதல்வரால் பாதுகாக்கபடுகிறார்” என்கிறது அபியான் என்ற குஜராத் பத்திரிகை.
ஆதித்யா
கல்கி 26/04/14



16/4/14

திடுக்கிடும் விபத்தா? திட்டமிட்ட சதியா?


  



டிசம்பர் 6 1992. இந்திய வரலாற்றில்  ஒர் கருப்பு பக்கம். ராமஜன்ம பூமியான அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் அழியாவடுக்களாக இன்றும்  பலர் மனதிலிருக்கிறது.  கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டார்கள் என்று சொல்ல பட்ட இந்த விபத்து குறித்து, கமிஷன்களும், வழக்குவிசாரனைகளும் இன்னுமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது வெளியாகிருக்கும் தகவல், இது ஒரு திட்டமிட்டு  வெற்றிகரமாக அரங்கேற்றபட்ட சதி என்பது.
கோப்ரா போஸ்ட்
என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (டெஹ்ல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர்  கே ஆஷிஷ்  பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாக  சொல்லி , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்துள்ளார். இந்த ரகசிய வீடியோ பதிவில் வினய் கட்டியார், உமா பாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த் சாக்‌ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி நிருத்ய கோபால்தாஸ் மற்றும், பா.ஜ.க., சிவசேனா, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.


வர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் ஜென்மபூமிஎன்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டிருக்கும்  'கோப்ரா போஸ்ட்'  டின் டிவிடியை டில்லி பத்திரிகையாளர்களுக்கு அதன் ஆசிரியர் அனிரோத் வழங்கியிருக்கிறார்.. இதில் சொல்லப்படும் விஷயங்களின் ஹைலைட்கள்:
            பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும்,  இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பலிதானி ஜாதாஎனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கபட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவற்றை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்த படைக்கு லக்‌ஷ்மண சேனை என்று பெயர்.

மசூதியை இடிக்கத் தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி பாபாதலைமையில் கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளிமனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யார் தர்மேந்தர் உட்பட பலரது முன்னிலையில்  5 பேர்கள் ராம பக்தர்களானான் நாங்கள் கோவிலை காப்போம் என ராமர்  மேல் சத்தியம் செய்து கொண்டு பணியை துவக்கினர்கள்.
சுவர்களை உடைக்கும் பெரிய சுத்தியல்கள், சரியான நீளத்தில் வலுவான கயிறு எல்லாம் சேகரிக்கபட்டு தயார் நிலையில் வைக்க திட்டமிட்டவர் உமா பாரதி. என்றும்  பயிற்சி பெற்ற பலரில் இந்த 5 பேர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கபட்டவர்கள். கட்டிடத்தின் வெடிப்புகளில் நுழைக்க பெட்ரோல் குண்டுகளும் கொடுக்கப்பட்டடிருக்கிறது.

 ஒருவேளை முயற்சி தோல்வி அடைந்தால் மசூதியை வெடிகுண்டு வைத்து தகர்க்க இரண்டுதற்கொலை படையினர்  உடலில் கட்டிய குண்டுகளுடன் பிளான் பி யாக தயாராக. என்றும் பேட்டிகளில் பதிவாகயிருக்கிறது.

மசூதியை இடிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அயோத்தியின் ந்துதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக் கூட்டத்தில், அசோக் சிங்கால், வினய் கட்டியார், வி.ஹெச்.டால்மியா, மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த ரகசிய கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி.சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்  என்று கோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது.
 இந்த நாசவேலை குறித்து அன்றைய மாநில முதல்வர் கல்யாண்சிங்க்கும், பிரதமர் நரசிம ராவுக்கும் தெரியும் என்கிறது கோப்ரா போஸ்ட். இதில் விருபமில்லாத கல்யாண்சிங் டிச 6 அன்று தன் பதவியை ராஜினாமா செய்யவிருந்த போது தடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி என்றும் இடிப்பு முழுவதுமாக முடியும் வரை அவர் லக்னோவில் ஆர் எஸ் எஸ் வீரர்களால் “சிறை” பிடிக்க பட்டிருந்தார் என்றும் ஒருவர் பேட்டியில் சொல்லுகிறார்.

                                                                                                    
இந்நிலையில், தேர்தல் அமைதியாக நடப்பதை தடுக்கும் விதத்தில் 'கோப்ரா போஸ்ட்' திட்டமிட்டு காங்கிரஸின் உதவியுடன் சதி செய்வதாகவும், இதுதொடர்பான அனைத்துச் செய்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார் செய்தது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது..
                     
செய்தியை தடை செய்யவேண்டும் என்று சொல்லும் பிஜபி அதன் பேட்டிகளை, பேட்டியில் சொல்லப்படும் விஷயங்களை மறுக்க வில்லையே ஏன்? என்கிறது காங்கிரஸ்.
இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு. அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால் விடுகிறது கோப்ராபோஸ்ட்.
 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை சட்டவிதிகளுக்குட்பட்டு கட்டுவோம் என்று கடைசி பக்கத்தில் ஒரு வரியாக தன் தேர்தல் அறிக்கையில் சொல்ல்யிருக்கிறது பிஜெபி.


-ஆதித்யா
கல்கி 20/04/14







         

19/3/14

தெலிங்கானா மலர்ந்தது.


ஆழம்  மார்ச் மாத இதழில் எழுதியது.


New post on ஆழம்

தெலங்கானா மலர்ந்தது

by ரமணன்
இந்திய நாடாளுமன்றம் இதுவரை சந்திக்காத சில அபூர்வமான காட்சிகளுக்குப் பின்னர் ஒரு வழியாகப் 29வது மாநிலமாக தெலங்கானா பிறந்துவிட்டது.  ஐம்பது ஆண்டு கால விவாதங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு தெலங்கானா பிரச்னை ஒரு முடிவை நோக்கி நகர்ந்திருக்கிறது. துயரங்களையும் கசப்புகளையும் கொண்டு வராத பிரிவினை ஏதேனும் வரலாற்றில் பதிவாகியுள்ளதா என்ன? தெலங்கானாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
இந்திய அரசியல் களத்தில் இதற்கு முன் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன, புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் தெலங்கானா அவற்றில் இருந்து வேறுபடுகிறது. பதிவாகியுள்ளபடி 904 மரணங்கள் தெலங்கானாவுக்காக நிகழ்ந்துள்ளன. 100 கோடிக்கும் மேல் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. மூன்று புதிய கட்சிகள் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தின. வேறு எந்த மாநிலப் பிரச்னையின்போதும் இவ்வாறு நிகழவில்லை.
ஒரு புதிய மாநிலம் சட்டபூர்வமாக பிறப்பது என்பது  ஒரு சரித்திர நிகழ்வு. ஆனால் தெலங்கானா நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அழிக்கமுடியாத ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியபிறகே உதயமாகியிருக்கிறது. ஆந்திரப் பிரசேம் மறுச்சீரமைப்பு மசோதா உருவான கதை கிட்டத்தட்ட போர்க்களத்தை நினைவுபடுத்துகிறது. 13 பிப்ரவரி 2013 அன்று தெலங்கானா தொடர்பான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது இரு அவைகளிலும் கூச்சலும் குழப்பமும் எழுந்தது. ஆந்திரப் பிரிவினையைத் தடுக்க முயன்ற ஒரு காங்கிரஸ் எம்.பி கையோடு கொண்டு வந்திருந்த மிளகு ஸ்ப்ரேயை அடித்தார். சிலரிடம் கத்தி இருந்தது. மசோதாவை வாசிக்கவிடாமல், விவாதங்களை நடத்தவிடாமல் இவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும் அமர்க்களங்களும் சபாநாயகர் மீராகுமார் சொன்னதைப் போல் வெட்கித் தலை குனிய வைக்கக்கூடியவை.
ஒரு கோரிக்கையாக இருந்த தெலங்கானா பின்னர் சட்டமாக உருவான தருணங்களில் தொலைக்காட்சி காமிராக்கள் இயங்கவில்லை. இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று சொல்லப்பட்டாலும் இதனை பலர் ஏற்கத் தயாராக இல்லை. இதற்கிடையில், மிளகு தூவிய விஜயவாடா தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் லகடபதி ராஜகோபால் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தெலங்கானா மசோதாவுக்கு எதிராக சீமாந்திரா உறுப்பினர்கள் நீண்ட காலமாக கட்சி வித்தியாசமின்றி குரல் கொடுத்து வருவதாக இவர் கூறியிருக்கிறார்.
தெலங்கானாவின் மற்றொரு முக்கிய அம்சம் இது. நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு தெலங்கானாவை ஆந்திராவில் இருந்து பிரித்தெடுப்பதற்கு காங்கிரஸ் ஒப்புதல் கொடுத்திருந்தாலும் இன்னமும் கட்சிக்கு உள்ளேயே இந்த முடிவுக்கு முழுமையான ஒப்புதல் கிடைக்கவில்லை. உச்சகட்டமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர முதல்வரே இந்த முடிவை எதிர்த்து ராஜிநாமா செய்திருக்கிறார். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான பாஜக இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விசித்திரம்தான், இல்லையா?
காலச்சுவடுகள்
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போதே தெலங்கானா தனி மாநில கோரிக்கை உயிர் பெற்றுவிட்டது. 1946 தொடங்கி 1951 வரை ஹைதராபாத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன்  நடைபெற்ற விவசாயிகள் எழுச்சி இந்தியாவின் பார்வையை தெலங்கானாவை நோக்கி திருப்பியது. மத்திய அரசாங்கம் ராணுவத்தை அனுப்பி இந்த எழுச்சியை அடக்கியது. தெலுங்கு மொழி ஆந்திர மக்களை ஒன்றிணைக்கும், பிரிவினை கோஷத்தைக் காலப்போக்கில் அடக்கிவிடும் என்று பலர் நினைத்தாலும் அன்றைய பிரதமர் நேரு தெலங்கானாவின் இயல்பை நன்றாகவே அறிந்திருந்தார். விவாகரத்து உரிமை பெற்ற திருமணம் என்றே ஆந்திராவுடனான தெலங்கானாவின் இணைப்பை 1956ல் அவர் வர்ணித்தார்.
இருந்தும் அடுத்தடுத்து அமைந்த அரசாங்கங்கள் தெலங்கானா கோரிக்கையைப் புறந்தள்ளி அதனை ஒரு பிரிவினைவாதக் கோஷமாகவே கண்டனர். 2004ல் வலுவான அரசியல் பிரச்னையாக தெலங்கானா எழுந்தபோது, காங்கிரஸ் தனித் தெலங்கானா தருவதாக தேர்தல் பிரசாரத்தில் வாக்களித்தது. ஆனால் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும் வசதியாக இந்த வாக்குறுதியை மறந்துவிட்டது. அல்லது, வெறுமனே காலம் தாழ்த்திவிட்டது.
இனியும் அது சாத்தியமில்லை என்னும் விதமாக ஆந்திராவில் தெலங்கானாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பெரும் போராட்ட அலைகளும் ஆர்ப்பாட்டங்களும் எழுந்தபோது முடிவு எடுத்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. வேறு வழியின்றி, தனித்தெலங்கானாவை காங்கிரஸ் ஆதரிக்கவேண்டி வந்தது.  ஜூலை 2013ல் காங்கிரஸ் பிரிவினைக்கு ஆதரவாக முடிவெடுத்தது. அக்டோபர் 2013ல் மந்திரிசபை கூட்டத்தில் இது முடிவாக, டிசம்பரில் வரைவு மசோதா தயாரானது. கூடவே புதிய பிரச்னையும் தொடங்கியது.
ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மரணத்துக்குப் பின்னர் அவரது மகன் ஜெகன் விரும்பியபடி அவரை முதல்வராக்காமல் கிரண்குமார் ரெட்டியைத் தேர்ந்தெடுத்து முதல்வராக்கினார் சோனியா காந்தி. தெலங்கானா பிரிந்தால் காங்கிரஸ் செல்வாக்கு பறிபோகும் என்று கருதிய கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் மேலிடம் சொல்வதைக் கேட்க மறுத்தார். அதனால் மத்திய அரசின் வரைவு மசோதாவை மாநிலத்தின் சட்டசபையில் நிறைவேற்றாமல் திருப்பியனுப்பினார்.
அவரைப் பதவி நீக்கம் செய்து மற்றொரு முதல்வரை நியமித்து அவர்மூலம் மசோதாவை நிறைவேற்ற மத்திய காங்கிரஸ் தலைமையால் முடியவில்லை. கட்சிக்குள் பிளவைத் தவிர்க்கவே பொறுமை காத்தோம் என்று பேட்டியளித்தார் ப. சிதம்பரம். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாமல் போகவே, பிளவு பயத்தையும் மீறி மசோதாவில் உறுதியாக நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. மசோதாவை நேரடியாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்தது.
காரணங்கள், கணக்குகள்
ஏன் இந்த அவசரம்? ஒன்றுதான். வாக்கு வங்கி அரசியல். மசோதாவைக் கொண்டுவராமல் முன்னர் நாள்களைக் கடத்தியதற்கும், தாமதமாகக் கொண்டுவந்ததற்கும், ஆதரித்தற்கும், எதிர்த்ததற்கும், பின்னர் வலுவாக ஆதரித்ததற்கும்கூட வாக்கு வங்கிதான் காரணம். எதை எப்போது செய்தால் ஆதரவு கிடைக்கும், எதைச் செய்தால் கிடைக்காது என்னும் கணக்குதான் இங்கே காங்கிரஸுக்கு முக்கியம்.
இப்படி அவசரக்கோலத்தில் தெலங்கானா பிரச்னையைத் ‘தீர்த்து வைத்ததில்’ யாருக்கு என்ன லாபம்?
சற்று ஆழ்ந்து ஆராய்ந்தால், நமது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றுமே இந்த விளையாட்டில் கணக்குப் போட்டு ஈடுபட்டிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும் பெரிய மாநிலம் ஆந்திரா. ஆனால் தெலங்கானாவுக்கு எதிரானவர்களும் ஆதரவாளர்களும் அதில் கிட்டத்தட்ட சரிசமமாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.  மொத்தமுள்ள 42 எம்.பி சீட்டுகளில் 31 காங்கிரஸ் வசமிருக்கிறது. அதில் 17 தெலங்கானா பகுதியிலும் 19 சீமாந்திராவிலும் இருக்கிறது. ஆக எப்படி முடிவெடுத்தாலும் ஒரு பகுதியை இழக்க நேரிடும்.
காங்கிரஸ் வேறு கணக்கு போட்டது. தெலங்கானாவை அறிவித்தால் அதற்காகப் போராடும் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிடுவதாக முன்பு கூறியிருந்தார். காங்கிரசுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கும் இந்த நேரத்தில் ஆந்திராவை முற்றிலும் இழந்துவிடுவோம் என்னும் அச்சத்தில் சந்திரசேகர் ராவின் டிஎஸ்ஆர் கட்சியின் (தெலங்கானா ராஷ்டிர சமிதி) ஆதரவுடன் 17 எம்.பி சீட்டுகளைத் தக்கவைத்துக்கொள்ள கணக்குப்போட்டது காங்கிரஸ். தெலங்கானா எதிர்ப்பு சீட்டுகளை இழக்க நேரிட்டாலும் இதை வைத்து சரிகட்டிவிடலாம் அல்லவா? சந்திரசேகர் ராவுக்கு ஆதரவு அளித்து அவரை முதல்வராக்கிவிட்டு பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் அவரது கட்சியை இணைத்துவிடலாம் அல்லவா?
காங்கிரஸ் எதைச் செய்தாலும் எதிர்க்கும் பாஜக ஏன் தெலங்கானா மசோதாவை ஆதரித்தது? அவர்கள் போட்ட கணக்கு இது. காங்கிரஸ் தெலங்கானா மசோதாவைக் கொண்டுவராமல் காலம் தாழ்த்தும் என்று நினைத்து வந்த பாஜக, தெலங்கானாவை எதிர்க்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சி செய்தது. சந்திரபாபு நாயுடு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவும் செய்தார். தெலங்கானாவில் பெரும் வியாபார,தொழில் முதலீடுகள் செய்துள்ள சீமாந்திரா பகுதியினரின் ஆதரவு அவருக்குக் கிடைக்க சந்திரபாபு உதவுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிந்ததும் அவர்களைக் கடந்துசெல்லவும் முடிவெடுக்கப்பட்டது. பாஜக கூட்டணி பற்றி சந்திரபாபு நாயுடுவின் சமீபத்திய கருத்து இது. ‘தெலங்கானா விவகாரத்தில் பாஜக சரியான வாதங்களை முன்வைக்கவில்லை, இருப்பினும் கூட்டணி விவகாரங்களை உணர்ச்சிவசப்பட்டு முடிவு செய்து விட முடியாது.‘
காங்கிரஸின் கணக்கு வேறு மாதிரி திரும்பவே பாஜக விழித்துக்கொண்டது. காங்கிரஸ் முன்வைக்கும் தெலங்கானா மசோதாவை ஆதரிக்க மறுத்தால் அதையே காரணமாகச் சுட்டிக்காட்டி பழி போடப்படும் என்று பாஜக அஞ்சியது. தெலங்கானாவை ஆதரிக்க காங்கிரஸையும் சேர்த்து ஆதரிக்க முடிவு செய்தது. நாங்கள் ஆரம்பம் முதலே, அதாவது ஜன் சங் காலம் முதலே தெலங்கானா தனியாக இருப்பதையே விரும்பினோம் என்று தங்கள் ஆதரவுக்கு நியாயமும் கற்பித்தனர். மற்றொரு பக்கம் காங்கிரஸையும் தாக்கியது. காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாகவும் தேர்தல் ஆதாயம் தேடுவதாகவும் குற்றம் சுமத்தியது. எங்கள் தயவு இல்லாவிட்டால் மசோதா நிறைவேறியிருக்காது என்றும் சொல்லிக்கொண்டது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைவர் ஜெகனின் கணக்கு வேறு மாதிரியானது. என்னதான் ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காகப் போராடினாலும் உண்ணாவிரதம் இருந்தாலும் பிரிவினை தவிர்க்கமுடியாதது என்பது அவருக்குத் தெரியும். அவருடைய இலக்கு ஹைதராபாத் சட்டமன்ற முதல்வர் நாற்காலி. தெலங்கானா பிரிந்தாலும் சீமாந்திராவின் முதல்வராகும் வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்பது அவர் விருப்பம். இதற்கிடையில், தெலங்கானா மசோதாவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளனர்.
மற்றொரு பக்கம், ரெட்டி பிரிவினர்களின் ஆதிக்கத்தில் இருந்து காங்கிரஸ் நழுவிக்கொண்டிருக்கிறது.
காங்கிரஸிலிருந்து பிரிந்துவரும் கிரண்குமார் ரெட்டி, தெலுங்கு தேசத்துடன் அணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்து வெல்ல முயற்சி செய்து வருகிறது.
இப்படி எல்லோரும் அவரவருக்குத் தோதான கணக்குகள் நிறைவேற காத்திருக்கிறார்கள். நம்முடைய அணுகுமுறையே சரியானது என்று ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கணக்கு யார் போட்டாலும், அதைச் சரிபார்த்து மதிப்பெண் போடப்போகிறவர்கள் மக்கள்தான்.
இனி என்ன?
  • அதிகாரபூர்வமாக ஆந்திரப் பிரவினை ஏப்ரல்&மே மக்களவைத் தேர்தல் முடிந்தபிறகே நடைபெறும். சரியான தேதியை மத்திய அரசு குறிக்கவேண்டும்.
  • மக்களவைத் தேர்தலும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலும் முன்பு நிகழ்ந்ததைப் போலவே நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
  • கிரண்குமார் ரெட்டியின் ராஜிநாமா ஏற்கப்பட்டு விட்டது என்றாலும் புதிய அரசு அமையும்வரை பொறுப்பில் நீடிக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஆனால் தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில் ஆளுநர் ஆட்சியே அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
  • தெலங்கானா சாத்தியமானதைத் தொடர்ந்து நாட்டில் பிற மாநிலக் கோரிக்கைகள் வலுவடையும் என்னும் எதிர்பார்ப்பும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. 
  •  தெலங்கானா ஒரு பார்வை
  • பரப்பளவு 1.14 லட்சம் சதுர கிலோ மீட்டர்.
  • மக்கள் தொகை 3.5 கோடி (ஹைதராபாத் சேர்த்து).
  • மாவட்டங்கள் : அடிலாபாத், நிஜாமாபாத், கரிம்நகர், மேடக், வாரங்கல், ரங்காரெட்டி, கம்மம், நலகோண்டா, மஹபுக்நகர், ஹைதராபாத்.
  • தெலுங்கு, உருது ஆகியவை முக்கிய மொழிகள். சில பகுதிகளில் மராத்தியும் கன்னடாவும் பேசப்படுகின்றன.
  • இரும்பு, கரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் உள்ளன. மத்திய அரசும் ஆந்திர அரசும் இணைந்து நடத்தும் சிங்கரேனி கொலைரீஸ் இப்பகுதியிலுள்ள முக்கியப் பெரிய நிறுவனமாகும்.
  • புதிய மாநிலத்தின் முக்கியப் பிரச்னையாக மின்சாரம் இருக்கப்போகிறது என்கிறார்கள்.
  • கோதாவரி, கிருஷ்ணா இரண்டும் முக்கிய ஆறுகள். எண்ணற்ற பல ஏரிகளும் உள்ளன.
  • நக்ஸல் நடவடிக்கைகளின் களமாக இருந்த பகுதி.
ரமணன் | March 19, 2014 at 11:21 am | URL: http://wp.me/p2eZn6-ZX
Comment    See all comments
Unsubscribe to no longer receive posts from ஆழம்.
Change your email settings at Manage Subscriptions.
Trouble clicking? Copy and paste this URL into your browser:
http://www.aazham.in/?p=3841


14/2/14

மன்மோகன் சிங்

New post on ஆழம்

மன்மோகன் சிங் பாவங்களும் சிலுவைகளும்

by ரமணன்
பிரதமர் கனவு இல்லாத ஓர் அரசியல்வாதியைச் சுட்டிக்காட்டச் சொன்னால் நாம் திணறவேண்டியிருக்கும். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தொடங்கி சிறையில் இருக்கும் அந்தப் பழம்பெரும் அரசியல்வாதி வரை அனைவரும் பிரதமர் பதவியையே குறிவைத்து கனவு கண்டு வருகிறார்கள். ஒரே விதிவிலக்கு அந்தப் பதவியில் ஏற்கெனவே அமர்ந்திருக்கும் மன்மோகன் சிங். சமீபத்திய ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியுற்றதால் கலைந்துவிட்ட கனவல்ல இது. மாறாக, தொடக்கம் முதலே மன்மோகன் சிங் பதவியாசை இல்லாதவராகவே இருந்திருக்கிறார். இருந்தும் அவருடைய விருப்பத்துக்கு மாறாக சூழ்நிலைகள் அவரை இந்த  அளவுக்கு உயர்த்தியிருக்கின்றன. மீண்டும்,  அவர் விருப்பத்துக்கு மாறாக அதே சூழ்நிலைகள் அவரை இப்போது படுகுழியிலும் தள்ளியிருக்கின்றன. இதற்கு ஒருவகையில் அவரும்கூட காரணம். இந்திய அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு சிக்கலான, விநோதமான கதை அவருடையது.
1991ல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி நரசிம்ம ராவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அப்போது மன்மோகன் சிங் அரசியல் களத்திலேயே இல்லை. இருந்தும் அவரைச் சென்று சந்தித்து, பிரதமர் உங்களை நிதியமைச்சராக நியமிக்க விரும்புகிறார், தயாராக இருங்கள் என்று காபினட் செயலர் சொல்லியிருக்கிறார். மன்மோகன் சிங் இதை நம்பவில்லை. மறுநாள்  நரசிம்ம ராவ் நேரடியாக மன்மோகனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நேற்று ஏன் என்னைச் சந்திக்க நீங்கள் வரவில்லை? மதியம் அசோகா ஹாலுக்கு வந்துவிடுங்கள். பதவியேற்புக்குத் தயாராகிவிடுங்கள். அப்போதும் மன்மோகன் சிங்குக்குப் புரியவில்லை. எதற்காக இந்தத் திடீர் அழைப்பு? எதற்காகப் பதவி நியமனம்? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே நிதித்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யப்படுகிறார் மன்மோகன் சிங்.
தான் அரசியல்வாதியான கதையை 2005ல் பிபிசிக்கு விவரித்தபோது அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார். ஓர் அரசியல்வாதியாக இல்லாமல் இருந்தும் நேரடியாக நிதியமைச்சராக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கமுடியும். அவருடைய கூர்மையான அறிவுத் திறன்.
மிக எளிமையான குடும்பப் பின்னணி அவருடையது. பள்ளியிலிருந்தே எல்லா வகுப்பிலும் முதல் மாணவர். அதனால் கிடைத்த ஸ்காலர்ஷிப்புகள் வாயிலாக கல்லூரியில் இணைந்தார். பிஏ பல்கலைக்கழக முதல் மாணவனாக தங்கப் பதக்கம் வாங்கியதால் எம்ஏ படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஒரு தங்கப் பதக்கம் வாங்கியதால் லண்டன் கேம்பிரிட்ஜில் முழு ஸ்காலர்ஷிப்புடன் இடம் கிடைத்தது. அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று இந்தியா திரும்பினார். தனது மாநிலமான பஞ்சாபில் ஒரு கல்லூரியில் இணைந்தார். இதுதான் அவருடைய கனவு.
மூன்றாண்டு பேராசிரியர் பணிக்குப் பின்னர், மேற்கொண்டு படிக்கும் உந்துதலில் மன்மோகன் 1960ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பில் இணைந்தார். அதையும் வெற்றிகரமாக முடித்து இந்தியா திரும்பி டெல்லியில் தன் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். லண்டனிலுள்ள  கேம்பிரிட்ஜ் பேராசிரியரின் சிபாரிசால் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான யுஎன்டிஏசிடியில் ஆய்வுப் பணி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பணியைத் திறம்படச் செய்துவந்த சமயத்தில் எல்.என். மிஸ்ரா என்ற மத்திய அமைச்சரை அவர் அடிக்கடி சந்தித்து வந்தார். மன்மோகனின் திறமையைக் கூர்ந்து கவனித்த அவர் தன் அமைச்சரவைக்கு ஆலோசகராக வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அப்பொதெல்லாம் அரசாங்க ஆலோசகர் என்பது இன்றுபோல செயலாளருக்கு நிகரான பொறுப்பல்ல. ஆனாலும் ஆய்வுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மன்மோகன் இந்த அழைப்பை ஏற்றார்.  அரசியல்வாதியாக இல்லாமலேயே பின்னாளில் அமைச்சரானதைப்போல ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமலேயே அதிகாரிகள் வர்க்கத்தில் அவர் அன்று நுழைந்தார். தொடர்ந்து பல அமைச்சகங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றி பலருடைய கவனத்தை ஈர்த்தார்.
ஒரு கட்டத்தில் நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவருக்கு உயர்வு கிடைக்கிறது. 1976ல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்படுகிறார். இது அவருடைய வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்பம். நாட்டின் பொருளாதார நிலைமை சீராகவில்லை, அதை சரிசெய்ய மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று துணிச்சலுடன் அரசுக்குச் சொன்ன முதல் ரிசர்வ் வங்கி கவர்னர் இவரே. அதனாலேயே அந்த வழிமுறைகளை அரசுக்கு அதிகாரபூர்வமாகச் சொல்ல திட்ட கமிஷனின் உதவித் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி நிதியமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் நெருக்கத்தை வளர்க்க உதவியது.
அதே சமயம், இந்தியா கிட்டத்தட்ட திவாலாகிக்கொண்டிருக்கிறது என்று அறிவிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் மன்மோகன் சிங். பொறுப்புக்கு வந்தவுடனேயே மிக மோசமான ஒரு செய்தியை அறிவிக்கவேண்டிய நிர்பந்தம். மிகப் பெரிய அடிப்படை மாற்றங்களைக் கொள்கையளவில் கொண்டுவந்தாலொழிய மீள்வது சிரமம் என்பதே மன்மோகன் சிங்கின் ஆலோசனையாக இருந்தது. அதை அவர் தயங்காமல் நரசிம்ம ராவிடம் பகிர்ந்துகொண்டார். நரசிம்ம ராவும் தயாராகவே இருந்தார். தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான உரிமை மன்மோகனுக்கு வழங்கப்பட்டது.
சுதந்தர இந்தியா சந்தித்த மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சியை மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். உலகமே பார்த்து வியந்த ஒரு விஷயம் இது.  வெளி நாடுகளிலிருந்து, பன்னாட்டு நிதி ஆணையங்களில் இருந்து கடன் பெறமுடியாத பரிதாபகரமான நிலையில் இருந்த இந்தியா ஐந்தே ஆண்டுகளில் முதலீட்டுக்கான ஒரு நல்ல களமாக மாறிப்போனது. காரணம், மன்மோகன் சிங்.
பொருளாதாரம் மளமளவென்று வளரத் தொடங்கியது. இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு உலக வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது என்னும் நிலைக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இந்தியாவைப் பொருட்படுத்தியே தீரவேண்டிய அவசியத்துக்கு வல்லரசுகள் வந்து சேர்ந்த காரணம், மன்மோகன் சிங்.
ஆனால் இதை அடைய உள்நாட்டில் அவர் பல எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருந்தது. பல்வேறு சந்தேகங்களை அவர் கடக்கவேண்டியிருந்தது. பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மீண்டும் அமர்ந்ததற்குக் காரணமாக இருந்தார் மன்மோகன் சிங். அன்று மீடியாவின் டார்லிங் அவர்தான்.
எந்த மீடியா அவரை உச்சத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்ததோ அதே மீடியா இன்று அவரை எள்ளி நகையாடிக்கொண்டிருக்கிறது. அவரது முழுமுற்றான வீழ்ச்சியை எதிர்நோக்கி ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது. எந்தப் பொருளாதாரப் புரட்சியை அமைதியாக அவர் அரங்கேற்றினாரோ அந்தப் புரட்சியின் நோக்கங்கள் இன்று கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. மன்மோகனின் அமைதியான அணுகுமுறை அன்று பாராட்டப்பட்டது. இன்று  அவருடைய அமைதி கேலி செய்யப்படுகிறது. அதிகம் சாதிக்காத பிரதமர் என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதுகிறது வாஷிங்டன் போஸ்ட்.
ஏன் ஏற்பட்டது இந்த நிலைமை? ஆழ்ந்து நோக்கினால் மூன்று காரணங்கள் தெளிவாகப் புலப்படும்.
1) தேசமல்ல, கட்சியே பிரதானம்!
இதற்கு இன்னொரு பெயர் அதர்மம். காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எதையும் செய்யத் தயாராக இருந்தது. தேசத்தின் நலன் முக்கியமா அல்லது ஆட்சியில் நீடிப்பது முக்கியமா என்னும் கேள்வியை காங்கிரஸ் எழுப்பியதாகவே தெரியவில்லை. அதற்கான விடையை அது தெளிவாகவே அறிந்திருந்தது. கூட்டணி கட்சிகளின் பேரங்கள் அனைத்துக்கும் செவிகொடுத்தது. இதற்கெல்லாம் காரணம் கட்சியின் தலைவர் சோனியா காந்திதான் என்று ஒருவர் சொல்லிவிடலாம். ஆனால் அமைதியாக இருந்து அனைத்தையும் அனுமதித்த ஒரே காரணத்துக்காக மன்மேகன் சிங்கும் இதற்கு காரணமாகிறார் என்பதை மறுக்கமுடியாது.
இந்தியாவின் பிரதமராக அல்லாமல், கட்சியின் காவலராகவே மன்மோகன் சிங் கடந்த இரு ஆட்சிக்காலத்திலும் செயல்பட்டிருக்கிறார். தேசத்தின் குரலைவிட தன் கட்சித் தலைவரின் குரல் அவருக்கு முக்கியமாகப் பட்டிருக்கிறது. தேசத்தின் தேவைகளைவிட கட்சியின் தேவைகள் முக்கியமாகிவிட்டன. அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார். அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவந்த நிலையிலும்கூட மன்மோகன் சிங் கட்சியைக் காக்கும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டார். தேசத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் அல்ல.
2)நாற்காலியை விடமாட்டேன்!
அவரை மிகக் கடுமையாக விமரிசிப்பவர்களும்கூட மன்மோகன் சிங்கை ஊழல் கறை படியாதவர் என்று ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். நிலம், பூமி, காற்று என்று தொடங்கி பஞ்ச பூதங்களிலும் காங்கிரஸ் ஊழல்கள் பல செய்தபோதும் தனிப்பட்ட முறையில் குற்றமற்றவராகவே மன்மோகன் சிங் பலரால் பார்க்கப்படுகிறார். இது ஆச்சரியம்தான். அதே சமயம், கட்சியின் தவறுகளுக்குத் தார்மிக அளவிலாவது பொறுப்பேற்று அவர் ஏன் ராஜிநாமா செய்யவில்லை என்னும் கேள்வியை எழுப்பாதவர்களே இல்லை.
ஏன் கட்சி மேலிடத்தை எதிர்த்து ஒருவார்த்தைகூட அவரால் பேசமுடியவில்லை? தன்னளவில் சுத்தமாக இருந்தும் களங்கப்பட்டுப்போன தன் கட்சியை ஏன் அவரால் எதிர்க்கமுடியவில்லை? அவர் ஒரு பலிகடாவாக மாற்றப்பட்டுவிட்டாரா? அல்லது தானாகவே முன்வந்து இந்தப் பதவியையும் அவர் ஏற்றுக்கொண்டுவிட்டாரா?
இரண்டாவதுதான் சரி என்று தோன்றுகிறது. காங்கிரஸும் குறிப்பாக சோனியா காந்தியும் தனக்கு அளித்த மரியாதைகளையும் அங்கீகாரங்களையும் அவர் இன்னமும் மறக்கவில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்னும் உணர்வை அவரால் உதறித் தள்ளமுடியவில்லை. தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை, கட்சியை மீட்டெடுக்கவேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார் போலும்.
3)தலைமைத்துவம்
அறிவாற்றல்மிக்க பொருளாதார நிபுணர்தான் என்றபோதும் தேசத்தைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் தனிச்சிறப்பான இயல்புகள் மன்மோகன் சிங்கிடம் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கட்சியின் தவறுகளை அவரால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. தவறிழைத்த அமைச்சர்களைக் கேள்வி கேட்க இயலவில்லை. தறிகெட்டு ஓடும் நிர்வாகத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அமைச்சரவை கூடி எடுத்த முடிவொன்றை கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் கிழித்தெறிந்து பேசியபோதும்கூட மன்மோகன் சிங் அமைதியே காத்திருக்கிறார். இதை அவருடைய மாண்பாகவும் நல்லியல்பாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்றபோதும், ஒரு தலைவராக அவருடைய தோல்வி பளிச்சென்று புலப்படுவதை அவராலும் தடுக்கமுடியவில்லை.
1999ல் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் நின்று போட்டியிட்டு தோற்றார் மன்மோகன் சிங். அப்போது தேர்தல் செலவுக்காக குஷ்வந்த் சிங்கிடம் அவர் கடன் வாங்கியிருக்கிறார். அதை மறுநாளே தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த மன்மோகன் சிங்கை ஆச்சரியமான மனிதன் என்று அழைக்கிறார் மன்மோகன் சிங். இத்தகைய பல அபூர்வமான விஷயங்களைப் பலர் அவரிடம் கண்டடைந்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் களத்தில் மன்மோகன் சிங் அபூர்வமானவர் என்பதில் மாற்று கருத்தில்லை. இருந்தும் அவர் இன்று வருத்தப்பட்டு சுமக்கும் பாரங்கள் தனிப்பட்ட முறையில் அவரை அழுத்திக்கொண்டிருக்கின்றன, கீழே கீழே பிடித்து இழுத்துக்கொண்டிருக்கின்றன.
நடப்பு அரசியல்வாதிகளோ ஊடகமோ எதிர்க்கட்சிகளோ அல்ல, வரலாறு என்னை மதிப்பிடும் என்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறார் மன்மோகன் சிங். உண்மைதான். கால ஓட்டத்தில் அவர்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் தூசுகள் உதிர்ந்துபோகக்கூடும். அவர் செய்தவை அல்லது செய்யத் தவறியவை மன்னிக்கப்படலாம். ஆனால் அவருடைய சாதனைகள், குறிப்பாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அவர் பெயரை உயர்த்திப் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. அப்போது அவர் புத்துயிர் பெறுவார்.
ரமணன் | February 13, 2014 at 2:50 pm | URL: http://wp.me/p2eZn6-Zr