3/1/14

மசாலா தோசையிலிருந்து மெல்போர்னுக்கு .

சென்னை  அடையார் பார்க் ஹோட்டல் டவரின் ஆறாவது மாடியில் நண்பருடன் கிளப் லெளன்ஞ்சில் பிரேக்பாஸ்ட். தவிர்க்க முயற்சித்து இயலாது போன ஒரு பிரேக்பாஸ்ட். கண்ணாடிகளின்வெளியே ஆச்சரியபடுத்திக்கொண்டிருக்கும் சென்னையின் பசுமை. நகரிலேயே காஸ்டிலியான. ஊத்தப்பம் சாப்பிட்டுகொண்டிருக்கிறோம். (நமக்கு பிடித்தது (தெரிந்தது?) வேறு எதுமில்லை) பக்கத்து டேபிளில் ஆரஞ்ச் கலர் ஜிப்பாவில் தங்க பிரேம் கண்ணாடியில் ஒருவர்.  யாருடனோ  போனில் யாழ் தமிழில் சென்னை திருவையாறு பற்றி கதைத்துக்கொண்டிருந்தார். பொதுவாக இம்மாதிரி ஹோட்டல்களில் பக்கத்து மேஜைக்கார்களுடன் பேசவே மாட்டார்கள் அதிக பட்சம் ஒரு செயற்கையான ஹலோ, மாறாக இந்த மனிதர் தான் சாப்பிட்ட மசாலா தோசையின் ருசி அற்புதம் என பேச தொடங்கினார். மசாலா தோசையிலிருந்து பேச்சு மெல்ல  மெல்போர்னுக்கு போனது. காரணம் அங்கு வசிப்பவர் அவர். சென்னை மீயூசிக் சீசனுக்கு  குடும்பத்துடன் வந்திருப்பதாகவும்,   கேட்கவேண்டிய கச்சேரிகளை  தேர்ந்தெடுத்து கேட்பதாகவும் சொன்னார். இம்மாதிரி இப்போது நிறைய NRI க்கள் வருவதால் அது எனக்கு பெரிய விஷயமாக தோன்றவில்லை.  ஆனால் தொடர்ந்து சொன்னது தான் என்னை கவர்ந்த விஷயம். இது தன் மகளுக்காக என்றும் அவர் 4 வயதிலிருந்து மெல்போர்னிலேயே கர்நாடக இசை கற்றுவருகிறார் என்றும்  ஆண்டு தோறும் இங்கு வந்து தன் மியூசிக்கை இம்ரூவ் செய்து கொள்கிறார் என்றும் சொன்னார். தன் மனைவி ஒரு கீரிஸ் தேச பெண் என்றார்.  அப்பா இலங்கை அம்மா கீரிஸ், பெண் கர்நாடக இசை கற்று கொண்டுவருகிறது என்பதை கேட்டதும்  என் பத்திரிகைகாரன் புத்தி முழித்துகொண்டது. அவர்களை சந்திக்க வேண்டுமே என்றேன்.
இரண்டு நாட்களுக்கு பின்  அந்த குடும்பத்தினரை சந்திதேன்.   ஒரு மயிலாப்பூர் பெண்ணைபோல பட்டுபுடவையில் வந்து ஆச்சரியபடுத்தியவர்  ஷக்தி  அவர் மகள் ! சென்னையில் இருக்கும்போது  இதுதான் டிரஸாம்.



 4 வயதில் கர்நாடக வாய்ப்பாட்டு, 5 வயதில் வயலின் 6 வயதில் பியானோவுடன் வெஸ்டர்ன் மீயூஸிக் 7 வயதில்.பரதம், விணை என்று சகலுமும் ஆஸ்திரேலியாவிலேயே கற்க ஆரம்பித்து தொடர்ந்து எல்லாவற்றிலும் டிப்பளமோ வாங்கியதை மிக பணிவுடன் சொல்லி பிரமிக்க வைத்தார். ஷக்தி. வீட்டில் அம்மாவுடன் லத்தின் அப்பாவுடன் இங்கிலீஷ் என்று பேசுவதால் தமிழ் பேச தெரியாது. என்று சொன்னவர் என்னுடன் பிரிட்டிஷ் ஆக்ஸஸெண்ட் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டிருந்தார்.  எனக்கு பாடிக்காட்ட விரும்பியபோது. (நாம் ஓளெரங்க சீப் என்று அவருக்கு தெரியாது) சட்டென்று  ஹைஹீல் செருப்பை கழட்டிவிட்டு தரையில் உட்கார்ந்து ”குறை ஓன்றும் இல்லை” பாடினார். அவரது குரு  எங்கு பாடினாலும் தரையில் உட்கார்ந்துதான்  பாட வேண்டும் எனறு சொல்லியிருக்கிறாம். நல்ல குரல்வளம்,ராகம் எல்லாம்  கண்ணைமூடி கேட்டால் ஷக்தி தமிழ் தெரியாத ஆஸ்திரேலிய பெண் என்று யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அழகாக பாடுகிறார்.  சங்கீதத்தின் எல்லைகளை தொட முயலும் இந்த அழகான பெண்  ஸ்கூல்படிப்பு முடித்து மெடிசன் படிக்க கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். 10 வருடம் பரதம் கற்று கடந்த வருடம் அரேங்கேற்றம் செய்திருக்கிறார். படிப்பிலும் டாப். ஆஸ்திரேலியா மேக்ஸ் ஒலிம்ப்யார்ட் போட்டிகளில் முதல் 15% இடம் பெருமளவுக்கு கணக்கு தெரிந்திருக்கிறது.  டாக்டருக்கு படித்தாலும் கர்நாடக சங்கீதத்தை தொடர்வேன் Music is my life என்று சொல்லி  என்னை பிரமிக்கவைத்த  இந்த புத்திசாலிப்பெண்ணை பற்றி விரைவில் கல்கியில் எழதவிருக்கிறேன்.  இந்த வார இறுதியில் எங்கள் கீரின் ஏக்கர் கிளப்பிற்கு வந்து பாடும்படி  அழைத்திருக்கிறேன்.

நல்ல பயணங்களைப்போலவே, எதிர்பாராமல் ஆச்சரியப்படுத்தும் சந்திப்புகளும் அவ்வப்போது எனக்கு வாய்க்கிறது. 2013 ஆண்டின் இறுதிநளில்  கிடைத்த இதுவும் அத்தகைய ஓன்று இது

ஹேப்பி நீயூ இயர். 

1/1/14

சத்குருவுடன் ஒரு நாள்

சத்குருவுடன் ஒரு நாள்



கோவைக்கு அருகில் வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம். நடுவில் தூண்கள் எதுவுமில்லாது  நவீனமாக எழுப்பட்டிருக்கும் பிரமாண்டமான ஆதியோகி ஆலயம் என அழைக்கப்படும் தியான மண்டபம்..ராணுவ ஒழுங்கில் அமர்ந்திருப்பவர்களின் முன்னே விளக்கொளியில் சத்குரு. அவரின் கட்டளைகளுக்கு ஏற்ப யோக பயிற்சிகளை செய்கின்றனர். இடையிடையே சில நேரங்களில் சீடர்களுடன் உரையாடும் ஜென் ஞானியைபோலவும், சில நேரங்களில் வேறுஒருகாலத்தின் கதையை திறம்பட சொல்லும் கதை சொல்லியாகவும், சில சமயங்களில் பிரபஞ்சத்தின் கடினமான விஷயங்களை விளக்கும் ஞானிபோலவும் பேசிகொண்டிருக்கிறார். கன்னட வாசனையில் தமிழ். கம்பிரமான ஆனால் கனிவான குரல், ஈஷாவின் ”சத்குருவுடன் ஒரு நாள்”- நிகழச்சிக்கு பின்னர்  அவர் கல்கிக்காக அளித்த  Exclusive பேட்டி

யோகா, பிராணாயமம்  போன்றவைகள் ஒரு குருவின் மூலம் ஒவ்வொருக்கும் தனித்தனியாக சொல்லிகொடுக்க வேண்டிய ஒர் பயிற்சி. அதை இப்படி பிரமாண்ட கூட்டங்களில் சொல்லிக்கொடுப்பது எந்த அளவிற்கு கற்றுகொள்பவர்களுக்கு பலன் அளிக்கும்?. தவறாக கற்று கொள்ளகூடிய வாய்ப்பும் இருக்கிறதே?
ஈஷா அமைப்பு கடந்த 30  ஆண்டுகளாக யோகா பயிற்சிகளை கற்பித்து வருகிறது. அதை சரியான முறையில் சொல்லிக்கொடுக்க  ஆசிரியர்களுக்கு நாங்கள் ஆண்டுகணக்கில் பயிற்சி அளித்திருக்கிறோம். கற்பிப்பதில் தவறுகள் நேர்ந்துவிடாத வண்ணம் நிறைய ”டெம்பிளேட்”களை உருவாக்கியிருக்கிறோம்.  ஆனாலும் நீங்கள் கேட்பது புரிகிறது. இம்மாதிரி மாஸ் புரோகிராம்களில் நான் கற்பிப்பது யோகாவின் ஒரு அங்கமான    –”உப-யோகா- இதில் சில எளிய பயிற்சிகளை கற்று அதன் பலனை உணர்பவர்கள், அடுத்த கட்டத்தில் தொடர வேண்டும் என்பதுதான் நோக்கம். 1000 இல்லை 15000 பேராக இருந்தாலும்  எண்ணத்தை ஒருமுகபடுத்தி கண்களைமூடி நான் சொல்லுவதை கேட்கும்போது  சாதகர்கள் நான் தனியாக அவருக்கு சொல்லிகொடுப்பதை போல உணர்ந்தை பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். மேலும் ஒரே இடத்தில் பலர் பயிற்சி செய்ய முயற்சிக்கும் போது அந்த இடத்தில் ஏற்படும் சக்தி அதிர்வலைகள்  கற்கும் திறனைப் பெருக்குகிறது.

  ஒரு ஆன்மீக குருவாக இருந்துகொண்டு எப்படி ஈஷா வின் அத்தனை பகுதிகளையும் நேரடியாக  நிர்வகிக்கிறீர்கள்?
ஆன்மீகம்  என்பது தவறாக புரிந்து கொள்ளபட்டிருக்கிறது. ஒரு ஆன்மீக வாதியை தங்கள்  இறைவழிபாட்டுக்கான கருவியாக பலர் எண்ணுகிறார்கள்.  சமூகத்தில் ஒர் ஆன்மீக வாதிக்கான பொறுப்பு மிகஅதிகம். தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு ஆன்மிகம் என கருதப்படும் நல்ல நெறிகளைபோதித்து அதேநேரத்தில் அந்த கால கட்டத்திற்கு அவசியமான சமூக மேம்பாட்டிற்கான பலவிஷயங்களையும் முன்னெடுத்து செய்யமுயற்சிகவேண்டும் அதைத்தான் ஈஷா மூலமாக நாங்கள் முயற்சிக்கிறோம். ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்வது ஒரு பெரிய விஷயமில்லை. அவைகளோடு ஆன்மீக, யோக பயிற்சிகளை விடாமல் செய்யவதுதான் முக்கியம். எங்கள் பிரம்மச்சாரிகளையும், தொண்டர்களையும் அதற்கு தயார் செய்திருக்கிறோம்.

 உங்கள் கூட்டங்களிலும் சரி தனி சந்திப்புகளிலும் சரி ஆன்மீகம் மட்டுமில்லாமல் விஞ்ஞானம், மருத்துவம், மேனஜ்மெண்ட். என்று   எதைப்பற்றிக்கேட்டாலும் எப்படி உங்களால்  உடனடியாக பதில் சொல்ல முடிகிறது.?
 நான் எதைப்பற்றியும் சொந்தமாக சிந்திப்பதில்லை. எதை பற்றியமுடிவுகளும் என் சிந்தனையில் இல்லை.  என் தலை காலியாக இருக்கிறது. எனக்கு சொந்தமான ஒரு மூளையில்லை என்று சொன்னால் சிரிப்பீர்கள். ஆனால் அதுதான் உண்மை. எனக்கு தேவையானது நான் சொல்லவேண்டியது  எல்லாம் பிரபஞ்ச மூளையிலிருந்து வருகிறது, சில என்னுள் பதிவாகிறது. பல பதிவாதில்லை. எனக்கு தெரிந்த விஷயங்கள் எல்லாமே ஒரு கணத்தில் நிகழந்தவை. எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால்  அதே நேரம் நீங்கள் கேட்கும் எல்லாமே  எனக்கு தெரியும். நீங்கள் மனித வாழ்க்கை தொடர்பாக, அதன் உள்நிலை தொடர்பாக என்ன கேட்டாலும் எந்தவித தயக்கமுமின்றி தெளிவாக பதில் தருவது போல நீயூக்லீயர் பிசிக்ஸ் பற்றி கேட்டாலும் தருவேன். நான் என்குருவை சிலவினாடிகள் மட்டுமே சந்தித்தேன். அவர் என்னை கையால் தொடவில்லை, கையிலிருந்த ஊன்றுகோலால் தொட்டார். பத்துபிறவிகள் படித்தாலும் தெரிந்து கொள்ளமுடியாத விஷயங்கள் அந்த ஒருவினாடியில்  எனக்கு வழங்கபட்டன,. அவைகளை அறிந்துகொள்ளும் தொழில் நுட்புமும் எனக்கு தரப்பட்டது. அது வழங்கப்பட்டபோது,ஒரு சக்திநிலையாக வழங்கபட்டது. அது நினைவாற்றல்லாக அல்லது தர்க்க அறிவிவாக வழங்கபடவில்லை. அதனால் தான் அவைகளை நான் அவசியமில்லாதபோது சிந்திப்பதில்லை.. எனக்கென்று எந்த சிந்தனைகளோ அதுபற்றிய முடிவுகளோ என்னிடம் இல்லை.
உங்களால் முந்தியபிறவிகளை உணரமுடியும் என சொல்லுகிறீர்கள். கடந்த பிறவிகளில் உங்களுடன் தொடர்பு கொண்டவர்களை இந்த பிறவியில் உங்களால்  அடையாளம் காணமுடியுமா?
கடந்த 370 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் தொடர்பு கொண்டர்வர்களில் சிலர் இங்கே இருக்கிறார்கள்,  ஆனால் அதை ஆராய்வதும் அவர்கள் அந்த பிறவியில் செய்தது பற்றி ஆராய்வதும் இப்போது அவசியமில்லாதது.                                                                          
                                                                          

நீண்ட கால தவத்திற்குபின்  உங்கள் குருவின் கட்டளயையான தியானலிங்கத்தை நிறுவி அதற்கு சக்தியூட்டி அர்பணித்தபோது, இது வழிபடும் கோவில் இல்லை. எந்த பூஜையோ சடங்குகளோ கிடையாது  என அறிவித்திருக்கிறீர்கள். இப்போது லிங்க பைரவி என்ற தேவியின் கோவிலை நிறுவி எல்லா சடங்குகளையும் செய்கிறீர்கள் ஏன் இப்படி  ஒரு நேர்மாறான நிலை?
தியான லிங்கமும் கோவிலாகத்தான் உணரபடுகிறது. அங்கு எழும் சக்தி வலிமை மிகுந்ததாக இருப்பதால் ஒரு வார்த்தைமந்திரம் உச்சரிக்கமுடியாது, பூஜைகள் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அந்த வலிமை மிகுந்த சக்தியை தங்களுடைய மந்திர தந்திர சக்திகளை பெருக்கி கொள்ள  சிலர் முயற்சிப்பதை உணர்ந்தேன். அதை தடுக்க ஒரு பாதுகாப்பு சக்தி அவசியமாயிற்று. அந்த அவசியம் லிங்கபைரவி கோவிலாக உருவெடுத்தது. நீங்கள் நினப்பது போல இது நேர்மாறான நிலையில்லை. ஒன்றுக்குஒன்று உதவும் நிலை.  ஒரு குடும்பம்  கணவன் மற்றும் மனைவி சேர்ந்தது. இதை நேர்மாறான நிலை என்பீர்களா?  அதுபோலதான் இதுவும். தியான லிங்கத்தை எழுப்பும் போதே  இப்படி ஒரு சக்தி ஸ்தல்ம் உருவாக்கும் எண்ணமிருந்தது. அவசியம் வரும்போது செய்யலாம் என தீர்மானித்திருந்தேன், இப்போது அவசியம் எழுந்திருப்பதினால்  உருவாகியிருக்கிறது. சடங்குகள் பற்றி கேட்டீர்கள். நமது வழிபாட்டுமுறைகளில் சடங்குகள் என்பதின் மூலம் எளிதாக பலரை, பலதரபட்ட மக்களை  ஒரு சக்தியைநோக்கி ஒருமுகபடுத்தமுடியும். சடங்குகள் தவறில்லை. ஆனால் அந்த சடங்குகள் மூலம் மக்கள் ஏமாற்றபடுவதும் சுரண்டபடுவதும் தான் தவறு. இப்போதுஇந்த கோவிலில் அத்தகைய சடங்குகளை செய்பவர்கள் உலகத்தையே நீங்கள் கொடுத்தால் கூட தவறான காரியங்களை செய்யமாட்டார்கள். அவர்களை பற்றி நான் பெருமைபடுகிறேன்/
ஏன் இந்த கோவிலில் தேவியை அர்ச்சிக்கும், பூஜிக்கும் உரிமை பெண்களுக்கு மட்டுமே வழங்கபட்டிருக்கிறது.?
பெண்களுக்கு இந்த உரிமை நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னரே இருக்கிறது. நடுவில் இது தடுக்க பட்டிருந்தது.   இங்கு அந்த பணியை செய்பவர்கள் அர்ச்சகர்கள் இல்லை. அவர்கள்  ”கடவுளின் சக்தி”வாய்ந்த மனிதர்கள். முன் காலங்களிலிருந்த அத்தகைய மனிதர்கள் இப்போது இல்லை. அதனால்தான் இந்த முறை. இவர்கள் பெருகி மனிதர்களுடன்  சமூகத்தில் உறவாடும்போது  உலகில் நல்ல அதிர்வுகளும் அதன் பயனாக் நல்வாழ்க்கையும்  எளிதாக ஏற்படும்

உங்கள் கோவில்கள், தியான ஹால்கள் என எல்லா இடங்களிலும் அதிகம் மாக பாம்புகளின் வடிவங்களும் படங்களும் காணப்படுகிறது, ஏன் பாம்புகளின் மீது இப்படி ஒரு அப்ஸஷன்?
அப்ஸ்ஸஷன் ? (பலமாக சிரிக்கிறார்) பாம்புகளும் பசுக்கள் போல புனிதமானவை. என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை. பாம்பு என்பது குண்டலினி ஆற்றலின் ஒரு குறீயிடு. நகர்கிறபோதும் அசைவற்று இருக்கும் போதும்  குண்டலினி ஆற்றலும் பாம்பும் ஒன்றுபோல இருக்கின்றன. உயிர்களினுடைய பரிமாண வளர்ச்சியில் பாம்பு என்பது மிக முக்கியமான அம்சம்.. அதனால் தான் பாம்பை கொல்ல கூடாது என்று நம் பாரம்பரியம் சொல்லுகிறது. என்னைப் பொருத்தவரையில் என்னைசுற்றி பாம்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. கிருத்தவ மதத்தில் பாம்பு சாத்தானின் தூதுவனாக  சொல்லபட்டு ஒரு எதிர்புணர்ச்சியை வளர்த்துவிட்டார்கள்.   இந்த பூமியில் உயிர்கள் என்பவை கடவுளின்  படைப்பு  என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என்றால் அதற்காக ஏவாளை தூண்டிய பாம்பை கடவுளின் தூதர் என்றுதானே சொல்ல வேண்டும்.? எப்படி சாத்தானாவார்?  ஆதிகாலங்களிலிருந்தே பாம்புகள் நமது கோவில்களில் வழிபடபட்டு வந்தவை.   குண்டலி சக்தியின் உயர்ந்த நிலையில் அதை தன்உச்சியில் நிலைநிறுத்தபட்டிருப்பதின் அறிகுறியாகத்தான் ஆதியோகி அதை தன் தலையருகில் இடம்கொடுத்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. ஒரு பயப்படும் ஜந்துவாக பார்க்காமல் அதன் சக்தியை உணரச்செய்ய எற்பட்டிருக்கும் ஒரு முயற்சிதான்  இது.
ஈஷா உறுப்பினர்களை “புனித பயணங்கள்” அழைத்து செல்லுகிறீர்கள். இதன் நோக்கம் என்ன?
ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள் எல்லோருக்கும்  இந்த பழம்பெரும் நாட்டின் புனிதம், சில இடங்களின் வலிமை புரிவதில்லை. அதற்காக இந்த நாட்டின் சக்தி நிறைந்த பிரதேசங்களுக்கு பயணம் செய்வதை ஒரு அனுபவமாக கொடுக்க தீர்மானித்தோம். முதலில் கைலாஷ்  என்று துவங்கி, இமயமலைபகுதி, என தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கு பயணங்கள் செய்கிறோம். இது ஒரு சுற்றுலா இல்லை. உடலை,வறுத்திக்கொண்டு செய்யும் பக்தி பயணமும் இல்லை. அந்த இடத்திற்கு சென்று அங்குள்ள சக்திகளை அதன் அதிர்வுகளை உணரசெய்ய ஒரு வாய்ப்பு. எங்கள் எதிர்பார்ப்புகளையல்லாம் தாண்டி அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். நிர்வகிப்பதிலுள்ள சிரமங்களினால் எல்லா விண்ணப்பங்களையும் ஏற்க இயலாது போகிறது.


இன்றைய இளைஞர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் இருப்பதை போல தோன்றுகிறது. இது உண்மையானால் ஏன்?
ஆன்மீகம் மட்டுமில்லை இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிலும் ஆர்வமும் ஒரு அவசரமும் காட்டுகிறார்கள். இது ஒரு நல்ல டிரண்டாக இருந்தாலும் அவர்களை நெறிபடுத்தி சரியான பாதையை காட்ட வே ஈஷா முயற்சிக்கிறது. அதற்காக தான் நாங்கள் அர்பணிப்புமிகுந்த ஆசிரியர்களை மிகுந்த கவனத்துடன்  உருவாக்குகிறோம்.
ஆன்மீக வகுப்புகளை தாண்டி சமூக அக்கறையுடன் பலவிஷயங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள்  இறுதி குறிக்கோள் தான் என்ன?
 ஈஷா குறிக்கோள்களுக்கு இறுதி என ஒரு வடிவம் கொடுத்துகொள்வதில்லை. எது எப்போது அவசியமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். இப்போது ஒரு லீடர்ஷிப் அகடெமி துவக்குவது பற்றி திட்டமிட்டுகொண்டிருக்கிறோம். நாட்டிலுள்ள பல மேனேஜ்மெண்ட் ஸ்கூல்கள் போல இல்லை இது. இப்போது சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பஞ்சாய்த்துகள் உதவிகுழுக்கள் போன்றவைகளில் தலமை வாய்ப்பு  எளியவர்களுக்கும் சாமன்யர்களுக்கும் உருவாக்க பட்டிருக்கிறது. இவர்களுக்கு அதை திறம்பட செய்ய கற்பிக்க பட வேண்டும். அதற்கான முறையான பயிற்சிகூடங்களை அமைக்க விரும்புகிறோம். அடுத்தபடியாக இன்று இந்திய  இளைஞர்கள் வேலைகிடைக்கும் ஒரே காரணத்தினால் ஐடி துறையில் தான் ஆர்வமாகயிருக்கிறார்கள். சயின்ஸ், கணிதம் படிக்க முன் வருவதில்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் நமக்கு பேஸிக் சயின்ஸ்  பற்றிய அறிவு இல்லாது ஒரு தலைமுறை உருவாகிவிடும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு டெக்னாலாஜி மட்டும் போதாது ”சயிண்டிபிக் டெம்பர்” அவசியமாக வேண்டும் இதை வளர்க்க குழந்தைகளையும், இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் மையங்கள் நிறுவ விரும்புகிறோம். பிராஜ்கெட் ரிபோர்ட்டும் புளுப்ரிண்ட்டும் ரெடியாகயிருக்கிறது. இதற்கு அரசு உதவியுடன் ஸ்பான்ஸ்ர்களை அணுக முயற்சித்துகொண்டிருக்கிறோம்.
ஈஷாவின் எல்லா முயற்சிகளைப்போல இதுவும் வெற்றிபெற கல்கி வாசகர்களின் சார்பில் வாழ்த்துக்கள்

ரொம்ப சந்தோஷம்

சந்திப்பும் படங்களும்

ரமணன்
கல்கி 29/12/13




17/12/13

குதிரை சொல்லும் கதை


இந்த ஆண்டு அமுத சுரபி தீபாவளி மலர் வெளியிட்டிருக்கும் எனது கட்டுரை 



சென்னை தீவுதிடலின் எதிரில் கடலை பார்த்து   சற்றே கழுத்தை  சாய்த்து கம்பீரமாக  தன்மீது வாளூடன்  அமர்ந்திருக்கும் ஒரு வீரனுடன்  கடந்த 175 ஆண்டுகளாக  நிற்கிறது. கிரேக்க பாணியில் வடிவமைக்கபட்ட அந்த குதிரை சிலை.  உலகில்  குதிரை மீது மனிதர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலைகள்  ஐந்து இடங்களில் மட்டுமே இருக்கிறது. மன்னர்களுக்கு மட்டுமே அளிக்கபட்ட இந்த கெளரவம்  இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னருக்கு அளிக்கபட்டிருக்கிறது,  அவர் தாமஸ் மன்றோ. இந்தியாவில் ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி, 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, நிர்வாகப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டவர் தாமஸ் மன்றோ.  தனது கடின உழைப்பால் முன்னேறி ஆளுனராக உயர்ந்தவர்.  1820 முதல் 1827 வரை சென்னை மாநில கவர்னாராகயிருந்தவர். தனது நேர்மையான நிர்வாகத்தால் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்த ஒரு சில ஆங்கிலேய அதிகாரிகளில் இவரும் ஒருவர் . இன்றுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதியும் திருப்பத்தூர் பகுதியும் ஒன்றாக  பாராமகால் என்று அறிய பட்டபகுதியில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, கலைக்டராக இருந்தவர். மாவட்டம் முழுவதும் குதிரையில் அலைந்து திரிந்து விவசாயிகளின் உண்மை நிலைமையை நேரடியாக அறிந்துகொண்ட மன்றோ. விவசாயிகளின் வரிச்சுமையை மாற்றி அமைக்க முற்பட்டவர்.தன் பதவிகாலம் முடிந்ததும் இங்கிலாந்து செல்லும் முன் தன்பணியாற்றிய கடப்பா பகுதியில் பயணம் செய்தபோது  1827ல் இறந்துபோனார். இவர்அந்த பகுதியிலிருக்கும் ராகவேந்திரர் சமாதியில் வழிபட்டபோது அவர் இவருக்கு காட்சி கொடுத்தாதாக அரசு குறிப்புகளில் பதிவாகியிருக்கிறது. இப்போதும், கடப்பாவில் உள்ள ஒரு அனுமார் கோயிலில் ராமர் சீதை படங்களுடன் தாமஸ் மன்றோவின் படமும் இருக்கிறது. அங்கே, தினமும் நடக்கும் பூஜையில் மன்றோ படத்துக்கும் தீபாராதனை காட்டப்படுகிறது.
மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த இந்த அதிகாரிக்கு  மக்களிடம் நன்கொடை பெற்று ஒரு சிலை வைக்கமுடிவு செய்யபட்டவுடன்  இங்கிலாந்தின் எஃப் சான்ட்ரீ என்ற புகழ்பெற்ற சிற்பி நியமிக்கபடுகிறார். மாடலுக்கான அரபிகுதிரையை  4ம் ஜார்ஜ்  மன்னரின் லாயத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணியை  செய்யத அந்த கலைஞன் சந்தித்த அடுத்த சவால் மன்றோவின் முழு உருவபடம் எதுமில்லாததினால்  கிடைத்த மார்பளவு படத்திலிருந்து  உருவாக்கவேண்டியிருந்தது
இந்த 6 டன் எடையுள்ள சிலை முதலில் பிளாஸ்ட் ஆப் பாரிஸ்ஸில் வடிவமைக்கபட்டு பின்னர் வெண்கலத்தில் வார்க்கபட்டிருக்கிறது. குதிரை, வால்பகுதி,  மன்றோவின்உருவம், வாள்இருக்கும்பகுதி என 5 தனிதனிப்பகுதிகளாக  கப்பலில் கொண்டுவரபட்டு  இங்கு இணைக்கபட்டிருக்கிறது.  அன்று சென்னையில் பெரிய அளவில் துறைமுகமேஇல்லாத  நிலையில் கப்பலிலிருந்து சிறுபடகுகளில் பகுதிகளாக கரைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 15 அடி சிலையை மேலும் கம்பீரமாக்க 25 அடியில் ஒரு பீடம் உள்ளூர் கலைஞர்களின் உதவியுடன்  செய்திருக்கிறது ஆங்கிலேய நிறுவனம்.



.இந்த சிலையை படைத்த சிற்பியிடம் ஏறி அமர்வதற்கு சேணத்திலிருந்து 

 தொங்கும் கால்வைக்கும் வளையங்கள் இல்லையே என அவரது சிறுவயது

 மகன் கேட்டதால் தற்கொலை செய்துகொண்டுவிட்டாதாக  சொல்லப்படுவது

 ஒரு வளமான கற்பனை கதை என்கிறார் வி. ஸ்ரீராம். இவர் சென்னை நகரின்

பாரம்பரியத்தை பற்றி ஆராயந்து கட்டுரைகள் எழுதியிருப்பவர். படைத்த

 சிற்பி சான்ட்ரீ பல ஆண்டுகளுக்கு பின்னர் இதய நோயால் இறந்ததற்கான

குறிப்புகள் இருக்கின்றன என்கிறார் இவர். செம்மொழி மாநாட்டிற்கு முன்

  ஆங்கிலேயர்களின் பெயரில் இருந்த தெருக்களை மாற்றியபோது இந்த

சிலையையும் எடுக்க தீர்மானித்திருந்த அரசின் முடிவு எதனாலோ

 கைவிடபட்டது


 40 ஆண்டுகாலம் உதவிகலைக்டெர் முதல் கவர்னர் வரை நேர்மையாக ஊழல்புரியாத அதிகாரியாக பணியாற்றிய தாம்ஸ் மன்றோ அன்றைய ஆட்சியில் துளிர்விட  துவங்கிய லஞ்சம் பற்றி 1795ல்  எழுதிய குறிப்பு இது

  இந்தியாவின் வறுமைக்கு முக்கியக் காரணம், அரசு இயந்திரத்தின் நிர்வாகக் குளறுபடிகளே. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே முறைகேடான செயல்களுக்கு துணை நின்றால், அவரால் எப்படி ஒரு நேர்மையான நிர்வாகத்தை நடத்த முடியும் "கலெக்டர்கள் தாங்கள் பதவிக்கு வந்து சில ஆண்டுகளிலேயே சொத்துகளைக் குவித்துவிடுகிறார்கள். வருவாய்க்கு மேல் டாம்பீகமாகச் செலவு செய்கிறார்கள். நாட்டைச் சுரண்டும் கலெக்டர் (அன்றைக்கு அமைச்சர்கள் கிடையாது; கலெக்டர்கள்தான் ஆட்சியாளர்கள்) நாடு  எப்படி முன்னேறும்?

 மூதறிஞர் ராஜாஜி பதவிஏற்கும் முன் தன்னை சந்திக்கவரும் இளம்

அதிகாரிகளுக்கு  நிர்வாகத்தில் மன்றோவின் அணுகுமுறை பற்றி படிக்க

 சொல்லுவாராம்.

பொதுவாழ்வில் தூய்மைக்கும்  நிர்வாகத்தில் நேர்மைக்கும்   குரல் கொடுத்த

முதல் மனிதன்  இவர் என அறியும்போது மக்கள் வரிப் பணத்தில் இல்லாமல்

 நன்கொடைகள் மூலம் எழுப்பபட்ட இந்த சிலை இன்னும்  கம்பீரமாக

தெரிகிறது.



11/12/13

111213


11, 12,13
 இந்த தேதியை இன்னும் 100 ஆண்டுகள் கழித்துதான் எழுத முடியும்.

இந்த முறை என்ன செய்ய போகீறீர்கள்?  I am waiting to see your new document, முடிவு பண்ணிட்டீங்களா?   கல்வெட்டு ஐடியா என்ன வாயிற்று? இப்படி பல கேள்விகள் ,மெயில்கள்


கடந்த ஆண்டுகளில் இப்படி பட்ட வினோதமான டேட்களை பதிவு செய்ய வங்கி வாழ்க்கையில் உருவாக்கிய முக்கிய ஆவணங்கள், முக்கிய அறிவிப்புகள், போன்றவகைகளை  மறக்காத நணபர்கள் கேட்டுகொண்டே இருந்தார்கள். புதிதாக ஏதுவும் தோன்றவில்லை.

சுவடுகளை  இந்த தேதியில் என்  பேஸ்புக்கில் இணைத்துவிடலாமா அல்லது ஒரு இனைப்பை  கொடுக்கலாமா? என யோசிக்கிறேன்.  விரைவில் விபரம் அறிவிப்பேன்
131211

10/12/13

சபாஷ் சுஜாதா !

இதாண்டா போலீஸ் 


பரபரப்பான மும்பாய் நகரின் சயான் பகுதியின் முக்கிய வீதி.   முந்திய கார்களின் பம்பரை தொட்டு முண்டிக்கொண்டிருக்கும் நெருக்கமான  டிராபிக். வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு கார்  வேகம் தணிந்து மெதுவாக ஒதுங்கி   நிற்கிறது, பின்னல் வரும் வாகனங்களுக்கு இடைஞ்சலாக நிற்கும்  அந்த காரைக்கண்டு  எரிச்சல் அடைந்த  போக்குவரத்து போலீஸ்கார்   நெருங்கி பார்த்ததும் அதிர்ச்சியடைகிறார். காரை ஓட்டி வந்தவர்  ஸ்டியரிங்கில் சாய்ந்து கிடக்கிறார். உடல் முழுவதும் வேர்வையினால் நனைந்திருக்கிறது. மனிதருக்கு மாரடைப்பு என்பதை புரிந்து கொள்கிறார். உடனே அருகில் இருக்கும் சிக்கனிலில் பணியிலிருக்கும்தன்  இன்ஸ்பெக்டர் சுஜாதாவிற்கு தனது வாக்கி டாக்கி மூலம் தகவல் தருகிறார்.கான்ஸ்டபிள்  குமார்தத் அடுத்த நிமிடம் அங்கு வந்த சுஜாதா, கன்ட்ரோல் ரூமுக்கு சொல்லி, லீலாவதி ஆஸ்பத்திரி வரையில் சாலையில் போக்குவரத்தை ஓரமாக தள்ளுமாறும் சிக்னல்களை பச்சையில் நிறுத்தி வைக்குமாறும் வேகமாக உத்தரவுகள் பிறப்பிக்கிறார்.. சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி, ஆஸ்பத்திரி வரை அந்த காரை ஓட்டி வருமாறு  அதன் டிரைவரை கேட்டுக் கொள்கிறார்.  அந்த காரில் வந்த மாரடைப்பால் தாக்கபட்டிருப்பவரை   பத்திரமாக  அணைத்து பிடித்து,  அவர் மார்பை மசாஜ் செய்தபடி வருமாறு கான்ஸ்டபிளுக்கு கட்டளையிடுகிறார்.

  தனது போலிஸ்ரோந்து காரை  முன்னால் வேகமாக  செலுத்தி வழி ஏற்படுத்திய படி 12 நிமிடங்களில் ஆஸ்பத்திரியை அடைகிறார். போகும்போதே இவர் கண்ட்ரோல் மூலம் சொன்ன தகவலினால் தயாராகயிருந்த டாக்டர்கள் சிகிச்சையை துவக்குகின்றனர்..  காரில் இருந்தவரின்  பிஸினஸ் கார்டை பார்த்து அவர் வீட்டிற்கு தகவல் கொடுத்திருந்தனால் அவரின் மனைவியும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டிருந்தார்.  
அந்த மனிதர் உயிர் பிழைத்து கொண்டார்.
அவர் இந்திய முன்னாள் கிரிகெட் வீர்ர் வினோத் காம்ப்ளி.
அடாவடி, அத்துமீறல், அற்பமான கையேந்தல், அதிகாரத்துக்கு அடிபணிதல்,பிரச்சனைகள் வரும்போது மேல் அதிகாரிகள் சொன்னால் மட்டுமே செயல் படுவது என்ற போலீஸ் அதிகாரிகளிடையே,  மாறுபட்டு சமயோசிதமாக மின்னல் வேகத்தில் இயங்கிய பெண்போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா. இவருக்கு ஒரு சபாஷ் சொன்னால என்ன?
 இவரைபோல  எல்லா போலீஸ் அதிகாரிகள் இருந்தால் இந்தியா எப்படி இருக்கும்? 

ரமணன்