27/4/14

பயணங்கள் முடிவதில்லை.

இது வரை எழுதிய பயணகட்டுரைகளின் தொகுப்பு புத்தகமாக  இந்த தமிழ் புத்தாண்டில் வெளிவந்திருக்கிறது. கவிதாவின் வெளியீடு. வாங்கி படித்துவிட்டு கருத்துச் சொன்னால் சந்தோஷப்படுவேன்.





19/4/14

மெளனம் கலைந்தது….மனைவி இருப்பது தெரிந்தது !



நாடளுமன்றத்தின் 543 சீட்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளார்களில் 5 ல் ஒரு பங்கினர் பிரம்மச்சாரிகள் என்கிறது தேர்தல் கமிஷனின் புள்ளிவிபரம். மிக முக்கிய பிரம்மச்சாரிகள் நரேந்திர மோடியும், ராகுல்காந்தியும். இப்போது அதில் ஒன்றை குறைத்து கொள்ள வேண்டும்.  மோடி தனக்கு திருமணமாகியிருக்கிறது என்பதை தனது வேட்பு மனுவுடன் சமர்பித்திருக்கும் பிரமாணபத்திரத்தில் தெரிவித்திருக்கிறார், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்
று சொல்லபடுவதுண்டு. மோடிக்கு மனைவி இருக்கிறாரா? என்பதே சந்தேகமாகயிருந்த ஒரு விஷயம்..

மோடி பிரம்மச்சாரி இல்லை அவருக்கு ஒரு மனைவி  கிராமத்தில் இருக்கிறார் என அவ்வப்போது  மிடியாக்களில் செய்தி அடிபட்டதுண்டு..  ஆனால் ஒரு முறை கூட மோடி அதை ஏற்றோ, மறுத்தோ பேசியதில்லை. கடந்த தேர்தல்களில் 2001,2002,2007, மற்றும் 2012 தேர்தல்களின்போது  இணைக்கப்படும் பிராமணப் பத்திரத்தில்  மனைவியின் பெயர் என்ற பகுதியில் வெற்றிடமாக விட்டுவந்தார்., இப்போது முதல் முறையாக தன்  மனைவியின் பெயர் ஐஷோட பென் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மனைவியின் சொத்து பற்றிய விபரங்கள் பகுதியில் “தகவல் இல்லை” no information என குறிபிட்டிருக்கிறார்.
திருமதி ஐஷோட பென், ஓய்வு பெற்ற குழந்தைகள் வகுப்புகான ஆசிரியை, மோடியின் சொந்த ஊரான வாத் நகரில் இருந்து 35 கீமீ தொலைவில் உள்ள பிரமன்வதா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்,  வயது 62,
நரந்திர மோடியின் மனைவி நான்தான் என சொல்லிகொண்டிருந்த இவரின் பள்ளி ஆவணங்களில் திருமதி ஐஷோட பென் நரேந்திர மோடிபாய் என்றுதான் இருக்கிறது.  அதனால் இவர்தான் மோடியின் மனைவி என்று சில மஹராஷ்டிர ஊடகங்கள் சில ஆண்டுகளுக்குமுன் எழுதிவந்தன. ஆனால் ஐஷோபென் பத்திரிகையாளர்களை சந்திக்க  தொடர்ந்து மறுத்துவந்தார். மோடி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கபட்டவுடன் இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியன் எகஸ்பிரஸ் நிருபர் சந்தித்தபோது முதல் முறையாக பேட்டிக்கு ஒப்புகொண்டவர் போட்டோக்கள் எடுக்க அனுமதிக்கவில்லை.
இந்த பரபரப்பு  பேட்டி பற்றி மோடி – மெளனத்தையே தன் பதிலாக தந்தார்.
தனது 17 வது வயதில் நடந்த அந்த திருமணத்திற்கு பின் 3 மாதங்கள் மட்டுமே அவருடைய குடும்பத்தாருடன் இருந்தேன். அந்த மூன்று மாதத்திலும் பல நாட்கள் மோடி வீட்டில் இருக்கமாட்டார். நான் பள்ளிப்படிப்பை 10ம் வகுப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து கொண்டிருந்தேன். மோடி என்னை அப்பாவீட்டிற்கு போய் படிப்பை தொடர சொன்னார்..  அவரது குடுமப்த்தினர் என்னை  வெறுக்க வில்லை. ஆனால் மோடிபற்றி மட்டும் எதுவும் பேசமாட்டர்கள், அப்போது இங்க்கெ வந்ததுதான். அப்பா, அண்ணனின் உதவியுடன், பள்ளிப்படிப்பையும், தொடர்ந்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்து உள்ளூர் பள்ளியில் வேலைக்கு சென்றேன், இப்போது ஒய்வும் பெற்றுவிட்டேன். என்று சொல்லும் ஐஷோட பென் தன் 14000ருபாய் பென்ஷனில் சிறிய வீட்டில் மிக சிம்பிளான வாழ்க்கையை  பலமணிநேரம் துர்க்கா பிராத்தனை மற்றும் மாணவர்களுக்கு டியூஷன் என கழிக்கிறார்..  திருமணமாணவுடனேயே கணவனை விட்டு பிரிந்து வாழவேண்டும் என்பது என் தலைவிதியானால் யார் என்ன செய்யமுடியும்? என்று சொல்லும் இவர் அதற்காக வருந்தவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மோடியை பற்றிய செய்திகளை மீடியாவில் பார்க்கிறார். அவர் ஒரு நாள் பிரதமர் ஆவார் என்று எனக்கு தெரியும் என்கிறார்.  பிரதமரானபின் டெல்லிக்கு  போய் அவருடன் வாழ்வாரா? அவர் விரும்பாத எதையும் நான் செய்யதயாராக இல்லை. எனப்து தான் இவர் பதில்
இவ்வளவு நாட்கள் இல்லாமல் இப்போது மோடி ஏன் இந்த விஷயத்தை பகிரங்கபடுத்தியிருக்கிறார்? சமீபத்தில் இவரது வாழ்க்கை குறிப்பு புத்தகங்கள் எழுதியிருப்பவர்களிடம் கூட இந்த திருமணம்,தனியாக வாழும் மனைவி பற்றி பேசியதில்லை. எனக்கு குடும்பம், குழந்தைகள் இல்லாதால் ஊழல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது என்றுதான் சொல்லியிருக்கிறார்.
இப்போது இப்படி அறிவிக்க வேண்டியது அரசியலினால் அவசியமாகிவிட்டது. மக்கள் பிரநிதி சட்டம் 1951ன்படி வேட்பாளார்கள் தங்களது, தங்கள் குடும்பத்தினர் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று சொல்லுகிறது,  தவறாண் தகவல் தரப்பட்டால் வேட்பாளர் மனு நிராகரிக்கபடும் ஆபத்துடன் சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கபடும் ஆபத்தும் இருக்கிறது. திருமணமானவரா என்ற கேள்வி இல்லை ஆனால் மனைவியின் பெயர், மற்றும் சொத்துவிபரம் கேட்கபட்டிருக்கும்.
கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் மோடியின் திருமண வாழ்க்கையை  ஒரு பிரச்னையாக்கி கொண்டிருக்கிறது. தன் திருமணத்தை மறைத்து, சொந்த மனைவியை ஒதுக்கிவைத்து அநீதி  இழைக்கும் இவர் எப்படி இந்திய தாய்குலத்தின் நலனில் அக்கரை காட்டுவார் என்றெல்லாம்  கேள்வி எழுப்பினார்கள். தேர்தல் மனுச்செய்த பின் இதை ஒரு ஆயுதமாக காங்கிரஸ் கையிலெடுக்கும். தேசிய அளவில் மகிளிர் அமைப்புகள் அதற்கு ஆதரவு கொடுக்கும் என்ற நிலையை தவிர்க்கவே இந்த ஒப்புதல் வாக்குமூலம் என்பது பரவலான கருத்து.  முந்தைய வேட்பு மனுக்களில் மறைக்கபட்டிருப்பது குற்றமாகாதா? தேர்தல் சட்ட நிபுணர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் இப்படி இளம்வயது திருமணம் சகஜம்.  எங்கள் ஏழைப்பெற்றோர்கள் படிக்காதவர்கள். அந்த சிறுவயதில் நாங்கள் பெற்றோர் சொன்னதைத்தான்  செய்வோம். இந்த திருமணமும் அப்படி நடந்த ஒன்று. சமூகதிற்காக செய்யபட்ட சடங்காக செய்யபட்ட நரேந்திரனுக்கு இஷ்டமில்லாத இந்த கல்யாணத்திலிருந்து உடனே ஒதுங்கிவிட்டான்.  என்கிறார் மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய். இந்த அறிவிப்பு பிஜெபி அலுவலகதிலிருந்து மீடியாக்களுக்கு வந்தது.
பொதுவாக வேட்பாளார்களின் பிரமாணபத்திரங்களின் நகல்கள்  மனுத்தாக்கல் முடிந்தவுடன் நோட்டிஸ்போர்டில் போடப்படும் . ஆனால் வடோதரா தேர்தல் அதிகாரி  அவரின் மேல் அதிகாரிகளின் உத்தரவிற்கு பின்னரே இதை வெளியிட்டார்.
செய்தி வெளியானதிலிருந்து திருமதி மோடியை மீடியாக்கள்  துரத்துகின்றன. ஆனால் அவர்கிராமத்தில் இல்லை. கட்சியால மோடி பிரதமர் வேட்பளாராக அறிவிக்கபடவேண்டும் என 1 வாரம் செருப்பணியாமல் நடந்தது, அரிசி சாதம் சாப்பிடாமல் விரதம் இருந்தது போல இப்போது தேர்தல் வெற்றிகாக பத்ரி- கேதார்- முக்திநாத் புனித பயணம் போயிருக்கிறார் என்கிறார்கள் அந்த கிராமத்தினர். ”இல்லை அவர்  மீடியாவை சந்திக்க முடியாமல் முதல்வரால் பாதுகாக்கபடுகிறார்” என்கிறது அபியான் என்ற குஜராத் பத்திரிகை.
ஆதித்யா
கல்கி 26/04/14



16/4/14

திடுக்கிடும் விபத்தா? திட்டமிட்ட சதியா?


  



டிசம்பர் 6 1992. இந்திய வரலாற்றில்  ஒர் கருப்பு பக்கம். ராமஜன்ம பூமியான அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் அழியாவடுக்களாக இன்றும்  பலர் மனதிலிருக்கிறது.  கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டார்கள் என்று சொல்ல பட்ட இந்த விபத்து குறித்து, கமிஷன்களும், வழக்குவிசாரனைகளும் இன்னுமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது வெளியாகிருக்கும் தகவல், இது ஒரு திட்டமிட்டு  வெற்றிகரமாக அரங்கேற்றபட்ட சதி என்பது.
கோப்ரா போஸ்ட்
என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (டெஹ்ல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர்  கே ஆஷிஷ்  பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாக  சொல்லி , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்துள்ளார். இந்த ரகசிய வீடியோ பதிவில் வினய் கட்டியார், உமா பாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த் சாக்‌ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி நிருத்ய கோபால்தாஸ் மற்றும், பா.ஜ.க., சிவசேனா, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.


வர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் ஜென்மபூமிஎன்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டிருக்கும்  'கோப்ரா போஸ்ட்'  டின் டிவிடியை டில்லி பத்திரிகையாளர்களுக்கு அதன் ஆசிரியர் அனிரோத் வழங்கியிருக்கிறார்.. இதில் சொல்லப்படும் விஷயங்களின் ஹைலைட்கள்:
            பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும்,  இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பலிதானி ஜாதாஎனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கபட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவற்றை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்த படைக்கு லக்‌ஷ்மண சேனை என்று பெயர்.

மசூதியை இடிக்கத் தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி பாபாதலைமையில் கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளிமனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யார் தர்மேந்தர் உட்பட பலரது முன்னிலையில்  5 பேர்கள் ராம பக்தர்களானான் நாங்கள் கோவிலை காப்போம் என ராமர்  மேல் சத்தியம் செய்து கொண்டு பணியை துவக்கினர்கள்.
சுவர்களை உடைக்கும் பெரிய சுத்தியல்கள், சரியான நீளத்தில் வலுவான கயிறு எல்லாம் சேகரிக்கபட்டு தயார் நிலையில் வைக்க திட்டமிட்டவர் உமா பாரதி. என்றும்  பயிற்சி பெற்ற பலரில் இந்த 5 பேர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கபட்டவர்கள். கட்டிடத்தின் வெடிப்புகளில் நுழைக்க பெட்ரோல் குண்டுகளும் கொடுக்கப்பட்டடிருக்கிறது.

 ஒருவேளை முயற்சி தோல்வி அடைந்தால் மசூதியை வெடிகுண்டு வைத்து தகர்க்க இரண்டுதற்கொலை படையினர்  உடலில் கட்டிய குண்டுகளுடன் பிளான் பி யாக தயாராக. என்றும் பேட்டிகளில் பதிவாகயிருக்கிறது.

மசூதியை இடிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அயோத்தியின் ந்துதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக் கூட்டத்தில், அசோக் சிங்கால், வினய் கட்டியார், வி.ஹெச்.டால்மியா, மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த ரகசிய கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி.சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்  என்று கோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது.
 இந்த நாசவேலை குறித்து அன்றைய மாநில முதல்வர் கல்யாண்சிங்க்கும், பிரதமர் நரசிம ராவுக்கும் தெரியும் என்கிறது கோப்ரா போஸ்ட். இதில் விருபமில்லாத கல்யாண்சிங் டிச 6 அன்று தன் பதவியை ராஜினாமா செய்யவிருந்த போது தடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி என்றும் இடிப்பு முழுவதுமாக முடியும் வரை அவர் லக்னோவில் ஆர் எஸ் எஸ் வீரர்களால் “சிறை” பிடிக்க பட்டிருந்தார் என்றும் ஒருவர் பேட்டியில் சொல்லுகிறார்.

                                                                                                    
இந்நிலையில், தேர்தல் அமைதியாக நடப்பதை தடுக்கும் விதத்தில் 'கோப்ரா போஸ்ட்' திட்டமிட்டு காங்கிரஸின் உதவியுடன் சதி செய்வதாகவும், இதுதொடர்பான அனைத்துச் செய்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார் செய்தது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது..
                     
செய்தியை தடை செய்யவேண்டும் என்று சொல்லும் பிஜபி அதன் பேட்டிகளை, பேட்டியில் சொல்லப்படும் விஷயங்களை மறுக்க வில்லையே ஏன்? என்கிறது காங்கிரஸ்.
இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு. அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால் விடுகிறது கோப்ராபோஸ்ட்.
 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை சட்டவிதிகளுக்குட்பட்டு கட்டுவோம் என்று கடைசி பக்கத்தில் ஒரு வரியாக தன் தேர்தல் அறிக்கையில் சொல்ல்யிருக்கிறது பிஜெபி.


-ஆதித்யா
கல்கி 20/04/14







         

12/4/14

தங்க ஒலையில் தாரை வார்க்கபட்ட தரங்கம்பாடி.



ஆர்பரிக்கும் கடல் அலைகள்  தொட்டுச்செல்லும் தொலைவில் கம்பீரமான அழகுடன் நிற்கும் அந்த கோட்டை.. ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் முதல் சுவடு தமிழ் நாட்டில் பதிக்கபட்ட கடற்கரை கிராமான தரங்கபாடியில் 16 ஆம் நூற்றாண்டில் எழுப்பட்டது .. டேனிஷ்கார்களுக்கு முன்னரே போர்த்துகீசியர்களும், டச்சு காரர்களும்  கிறுத்தவத்தை பரப்ப இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் வலிமையான இந்த கோட்டை எழுந்த பின்னர் தான் ”தரங்கம்பாடி மிஷின் என்ற சபை ”  உருவாகி தமிழ்நாட்டில் கிறித்துவத்தின் நுழைவாயிலாகியிருக்கிறது.
இந்த கோட்டை.   ஒரு தமிழக குறுநில மன்னராலோ புரட்சிகாரர்களாலோ கட்டபடவில்லை.   இங்கு வந்து  ஒரு கோட்டையைக் கட்டிக்கொள்ளுங்கள், உங்கள் மக்களை குடியமர்த்துங்கள் என  டென்மார்க் மன்னரான 4ஆம் கிறிஸ்டியனக்கு ரெகுநாத நாயக்கர் என்பவர் வரவேற்று எழுதிய ஒரு கடித்தால் எழுந்த கோட்டை. கடிதம் சதாரணமாக எழுதப்படவில்லை. பனைஒலை வடிவில் தயாரிக்கபட்ட ஒரு தங்க ஒலையில் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.

 .  இந்த தங்க ஓலையும்  இதைபோல வேறு சில தங்க ஓலைகளும் இன்னும் பத்திரமாக இருப்பது டென்மார்க தலைநகரான கோபன்ஹேஹனில் உள்ள  ”ராயல் ஆர்க்கேவ்ஸ்” என்ற ஆவணகாப்பகத்தில்.. இதைத்தவிர பல ஆயிரகணக்கான சுவடிகளும், கையெழுத்துபிரதிஆவணங்களும் நவீன வசதிகளுடன் இங்கே பாதுகாக்கப்டுகிறது.
 இந்த குவியல்களுக்குளே இருக்கும் தங்க ஒலைகளைப் பார்த்து ஆராய்ந்து  அதிலிருக்கும் விபரங்களை சொல்லியிருப்பவர் ஒரு தமிழர். பேராசியர் பி.எஸ் ராமாஜம்.
இவர் தொல்லியலில் பேராசியர் இல்லை. டென்மார்க்கின் மிகப்பெரிய, பாரம்பரியமிக்க பல்கலைகழகமான டென்மார்க் டெக்கினிக்கல் யூனிவர்சிட்டியில்  இயற்பியல் பேராசியர். தன் துறையில் 8 புத்தகங்களும், 82 கட்டுரைகளும் எழுதியிருப்பவர். இந்த பழைய சுவடுகள், ஆவணங்கள் ஆராய்ச்சிசெய்வது பொழுதுபோக்கு.  இவர் டேனீஷ், ஜெர்மன் மொழிகளை நன்கு அறிந்தவர். பண்டைய தமிழ் எழுத்துகளையும் எளிதாக படிப்பவர்.  இந்த ஆவணங்களை நாம்படிக்க கூடிய தமிழில் எழுதி,  ஆங்கிலம், டேனிஷ் ஜெர்மன் மொழிகளில்  மொழிபெயர்த்து  ஆவணகாப்பகத்திற்கு உதவுகிறார்.

 இந்த தங்க ஓலை அன்றைய தஞ்சாவூர் மன்னனருக்கும் டென்மார்க் மன்னருக்கும் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கை என ஆவண காப்பகத்தில் கேட்லாக் செய்யபட்டிருக்கிறது. ஆனால் இது ரெங்கநாத நாயக்கன் என்பவர் டென்மார்க் மன்னருக்கு எழுதிய ஒரு கடிதம். இதில் மன்னரை நலம்விசாரித்து டென்மார்க்கிலிருந்து வந்தகடற்படை கேப்டன் ரோலண்ட், ஹாலந்திலிருந்து வந்திருக்கும் ஜெனரலையும் சிறப்பாக பல்லக்கில் வரவேற்கப்பட்டது குறித்தும் தரங்கம்பாடி துறைமுகம் நிறுபட்டிருப்பதால் டேனிஷ் மக்களை வந்து குடியமரச்சொல்லும்படியும் எழுதபட்டிருக்கிறது.
‘நாயக்கன்” என்ற சொல்லால் மன்னர் என தவறாக மொழிபெயர்க்க பட்டு பதிவு செய்யபட்டிருக்கிறது. மன்னருக்கு அனுப்பபட்டிருக்கும் பரிசுகளும் கடிதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.  தரங்கபாடி பகுதி ரெங்கநாதரின் கட்டுபாட்டிலிருக்கும் பகுதியியாக இருந்தாதலும் டேனிஷ் கிழகிந்திய கம்பெனியின் வியாபாரங்களால் அவர் பயன்பெற்றதாலும்  ஒரு பண்டக சாலை அமைக்க இடம் கொடுத்திருக்கிறார். பின்னாளில் அது கோட்டையாகியிருக்கிறது.
40 செமீ நீளமும் 2.5 செமீ அகலமும் உள்ள இந்த தங்க ஓலை1620 ஏப்ரலில்  ஆணியும் சுத்தியும் கொண்டு தமிழில்  வடிக்கபட்டிருக்கிறது. ரெங்கநாத நாயக்கன் தெலுங்கில் கையெழுத்திட்டிருக்கிறார்.  அவரது நீண்ட கையெழுத்துக்கு மேல் சில கடித எழுத்துக்கள். இருப்பதால் முதலில் கடிதத்தில் கையெழுத்து போடப்பட்டபின் செய்தி வடிக்க பட்டிருக்க வேண்டும், தமிழில் கையெழுத்திட தெரியாத  ஒருவர் தங்க ஓலையில் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தை தமிழ் தெரியாத டென்மார்க் மன்னருக்கு தாரைவார்த்திருக்கிறார். இந்த கடித்தின் டேனிஷ் மொழிபெயர்ப்பு காகிதத்தில் எழுதபட்டு இதனுடன் அனுப்பப் பட்டிருக்கிறது, அதுவும் இந்த காப்பகத்தில் இருக்கிறது.  அப்போது இந்தியாவிலும், டென் மார்க்கிலும் அங்கீகரிகபட்ட மொழிபெயர்ப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்.  இந்த தங்க ஒலையை தவிர இன்னும் இரண்டு தங்க  ஓலைகளும் இருக்கிறது. ஒன்று மன்னருக்கு நன்றி சொல்லும்கடிதம், மற்றொன்று ”கம்பெனியின் சார்பாக” என 4 தமிழர்கள் கையெழுத்திட்ட ஒரு புகார் கடிதம்.
ஏன் தங்க ஒலைகள்? எழுதியவர் மற்றும் பெறுபவரின் கெளரவத்தையும் முக்கியத்துவத்தையும் காட்டுவதற்கும் என்றும் நிலைத்து நிற்கும் ஆவணமாக இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கலாம் என்கிறார். ராமனுஜம்.  இந்த காப்பகத்தில் 100க்குமேற்பட்ட அலமாரிகளில் ஆயிரகணக்கான தமிழ் ஆவணங்கள் தவிர உருது,தெலுங்கு, கன்னட மோடி (பழமையான மாரத்திய மொழி) மொழிகளிலும் ஆவணங்கள் பாதுகாக்க படுகின்றன. இவற்றில் தமிழ் ஆவணகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்யும் ராமனுஜம்.  அவர் ஆராய்ந்தவற்றின் ஆங்கிலம், டேனிஷ்  மொழிபெயர்ப்புகளை குறிப்புகளுடனும்,ஆவண)ங்களின் போட்டோகளுடனும் அவருடைய இணையதளத்தில்(http://www.tharangampadi.dk/)  வெளியிட்டிருக்கிறார். ஆராய்ச்சிமாணவர்களுக்கு உதவது நோக்கம். ஆர்வமுள்ளவர்களை தொடர்பு கொள்ள வரவேற்கிறார். இவர் இந்த தங்க ஒலையில் கண்டுபிடித்து  சொன்ன ஒரு விஷயம் அதிலிடப்பட்டிருக்கும் தேதியில் தவறு. அந்த தவறை சரித்திர ஆசிரியர்கள் எவரும் கவனிக்கவில்லை. என்கிறார்.  தமிழில் எழுதபட்டிருக்கும் அந்த தங்க ஓலையில் ஆண்டும் மாதமும் தமிழில் ”ரூத்ர வருடம் சித்திரைமாதம் 20ம் ” என்று குறிப்பிடபட்டிருக்கிறது. தமிழ் வருடங்களுக்கு இணையான ஆங்கில வருடங்களை காட்டும் அட்டவணையின் படிஅது 1620 ஏப்பரல் 25. . ஆனால் அந்த காலகட்டத்தில் இந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் டேனிஷ் கேப்டன் ஓவ் க்ஜெட்டேயின் கப்பல்  ஆப்பரிக்க கடலை  கடந்து கொண்டிருந்தது இந்தியாவை அடையவில்லை. அப்படியானால் எங்கே தவறு? ஆராய்ச்சிக்குரிய விஷயம் இது தான்!

தரங்கம்பாடி அரசியல் ஆவணங்களை தவிரவும் பலசுவடிகள் இங்கிருக்கின்றன.  கிறிஸ்டியன் கிறிஸ்டோபர் என்பவர் தரங்கம்பாடி டேனிஷ் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் இவர் 1831ல் ”கபில வாசகம்”, ”ஆத்திசூடி கதைகள்” என்ற இரண்டு பெரிய சுவடி தொகுப்புகளை வாங்கி டென்மார்க்கிற்கு அனுப்பியிருக்கிறார். பல ஆண்டுகளாக கேட்பாற்று காப்பகத்தின் நிலவரையிலிருந்த இது ஒரு நூலகரால் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கபட்டு இப்போது இங்கே பாதுகாக்க படுகிறது.  அதை ராமானுஜம்  நாம் படிக்ககூடிய தமிழில் எழுதி அதை ஆங்கிலத்திலும் டேனிஷிலும் மொழிபெயர்திருக்கிறார். சுவடிகளின் படங்களுடன் பக்க எண் இட்டுபொழிபெயர்ப்புகளை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
14ஆம் நூற்றாண்டு தமிழை எளிதாக படிக்கும் இவர் இலக்கியங்கள் தவிர பல சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கிறது என்கிறார். 1795ல் சின்னையா என்ற பார்வையற்றவர் தரங்கபாடியிலிருந்து டென்மார்க்க்கு கப்பலில் சென்று மன்னரை சந்தித்திருக்கிறார்.. தரங்கம்பாடியிலிருக்கும் கவர்னர் தன்சாதிக்காரர்களை கெளரவமாக நடத்தவில்லை என புகார் அளித்திருக்கிறார். விசாரித்து முடிக்கும் வரை அவர் டென்மார்க்கில் தங்க அனுமதிக்க பட்டிருக்கிறார். விசாரணை முடிய 5 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. தான் தரங்கபாடியில் செல்வந்தன் என்றும் தன் குடும்பம் அடுத்த கப்பலில் வைரங்களை அனுப்பும் என சொல்லி நிறைய கடன் வாங்கியிருக்கிறார். ஒரு டேனிஷ் பெண்னையும் திருமணம் செய்துகொள்கிறார்.விசாரணை இறுதியில் சின்னையா மோசடிக்காரர் என தெளிவாகிறது. அவர் இந்தியாவில் தண்டனையை அனுபவிக்க கப்பலில் திருப்பிஅனுப்ப படுகிறார். அப்போது இந்தியாவிற்கு ஆப்பிரிக்காவில் கப்பல் மாறி வரவேண்டும். அப்படி மாறும்போது காணமல் போய்விடுகிறார் சின்னையா.! இதுபோல ஒரு நாவலுக்கு உரிய விஷயங்களெல்லாம்  இங்கே கொட்டிக் கிடக்கிறது.
அப்போது தரங்கம்பாடியிலிருந்த கோர்ட் வழங்கிய தீர்ப்புகள்,   சாக்கிலிட்டு கடலில் ஏறியுங்கள்  என்று ஒரு கவர்னர் வழங்கிய  கொடிய தண்டனை பற்றிய விபரங்கள்., தன் கடல் பயணத்தில் ஆபத்தான கட்டத்தில் போராடி தன் உயிரை காப்பற்றிய படகோட்டியின் குடும்பத்தினருக்கு ஆயுட்கால பென்ஷன் வழங்கியிருக்கும் கேப்டனின் கணக்குகள்,  மதக்குருமார்களிடையே நடந்த பிரச்சனைகள் என பலவகை ஆவணங்கள் இருக்கின்றன.  ஆனால் ஒரு சில- வையபுரியின் திருமணம் என்பது போன்ற- ஒரு திருமணத்தின் பிரச்னையைச் சொல்லும் ஆவணங்கள், தெளிவாக  எழுதப்படாதால் தமிழில் இருந்தாலும்  விஷயத்தை புரிந்துகொள்ளமுடியவில்லை என்கிறார் முனைவர்..
                400 ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்தின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கைப்பயணங்கள் தமிழில் பதிவு செய்யபட்டிருப்பதும் அது ஐரோப்பாவின் ஒரு பகுதியில் சிறப்பாக பாதுகாக்கபடுவதும் பெருமைக்குரிய விஷயம், அதைவிட பெருமைக்குரியது முனைவர் ராமனுஜம்  செய்துகொண்டிருப்பது. .
கல்கி 20/04/14

31/3/14

கங்கைக் கரை ரகசியங்கள் 12

பாட்னா நகரின் கங்கைக்கரையில் காந்திகாட் டிலிருந்து கிளம்பி சூரியோதம் பார்ப்பதற்காகவே ஒரு ரவுண்ட் வரும் M.V கங்கா விஹார் என்ற இரண்டு அடுக்கு மோட்டர் படகிலிருக்கிறோம். நேற்றிரவு  கங்கையில் எங்கே பாதுகாப்பாக குளிக்கலாம்? என்ற கேட்டபோது பீஹார் டூரிஸ்ட்டின் இந்த படகு சவாரி பற்றி சொல்லி புண்ணியம் கட்டிக்கொண்டவர் அந்த ஹோட்டல் மேனேஜர். கங்கையில் சூரியோதத்தை காசுகொடுத்துபார்க்க வைக்கும் புத்திசாலிகளான பிஹார் டூரிஸம் துறையினரின் இந்த படகில் ஏர்கண்டிஷன் ரெஸ்டோரண்ட்டும் இருக்கிறது.  அந்த விடியற்காலைப்பொழுதில்  நமக்கு வினோதமாகவும் பலருக்கு விருப்பமாகவும் இருக்கும் பிரேக்பாஸ்ட்டாக  ஜிலேபியையும்,  எண்ணை மினுமினுக்கும் ஆலுபரோத்தாவையும்  தருகிறார்கள். படகு கட்டணம் இதற்கும் சேர்த்துதானம். இந்தியாவின் மிகப்பிரமாண்டமான நதிப்பாலங்களில்  ஒன்றான காந்தி சேதுவை ஒரு ரவுண்ட் சுற்றி கரைக்கு திரும்புகிறது படகு.

வாரணஸியிலிருந்து கங்கைக்கரையோடு புத்த தேசத்தில் பயணித்து கொண்டிருந்த நாம் இப்போது பயணத்தின் இறுதிகட்டமாக அந்த புனித நதியின் கரையிலிருக்கும்  பாட்னாவிலிருக்கிறோம். இன்று ஒரு மாநில தலைநகரமாகயிருக்கும் இந்த நகரம் பாடலிபுத்திரமாக இருந்தபோது மகத நாட்டின் தலைநகராக, இன்றைய  இந்தியபரப்பளவின்  முக்கால் பகுதிக்கு தலைநகராகயிருந்திருக்கிறது. வேறு எந்த இந்திய நகரத்துக்கும் இந்த சரித்திர பாரம்பரிய பெருமை கிடையாது.  ஆனால் இன்று அந்த   சரித்திரங்களின் சான்றைச் சொல்ல நகரில் ஒரு பழமையான கட்டிடம் கூட இல்லை.  நகர் முழுவதும்  நவீன கட்டிடங்கள். இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகமுள்ள நகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறது இந்த நகரம். கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
 நமது சென்னை பயணம் மாலையில் தான் துவங்க இருப்பதால்  இங்குவேறு என்ன பார்க்கலாம்? என விசாரிக்கிறோம்.  நகரின் மையப்பகுதியிலுள்ள பெரிய காந்தி மைதானத்தின் மேற்கு மூலையில் இருக்கும்  ”கோல்-கர்” என்ற இடத்தை சொன்னார்கள்.  கோள வடிவ இல்லம் என்று சொல்லபட்டாலும் அது உருண்டையாக இல்லை..  ஒரு கோழிமுட்டையின் வடிவில்    கட்டபட்டிருக்கும் சேமிப்பு கிடங்கு.

உலகம் முழுவதும் பேசப்பட்ட 1770 ன் வங்காளப் பஞ்சத்திற்கு பின் அன்றைய  கவர்னர் ஜெனரல் வாரன்ஹேஸ்டிங்கின் ஆணையின் படி உருவாக்கபட்ட தானிய கிடங்கு இது.  ஒரு லட்சம் டன்களுக்கு மேல் சேமிக்கலாம். ஒரு புத்த ஸ்தூபியின் வடிவில் உட்புறம் காலியாக நிறுவபட்டு,
 அதன் மேல்புறத்திலிருக்கும் வாய்ப்பகுதி வழியாக தானியங்கள் உள்ளே கொட்டப்படும். அதற்கு வசதியாக வளைவாக படிகட்டுகள். கீழே உள்ள கதவுகளின் மூலம் எடுத்து கொள்ளப் படும்.  தானியம் யாருக்காக சேமிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? அன்றைய ராணுவத்தினருக்காக. முழுவதும் பலவிதமான செங்கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டபட்டிருக்கும் இது கட்டிடஇயலில் ஒரு சாதனையாக இன்றும் ஆர்க்கிடெட்களால் வர்ணிக்கப்படுகிறது. இன்று இதில் எதுவும் சேமிக்கபடுவதில்லை. சுற்றுலா வருபவர்கள் பார்க்குமிடமாகியிருகிறது.   குறுகலாக இருக்கும் 145 படிகள்.  மூச்சுவாங்க ஏறிப்போனால் நகரையும், கங்கையும் பார்க்கலாம்.  கங்கை எல்லா இடங்களிலுமிருப்பது போல அழகாக, கம்பீரமாக  இருக்கிறது.  அங்கிருந்து அன்னைக்கு ஒரு குட்பை சொல்லிவிட்டு இறங்கி நகரை சுற்றிவிட்டு திரும்புகிறோம்.
பரபரக்கும் பாட்னா ஸ்டேஷனில் பத்தாவது பிளாட்பாரத்திலிருந்து சங்க மித்திரா எக்ஸ்பிரஸ் சென்னைக்கு தன் பயணத்தை முன்னோக்கி துவக்கி வேகமெடுக்கிறது.   இந்த இனிய பயணத்தில் பார்த்ததை, அனுபவித்ததை. நினைவுச் சிதறலாகயிருப்பதை,  வீட்டிற்கு போனதும் நம் குடுமபத்தினருடன்  எதை? எப்படி? பகிர்ந்துகொள்வது என்பதை நம் மனம் அலசுகிறது, மனம் பின்னோக்கி காசிநகருக்குக்கு போகிறது. முதல் நாளும், அதற்கு பின்னரும் ஒருமுறை பார்த்த, கண்ணிலேயே நிற்கும் கங்கா ஆர்த்தி காட்சி  படமாக ஓடுகிறது.

 சில்லென்ற கங்கைமாலைக்காற்றின் சுகத்தில் படகுப்பயணத்தை அனுபவித்து கொண்டே ஆர்த்தி கட்டத்தை நெருங்குகிறோம். துவங்க இன்னும் அரைமணி நேரமிருந்தாலும் படித்துறையில்  மக்கள் உட்கார ஆரம்பித்துவிட்டார்கள்.ஓலிபெருக்கியில் பக்தியிசை, அறிவிப்புகள். நிறைய வெளிநாட்டினர் நம்மைப் போல படகில் காத்திருக்கிறார்கள்.வேறு சிலர் படகில் பயணம் செய்யாவிட்டாலும் பார்ப்தற்காக,  படமெடுப்பதற்காக காசு கொடுத்து காலிப்படகுகளில் உட்காருகிறார்கள் . மெல்ல இருள் பரவுகிறது.அதிகமாகிக்கொண்டிருக்கும் கூட்டம், ஆர்வத்தைத்துண்டும் அறிவிப்புகள் ஆர்த்திப் பாடல்பாடும் குழு வந்தமர்கிறது. இந்திய மொழிகள் அனைத்தும் காதில்விழுகிறது. படிகளினிடையே பலகையினால் நிறுவப்பட்ட சிறிய மேடையில் தங்கமாய் மின்னும் ஒரு குட்டி மண்டபம். உள்ளே முகம் மட்டும் தெரியும் கங்காமாதா. அருகில் பூஜை சாதனங்கள்.பக்கவாட்டில் பக்கத்திற்கு இரண்டாக நாலு சிறிய மேடைகள் அதிலும் பூஜை பொருட்கள். மணி 7ஐ நெருங்குகிறது.படிகளில் கூட்டம் வழிகிறது.. மின் விளக்கு வெளிச்சத்தில்  தகதகவென பளபளக்கும் ஆரஞ்சுக் கலர்பட்டாடையில் பூஜைமேடைஅருகே கம்பீரமாக நிற்கும்  இளைஞர்கள். டாண்ணெண்று 7 மணிக்கு சங்கு ஒலி அறிவிப்பபைத் தொடர்ந்து பூஜையை நடுமேடையில் வந்தமரும் தலமைப்பூசாரி துவக்குகிறார். பள்ளியில் காலை வணக்க கூட்டத்தில் சலசலத்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் விசிலடித்ததும்  அமைதியாகிவிடுவதுபோல  சட்டென்று கூட்டம் அமைதியாகி கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. மேடையிலிருக்கும் தேவிக்கு முதல் பூஜை முடிந்து  ஒரு சிறிய தீபாரதனை. அந்த தீபத்திலிருந்த எடுத்த அக்கினியில் அருகில் தயாராகயிருக்கும் பெரிய தீபங்கள் ஏற்றபடுகிறது. இசைகுழுவின் ஆர்த்திபாடல் ஒலிக்கிறது. ஓவ்வொன்றாக 7 விதமான தீபங்கள், படியிலிருந்து கங்கையை நோக்கி மூன்று திசைகளுக்கும் காண்பிக்கபடுகிறது. ஒவ்வொருமுறையும் 5 பேரும் இசையுடன் இணைந்து துல்லியமான அசைவுகளைக்கூட ஒரு பிசிரில்லாமல் தேர்ந்த  நடன கலைஞர்களைப் போல நேர்த்தியாக  செய்யும் அந்த காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. கனமான,சூடான அந்த  அடுக்குத்தீபங்களை ஒருகையில் தூக்கிச்சுழற்றிக்கொண்டே மறு கையில் கனமான மணியை ஆட்டி அடித்துக்கொண்டே ஒரு காலில் மண்டியிட்டு  5 பேரும் ஒரே நேரத்தில் வினாடிபிசாகமல் திரும்புகிறார்கள். தொடர்ந்த பயிற்சி,இசைஞானம்,பக்தி இவை யெல்லாம் இல்லாமல் இதைச்செய்யமுடியாது நூற்றுகணக்கான விடியோக்கள் இயங்குகின்றன.ஆயிரக்கணக்கான காமிராக்கள் பதிவுசெய்கின்றன.100 வருடங்களாக ஒருநாள்கூட விடாமல் தொடர்ந்து நடைபெறுவதாக சொல்லப்படும் இந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவுமில்லை.பார்ப்பவர்கள் தரும் காணிக்கைகளதான்.
இறுதியில் பல அடுக்கு விளக்குகளுடன் மஹாஆர்த்தி. காத்திருந்த மக்கள் தங்கள் கைகளில் புஷ்பங்களுடன் இலைகளில் வைத்திருக்கும் சிறு தீபங்களை மிதக்க விடுகிறார்கள். சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கில் நம் படகை கடந்து மிதக்கும்
அந்த மின்னும்  நட்சத்திரங்களை ரசித்த வண்ணம் கவனமாக அருகில் நிற்கும் படகுகளில் மாறி மாறி  நடந்து  கரையை அடைகிறோம். உச்சஸ்தாயில்  இசைகுழுவின்  குரலின் பின்ணியில் இறுதியாக மூன்று முறை சுழற்றப்பட்ட அந்த பெரிய தீபம் மக்களை நோக்கிகாட்டபட்டபின் அணைக்படுகிறது. பக்திபரவசத்தில் அங்கிருந்தவர்கள் ஓங்கி ஒரேகுரலில் எழுப்பிய, இப்போதும் நமக்கு கேட்கும் கோஷம்….   “கங்காமாதாகீ ஜே”


. (பயணம் நிறைகிறது)

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முனைவர் ராஜமாணிக்கம்-  தலவர் ஒஷோ பயோடெக் ஆராய்ச்சி கழகம் மதுரை 
எனது மனைவி ஜெயஸ்ரீ ஒரு மருத்துவர். ஈஷா அமைப்பிலும், அதன் தொண்டுபணிகளிலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். எனது ஆராய்ச்சி  மற்றும் பி.ஹெச் டி மாணவர்களுக்கு வழிகாட்டும் பணிகளினாலும் நான் அதில் அதிக நேரம் செலவிட்டதில்லை. ஒரு நாள் தற்செயலாக சத்குரு காசி நகர்  பற்றியும் காலம் என்பது பற்றியும் பேசினதை கேட்டேன்.   காசிநகரம் இவ்வளவு சக்தி வாய்ந்தா? என ஆச்சரியபட்டேன்.அப்போது இங்கு வரவேண்டும் என்று எழுந்த எண்ணம் இன்று நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லார் பாக் லீயாங் & திருமதி டான் பீ கெங் (Mr.Lor bak Liang &Mrs. Tan Bee kheng) சீஙகப்பூர் 

நான் சீங்கபூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன்.  என் மனைவி சீன மொழி மொழிபெயர்ப்பாளர். எங்கள் ஆன்மீக எண்ணங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டது. சத்குருவின் புத்தகம் ஒன்றைபடித்தபின் ஈஷா பால் நாட்டம் ஏற்பட்டது. அவர்களின் யோக பயிற்சிகளை முறையாக கற்றேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் அவருடன் கைலாஷ் யாத்திரை சென்ற போது ஒருநாள் காலைஉணவின் போது அவருடன் பேசியிருக்கிறேன். அவரிடம் ஒரு தெய்விக சக்தியிருப்பதை உணர்ந்தேன். காசி பற்றிய அவருடைய வீடியோவை பார்த்தபின் நானும் என்மனைவியுடன் இதை கலந்து கொள்ள  முடிவு செய்து வந்திருக்கிறேன். காசி பற்றி முக்தி அடைவது பற்றி இவ்வளவு விபரங்கள் இந்த பயணம் வரும் முன் தெரியாது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நந்தினி  
 நான் பிடெக் முடித்து ஸ்வீடனில் எம்.எஸ் படிக்க போகிறேன். அட்மிஷன் கிடைத்துவிட்டது. விசா தாமதமாகிறது.  சேலத்திலிருக்கும் என் தாய் ஈஷாவில் ஈடுபாடு உள்ளவர். நான் தியானம் கற்றிருந்தாலும் சீரியசாக செய்வதில்லை. இந்த பயணத்துக்கு அம்மாவுடன் வருவதாக இருந்தது. ஒரு சீட் மட்டுமே கிடைத்ததால் ”விசாவைப் பற்றி கவலைப்படாமல் போய்வா. நிச்சியம் கிடைக்கும்” என அம்மா என்னை அனுப்பினார்..  எல்லோரும்  தனியாகவா வந்தாய்? என கேட்கிறார்கள். ஈஷா குழுவில் வர என்ன பயம்? நம் தேசத்தின் பெருமைகளை அறிய, குறிப்பாக காசியை தெரிந்துகொள்ள இந்த பயணம் உதவியது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாண்டியன்  -தொண்டர்.
தென்மவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் எளிய தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவன் நான்.  கோவையில் படிப்பதற்கு உதவி கேட்டு ஈஷாவிற்கு வந்தவன். இப்போது கோவை செண்டரில் முழுநேர தொண்டன். படிப்பிற்கு  பின் இங்கு அக்கெண்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில்  ஆடிட்டிங் பிரிவில் பணி. இந்த பயணத்திற்கு உதவியாளாரக தேர்ந்தெடுக்கபட்டேன். இம்மாதிரி பணிகள் எனக்கு சந்தோஷத்தையும், புதியவைகளை கற்கும் வாய்ப்பையும் அளிக்கிறது.என் வாழ் நாள் முழுவதும் ஈஷாவின் பணிகளில் இணைந்திருப்பேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 சத்குருவின் பதில்கள்

சமயம் கடந்த  சாதிகடந்த யோகா என்று ஈஷாவை ஆரம்பித்து இப்போது கோவில் குளம் தேவிவழிபாடு,புனிதப்யணம் என்று சென்றுகொண்டிருக்கிறீர்களே?

 இங்கே எதைச்செய்தாலும் ஜாதியுடனோ மதங்களுடனோ அடையாளபடுத்திப் பாக்கிற  இயலா பழக்கங்களைவைத்தே மதங்களை கற்பித்து விடுவீர்கள். இட்லி சாப்பிடுகிறீர்கள் என்றால் அது இந்துக்களின் உணவு என்பீர்கள் ரொட்டி சாப்பிட்டால் கிறிஸ்த்துவ உணவு என்பீர்கள். பிரியாணி சாப்பிட்டால் இஸ்லாமிய உணவு என்பீர்கள். எப்படி  உடை உடுத்தினாலும் அதை எதாவது ஒரு மதத்தோடு தொடர்புபடுத்தி சொல்லுவீர்கள். மதத்தின் சில அம்சங்கள் மூட நம்பிக்கை சார்ந்ததாகப் போவதால் மதங்கள் என்றாலே உங்களுக்கு எதிர்ப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.யோகா என்பது எப்படி ஒரு விஞ்ஞானமோ, ஒரு தொழில் நுட்பமோ தியானலிங்கமும். லிங்கபைரவியும் ஒரு விஞ்ஞானம். அவை ஒரு தொழில்நுட்பம். ஈஷா யோக மண்டபத்தில் அமைந்திருக்கும் தீர்த்தகுண்டமும் ஒரு விஞ்ஞானம். தீர்த்தகுண்டத்தில் விஞ்ஞான அதிசயம் ஒன்று நிகழந்திருக்கிறது. நவீன விஞ்ஞானத்தில் கூட கெட்டிபடுத்த பட்ட பாதரசம் என்பது யாரும் பார்த்திராத ஒன்று. பொதுவாக பாதரசத்தை திடபடுத்த வேண்டுமென்றால் அதனை உறைய வைக்கும் குளிர் நிலையில் மட்டுமே செய்ய முடியும். ஆனால் 32 டிகிரி சீதோஷணத்தில் தீர்த்தகுண்டத்தில் பாதரசம் அமர்ந்திருக்கிறது. இது சராசரி விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட விஞ்ஞானம். அதிசயம். இதை வெறும் குளம் என்று சொல்லிவிட முடியாது. மனிதன் தன் எல்லைகளைத் தாண்டி. உணர்வதற்கு உருவாக்கபட்டுள்ள இந்த கருவிகளை கோவில்கள், குளங்கள் என நினைக்காமல்   பயன்படுத்திகொள்வதே புத்திசாலித்தனம்.
இந்த பயணக்கட்டுரைக்காக விசேஷமாக அளித்த பேட்டிக்கு  வாசகர்கள் சார்பில் நன்றி
சந்தோஷம்.
. படங்கள் ரமணன்




30/3/14

கஙகைக்கரை ரகசியங்கள் 11




நேற்று செய்தது போல
உலகின் முதல் பல்கலைகழகம் என  வர்ணிக்கபடும் நாளந்தா இந்த புத்த தேசத்தில் தான் இருக்கிறது. பல்கலை கழகத்தை தவிர ஒர் பெரிய புத்த மடாலாயமும் இருந்திருக்கிறது. ராஜ்கீரிலிருந்து புத்தர் இந்த இடத்திற்கு தான் வந்திருக்கிறார். அந்த பல்கலைகழகத்தில் தான் கண்ட உண்மையை போதித்தாரா? அல்லது  அங்கிருந்த மற்ற சமய அறிஞ்கர்களுடன் தன் கொள்ககைகளை விவாதித்தாரா என்பதில் ஆராய்ச்சியாளார்கள் வேறுபடுகிறார்கள்.   இன்று  உலகின் பல பல்கலைகழகங்களுக்கு நம் மாணவர்கள் போகிறார்கள். ஆனால் கி,மு 5 ஆம் நூற்றாண்டிலேயே உலகின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் படிக்க இந்த மண்ணிற்கு வந்திருக்கிறார்கள். அந்த இடத்தில் இன்று இருக்கும்  அடையாளங்களை பார்க்க போய்க்கொண்டிருக்கிறோம். ராஜ்கீர்- நாளந்தா பகுதி பல பெரிய கல்விக்கூடங்களின் தொகுதியாகயிருந்திருக்கிறது. இசை, நடன நாடக கலைகள் முறையாக கற்பிக்க பட்டிருக்கின்றன.
 ராஜ்கீரிலிருந்து நாளந்தா போகும் வழியில் ஏதேனும் ஒரு  அழகான கிராமிய மணம் கமுழும் சூழலை கண்டுபிடித்து   பிக்னிக் போல   மதிய உணவை குழுவினர் முடிக்கவேண்டும் என்பது திட்டம்.  ஆனால் அதைச்செயாலாற்றியதில் ஒரு சின்ன சறுக்கல். மொத்த குழுவினரும்  5 பஸ்களில் பயணித்து கொண்டிருந்தோம்.  ராஜ்கீரிலிருந்து  புறப்பட்டபின் நாளந்தா விற்கு வரும் வழியில்  முதல் பஸ் ஒரு பாதையிலும் மற்றவை பிரிந்து  மற்றோர் பாதையிலும்  போய்விட்டது. இன்றறைய செல்போன், ஜிபிஎஸ்  யுகத்திலும் இத்தகைய தவறுகள் நேரத்தான் செய்கின்றன.  சாப்பாடு பாக்கெட்டுகள் அனைத்தும் ஒரு பஸ்ஸில் இருந்ததால் அனைவரின் வருகைக்காக ஒரு  வயல்வெளியில் காத்திருக்க நேர்ந்தது.  நெல்வயல்கள், தோப்புகள்  சுடாத வெய்யில்,மெல்லியகாற்றுஇருந்தும்,,நேரம்விணாகிக்கொண்டிருக்கிறதே
சாப்பாடு சங்கிலி
என்ற உணர்வும்,பசியும் சுழலை ரசிக்க முடியாமல் செய்தது. பஸ்கள் வந்ததும் எல்லோருக்கும்உடனே உணவு பாக்கெட்கள் கிடைக்க ஈஷா தொண்டர் படை செய்த காரியம் அவர்களின் அனுபவத்தை காட்டியது. ஓவ்வொரு பஸ்முன்பும் 10 பேர்களின் மனித சங்கிலி. பாக்கெட்கள் சர சரவென கைமாறியது. கடைசிபஸ்ஸில் இருப்பவர்களுக்கு கிடைத்தவுடன் அந்த சங்கிலி அங்கே துண்டிக்கபட்ட்து.  அதேபோல் அடுத்தடுத்த பஸ்களுக்கும். இப்படி 10 நிமிடத்திற்குள் 200 பேர் கையிலும் பாக்கெட்கள். இந்தப் பயணத்தில் இந்த தொண்டர் படையினரின் பணி நம்மை ஆச்சரியபடுத்திய விஷயங்களில் ஒன்று. தண்ணீர் பாட்டிலா, தலைவலி மாத்திரையா, செல்போன் சார்ஜரா,  எதுவாகயிருந்தாலும் நிமிடங்களில் வந்தது. இவர்கள் ஈஷா செண்டரில்  ஆடிட்டிங், பதிப்புகள், யோகாஆசிரியர் என வெவ்வேறு பிரிவுகளில் இருக்கும் முழுநேர தொண்டர்கள்.  இந்த  பயணப் பணிகளை செய்ய பணிக்கப்பட்டிருப்பவர்கள். எவ்வித தயக்கமும் இல்லாமல் எல்லாப் பணியையும் செய்கிறார்கள். ஒரு ஹோட்டலில் உணவு தாமதமானது. இவர்களே கிச்சனில் நுழைந்து  அவர்களுக்கு தயாரிப்பில் உதவினார்கள்.
பஸ் குழப்பத்தினால் நேர்ந்த தாமதத்தை தவிர்க்க  நளாந்தா பயணத்தை தவிர்த்து நேரடியாக பாட்னா செல்வது என்ற முடிவை அறிவிக்கிறார்கள். பலருக்கு ஏமாற்றம். குழுவில் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் திரும்பிச்செல்லபவர்களுக்கு அங்கிருந்து  அன்றிரவு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் மனமில்லாமல் ஏற்கிறார்கள். இவ்வளவு தூரம் வந்து நாளந்தா பார்க்கமல் திரும்ப விரும்பாத அதைப்பார்க்க போகமுடிவுசெய்த ஒரு சிறுகுழுவுடன் நாம் இணைந்து கொண்டு நாளந்தாவிற்கு பயணத்தை தொடர்கிறோம்.
கங்கையின் கிளைநதிகளில் ஒன்றின் அருகில் படா கோவன் என்ற சின்ன கிராமத்தின்  நடுவே இருக்கிறது அன்று நாளந்தாபல்கலைகழகம் இருந்த இடம்.  நாளந்தா என்றால் தாமரையின் உறைவிடம் என்று பொருள். தாமரை மலர் நமது மரபில் வேதகாலம் முதல் கல்வியின், ஞானத்தின் அடையாளமாக மதிக்கப்பட்டிருக்கிறது. இன்று வெறும் செங்கல் கட்டிட இடிபாடுகளாக இருக்கும் இந்த இடத்தில் தான் புத்தருக்கு முன்னரே கி.மு 5 நூற்றாண்டிலேயே வானியல், சோதிடம்,மருத்துவம், இலக்கணம், மதவியல், கணிதம்  போன்றவைகளை கற்பிக்க தனித்தனிதுறைகளுடன்   
டெரக்கோட்டா சீல்
ஒரு பல்கலைகழகம், மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியுடன் இயங்கியிருக்கிறது.  உலகிலேயே அனைத்து கல்விகளையும் ஒரே குடையின் கீழ் ,ஒருபல்கலைகழகழகமாக்கும் முறை இங்குதான் முதலில் அறிமுகபடுத்தபட்டிருக்கிறது. 10,000 மாணவர்களும், 2000 ஆசிரியர்களும் இருந்திருக்கிறார்கள். கிபி 12ஆம் நூற்றாண்டுவரை இயங்கியிருக்கிறது. 1700 வருடங்கள் முன்,இன்று உலகின் புகழ் பெற்ற பலகலைகழகங்கள் இருந்த நகரங்கள் கூட பிறக்காத காலத்திலியே ஒரு பல்கலைகழகமிருந்த இடம் இது.   மொழி இலக்கணத்தை படைத்த பாணிணி, வானியல்விற்பன்னர் ஆரியபட்டர், மருத்துவத்தின் தந்தை வராஹமிஹிரர் போன்றவர்கள் இங்கிருந்து தான் ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார்கள்.
வளாகத்தின் நடுவே ஒரு ஸ்தூபி சுற்றிலும்  பெரிய கட்டிடங்களின் அடிச்சுவர்களின் மிச்சங்கள். மேற்பகுதி மரத்தாலானவைகளாக இருந்து அழிந்திருக்கலாம். இன்று காலச்சுவடுகளாக வெறும் கற்களாக நிற்கிறது.  புத்தருக்குமுன், புத்தர் காலத்தில், புத்தருக்குபின் மன்னர்  ஹர்ஷவர்தன் காலம் என்று மூன்று காலகட்டத்தை கடந்து நின்றிருக்கிறது.  சமண தீர்தங்கள்  மாகவீர்ர் உள்பட பலர் வந்திருக்கிறார்கள். சீன யாத்திரிகர் யூவான் சுவாங் இந்த பலகலை கழகத்தை பார்க்கவந்தவர் 5 ஆண்டு காலம் தங்கி சம்ஸ்கிருதமும், பெளத்தமும் பயின்றிருக்கிறார்.  அவர் எழுதி சீனாவில் இருக்கும் குறிப்புகள் தான் இந்த பெருமைமிக்க இடத்தை அடையாளம் காட்டியிருக்கிறது.
டெல்லிக்கு வந்த முகம்மதியர்  ஆட்சியில் பக்தியார் கில்ஜி 1203ல்  தன் எல்லைகளை விரிவாக்கிய படையெடுப்புகளில் இது அழிந்திருக்கிறது. 10000 பிட்சுகள் கொல்லபட்டு பிரமாண்டமான சுவடி நூலகம் எரிக்கபட்டிருக்கிறது. முகமதிய ஆக்ரமிப்பாளார்கள் கண்டு பயந்த ஆயுதம் கல்வி,  கல்வியாளர்களையும், அவர்களின் சேமிப்புகளையும். அழித்துவிட்டால் அந்த சமூகத்தையே அழித்துவிடலாம் என கருதியிருக்கிறார்கள். ஆனால்  எரித்து சூறையாடபட்ட நாளந்தாவில் 1235ல் ஒரு 90 வயது ஆசிரியர் ராகுல ஸ்ரீபத்ரா 70  மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார் என எழுதுகிறார் யுவான் சுவாங்.  எரிந்த சுவடி நூலகத்தில் மிஞ்சியவை இன்று திபேத்திய  நூலகத்தில் இருக்கின்றன.
 வளாகத்தின் எதிரில் ஒரு சிறிய  அருங்காட்சியகம். அங்கு  அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவைகளை சேமித்திருக்கிறார்க்ள். நிறைய புத்தர் சிலைகள், கருவிகள், கல்வெட்டுக்கள்.  கருப்பு வண்ணத்தில் ஒரு வலது கை தரையை நோக்கி இருக்கும் ஒரு  புத்தர் கருங்கல் சிலை  நேற்று செய்ததைப்போல் பொலிவுடன்  இருக்கிறது. பல்கலைகழகம் எப்படியிருந்திருக்கும் என்பதை காட்டும் வரைந்த படம் நமக்கு அதன் கம்பீரத்தைப் புரிய வைக்கிறது. யூவான் சுவாங்க்கு ஒரு நினைவு மண்டபம் அதன் முன் அவர் சிலை. உடை அலங்காரம் சற்று வினோதமாகயிருக்கிறது.

 சீனத் தலைநகரில்  துவங்கி ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு வந்த யூவான் சுவாங் தமிழகத்தின் காஞ்சிபுரம் வரை வந்து பின்னர்  பாட்னா வழியாக இங்கு வந்து  இந்த பல்கலைகழகத்தை கண்டு மயங்கி  5 ஆண்டுகள் யோகசாஸ்திரமும், சமஸ்கிருதம் கற்றிருக்கிறார்.  இங்கிருந்து தாய் நாட்டுக்கு திரும்பும்போது 22 குதிரைகளில் 620 புத்தகங்களையும் புத்தர் பொற்சிலையும் சீனாவிற்கு எடுத்துசென்றிருக்கிறார். பல சமஸ்கிருத புத்தகங்களை  தன் இறுதிக்காலத்தில் சீன மொழியில்  மொழிபெயர்த்திருக்கிறார் இந்த ஆச்சரியமான உலகம் சுற்றிய பயணி.
 அருங்காட்சியகத்தில் எரிக்கப்பட்ட நாளந்தாவிலிருந்த கிடைத்த அரிசி என ஒரு தட்டில் கறுப்பு வண்ண அரிசி கண்ணாடிப்  பேழைக்குள் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
இன்றுஇதே பலகழகத்தை மீண்டும் உருவாக்க முடியாது என்றாலும் பீஹார் அரசு இந்த பகுதி முழுவதிலும் அத்தனைவிதமான உயர் கல்வி நிலயங்களையும் நிறுவி  கல்விநகரமாக்க வேண்டும், அவைகளை இணைத்து ஒரு புதியமாதிரி பல்லைகழகத்தை நிறுவவேண்டும்
என்று  நோபல் அறிஞர் அமிர்தாசென்னின் தலமையில் ஒரு குழு அமைத்து செயல்பட்டுகொண்டிருக்கிறது. எந்தவிதமான ஒதுக்கீடுமுறைகளும் இல்லாமல்,தகுதியின் அடிப்படையில் மட்டுமே உலகின் எந்த பகுதியிலிருக்கும் மாணவர்கள் இந்த புதிய நளாந்தாவில் சேர்க்கப்படபோகிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிந்து கொண்டு  இரவு பட்னா நகர் திரும்புகிறோம்.
-----------------------------------------------------------------------------------------------------
 சத்குருவின் பதில்கள்
இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம் ஏன் இந்தியாவில் வேர் விட்டு வளராமல் போனது?

ஒரு மதத்தை உருவாக்கும் நோக்கம் புத்தருக்கு அப்போது இல்லை. இந்தியாவில் பௌத்தம் வளராமல் வெளிநாட்டில் போய் இருக்கிறது என்றால், அதற்குப் புத்தர் செய்த வேலைதான் அடிப்படைக் காரணம். இந்த நாட்டில், இந்த கலாச்சாரத்தில் அவர் சொன்னது ஒன்றும் புதிதல்ல. முதலில் இருந்தே இருந்த ஒன்றுதான். ஆரம்பத்தில் சிலர் ரொம்ப முக்கியான படிநிலையாக ஆன்மிகம் என்பது வெறும் சமஸ்கிருத பாஷையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வைத்திருந்தார்கள். இந்த சமஸ்கிருத பாஷை ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும்தான் வாய்ப்பாக இருந்தது. அப்போ சாமானிய மக்களுக்கு இந்த ஆன்மீகத்தின் வழியை அடைய வாய்ப்பில்லாத சூழல் இருந்தது. புத்தர் வந்தபோது முக்கியமான வேலை என்ன செய்தார் என்றால், சாமானிய பாஷையில் பேச ஆரம்பித்தார். அதுவே ஒரு பெரிய புரட்சியாக நடந்தது. சாமானிய மக்கள் அதையெல்லாம் காதில் கேட்டதே இல்லை. ஆனால், மேற்கத்திய வெளிநாடுகளின் பக்கம் போனால், அவர்கள் இதையெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை.மனிதன் உள்நோக்கிச் செல்லும் நிலையே அவர்களுக்குத் தெரியாது. எல்லாவற்றிற்கும் கடவுளைக் கூப்பிட வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். மதமில்லாத ஆன்மிகம் இங்கேதான் பிறந்து வளர்ந்திருக்கிறது. அதனால் அது அங்கே வளர்ந்தது.
புத்தர் சொன்ன முக்கியமான புரட்சி என்னவென்றால், இந்துக் கலாச்சாரம் அந்தக் காலத்தில் சடங்குகளால் சிக்கிக் கிடந்தது. அதனால் தியான நிலையில் அதுக்கு மேல ஒரு விஷயத்தைச் செதுக்க முடியும் என்று இந்தத் தியான வழியைக் காட்டினார். ஆனால் இப்போ இருக்கும் புத்தம் இந்த இந்துக் கலாச்சாரத்தில் என்ன சடங்குகள் இருக்கோ, அதற்கும் மேலே சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அதனால் இந்த நாட்டில் இப்போது அது செல்லாது போய்விட்டது