1/1/14

சத்குருவுடன் ஒரு நாள்

சத்குருவுடன் ஒரு நாள்



கோவைக்கு அருகில் வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம். நடுவில் தூண்கள் எதுவுமில்லாது  நவீனமாக எழுப்பட்டிருக்கும் பிரமாண்டமான ஆதியோகி ஆலயம் என அழைக்கப்படும் தியான மண்டபம்..ராணுவ ஒழுங்கில் அமர்ந்திருப்பவர்களின் முன்னே விளக்கொளியில் சத்குரு. அவரின் கட்டளைகளுக்கு ஏற்ப யோக பயிற்சிகளை செய்கின்றனர். இடையிடையே சில நேரங்களில் சீடர்களுடன் உரையாடும் ஜென் ஞானியைபோலவும், சில நேரங்களில் வேறுஒருகாலத்தின் கதையை திறம்பட சொல்லும் கதை சொல்லியாகவும், சில சமயங்களில் பிரபஞ்சத்தின் கடினமான விஷயங்களை விளக்கும் ஞானிபோலவும் பேசிகொண்டிருக்கிறார். கன்னட வாசனையில் தமிழ். கம்பிரமான ஆனால் கனிவான குரல், ஈஷாவின் ”சத்குருவுடன் ஒரு நாள்”- நிகழச்சிக்கு பின்னர்  அவர் கல்கிக்காக அளித்த  Exclusive பேட்டி

யோகா, பிராணாயமம்  போன்றவைகள் ஒரு குருவின் மூலம் ஒவ்வொருக்கும் தனித்தனியாக சொல்லிகொடுக்க வேண்டிய ஒர் பயிற்சி. அதை இப்படி பிரமாண்ட கூட்டங்களில் சொல்லிக்கொடுப்பது எந்த அளவிற்கு கற்றுகொள்பவர்களுக்கு பலன் அளிக்கும்?. தவறாக கற்று கொள்ளகூடிய வாய்ப்பும் இருக்கிறதே?
ஈஷா அமைப்பு கடந்த 30  ஆண்டுகளாக யோகா பயிற்சிகளை கற்பித்து வருகிறது. அதை சரியான முறையில் சொல்லிக்கொடுக்க  ஆசிரியர்களுக்கு நாங்கள் ஆண்டுகணக்கில் பயிற்சி அளித்திருக்கிறோம். கற்பிப்பதில் தவறுகள் நேர்ந்துவிடாத வண்ணம் நிறைய ”டெம்பிளேட்”களை உருவாக்கியிருக்கிறோம்.  ஆனாலும் நீங்கள் கேட்பது புரிகிறது. இம்மாதிரி மாஸ் புரோகிராம்களில் நான் கற்பிப்பது யோகாவின் ஒரு அங்கமான    –”உப-யோகா- இதில் சில எளிய பயிற்சிகளை கற்று அதன் பலனை உணர்பவர்கள், அடுத்த கட்டத்தில் தொடர வேண்டும் என்பதுதான் நோக்கம். 1000 இல்லை 15000 பேராக இருந்தாலும்  எண்ணத்தை ஒருமுகபடுத்தி கண்களைமூடி நான் சொல்லுவதை கேட்கும்போது  சாதகர்கள் நான் தனியாக அவருக்கு சொல்லிகொடுப்பதை போல உணர்ந்தை பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். மேலும் ஒரே இடத்தில் பலர் பயிற்சி செய்ய முயற்சிக்கும் போது அந்த இடத்தில் ஏற்படும் சக்தி அதிர்வலைகள்  கற்கும் திறனைப் பெருக்குகிறது.

  ஒரு ஆன்மீக குருவாக இருந்துகொண்டு எப்படி ஈஷா வின் அத்தனை பகுதிகளையும் நேரடியாக  நிர்வகிக்கிறீர்கள்?
ஆன்மீகம்  என்பது தவறாக புரிந்து கொள்ளபட்டிருக்கிறது. ஒரு ஆன்மீக வாதியை தங்கள்  இறைவழிபாட்டுக்கான கருவியாக பலர் எண்ணுகிறார்கள்.  சமூகத்தில் ஒர் ஆன்மீக வாதிக்கான பொறுப்பு மிகஅதிகம். தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு ஆன்மிகம் என கருதப்படும் நல்ல நெறிகளைபோதித்து அதேநேரத்தில் அந்த கால கட்டத்திற்கு அவசியமான சமூக மேம்பாட்டிற்கான பலவிஷயங்களையும் முன்னெடுத்து செய்யமுயற்சிகவேண்டும் அதைத்தான் ஈஷா மூலமாக நாங்கள் முயற்சிக்கிறோம். ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்வது ஒரு பெரிய விஷயமில்லை. அவைகளோடு ஆன்மீக, யோக பயிற்சிகளை விடாமல் செய்யவதுதான் முக்கியம். எங்கள் பிரம்மச்சாரிகளையும், தொண்டர்களையும் அதற்கு தயார் செய்திருக்கிறோம்.

 உங்கள் கூட்டங்களிலும் சரி தனி சந்திப்புகளிலும் சரி ஆன்மீகம் மட்டுமில்லாமல் விஞ்ஞானம், மருத்துவம், மேனஜ்மெண்ட். என்று   எதைப்பற்றிக்கேட்டாலும் எப்படி உங்களால்  உடனடியாக பதில் சொல்ல முடிகிறது.?
 நான் எதைப்பற்றியும் சொந்தமாக சிந்திப்பதில்லை. எதை பற்றியமுடிவுகளும் என் சிந்தனையில் இல்லை.  என் தலை காலியாக இருக்கிறது. எனக்கு சொந்தமான ஒரு மூளையில்லை என்று சொன்னால் சிரிப்பீர்கள். ஆனால் அதுதான் உண்மை. எனக்கு தேவையானது நான் சொல்லவேண்டியது  எல்லாம் பிரபஞ்ச மூளையிலிருந்து வருகிறது, சில என்னுள் பதிவாகிறது. பல பதிவாதில்லை. எனக்கு தெரிந்த விஷயங்கள் எல்லாமே ஒரு கணத்தில் நிகழந்தவை. எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால்  அதே நேரம் நீங்கள் கேட்கும் எல்லாமே  எனக்கு தெரியும். நீங்கள் மனித வாழ்க்கை தொடர்பாக, அதன் உள்நிலை தொடர்பாக என்ன கேட்டாலும் எந்தவித தயக்கமுமின்றி தெளிவாக பதில் தருவது போல நீயூக்லீயர் பிசிக்ஸ் பற்றி கேட்டாலும் தருவேன். நான் என்குருவை சிலவினாடிகள் மட்டுமே சந்தித்தேன். அவர் என்னை கையால் தொடவில்லை, கையிலிருந்த ஊன்றுகோலால் தொட்டார். பத்துபிறவிகள் படித்தாலும் தெரிந்து கொள்ளமுடியாத விஷயங்கள் அந்த ஒருவினாடியில்  எனக்கு வழங்கபட்டன,. அவைகளை அறிந்துகொள்ளும் தொழில் நுட்புமும் எனக்கு தரப்பட்டது. அது வழங்கப்பட்டபோது,ஒரு சக்திநிலையாக வழங்கபட்டது. அது நினைவாற்றல்லாக அல்லது தர்க்க அறிவிவாக வழங்கபடவில்லை. அதனால் தான் அவைகளை நான் அவசியமில்லாதபோது சிந்திப்பதில்லை.. எனக்கென்று எந்த சிந்தனைகளோ அதுபற்றிய முடிவுகளோ என்னிடம் இல்லை.
உங்களால் முந்தியபிறவிகளை உணரமுடியும் என சொல்லுகிறீர்கள். கடந்த பிறவிகளில் உங்களுடன் தொடர்பு கொண்டவர்களை இந்த பிறவியில் உங்களால்  அடையாளம் காணமுடியுமா?
கடந்த 370 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் தொடர்பு கொண்டர்வர்களில் சிலர் இங்கே இருக்கிறார்கள்,  ஆனால் அதை ஆராய்வதும் அவர்கள் அந்த பிறவியில் செய்தது பற்றி ஆராய்வதும் இப்போது அவசியமில்லாதது.                                                                          
                                                                          

நீண்ட கால தவத்திற்குபின்  உங்கள் குருவின் கட்டளயையான தியானலிங்கத்தை நிறுவி அதற்கு சக்தியூட்டி அர்பணித்தபோது, இது வழிபடும் கோவில் இல்லை. எந்த பூஜையோ சடங்குகளோ கிடையாது  என அறிவித்திருக்கிறீர்கள். இப்போது லிங்க பைரவி என்ற தேவியின் கோவிலை நிறுவி எல்லா சடங்குகளையும் செய்கிறீர்கள் ஏன் இப்படி  ஒரு நேர்மாறான நிலை?
தியான லிங்கமும் கோவிலாகத்தான் உணரபடுகிறது. அங்கு எழும் சக்தி வலிமை மிகுந்ததாக இருப்பதால் ஒரு வார்த்தைமந்திரம் உச்சரிக்கமுடியாது, பூஜைகள் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அந்த வலிமை மிகுந்த சக்தியை தங்களுடைய மந்திர தந்திர சக்திகளை பெருக்கி கொள்ள  சிலர் முயற்சிப்பதை உணர்ந்தேன். அதை தடுக்க ஒரு பாதுகாப்பு சக்தி அவசியமாயிற்று. அந்த அவசியம் லிங்கபைரவி கோவிலாக உருவெடுத்தது. நீங்கள் நினப்பது போல இது நேர்மாறான நிலையில்லை. ஒன்றுக்குஒன்று உதவும் நிலை.  ஒரு குடும்பம்  கணவன் மற்றும் மனைவி சேர்ந்தது. இதை நேர்மாறான நிலை என்பீர்களா?  அதுபோலதான் இதுவும். தியான லிங்கத்தை எழுப்பும் போதே  இப்படி ஒரு சக்தி ஸ்தல்ம் உருவாக்கும் எண்ணமிருந்தது. அவசியம் வரும்போது செய்யலாம் என தீர்மானித்திருந்தேன், இப்போது அவசியம் எழுந்திருப்பதினால்  உருவாகியிருக்கிறது. சடங்குகள் பற்றி கேட்டீர்கள். நமது வழிபாட்டுமுறைகளில் சடங்குகள் என்பதின் மூலம் எளிதாக பலரை, பலதரபட்ட மக்களை  ஒரு சக்தியைநோக்கி ஒருமுகபடுத்தமுடியும். சடங்குகள் தவறில்லை. ஆனால் அந்த சடங்குகள் மூலம் மக்கள் ஏமாற்றபடுவதும் சுரண்டபடுவதும் தான் தவறு. இப்போதுஇந்த கோவிலில் அத்தகைய சடங்குகளை செய்பவர்கள் உலகத்தையே நீங்கள் கொடுத்தால் கூட தவறான காரியங்களை செய்யமாட்டார்கள். அவர்களை பற்றி நான் பெருமைபடுகிறேன்/
ஏன் இந்த கோவிலில் தேவியை அர்ச்சிக்கும், பூஜிக்கும் உரிமை பெண்களுக்கு மட்டுமே வழங்கபட்டிருக்கிறது.?
பெண்களுக்கு இந்த உரிமை நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னரே இருக்கிறது. நடுவில் இது தடுக்க பட்டிருந்தது.   இங்கு அந்த பணியை செய்பவர்கள் அர்ச்சகர்கள் இல்லை. அவர்கள்  ”கடவுளின் சக்தி”வாய்ந்த மனிதர்கள். முன் காலங்களிலிருந்த அத்தகைய மனிதர்கள் இப்போது இல்லை. அதனால்தான் இந்த முறை. இவர்கள் பெருகி மனிதர்களுடன்  சமூகத்தில் உறவாடும்போது  உலகில் நல்ல அதிர்வுகளும் அதன் பயனாக் நல்வாழ்க்கையும்  எளிதாக ஏற்படும்

உங்கள் கோவில்கள், தியான ஹால்கள் என எல்லா இடங்களிலும் அதிகம் மாக பாம்புகளின் வடிவங்களும் படங்களும் காணப்படுகிறது, ஏன் பாம்புகளின் மீது இப்படி ஒரு அப்ஸஷன்?
அப்ஸ்ஸஷன் ? (பலமாக சிரிக்கிறார்) பாம்புகளும் பசுக்கள் போல புனிதமானவை. என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை. பாம்பு என்பது குண்டலினி ஆற்றலின் ஒரு குறீயிடு. நகர்கிறபோதும் அசைவற்று இருக்கும் போதும்  குண்டலினி ஆற்றலும் பாம்பும் ஒன்றுபோல இருக்கின்றன. உயிர்களினுடைய பரிமாண வளர்ச்சியில் பாம்பு என்பது மிக முக்கியமான அம்சம்.. அதனால் தான் பாம்பை கொல்ல கூடாது என்று நம் பாரம்பரியம் சொல்லுகிறது. என்னைப் பொருத்தவரையில் என்னைசுற்றி பாம்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. கிருத்தவ மதத்தில் பாம்பு சாத்தானின் தூதுவனாக  சொல்லபட்டு ஒரு எதிர்புணர்ச்சியை வளர்த்துவிட்டார்கள்.   இந்த பூமியில் உயிர்கள் என்பவை கடவுளின்  படைப்பு  என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என்றால் அதற்காக ஏவாளை தூண்டிய பாம்பை கடவுளின் தூதர் என்றுதானே சொல்ல வேண்டும்.? எப்படி சாத்தானாவார்?  ஆதிகாலங்களிலிருந்தே பாம்புகள் நமது கோவில்களில் வழிபடபட்டு வந்தவை.   குண்டலி சக்தியின் உயர்ந்த நிலையில் அதை தன்உச்சியில் நிலைநிறுத்தபட்டிருப்பதின் அறிகுறியாகத்தான் ஆதியோகி அதை தன் தலையருகில் இடம்கொடுத்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. ஒரு பயப்படும் ஜந்துவாக பார்க்காமல் அதன் சக்தியை உணரச்செய்ய எற்பட்டிருக்கும் ஒரு முயற்சிதான்  இது.
ஈஷா உறுப்பினர்களை “புனித பயணங்கள்” அழைத்து செல்லுகிறீர்கள். இதன் நோக்கம் என்ன?
ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள் எல்லோருக்கும்  இந்த பழம்பெரும் நாட்டின் புனிதம், சில இடங்களின் வலிமை புரிவதில்லை. அதற்காக இந்த நாட்டின் சக்தி நிறைந்த பிரதேசங்களுக்கு பயணம் செய்வதை ஒரு அனுபவமாக கொடுக்க தீர்மானித்தோம். முதலில் கைலாஷ்  என்று துவங்கி, இமயமலைபகுதி, என தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கு பயணங்கள் செய்கிறோம். இது ஒரு சுற்றுலா இல்லை. உடலை,வறுத்திக்கொண்டு செய்யும் பக்தி பயணமும் இல்லை. அந்த இடத்திற்கு சென்று அங்குள்ள சக்திகளை அதன் அதிர்வுகளை உணரசெய்ய ஒரு வாய்ப்பு. எங்கள் எதிர்பார்ப்புகளையல்லாம் தாண்டி அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். நிர்வகிப்பதிலுள்ள சிரமங்களினால் எல்லா விண்ணப்பங்களையும் ஏற்க இயலாது போகிறது.


இன்றைய இளைஞர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் இருப்பதை போல தோன்றுகிறது. இது உண்மையானால் ஏன்?
ஆன்மீகம் மட்டுமில்லை இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிலும் ஆர்வமும் ஒரு அவசரமும் காட்டுகிறார்கள். இது ஒரு நல்ல டிரண்டாக இருந்தாலும் அவர்களை நெறிபடுத்தி சரியான பாதையை காட்ட வே ஈஷா முயற்சிக்கிறது. அதற்காக தான் நாங்கள் அர்பணிப்புமிகுந்த ஆசிரியர்களை மிகுந்த கவனத்துடன்  உருவாக்குகிறோம்.
ஆன்மீக வகுப்புகளை தாண்டி சமூக அக்கறையுடன் பலவிஷயங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள்  இறுதி குறிக்கோள் தான் என்ன?
 ஈஷா குறிக்கோள்களுக்கு இறுதி என ஒரு வடிவம் கொடுத்துகொள்வதில்லை. எது எப்போது அவசியமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். இப்போது ஒரு லீடர்ஷிப் அகடெமி துவக்குவது பற்றி திட்டமிட்டுகொண்டிருக்கிறோம். நாட்டிலுள்ள பல மேனேஜ்மெண்ட் ஸ்கூல்கள் போல இல்லை இது. இப்போது சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பஞ்சாய்த்துகள் உதவிகுழுக்கள் போன்றவைகளில் தலமை வாய்ப்பு  எளியவர்களுக்கும் சாமன்யர்களுக்கும் உருவாக்க பட்டிருக்கிறது. இவர்களுக்கு அதை திறம்பட செய்ய கற்பிக்க பட வேண்டும். அதற்கான முறையான பயிற்சிகூடங்களை அமைக்க விரும்புகிறோம். அடுத்தபடியாக இன்று இந்திய  இளைஞர்கள் வேலைகிடைக்கும் ஒரே காரணத்தினால் ஐடி துறையில் தான் ஆர்வமாகயிருக்கிறார்கள். சயின்ஸ், கணிதம் படிக்க முன் வருவதில்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் நமக்கு பேஸிக் சயின்ஸ்  பற்றிய அறிவு இல்லாது ஒரு தலைமுறை உருவாகிவிடும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு டெக்னாலாஜி மட்டும் போதாது ”சயிண்டிபிக் டெம்பர்” அவசியமாக வேண்டும் இதை வளர்க்க குழந்தைகளையும், இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் மையங்கள் நிறுவ விரும்புகிறோம். பிராஜ்கெட் ரிபோர்ட்டும் புளுப்ரிண்ட்டும் ரெடியாகயிருக்கிறது. இதற்கு அரசு உதவியுடன் ஸ்பான்ஸ்ர்களை அணுக முயற்சித்துகொண்டிருக்கிறோம்.
ஈஷாவின் எல்லா முயற்சிகளைப்போல இதுவும் வெற்றிபெற கல்கி வாசகர்களின் சார்பில் வாழ்த்துக்கள்

ரொம்ப சந்தோஷம்

சந்திப்பும் படங்களும்

ரமணன்
கல்கி 29/12/13




17/12/13

குதிரை சொல்லும் கதை


இந்த ஆண்டு அமுத சுரபி தீபாவளி மலர் வெளியிட்டிருக்கும் எனது கட்டுரை 



சென்னை தீவுதிடலின் எதிரில் கடலை பார்த்து   சற்றே கழுத்தை  சாய்த்து கம்பீரமாக  தன்மீது வாளூடன்  அமர்ந்திருக்கும் ஒரு வீரனுடன்  கடந்த 175 ஆண்டுகளாக  நிற்கிறது. கிரேக்க பாணியில் வடிவமைக்கபட்ட அந்த குதிரை சிலை.  உலகில்  குதிரை மீது மனிதர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலைகள்  ஐந்து இடங்களில் மட்டுமே இருக்கிறது. மன்னர்களுக்கு மட்டுமே அளிக்கபட்ட இந்த கெளரவம்  இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னருக்கு அளிக்கபட்டிருக்கிறது,  அவர் தாமஸ் மன்றோ. இந்தியாவில் ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி, 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, நிர்வாகப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டவர் தாமஸ் மன்றோ.  தனது கடின உழைப்பால் முன்னேறி ஆளுனராக உயர்ந்தவர்.  1820 முதல் 1827 வரை சென்னை மாநில கவர்னாராகயிருந்தவர். தனது நேர்மையான நிர்வாகத்தால் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்த ஒரு சில ஆங்கிலேய அதிகாரிகளில் இவரும் ஒருவர் . இன்றுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதியும் திருப்பத்தூர் பகுதியும் ஒன்றாக  பாராமகால் என்று அறிய பட்டபகுதியில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, கலைக்டராக இருந்தவர். மாவட்டம் முழுவதும் குதிரையில் அலைந்து திரிந்து விவசாயிகளின் உண்மை நிலைமையை நேரடியாக அறிந்துகொண்ட மன்றோ. விவசாயிகளின் வரிச்சுமையை மாற்றி அமைக்க முற்பட்டவர்.தன் பதவிகாலம் முடிந்ததும் இங்கிலாந்து செல்லும் முன் தன்பணியாற்றிய கடப்பா பகுதியில் பயணம் செய்தபோது  1827ல் இறந்துபோனார். இவர்அந்த பகுதியிலிருக்கும் ராகவேந்திரர் சமாதியில் வழிபட்டபோது அவர் இவருக்கு காட்சி கொடுத்தாதாக அரசு குறிப்புகளில் பதிவாகியிருக்கிறது. இப்போதும், கடப்பாவில் உள்ள ஒரு அனுமார் கோயிலில் ராமர் சீதை படங்களுடன் தாமஸ் மன்றோவின் படமும் இருக்கிறது. அங்கே, தினமும் நடக்கும் பூஜையில் மன்றோ படத்துக்கும் தீபாராதனை காட்டப்படுகிறது.
மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த இந்த அதிகாரிக்கு  மக்களிடம் நன்கொடை பெற்று ஒரு சிலை வைக்கமுடிவு செய்யபட்டவுடன்  இங்கிலாந்தின் எஃப் சான்ட்ரீ என்ற புகழ்பெற்ற சிற்பி நியமிக்கபடுகிறார். மாடலுக்கான அரபிகுதிரையை  4ம் ஜார்ஜ்  மன்னரின் லாயத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணியை  செய்யத அந்த கலைஞன் சந்தித்த அடுத்த சவால் மன்றோவின் முழு உருவபடம் எதுமில்லாததினால்  கிடைத்த மார்பளவு படத்திலிருந்து  உருவாக்கவேண்டியிருந்தது
இந்த 6 டன் எடையுள்ள சிலை முதலில் பிளாஸ்ட் ஆப் பாரிஸ்ஸில் வடிவமைக்கபட்டு பின்னர் வெண்கலத்தில் வார்க்கபட்டிருக்கிறது. குதிரை, வால்பகுதி,  மன்றோவின்உருவம், வாள்இருக்கும்பகுதி என 5 தனிதனிப்பகுதிகளாக  கப்பலில் கொண்டுவரபட்டு  இங்கு இணைக்கபட்டிருக்கிறது.  அன்று சென்னையில் பெரிய அளவில் துறைமுகமேஇல்லாத  நிலையில் கப்பலிலிருந்து சிறுபடகுகளில் பகுதிகளாக கரைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 15 அடி சிலையை மேலும் கம்பீரமாக்க 25 அடியில் ஒரு பீடம் உள்ளூர் கலைஞர்களின் உதவியுடன்  செய்திருக்கிறது ஆங்கிலேய நிறுவனம்.



.இந்த சிலையை படைத்த சிற்பியிடம் ஏறி அமர்வதற்கு சேணத்திலிருந்து 

 தொங்கும் கால்வைக்கும் வளையங்கள் இல்லையே என அவரது சிறுவயது

 மகன் கேட்டதால் தற்கொலை செய்துகொண்டுவிட்டாதாக  சொல்லப்படுவது

 ஒரு வளமான கற்பனை கதை என்கிறார் வி. ஸ்ரீராம். இவர் சென்னை நகரின்

பாரம்பரியத்தை பற்றி ஆராயந்து கட்டுரைகள் எழுதியிருப்பவர். படைத்த

 சிற்பி சான்ட்ரீ பல ஆண்டுகளுக்கு பின்னர் இதய நோயால் இறந்ததற்கான

குறிப்புகள் இருக்கின்றன என்கிறார் இவர். செம்மொழி மாநாட்டிற்கு முன்

  ஆங்கிலேயர்களின் பெயரில் இருந்த தெருக்களை மாற்றியபோது இந்த

சிலையையும் எடுக்க தீர்மானித்திருந்த அரசின் முடிவு எதனாலோ

 கைவிடபட்டது


 40 ஆண்டுகாலம் உதவிகலைக்டெர் முதல் கவர்னர் வரை நேர்மையாக ஊழல்புரியாத அதிகாரியாக பணியாற்றிய தாம்ஸ் மன்றோ அன்றைய ஆட்சியில் துளிர்விட  துவங்கிய லஞ்சம் பற்றி 1795ல்  எழுதிய குறிப்பு இது

  இந்தியாவின் வறுமைக்கு முக்கியக் காரணம், அரசு இயந்திரத்தின் நிர்வாகக் குளறுபடிகளே. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே முறைகேடான செயல்களுக்கு துணை நின்றால், அவரால் எப்படி ஒரு நேர்மையான நிர்வாகத்தை நடத்த முடியும் "கலெக்டர்கள் தாங்கள் பதவிக்கு வந்து சில ஆண்டுகளிலேயே சொத்துகளைக் குவித்துவிடுகிறார்கள். வருவாய்க்கு மேல் டாம்பீகமாகச் செலவு செய்கிறார்கள். நாட்டைச் சுரண்டும் கலெக்டர் (அன்றைக்கு அமைச்சர்கள் கிடையாது; கலெக்டர்கள்தான் ஆட்சியாளர்கள்) நாடு  எப்படி முன்னேறும்?

 மூதறிஞர் ராஜாஜி பதவிஏற்கும் முன் தன்னை சந்திக்கவரும் இளம்

அதிகாரிகளுக்கு  நிர்வாகத்தில் மன்றோவின் அணுகுமுறை பற்றி படிக்க

 சொல்லுவாராம்.

பொதுவாழ்வில் தூய்மைக்கும்  நிர்வாகத்தில் நேர்மைக்கும்   குரல் கொடுத்த

முதல் மனிதன்  இவர் என அறியும்போது மக்கள் வரிப் பணத்தில் இல்லாமல்

 நன்கொடைகள் மூலம் எழுப்பபட்ட இந்த சிலை இன்னும்  கம்பீரமாக

தெரிகிறது.



11/12/13

111213


11, 12,13
 இந்த தேதியை இன்னும் 100 ஆண்டுகள் கழித்துதான் எழுத முடியும்.

இந்த முறை என்ன செய்ய போகீறீர்கள்?  I am waiting to see your new document, முடிவு பண்ணிட்டீங்களா?   கல்வெட்டு ஐடியா என்ன வாயிற்று? இப்படி பல கேள்விகள் ,மெயில்கள்


கடந்த ஆண்டுகளில் இப்படி பட்ட வினோதமான டேட்களை பதிவு செய்ய வங்கி வாழ்க்கையில் உருவாக்கிய முக்கிய ஆவணங்கள், முக்கிய அறிவிப்புகள், போன்றவகைகளை  மறக்காத நணபர்கள் கேட்டுகொண்டே இருந்தார்கள். புதிதாக ஏதுவும் தோன்றவில்லை.

சுவடுகளை  இந்த தேதியில் என்  பேஸ்புக்கில் இணைத்துவிடலாமா அல்லது ஒரு இனைப்பை  கொடுக்கலாமா? என யோசிக்கிறேன்.  விரைவில் விபரம் அறிவிப்பேன்
131211

10/12/13

சபாஷ் சுஜாதா !

இதாண்டா போலீஸ் 


பரபரப்பான மும்பாய் நகரின் சயான் பகுதியின் முக்கிய வீதி.   முந்திய கார்களின் பம்பரை தொட்டு முண்டிக்கொண்டிருக்கும் நெருக்கமான  டிராபிக். வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு கார்  வேகம் தணிந்து மெதுவாக ஒதுங்கி   நிற்கிறது, பின்னல் வரும் வாகனங்களுக்கு இடைஞ்சலாக நிற்கும்  அந்த காரைக்கண்டு  எரிச்சல் அடைந்த  போக்குவரத்து போலீஸ்கார்   நெருங்கி பார்த்ததும் அதிர்ச்சியடைகிறார். காரை ஓட்டி வந்தவர்  ஸ்டியரிங்கில் சாய்ந்து கிடக்கிறார். உடல் முழுவதும் வேர்வையினால் நனைந்திருக்கிறது. மனிதருக்கு மாரடைப்பு என்பதை புரிந்து கொள்கிறார். உடனே அருகில் இருக்கும் சிக்கனிலில் பணியிலிருக்கும்தன்  இன்ஸ்பெக்டர் சுஜாதாவிற்கு தனது வாக்கி டாக்கி மூலம் தகவல் தருகிறார்.கான்ஸ்டபிள்  குமார்தத் அடுத்த நிமிடம் அங்கு வந்த சுஜாதா, கன்ட்ரோல் ரூமுக்கு சொல்லி, லீலாவதி ஆஸ்பத்திரி வரையில் சாலையில் போக்குவரத்தை ஓரமாக தள்ளுமாறும் சிக்னல்களை பச்சையில் நிறுத்தி வைக்குமாறும் வேகமாக உத்தரவுகள் பிறப்பிக்கிறார்.. சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி, ஆஸ்பத்திரி வரை அந்த காரை ஓட்டி வருமாறு  அதன் டிரைவரை கேட்டுக் கொள்கிறார்.  அந்த காரில் வந்த மாரடைப்பால் தாக்கபட்டிருப்பவரை   பத்திரமாக  அணைத்து பிடித்து,  அவர் மார்பை மசாஜ் செய்தபடி வருமாறு கான்ஸ்டபிளுக்கு கட்டளையிடுகிறார்.

  தனது போலிஸ்ரோந்து காரை  முன்னால் வேகமாக  செலுத்தி வழி ஏற்படுத்திய படி 12 நிமிடங்களில் ஆஸ்பத்திரியை அடைகிறார். போகும்போதே இவர் கண்ட்ரோல் மூலம் சொன்ன தகவலினால் தயாராகயிருந்த டாக்டர்கள் சிகிச்சையை துவக்குகின்றனர்..  காரில் இருந்தவரின்  பிஸினஸ் கார்டை பார்த்து அவர் வீட்டிற்கு தகவல் கொடுத்திருந்தனால் அவரின் மனைவியும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டிருந்தார்.  
அந்த மனிதர் உயிர் பிழைத்து கொண்டார்.
அவர் இந்திய முன்னாள் கிரிகெட் வீர்ர் வினோத் காம்ப்ளி.
அடாவடி, அத்துமீறல், அற்பமான கையேந்தல், அதிகாரத்துக்கு அடிபணிதல்,பிரச்சனைகள் வரும்போது மேல் அதிகாரிகள் சொன்னால் மட்டுமே செயல் படுவது என்ற போலீஸ் அதிகாரிகளிடையே,  மாறுபட்டு சமயோசிதமாக மின்னல் வேகத்தில் இயங்கிய பெண்போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா. இவருக்கு ஒரு சபாஷ் சொன்னால என்ன?
 இவரைபோல  எல்லா போலீஸ் அதிகாரிகள் இருந்தால் இந்தியா எப்படி இருக்கும்? 

ரமணன்


8/11/13

இந்த ஆண்டு கல்கி திபாவளி மலர் எனது 3 கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இது அதில் ஒன்று. 














தமிழால் பெருமை பெற்ற ஜப்பானியர்.

 ஆதித்யா

இந்திய அரசின் உயர்ந்த கெளரவமான பத்ம விருதுகள் குடியரசு தலைவரால்  டில்லி ராஷ்டிரபதி பவனத்தில் மட்டுமே வழங்கப்படும். இது ஒரு சில வெளி நாட்டவருக்கும் வழங்கபட்டிருக்கிறது.   இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கபட்ட ஜப்பானியர் ஒருவர்   உடல் நல குறைவினால் விருதுவழங்கும் விழாவில் பங்கேற்க இயலவில்லை.  நம் பிரதமர் மன்மோகன் சிங்  தனது ஜப்பான் பயணத்தின் போது  இந்திய குடியரசு தலைவர் சார்பாக .பத்ம ஸ்ரீ விருதை அவருக்கு வழங்கினார். அவர் திரு. நொபொரு கராஷிமா  (Noboru Karashima). நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் சார்பாக வெளிநாட்டில் நேரில் ஒருவருக்கு விருது வழங்குவது இதுதான் முதல் முறை. இத்தகைய விசேஷ கெளரவத்தை பெற்ற  திரு நொபொரு கராஷிமா  ஒரு ஜப்பானிய வரலாற்றாசிரியர்.  எழுத்தாளரும் கூட. தமிழ் நாட்டுக்கு வந்து சென்னை பல்கலைகழகத்தில் தமிழும், கல்வெட்டு ஆராய்சிகலையையும் பயின்று பட்டம் பெற்றவர்.  இலக்கண சுத்தமாக தமிழ் எழுத,படிக்க பேச தெரிந்தவர்.  தென் இந்திய சரித்திரத்தை ஆராய்ந்து பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். தெனிந்திய கல்வெட்டுகளின் ஆராய்ச்சிகளில் வல்லுனராக மதிக்கபடுபவர்.  1964ல் டோக்கியோ பல்கலை கழகத்தில் சேர்ந்த இவர் 1974ல் அதன் தெற்காசிய வரலாற்று துறையின் தலவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர்.  இன்றும் டோக்கியோ பல்கலை கழகத்தில் கெளரவ சிறப்பு பேராசரியராக தன் ஆராய்ச்சிபணிகளை தொடர்ந்து கொண்டிருக்கும் இவருக்கு வயது 80. நொபொருகராஷிமா சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்(IATR) முன்னாள் தலைவர்,1985ல் தஞ்சாவூரில் 8 வது உலக தமிழ் மாநாட்டை தலைமையேற்று நடத்தியவர். இவரது கல்வி சேவைக்காகவும் தமிழ் பணிக்காவும் பத்மஸ்ரீ வழங்கபட்டிருக்கிறது. அவருடன் உரையாடியபோது..  
பத்மஸ்ரீ  விருது பெற்றதற்காக கல்கியின் வாழ்த்துக்கள். விருதைப் பெற்றபோது  எப்படி உணர்ந்தீர்கள் ?
மிகமிக மகழ்ச்சியடைந்தேன். உடல்நிலை ஒத்துழைக்காததால் டெல்லி போகமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதை பாரத பிரதமர் கையால் என் நாட்டிலேயே பெற்றதை மிகப்பெரிய கெளவரமாக, நான் பெற்ற விருதுகளிலேயே  இதை மிக அறிதானதாக  கருதுகிறேன்.  இது தமிழ் மொழியினால் எனக்கு கிடைத்த பெருமை. இந்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றியை  பதிவு செய்ய விரும்புகிறேன்.

சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின்   துவக்க காலத்திலிருந்தே  உலக தமிழ் மாநாடுகளில் பங்கேற்று  தமிழுக்காக நல்ல பணிகளை செய்துவந்த நீங்கள் ஏன்  கோவையில் 2010ல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை புறக்கணித்தீர்கள் ?
புறகணிப்பு என சொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. உலக தமிழ் மாநாடுகள்  சரியாக திட்டமிடபட்டு ஆராயச்சியாளார்கள் கட்டுரைகள் தயாரிக்க  ஒராண்டாவது கால அவகாசம் அளிக்க பட்டபின்னரே நடத்தபடவேண்டும் என்பது  சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் கொள்கை. கோவையில் நடந்த  மாநாடு  மிக அவசரமாக  திட்டமிடபட்டு ஒரு அரசியல் நிகழ்ச்சியாக நடத்தபட்டதில் எனக்கு உடன்பாடில்லை.  அதிக அவகாசம் தர இயலாதற்கு  தேர்தல் ஒரு காரணமாக சொல்லபட்டது. ஒரு சர்வதேச ஆராய்ச்சி நிருவனம் இதெற்கெல்லாம் அப்பாற்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.  இது பற்றி மிக விளக்கமாக அந்த கால்கட்டத்திலேயே இந்து நாளிதழுக்கு ஒரு பேட்டி அளித்து விளக்கியிருக்கிறேன்.. சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின்  நிர்வாக குழு உறுப்பினர்களிடையே இது குறித்து கருத்து ஒற்றுமை இல்லாதாதால் நான் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டேன்.  ஆராய்ச்சிகழகத்தின் முக்கிய குறிக்கோளான தமிழ் மொழிக்கு சர்வதேச அந்தஸ்த்து அளிக்கபடவேண்டும்  என்பது   நன்கு  உணரப்பட்ட நிலை  இன்று ஏற்பட்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.  இப்போது சர்வ தேச தமிழ் ஆராய்ச்சி கழகம் புதிய தலவர்களின் தலைமையில் புதிய அவதாரம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

இன்றைய இளம் தலைமுறையினர், உங்களைபோல ஒரு மொழியின், அதன் சமூக சார்ந்த சரித்திரத்தை ஆராய்ச்சி செய்வதில் நாட்டம் கொள்கிறார்களா?

 ஆர்வம் குறைந்து வருவது உண்மையாக இருக்கலாம் ஆனால் அறேவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது. நல்ல ஆசிரியர்களின் பல்கலைகழகங்களின் அரசின் ஆதரவு இல்லாமல் இதைச் செய்யமுடியாது. 1961ல் நான் மெட்ராஸ் யூனிவர்ஸிட்டியில் தொல்லியல் மாணவனாக சேர்ந்த போது நீலகண்ட சாஸ்த்திரி, வெங்கட்டரமணய்யா போன்ற மேதைகள் தங்கள் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்துகொண்டு எங்களுக்கும் கற்பித்தார்கள். இன்று அத்தகையவர்கள் இல்லை. பல்கலைகழகங்களும் இதை இன்னும் ஒரு  ”பாடமாக” தான் மதிக்க துவங்கிவிட்டார்கள். ஆராய்ச்சியாளர்களை அரசாங்கள் கெளரவித்தால் சமூகத்தில் அவர்களின் மதிப்பு உயரும்.

இப்போது மொழி வளர்ச்சிக்காக பல ஆராய்ச்சி நிறுவனங்கள், தனிபல்கலைகழங்கள் அரசின் உதவியுடன் துவங்க பட்டிருக்கின்றனவே. ?
இருக்கலாம். ஆனால் அவைகளின் விசித்திரமான நிலை எனக்கு ஆச்சரியமளிக்கிறது. பணம் ஒதுக்கி ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி அதற்கு ஒரு ஐ ஏ ஸ் அதிகாரி நியமிக்க படுகிறார், இந்திய தொல் பொருள் துறையின் தலைவராக நியமிக்க படுபவர்களுக்கு கல்வெட்டுக்களின் மொழியை  படிக்க தெரியாது. அதேபோல் மாநில தொல்பொருள் ஆராய்சி நிறுவனங்களிலும்  தலமை நிர்வாகிகள் அதுபற்றி அறியாமல் இருப்பது துரதிர்ஷ்டமே. கல்வெட்டு எழுத்துகளை ஆராய்ந்து நகல் எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டிருக்கும்  குறிப்புகளிலிருந்துதான் இன்று பலர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது வருத்த்ததிற்குரிய விஷயம். சமீபத்தில் தமிழ் பலகலை கழகம் தொல்பொருள் துறையினருடன் இணைந்து கல்வெட்டுகளின் டிஜிட்டல் பதிவுகளை மைசூர் ”மொழியில் கழகத்தில்” சேமிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நல்ல பணி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றிகரமாக  தொடர வேண்டும்.

வரும் தலைமுறையில் தமிழ் மொழி படிப்பவர்களும்,எழுதுபவர்களும் குறைந்துவருவதால்   மொழியே அழிந்துவிடும் என்ற அபாயம் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறதே?
அரசாங்களின் அணுகு முறையினால், கல்விமுறைகளினால் தாய்மொழியின் பயன்பாடு குறைந்து வருவது உலகின் பல பழைய மொழிகள் சந்திக்கும் ஒரு பிரச்சினை. ஆசிரியர்களும் குறிப்பாக பெற்றோர்களும் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷயம் இது. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் பயன்பாட்டிலிருக்கும் ஒரு மொழி அழிந்து போய்விடும் என்பதை ஏற்பதிற்கில்லை.  ஒரு நாட்டின் பாரம்பரியங்களும் கலாசாரங்களும் பல தலமுறைகளாக தொடர்வது போல மொழியும் தொடர்ந்து வளர்ந்து செழிக்கும், அதுவும் நிச்சியமாக தமிழ் மொழி நீடித்து நிலைத்து நிற்கும் என நான் நமபுகிறேன்.
நேரம் ஒதுக்கியதற்கு நன்றி
நன்றி  விழா நாள் வாழ்த்துகள்
 








1/11/13

சூதாடுங்கள் சொர்க்கம் போகலாம்

இந்த ஆண்டு கல்கி திபாவளி மலர் எனது 3 கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இது சொர்க்கம் போக வழிகாட்டுகிறது. 


பளிரென்ற மின்விளக்குகளின் வெளிச்சம் பரவியிருக்கும் அந்த பிரமாண்டமான அரங்கத்தில் குறைந்தது ஒரு 500 பேராவது இருப்பார்கள்.காலடியில் மெத்தென்ற கார்ப்பெட்கண்ணில் படும் கலைநயம் ததும்பும் சுவர் அலங்காரங்கள்இதமான எர்கண்டிஷன்சுகமான மெல்லிய இசை என ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் ஆடம்பரம்.  அரங்கம் முழுவதும் விதவிதமான சூதாட்டமிஷின்கள்பெரிய வட்ட மேஜைகளில்(roulette table) எண்கள் சுழலும் சக்கரத்தின் எதிர்புறம் ஓடிகொண்டிருக்கும் பந்து எந்த எண்ணில்  நிற்கப்போகிறது என்பதைக்காண ஆவலுடன் காத்திருப்பவர்கள்பச்சை வெல்வெட்  பதித்திருக்கும் பெரிய நீண்ட சதுர மேஜைகளைச் சுற்றி கைகளில் சீட்டாட்ட கார்டுகளுடன் கவனமாக ஆடிக்கொண்டிருப்பவர்கள் என நிறையப் பேர்.  இளைஞர்களும் வயதானவர்களும் பரபரப்பாக இயங்கிகொண்டிருகிறார்கள்

அமெரிக்காவிலுள்ள “உலக கேளிக்கைகளின் தலைநகரம்” என வர்ணிக்கபடும் லாஸ்வேகாஸ்  நகரிலுள்ள MGM கிராண்ட் என்ற ஆடம்பர ஹோட்டலின் தரைதளத்திலிருக்கும் காஸினோவிலிருக்கிறோம். இந்த காசஸினோவில் சூதாட்ட களங்களைத்தவிர உலகின் பல நாடுகளின் உணவு வகைகளும் கிடைக்கும் ரெஸ்ட்ரொண்ட்களும் நிறைய. நம்ம ஊர் சமாச்சாரங்கள் கிடைக்குமா என தேடிமெல்ல நடந்துகொண்டிருக்கும் நாம் அந்த காட்சியைக்கண்டு அதிர்ந்து நிற்கிறோம். ஓரு கண்ணாடிக்கூண்டில் நடமாடிக் கொண்டிருக்கும் சிங்கங்கள்! 1.5 அங்குல கனமேயிருக்கும் அந்த கண்ணாடிச்சுவர்களுக்குபின் செயற்கயாக அமைக்கபட்ட பாறைகளுக்கும்,அருவிக்கும்குகைகளுக்கும் இடையே பயிற்சியாளார்களுடன் ஒடி விளயாடிக்கொண்டிருக்கும்  6 பெரிய சிங்ககள்! கண்ணாடிச் சுவர்களின் வெளியேயிருக்கும் ஸ்டீரியோ ஸ்பிக்கரில் அவ்வப்போது அவைகளின் உறுமல் சத்தம். கண்ணாடி சுவற்றில் முகம் பதித்து சிங்கங்களைப் பார்க்கும் குழந்தைகள். அவற்றை அருகில் வந்து பார்க்கும் சிங்கங்கள். இரண்டு கண்ணாடிஅறைகளையும் பாலமாக இணைத்திருக்கும் ஒரு உருளை வடிவ கண்ணாடி பாதையின் வழியாக அனாசியமாக நடந்துபோகும் சிங்கங்களை  அந்த கண்னாடிப்பாலத்தினடியில்  நிற்பவர்கள் அண்ணாந்து  சிங்கங்களின் பாதங்களைப் பார்த்து கொண்டிருப்பவர்கள். நாம் பயத்திலிருந்து விடுபட்டு அருகில்போய் பார்க்க சில நிமிடங்களாகின்றன. ஒரு சூதாட்டவிடுதியில் இவ்வளவு அருகில் சிங்கங்களிருப்படைவிட ஆச்சரியம்அதைப்பற்றி எந்த பயமும் இல்லாமல் கருமமே கண்ணாயிரமாக சூதாடிக்கொண்டிருப்பவர்கள் தான்
இங்கு ஏன் சிங்கங்கள்?
MGM என்பது புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட்ட நிறுவனம்.  அவர்களது கம்பெனியின் இலச்சினையாக உறுமும் சிங்கம்  ஒவ்வொரு படத்தின் துவக்கத்திலும் காட்டப்படும். நாளடைவில் MGM என்று சொன்னாலே சிங்கம் என்ற அளவிற்கு அவர்களது அடையாளாமகிவிட்டது. சினிமாத்தொழிலைவிட்டு  வந்து இன்று இப்படி பெரிய ஆடம்பரஹோட்டல்களை நடத்திக்கொண்டிருந்தாலும் சிங்கத்தை விடவில்லை. இங்கு உயிரோடு சிங்கங்களை விளயாடவிட்டு வேடிக்கை காட்டுகிறார்கள்.  இதற்ககாவே  25கீமீ தொலைவில் ஒரு பண்ணையில் 31 சிங்கங்களை வளர்க்கிறார்கள்.அவர்களுக்கு பயிற்சியளித்து ஓவ்வொரு மணி நேரத்திற்கும் சிங்கங்கள் என ஷிப்டில் இங்கு அழைத்துவருகிறார்கள். மிக மிக அருகில் கண்ணாடி வழியே மிருக ராஜனை பார்ப்பது ஒரு வினோத அனுபமாகயிருந்தாலும்இந்த கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே வந்தால்... . என்ற எண்ணமே நம்மை நடுங்கச்செய்கிறது.  30 தளங்களும் 6000அறைகளும் கொண்ட அந்த பிரம்மாண்ட ஹோட்டலை விட்டு வெளியே வந்தால் அருகில்  45அடிஉயரத்தில் 50டன் எடையில்  தங்க வண்ணத்தில் ஒரு சிங்க சிலை இது முதலில் நுழைவாயிலில் தான் இருந்ததாம். சூதாடவரும் சீனர்கள். பெங்ஃஷுயி வாஸ்து படி சிங்கத்தைபார்த்துவிட்டு சூதாடினால் தோற்றுவிடுவோம் என்பதால் இந்த காஸினோவை தவிர்க்க ஆரம்பித்ததால்நிர்வாகம் சிலையை மாற்றி பக்கத்தில் வைத்துவிட்டது. வாஸ்துவின் பலன் சூதாடுபவர்களுக்கு எப்படியோ, MGMக்கு கிடைத்த பலன் ஆடிக்கொண்டிருக்கும் கூட்டதைப்பார்தால் தெரிகிறது.


கிருஷ்ண ஜயந்தியன்று கண்ணன் பிறந்த நேரத்தில் சூதாடினால் நிறையஜெயிக்கலாம் எனற எண்ணம் நம் குஜராத்தியர்களிடம் வேகமாக பரவிவருகிறது. இந்த ஆண்டு அதற்காவே ஏற்படுத்தபட்ட பேக்கேஜ் குருப் டூர்களில் நுற்றுகணக்கானோர் லாஸ்வேகாஸ் நகருக்கு பயணித்திருக்கிறார்கள்.
இந்குள்ள ஹோட்டல்கள் ஒவ்வொன்றும்  ஒவ்வொரு நாட்டின் ஸ்டைலில் அமைத்திருக்கிறார்கள். பிரமிட் வடிவ நுழைவாயில் உள்ள ஹோட்டலிண் உள்ளே அறைகள்அரங்கங்களின் அமைப்புகள் உள் அலங்காரங்கள்  முழுவதும் எகிப்திய கலாசார பாணியில்.இதைப்போல வெனிஸ் ஹோட்டலில் அறைகளுக்குப்போக படகுகள். ஸீஸர் என பெயரிடப்பட்டிருக்கும் ஹோட்டலின் நுழைவாயிலில் மன்னர் சீஸரின் சிலை.கிரேக்க பாணி  கோட்டை வடிவில் ஹோட்டலின்  அமைப்பு. ஒரு ஹோட்டலில் ஓசையுடன் அலை எழும்புமும் கடலையும்வெண்மணல் பீச்சையும் கூட நிறுவியிருக்கிறார்கள் “நியுயார்க் நியுயார்க்” என்ற ஹோட்டலின் முகப்பில்நியுயார்க் நகரில் இருக்கும் லிபர்டி சிலைபாலங்கள்எம்ப்யர்ஸ்டேட் கட்டிடம் என குட்டி நியூயார்க்கே நிற்கிறது. பாரிஸீன் ஈஃபில் டவரையே நிறுவி அதன் மாடியில் ஓரு ஹோட்டல். ஆடம்பர ஹோட்டல்கள்  எல்லாவற்றிலும் முதல் தளம்  முழுவதும் காஸினோநைட்கிளப்உணவு விடுதிகள் என நிறைந்திருக்கிறது. ஓவ்வொன்றிலும் MGMலிருக்கும் கண்ணாடி சிங்கங்களின் கூண்டுகளைப் போலபெரிய டால்பின்மீன்கள் காட்சிசர்க்கஸ்பாலே நடனம்  மாஜிக் என எதாவது ஒரு பிரமிக்கவைக்கும் காட்சி. சில வற்றிருக்கு கட்டணம். பல இலவசம். இந்த ஹோட்டல்களை இணைத்து ஒடிக்கொண்டிருக்கும் ஒரு மோனோ ரயில். காசினோக்களுக்கு,  மாறி,மாறிப்போய் நாள்முழுவதும் சூதாடிக்கொண்டிருக்கிறார்கள் சூதாடும் கிளப்புகளில் முன்போல  பணத்திற்கு பதில் டோக்கன் என்ற  சிஸ்டம் கிடையாது. முதலில் கட்டிய பணத்திற்கு அல்லது பாங்க்கிலிருந்து மாற்றிய பணத்திற்கு  கிரிடிட் கார்டு போல ஒரு பிளாஸ்டிக் கார்டு தருகிறார்கள். அதை மிஷினில் சொருகிவிட்டு ஆடவேண்டும்.,தோற்றால் கார்டிலிள்ள பணம் குறையும் வெற்றி பெற்றால் நிறையும் . கணக்கை அருகிலுள்ள சின்னத் திரை காட்டுகிறது. சிலர் ஜாக்கிரதையாக கார்டை சங்கலியுடன் இடுப்பில் இணைத்திருக்கிகிறார்கள்.
ஹோட்டல்களின் முகப்பில் மட்டுமில்லமல் ஓவ்வொரு விஷயத்திலும் அந்த ஹோட்டலின் தீமை(theme) கவனத்துடன் நினைவூட்டுகிறார்கள். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பெயர் “எக்ஸ்காலிபர்”  (Excalibur)              (12 நூற்றாண்டின் மன்னர் ஆர்தரின் புகழ்பெற்ற போர் வாளின் பெயர்) ஹோட்டல் கோட்டை வடிவில். அறைகளின் உள் அலங்காரங்கள் ஒரு அரண்மணையைப்போல். அரண்மணை சேவர் உடையில் பணியாளார்கள்.வெளியே சென்று திரும்பிய நம்மை “மன்னர் ஆர்தர் தங்கள் அறையை சுத்தம் செய்ய இயலாதற்காக மன்னிப்பை கோருகிறார். படுக்கையில் நீங்கள் சில பொருட்களை வைத்திருந்தால் இயலவில்லை.   வந்ததும் தொடர்பு கொள்ளவும். காத்திருக்கிறோம்”’ என்ற  படுக்கையிலிருக்கும் குறிப்பு நம்மை  வரவேற்கிறது. உலகிலேயே அதிக ஹோட்டல் களிருக்கும் நகரம் இது தான் என்பதும் மொத்த  ஹோட்டல் அறைகள்1,40,000 என்ற தகவல் நம்மைப் பிரமிக்கச்செய்கிறது. கடந்த ஆண்டின் பொருளாதார விழ்ச்சியில் சரிந்த பிஸினசை  “3 நாள் வாடகையில் நாள் தங்குங்கள்” என அதிரடி தள்ளுபடிகள் அறிவித்து சமாளித்துகொண்டிருக்கிறார்கள்..
(100-ஹோட்டல்களுக்குமேல் அமைந்திருக்கும் “ஸ்ட்ரிப்” என அழைக்கப்படும் அந்த பெரிய வீதியில்  மாலை நேரத்தில் நடந்துகொண்டிருக்கிறோம். ‘லால் வேகாஸ் வெல்கம்ஸ் யூ’ (ப1)என்ற அந்த போர்டை எல்லோரும் படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். லாரிஓட்டுனர்களுக்கும்,தொழிலாளர்களுக்கமாக.தோன்றியமதுக்கடைகளும்,சூதாட்டகிளப்புகளுமாகயிருந்த இடம் லாஸ்வேகாஸ் என்ற பெயரில் 1931ல்  நகரமாக பிறந்த போது இந்த இடத்தில்  எழுந்த இந்த போர்டு இன்றும் அதே இடத்தில்  அதே வார்த்தைகளுடன் புதுபிக்கபட்டுக்கொண்டிருக்கிறது என்று அறிகிறோம். அந்த பகுதியில் பல சர்ச்கள். அதன் முன்னால்  லைசன்ஸ்டுன் ஒரு மணி நேரத்தில் திருமணம் செய்துவிக்கபடும் என கட்டண விவரத்துடன் போர்ட்கள். காரைவிட்டு இறங்காமலே கல்யானம் செய்துகொள்ள டிரைவின் சர்ச் கூட இருக்கிறது. ஆச்சரியபட்டு உள்ளே போய் விசாரித்தால்  ”சும்மா தேனிநிலவு தம்பதிகளின் ஜாலிக்காக” என்கிறார்கள். சர்ச் பெயரில் கூடவா பிஸினஸ்? என தோன்றிற்று.
மெல்ல இரவு பரவுகிறது. சட்டென்று வீதி முழுவதும்  வர்ண ஜாலமாக ஒளிவெள்ளம்நகரும் பிரமாண்ட  நியான் விளம்பரங்கள் தொலைவில் சரவிளக்கில் மின்னும் பாரீஸின் ஈபில் டவர்அருகில் மெல்லிய பச்சை விளக்கில் லிபர்டி சிலை தெரு முழுவதும் தொடர்ந்து ஒலிக்கும் இசை,இவற்றையெல்லாம் ரசிப்பதற்காகவே நடக்கும் மக்களுடன் நாம்.. ஒரு புதிய உலகத்திலிருகிறோம்
வீதியின் முனையில் ஒரு பிரமாண்ட ஹோட்டலின் முன் இசை மேதை பித்தாவோனின் இசைக்கு எற்ப நடனமாடும்மிகப்பெரிய  நீருற்று.  சுற்றும் இருள் சூழ்ந்த சூழலலில் பிரகாசமான ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப வளைந்து நெளிந்து உயர்ந்து தாழ்ந்துபக்கவாட்டில் ஆடி,ஓடி குருப் நடன கலஞர்களைப் போல பலவாக  அணிவகுத்து  ஆடி  இறுதியில் இசை ஓங்கி ஒலிக்கும்போது  உயரமான ஒற்றை நீருற்றாக  அந்த ஹோட்டல் கட்டிட உயரத்திற்கு உயரும் அந்தவினாடியில் ஹோட்டல் முகப்பு முழுவதும் பளிரென்று  விளக்குகள் முழித்துக்கொண்டவுடன் சட்டென்று ஓய்கிறது அந்த நடனம்ஒலிக்கிது கரகோஷம். ஒரு அரங்கத்தில் ஆடி முடித்த நடன கலைஞர்களை கெளரவிப்பது போல சூழ்ந்திருக்கும் அத்துனைபேரையும் கைதட்டவைக்கிறது..அந்த காட்சி. பலர் நகர மனமில்லாமல் துவங்கப்போகும் அடுத்த காட்சிக்காக காத்திருக்கிறார்கள்நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் வீசும் மெல்லிய காற்றின் இதத்தோடு நடந்து அறைக்குத்திரும்பிக்கொண்டிருக்கிறோம். பெரியசத்தத்துடன்பொங்கிவழியும்எரிமலை,மிதக்கும்கப்பலில்சுட்டுக்கொள்ளும் கடற்கொள்ளைக்காரர்கள்வேகமாக சுழலும் முன் சக்கரத்துடன் நிற்கும் பிரமாண்டமான மோட்டர் சைக்கிள் என அட்டகாசமான முகப்பு காட்சிகளுடன் நியான் விளக்களில் வினோதமான பெயர்களில் நம்மை அழைக்கும் பார்கள். “எங்கள் காஸினோவில் விளயாடிவிட்டு எங்களது 44 வது மாடிக்கு வாருங்கள் வானில் தெரியும் நட்சத்திரங்களையும்,கிழே தெரியும் நீருற்று நடனத்தையும் சேர்ந்து பார்த்துகொண்டே,  உணவு அருந்தும்போது சொர்கத்தை உணர்வீர்கள்” (ப 28)என்ற வாசகம் கண்ணில் படுகிறது. சூதாட்டம்,மதுக்கடை,இரவுவிடுதி போன்ற பாவசெயல்களால் நிரம்பி வழியும் இந்த பாவ நகரில்(SIN CITY) சொர்க்கத்தை உணரச்செய்யும் இவர்களது புத்துசாலித்தானமான மார்க்கெட்டிங் டெக்னிக்கை  வியந்துகொண்டே அறைக்கு திரும்புகிறோம்.
-படங்கள் குகன், ரமணன் 
கட்டுரைக்கான படங்கள்  இந்த ஷோவில்