24/8/17

“நீங்களும் ஜெயிக்கலாம்”-- மின் புத்தகம்

எனது “நீங்களும் ஜெயிக்கலாம்” புத்தகத்தை Free tamilbooks com மின்னூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
 நண்பர் திரு. அன்வருக்கும் திரு, ஶ்ரீநினிவாசனுக்கும் நன்றி. இரண்டு நாட்களில் தரவிறப்பட்டிருக்கும் எண்ணிக்கை 1000 நெருங்குகிறது என்ற விஷயம் மகிழ்ச்சியாகயிருக்கிறது. நீங்களும் இந்த சுட்டியின் மூலம் தரவிறக்கி படித்துப் பாருங்களேன். உங்கள் கணணி, போன்களுக்கு ஏற்ப தரவிறக்கம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

http://freetamilebooks.com/ebooks/neengalum-jeyikkalam/



புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து...
சிறிய அளவில் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவக்கி வெற்றிபெற வேண்டும் என்பது உங்கள் கனவா?
ஆனால் கூடவே என்னால் இது முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறதா?
வெற்றி பெற்றவர்களுக்கு தெரிந்த அந்தச் சூத்திரத்தை யாராவது நமக்குச் சொல்லுவார்களா?
அப்படியே அதைத் தெரிந்துகொண்டாலும் அது எனக்கு பயன் தருமா?
போன்ற தொடர் கேள்விகளால் தயங்கி நிற்கிறீர்களா?
உங்கள் தயக்கங்களை தகர்த்தெறியும் இந்தப் புத்தகம் ஒரு தொழிலை துவக்க விரும்புவர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய முறைகள் போன்றவற்றோடு ஒரு தொழிலை துவக்கி அதை வளர்க்க இருக்கும் வாய்ப்புகள், அதனைப் பயன் படுத்திக்கொள்ளும் வழிகள், முயன்று வெற்றி பெற்றவர்கள், அப்படி முடியாமற் போனவர்கள் கையாண்ட வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து நீங்களும் ஜெயிக்க வழிகளைச் சொல்லுகிறது.
சுருக்கமாகச் சொன்னால் இந்தப் புத்தகம் வெற்றியின் கையேடு. 
பக்கங்களைப் புரட்டப் புரட்ட உங்கள் அரண்மனையின் வாசல்கள் திறப்பதை நீங்கள் உணரமுடியும் !

4/8/17

ஜெயமோகனின் வலைப்பூவில் கடைசிக்கோடு



......ஒரு வாசகனாக கையில் கிடைக்கும் எதையும் வாசித்து தள்ளும் பலபட்டறை நான். ஆனால் ரசிகனாக ஆகசிறந்தவற்றை மட்டுமே நண்பர்களுக்கு பரிந்துரைப்பேன். இந்த கடைசி கோடு தான் எடுத்துக்கொண்ட கருப்பொருள் அடிப்படையில் [இந்திய வரைபடம் உருவான வரலாறு] தனித்துவமான ஒன்று. இந்த எல்லையில் இதுதான் தமிழில் முதல் நூல். தீவிர தளத்தில் வேறு நூல்களும் ,மொழிபெயர்ப்புகளும் வரும் வரையில் இந்த எல்லையில் இதுவே ஒரே நூல்.................

கடலூர் சீனு 

திரு ஜெயமோகன் அவர்களின் வலைப்பூவில் அவர் எழுதும் கட்டுரைகள்,வெண்முரசு ( மஹா பாரதம்) தவிர அவருக்கு எழுதும் முக்கிய நண்பர்களின் கடிதங்களையும் வெளியிகிறார். சில கடிதங்கள் கட்டுரையாகவே அமைந்து எதிர்வினைகளையும் எழுப்பும். கடந்த வாரம் திரு கடலூர் சீனு என்னுடைய புத்தகமான கடைசிக்கோடு பற்றி ஒரு நிண்ட விமர்சனத்தையே  ஜெயமோகனுக்கே கடிதமாக எழதியிருக்கிறார். அதற்கு வந்த எதிர்வினகளுக்கும் பதில் தந்திருக்கிறார். திரு கடலூர் சீனுவுக்கும், ஜெயமோகனுக்கும் நன்றி
  அதை இந்த சுட்டியில்  பார்க்கலாம்.
 படித்து பாருங்களேன்


26/7/17

ஒரு மஹாராஜா ஏழையாகிவிட்டார்.


உலகம் முழுவதும் உள்ள 41  நகரங்களையும் இந்தியாவில் 72 நகரங்களையும் இது இணைக்கும் ஏர் இந்தியாவின் மஹாராஜாவிற்கு சொந்தமாக 140 விமானங்கள் இருக்கின்றன. ஆனால் ஏர் இந்தியா நிறுவனம், 52,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. ஒவ்வொரு மாதமும் ஏர் இந்தியா ஈட்டும் வருமானத்தைவிட 300 – 400 கோடி ரூபாய் அதிக செலவு செய்கிறது.  இந்த நிலையில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் இயங்க முடியாது.
140 விமானங்கள், 2,000 விமானி¬கள், 2,000 தொழில்நுட்ப வல்லுனர்கள்,  விமானங்களை பழுதுபார்க்கச் சொந்த இடம், விமானங்களை நிறுத்துவதற்கு முன்னுரிமை என்று  மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டஏர் இந்தியா கடுமையான நஷ்டத்தை சந்திக்கக் காரணம் என்ன?  சுருக்கமாகச் சொல்வதானால் சொல்லுவதானால் நிர்வாக குளறுபடி, அரசியல்வாதிகளின் தலையீடு, அதிகாரிகளின் மெத்தனம், போட்டி மனப்பான்மை இல்லாமல் இயங்கியது. தான்.
1990களில் விமானச்சேவைத் தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட பின், ஏர்இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை நவீனமயமாக்குவதை மத்திய அரசு சரியாக திட்டமிட்டுச் செயலாற்றவில்லை.  குறிப்பாக, ஏர்இந்தியாவிற்குப் புதிதாக 26 விமானங்களை வாங்க வேண்டும் என அந்நிறுவனம் 1996இல் வைத்த கோரிக்கையை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் மத்திய அரசு பரிசீலிக்கத் தொடங்கியது.   இந்த காலகட்டத்துக்குள்   நாட்டின் மிகப்  பெரிய விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவின் வளர்ச்சி  உள்நாட்டுச் சந்தையில் 13 சதவீதமாகச் சுருங்கி விட்டது. ஜெட் ஏர்வேஸ்,  இண்டிகோ போன்ற தனியார் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி கண்டன.
தாமதமாக விமானங்கள் வாங்க முடிவு செய்தபோது அரசியல் விளையாடியது.  தேவைக்கு அதிகமாக விமானங்கள் வாங்கித்-தள்ளியது.. ஐ.மு.கூ.,வின் முதல் ஆட்சியில், 70,000 கோடி ரூபாய் செலவில், 111 விமா¬னங்¬களை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஏர் இந்தியா 33,197 கோடி ரூபாய் செலவில் 50 விமானங்கள் வாங்குவதற்கு, போயிங் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டது. கடன் வாங்கி விமானங்களை வாங்குவது, பின்னர் வருவாய் ஈட்டி கடனை திருப்பிச் செலுத்துவது என்பதே திட்டம். ஆனால், அது நடைபெறவில்லை.  மாறக கடன் தான் அதிகரித்தது.
இவ்வளவு விமானங்கள் வாங்கியதற்கு காரணம் தனியார் போட்டியை சமாளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த இந்தியன ஏர்லயன்ஸ்   நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைத்து ஒரே நிறுவனமாக்கியதனால்  என்று சொல்லப்பட்டது  ஆனால் விளைவுகள் வீபரிதமாக இருந்தது. 2002 – 03ல் இவ்¬விரு விமான நிறு¬வ-னங்¬களின் மொத்த நஷ்¬டம், 63 கோடி ரூபாய்¬ தான். ஆனால், 2010 – 11ல் அதுவே 7,000 கோடி ரூபா¬யைத் தொட்¬டது. அடுத்த ஐந்து ஆண்¬டு¬களில் 20,000 கோடி ரூபா¬யைத் தாண்டியது. ஏர் இந்தியாவால், ஏற்கனவே உள்ள கடன்களுக்கு வட்டியைக் கூட செலுத்த முடியவில்லை. இந்த மாதிரி நிலையிலிருந்த  மல்லையாவின் நிறுவனத்தை வராகடன் பட்டியலில் சேர்த்து போராடத்தொடங்கியிருக்கும் வங்கிகள் இதில்அப்படி செய்ய முடியாது காரணம் இது பொதுத்துறை. இதன் கடனகள் அரசால் உத்தரவாதமளிக்கபட்ட ஒன்று.  அதாவது என்றாவது ஒரு நாள் கடன் திரும்பி வந்துவிடும்- நீங்களும் நானும் கட்டும் வரிப்பணத்திலிருந்து அரசு கொடுத்துவிடும்
 செயல்பாட்டு திறன்களை  மேம்படுத்தி, செலவுகளைக் குறைத்து, 2017க்குள் லாபம் ஈட்ட வேண்¬டும் என்ற  நிபந்தனைகளுடன் மத்திய அரசு, ஏர் இந்தியாவுக்கு 30 000 கோடிகள்  கடன் கொடுத்தது. 2015 –16ல் மட்டும் 105 கோடி ரூபாய் லாபம் கிடைத்தற்கு காரணம்  விமான எரிபொருள் விலை சரிவு. இப்போது மீண்டும் நஷ்டம்.
“ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்குவதற்காக 16 விமானங்களை குத்தகைக்கு எடுத்த வகையில் 2005க்கும் 2010க்கும் இடையே ரூ 4,234 கோடி இழப்பை ஏர் இந்தியா நிறுவனம் சந்தித்திருக்கிறது” என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தேவைப்பட்டதை விட மிக அதிகமாக எண்ணிக்கையில் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டதால் ரூ 68,000 கோடி இழப்பு ஏற்பட்டது என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு விமான நிறுவனம் கடன் இல்லாமல் இயங்கமுடியாது. .  ஜெட் ஏர்¬வே¬ஸுக்கு உள்ள கடன், 7,223 கோடி . இண்டிகோவின் கடன் 3,201 கோடி ரூபாய் . ஆனால் ஏர் இந்தியாவின் கடன் அதன் வருவாயாக மதிப்பிட்டிருக்கும் தொகையை விட பலமடங்கு அதிகம்.  சுருக்கமாக சொல்லுவதானால் ஏர் இந்தியா திவாலாகிக்கொண்டிருக்கிறது. வேறு வழியில்லாமல், ஏர் இந்தியாவை விற்றுவிட வேண்டிய நிலை  இன்று எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம்  ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த முடிவு இந்த அரசுக்குப் புதிதல்ல  கடந்த 2001ம் ஆண்டே ஏர் இந்தியாவின் 60 சதவீத பங்குகளையும், இந்தியன்  ஏர்லைன்சின் 51 சதவீத பங்குகளையும் விற்க அப்போது ஆட்சியில்   இருந்த பாஜ கூட்டணி அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக அப்போது  அது கைவிடப்பட்டது.  அதே முடிவு இன்று வேறு வடிவம் எடுத்திருக்கிறது.
“இந்தியாவின் 86 சதவீத விமானச் சேவையை தனியாரால் வழங்க முடி-யும் என்றால், 100 சதவீதத்தையும் அவர்களால் வழங்க முடியாதா?” என்று  கேட்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ,
சரி இவ்வளவு நஷ்டத்தில் இருக்கும் இந்த நிறுவனத்தை யார் வாங்குவார்கள்?  கடன்களை தள்ளுபடி செய்துவிடுவார்களா? வட்டியை மட்டும் தள்ளுபடி செய்வார்களா? அதெற்கெல்லாம் ரிசர்வ் வங்கி அனுமதிக்குமா? போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. அரசு எப்படி, எவ்வளவு பங்குகளை விற்கப்போகிறது என்பதை முடிவு செய்ய ஒரு குழுவை அமைத்திருக்கிறது.
டாடா குழு¬மம் ¬ ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கிறது.. அதற்கு காரணம் டாடா நிறுவனத்தின்  நிதி வலிமை மட்டுமில்லை..  ஏர் இந்தியாவை துவக்கியதே ஜே.ஆர்.டி. டாடா¬ தான். 1932ல் டாடா ஏர்-லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பித்த விமான நிறுவனமே, 1953ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டு ஏர் இந்தியா ஆனது. அன்றைய பிரதமர் நேருவின் விருப்பத்தை ஏற்று  நீண்ட அதன் தலைவராக  இருந்தார்.ஜேஆர் டி.   அந்த சென்டிமென்ட் ஒரு காரணம். மேலும் டாடா நிறுவனம் ஏர் ஆசியா  என்ற நிறுவனத்திலும் நிறைய முதலீடு செய்திருக்கிறது.
 இன்று டாடா மட்டுமல்ல, இன்னும் மூன்று விமான நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க விரும்புகின்றன என்ற செய்திதான் ஆச்சரியத்தைத் தருகிறது.  இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்  ஏர் இந்தியாவிற்கு இருக்கும் கட்டமைப்புகளை இன்று உருவாக்கப் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்கின்றனர் வல்லுனர்கள். மேலும்    சிறந்த தலைமை, கண்டிப்பான நிர்வாகம், திறமையான நிதிமேலாண்மையினால் 2 அல்லது  3 ஆண்டுகளில் நிலைமையைச் சீராக்கி லாபம் ஈட்ட முடியும் என இந்த நிறுவனங்கள் நம்புகின்றன. 1983 ல் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் சந்தித்த இதே நிலை தனியார் நிர்வாகத்தால் 1987ல் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறிய முன்னுதாரணத்தைக் காட்டுகின்றனர்.
1953ல் விமானச் சேவையை அரசுடைமையாக  அறிவித்து அரசு  டாடா ஏர்லைன்ஸை எடுத்துக்கொண்டபோது  ஜே ஆர் டி டாடா சொன்னது “மக்கள் நலனுக்காக  விமான சேவை நாட்டுடமையக்கப் படுவதை நான் ஏற்கிறேன். ஆனால் இந்தியாவின் புதிய அரசாங்கத்துக்கு, விமான நிறுவனத்தை நடத்துவதில் எந்த அனுபவமுமில்லை. அதனால் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.”
இந்த வார்த்தைகள் இன்றும் உண்மையாக இருப்பது தான் ஆச்சரியம்
kalki 30/07/17

















கருகிய கனவுகள்


மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவர் ஆக முடியாது 
தமிழக அரசு கடந்த சில மாதங்களாக,மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பி வந்த நீட்  (NEET) பிரச்சனையில் உயர் நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் நீட் தேர்வில் தகுதிபெறாத தமிழக மாணவர்கள் +2 வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட   மருத்தவ கல்லூரிகளில் சேரமுடியாது. 
 நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது.
இந்த நடைமுறைகளை மாற்றும் வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை முடிவு செய்தன. இதை எதிர்த்து வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில்  கடந்த 2013 ஜூலை 18-ம் தேதி தேசிய நுழைவுத் தேர்வு நடத்தத் தடை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததின் விளைவாக  2013ல் பிறபித்த தடையுத்தரவை ரத்து செய்து தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த  உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது 
இந்த  உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்திய மருத்துவ கல்வியில் ஒரு மிகப்பெரிய மாறுதலை உருவாக்கியது இளநிலை படிப்புகளுக்கு மட்டுமல்லாது முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் நாடு முழுவதும் ஒரே முறையில் நடத்தப்படும் நீட் தேர்வு தமிழகத்திலும் மத்திய அரசு கட்டாயமாகி உள்ளது. என்றும் அறிவித்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காகவே தனி அமைப்பையும் உருவாக்கியுள்ளது.  கடந்த மே மாதம் 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 11.3 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.      தமிழகத்தில்  எழுதியவர்கள் 83000க்கும் மேற்பட்டவர்கள் அதில் தேர்வு பெற்றிருப்பவர்கள் 32570 பேர். இதில்மிகப் பலர் சிபிஎஸ் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் காரணம் இந்த நீட் தேர்வின் கேள்விகள் 80% சிபிஎஸ் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டவை.
  மாநில பாடத்திட்டத்தில் +2 படித்த மாணவர்கள் இந்தத் தேர்வை சரிவரச் சந்திக்க முடியாமல் போய்விட்டது   என்பதைக் கணித்த அரசு  தமிழக அரசுஇந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறுவதற்காக தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வாங்கிடலாம் எனஅறிவித்தும் விட்டது. ஆனால்  இரண்டு சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற  மத்திய அரசு  அனுப்ப வில்லை. தங்களது சொந்தப் பிரச்சனைகளில் மத்திய அரசின் தயவை நாடி நிற்கும். மாநில அரசும் போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுக்க வில்லை
. இவ்வாண்டு, நீட் மூலம் தான் தமிழ்நாட்டிலும் மாணவர் சேர்க்கை என அறிவித்து அதற்கான பணிகளை வாரியம்  துவங்கியிருந்தது. இந்த விஷயத்தில் தங்கள் முயற்சிகள் தோல்வியடைந்ததை உணர்ந்த மாநில அரசு அதை மறைப்பதற்காக, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்குத் தனி ஒதுக்கீடு கொண்டு வர  ஒரு அரசாணை பிறப்பித்தது. அதாவது, தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் 15 விழுக்காடு இடங்கள் போக மீதி உள்ள 85 விழுக்காடு இடங்களில் 15 விழுக்காடு இடங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும், 85 விழுக்காடு இடங்களை மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கிட அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையைத்தான்  செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்புக்கான முக்கிய காரணங்களாக நீதி மன்றம் சொல்லியிருக்கும் விஷயங்கள் இரண்டு. ஒரே வகுப்பில் படித்த மாணவர்களிடையே வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்தவர்கள் என்பதால் தகுதி நிலையிலேயே  வேறுபாடுகாட்டுவது  எல்லோருக்கும் சமத்தவம் என்ற நிலைக்கு மாறுபட்டதாகிவிடும். இரண்டாவது இந்த அரசாணையை  வெளியிட்டிருப்பது அரசின் செயலாளர்கள். ஒரு அரசின் கொள்கை முடிவுகள் அமைச்சரவையால் பரிசிலிக்கபட்டு ஒரு ஆணையாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது  சட்டமன்றத்தில் சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டு,ம்  ஆனால் இது அப்படிச் செய்யப்படவில்லை. 
தமிழக அரசு  உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது  
ஆனால் . இப்படி வெவ்வேறு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டரீதியாக செல்லுமா? தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டும்  85 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் ஏற்குமா? என்பது  மிகப்பெரிய கேள்விக்குறி.  ஏனெனில், அரசியல் சட்டப்படி, சமூக ரீதியாக கல்விரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். இப்படிப்பட்ட ஒதுக்கீடுகள் சட்ட ரீதியாகச் செல்லுபடியாகும் எனச்சொல்ல முடியாது. மேலும் 50 விழுக்காட்டுக்கு மேல் எந்த இட ஒதுக்கீடும் செய்யக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியுள்ளது, ஏற்கனவே, குஜராத் உயர் நீதிமன்றம் இதுபோன்ற ஒரு ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. எனவே, தமிழக அரசின் இந்த ஒதுக்கீடு  அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம். .

மாநில அரசு என்ன செய்ய வேண்டும்?                            
இதைக் கெளரவ பிரச்சனையாக கருதாமல் நீட் தேர்வை ஏற்று நமது மாநில பாடதிட்டங்களை மாற்றி அமைத்து தமிழக கல்வித்தரம் சிபிஎஸ் பாடத்திட்டத்தைவிட உயர்ந்தது என நீருபிக்க வேண்டும் 
 நீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்(qualifying test).அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test). என்பதை உணர்ந்து நமது மாநில மாணவர்களை அதற்கு தயாரிக்கும் வகையில் பாடத்திட்டங்கள்  செழுமையாக்கப்படவேண்டும். இதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு அண்மையில் செய்திருக்கிறது. இதை அறிவிப்போடு நிறுத்தாமல் உண்மையாகவே செயலாக்கவேண்டும். 
குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி ரூபாய்வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப்பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும்கொடிய வழக்கம் இந்தத் தேர்வு முறையினால்  முடிவுக்கு வருகிறது. பத்துக்கோடி ரூபாய்கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவஇடம் கிடைக்காது. என்று எழுந்திருக்கும் நிலையை வரவேற்க வேண்டும்.
சட்டம். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், புதிய கல்விக் கொள்கை எனப் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மருத்தவ கல்லூரி கனவுகளுடன் மாநில பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும்  மாணவர்களும், கருகிய அவர்களின் கனவுகளை கண்டு கண்ணீர் விடும் அவர்கள்  பெற்றோர்களும் தான்.

19/7/17

சீனாவின் புதிய “பட்டுபாதை”



சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக மேற்குலகையும் சீனாவையும் இணைத்த  ஒரு வர்த்தக பாதை  சினாவின் “சில்க் ரூட்” (–பட்டுப் பாதை) என்பதை வரலாறு நமக்குச்சொல்லுகிறது.  இந்தத் தொன்மையான பட்டுப்பாதையின் வழித்தடத்தில் சீனா, இந்தியா, இலங்கை இணைந்திருந்தன. சீனாவைச் சேர்ந்த ஃபாஹியான் போன்ற  புத்தமத அறிஞர்கள்  இந்தப் பாதையில் பயணித்துதான் இலங்கைக்கு புத்தமதத்தை எடுத்துச்சென்றனர். காலப்போக்கில் நாடுகளுக்கிடையே நிலவும் இன்றைய நவீன எல்லைக்கோடுகள் இந்தப் பாதையை வெறும் சரித்திரபுத்தகங்களில் இடம் பெறும் ஒரு வார்த்தையாக மட்டும்  மாற்றிவிட்டது 

இந்த சில்க் ரூட் எனும் பாரம்பரியப் பாதையை மீண்டும்  துவக்கி தங்கள் பெருமை மிக்க கலாச்சாரத்தை தொடரப்போவதாக சிலஆண்டுகளுக்கு   முன் சீன அரசு அறிவித்திருந்தது.   2013 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு  'ஒன் பெல்ட், ஒன் ரோடு' (One Belt, One Road-OBOR))   என்று பெயரிட்டது.  
கடந்த 3 ஆண்டுகளாக மிகத் தீவிரமாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.  பாரம்பரியமான  பட்டுப்பாதையாக இல்லாமல்  உலகப் பொருளாதார குறியீட்டில்(GDP) 60%த்தை நிர்ணயிக்கும் முக்கிய 58 நாடுகளைத்  தரை, கடல் வான் வழியாக இணைக்கும் ஒரு மிகப்பெரிய திட்டமாக அறிவித்திருக்கிறது.  OBOR திட்டத்தின்  கட்டுமானங்களின் மதிப்பீடு  1  டிரில்லியன் டாலர்கள். (ஒரு லட்சம் கோடி டாலர்கள்)
முதல் கட்டமாக  சீனாவின் முக்கிய நகரான குன்மிங் மற்றும் கொல்கத்தா இடையே, அதிவேக ரயில்கள் செல்லும் வழித்தடத்தை அமைப்பதற்கு, சீனா  ஒரு திட்டத்தை முன் வைத்தது.. இந்த வழித்தடம், வங்கதேசம், மியான்மார் வழியே செல்லும் என்பதால், 4 நாடுகளின் வர்த்தகத்தை, மேம்படுத்துவதற்கு, இது உதவும் என்று  சொல்லி 2,800 கி.மீ தூரத்துக்கு அதிவேக ரயில் தடத்தை அமைக்க, 4 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை சீனா  ஏற்பாடு செய்தது. இந்தியா உடனடியாக ஏற்காத இந்த  யோசனையை மற்ற நாடுகள் வரவேற்றன. 
 இந்த பிரம்மாண்டமான திட்டத்தின் அடுத்த  முக்கிய கட்டமாக லண்டனில் இருந்து சீனா வரையிலான  12.500 கி.மீ தொலைவுள்ள வழித்தடத்தில் சரக்கு ரயிலை வெற்றிகரமாக இயக்கிச் சாதித்துள்ளது சீனாவின் ரயில்வே துறை.                                                                                                                                              சீனா ரயில்வே கார்ப்பரேஷனின் ஈஸ்ட் விண்ட் சரக்கு ரயில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்டது. 20 நாள் பயணத்திற்குப் பின்னர் சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ‘யிவு’வை அடைந்தது.   மறுபடியும் பிறந்திருக்கும் சில்க் ரூட்டின் வெற்றியாக வர்ணிக்கப்பட்டது இந்தப் பயணம்.                                        லண்டனில் இருந்து புறப்பட்ட இந்த சரக்குரயில், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் வழியாகச் சீனாவை வந்தடைந்துள்ளது. இதே போல் 2014ஆம் ஆண்டு சீனாவில் இருந்து ஸ்பெயினின் மேட்ரிட் நகருக்கு ஒரு  சரக்குரயில்  இயக்கப்பட்டது.  இந்தச் சோதனை ஓட்டங்களைச் தொடர்ந்து  கடந்த மே மாதம் பிஜெய்ங் நகரில் இந்த “ஒன்பெல்ட். ஒன்ரோட்”  திட்டத்திற்காக ஒரு உச்சி மாநாட்டைக் கூட்டியது சீனா.   29  நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 130 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் 70 நாடுகள் இந்தத் திட்டத்தில்  சீனாவுடன் ஒத்துழைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.  இங்கிலாந்து ஜெர்மனி போன்ற வலிமையான நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்தியாவும் அமெரிக்காவும் பங்கேற்க வில்லை. சீனாவுடன் கருத்து வேறுபாடு உள்ள வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகள்  பங்கேற்றன. பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 
. நமது பக்கத்துவீட்டுக்காரர்களை இதில் பங்கேற்பதை தவிர்க்க நமது அரசால் எடுக்கப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் வெற்றியளிக்க  வில்லை. பாகிஸ்தான் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறது.. திட்டம் மிக வேகமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. 
“பாரம்பரிய கலாச்சார பாதை என்பதெல்லாம்  கண்துடைப்பு.''சீனாவின் '' ஒன் பெல்ட் ஒன் ரோடு'' எனப்படும் சில்க் ரூட் திட்டம்  உள்நோக்கம் கொண்டது என்கிறார் அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படை கமாண்டர் ஸ்காட் ஸ்விப்ட்.  சீனா, இந்திய இடையே கடல் எல்லைப் பகுதியில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது. இந்திய கடற்பரப்பை தொடர்ந்து சீனா சொந்தம் கொண்டாடி வருவதுடன், தெற்கு சீனக் கடல் பகுதியிலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் ஒரு பிரச்னை. . மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் குறிவைத்து நிலம் மற்றும் கடல் வழியாக சில்க் ரோடு என்ற திட்டத்தை பெரிய பொருளாதார செலவில் கொண்டு வருகிறது சீனா. இந்த திட்டம்.   வெறும் வணிகம் மட்டும் குறிக்கோளாகக்கொண்டது இல்லை அதற்கும் அப்பாற்பட்ட பல விஷயங்களைக்கொண்டது. என்கிறார் இவர். 

இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது இந்தியா பங்கேற்காதற்காக முதலில் சொல்லபட்ட காரணம். ஆனால் உண்மையான காரணம்  பின்னால் வெளியானது.
 சீனா பாகிஸ்தானை இணைக்கும் பொருளாதார நெடுஞ்சாலை இந்தியா சொந்தம் கொண்டாடும் பல்திஸ்தான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இடம் வழியாகப் பொருளாதார நெடுஞ்சாலை அமைக்கச் சீனா திட்டமிட்டிருப்பதை இந்தியா ஏற்கவில்லை.  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் இந்த நெடும்பாதை குறித்து இந்தியா தனது ஆட்சேபணைகளை  பதிவு செய்திருக்கிறது.
“அண்டை நாடுகளின் வளர்ச்சிக்குச் சீனா மேற்கொள்ளும் பங்களிப்பே இது, சீனாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பான இந்தப் பாதை அரசியல் மற்றும் எல்லை தகராறு குறித்தது அல்ல, பொருளாதாரப் பாதை மட்டுமே” என்கிறார்  சீனாவின், வெளியுற  அமைச்சர்  “

உலகின் மிக சக்தி வாய்ந்த  முதல் நாடாக, சீனா இன்னும் 10 ஆண்டுகளுக்குள் ஆகி விட  வேண்டும் என்ற  சீன அதிபர் ஜின்பிங்கின் கனவின் வடிவமே அவருடைய இந்தச்  செல்லத் திட்டம்.  இந்த மிகப்பெரிய தடையில்லாத பாதையை நிறுவதின் மூலம்.  பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளை தங்கள்  வணிக சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் கொண்டுவந்து  சீனாவின் உற்பத்திக்கு மிகப்பெரிய சந்தையை உருவாக்கி அதன் மூலம்  சீனாவின் பொருளாதார வலிமையைப் பெருக்குவதுதான் திட்டம். அதைப்புரிந்து கொண்டதனால்தான் அமெரிக்கா எதிர்க்கிறது. எல்லைப் போரில் எழுந்த பரஸ்பரம் நம்பிக்கையற்ற நிலையினால் இந்தியா ஏற்க மறுக்கிறது.    என்று ஐரோப்பிய பத்திரிகைகள் எழுதுகின்றன. 
60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் எல்லைப் பிரச்சனையை முடிவுக்கொண்டுவர இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் தருவதை இந்தியா ஒரு நிபந்தனையாக பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ஒரு கருத்து எழுந்திருக்கிறது.
சீனாவின் புதிய பட்டுப்பாதை முழுமை அடைய இந்தியா ஒத்துழைக்கப்போகிறதா? அல்லது ஒதுக்கித் தள்ளபோகிறதா??
திறமையான இரண்டு  செஸ் ஆட்டகாரகளின் இறுதி ஆட்டத்தை கவனிப்பது போல பல ஆசிய, ஐரோப்பிய நாடுகள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன.

 கல்கி 22/07/17ல் எழுதியது