19/12/17

குடகு மலைக் காற்றினிலே ... 2



மடிக்கேரி ஒரு சிறிய மலை நகரம். நகரில் பல முக்கிய இடங்களில் கம்பீரமாக நிற்கும் ராணுவ அதிகாரிகளின் சிலைகள். டூரிஸ்ட் கூட்டம் இவைகளை கடந்து நகரின் கோடியில் ஒரு பெரிய பார்க். அதிலிருந்து மேற்கு மலைத்தொடரின்பசுமைச் சரிவுகளையும் சிகரங்கங்களையும் பார்க்க அந்தப் பார்க்கின் விளிம்பில் வசதி செய்திருக்கிறார்கள். ஒரு மலைச்சரிவை காலரியாக மாற்றி அதன் முன் ஒர் அரைவட்டவடிவ தளமுமாக அழகான amphitheatre அரங்கமாக வடிவமைத்திருக்கிறார்கள். விழா நாட்களில் இசை நடன நிகழ்ச்சிகள் நடைபெறுமாம்




இந்த இடத்திலிருந்து பார்த்தால் மாலையில் சன் செட் அழகாக இருக்கும் என்பதால் அதற்காகக் காத்திருக்கும் கூட்டம் காலரியை ஆக்ரமிதிருக்கிறது. உனண்மை தான்
ஆதவன் அணுவணுவாகக் கண்ணிலிருந்து மறையும் காட்சி அற்புதமாகத்தான் இருக்கிறது.  வாணத்தையே ஜொலிக்கும் தங்கத்தகடுகளாக்கியபின் .சட்டென்று பிங்க் கலந்த ஆரஞ்ச் வண்ணப் பந்தாக மாறி மெல்லிய நீலத்துடன் மாறிச் சட்டென்று மலைகளுக்குப் பின்னால் காணமல் போகும் அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒன்று மனத்ஜில் நிற்கும் ஓவியம்.  அஸ்தமனம் முடிந்தவுடனும்  எடுத்தவைகளுடன் திருப்தி அடையாமல் இன்னும் சில செல்பிகள் எடுத்துக்கொண்டு  திரைப்படம் முடிந்தவுடன் தியட்டர்காலியாவதைப் போல அரங்கம் காலியாகிறது. தினசரி வாக்கிங் வரும் உள்ளுர் மக்கள் சிலருடன் நாமும் உட்கார்ந்திருக்கிறோம். குளிர் மெல்ல தாக்க ஆரம்பித்தாலும் இதமாக்யிருக்கிறது.  தொலைவில் வளைந்த மலைச்சாலைகளில் செல்லும் வாகனங்களின் விளக்குகள் நகரும்  நட்சந்திரங்களகத் தெரிவதை ரசித்துக்கொண்டிருக்கிறோம்.
 இந்த இடத்திலிருந்து தான் குடகு மன்னர் தன் குடும்பத்துடனும் பரிவாரத்துடனும்  அமர்ந்து மாலைவேளைகளை இசை நடன நிகழ்ச்சிகளுடன் ரசிப்பாராம். அதனால் இந்த இடத்தை ராஜா சீட் என்று அழைக்கிறார்கள். அதை நினைவு கூறும் வகையில் ஒரு மண்டபமும் நிறுவியிருகிறார்கள். அதைப்பார்த்ததும் குடகு மன்னர்களைப்பற்றிக் காலையில் மீயூசியத்தில் பார்த்தறிந்த செய்திகள் மீண்டும்   மனதில் எழுந்தன.

மன்னர்கள் வாழ்ந்த  அரண்மனை இபோது அரசு அலுவலகங்களாகமாறி ப்பாழாகிக் கொண்டிருக்கிறது .அதிலிருந்த பொருட்களையும் படங்களையும் கொண்டு அருகில் ஒரு மியூசியம் அமைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில்இந்தச் சின்னஞ்சிறு குடகு தனி மலைநாடகவே 1600களிலிருந்து மன்னர் ஆட்சியிலிருந்திருக்கிறது. அண்டைநாடான மைசூர் அரசர்களால் வெல்லப்பட்டு அவர்களின் ஆட்சியின் கிழ் வந்திருக்கிறது. . பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஆட்சியில் தனி நாடகாவும் அரசபரம்பரம்பரையாகவும்  மீண்டும் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. ஆனால் தொடர்ந்து வந்த அரச பரமப்ரையினர் பிரிட்டிஷ் கம்பெனியின் மேலாதிக்கத்தை விரும்பாமல் புரட்சி செய்ததால் ஒரு போரைச் சந்தித்திருக்கிறார்கள். கோட்டைகள், மதில் சுவர்கள் எதுவும் இல்லாத போதும் நான்கு புறமும் காடுகளாகச் சூழபபட்ட இந்தக் குட்டி மலைநாட்டைபிரிட்டிஷார் எளிதில் நெருங்க முடியவில்லை. ஒரு போருக்குப் பின்னர் சரணடைந்த மன்னரைக் கைது செய்து வேலூரில் சிறை வைத்திருக்கிறார்கள். சிறையில் மன்னர் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகும், பதிலுக்குத் தன் ஒரே மகளை லண்டனில் படிக்க வைக்க விரும்புதால் அதற்கு உதவி செய்யவும் கேட்டிருக்கிறார். சம்மதித்த ஆங்கிலேயே அரசு அவரையும் மகளையும் லண்டன் அனுப்பினார்கள். ஆனால் அங்கு இளவரசி படிப்பைத்தொடர கிருத்துவ மதத்திற்கு மாற நேர்ந்திருக்கிறது. ராணி விக்டோரியாவால் முன்பொழியப்பட்டு இளவரசி மதம் மாறியிருக்கிறார். சில நாட்களுக்குப் பின்னர் ஒரு ஆங்கிலேயரை மணந்திருக்கிறார். இங்கிலாந்திலேயே இறந்த மன்னரின் கல்லறை அங்கிருக்கிறது மடிகேரியில் இருக்கும்  மறைந்த மன்னர்களின் சமாதி வளாகம் மிகப்பெரியதாகயிருக்கிறது. வாசலில் துவாரபாலகர்கள் உருவங்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.  இவர்கள் எப்படி அங்கு வந்தார்கள் எனத் தெரியவில்லை
 ஆனால் இங்கிலாந்தில் படித்த மன்னரின் மகள்  பின்னாளில் என்னவானார்? அவரது வாரிசுகள் எங்கே என்பது தெரியவில்லை.


மியூசியத்தில் பளிச்சென்று வீபூதி பட்டையுடன் இருக்கும் அந்த அழகான இளவரசியின் படத்தைப் பார்த்தபோது இளவரசியாக இருந்தபோதிலும் படிப்புக்காக மதம் மாறிய செய்தி மனதை  உறுத்தியது உண்மை.  இந்த மத மாற்றத்தைப் படிப்பின் மீதிருந்த ஆர்வம் என எடுத்துக்கொள்வதா? அல்லது அதிகாரத்துக்கு அடிபணிந்த அடிமைத்தனமாக எடுத்துக்கொள்வதா? என்று சிந்திக்கொண்டிருந்தேன்.

குடகு மன்னர்கள் மிகப்பெரிய சிவ பக்கதர்கள். கனவில் வந்து சொன்னதற்காகவே மன்னர் கட்டியிருப்பதாக வரலாறு சொல்லும் ஒம்காரஸ்வர் கோவில் நகரின் நடுவில் இன்றும் இருக்கிறது. கோபுரங்கள் எதுமில்லாத கேரளபாணிக் கோவில். அர்ச்சகர் பிங்க் வேஷ்டியில் இருக்கிறார். வரும் பக்தர்களுடன் பேசுவதில்லை. அவர் சொல்லும் பூஜை மந்திரங்கள் என்ன பொழியென்றும் புரியவில்லை. கோவில் மிகச்சுத்தமாகயிருக்கிறது.  பிறந்து சில மாதங்களே ஆன சின்னக்குழந்தைகளைக் கொண்டுவந்து சன்னதியின் முன் கிடத்துகிறார்கள்
பிரிட்டிஷாரால் தனி நாடாக அங்கிகரிக்கப்பட்டிருந்ததால், சுதந்திர இந்தியாவிலும் முதலில்  இது தனி மாநிலமாகவே இருந்திருக்கிறது. ஆம் ஸ்டேட் ஆப் கூர்க்.! 1956ல் மொழி வாரியாக மாநிலங்கள் உருவானபோது இது மைசூர் ராஜயத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது அந்த இணைப்பின்போது  முன்னாளில் போரில் வென்று  மைசூர் எங்களை ஆட்சி செய்தபோது கொடுமைப்படுத்தியவர்கள். அதனால் அவர்கள் வேண்டாம் எங்களை மெட்ராஸ் ராஜதானியுடன் சேர்த்துவிடுங்கள் என்று போராடியவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது நான் அறிந்த ஒரு புதிய செய்தி.
பிரிட்டிஷாரை துணிவுடன் ஈஸ்ட் இந்திய கம்பெனிகாலத்திலேயே எதிர்த்த பாரம்பரியத்தாலோ  இந்திய ராணுவ அதிகாரிகளில் பலர் இந்தப் பகுதியிலிருந்து தான் வந்திருக்கிறார்கள். கரியப்பாவைத்தொடர்ந்து பெல்லியப்பா, பொன்னப்பா போன்று பல அப்பாக்கள் இங்கிருந்து வந்த ராணுவ அதிகாரிகள். இன்றும் இது தொடர்வது பெருமைக்குரியவிஷயம்.

உலகிலேயே மிக விலையுர்ந்த காபி இங்குதான் விளைகிறது என்று கேள்விபட்டிருந்த்தால் அதைப் பார்க்க விரும்பி விபரங்கள் சேகரித்துக் கொண்டிருந்தேன். லண்டனிலிருந்து ஒரு நண்பர் கொடுத்திருக்கும் அறிமுகத்துடன் நாளைக் காலை அந்த இடத்துக்குப்  போகலாம் என்று எண்ணித் திரும்பினோம்
“வெளியிலேயே சாப்பிட்டுவிட்டீர்களா? அல்லது ஏதாவது தயாரிக்கவா? என நீத்து கேட்டபோது உண்மையிலேயே இது ஹோம் ஸ்டே தான் என்பது புரிந்தது

12/12/17

குடகு மலைக் காற்றினிலே 1



10/12/2017


பொன்படு நெடுவரைபயணம் எப்படியிருந்தது ? என்றார் நண்பர். விழித்தேன்.

 அதான் சார் கூர்க் (coorg) டிரிப் என்றார். புறநானூறு பாடலில் அப்படித்தான் அந்த இடம் சொல்லப்பட்டிருக்கிறது. பொன்போலத்தோன்றும் மலை என்று அர்த்தம் அங்கு மழைபொழிந்தால் காவிரியில் வெள்ளம் வரும். அதானால் தான் காவிரியாற்றுக்கு பொன்னி என்றும் எனப்பெயர் என்றார். மனுஷர் சங்க இலக்கியங்களைத் தினசரி படிப்பவர்,  அதை அக்குவேறு ஆணி வேறாக அலசுபவர்

அட! நாம் போன இடம் தமிழிலக்கியத்தில் பேசபட்ட இடமா? என்று ஆச்சரியத்துடன் பயணம் பற்றிப் பேசினேன். HOME STAY பற்றிக்கேட்டுக்கொண்டிருந்தார்.( நல்ல வேளையாக இதுவும் சங்க காலத்திலேயே இருந்தது என்று சொல்ல வில்லை.)

கர்நாடகத்தில் கூர்க் ஒரு மிகச்சிறிய மாவட்டம். 3 தாலுக்காக்கள்தான். மக்கள் தொகை 30000க்கும் கீழ்.மக்கள் வாழும் பகுதிகளைவிட மலைப்பகுதிகள்தான் அதிக. . 1000 மீட்டர் உயரத்திலிருக்கும் மடிக்கேரி நகர தான் மாவட்ட தலைநகரம் மைசூரிலிருந்து 120 கீமி. மலைப்பாதை வழியெங்கும் காபிதோட்டங்களும் அதன் அருகே நிற்கும் ஒக் மரங்களைத் தழுவிக்கொண்டிருக்கும் மிளகுக்கொடிகளையும் பார்த்தபோது





 
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா என்று சொன்ன பாரதி நினைவிற்கு வந்தான்

இங்கு நல்ல ஹோட்டல்கள் இருந்தாலும் ஹோம் ஸ்டே என்பது மிகப் பாப்புலாரன ஒரு விஷயம். விருந்தோம்பலுக்குப் பெயர்போன குடகு மக்களிடம் தங்கள் வீட்டில் எல்லா வசதிகளுடனும் இருக்கும் ஒரு பகுதியை  தங்கள் நகருக்கு வரும் பயணிகளுக்கு  ஒதுக்கி அவர்களைக் கவனித்துக்கொள்ளும் வழக்கமிருந்திருக்கிறது.. இலவசமாகக் இப்படி கொடுக்கும் பழக்கம். நாளடைவில்  மெல்ல ஒரு பிஸினஸாக டெவலப்பாகியிருக்கிறது, இன்று அந்தச் சின்ன ஊரில் 1500க்கும் மேல் இப்படி ஹோம் ஸ்டே வீடுகள். இதற்கு நகரசபையில் லைஸ்ஸென்ஸ் வாங்க வேண்டும், ஒவ்வொரு விருந்தினருக்கும் வரி செலுத்த வேண்டும்(நம் பில்லில் வருகிறது). (லைசென்ஸ் இல்லாமல் நடத்துபவர்களும் நிறைய இருக்கிறார்கள்) இந்தப் பிஸினஸ் இன்ட்ர்நெட்டின் புண்ணியத்தில் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு வளர்ந்திருக்கிறது
.
டூரிஸ்ட்களுக்கு உதவும் பிசினஸ் ஆகிவிட்டதால், make my trip.com. Mytravel போன்ற நம் நாட்டு நிறுவனங்கள் இறங்கிவிட்ட இந்தப் பிஸினஸில் இப்போது airbnb போன்ற சரவதேச நிறுவனங்கள்  இறங்கி விட்டன.(அயர்லாந்திலிருந்து உலகளவில் பல நகரங்களில் இந்த வசதியைத் தருபவர்கள்)

இவர்கள் இப்படி ஹோம் ஸ்டே வசதி தருபவர்களைப் பற்றி அழகான படங்களூடன் தங்கள் தளத்தில் விளம்பரப்படுத்துகிறார்கள். பல நிறுவனங்கள் வசதிகளை நேரில் பார்த்து உறுதி செய்துகொள்வதாலும், சில கண்டிப்பான நிபந்தனைகள் வைத்திருப்பதாலும் நம்பி புக்  பண்ணலாம்..
 இந்த நிறுவனங்கள் ஹோம் ஸ்டே தருபவர்களுக்கு டூரிஸ்ட்களிடமிருந்து ஆர்டர் வாங்கிக்கொடுத்து தங்கள் கமிஷனைப்பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நீங்கள் பணம் செலுத்தி புக் செய்யும் வரை host என்று சொல்லப்படும் அந்த வீட்டின் உரிமையாளாரை நீங்கள்  தொடர்பு கொள்ள முடியாது. (நேரடியாகப் பிஸினஸ்பேசிவிடுவதைத் தவிர்க்க)

ஒரு சின்ன இரண்டு பெட் ரூம் ஃபிளாட் +கிச்சன்(கியாஸ். பாத்திரங்களுடன்) வசதியிலிருந்து காபி எஸ்டேட்க்குள்ளிருக்கும் பெரிய பங்களாவரை கிடைக்கிறது. சின்ன காபி எஸ்டேட் வைத்திருப்பவர்கள் நகரிலிருக்கும் தங்கள் வீட்டைப் பெரிதாகக் கட்டி இப்படி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாடகை ஒரு நாளுக்கு 2000(4 பேர்)லிருந்து 25000 வரை இருக்கிறது. உணவு (ஸ்பெஷல் கூர்க் உணவுகள்) தயாரித்துத் தருவார்கள் அதற்குத் தனிக்கட்டணம், ஆனால் ஹோட்டல்களை விடக் குறைவு.
நாங்கள் நகருக்கு அருகில் அதே நேரத்தில் இயற்கைச் சூழலுடனும் இருக்கும் மலைச்சரிவிலிருக்கும் ஒரு வீட்டைப் படத்தைப் பார்த்துத்தேர்ந்தெடுத்திருந்தாலும் நேரில் எப்படியிருக்குமோ என்றுதானிருந்தது. நகரை நெருங்கும்போது எங்கள் ஹோஸ்ட் திருமதி நீத்து விடம் பேசி பாதைகேட்டபோது தெளிவாகச்சொல்லிக்கொண்டே வந்தார். அழகான வீட்டைப் பார்த்ததும் சந்தோஷமாக யிருந்தது. ஆனால் வீட்டை அடைந்த பின் தான் தெரிந்தவிஷயம் அவர் பெங்களூரிலிருந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்பது.


நான் ஒரு அவசர வேலையாகப் பங்களுர் வர வேண்டியதாகிவிட்டது. உங்களைக் கவனித்துக்கொள்ள என் பெற்றோர்கள் அங்கு வந்திருக்கிறார்கள் (நகரில் வேறு பகுதியில் இருப்பவர்கள்) என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெல்கம் டூ கூர்க் எனக் காபியுடன்       (அருமையான காபி  ) வரவேற்றார் நீத்துவின் தந்தை பொன்னப்பா (78வயது). ந்த அளவுக்கு இதைப் பிஸினஸாக மட்டுமில்லாமல் குடும்பமே சந்தோஷமாகசெய்கிறார்கள். என்று புரிந்தது.
 நகருக்குள் நீங்கள் நுழையும் போதே நான் வீட்டில் இல்லை எனறு சொன்னால் நீங்கள் வருந்தக்கூடும் என்பதால் நான் முதலில் அதைச் சொல்லவில்லை. என் பெற்றோர்கள் உங்களுக்காக மத்தியானத்திலிருந்தே காத்திருக்கிறார்கள் நான் நாளை மாலை வந்துவிடுவேன் என்று நீத்து சொன்ன அந்த வினாடியே அந்த வீட்டை மட்டுமில்லை அந்தக் குடும்பத்தையே எங்களுக்குப் பிடித்துப் போய்விட்டது. மறு நாள் வந்தவுடன் எங்களுக்காக பிரேக்பாஸ்ட் தயாரித்துக் கொண்டுவந்தவருடன்  நிறையப் பேச முடிந்தது. ஹோம் ஸ்டே பிஸினஸ் நன்றாக் இருப்பதாகச்சொன்னார்.. டிசமபரில் இவரது மட்டுமில்லை அனேகமாக எல்லாவீடுகளுமே புக்காகி விட்டது என்றார். ஒவ்வொரு ஆண்டும் டூரிஸ்ட் எண்ணிக்கை உயர்கிறது என்கிறார்.


மெடிகல் டிரான்ஸ்கிரிப்பிஷன், கணவரின் எஸ்டேட்நிர்வாகத்தில் உதவி, இந்த ஹோம் ஸ்டே எல்லாவற்றையும் அழகாகக் கவனிக்கும் இந்தச் "சுப்பர் மாம்" மின்  இரண்டு மகன்கள் கல்லூரியில்.
குடகுப் பெண்கள் மிக ஸ்மார்ட் ஆனவர்கள் என்று நண்பர்கள் சொன்னதுண்டு. இன்று அதை நேரிடையாகப் பார்க்க முடிந்தது.

 அன்று மாலையில் அவர் பார்க்கச்சொல்லியிருந்த அழகான இடத்துக்கு இப்போது  போய்க்கொண்டிருக்கிறோம் .

6/12/17

உலக இசைநகரங்களில் நம்ம சென்னை


இந்த ஆண்டு இசை விழா துவங்கும் முன்னரே வந்த ஒரு மகிழ்ச்சியான செய்தி ஜக்கிய நாடுகள் சபையின் ஒர் அங்கமான யூனஸ்கோ சென்னையை உலகின் பாராம்பரிய இசை நகரங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது என்பது... (மகிழ்ச்சியில்லாத செய்தி T.N கிருஷ்ணாவின் பேச்சு என்பது வேறுவிஷயம்)
யூனஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின்(creative cities) பட்டியலிற்காக இந்த ஆண்டு இந்தியாவின் வாரணாசி, சென்னை, ஜெய்ப்பூர் ஆகிய 3 நகரங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் சென்னையும் வாரணாசியும் இசைக்காகவும் ஜெய்ப்பூர் கைவினை மற்றும் நாட்டுப்புறகலைகளுக்காகவும் தேர்ந்த்டுக்கப்பட்டிருக்கின்றன.
2004ஆம் ஆண்டு முதல் உலகாளாவிய நிலையில் தனிதன்மையுடன் பாரம்பரியத்தன்மைகளயும், பண்பாட்டுச்சிறப்புகளையும் கலைமரபுகளையும் கொண்டுள்ள நகரங்களைப் பட்டியலிட்டு யூனஸ்கோ அறிவித்துக்கொண்டிருக்கிறது. இத்தாலி, ஸ்வீடன், மெக்ஸிகோ நியுஸிலாந்து, போர்ச்சுகல், கஜகஸ்தான் போன்ற நாடுகளைச்சேர்ந்த சில நகரங்களே ”இசைக்கலைக்காக”. இடம் பெற்றிருக்கும் இந்தப் பட்டியலில் இப்போது. இடம் பெற்றிருப்பது “நம்மசென்னை”.
இந்த நெட் ஒர்க்கில் இணைவது மூலம் உலகின் மற்ற இசைநகரின் கலைஞர்கள் இங்கு வரவும், நமது கலைர்கள் அங்குப் பயணிக்கவும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.
யூனஸ்கோ சென்னையை இன்று ஒரு இசை நகரமாக அறிவித்துக் கெளரவித்திருப்பது பெருமையளிக்கும் செய்தியானலும், சென்னை நகரின் இசைப்பாரம்பரியம் 90 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது.
1927ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னயில் நடந்த அகில இந்திய இசை மாநாட்டின் பரிந்துரையில் எழுந்த மியூசிக் அகடமி இன்றும் தொடர்கிறது. ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட சபாக்களில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்களைக்கொண்டு நடைபெறும் இசைவிழாக்கள் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 90 ஆண்டுகளாக தொடர்ந்து இப்படி இசைவிழாக்களை அதுவும் தனியார் உதவியுடன் நடத்திக்கொண்டிருக்கும் ஒரே நகரம் சென்னை. இசை விழாக்கள் மட்டுமின்றி நல்ல இசையின் வடிவங்களை நமக்கு அளித்தவர்களைத் தெய்வமாகப் போற்றி ஆண்டுதோறும் ஆராதிப்பதும் உலகில், தமிழகத்தில் மட்டுமே
.
இசையை மட்டுமில்லாமல் நடனம், மற்றும் அது சார்ந்த கலைகளை வளர்க்க பல ஆண்டுகளுக்கு முன்னரே 100 ஏக்கர் பரப்பில் ருக்மணி அருண்டேல் அவர்களால் சென்னையில் துவக்கபட்ட கலாஷேத்திரா என்ற கலைக்கூடம் இன்று உலகப்புகழ் பெற்ற அமைப்பு. இசையை முறையாக இளநிலைப்படிப்பிலிருந்து ஆராய்ச்சிப் படிப்புவரை கற்கும் வசதியை முதன் முதலில் அளித்த்து சென்னைப் பல்கலைகழகம் தான். 2013ல் இசையை உள்ளடக்கிய இசைமற்றும் நுண்கலைகளுக்காகத் தனிப் பல்கலைகழமே துவக்கப்பட்டது சென்னையில் தான்.
சென்னை கார்ப்ரேஷன் இந்தியாவின் மிகப்பழமையான கார்ப்பரேஷன். 1688ல் அதற்கான சார்ட்டர்(பிரிட்டிஷ் அரசின் அனுமதி) வந்தபோது அதைப் பராம்பரிய இசைக்கலைஞர்களும், நடனக்கலைஞர்களும் தங்கள் திறன்களை வெளிப்படுத்திக் கோலாகலமான ஊர்வலமாகச் சென்னை செயின்ட் ஜார்ஸ் கோட்டைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த அளவு இசைக்கலை பெருமைப் படுத்தபட்ட நகரம் சென்னை.
கர்நாடக இசை மட்டும் சென்னையின் அடையாளமில்லை. வெஸ்ட்டர்ன் கிளாஸிக்கல் மியூஸிக் என அறியப்படும் மேற்கத்திய சங்கித்தைப் போற்ற மெட்ராஸ் மியூஸிகல் அசோசியஷன் பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் துவங்கியிருக்கிறது. மேற்கத்திய இசையில் பயன்படுத்தப்பட்டுவந்த வயலினை கர்நாடக இசைக்கேற்ப மாற்றி வடிவமைத்ததில் இவர்களின் பணி முக்கியமானது.
இசைக்கச்சேரிகள் என்றால் தெலுங்கு அல்லது சமஸ்கிருத கீர்த்தனைகள் என்ற நிலையை மாற்றிப் பாரம்பரிய தமிழசைக்கு தனி அந்தஸ்துப் பெற ராஜாஜி, டிகேசி, கல்கி போன்றவர்கள் போராடி வெற்றிகண்டதின் விளைவாகத்தான் இன்று ஆண்டுதோறும் சென்னையில் தமிழிசைவிழாக்கள் நடைபெறுகின்றன.
இசைவிழாக்கள் பெரிய அரங்குகளில் மட்டுமில்லாமல் நகரின் பல இடங்களில் சிறிய அளவு ரசிகர்களுடனும் வளர்ந்துகொண்டிருக்கிறது. அண்மையில் நகரின் ஒரு பரபரப்பான மெட்ரோ ஸ்டேஷனின் அமைதியான பகுதியிலேயே, அண்மையில் ஒரு இசைக்கச்சேரி நடந்தது
.
இந்துஸ்தானி, கஜல், ராக், மேற்கத்திய கிளாஸிகல். தமிழ் திரையிசை, இந்தி திரையிசை வெளிநாட்டுகுழுவினரின் இசை என்று எல்லா வடிவ இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்னையின் அரங்கங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த அளவு இசை என்பது நகரோடு ஒன்றிப்போன சென்னை நகரத்துக்கு யூனஸ்கோ தந்திருக்கும் கெளரவம் தாமதமானலும் தகுதியானதுதானே?. மகிழ்ச்சியோடு ஏற்போம்.

11/11/17

நேதாஜி





.......நேதாஜி புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு  இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. செப் 22ல் வெளியான புத்தகம்  இதுவரை  சென்னயின் இரு பெரிய புத்தக நண்பர்கள் குழுவில்  ஆய்வுடன் அறிமுகப்படுத்தபடிருக்கிறது. 3  பத்திரிகைகள் விமர்சனம் எழுதியிருக்கின்றன. 
ஒரு எழுத்தாளினின் சந்தோஷமான கணங்களில் ஒன்று அவன் எழுத்தும் உழைப்பும் ஒரு வாசகனால் உணரப் பட்டு அவனால் மனப்பூர்வமாக பாரட்டப்படும் போது,  பேஸ் புக்கில் ஒரு நண்பர் எழுதியிருப்பது இது.
. மிக்க நன்றி Mr Murali Seetharaman..


........  எனக்கு வசதி இருந்தால் Ramanan Vsv யின் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு வைர மோதிரம் இழைத்துப் போடுவேன்: அப்படி உழைத்திருக்கிறார் மனிதர்! தகவல், தகவல், தகவல்... அப்படி ஒரு உழைப்பு அவருடைய "நேதாஜி - மர்ம மரணம்" புத்தகத்தில்!
ஒரு சாம்பிள்: "இந்தோ ஜெர்மனி சொஸைட்டி என்ற பெயரில் ஜெர்மனியில் வாழும் இந்தியர்களும், இந்திய சுதந்திரத்துக்கு ஆதரவு தரும் ஜெர்மானியர்களும் இணைந்திருந்தனர். 1942 செப்டம்பர் 11- இந்த அமைப்பின் ஆண்டு விழா ஹாம்பர்க் நகரில் நடைபெற்றது. ஜெர்மன் தேசிய கீதம் வாசித்து முடிந்ததும் மற்றொரு கீதம் வாசிக்கப்பட்டது. புன்னகையுடன் இது சுதந்திர இந்தியாவின் தேசியகீதம் என்று சுபாஷ் அறிமுகப்படுத்தினார். நமது தேசிய கீதமாக இன்று ஒலிக்கும் "ஜன கண மன" முதலில் பியானோ இசையில் ஒலித்தது ஜெர்மனியில்தான்!
1911 Dec 27 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட தாகூரின் பாடல் சுபாஷை மிகவும் கவர்ந்தது. அதை இந்திய தேசிய கீதமாக அறிவிக்கத் தீர்மானித்தார் சுபாஷ். ஆனால் அதன் இசை வடிவம் எவரிடமும் இல்லை. சுபாஷ் தன் கல்கத்தா நண்பர்களைளத் தொடர்பு கொள்ள அதன் இசை நொட்டேஷனை அம்பிக் மஜூம்தார் என்பவர் எழுதி அனுப்பினார். அதுதான் முதன் முதலில் பியானோவில் வாசிக்கப்பட்டது.
இந்த ஒலிநாடா சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழ் INA வீரர்களால் பாதுகாக்கப் பட்டது. 1950 ல் ஐ நா சபையில் ஒலித்த இந்த ஒலிநாடா, இப்போது அகில இந்திய வானொலிக் காப்பகத்தில் உள்ளது!"
தகவல் களஞ்சியம்! ரமணனின் அயரா உழைப்பு! நேதாஜி பற்றி அவ்வளவு தகவல்கள்! வாய்ப்பு இருப்போர் வாங்கிப் படியுங்கள்! (கிழக்கு பதிப்பகம் -விலை ரூ150/-)

8/11/17

எழுத்து மேலாண்மையின் அடையாளம் இவர்


 அஞ்சலி 



ஒரு இலக்கிய கூட்டத்தில் பேசும்போது "நல்ல படைப்புகளைப் படைக்க ஒரு எழுத்தாளன் பள்ளியிலோ கல்லூரியிலோ போய்ப் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை, தன்னை, தான் வாழும் சூழலையும் சமுத்த்தையும் கூர்ந்து கவனித்து அதைத் துணிவுடன் சொல்லும் திறன் இருந்தால் போதும்" என்றார் திரு ஜெயகாந்தன்.
இதை அப்படியே செய்து காட்டியவர் தி மேலாண்மைப்பொன்னுசாமி. விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த பொன்னுசாமி வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.
இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். தந்தைக்கு உதவ ஒரு மளிகைகடையில் வேலி செய்தவர் பின்னாளில் தானே கிராமத்தில் ஒரு சிறிய கடையைத்துவக்கினார்.. அந்தச் சிறிய மளிகைக் கடையை நடத்துவதே இன்றளவும் இவரது பிரதான தொழிலாக இருந்தது கடையின் முதலாளியாக இருந்தாலும். இட து சாரி கொள்கைகளினால் ஈர்க்கபட்டவர்.
5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் கவரப்பட்டு எழுத்துவங்கினார். அதனாலோ என்னவோ இவரது படைப்புகளில் பலவற்றில் இடது சாரி சிந்தனைகளின் தாக்கம் அதிகம் இருக்கும்
கரிசல் பூமி தந்த சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் எழுதுவதில் தலை சிறந்தவர். சிறுகதை செம்மல் என அழைக்கப்படும் பொன்னுச்சாமி பல விருதுகளைத் தனது படைப்புகளுக்காகப்பெற்றவர். இவரது மின்சரப் பூ என்ற சிறுகதை தொகுப்புக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கேந்திரிய சாஹித்திய அகதமி விருதும் பரிசும் பெற்றது.

உழைப்பவர்களுக்காக ஒரு உறுதியான அமைப்பு இருக்க வேண்டும் என்ற சித்தாந்தைச் சொல்லும் மார்க்ஸிஸ்ட் கனம்னியூஸ்ட் கட்சியில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கென்றும் ஒரு சங்கம் அவசியம் எனக் கருதி அதை  நிறுவியவர்களில் இவரும் ஒருவர். இறுதி நாள்வரை அதன் செயலாளாரக இருந்தவர்.
மேலாண்மை பொன்னுச்சாமி இதுவரை 24 சிறுகதைத் தொகுப்பு, 6 நாவல்கள், 6 குறு நாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். இவரது முதல் படைப்பைத் தொடர்ந்து பல நல்ல கதைகள் கல்கியில் வெளியானவை.

பத்திரிகைகளுக்குக் கதைகள் அனுப்பும்போது கடித உறைகளின் மீது அவரது சுய விலாசம்” மேலாணமை பொன்னுச்சாமி மேலாண்மறைநாடு என்று மட்டுமே குறிப்பிட்டிருப்பார். வீட்டு இலக்கம் தெருவின் பெயர் மவட்டம் பின் கோட் எதுவுமிருக்காது.ஒரு ஊரின் அடையாளாமாக ஒரு எழுத்தாளன் வாழ்வதென்பது எலோருக்கும் வாய்க்காது என்கிறார் எழுத்தாளார் பா. ராகவன்.
66 வயதில் உடல் நலக்குறைவால் பாதிக்கபட்டு இறைவனடி சேர்ந்த மேலாண்மை போன்னுச்சாமியின் இழப்பு எழுதுலகின் பேரிழப்பு 
 ( கல்கி12/11/17ல் எழுதியது)