31/1/10

புனிதமான போர்க்களம்


புனிதமான போர்க்களம்                      

இந்திய தேசிய நெடுஞ்சால எண் ஒன்று  என்ற கெளவரத்தைப் பெற்றிருக்கும்  பரபரப்பான டெல்லி -ப்தான்கோட்  6 வழிச்சாலையில் சென்றுகொண்டிருக்கும் நம்மைக் சட்டென்று கவரும் அந்த பிரமாண்டமான நுழைவாயிலும் அதன் மீதிருக்கும் கீதோ உபதேச சிற்பமும் நாம் பார்க்க போய்க்கொண்டிருக்கும் ‘குருஷேத்திரா’ நகர் அதுதான் என்பதைச் சொல்லுகிறது. பல பஞ்சாப்-ஹ்ரியான கிராமங்களைப்போல குருஷேத்திராவும் மெல்ல தனது கிராம முகத்தை இழந்து நகரமாகிக் கொண்டிருப்பது  அதன் வீதிகளில் தெரிந்தாலும், நகர் முழுவதிலும் சாலைச் சந்திப்புகளில் (*)  காணப்படும் அர்ஜுனன்சிலை, விஷ்ணுசக்கரம் தாங்கிய பகவானின் விரல், கீதையின் வாசகங்கள் பாதிப்பிக்கபட்ட பாறைகள் அந்த இடத்தின் பாரம்பரியத்தை அழகாகச் சொல்லுகிறது.
“புனித கீதை பிறந்த இடத்தைப் பார்க்க எப்படி போகவேண்டும்?” என்ற நமது கேள்விக்கு “அதற்கு 10கீமீ போகவேண்டும் -எங்களூரில்அதைத்தவிரவும் பார்க்கவேண்டிய பல முக்கிய இடங்களிருக்கிறது பார்த்து விட்டு அங்கே போங்களேன்”  டைட்டான ஜீன்ஸும்,முழுக்கை சட்டையும் அணிந்திருந்த அந்த பஞ்சாபி பெண் சொன்ன போது முகத்தில் சொந்த மண்ணின் பெருமை தெரிந்தது.
அவர் தந்த பட்டியலில் முதலிடம் இந்த தீர்த்தம்.(*)  1800 அடிநீளம் 1800அடி அகல பரப்பில் பறந்து விரிந்திருக்கும்  இந்த பிரம்மஸரோவரைப் பார்த்து பிரமித்து நிற்கிறோம். சரியாகத்தான் பெயரிட்டிருக்கிறார்கள்.(ஸ்ரோவர்என்றால் கடல்.)நீண்ட படித்துறைகள் அகன்ற பாதை, உடைமாற்றிக்கொள்ள வசதியாக கட்டப்பட்ட மண்டபங்களால் இணைக்கப்பட்ட  சுற்று புற பிராகாரம் அதன் மேல் தளத்திற்குப் போக படிகள்  அங்கே வசதியாக உட்கார்ந்து இந்த அழ்கான அமைதிக்கடலை ரசிக்க ஆசனங்கள் எல்லாவற்றிக்கும்மேல் பளிச்சென்ற பராமரிப்பு. ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவுமிருக்கிறது. (*)கிரகணகாலங்களில் இங்கு நீராட பல லட்சம் பத்தர்கள வருகிறார்கள் என்ற தகவல் பிரமாண்டத்திற்கான காரணத்தைப் புரிய வைத்தது. தீர்த்தின் நடுவே ஒரு சிவன் கோவில். தீவாகயிருந்த இதற்கு  இப்பொது எளிதில் போக ஒரு சின்ன பாலம். ஏரியில் நீர் ஏறினாலும் உள்ளே நீர் புக முடியாத வகையில் அமைக்கபட்டிருக்கிருக்கும்  அழகிய அந்த சின்னஞ்சிறு கோலில்  பெரிய நீர் பரப்பில் மிதக்கும் சின்ன படகைப்போலிருக்கிறது.
இந்த புனித நீராடுமிடம் நகரின் நடுவிலிருப்பதால் விழாக்காலங்களில் மட்டும்  வாகனங்கள் பயன் படுத்த கரைகளை இணைத்து கட்டப்பட்டிருக்கும் அந்த பெரிய பாலத்தில், நீர்பரப்பைத்தழுவி வரும் குளிர்ந்த காற்றில் நடந்து மறுபுறம் வரும் நம்மை தாக்கும் மற்றொரு ஆச்சரியம்  அங்கே கம்பீரமாக நிற்கும்  பிரமாண்டமான  அந்த வெண்கல சிற்பம். குழம்பிய முகத்துடன் நிற்கும் அர்ஜுனன்,  வலது கரத்தில் குதிரைகளின் கடிவாளங்களை லாகவமாக பிடித்தபடி முகத்தை சற்றே திருப்பி அவருடன் பேசும் கண்ணண், சிறீப் பாய தாராகயிருக்கும் குதிரைகள் என்று ஒவ்வொரு அங்குலத்திலும்  உயிரோட்டத்தைக் காட்டும் அந்த பிரமாண்டமான கீதாஉபதேச காட்சி சிற்பத்தின் செய்நேர்த்தி நம்மை அந்த இடத்திலியே கட்டிப் போடுகிறது.. ஓடத் துடிக்கும் நான்கு குதிரைகள் காட்டும்  வெவ்வேறு முக பாவனைகள்,  பறக்கும்கொடிதாங்கிய ரதத்தின் குடையின் முகப்பில் சிறிய ஆஞ்னேயர் உருவம்,குடையிருந்து தொங்கும் சிறுமணிகள்(*) போன்ற சின்னசின்ன விஷயங்கள் கூட நுட்பமாக வடிக்கப்பட்டிருப்பதில் உருவாக்கிய கலைஞர்களின் ஆத்மார்த்தமான உழைப்பை உணருகிறரோம்.. எத்தனைபேர், எத்தனை நாட்கள் உழைத்தார்களோ. என்று வியக்கிறோம். (*)அந்த வாளகத்தைவிட்டு வெளியே வந்து நடக்கும்  வீதி முழுவதும் பல அறக்கட்டளைகள் நிறுவியிருக்கும் கீதா மந்திர்கள். அம்புப்படுக்கையில் கிடக்கும் பிஷ்மருக்கு தன் பாணத்தல் அர்ஜுனன்,  நீலத்திலிருந்து நீர் வழுங்கும் காட்சியையும், தன் குருதியாலேயே  முதியவருக்கு கர்ணன்   தானம் தரும் காட்சியையும் சிலைகளாக்கி முகப்பில் நிறுத்தியிருக்கும்  அந்த பிர்லா அறக்கட்டளையின் மந்திருக்குள் நுழைகிறோம்.(*) நிறுவிய காலகட்டதில் நவீன மாகயிருந்திருக்கும் நகரும் பொம்மைகளாலான மாஹபாரதகாட்சிகள் இன்று பொலிவிழந்தும் செயலிழந்துமிருக்கிறது.
இவ்வளவு பெரிய அறக்கட்டளை இதையேன் கவனிக்காமல் விட்டிருகிறார்கள் என்று எண்ணிய படியே நகரின் நடுவேயிருக்கும் அந்த உயரமான பெரிய  சிலிண்டர் வடிவ கட்டிடத்திலிருக்கும் “ஸ்யன்ஸ் செண்ட்டருக்குள்” நுழைகிறோம்.(*) முதல் தளத்தின் வட்ட சுவர் முழுவதிலும் தரையிலிருந்து மேற்கூறைவரை வரை 35அடி உயர பாரதப்போரின் காட்சிகள் முப்பரிமாணசித்திரமாக நிற்கிறது. ஓளியமைப்பு, தொலைவில் ஒலிக்கும் மரண ஒலங்கள் மெல்ல கேட்கும் கீதை, சுற்றியிருக்கும்  அந்த 18 நாள் போர்காட்சிகள்,எல்லாம்  நடுவில் நிற்கும் நமக்கு ஒரு போர்களத்திலிருக்கும்.உணர்வை எழுப்புகிறது. அந்த சூழ்நிலைதரும் மனஅழுத்தம் அந்த தரமான ஒவியங்களை ரசிக்க முடியாமல் செய்கிறது.
தரைத்தளத்திலிருக்கும் அந்த கருவூலத்தைப் பார்த்தபின் தான் பாண்டவ, கவுரவர்களின் மூதாதையர்களான குரு வம்சத்தினரரின் முதல் அரசர் தவமிருந்து வரம்பெற்று உருவாக்கியது தான் பரத நாடு, குருஷேத்திற்கு வந்த சீன யாதிரிகர் யூவான் சூவாங் தனது குறிப்பில் இந்த நகரைப் புகழ்ந்திருப்பதும், இந்த இடம் முகமதியர், சீக்கியர்  புத்த மத்தினருக்கும்  முக்கியமான வழிபாட்டுதலம், கெளதம புத்தர், குரு கோவிந்தசிங், வந்திருக்கிறார்கள், போன்ற பல வியப்பான தகவல்களை அறிந்து கொள்கிறோம்.
நகரில் 300மேற்பட்ட கோவில்களிருப்பதைவிட ஆச்சரியம் அவற்றில் தினசரி வழிபாடு நடைபெறுவதுதான், புனிதமான் கீதைபிறந்த இடத்தைப்பார்க்க பயணத்தை தொடரரும்  வழியில் நாம் நிற்கும் இந்த பத்திரகாளிகோவில் தான் மிகமிக பழமையான சக்திபீடம். கிருஷ்ணரே வழிபட்டதாக அறியப்பட்டது. வேண்டிக்கொண்டபடி போரில் வெற்றி அருளியதால் பாண்டவர்கள் தங்கள் குதிரைகளையே அன்னைக்கு காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள்.இன்றும் வேண்டுதல் பலித்தால் பத்தர்கள் சிறிய மண்குதிரை பொம்மையை காணிக்கையாக படைக்கிறார்கள். சன்னதியில் மலர்ந்த தாமரையில் நிற்கும் ஒரு தூண்டிக்கப்பட்ட கால், தேவியின் உடல் வெட்டி வீசப்பட்டு விழுந்தஇடங்கள் எல்லாம் சக்திபீடங்கள் என்றும் இங்கு விழுந்தது கால் என்றும் அறிகிறோம்.(*) இப்படி தனியாக அங்கம் மட்டும் வேறுஎங்காவது பூஜிக்கப்படுகிறதா என எண்ணிக்கொண்டே பயணத்தைத் தொடர்கிறோம்.
அறுவடைமுடிந்து காய்ந்து கிடக்கும் நிலங்களையும் குடிசை  வடிவில் அடுக்கபட்டிருக்கும் வைக்கோல் போர்களையும், நகரநாகரிகத்தின் நிழல்படாத சில அசலான ஹ்ரியானா கிராமங்களையும் கடந்து நாம் வந்திருக்குமிடம் ஜ்யோதிஷர்.     
 மாங்கனி வடிவத்தில் பச்சை வண்ணத்தில் நீர் நிறைந்த ஒரு குளம். ஒரு புறத்தில் அல்லி பூத்திருக்கிறது, அதன் ஒரு கரையில் வழவழப்பான தரையுடன் பெரிய அரை வட்ட மேடை..அகலமான படிகள். நடுவே  வலையிட்டு மூடிய ஒரு ஆலமரம்.(குளத்தில் அதன் இலைகள் விழாமலிருக்கவும் பறவைகள் வந்து அமைதியைக்குலைத்து விடாமலிருக்கவும்) மரத்தைச் சுற்றி   வெண்சலவைக்கல் மேடை. அதன் மீது  கண்ணாடி கதவிடப்பட்ட சிறு மண்டபம்.உள்ளே சலவைக்கல்லில்  கீதா உபதேசகாட்சி. மலர்கள் பரப்பிய  தரையில் எரியும் ஒற்றை அகல். மரத்தின் அடியில் நடப்பட்டிருக்கும்  சிறு கல். கொண்டுவந்த சிறு கீதைப்புத்தகங்களை மரத்தின் அடியில்வைத்து பூஜிப்பவர்கள்.சற்றுதொலைவில் அமர்ந்து கீதை வாசிப்பவர்கள். தியானம் செய்பவர்கள். சன்னமான  ஒலியில் ஸ்லோகம். என அழகான அந்த இடம் ஒரு தெய்வசன்னதியைப்போல இருக்கிறது. கீதையின் முதல் ஸ்லோகத்தின் முதல் வரியில் சொல்லபட்டிருக்கும்“தர்மஷேத்திரம்” இதுதான். இந்த குளமும். ஆலமரமமும் தான் நடந்த பாரதப்போருக்கும், பஹவான் கிருஷ்ணர் அர்ஜுனனக்கு கீதையை உபதேசித்தற்குமான சாட்சி.. அந்த மரத்தின் விழுதுகளில்   வழித்தோன்றலாக எழும் மரங்களை பலஆயிரமாண்டுகளாக போஷித்து பாதுகாத்துவருகிறார்கள். தொடர்ந்து  பராமரிக்கபடும் குளத்தையும், மரத்தையும் தரிசிப்பதை புண்ணியமாக கருதி வருபவர்களுக்கு, அருகிலேயே கீதைபிறந்த கதையை  தினசரி இரவில் ஒலி,ஒளிக்காட்சியாக   காட்டுகிறர்கள்(*)
ஒருபுறம் ஆராய்ச்சியாளார்கள் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தை  நிருபிக்க சான்றுகளைத் தேடி சர்ச்சை செய்துகொண்டிருப்பதையும், மறுபுறம் காலம் காலமாக செவிவழிசெய்தியாகச் சொல்லபட்ட இந்த  சாட்சிகளே தெய்வமாக மதிக்கபடும் வினோதத்தையும்  என்ணிக் கொண்டே திரும்புகிறோம்..   “ கீதை எப்போது சொல்லபட்டது என்பது நமக்கு முக்கியமில்லை.அதில் என்ன சொல்லபட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்” என்ற விவேகானந்தர் எழுதியிருப்பது நினைவிற்கு வந்தது. எவ்வளவு அற்புதமான வாசகங்கள்.!