சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4/7/24

இசை ( சிறுகதை)

              

ரமணன்
நேற்று மாலை தியாகராஜ ஆராதனையையொட்டி மியூசிக் அகடமியில் டி,எம். கிருஷ்ணா கச்சேரி. நீண்ட நாளைக்கு பின் கிருஷ்ணா அகடமியில் பாடுவதால் வழக்கமாக வரும் ரசிகர்களை விட இந்த சர்ச்சைக்குரிய கலைஞரை கேட்க வந்த இளைஞர்கள் தான் அதிகம்.நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே செகரட்டரி இந்தக் கச்சேரியில் தியாகய்யரின் பாடல்கள் மட்டும் தான் என்று அறிவித்துவிட்டதால் பெருமாள்முருகனை கிருஷ்ணா துணைக்கு அழைக்க மாட்டார் என்பது ஆடியன்ஸ்க்கு புரிந்து விட்டது..
திவ்யநாம கீர்த்தனை, நாரயணஹரி யமுனா-கல்யாணி,கீதார்த்தமு என்று தியாகராஜரின் கீர்த்தனைகளை கம்பீரமாக துளியும் சேதப்படுத்தாமல் அழகாக ஒரு பிசிரில்லாமல் பாடி ஆடியன்ஸை கட்டிப்போட்டார் கிருஷ்ணா. அதுவும் இரண்டாவதாக எடுத்துக்கொண்ட “ஏடி ஜன்மமிது?” வாராளி ராகத்தில் ஆலாபனை செய்து உச்சஸ்தாயில் அதைச் செதுக்கிக் கொண்டிருந்த போது உணர்ச்சி மேலிட்டு கண்களில் நீர் வழிந்தது. இனி இந்த ராகத்தில் இதுக்குமேலே பாட எதுவுமில்லை என்று நினைக்க வைத்தது. ஒரு நல்ல பாடகனுக்கு மிகச்சரியான பக்கவாத்தியங்கள் அமைவது என்பது வரம். அன்று வயலினில் ஶ்ரீராம் குமாரும்,மிருதங்கத்தில் அருண்பிரகாஷும் கடத்தில் குருபிரசாத்தும் தந்த அனுசரணையான ஒத்துழைப்பு, கிருஷ்ணா அந்த வரத்தைப் பெற்றவர் என்பதைப் புரிய வைத்தது. போன வருடம் இதே போல் அகாடமியில் நடந்த தியாகய்யர் ஆராதனையில் பாடிய பாம்பே ஜெய்ஶ்ரீக்கு சில மாதங்களுக்கு பின்னர் சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் கிருஷ்ணாவுக்கு அந்த பாக்கியம் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை..

கட்டுரையை முடித்துவிட்ட ராஜன் மீண்டும் ஒரு முறை படித்துப்பார்த்து சில திருத்தங்கள் செய்தபின் அதை இ மெயிலில் அனுப்பிவிட்டு லேப்டாப்பை மூடினார்.
ராஜன் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் அறிந்த, நூறாண்டுகளை கடந்து நிற்கும் ஒரு ஆங்கில நாளிதழக்கு இசைவிமர்சனங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். கல்லூரியிலிருந்து வெளிவந்த காலத்திலிருந்து அந்த நாளிதழலில் பணியாற்றி வந்த அவர் அதே நாளிதழில் ஸ்போர்ட்ஸ், ரேஸிங் போன்ற பல பகுதிகளின் ஆசிரியராகயிருந்து ஓய்வுபெற்றவர். இசையில் பெரும் விருப்பம். அவரைப்பொறுத்தவரை இசை தான் வாழ்க்கை. நகரினரின் இன்றைய எல்லா இசைக்கலைஞர்களையும் அவர்களின் சிறுவயது முதலே அறிந்தவர். இசையின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். அதனால் அவர் எழுதும் விமர்சனங்களுக்கு நல்ல வரவேற்பு.
பொதுவாக இசை விமர்சகர்களில் இரண்டு வகையுண்டு. சுப்புடு பாணியில் தன் மேதாவிலாசத்தை காட்டி இசைக்கலைஞர்களை தாக்குவதையும், தூக்குவதையும் செய்பவர்கள் ஒரு வகை. இசையின் அனைத்து நுட்பங்களையும் ராகங்களின் பாரம்பரியத்தையும் அறிந்தவர்கள் மற்றொரு வகை. இதில் ராஜன் இரண்டாவது வகை. அதனால் இசைக்கலைஞர்கள் இவர் விமர்சனங்களைப் படிக்க ஆவலாக காத்திருப்பார்கள். அதைவிட முக்கியமான விஷயம் கச்சேரிகளில் அவர் குறையாக கருதும் விஷயங்களைக் கூட பெரிதாக எழுதி விடமாட்டார்.
அந்த கலைஞரை அழைத்து “அதை கொஞ்சம் சரி செஞ்சுக்கப்பா” என்று அவருக்கும் மட்டும் ஆலோசனை வழங்குவார். இதனால் 2000 கிட்ஸ் என்று இன்று அறியப்படும் இளம் பாடகர்களுக்கும் அவரைப்பிடிக்கும்.
ராஜன் இன்று எழுதியனுப்பியிருக்கும் விமர்சனம் நாளை வெளியானவுடன் சர்ச்சைகளை கிளப்பும் என்று அவருக்கு தெரியும். என்றாலும் அவர் நம்பிக்கையுடன்தான் எழுதியிருக்கிறார். அது அவர் பாணி. தன் ஆபீஸை கூப்பிட்டு கட்டுரை அச்சுக்கு போய்விட்டதை உறுதி செய்து கொண்டு விட்டு தூங்கப்போகிறார். படுக்கைக்கு அருகில் அதிகம் கையாளப்படாத தேனுகா ராகத்தில் பாலமுரளியின் ராகவைய்யா, ராமைய்யா பாலிம்பவையா மெலிதாக சிடியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
வழக்கம்போல அதிகாலையில் எழுந்து யோகா பயிற்சிகளை முடித்துவிட்டு ரேடியோவை ஆன் செய்கிறார் ராஜன். ஒரு நாளிதழின் ஆசிரியாராக இருந்தாலும் தினமும் அவரது காலை ஆல் இந்தியா ரேடியோவின் செய்திகளை கேட்காமல் தொடங்காது. எத்தனை டிவி செய்தி சானல்கள் வந்தாலும் ரேடியோவில் செய்திகளைக் கேட்டும் ஒரு சிலரில் ராஜனும் ஒருவர்.
“ என்னாச்சு அப்பா ஏன் இவ்வளவு வால்யூம்? தெருமுழவதுக்கும் நீயூஸ் கேட்கிறது” என்று மாடிக்கு வந்து ரேடியோவின் வால்யூமைக் குறைக்கிறார் ராஜனின் மகள் கீதா.
“குறைக்காதே அம்மா கேட்கல்லை” என்கிறார். ராஜன்.
“என்னாச்சு அப்பா? என்று பதறிய கீதா ரேடியோவின் வால்யூமை மிகவும் குறைத்து வைத்து படிப்படியாக உயர்த்தி இப்போது கேட்கிறதா என்றுகேட்டுக்கொண்டிருக்கிறார்.. முழு வால்யூம் வைத்தபோது“இப்போத்தான் மெள்ள கேட்கிறாப்லே இருக்கு” என்று அவர் சொல்லும் போதே கீதாவிற்கு வீபரிதம் புரிந்தது.
“என்னம்மா இப்படி?” என்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் பயமும் கலந்த குரலில் ராஜன்
ஹியரிங்கில் ஏதோ பிராப்ளம் அப்பா டாக்டரை பார்க்கலாம் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கறேன் என்று கீதா வேகமாக படியிறங்குகிறார்.
தன்னால் கேட்கமுடியவில்லை என்பதை உணர்ந்துகொண்ட ராஜன் அப்படியே உடைந்துபோகிறார். அழுகை வருகிறது. அவரது சேரிலேயே உறைந்து உட்கார்ந்திருக்கிறார். அவரது வழக்கமான காலை நடவடிக்கைகளான வாக்கிங், தோட்டவேலை பூஜை எதையும் செய்யவில்லை.கீதா பலமுறை அழைத்தும் காலை உணவைச் சாப்பிடவில்லை.
கீதா அருகிலுள்ள ஒரு ENT டாக்டரிடம் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கியிருப்பதைச்சொல்லி ரெடியாக வேண்டும் என்று சொல்லுகிறார்.
ராஜனின் செல் போன் அழைக்கிறது எடுத்துக் காதில்வைத்துகொள்கிறார். மறு முனையில் பாடகி செளமியா. “மாமா அடுத்த வாரம் கிளிவ் லாண்ட் புரோகிராம் டேட்டும் கன்பர்ம் ஆகியிருக்கு. இந்தத் தரம் லைவ்வும் இருக்கு. லிங்க் அனுப்பியிருக்கேன் மறக்காம கேளுங்கோ”. செல்போனில் பேசியது தெளிவாகக் கேட்டாலும் தன் நிலையைச் சொல்ல முடியாமல் கண்களில் நீர் முட்ட குரல் கம்ம "செளமியா" என்று தழதழத்து குரலில் பேச ஆரம்பிப்பதை கவனித்த கீதா ஓடி வந்து செல்போனை வாங்கி “ செளமியா அப்பாவிற்கு உடம்பு சற்று சரியில்லை” நாளைக்கு பேசுவார் என்று சொல்லி போனை ஆப் செய்கிறார்
.
“அப்பா உன் பிராப்ளத்தை இப்போதே எல்லோரிடம் சொல்ல வேண்டாம். அரை மணியில் உலகம் பூரா வாட்ஸ்ப்பில் பரவிடும்” – இப்போ டாக்டரை பார்க்கப்போறோம் அப்புறம் பிரண்டஸ்கிட்ட பேசலாம்”.
அந்த லேடி ENT டாக்டர் கீதா சொன்னதை பொறுமையாக கேட்டபின் ராஜனின் காதுகளைச் சோதிக்கிறார்.
“காதில் ஒன்றும் பிரச்னையில்லை.வயது அதிகமாகிவிட்டதால் கேட்கும் திறன் குறைந்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால் அதைச்சரியாகக் கண்டுபிடிக்க டெஸ்ட் ஒன்று இருக்கிறது. அதை லேப்பில் செய்து ரிப்போர்ட் கொண்டு வாருங்கள் அதன் பின் டிரிட்மென்ட்டை முடிவு செய்யலாம்.” என்கிறார். கீதா அங்கிருந்தே அந்த லேப்பை தொடர்பு கொள்கிறார். மறுநாள் தான் அப்பாய்ண்ட்மென்ட் கிடைக்கிறது. அப்பாவும் மகளும் வீடு திரும்புகிறார்கள்.
காரில் ஏறிய ராஜன் சுரத்திழந்து மிகுந்த கவலையுடன் மகளிடம் “ ஏம்மா எனக்கு இப்படியாயிடுத்து?”
“கவலைப்படாதிங்க அப்பா லேப்லே டெஸ்ட் செய்து பார்க்கலாம்” என்று முகத்தில் கவலையைக் காட்டாமல் கீதா சொன்னாலும் அவர் மனத்துக்குள் கேட்டகுரல் “அப்பாவிற்கு இது சிரீயஸ் பிராப்ளம்”
ராஜனின் மகன் ராகவன் அமெரிக்காவில் ஒரு பெரிய நிதி நிறுவனத்தில் உயர் பதவியிலிருப்பவர். கீதா அவரிடம் செய்தியைச்சொன்னவுடன், “ஏன் உடனே எனக்குச் சொல்லவில்லை? ஏன் இந்தமாதிரி சின்ன டாக்டர்களிடம் கூட்டிப் போனாய்? இது பெரிய விஷயமில்லையா என்று படபடவென்று சீறினார்.
இப்படி படபடப்பது தன் தம்பியின் இயல்பு என்பதால் கீதா” தெரியும்டா. நானும் ஒரு நல்ல எக்ஸ்பர்ட்டை பற்றி விசாரித்துக் கொண்டுதானிருக்கிறேன்” என்றார்.
ராஜனுக்கு செல்போன் தெளிவாக கேட்பதால் அதில் ராகவன் அப்பாவிடம் கவலைப்படாமலிருங்கள் என்று ஆறுதலாகச் சொல்லுகிறார். கண்களில் நீர் வழிய பதில் பேச முடியாமல் ராஜன் போனை வைத்து விடுகிறார்.
தன்னால் நல்ல இசையை கேட்க முடியாமல் போய் விடுமே, நாளிதழுக்கு விமர்சனங்கள் எழுத முடியாது போய்விடுமே என்ற கவலை அவரை பெரிதாக அழுத்த தன் மேஜையை விட்டு அகலாமல் கவலையில் ஆழ்ந்திருந்தார். "எனக்கேன் இப்படி?" சுய பச்சாதாபம் மேலிட செய்வதறியாது அமர்ந்திருந்திருந்தார்.
கடந்த வாரம் அவர் இசையும் தெய்வீகமும் பற்றி எழுதிய கட்டுரையின் வரிகள் அவர் மனதில் ஓடியது. “தெய்வீகமும் இசையும் பிரிக்க முடியாதவை. தெய்வீகம் தன்னை இசையின் மூலம் வெளிப்படுத்துகிறது. நல்ல இசையைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்பதை இந்தியாவின் அத்துனை மதங்களும் சொல்கின்றன. நல்ல இசையைக் கேட்கத்தான் கடவுள் நமக்கு காதுகளைக் கொடுத்திருக்கிறான் என்பதை பஞ்சாபியமொழியில் பல பக்தி பாடல்களை எழுதியிருக்கும் குரு அமர்தாஸ் தன்னுடைய ஆனந்த் சாஹிப்பில் இப்படி குறிப்பிடுகிறார்.
“ஓ, என் காதுகளே, நீங்கள் உண்மையான நல்ல இசையை கேட்க கடவுளால் அனுப்பப்பட்டீருக்கிறீர்கள், இதனால்தான் உங்களை உடலின் ஒரு பாகமாக ஆக்கியிருக்கிறார். உண்மையான நல்ல இசையை தினமும் கேளுங்கள். இப்படி கேட்பதால் உடலும் மனமும் செழிக்கும், நாக்கு இனிமையில் திளைக்கும்.”
இப்படியொரு கட்டுரை எழுதிய என் காதுகளை ஏன் கடவுள் பறித்துக்கொண்டுவிட்டார்? என்றெண்ணி கலங்கிக் கொண்டிருந்த ராஜனின் சிந்தனையோட்டத்தை “காபி சாப்பிடுங்கஅப்பா” என்ற கீதாவின் குரல் கலைக்கிறது. செல் போன் அழைக்கிறது
போனில் அமெரிக்காவிலிருந்து ராகவன் “ அப்பா போனை ஸ்பீபக்கரில் போடுங்க கீதாவை கூப்பிடுங்க என்கிறார்.
நான் அப்பா பக்கதில்தான் இருக்கிறேன் பேசு என்கிறார் கீதா
“டாக்டர் ஈஸ்வர் கிட்ட பேசியிருக்கிறேன். ஆசியாவின் சிறந்த ENT எக்ஸ்பர்ட்களில் ஒர்த்தர்.. தமிழ்நாட்டு மெடிகல் காலேஜிலும் லண்டன் காலேஜ்களிலும் தங்க மெடல்கள் வாங்கியவர் லண்டனிலும் அமெரிக்காவிலும் கிடைத்த வேலைகளை வேண்டாம் என்று சென்னையிலே பிராக்டிஸ் செய்கிறார். அடிக்கடி சந்திப்பதில்லையே தவிர அவர் எனக்கு நல்ல பிரண்ட். சில நாளைக்கு முன்னால் கூட பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்து காது கேட்கவைத்தவர்ன்னு நீயூஸ்ஸெல்லாம் வந்ததே அவர்தான்.. அவ்வப்போது பேஷண்ட்களை சந்திக்க வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருப்பவர். நம் அதிர்ஷ்டம் இந்தவாரம் சென்னையில் இருக்கிறார். அவரிடம் அப்பாவை அழைத்துப் போ. நாளைக்கு ஈவினிங் 5.30 வரச்சொல்லியிருக்கிறார். போய்விட்டு வந்து போன் செய்”
என்று சொன்ன ராகவனிடம் “நல்லதுப்பா நாளைக்கு போறோம்” என்றார் ராஜன்
50 பேருக்கு மேல் காத்திருக்கும் அந்த ரிசப்ஷன் ஹாலில் ராஜனும் கீதாவும் காத்திருக்கிறார்கள். முதலில் வந்தோருக்கு முன்னுரிமை முறையை பின் பற்றும் அந்த மருத்தவமனையில் 5.30க்கு வரும் டாக்டருக்காக 4 மணிக்கே வந்து சீட் பிடித்த நோயாளிகள் அதிகம். தங்கள் முறைக்காக காத்திருக்கும் கீதாவுக்கு இத்தனை பேருக்கா காது பிரச்னை? நம் முறை எப்போ வருமோ என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்.. ராஜன் கண்மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார். தமிழக அரசின் அமைச்சர் ஒருவர் உதவியாளர் உதவியுடன் மெல்லவந்து நேரடியாக டாக்டர் ஈஸ்வரின் அறைக்குள் நுழைகிறார். நல்லவேளையாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் வெளியே வந்துவிட்டார். அதே மருத்துவ மனையிலிருக்கும் வேறுசில டாக்டர்களும் பரபரப்புடன் அடிக்கடி அவர் அறைக்குள் நுழைந்து வெளியேறிக்கொண்டிருந்தனர்.
ராஜன் என்ற ஸ்பீக்கரில் அழைக்கப்பட்டவுடன் கீதாவும் ராஜனும் அறையின் உள்ளே நுழைந்தனர். அவரது பெயருடன் உள்ள ஃபைலைப் பார்த்தவுடன். “ஹலோ சார்! ராகவன் யூஸ்ஸிலிருந்து போன் செய்திருந்தார். அவரும் நானும் ஒரே டீமில் டேபிள் டென்னிஸ் ஆடியிருக்கிறோம். நீங்கள் வந்தவுடனேயே ரிசப்ஷனில் சொல்லி உள்ளே வந்திருக்கலாமே சார். உங்கள் ரிவியூக்களை தவறாமல் படிப்பவர் என் அம்மா. அவரும் டாக்டர். மியூசிக்கும் நன்றாகத் தெரியும். நானும் சின்ன வயதில் அவருக்காக பாட்டுக்கற்றுக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது நீங்கள் எழுதியிருப்பதை என்னையும் படிக்கச்சொல்லுவார். நேற்று டிஎம் கிருஷ்ணாவிற்கு விருது கிடைக்குன்னு எழுதியிருக்கீங்களே? ஷ்யூரா கொடுக்கப்போறாங்களா?” என்று படபடவென்று ராஜனுக்கு பிடித்த சப்ஜகெட்டை பேச ஆரம்பித்தார் டாக்டர் ஈஸ்வர். பேஷண்ட்டிடம் சத்தமாகவும் உடன்வந்திருப்பவரிடம் மெதுவாக பேசுபவர் அவர். டாக்டர் தன் விமர்சனத்தை படித்திருக்கிறார். என்பதைக் கேட்டவுடனேயே இறுக்கமாகயிருந்த ராஜன் முகத்தில் சந்தோஷ ரேகை பரவியது.
விபரங்கள் கேட்டு சோதித்தபின்னர் கிழே லேப் இருக்கிறது அங்கு ஒரு ஆடியோ மெட்டிரிக்குன்னு ஒரு டெஸ்ட் செய்து கொண்டு. ஒரு ஸ்கேனும் எடுத்துக்கொண்டு வாருங்கள். வந்து காத்திருக்க வேண்டாம் நேரே இங்கே வாருங்கள் என்றார்.
ஒரு சவுண்ட் ஃபுருப் அரையிருட்டு அறையில் உட்காரவைத்து வெளியே கண்ணாடிக்கு வெளியே இருப்பவரிடம் அவர் எழுப்பும் வெவ்வேறு ஒலிகள் ஹெட்போனில் கேட்கிறதா என்பதை உள்ளேயிருந்தே விரலைஉயர்த்தி காட்ட வேண்டும் அதை அவர் அவர் ஒரு கம்யூட்டரில் பதிந்துகொண்டே வந்தார்.
அடுத்த அறையில் 5 நிமிடத்தில் முகம் மூக்கு இரண்டு காதுகள் ஸ்கேன் எடுக்கப்பட்டு டெஸ்ட்கள் முடிந்தது. நீங்கள் டாக்டரை சந்தியுங்கள் என்ற அந்த நர்ஸிடம், “ரிப்போர்ட்” என்று கேட்ட கீதாவிற்கு கிடைத்த பதில், “டாக்டர் அவர் சிஸ்டத்தில் பார்த்துக்கொள்வார்”.
லிப்ட்டுக்கு காத்திருந்து மேலே வந்த அவர்களை ஈஸ்வர் உதவியாளர் நேரே அவர் அறைக்கு அழைத்துச்சென்றார். ஒரு சின்னப்பெண்ணை சோதித்துக்கொண்டிருந்த டாக்டர் ஈவர் “வாங்க சார் உங்கள் ஸ்கேனை பார்த்துவிட்டேன். நான் சந்தேகப்பட்ட மாதிரியே உங்கள் காதுகளில் இறுகிய சளி கட்டியாக அடைத்திருப்பதால் கேட்க முடியவில்லை. ஒரு சின்ன அறுவை செய்து அதை எடுத்துவிட்டால் சரியாகிவிடும்.
ஹியரிங்அய்டு தேவையிருக்காது.” என்று மெல்ல காதில் விழுந்த அவருடைய இந்த வார்த்தைகள் ராஜனுக்கு தெய்வ வாக்காகவே கேட்டது. கீதா ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
“மேடம் அந்த ஆபரேஷனுக்கு அவரைத் தயார் செய்ய வேண்டும் அதற்கு அவர் ஒரு வாரம் இந்த மாத்திரைகளை/ மருந்துகளை கவனமாக சாப்பிட வேண்டும்.” போன்ற பல விஷயங்களை கீதாவிடம் படபடவென்றுசொல்லிக்கொண்டே போன டாக்டர் ஈஸ்வர். “அடுத்த வாரம் புதன் ஆப்ரேஷன் வைத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டார் . இந்த நிமிடமே கூட ரெடி என்று சொல்லத்தயாராயிருந்த கீதா “ரொம்பத் தாங்கஸ் டாக்டர் அப்படியே வைத்துக்கொள்வோம்” என்றார்,
ஒருநாள் போவது ஒரு யுகமாகயிருந்தது என்று நாவல்களில் படித்திருக்கும் ராஜன் அதை அந்த ஓரு வாரத்தில் உண்மையாக உணர்ந்தார். மருந்துகள் அவரை தூக்கதில் ஆழ்த்தினாலும் விவரித்துச்சொல்லமுடியாத தவிப்புடன் இருந்தார்.
புதன் கிழமை காலை 7.30 மணி.பலவிதமான டெஸ்ட்கள் முஸ்தீபுக்களுக்கு பின் ஆபரேஷன் தியேட்டரில் ராஜன்.
மங்கலான ஓளி சீலிங்கிலிருந்து ஒலிக்கும் மெல்லக்கேட்கும் இசை, மெல்லிய நறுமணம். சில நிமிடங்களில் பச்சைநிற தியேட்டர் கவுன் அணிந்த டாக்டர் ஈஸ்வர் தன் 3 உதவியாளர்களுடன் வருகிறார். “என்ன ராஜன் சார்? நேத்து நல்லா தூங்கினிங்களா? ரெடியா. ஆரம்பிக்கலாமா என்று கேட்டபடி உங்கள் முகம் மரத்துப்போகும் படி ஒரு லோகல் அனஸ்திஷ்யா கொடுக்கப் போரேன் தூக்கம் வரம்மாதிரி இருக்கும் பயப்படாதிங்க” என்று சொல்லிக்கொண்டே ஆபரேஷனை ஆரம்பிக்கிறார்.முதலில் சில ஓசைகள், டாக்டர் பேசுவது எல்லாம் மெதுவாக கேட்ட ராஜனுக்கு பின்னர் வேறு எதுவும் கேட்கவில்லை. அரை மணிக்கு பின்னர் டாக்டரும் நர்ஸும் பேசுவது, மருத்துவக் கருவிகளை வைக்கும் டங்கென்ற ஓலி எல்லாம் ராஜனுக்கு கேட்டது. ஸீலிங் ஸ்பீக்கரில் ஒலிக்கும் பாட்டும் கேட்டது.
“இது பால முரளியின் நகுமோ டாக்டர்”என்கிறார் ராஜன்,
“டிரிட்மென்ட் சக்ஸஸ்! என்று கட்டைவிரலை உயர்த்தி உங்களுக்காகத்தான் இதை இன்னிக்கு போடச்சொன்னேன். யூ ஆர் ஆல்ரைட். ரூமில் ஓய்வெடுங்கள் 2 மணிநேரம் கழித்துவந்து பார்க்கிறேன்” என்ற சொல்லிக்கொண்டே நெக்ஸ்ட் யாருமா? அந்த சின்னக்குழந்தை தானே ரெடி பண்ணிட்டிங்களா என்று நர்ஸிடம் கேடுக்கொண்டே அடுத்த ஆப்ரேஷன் தியேட்டருக்கு விரைகிறார் டாக்டர் ஈஸ்வர்
நர்ஸ்கள் ரூமில் ஸ்ட்ரெட்சரை நுழைக்கும்போதே “கீதாம்மா இப்போ கிளியராக காது கேக்கிறதும்மா. ஈஸ்வர் நிஜமாகவே ஈஸ்வரன் தாம்மா. தாங்ஸ் சொல்லக்கூட தோணலம்மா. ரூமுக்கு வரும்போது சொல்லணும்” என்கிறார் சந்தோஷத்தின் எல்லையில் இருந்த ராஜன்.
.... இன்றைய வளர்ந்த டெக்னாலாஜி தான் எவ்வளவு வசதியாயிருக்கிறது? நேற்று யுஸ்ஸிலில் கிளிவ் லாண்ட் தியாகய்யர் உற்சவத்தில் செளமியா பாடியதை இங்கிருந்தே கேட்டு விமர்சனம் எழுத முடிகிறது. நேற்றைய கச்சேரி அவருடை கேரியரில் ஒரு புதிய லாண்ட் மார்க். 22 வது மேளகர்த்தா ராகம் கரகரப்ரியா கட்டமைப்பில் விளைவதுதான் இனிமையான 'காபி' ராகம்! இதனில் சிறிது மருவி நிற்பது பாகேஸ்வரி ராகம்! இந்த ராகத்தில் ஆரோகணத்தை ஆறு ஸ்வரங்களில் பாடுவது கம்பிமேல் நடக்கும் வித்தை. கரணம் இல்லை கன வினாடி தப்பினால் கூட ராகம் மாறி விடும் ஆபத்திருக்கிறது. . ஆனால் அதை அனாயாசியமாக செய்து சிலம்பம் ஆடிவிட்டார் செளமியா. நம்மூர் சபாக்களில் இதைப்பாட அமெரிக்காவில் ஒத்திகை செய்து பார்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இன்றைய தலைமுறையினரின் இப்படிப்பட்ட துணிவானசோதனை முயற்சிகள்தான் கர்நாடக இசையை இனி வாழச்செய்யப் போகிறது”…
என்று தன் கட்டுரை முடித்து, ஆபிஸுக்கு இ மெயில் செய்து விட்டு பாகேஸ்வரியில் ஸ்வரத்தை முணுமுணுத்தபடியே தூங்கப்போகிறார் ராஜன்.
May be an image of 2 people, temple and text
All reactions:
You, Vidya Subramaniam, மாலன் நாராயணன் and 77 others

1/8/19



கருணை

    ஆதித்யா.

 

அந்தக் கம்பீரமான சிவப்புவண்ண சென்னை ஹைகோர்ட்  கட்டிடத்தைப் படங்களிலும், டிவி செய்திகளில் மட்டுமே பார்த்திருந்த சீதா இன்று அதனுள் நுழைவோம் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.  அகன்ற  படிகள் ஏறி  நீதிபதிகளின் பெரிய  படங்கள் மாட்டப்பட்டிருக்கும்  அந்த நீண்ட வராந்தாவைக் கடந்து ஆறாம் எண் அறையின் முன் உடன் வந்த தோழி சரோஜாவுடன் தயங்கி நிற்கும் அவளிடம்  விபரங்கள் கேட்டு அட்மிஷன் பாஸை  பார்த்தபின் பாதுகாவர் அனுமதிக்க, உள்ளே சென்று  உட்கார்கிறார்கள் சீதாவும்  அவள் தோழி சரோஜாவும்.
ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின்  பெயர் அழைக்கப்பட்டவுடன்  உள்ளே சென்ற சீதாவிற்கு  . அந்த ஏசியிலும் வேர்த்தது. உயரமான மேஜையில் நீதிபதியையும் சுற்றிலும் சில வக்கில்களும் இருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் கோர்ட்டைப் பார்த்ததும் சீதாவிற்குப் படபடப்பு அதிகமாகியிருந்தது, வாய் உலர்ந்திருந்தது. தன்னால் பேச முடியாமல் போய்விடுமோ  என்ற அச்சமும் எழுந்தது.
நீதிபதியைப் பார்த்தவுடன் தன்னிச்சையாகக் கையெடுத்து கும்பிட்டாள்.
உங்கள் மனுவை நீங்களே வாதிடப்போவதாக அனுமதி கேட்டிருக்கிறீர்களே ஏன்?. இதில் உங்களுக்கு எதாவது முன் அனுபவம் உண்டா? அல்லது யாரவது உதவினார்களா?
அனுபவம் எதுவும் இல்லை. சார் ஆனால் நம்பிக்கையிருக்கிறது என்று மெல்லிய குரலில்.  சொன்ன சீதா தொடர்ந்து  வக்கீல் வைத்துப் பேச எனக்கு பண வசதியும் இல்லை. என்றாள். என் தோழி சரோஜா ஒரு சமுக சேவகி அவர்தான் இந்தமாதிரி நாமே நேராகவே கேட்கலாம் என்று சொன்னார்”.
உங்கள் மனுவை இந்த கோர்ட் ஏன் ஏற்க வேண்டும்? என்பதையும் உங்களுக்கு  எதற்கு அனுமதி வேண்டும் என்பதையும் சுருக்கமாகச் சொல்லுங்கள். அது ஏற்கப்பட்டால் உங்கள் மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படும்.
 என் மகளைக் கருணைக்கொலை செய்ய என்னை நீங்கள்  அனுமதிக்க வேண்டும்என்ற அவளது  தெளிவான  வார்த்தைகளைத் கேட்ட  நீதிபதி திடுக்கிட்டு தலையை உயர்த்தினார். கண்களில் ஆச்சரியம். அந்த ஹாலில் இருந்த பலரது புருவங்கள் உயர்ந்தன. பலர் சீதா பேசப்போவதைக் கூர்ந்து கவனிக்கக் காத்திருந்தனர்.
பல கொலை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை உள்படப் பல வித தண்டனைகள் வழங்கிய அந்த நீதிபதியின் முன் ஒரு கொலையைச் செய்ய அனுமதி வேண்டி ஒரு வழக்கு.
விபரமாகச்சொல்லுங்கள்
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவளுக்கு வயது  ஒன்பதாகிறது பெயர் மகேஸ்வரி. பிறந்த நாளிலிருந்து பல விதமான உடல் உபாதைகளால் அவதிப்படுகிறாள். அவளது முளைக்கு போதிய அளவில் ஆக்கிஸிஜன் செல்லாதால் அவளால்  எல்லோரையும் போல் நடமாட முடியாது. படுக்கையிலிருக்கும் அவளுக்கு உணவு டியூபின் மூலம் செலுத்த வேண்டும் அடிக்கடி வலிப்பு வந்து பலமாகக் கத்துவாள். வேதனையில் அவள் அலறுவது என் வீட்டிலிருப்பவர்களுக்கு மட்டுமில்லை அருகிலிருப்பவர்களுக்கும் அவஸ்த்தையாகயிருக்கிறது. சிலர் போலீஸில் புகார் கூட  செய்துமிருக்கிறார்கள். இந்தக் கோரத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை..  இவள் நிலை என் அடுத்த 5 வயது குழந்தையைப் பாதித்துவிடும் என பயப்படுகிறேன்.  மாதம் மருந்துச்செலவுக்கு மட்டுமே 10,000 வரை ஆகிறது.  குணமாகும் வாய்ப்பில்லை என்கிறார்கள். இந்த நிலையில் பெண்குழதை வளர்க்க முடியாது. என் வாழ்நாளுக்குப் பின் அவளை யார் கவனிப்பார்கள்? இப்படிப் பட்ட குழந்தைகளுக்கான ஹோம் எதுவுமில்லை என்கிறார்கள்.  அதனால் அவளுக்குக் கொடுக்கும் உணவு, மருந்து, ஊசி,  சத்துணவு அனைத்தையும் நிறுத்தி அவளை மரணமடைச் செய்ய விரும்புகிறேன் அதற்கு  உங்கள் அனுமதி வேண்டும் என் பெட்டிஷனில்  எல்லா விபரங்களையும்  மருத்துவ ரிப்போர்ட்கள் போட்டோக்கள் எல்லாம்  இணைத்திருக்கிறேன்.
சீதா  அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு இதைச்சொல்லி முடித்தவுடன் அந்த ஹாலின் அமைதியின் கனம் கூடியது. கேட்ட அனைவருக்கும் ஐயோ என்ற உர்வு எழுந்தது நிஜம்
 உங்கள் கணவர் வந்திருக்கிறாரா?”
இல்லை சார்.  இந்தக்குழந்தையின் நிலை மோசமாகிக்கொண்டே போவதனால் சிலஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டார். நான் ஒரு வங்கியில் பணி புரிந்து  கொண்டிருந்தேன். இந்தக் குழந்தைக்காக விருப்ப  ஓய்வு பெற்று அந்த பென்ஷனில் குழந்தைகளை வளர்த்து வருகிறேன்
.இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதை நீதிபதியின் உடல் மொழி சொல்லிற்று.
உங்கள் மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. ஆனால் சட்டச் சிக்கல் நிறைந்த இதை ஒரு வழக்கறிஞர் மூலம் அணுகுவதுதான்  உங்களுக்கு நல்லது. உங்களுக்கான வழக்கறிஞரை இந்தக் கோர்ட் நியமிக்கும். அவருக்கு நீங்க பீஸ் எதுவும் தர வேண்டாம். அவரே உங்களை விரைவில் தொடர்பு கொள்வார். என்று சொன்ன நீதிபதி அரசின் கருத்துகளை அறிய  அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப ஆணையிட்டார், வழக்கை இரண்டு வாரம் ஒத்தி வைத்தார்.
கோர்ட்டின் நடை முறைகளை அதிகம் அறியாத  சீதா நீதிபதியைப் பார்த்து உடனே நீங்கள் அனுமதிக்க முடியாதா? எனக்கேட்டார்.
சீதாவைப் பரிதாமாகப் பார்த்த அவர் அதெல்லாம் முடியாது. நிறைய நடைமுறைகள் இருக்கிறது. எல்லாம் உங்கள் வக்கீல் சொல்லுவார் என்று சொல்லி அடுத்த கேஸை அழைக்கச் சொன்னார்.
பரவாயில்லை. நான் எதிர் பார்த்ததைவிட நீ நல்லா தைரியமாகத்தான் பேசினே என்று சொன்ன தோழியிடம் , “சரி சரி சீக்கிரம் போவோம் 3 மணிக்கு  மகேஸ்வரிக்கு  மருந்து கொடுக்கணும்  என்ற சீதாவை ஆழ்ந்து பார்த்தாள் சரோஜா. பத்து நிமிடம் முன் அவளைக் கொலை செய்ய அனுமதிகேட்டவள் இப்போது சரியான நேரத்துக்கு மருந்து கொடுக்கத் துடிக்கிறாள்
&&&
வழக்கறிஞர் தினகரனை சீதாவிற்காக நியமிக்கிறது உயர்நீதிமன்றம். நகரின் சீனியர் வழக்கறிஞரான  அவருக்கு நீதிபதி பதவி வந்த போது நிராகரித்தவர். பெரிய ஜுனியர் பட்டாளம்  சட்டபிரிவுகளை,அதில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். அவர் சீதாவுடன் பேசி  பல விபரங்களைச் சேகரிக்கிறார். சில  டாக்டர்களிடமும் பேசுகிறார்.
வழக்கு விசாரணைக்கு வந்த நாளில்  அண்மையில்  சுப்ரீம் போர்ட் வழங்கிய ஒரு  தீர்ப்பில் இம்மாதிரி விஷயங்களில் அந்த நோயாளி விரும்பினால்  கருணைக்கொலையை (passive euthanasia)  அனுமதிக்கலாம். அல்லது  குழந்தையாகியிருந்தால் அவர்களது பெற்றோர்  மருந்து கொடுப்பதை நிறுத்துவதையும், அல்லது அதுபோல் உயிரை மட்டும் தொடர வழங்கப்பட்டிருக்கும் வசதிகளை நிறுத்தவதும் குற்றமில்லை என்று சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டி, ஒரு தாயின் மனஉளைச்சலையும்  அந்த நோயாளி ஒரு பெண்குழந்தை என்பதையும். அந்தப்பெண்ணால் அந்தக் குடும்பம் சமுகத்தில் சந்திக்கும்  கஷ்டங்களையும் தனக்கே உரிய பாணியில், சட்டம், சமூகம், மருத்துவம்  போன்ற விஷயங்களை உணர்ச்சி வசப்படாமல் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால்  தன் வாதத்தை முன்வைத்தார்.  
இப்படிச்செய்ய அனுமதிக்க அந்த நோயாளி ஒரு வெஜிடபள் போன்ற நிலையிலிருக்க வேண்டும் என்கிறது சட்டம். அதாவது மூளைச்சாவு அடைந்திருக்க வேண்டும்.  இந்த  கேஸில் அந்தக் குழந்தைக்கு திரவ உணவு வெளியிலிருந்து  செலுத்தப்பட்டாலும் அதை அவர் உடல்  ஏற்கிறது .ஜீரணமாகிறது. சுவாசம் இயல்பாகியிருக்கிறது. சில வார்த்தைகளேனும் பேசமுடிகிறது. அதனால் அந்தக் குழந்தை முளைச்சாவு அடைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. அதனால் மனுதாரரின் வேண்டுகோளை அனுமதிக்கக்கூடாது. அப்படிச் செய்தால்   கோர்ட் ஒரு கொலையைச்செய்வதற்கு அனுமதிப்பதற்கான  முன்னூதாரணமாகிவிடும். என்றார் அரசின் வழக்கறிஞர். ஆதாரமாக பல  தீர்ப்புகளைப் பட்டியிலிடுகிறார்.
கோர்ட்டிலிருந்த சீதாவிற்கு தலை சுற்றியது. என்ன பேசுகிறார் இவர்?. எதோ கோர்ட்டில் கேட்டால் அனுமதி தருவார்கள் என்றார்கள் இப்படியெல்லாம் பேசுவார்களா? என்று எண்ணினாள்.
மதியம் தொடர்ந்த விசாரணையில்  நீதிபதி. இந்த கோர்ட் இந்த விஷயத்தில்  முடிவெடுக்க மேலும் சில விபரங்கள்  தேவைப்படுவதால்  நகரிலுள்ள  சிறந்த மூத்த  குழந்தை நல மருத்துவர்களை இரண்டுபேரையும் ஒரு  மூளைநரம்பியல் நிபுணரையும்   கொண்ட குழுவை நியமிக்கிறது. அந்த குழந்தையை அரசு மருத்தமனையில் சேர்த்து இந்தக் குழு சோதித்துப் பார்த்த பின்னர்  குழந்தையின் உண்மையான உடல் நிலை என்ன என்பதை அறிக்கையாக 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என  கோர்ட் உத்தரவிடுகிறது.  என்றார்.
ஐயோ மறுபடியும் ஆஸ்பத்திரியா?” என  தலையில் அடித்துக்கொண்டாள் சீதா. தானே வரவழைத்துக்கொண்ட  தலைவலி என்று நொந்துகொண்டாள்.  அடுத்த வாரம் கோர்ட்டின் கட்டளையின்படி  அரசு மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் வீட்டிற்கு வந்து அழைத்துப் போனது.. புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஸ்பட்லான அது மிக வசதியாகியிருப்பது அவளுக்கு  ஆச்சரியம். ஆனால் கேள்விகள், கேள்விகள் பத்து நாட்கள் டாக்டர்களின் கேள்விகளினால் வெறுத்துப்போனாள் சீதா.
ஒரு வழியாக 12 நாட்கள் கழித்து ஒரு நாள் மாலை  டிஸ்சார்ஜ் செய்தபின் வீட்டிற்கு ஆம்புலனஸில் அனுப்பினார்கள். . ஆம்புலன்ஸ் புறப்படும் போது தூறலாகத்துவங்கிய மழை வீடு சேரும் போது  பெரும் மழையாகக் கொட்ட ஆரம்பித்தது.
இரவு முழுவதும் பெய்த மழை அடுத்த இரண்டு நாளும் தொடர்ந்தது.
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் வழக்கறிஞர் தினகரனிமிருந்து போன் “ “மேடம் மெடிகல் டீம் ரிபோர்ட்டை கோர்ட்டில் கொடுத்துவிட்டார்கள். நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது  என்று நினைக்கிறேன். தீர்ப்பு சொல்லும் நாளைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்திருக்கிறார்கள். நான் சீக்கிரம் தீர்ப்பு வேண்டும் என்று வேண்டியிருக்கிறேன் அனேகமாக இரண்டு வாரத்தில் வரலாம். நான் சொல்லுகிறேன். முடிந்தால் நீங்கள் அன்று கோர்ட்டுக்கு வரலாம்
எதிர்பாராமல் இந்த விஷயத்தில் வந்து சேர்ந்த அந்த நல்ல மனிதருக்கு மனப்பூர்வமாக தன் நன்றியைச் சொன்னாள் சீதா. . 
பத்து நாட்களுக்கு பின்னர் மீண்டும் மழை. விடாமல் மூன்று நாள் பெய்த பேய் மழை. மின்சாரம் போன், இன்ட்ர்னெட் துமில்லாமல் சென்னை நகரத்தயையே ஸ்தம்பித்த வைத்த மழை. ஏதோ ஓரு ஏரியைத்தவறாக திறந்துவிட்டதனால்  நகரமே வெள்ளக்காடாகியிருந்தது.
அன்று காலை மகேஸ்வரி வலிப்பு அதிகமாகி மிகவும் வேதனையுடன் கத்திக்கொண்டிருந்தாள் ஒரு கட்டத்தில் கட்டிலில் முட்டிக்கொண்டதால் தலையில் காயம்.  சீதா அதைப் பார்ப்பதற்குள் உடல் தூக்கிப்போட்டது. வெளியில் சுழற்றி அடித்த காற்றினால் ஜன்னல் கதவு பாடாலென்று மூடியதில் கட்டிலருகிலிருந்த   சத்துணவு செல்லும் டுயூப் பொருத்தியிருக்கும் ஸ்டாண்ட் சரிந்து விழுந்து அதில் தொங்கிக்கொண்டிருக்கும் பாட்டில் தரையில் மோதி உடைந்து சிதறியது .அதிலிருக்கும் திரவம் சிதறிய கண்ணாடிச் சில்லுகளிடையே  தரையெங்கும் ஓடியது.
ஐய்யோ என்று கதறினாள் சீதா. அது உணவு மட்டுமில்லை..உடல் நிலையைச் சீராக வைக்கவும் உதவும் மருந்தும் கூட. ஜெர்மனியிலிருந்து வரும் அது ஒரேஒரு கடையில்தான் கிடைக்கும். விலை அதிகம். ஒரு பாட்டில் 800  ரூபாய். ஒன்று ஒரு  வாரம் வரும். இப்போது கைவசம் வேறு பாட்டில் இல்லை.
சீதா அழ ஆரம்பித்துவிட்டாள்  இந்த  மருந்து இல்லாவிட்டால்  முளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு இன்னும் குறைந்துவிடும் என்பது அவளுக்குத் தெரியும்.  உடனடியாக அந்த மருந்து பாட்டில் தேவை. பெரும் வெள்ளத்தில்  சிக்கி எல்லோரும் தவித்துக்கொண்டிருந்த  அந்த நேரத்தில் யாருக்கும் சீதாவின் பிரச்னையைக் கேட்க நேரமோ மனமோ இல்லை. போன் இல்லாததால் சரோஜாவைத்தொடர்பு கொள்ள முடியவில்லை. பக்கத்து ஃபிளாட் பாட்டியை  கெஞ்சிக் கேட்டு மகளின் அருகில்  உட்காரவைத்துவிட்டு  சரோஜாவிடம் போய் சொல்லி மருந்துக்கு ஏற்பாடு செய்யத் தீர்மானித்தாள்.
வீட்ற்கு வெளியில் வெள்ளம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. வாசலிலிருந்த  ஆர்மி போட்டில் ஏற்கனவே பலர். கெஞ்சி அதில் இடம் பிடித்து சற்று மேடான இடத்திற்குப் போனவுடன் நனைந்து கொண்டே  ஒட்டமும் நடையுமாக நடக்க ஆரம்பித்தாள்.நல்ல வேளையாக சரோஜா இருக்கும் பகுதியில் வெள்ளம் இல்லை. விபரங்களைக்கேட்ட  வினாடியில் நீ போய் குழந்தையுடன் இரு. நான் எப்படியாவது மருந்தை வாங்கிக் கொண்டு சேர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டே சரோஜா தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். அந்தக்குழந்தைக்கு தேவையான அந்த மருந்தின் அவசியம் அவளுக்குத்தெரியும் பல முறை அதை வாங்கியிருக்கிறாள்.
மழை சற்று குறைந்திருந்தது. வீட்டிற்கு ஒடி வந்த சீதா மகேஸ்வரி தூங்குவதை பார்த்து சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டு பாட்டிக்கு தாங்கஸ் சொல்லி கட்டில் அருகே அமர்ந்தாள்.
மதியம் இரண்டு மணி வரை சரோஜா வரவில்லை. எங்கே அலைகிறாளோ? என நினைத்துக்கொண்டாள் சீதா. . மழை சுத்தமாக நின்று விட்டது. நாலு நாளைக்குப் பின்  பளிச்சென்று வெயில். ஆனால் காற்று சுழட்டி அடித்துக்கொண்டிருந்தது.
அன்று 3 மணிக்குத் தீர்ப்பு சொல்லப்போகும் விஷயத்தைப் போன்கள் வேலைசெய்யாத  நிலையால் வழக்கறிஞர் தினகரனால்  சீதாவுக்குச் சொல்ல முடியவில்லை.
எங்கெல்லாமோ போராடிக் கடைசியாக ஒரு தனியார் மருத்துவ மனையில் தன் சொந்த செல்வாக்கால் 2 பாட்டில்களை வாங்கிக் கொண்டு சரோஜா சீதாவின் வீட்டுக்கு   வந்து கொண்டிருக்கிறாள்.  கொல்ல அனுமதி கேட்டுப் கோர்ட்டில் போராடும் இவள் இப்படி அந்தக்குழந்தை காப்பாற்றவும் போராடுகிறாளே என்று நினைத்துக்கொண்டே வண்டியின் வேகத்தைக்கூட்டினாள்.
 இது இந்த கோர்ட் சந்திக்கும் மிக முக்கிய வழக்கு. இதுவரை  மரணம் அடையமுடியாமல் தவித்து கொண்டிருக்கும் உடல்நிலையைக் காரணம் காட்டி உறவினர்கள் கருணைக்கொலைக்கு அனுமதிகோரி 15  வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. எதற்கும் இதுவரை அனுமதி தரப்படவில்லை. சமீபத்தில் உச்சநீதி மன்றம்  அளித்த தீர்ப்புக்கு பின் வந்திருக்கும் முதல் வழக்கு இது என்று தன்னுடைய நீண்ட தீர்ப்பை நிதானமாகப் படிக்கஆரம்பிதிருக்கிறார் நிதிபதி. தினகரன் ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து கவனிக்கிறார். அவருடைய உதவியாளர்கள் நீதிபதி சொல்வதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஹாலில் ஊசி விழுந்தால் ஒசை கேட்கும் அமைதி.
தூங்கிக்கொண்டிருக்கும் மகேஸ்வரியின்  உடல் தூக்கிபோடுகிறது. வலிப்பு வரப்போகிறதோ என்று நினைத்து எழுந்து அருகில் போன சீதாவிற்கு ஈன ஸ்வரத்தில் அம்மா என அவள்  அழைப்பது கேட்டது. அம்மாவைப் பார்த்ததும் உதடுகளில் ஒரு சின்ன முறுவல்.  சில வினாடிகளில்  மெல்ல சீராகியிருந்த மூச்சு பட்டென்று  நின்று விட்டது.
அசைவற்ற அந்த உடலைப் பார்த்து அழக்கூடத் தோன்றாமல் அதிர்ந்து நிற்கிறாள் சீதா,
சரோஜா மருந்துடன் வந்து கொண்டிருக்கிறாள். 
கோர்ட்டில் என்ன தீர்ப்பு வப்போகிறதோ?
ஆனால் கருணையேயில்லாமல் சென்னை நகரை அழித்த பெரும் மழை அவள் மீது கருணை காட்டிவிட்டது.
  



13/4/19



 இந்த வார கல்கி என் சிறுகதையொன்றை வெளியிட்டு கௌரவித்திருக்கிறது. ஆசிரிய குழுவிற்கும் ஓவியர் தமிழுக்கும் நன்றி. இந்தக்கதையிலும் பாத்திரங்களுக்கு முக நூல் நண்பர்கள் பெயர்கள். அதைக்கடன் கொடுத்த நண்பர்களுக்கும் நன்றி. படித்துவிட்டுச் சொல்லுங்கள்



அப்பா 

 
“சாதாரணக் காய்ச்சல் மாதிரிதான் இருக்கிறது. கவலைப்படாதே. ஒரு மணி கழித்து இன்னொருதரம் நெற்றியில் ஒடிகொலோன் போடு. ஈவினிங் டாக்டர்கிட்டே காட்டு.  ” என்று சொல்லிவிட்டு எதிரிலிருக்கும் தன் ஃபிளாட்டின்னுள் நுழைந்தாள் சுபஶ்ரீ. எதிர் பிளாட்டிலிருக்கும் லஷ்மிஶ்ரீராமின் குழந்தைக்குக் காய்ச்சல். அதைப் போய்ப் பார்த்துவிட்டுத் தன் வீட்டினுள் நுழைந்த சுபஶ்ரீ ஹாலில் உட்கார்ந்திருந்த அப்பாவைக்காணாததால் அவரைக் கூப்பிட்டுக்கொண்டே ஒவ்வொரு அறையாகப் பார்த்தாள். பாத்ரூம் கதவுகளும் திறந்தே இருந்தன. அப்பா அப்பா எனக் கூப்பிட்ட படி பால்கனி வராண்டா எல்லாம் தேடினாள் சுபஶ்ரீக்கு ஷாக் அடித்தது போல் பகிரென்றது. அப்பவை எங்கும் காணோம்.
 படபட வென 4 மாடிகளின் படிகளையும் நிமிடத்தில் கடந்து கீழே செக்யூரிட்டியிடம் அப்பா வந்தாரா? எனக் கேட்டபோது “தெரியலையே அம்மா நான் இப்பத்தான் டூயூட்டிக்கு வந்தேன்” என்ற அவன் பதிலைக்கேட்டவுடன் பதைபதைப்பு இன்னும் அதிகமாயிற்று. எங்கே போய்விட்டார் இவர்? என்று இரண்டு நுழைவாயிலிருக்கும் அந்தப் பெரிய அபார்ட்மென்ட் வளாகத்தின் மெயின் கேட்டில் இருக்கும் செக்யூரிட்டி ஆபிஸில் அப்பாவைப் பார்த்தீர்களா? எனக் கேட்டபோது தமிழ் தெரியாத அந்த மணீப்பூர் பையன் எந்த அக்கறையும் இல்லாமல் நஹி என்றபோது சுபஶ்ரீவின் பதட்டம் அழுகையாகத் தொடங்கியது.

சென்னை திருவான்மியூரிலிருக்கும் அந்தப் பெரிய கேட்டட் கம்யூனிட்டி 8 பிளாக்குகளைக் கொண்டது. மொத்தம் 120 ஃபிளாட்டுகள். முன்பு ஒரு முறை வேறு ஒரு பிளாக்கின் ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்ததால்,  இப்போது  ஒடி ஒடி எல்லாப் பிளாக்கின் தரைதளத்திலும் தேடிப் பார்த்தபின் அப்பா அந்த வளாகத்தில் எங்கேயும் இல்லை என்பதை உணர்ந்த சுபஶ்ரீக்குக் கோபமும் அழுகையும் பீரிட்டுக்கொண்டு வந்தது. மெல்ல பிளாட்டுக்குத்திரும்பி கணவர் மோஹனுக்குப் போன் செய்தாள்
அடக்கமுடியாத அழுகைக்கும் விம்மல்களுக்குமிடையே “ ஜீ அப்பாவைக் காணோம். ஒரு 5 நிமிஷம் லஷ்மியோட குழந்தையைப் பார்க்கப் போயிருந்தேன், கதவைப் பூட்டாமல் போயிருந்தேன். திரும்பி வருவதற்கு இறங்கிபோய்விட்டார் போலிருக்கிறது

“பிளாட்டில் நல்லாப் பார்த்தாயா?”

“ம்ம். மெயின்கேட்டை விட்டு வெளியே போயிருப்பார் போலிருக்கிறது” என்றாள் விசும்புலடன்.

“சரி நான் இன்னும் ஒரு மணியில் வந்துவிடுவேன். அழாமல் இரு”. பயப்படாதே. காம்பெளக்ஸ் ஆபிஸில் சொல்லு. செக்ரட்டரியிடம் நானும் பேசுகிறேன்”.
மோகன் ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் இயக்குநர்.  மாதத்தில் 20 நாள் வெளிநாட்டில். அதிர்ஷ்ட வசமாக இன்று சென்னையில் இருக்கிறான்.
சுபஶ்ரீ தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். எத்தனை பத்திரமாக இத்தனை நாள் பார்த்துக்கொண்டேன். ஒரு நாள் ஒரே ஒரு  ஒரு 5 நிமிஷத்தில் இப்படிப் பண்ணிட்டியே அப்பா எனப் புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.
அவளது கவலைக்கு நியாயம் இருக்கிறது. அவளது அப்பா நாகராஜன் ஓய்வு பெற்ற கணிதப்பேராசிரியர். வயது 70. கடந்த 5 வருடமாக அல்சமையர் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர், மீக நீளமான கணித பாடங்களைக்கூட ஒரு குறிப்பும் இல்லாமல் நினைவிலிருந்தே  போர்ட் முழுவதும் எழுதும் அவருக்கு  கடந்த ஒருவருடமாக அவர் பெயரையே மறந்துவிடுமளவுக்கு மோசமாகியிருக்கிறது. . அதனால் எப்போதும் வீட்டிலேயே அவருடனேயே இருந்து கவனித்துக்கொண்டு இருக்கும் அன்பு மகள் சுபஶ்ரீ. அவரை வீட்டினுள் விட்டு கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே போவதை விரும்பாததால் கடந்த 3 வருடங்களில் அவள் வெளியே எங்குமே, கோவிலுக்குக்கூட செல்வதில்லை. என்றாவது அப்படிப் போகவேண்டிய சூழலில் வீட்டிலிருந்து மாமனாரைப் பார்த்துக் கொள்வார், மாப்பிள்ளை ரூபத்தில் வந்த மகனான மோகன். அவ்வளவு அக்கறையாகப் பார்த்துக்கொள்வார். குழந்தைகள் வளர்ந்து வெளிநாட்டுக்குப் படிக்கப் போன நிலையில் தன் சுதந்திரங்கள் அனைத்தையும் தியாகம் செய்து அப்பாவிற்காக வாழும் சுபஶ்ரீக்கு இன்று அப்பா காணாமல் போயிருப்பார் என்ற எண்ணத்தையே தாங்கமுடியவில்லை.
.
அவர் ரூமில் மறுபடியும் போய்ப் பார்க்கிறாள். எல்லாம் வைத்த இடத்தில் தான் இருக்கிறது. காலையில் ஆபிஸ் போகும் முன் மோகன் அவருக்கு ஷேவ் செய்து குளிப்பாட்டி ஷர்ட் மாட்டி விட்டதும், தான் இட்லி கொடுத்ததும். நினைவிற்கு வந்தது.. பல சமயங்களில் சுபஶ்ரீயின் பெயரையே மறந்துவிடும் அவரை எங்கும் தனியே விடுவதில்லை. முன்பு உடன் அழைத்துப் போன சில உறவினர் வீட்டு விசேஷங்களில் இவரது நிலையைப்பார்த்துத் துக்கம் கேட்பதைப் போல விசாரிக்க ஆரம்பித்ததால் சுபஶ்ரீ இப்போது அவரையும் எங்கும் அழைத்துச்செல்வதில்லை. தானும் போவதில்லை..
அவர் தனியாக எங்கும் செல்ல வாய்ப்பில்லை என்றாலும்  எமர்ஜென்சிக்கு இருக்கட்டும் என்று மோகன் அவர் பெயர், தன் பெயர், வீட்டுவிலாசம், போன்நம்பர் எழுதப்பட்ட விஸிடிங்கார்ட் சைசில் ஒரு
சின்ன அட்டையைத் தினமும் அவரது சட்டைப்பையில் வைப்பது வழக்கம், அன்று வைக்க மறந்த அந்தக் கார்ட் டேபிளின் மேலேயே இருந்ததைச் சுபஶ்ரீ கவனிக்க வில்லை.
.
“எனக்கு டிபன் கொடும்மா” என்ற அப்பாவிடம் “அப்பா நீங்கள் சாப்பிட்டாச்சு” என்று சொல்லி ஹிந்து பேப்பரைக்கொடுத்த விட்டு லஷ்மி வீட்டுக்குப் போன அந்த நிமிஷத்தை நினைத்து வருந்தினாள் சுபஶ்ரீ, பூட்டிக்கொண்டு போய்த் தொலைந்திருக்கலாமென நினைத்துப் பொருமினாள்.
போனில் அந்தக் காம்பெளக்ஸின் அசோசியேஷன் செகரட்டரி நாராயணன்.  அழைத்தார். எப்போதும் அசோசியேஷனுக்காக எதாவது செய்து கொண்டேயிருக்கும் நல்ல மனிதர். நிறையத் தொடர்புகள் உடையவர்.
“சுபஶ்ரீ, கவலைப்படாதீர்கள். மோகன் போன் செய்தார், நான் நம்ப ரெஸிடென்ட்ஸ் வாட்ஸப் குருப்பிலும், குருப் மெயிலிலும் போட்டிருக்கேன். சாயங்காலம் வரை பார்த்துவிட்டுப் போலீஸுக்குப் போகலாம்னு நினைக்கிறேன். சரஸ்வதியை உங்களோடு இருக்கச்சொல்லியிருக்கிறேன்” என்றார். சரஸ்வதி. அவருடைய அனைத்துக்காரியங்களிலும் கைகொடுக்கும் அவரது மனைவி
.
“தாங்க்ஸ் சார்”
.
செய்தி பரவி அந்தக் காம்ப்ளெக்ஸ்சிலிருக்கும் பலர் போனில் விசாரிக்க ஆரம்பித்தனர். உதவி செய்பவர்களைவிடச் செய்தியைச் சுபஶ்ரீ யிடமிருந்து அறிய ஆவல் காட்டியவர்களே அதிகம். ஒரு கட்டத்தில் வெறுத்துபோய்க் மோகனுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பி விட்டுப் போனை மியூட் செய்து விட்டாள்.
அப்பா எங்கே போனாரோ? எதாவது சாப்பிட்டாரோ? ஷுகர் அதிகமாயிருக்குமோ? என நினைக்க நினைக்க வரும் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. நேரம் ஒடிக்கொண்டிருந்தது. பசித்தது ஆனால் சாப்பிடத் தோன்ற வில்லை.

காலிங் பெல் ஒலிக்கத் திறந்தபோது பில்டிங் வாசலில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டின் டிரைவர் விஸ்வா என்ற விஸ்வநாதன்
“எப்பலிருந்து அப்பாவைக் காணோம் அம்மா? தனியாவிடவே மாட்டீங்களே? சுபஶ்ரீவின் கணவர் மோகன் இல்லாதபோது அப்பாவைச் செக்கப்அப்புக்கு கூட்டிப்போவது அவருடைய ஆட்டோவில் தான். அப்பாவின் நிலை தெரிந்த ஆட்டோக்காரர் அவர்.  மற்ற ஆட்டோகாரர்களின் பிரச்சனைகளைத் தவிர்க்க சுபஶ்ரீ எப்போதும் விஸ்வாவின் ஆட்டோவில் மட்டும் தான் போவது வழக்கம். அப்பாவுடன் போகும்போது அக்கறையாகப் பிளாக்கின் வாசல்வரை வந்து இறக்கி விடும் நல்ல மனிதன். இதற்கு முன்னல் கால்டிரைவராக இருந்ததால் மோகன் இல்லாத சில சமயங்களில் அவர்கள் காரையும்  கூட ஓட்டியிருக்கிறார் விஸ்வா.
அதற்குள் செய்தி பிளாட்டிலிருந்து எப்படித் தெருவில் பரவியிருக்கிறது? என்று நினைத்த சுபஶ்ரீக்கு இன்டர்னெட்ட்டை விட வேகமானது  பிளாட் வாச்மென்களின் நெட் ஒர்க் என்பது தெரியாது
.
“அவர் போட்டோ ஒண்ணு கொடுங்க நம்ம சைடிலியும் டிரை பண்ணுவோம். என்று விஸ்வா கேட்டபோது எதற்கு?, என்ன பண்ணப்போகிறான்? என்றெல்லாம் கேட்க தோன்றாமல் மேஜையில் போட்டோபிரேமிலிருந்த அப்பாவின் படத்தை எடுத்துக்கொடுத்த  சுபஶ்ரீயிடம் “கவலைப் படாட்தீங்கம்மா கண்டுபிடிச்சிரலாம். என்று சொல்லிவிட்டு விஸ்வா இறங்கிப்போனதும், மோகனிடம் ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டு போட்டோவைக்  கொடுத்திருக்கலாமோ? என்ற எண்ணம் எழுந்தபோது. விஸ்வா நல்லவன் தான் பரவாயில்லையெனச் சமாதானப்படுத்திக்கொண்டாள்.
.

சொன்னபடி விரைவாக வீட்டுக்கு வந்த மோகனுடன் வந்தவர் செகரட்டரி நாராயணன். “ஒரு கம்ளையென்ட் டிராப்ட் பண்ணியிருக்கேம்மா பார்த்துட்டுச் சொன்னால் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க் கொடுக்கலாம்”
எப்படியிருப்பார்?, என்னகலர் சட்டை? வேஷ்டியின் கரைகலர் என்ன மாதிரி கண்ணடி பிரேம்? இங்கீஷ் தெரியுமா? போன்ற பல கேள்விகளுக்குப் பின் புகார் மனுவை வாங்கிக்கொண்டார். அந்த இன்ஸ்பெக்டர். தினமும் பார்க்கும் அப்பாவிடம் இந்த விஷயங்களையெல்லாம் கூர்ந்த கவனிக்காத சுபஶ்ரீ நினைவிலிருந்து சொல்லிய பதிலைக்கேட்ட அவர் வயதானவர்களை அதுவும் இந்த நோய் இருப்பவர்களை எப்படிக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கிளாஸ் எடுக்க ஆரம்பித்தவுடன் சுபஶ்ரீக்கு வந்த அழுகையை அடக்க முடியவில்லை
.
“நீ வீட்டிற்குப் போ, நாங்கள் நாளைப்பேப்பரில் விளம்பரம் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டு வருகிறோம் என்ற புறப்பட்டனர் மோஹனும் நாராயணனும்.
வீட்டிற்கு வந்த சுபஶ்ரீ செய்வதறியாமல் பூஜை அறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். மாலை மறைந்து இரவு பரவிக்கொண்டிருந்தது. மோகன் பேப்பர் விளம்பரத்துக்கு ஏற்பாடு செய்தபின்   போலீஸில் சில நண்பர்களைப்பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பும்போது இரவாகிவிட்டது. மறுநாள் காலை அவன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட மும்பையில் இருக்க வேண்டும் காலையில் முதல் பிளைட்டில் மும்பாய் சென்று இரவு திரும்பத் திட்டமிட்டிருந்தான். இப்போது அதை நினைத்துக் குழம்பிக்கொண்டிருந்தான்.  மோகனின் முகத்தைப்பார்த்தே அவன் மனதைப் புரிந்துகொள்ளும் சுபஶ்ரீ, என்னவென்று விசாரித்தபோது விபரம் சொன்ன அவனிடம் “சரி போய்ட்டுவா, இரவு திரும்பிவிடு.  மறுநாள் முதல் ஆபிஸ் போகாமலிருக்க ஏற்பாடு செய்துவிடு” என்று சொன்னாள். ஒரே ஒரு நாள் மீட்டிங்க்காக லண்டன், பாஸ்டன், போனால் கூட உடனே ஊர்திரும்பிவிடுவது அவன் வாடிக்கை. 

இரவு முழுவதும் இருவரும் தூங்கவில்லை. அந்த அழுத்தமான அமைதி ஆயிரம் கவலைக்களைச்சொன்னது
.
மறுநாள் அதிகாலையில் மோகன் விமானநிலையத்துக்குப் புறப்பட ஓலா டாக்ஸியில் ஏறும் சமயத்தில் போன். அழைத்தவர் அடுத்தப் பிளாக்கிலிருக்கும் நண்பர் டாக்டர் பாஸ்கர். அவர் வாட்ஸப் குருப்பில் செய்தி அறிந்திருந்தார்.

“மோகன் ஹிந்து பார்த்தேன். தமிழ்பேப்பரில் கொடுக்கவில்லையா? அது அவசியம். இந்த உதவிகளைச் செய்பவர்களில் பலர் அந்தப் பேப்பர்களைத்தான் பார்ப்பார்கள். செகரட்டரி நாராயணனிடம் சொன்னால் நியூஸாகவே போட ஏற்பாடு செய்வாரே””

ஓ! எனக்குத் தோன்றவில்லை சார். இப்போதே செய்கிறேன் தாங்க்ஸ் என்ற மோகன் உடனே செல்லில் நாரயணனின் நம்பரைக் கூப்பிட்டபடியே காரில் ஏறினான்
.
அழுகை சற்று அடங்கி அமைதியாகிவிட்ட சுபஶ்ரீ குளித்தபின் இன்று நாள் நாள் முழுவதும் பட்டினியுடன் பாபா சிலை முன் உட்கார்ந்து. பிரார்த்திக்கத் தீர்மானித்து அமர்ந்து விட்டாள். அடிக்கடி அழைத்த போன், அவ்வப்போது கூப்பிட்ட காலிங் பெல் எதிலும் கவனம் இல்லை. மூடிய கண்களுடன் முழுக்கவனமும் பிரார்த்தனையில்.

மத்தியானம் மூன்று மணியளவில் விட்டுவிட்டு பல தடவை அடித்த நீண்ட காலிங்பெல்லின் தொல்லை தாங்காமல் கதவை முழவதுதுமாகத் திறப்பதற்குள்ளாகவே வெளியிலிருந்த விஸ்வா “அப்பா பத்திரமாக இருக்கார் அம்மா தகவல் சொல்லத்தான் நான் போன் செய்து கொண்டேயிருக்கிறேன் நீங்க எடுக்கல. ஈஸிஆர் ரோட்டில் பாண்டிச்சேரி போகிறவழியில் ஒரு கிராமத்துக்கு போகும் மெயின் ரோட்டில்  இருக்காராம். இதைப்பருங்கள் என்ற காண்பித்த செல்போன் போட்டோவில்  ஏதோ ஒரு கடையில் உட்கார்ந்திருக்கும் அப்பா.
அழுகை, சந்தோஷம், ஆச்சரியம் எல்லாம் ஒரே சமயத்தில் தாக்க சுபஶ்ரீக்குப் பேச்சே வரவில்லை. ஓடிப்போய்ப் பூஜை அறையில் பாபா சிலை முன் விழுந்து நமஸ்கரித்துத் தாங்க்யூ பாபா தாங்க்யூ என அரற்றினாள்.
உடனே வாசலுக்கு ஒடி வந்து அங்கே எப்படிப் போனார்?ஏன் போனார்? உங்களுக்கு யார் சொன்னாங்க? என எல்லாக்கேள்விகளையும் ஒரேடியாக விஸ்வாவிடம் அள்ளி வீசினாள்
.”முதல்ல சாருக்கு போன் போடுங்க.”

“கார் சாவியைக் கொடுங்க அம்மா உடனே கிளம்பிப்போனா இரண்டு அவர்லே அழைச்சிட்டு வந்திடலாம். கார்லே போகும்போது விபரம் பேசிக்கலாம். சுபஶ்ரீயை விட அதிக உணர்ச்சி வசப்பட்டிருந்த விஸ்வா அவசரப்படுத்தினான்.
“ஒரு நிமிஷம்” என்று சொன்ன சுபஶ்ரீ அந்த அவசரத்திலும் அப்பாவிற்குச் சாப்பிட ஸ்நாக்ஸும் பிளாஸ்க்கில் பாலும் எடுத்துக்கொண்டாள். சென்னை பாண்டிச்சேரி கடற்கரைச் சாலையில மோஹனின் புதுக் கார் 100கீமியில் பறக்கிறது.
கவனமாக ஓட்டிய விஸ்வா “நம்ம அடையாறு ஸ்டாண்டில் இருக்கும் சங்கரோட மச்சான் மகளுக்குக் கல்யாணமுன்ட்டு அவங்க குடும்பத்தோடு அவனோட ஆட்டோவிலேயே கிராமத்துக்குப் போயிட்டிருக்கும்போது வழியில் டீ சாப்பிட இறங்கிய ஒரு கடையில் இருந்த பெரியவரைப்  பார்த்தப்ப சந்தேகம் வந்திருக்கு. . நம்ம தான் நோட்டிஸ் போட்டிருக்கமே, அதனால் கடையிலே விசாரிக்கிறான்.   அவர்  எதோ ஒரு  பஸ்ஸிருந்து இறங்கி வந்து  வழிகேட்டு  விபரம் எதுவும் சரியாகச் சொல்லமுடியாமல்  நேத்து ராத்திரி முழுவதும் அங்கேயே இருந்திருகிறார்ன்னு   அந்தக் கடையாளுங்க. சொல்லியிருக்கங்க.
உடனே எனக்குப் போன் போட்டான் சங்கர். நான் அவரைப் படமெடுத்து வாட்சப்பில் உடனே அனுப்பச் சொன்னேன்.  எக்மோரில் சவாரியிலிருந்த நான் படத்தைப் பார்த்தவுடன் டக்கன்னு  அப்பான்னு தெரிஞ்சிடிச்சி. உடனே  அந்தக் கடைக்காரரிடமே நேரடியாகப் பேசி நாம வரும் வரை அவரைப் பத்திரமாகப் பார்த்துக்கச் சொல்லிட்டேன் நாம இப்போ அங்கே தான் போறோம்
.என்ன நோட்டிஸ்? எனக்குழம்பிய சுபஶ்ரீக்கு முதல் நாள் தான் செய்திருந்த ஏற்பாட்டைப் பற்றிச் சொன்னான்
விஸ்வா அந்தப்பகுதி ஆட்டோ ஓட்டுநர் தொழிசங்க தலைவன் என்பதோ சுற்று வட்டாரத்தில் அந்தச் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேல் என்பதோ. போட்டோ கிடைத்த ஒரு மணி நேரத்தில் படத்துடன் “காணவில்லை பார்த்தவர்கள் இந்த ஆட்டோ டிரைவரிடமோ அல்லது இந்த எண்ணிலோ தொடர்பு கொள்ளுங்கள்” என்று படம் அச்சிடப்பட்ட சின்ன நோட்டிஸ் அனைத்து ஆட்டோக்களின் பின்னாலும் ஒட்டப்பட்டு நகர் முழுவதும் பறந்து கொண்டிருந்தது சுபஶ்ரீவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை
 விஸ்வாவின் வார்த்தகளைக்கேட்க கேட்க, கேட்க பிரமிப்பு அடங்கவில்லை. அவளுக்குக் கார் ஒட்டுவது விஸ்வாகத் தெரியவில்ல, அவன் உருவில் வந்த பாபாவாகத்தான் தெரிந்தது. கண்களில் நீர் வழிய தாங்கஸ் விஸ்வா என்று சொல்லிக்கோண்டே மும்பையிலிருக்கும் மோகனுக்கு வாட்ஸப்பில் விவரமாகச் செய்தி அனுப்பினாள்
மெயின் ரோட்டில் ஒரு பஸ்ஸ்டாப்பின் அருகில் அருகே இருக்கும் அந்த டீக்கடையின் முன்னே கார் நின்றவுடன் “அப்பா என்று சுபஶ்ரீ போட்ட கூச்சலையும் ஒடிப் போய் அவரைக் கட்டிக்கொண்டதையும் பார்த்த அந்தக் கடையிலிருப்பவர்கள் அதிர்ந்து போனார்கள்

.அவர் சுபஶ்ரீயிடம் கேட்ட கேள்வி
என்னை இங்கே தனியா வீட்டுட்டு நீ எங்கே போயிட்ட?