தலக்காவிரி, பாகமண்டலாவிலிருந்து திரும்பும்போது கவனித்த விஷயம் பல இடங்களில் காவிரி இரண்டாகப் பிரிந்து ஓடிப் பின் இணைந்து தீவுக் கிராமங்களை உருவாக்கியிருக்கிறது என்பதையும் அதனால் பல இடங்களில் அந்தக் கிராமங்கள் ஒரு தொங்கு பாலங்களால் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும். வெள்ளக்காலங்களில் பரிசல் விபத்துக்க:ளைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. ஒரு பாலத்தில் நடந்து மறுகரையிலிருக்கும் கிராமத்துக்குப் போகிறோம். நடைப்பாதைப் பாலத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்ற போர்டை கடந்து வரும் அவைகள் நம்மைப் பயமுறுத்தாமல் மெல்ல உரசி செல்லுகின்றன. கரும்பு செழித்து வளர்ந்து வெட்டுப்பட உடலை வளைத்து நிற்கின்றன.
,
புத்தர் நிர்வாணம் அடைந்தபின் 100 ஆண்டுகளில் அவரது சித்தாந்த விளக்கங்களில் ஏற்பட்ட மாறு பட்ட கருத்துக்களினால் புத்தமதத்தில். 20க்கும் மேற்பட்ட பிரிவுகள் தோன்றின. அவற்றில் 10க்கும் மேல் திபெத்தில் பிறந்தவை. அதில் ஒன்று தான் நாம்டொரிலிங் பிரிவு. சீன ராணுவத் தாக்குதலால் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு அகதிகள் அந்தஸத்தை அளித்து இந்தியாவின் சிலபகுதிகளில் இடமும் வாழும் வசதியையும், கொடுத்தது அன்றைய அரசு. அப்படி இங்கு வந்துசேர்ந்த அகதிகளில் ஒரு புத்த பிட்சு இந்த மடத்தின் 11 வது தலைவர். அவருடன் வந்த 10 பேருடன் ஒதுக்கபட்ட காட்டுப்பகுதியில் முதலில் மூங்கிலால் உருவாக்கபட்ட கோவில் இன்று தங்கபுத்தர் கோவிலாக வளர்ந்திருக்கிறது.
உள்லே நுழைந்தால் எல்லாமே பிரம்மாண்டமாகயிருக்கிறது. பெரிய முற்றத்தை சுற்றி ப வடிவில் கல்லூரி ஹாஸ்டல் மாதிரி 3 மாடி கட்டங்கள். உள்ளே பசுமையான புல்வெளீயின் நுனியில் கோயில்கள். முதல் கோயிலின் முகப்பில் நிறுவியவரின் பெரிய ஸைஸ் படம். அவர் தெய்வ நிலையை அடைந்துவிட்டதால் வழிபடத் தக்கவாராம். அதன் அருகே ஒரு. பெரியதியட்டர் சைசில் இருப்பது தான் புத்தர் கோவில்.அதில் அவரும் அவரது குருவும் தங்கமயமாக இருக்கிறார்களாம். வரும் பிப்பரவரி திருவிழாவிற்காகப் புத்தர் புதிய தங்க மூலாம்பூச்சில் குளித்துக்கொண்டிருப்பதால் பார்க்க முடியாது என்றார்கள்.
அங்குள்ள கட்டடங்களின் உள்ளும் புறமும், ஜன்னல், தூண்கள் கதவு மேற்கூரை எல்லாம் ஒரு அங்குலம் விடாமல் அழுத்தமான வண்ணங்களில் திபேத்திய- சீனப்பாணி படங்கள் கலை வடிவங்கள், மிக அழகாக நம்மைக்கவர்கிறது. சுவர்களில் பெரிய அளவுப் படங்கள். அவை ராமாயணத்தின் அடையாளம் காட்டுவது போல இருந்தாலும் பெளத்தில் ஏது இராவணன்? எனக் குழம்புகிறோம். கண்ணில் படும் துறவிகளும் நமக்குப் பதில் சொல்லுவதில்லை, மெளன விரதமோ, மடத்துவிதியோ, ஆங்கிலம் தெரியதோ என நினைத்துக்கொள்கிறோம்.
1963ல் துவக்கப்பட்ட மடம் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அமெரிக்க உள்பட 10 நாடுகளில் கிளைகளுள்ள மடத்தின் தலமையகம் இது. அவர்களின் மதக்கல்வி பெற உலகின் பல இடங்களிலிருந்து துறவிகள் வருகிறார்கள். சுமாராக 3000 பேர் 800 பெண் துறவிகள் உள்பட இங்கே இருக்கிறார்கள். புத்த மதத்துறவி பயிற்சிக் கல்லூரி, துறவியாகப் போகும் மாணவர்களுக்கான பள்ளிக்கூடம், மருத்துவமனை எல்லாம். என்று ஒரு வசதியான ஹை டெக் கிராமே இந்தக் கோட்டைக்குள் இயங்குகிறது
.
செலவுகளை எப்படிச் சமாளிக்கிறார்கள்? நன்கொடைகள் என்கிறார்கள், மேலும் இங்கு பயிற்சி பேரும் துறவிகளுக்கான கட்டணத்தை அந்தந்த நாட்டிலிருக்கும் செல்வந்தர்கள் ஏற்கிறார்கள் என்கிறார்கள். நூலகம்-- மருந்துக்கூட ஒர் ஆங்கிலப்புத்தகம் இல்லை. எல்லாம் திபேத்திய சீனப்புத்தகங்கள். வளாகத்தினுள்ளே திபெத்தில் இவர்கள் மடம் இருந்த இடமான இமயமலைக் கிராமம் இருந்த இடத்தின் மாடலை வைத்திருக்கிறார்கள்
.
நாட்டுமக்களின் எல்லா மதங்களும் சமமானவை என்ற சார்பற்ற கொள்கைக் கொண்டிருப்பது நமது அரசியல் அமைப்புச் சட்டம். அந்தக் கெளரவத்தை வந்த அகதிகளின் மத்த்துக்கும் வழங்கி அதையும் வளர்க்க வழி செய்திருப்பதைப் பார்க்கும்போது, பெருமையாகவும், இதைப்புரிந்துகொள்ளாமல் அரசியல் செய்யப்படுவதைக் குறித்து வருத்தமாகவும் இருந்தது.
வளாகத்தின் ஒரு முனையில் பிரார்த்தனை, கலைப்பொருட்கள், புத்தர் வடிவங்கள் விற்கும் கடை. சிக்கிம் பூடானில் கிடைக்கும் பொருட்கள் கூடக் கிடைக்கிறது. விற்பவர்கள் துறவிகள். ஆங்கிலம் பேசுகிறார்கள். பேரம் பேசமுடிகிறது.கார்ட் ஏற்கும் வசதியில்லை. வாங்கிய பொருளுக்கு எவ்வளவ ஜிஎஸ்டி என்று கேட்டேன். எங்களுக்கு விலக்கு இருக்கிறது ஆனால் பில் கிடையாது என்றார் துறவி. வரி விலக்கு உண்மைதானா?- அந்தப் புத்தருக்குதான் வெளிச்சம்.
மறுநாள் மைசூரிலிருந்து திரும்பும் பயணம். சதாப்தி மதியம் தான் என்பதால் 'சுக- வனம்' என்ற கிளிகள் காப்பகத்துக்குப் போனோம். சத்திதானந்த ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்திலிருக்கிறது அது. அழகான தோட்டம் முழுவதும் மிகப்பெரிய கொசுவலைக்குள். உள்ளே சிறிதும் பெரிதுமாகக் கூண்டுகள். அவற்றினுள்ளும் , வெளியிலும் உலகின் பல நாட்டு வண்ணக் கிளிகள். நாம் தபால்தலைகளில் பார்க்கும் அழகான வண்ணக்கிளிகள். பல சைஸ்களில். சில கிளிகள் என்று நம்பமுடியாத அளவுக்கு மிகப்பெரியது. ஒரே இடத்தில் பல இனக்கிளிகள்: இருக்குமிடம் என கின்னஸ் இதைச் சாதனையாகச்சொல்லுகிறது.
அழகாக இருந்தாலும், ஆசாபசங்களை கடந்து விடுதலைப்பெற மனிதர்களுக்கு வழி சொல்லும் ஆசிரமத்தில் ஏன் இவைகளை இப்படி சிறையிட்டுவைக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இறைவனிடமிருந்து ஸ்வாமிகளுக்கு என்ன கட்டளையோ நமக்குத் தெரியாது. என்று எண்ணிக்கொள்கிறோம்.
சதாப்தி கிளம்பிவிட்டது.
இன்று இரவிலிருந்து குடகுமலைக்காற்றை மறந்து “நம்ம’ சென்னைக்காற்றுதான்.