கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21/3/19

பேசும் கட்டிடமும் பேசாத படங்களும்..... 

ஒரு பெரிய அரங்கத்தில் அழகாக வரிசையாகப் பலவிதமான படங்களுடன் நடைபெறும் புகைப்பட கண்காட்சிகளை  நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால் ஒரேசமயத்தில்  நகரின் பல இடங்களிலுள்ள பாரம்பரிய கட்டிடங்களில் பிரமாண்ட அரங்கங்களில் வெவ்வேறு தலைப்புகளில் இந்தியாவின், உலகின்  பிரபல புகைப்பட கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிக்கு வைக்கப்பட்டால் எப்படியிருக்கும்?

அதைத்தான் செய்திருக்கிறார்கள் சென்னை போட்டோ பைனியல் (Chennai Photo biennial)  என்ற அமைப்பினர்.  2016 ஆண்டு ஆண்டு முதல் காட்சியை நடத்திய இவர்கள்  இப்போது இரண்டாவது காட்சியை மிகப்பெரிய அளவில்  நடத்துகிறார்கள். சென்னையின் கலைக்கல்லூரி,  அருங்காட்சியகம்,பல்கலைக்கழக வளாகம்,  எழும்பூர் ரயில்  நிலையம் போன்ற  12 இடங்களில் 20க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
       
 ஒவ்வொரு இடத்திலும் சில கலைஞர்களின் படைப்புகளை வெறும் படக்காட்சிகளாக வைக்காமல் ஒரு தலைப்பின் கீழ் பெரிய அளவுகளில் அமைத்திருக்கிறார்கள். ஒரு மாதம் நடைபெறப்போகும் இந்த கண்காட்சிகளில் தினசரி பேச்சரங்கம், பயிலரங்கம், குறும்படங்கள்  என்று கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். விளம்பரங்களையும் ,அறிவிப்புகளையும்  செய்வதில் கூட அடேஎன்று திரும்பிப்பார்க்கவைக்கிறார்கள்.

சென்னை மெரினா கடற்கரையில் பலகலைக்கழக வளாகத்திலிருக்கும் செனட் ஹவுஸ்  என்ற பாரம்பரிய கட்டிடமும் இந்த கண்காட்சி நடைபெறும் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்று. புகைப்பட காட்சியைப் பார்க்கப் போன நாம் அந்த கட்டிட அழகில் பிரமித்து நிற்கிறோம். 140 வருடங்களுக்கு முன் எப்பட்ட அந்த கட்டிடத்தின்  ஒவ்வொரு அங்குலத்திலும் கலை நயம் மிளிர்கிறது. 19 நூற்றாண்டில் இந்தியாவின் பல பகுதிகளில் கட்டப்பட்ட இந்தோ சாராசெனிக்  (Indo-Saracenic)    பாணி அரசு கட்டிடங்களில் ஒன்றான இதன் கம்பீரமும், அழகும் அசத்துகிறது.     கட்டிடத்துக்கான வடிவமைப்பை வரவேற்று அரசின் வெளியிட்ட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த வடிவமைப்பை அனுப்பியவர்  ராபர்ட் ஸிஷோம்(Robert Chisholm)  என்றும் ஆன்கிலேயர் எனப்தும்  அப்போது அவருக்கு வயது 21தான் என்ற செய்தி கட்டிடத்தின்மீது நமக்கு எழுந்திருக்கும் பிரமிப்பை அதிகமாக்குகிறது. பட்டமளிப்பு விழாக்களுக்காக நிறுவப்பட்டு  பராமரிப்பு இல்லாமல் பல்கலைக்கழகத்தின்  ஒரு கோடோவுனாக பயன் படுத்தப்பட்ட இந்த கட்டிடம் பல ஆண்டுகளாகப் பூட்டியே கிடந்தது. (உள்ளே கொஸ்டின் பேப்பர்கள் இருக்கும் என்ற கிசுகிசு வேறு) அண்மையில் சீரமைக்க பட்டதாகச் செய்திகள் வந்த போதிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றது அறிவிப்பு.  இந்த கண்காட்சி நடத்துபவர்களின் புண்ணியத்தில்  கண்காட்சியுடன் ஒரு கலையம்சம் மிகுந்த ஒரு  கட்டிடத்தைப் பார்க்க முடிந்தது.
150 அடி நீளத்தில் 60 அடி அகலத்தில் 50 அடி உயரமும் உள்ள தரைதளத்தில்  நுழைந்தவுடன் வாவ்! எனச்சொல்லவைக்கிறதும் சுற்றுச் சுவர்களில் அமைக்கப்பட்டிருக்கும் வட்டமான வண்ண பூக்கண்ணாடிகள். பிரமாண்டமான கண்ணாடிக்கதவுகளுடனிருக்கும் வாயில்கள்.  அதன் வழியே தெரியும் பசுமை , பெரிய, வண்ண  மலர்கள் நிறைந்த மேற்கூரை.
 
 இரண்டு வாயில்களுக்கிடையே இருக்கும் ஓவியங்கள்,  சின்ன், சின்ன தேக்கு மரப்பாளாங்களாலான தரை,  கருங்காலி மரத்தாலான பூ வேலைகள் நிறைந்த மேடையின் முகப்பு. என அசத்துகிறது. திறந்திருக்கும் கதவுகளின் மேல்பகுதி கண்ணாடி சரளங்களின் வழியே நுழைந்து பரந்து விழும்  உறுத்தாத வெளிச்சம்  உள்ளே  வந்த நம்மைத்தொட்டுச் செல்லும் கடற்காற்று  நம்மை வேறு உலகத்தில் நிறுத்துகிறது.


அந்த அரங்கம் முழுவதையும்  புகைப்படங்களால் நிரப்பாமல். நடுவில் மட்டும்,  கடல் அலைகளைக் காட்டும் பிரமாண்டமான படச்சுவர்களுடன்,  ஒரு அறையை  ஒரு ஆணிகூட அடிக்காமல் உருவாக்கியிருக்கிறார்கள்.  வெளியே போகும் பாதையைச் சற்று யோசித்து  கண்டுபிடிக்கவேண்டிய புதிரின்(maze)   பாணியில்அமைந்திருக்கும் அந்த படக்காட்சியில் பெரிய அளவில் சென்னை மீனவர்களின் வாழ்க்கைப் படங்கள். கட்டுமரங்களின்  வண்ணமயமான முகப்புகள்,  நீண்டு தொங்கும் மீன்பிடி வலைகள். மணலில் கிடக்கும் ஒற்றை சங்கு,   வண்ணக் கோலமிடப்பட்ட மீனவர்களின் வீடுகளின் முகப்பு என வண்ணமயமாக இருக்கிறது. இந்த அழகான காட்சிகள் நம் கண்ணில் மட்டும் ஏன் படவில்லை? என்ற எண்ணமும் எழுகிறது. இந்தப்படங்கள்  ஜெர்மனி,  பங்களாதேஷ்  பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப் புகைப்பட கலைஞர்களின் படைப்புகளின் தொகுப்பு. இவர்கள் அனைவரையுமே  சென்னை மெரினா கடற்கரையின் மீனவர்கள் ஈர்த்திருக்கிறார்கள்.இதனருகில்  மிக விலையுயர்ந்த. அரிய    புத்தகங்களையும்  நன்கு அமர்ந்து படிக்கும் வசதியுடன்  வைத்திருக்கிறார்கள். புகைப்படக்கலையை  நேசிப்பவர்களுக்கு இந்தப் புத்தகங்கள்  பொக்கிஷம் .நாள்முழுவதும் உட்கார்ந்து  பார்க்கலாம், படிக்கலாம்.    .புத்தகங்கள் பாழாகிவிடக்கூடாது என்று புரட்டிப்பார்க்கக் கையுறை அணியச்சொல்லிக் கொடுக்கிறார்கள்.அரங்கத்தின் இறுதியில் அரைவட்ட மேடை அதன் மேல்முகப்பின்  அழகிய மரவேலைப்பாடு  நம்மை நிறுத்துகிறது. வந்திருப்பது  புகைப்பட கண்காட்சிக்கு என்பது  நினைவுக்கு வரவே அங்கு  பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு பாரசீக கம்பளத்தின்  படத்தைப் பார்க்கிறோம்.

 அருகிலிருக்கும் குறிப்பு நம்மை அதிர வைக்கிறது.  கம்பளத்தின் வடிவத்திலிருந்தாலும் அது பல ஆயிரக்கணக்கான சின்னசின்ன  அரைஅங்குல சதுர படங்களால் நிரம்பியிருக்கும் ஒரு கலவைப்படம்.(கொலாஜ்) அந்த சதுரங்களிலிருப்பவை  பலவகைகளில் வதைக்கபட்ட மிருகங்கள்.  கம்பளத்தில் தெரியும் பல வித சிவப்பு  வண்ணம் அவற்றின் ரத்தத்தின் குறியீடு என்கிறது அந்த குறிப்பு.  படங்களை அருகில் சென்று  உற்றுப் பார்த்தால் பயங்கரம் புரிகிறது. (பெரிதாக்கப்பட்ட படத்தைப் பாருங்கள்)  இந்த படங்களை  எடுத்தவர் ரஷித் ராண என்ற பாகிஸ்தானியக் கலைஞர்.
அங்கு  நீண்ட நாள் வாழ்ந்த வவ்வால்களின் வாசனை இன்னமும் நிறைந்திருக்கும் வளைந்த மாடிப்படிகளின் வழியே மேற்தளத்தை அடைகிறோம். அங்கும் பிரம்மாண்டமான கண்ணாடி சரளங்களின் வழியே இதமான வெளிச்சமும் சுகமான கடல் காற்றும். அந்தத் தளம் முழுவதும்  நீண்டிருக்கும் ஒரு  மேஜையில் இந்து நாளிதழின் போட்டோ   காப்பகத்தினரின்  தேர்ந்தெடுக்கபட்ட படங்களின்  தொகுப்பு.  வெறும்  படங்களாகயில்லாமல் சிறிய அளவில் கடவுட்கள் போலச் செய்து நிறுத்தியிருக்கிறார்கள். பலவித அரசியல், சமூக நிகழ்வுகளின்  சாட்சிகளாகியிருக்கும்   இந்த படங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதுபோல அமைத்திருப்பதில் வடிவமைத்தவரின் சாதுரியம்  தெரிகிறது.  உதாரணமாகத் தேர்தல் நேரத்தில்  நிறுத்தப்பட்டிருந்த  ராஜிவ் காந்தியின்  கட்வுட்டின் படத்தை தொடர்ந்து  அவர் எப்படி விழுந்து இறந்திருப்பார்  என தடயவியல்  நிபுணர்  விழுந்து காட்டி விளக்கும் படம். இப்படி  அடுத்தடுத்து சுவாரஸ்யம் தரும் வகையில் படங்களை ஒரு மெல்லிய  இழையில் கோர்த்திருக்கிறார்கள். . பிரமாண்டமாக நிறுவப்பட்டு சுழல்காற்றில் விழுந்தவிட்ட  ஜெயலலிதாவின் கட்வுட்டை உடனடியாக  சரியாக்கப் போராடும் தொழிலாளர்களின் பணியைச்சொல்லும்  படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமக்குத்    திறந்திருக்கும் ஜன்னல் வழியே  எதிரே கடற்கரையில்  ஜெயலலிதா  அமைத்த புரட்சித்தலைவரின்  நினைவிடமும் (பறக்கும் குதிரை)  தற்செயலாக கண்ணில் படுகிறது.
மீண்டும் கீழிறங்கி அரங்கத்தின் மறு முனையிலிருக்கும் மாடிக்குச்செல்கிறோம். நுழைவாயிலின் முகப்பின் கூரையிலிருந்து  இரண்டு புறமும் அழகாக விரிந்து வழியும்,   பூ வேலைப்பாடுகளுடான  படிகள். நுழைவு தளத்தில்  அறைக்காகப் பகுக்கப்பட்டிருக்கும்  மரதடுப்புகளில்  கூட கலைநயம்.  . கட்டபட்டகாலத்தில் வரும் விருந்தினர்கள்  தங்கள் மழைக்கோட்டுகளை, குடைகளை வைக்கத்  தகுந்த வகையில் வரிசையான  அமைக்கப்பட்ட உயரமான அலமாரிகளாலனது  அந்த மரச்சுவர்கள்.
  

இந்த கண்காட்சியில் படங்கள் மட்டுமில்லாமல் அவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் முறையும் நம்மைக் கவர்கிறது.  எட்டு செங்கற்களால்  அடுக்கப்பட்ட  சிறு மேடைகள். அதன்மீது துணியில் பரப்பப்பட்டிருக்கும் வெண் மணலில் விரிந்து கிடக்கும் புத்தகத்தைப் போல நிற்கும் புத்தகம் படிக்க உதவும்  ஸ்டாண்டுகள் அந்த அறையில் அணிவகுத்து நிற்கின்றன.  ஏதோ மதப் பிரார்த்தனைக்கூடம்  போலத்தோன்றினாலும் .  ஒவ்வொரு ஸ்டாண்டிலும் படங்கள் அருகிலேயே  குறிப்புகள்.  படங்களும் அந்தக்  குறிப்புகளும் நம் மென் உணர்வுகளைக் கடுமையாகத் தாக்குகிறது. அனைத்தும் காஷ்மீரத்தின் நிகழ்கால காட்சிகள்.  கோரமான வன்முறை  காட்சிகளாகயில்லாமல்  ஓவ்வொவ்வொன்றும் அந்த மக்களின் மனநிலைகளைப். . வன்முறைகளால்  வாழ்வையிழந்த அந்த மக்களின் சோக முகங்களை   பேசுகிறது.

   என் கணவரும் மகனும் பயங்கரவாதிகள் என தவறாக அடையாளம் காணப்பட்டு சுட்டுக்கொல்லப் பட்டவர்கள் .இங்குதான்  புதைக்கப் பட்டிருக்கின்றனர். இப்போது எனக்கு  அந்த பயங்கரவாதிகளோ அரசாங்கமோ ஆதரவளிக்கவில்லை.  வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்ற குறிப்பின் அருகே சமாதிகளின் அருகில் ஒரு பெண்ணின் படம்.


காஷ்மீரில் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் எதிரானவர்கள்.  புரட்சிகாரர்கள் ராணுவத்தை எதிர்க்கிறார்கள். ராணுத்தினர்  புரட்சிக்காரர்கள் என சந்தேகிப்பவர்களை எதிர்க்கிறார்கள். இவர்கள் சண்டையில்  சதாரண  மனிதர்கள் சிக்கி அழிகிறார்கள். உடைமைகளை இழக்கிறார்கள்

 .  குறிப்புக்கு எதிரில் வெடிகுண்டுகளுக்குப் பலியான  கடையின்  முன் அழுது நிற்கும்   அதன் பெண் உரிமையாளர் படம்.  "தூப்பாக்கிகள் நீளும் போது உரையாடல்கள் நின்றுவிடும்" என்று அப்பகுதிக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். காஷ்மீரின் அண்மைக்கால கோரம் நினைவைவிட்டு அகலாத இன்றைய நிலையில் இந்தப் படங்களைப்பார்த்த கனத்த மனத்தோடு, வெளியே வருகிறோம்.


 
அந்த  தாழ்வாரத்தின்  கம்பீரமாகக் கலைநயத்துடன் உயரமாக நிற்கும்   அந்த தாழ்வாரத்தின் தூண்களும், பூக்கோலமிட்ட அந்தச் செம்பழுப்பு கட்டிடத்தின் முன் கோபுரங்களும் நீண்டகாலத்துக்குப் பிற்கு மனிதர்களைக் கண்ட மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிற்பது போலிருந்தது..