இன்று நம் மனதில் பதிந்திருக்கும்,வழிபடும் சரஸ்வதி, லஷ்மி முருகன் போன்ற தெய்வங்களின் உருவங்களை இந்த உலகுக்கு அந்த வடிவில் அறிமுகப்படுத்தியவர் இராஜா ரவிவர்மா.
தன் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களைப் படைத்திருப்பதாகச் சொல்லப்படும் இந்த ஓவியனின் அத்தனைப் படைப்புகளைப் பற்றிய விபரங்கள் இன்று ஒரே இடத்தில் இல்லை. மஹாபாரதம், இராமாயணம், புராணக்கதை மாந்தர்களைத்தவிர அவர் எண்ணற்ற படங்களை வரைந்திருக்கிறார். அவை இவர் பெயர் இல்லாமல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல அரண்மனைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
சாகுந்தலம் போன்ற காவியத்தின் காட்சிகள் இவரது ஓவியங்கள் மூலம் கவிதைகளாயின. இவர் வரைந்த பெண்களின் கண்கள் உணர்ச்சிகளை மட்டுமில்லை,அந்த உருவங்களும் பெண்ணின்உடல் மொழியைப் பேசின. இவரது ஓவியங்களில் அந்த இடத்தின் சூழல், அணிந்திருந்த ஆடைகள், தரை, சுவர் ஒளி நிழல் என எல்லாம் மிக நுணுக்கமாக வரையப்பட்டிருக்கும். அழகான பெண் என்றால் அவர் ரவி வர்மாவின் ஓவியம் போல என வர்ணிக்கப்பட்டார். இதை வரைய எவ்வளவு காலம் பிடித்திருக்கும் என்ற எண்ணவைக்கும் பல படங்களை இவர் சிலமணி நேரங்களில் வரைந்து தள்ளியிருக்கிறார். அதனால் தான் வாழ்நாளில் அத்தனை படங்களை வரைய முடிந்திருக்கிறது.
திருவனந்தபுரம் அருகிலிருக்கும் கிளிமானுர் ஒரு சின்ன ஜமீன். அன்றைய திருவிதாங்கூர் ராஜ வம்சத்துடன் திருமணத் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளும் உரிமை பெற்ற குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் 1848ல் பிறந்தவர் ரவி வர்மா. மிகச்சிறு வயதிலேயே கிளிமானுர் அரண்மனைச்சுவர் முழுவதும் கரித்துண்டால் படங்களாக வரைய முயன்றுகொண்டிருந்த இவரின் ஆர்வத்தையும் ஓவியத் திறனையும் கண்டுபிடித்தவர் இவரது மாமா ராஜா வர்மா. அவரது ராஜா பட்டம் தான் மறுமக்கத்தாயம் என்ற தாய்வழி மரபுப்படி பின்னாளில் இவரை அடைந்தது.
மாமா ராஜ ராஜா வர்மாவே ஒரு ஓவியராக இருந்ததால், ஓவியத்தில் மிக ஆவர்வம் கொண்ட மருமகனை திருவிதாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாளிடம் 14 வது வயதில் ஒப்படைத்தார். அங்கு அரண்மனை ஓவியராக இருந்த தமிழர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் கற்றபின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடம் தைல வண்ண ஒவியநுணுக்கங்களை கற்றார். உலகம் வியந்த இந்தக் கலைஞனுக்கு குருவாகயிருந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
திருவிதாங்கூர் மன்னரின் ஆதரவுடன். இளம் வயதிலேயே இவரது படங்கள் வெளிநாட்டு ஓவிய கண்காட்சிகளுக்கு அனுப்பப்பட்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறது ஓவியத்தில் தீராத ஆர்வம் கொண்ட ரவி வர்மா ஒரு காலகட்டத்துக்குப்பின் தானாகக் கற்றுக்கொண்டதுதான் அதிகம்.
இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அந்தக் காலகட்டத்தில் இந்திய ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ணங்களை ஓவியங்களில் பயன்படுத்தி வந்தனர் அந்த உத்திகளைத் . தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868 இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையையும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார்.
தேடித்தேடிச் சேகரித்த ஐரோப்பிய ஓவியங்கள், புத்தகங்கள் இவருக்கு உதவின. வண்ணங்களின் கலவை, ஓவியத்திலிருக்கும் உடல் பரிமாணம் இவைகள் தான் ஒரு ஓவியத்தின் கலைநயத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்த ரவி வர்மா அதை தன் ஓவியங்களில் ஐரோப்பிய முப்பரிமாண ஓவியப்பாணியை புகுத்தி தனக்கென ஒரு ஓவியப்பாணியை உருவாக்கிக்கொண்டார். முதல் முறையாக இந்திய ஓவியங்களில் முப்பரிமாணத்தில் கடவுளர், இதிகாசக்காட்சிகள் தைல ஓவியங்களாயின.
10 ஆண்டுகளுக்குமேலாக தன் கிளிமானூர் அரண்மனையிலேயே படங்களை வரைந்து தள்ளிக்கொண்டிருந்த ரவிவர்மாவுக்கு பரோடா மன்னர். சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய அரண்மனையின் கூடங்களை ரவி வர்மாவின் ஓவியங்களால் அலங்கரிக்க விரும்பினார்.. அதற்காக அந்த அரண்மனையில் 10 ஆண்டுகள் தங்கி ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
தொடர்ந்து மைசூர் சமஸ்தானத்தின் அழைப்பு. இப்படி மன்னர்கள், பிரபுக்களின் ஆதரவுடன் அவர்கள் படங்களையும் ,ஆங்கிலேயே அதிகாரிகளையும் வரைந்து கொண்டிருந்தாலும், அவரது சில சிறந்த படைப்புகள் அரண்மனைகளில்தான் பிறந்தவை என்றாலும் தன் படைப்புகள் சதாரண மனிதர்களை அடையவில்லையே என்ற ஆதங்கம் ரவி வர்மாவுக்கு இருந்தது. அப்போது அவருக்கு எழுந்த எண்ணம் தான் அன்று ஜெர்மனியில் அறிமுகமாயிருந்த கான்வாஸில் . வரைந்த ஓவியங்களை அதே வண்ணங்களுடன் காகிதத்தில் அச்சிடும் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி தன் படங்களை அச்சிடவேண்டும் என்பது.
தன் சேமிப்பு அனைத்தையும் மூதலீடு செய்து 1894ல் பம்பாயில் ஒரு அச்சகத்தைத் நிறுவினார்.அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட முதல் ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம்.
அழகான படங்கள் நிறைய அச்சிடப்பட்டும் அச்சகம் லாபத்தில் இயங்கவில்லை. 1896ல் அதை புனா அருகிலுள்ள ஒரு சின்ன நகருக்கு மாற்றியும் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்தது அந்த அச்சகம். அச்சு இயந்திரங்களை நிறுவியபோது அவரிடம் பணியிலிருந்த ஜெர்மனியாருக்கே அதை விற்றுவிட்டு தனது ஊரான கிளிமானுருக்குத் வருத்தத்துடன் திரும்பிய இந்த ஓவிய மேதையின் இறுதிக்காலம் ஒரு மோசமான ஓவியத்தைப்போலத்தான் இருந்தது.
ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்று பிரபல ஓவியர்களைச் சந்திக்க வேண்டும் என்ற இவரது ஆசை நிறைவேறவில்லை. அந்த நாட்களில் கடல் தாண்டி பயணம் செய்தால் திரும்பியபின் கோவில்களுகச் செல்லும் உரிமை தடை செய்யப்படும் என்ற சமூக நிராகரிப்பைச் சந்திக்கவிரும்ப வில்லை அவர்..
அச்சகத்தை வாங்கியவருக்கு தன் கடவுளர் படங்களை அச்சிடும் உரிமையைக்கொடுத்திருந்தார். அதன் விளைவாகத்தான் கடந்த நூற்றாண்டில் காலண்டர்களாகப் பிறந்து பல இந்துக்குடும்பங்களின் பூஜை அறையில் தெய்வங்களாக இடம்பெற்றிருக்கிறது இவரது ஓவியங்கள்.
எல்லா நல்ல கலைஞர்களைப்போல பாராட்டுகளுடன் கண்டனங்களையும் சந்தித்தவர் ரவி வர்மா.. மேற்கத்திய பாணியைப்புகுத்தி நம் பாரம்பரிய சித்திரகலையைச்சிதைத்துவிட்டார், நமது தெய்வங்களை கொச்சைப்படுத்திவிட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டார். அவரது ஓவியங்கள் இந்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடற்றவை என்று விவேகானந்தரும், இந்திய ரசனையையும் அதன் கலைப்பண்பாட்டையும் தரம் தாழ்த்தியவர் என்று அரவிந்தரும் எழுதியிருக்கிறார்கள்.
விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் சாமானிய மனிதனை ஓவியங்களை ரசிக்க வைத்த கலைஞன் அவன். .இன்றைக்கும் ஓவியராக விரும்புவர்களுக்கு ஆர்வம் ரவி வர்மாவின் படங்களிலிருந்துதான் துவங்குகிறது.
ஒரு நல்ல கலைஞனின் படைப்பு காலத்தால் அழிவதில்லை என்பதற்கு, ரவி வர்மா இறந்து 100 ஆண்டுகளுக்குப்பின்னரும் அவரது படங்கள் இன்றும் பேசப்படுகின்றன என்பதே சாட்சி.