-
இந்த இதழ் புதிய தலைமுறை இதழிலின் புத்தக அறிமுகத்தில் எழுதியது
இந்த இதழ் புதிய தலைமுறை இதழிலின் புத்தக அறிமுகத்தில் எழுதியது
உலக இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில்தான் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கான பதிப்புரிமை அரசுடைமை செய்யப்பட்டு, பிறகு பொதுவுடைமை ஆக்கப்பட்டது. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, இரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட எவருடைய எழுத்துகளுக்கும் கிடைத்திடாத இந்தத் தனிப்பெருமை மகாகவி பாரதியின் எழுத்துக்குத்தான் கிடைத்தது.
ஆனால் அந்தப்பெருமை அவ்வளவு எளிதில் கிட்டிவிடவில்லை. இதற்காக நடந்த முயற்சிகள் அதன் மூலம் நிகழ்ந்த மாற்றங்கள், ஏமாற்றங்கள், வழக்குகள் அரசு எடுத்த நிலைப்பாடு அனைத்தையும் வரலாற்று ஆவணங்களின் துணைகொண்டு தான் சார்ந்த வரலாற்றுத்துறைப் பார்வையுடன் இந்நூலை முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி மிக அருமையாக எழுதியுள்ளார்
.
மகா கவியின் படைப்புகள் நாட்டுடமையானது குறித்து வழங்கி வரும் பலவித கதைகளைக் கேட்ட நமக்கு இவர் துல்லியமான தரவுகளுடன் உண்மை வரலாற்றை விவரிக்கிறார்.
மகாகவி பாரதி தான் வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது படைப்புகள் வெகுகுறைவு. பாரத ஜன சபை எனும் காங்கிரஸ் இயக்க வரலாற்றைப் பற்றிய மொழிபெயர்ப்பு ஒன்றுதான் வெளியாகியிருக்கிறது.
பாரதி வாழ்ந்த காலத்தில் அவரது பாடல்களுக்கு இருந்த சமூக, அரசியல் மதிப்பைவிட அவரது காலத்துக்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் உச்சம் பெற்ற காலகட்டத்தில்தான் பல மடங்காக உயர்ந்தது அதனால் அச்சிட்ட புத்தகங்கள் அதிகம் வரத்துவங்கியது. அப்படி பதிபிக்கபட்ட பாரதியின் படைப்புகள் பொதூடமையாக்கப் படுவதற்கான் தேவை எப்படி எழுந்தது என்பதை நிகழ்வுகளின் காலபோக்கோடு விவரிக்கிறார் நூலாசிரியர். சில இடங்களில் தரவுகளாகச் சுட்டிகாட்டபடும் ஆவணங்களும், கடிதங்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன
.
மஹாகவியின் மனைவி அவரது மகளின் திருமணத்துக்காக அவரது படைப்புகளின் உரிமையை அடகு வைத்திருக்கிறார். அதுவும் யாரிடம் தெரியுமா?. கவிஞரின் தம்பி விஸ்வநாதய்யரிடம். . இதைவிட அதிர்ச்சியான செய்தி அந்தக் கடன் திருப்பிச் செலுத்தபடாததால் உரிமை அவருக்குச் சொந்தமாகிவிடுகிறது.
அவர் பாரதி பிசுரலாயம் என்ற பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டுக்கொண்டிருந்த நிலையில் 1928ல் அன்றை அரசு பாரதி நூல்களுக்குத் தடை விதிக்கிறது. விற்பனையைப் பாதிக்கிறது. காங்கிரஸ்காரர்களின் போரட்டங்களுக்குபின் தடைவிலக்கப்படுகிறது. புத்தகங்கள் பரபரப்புடன் விற்க துவங்கின. இந்தக் கட்டத்தில் ஒரு குழுவினர் பாரதியின் படைப்புக:ள் ஏன் ஒரு தனிநபரிடம் இருக்க வேண்டும் அதை அரசுடமையாக்க வேண்டும் என்ற கருத்தை முன்னெடுக்கின்றனர். அந்தக் கருத்தாக்கம் மெல்ல பாரதிக்கு விடுதலை என்ற அமைப்பாக உருவாகிறது. எழுத்தாளர்கள் மாநாடு, பாரதி மணிமண்டப விழா போன்ற மேடைகளில். விவாதிக்கபடுகிறது மக்களிடம் அந்தக் குழுவின் கோரிக்கை வலுப்பெறுகிறது.
இதே காலகட்டத்தில் எழுந்த ஒரு வழக்கு பாரதியின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட வேண்டியதின் அவசியத்தை அதிகப்படுத்தியது. பாரதியின் பாடல்களை இசைதட்டாக்கும் உரிமையை 1934 ஆம் ஆண்டு விஸ்வநாத அய்யர் ஒரு நிறுவனத்துக்கு விற்றிருந்தார். அவரிடம் சினிமா தயாரிப்பாளார் ஏவி மெய்யப்பச் செட்டியார் வாங்கியிருந்தார்
.
டி.கே.சண்முகம் அவர்கள் நாடகத்துறையில் முன்னோடி. அவ்வை சண்முகம் என்று பரவலாக அறியப்பட்ட அவரின் நிறுவனமே தமிழகத்தின் முதல் சமூகப் படமான மேனகையைத் தயாரித்தது. அவர்கள் உருவாக்கிய ‘பில்ஹணன்’ எனும் நாடகத்தைத் திரைப் படமாக்க முனைந்தபோது, பாரதியின் கண்ணன் பாட்டில் வரும், ‘தூண்டில் புழுவினைப் போல் - வெளியே, சுடர் விளக்கினைப் போல், நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ!’ எனும் பாடலைத் திரைப்படத்தில் இணைத்திருந்தார்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியார். தன்னிடம் இருக்கும் பாடல் உரிமையைப் பயன் படுத்தினால் இழப்பீடாக ஐம்பதாயிரம் தர வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பல ஆண்டுகளாகப் பாரதியின் பாடல்களைத் தன் நாடகத்தில் பயன்படுத்திக்கொண்டிருந்த டிகே சண்முகம் வழக்கை எதிர்கொள்ளத் தயாரானார். இந்தப் புத்தகத்தில் விவரிக்கபட்டிருக்கும் அந்த வழக்கில் ஏற்பட்ட ஒரு திருப்பம் பலர் அறியாதது.
ஒரு புறம் மக்களின் கிளர்சி மறுபுறம் ஒரு வழக்கு என்பதால் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது எடுத்த முடிவுதான் பாரதியின் படைப்புகளை நாட்டுடமையாக்குவது. எந்த முன் மாதிரியும் இல்லாத, உலகில் எந்த அரசும் செய்யாத விஷயம் ஒரு படைப்பாளியின் உரிமையை அரசு வாங்குவது என்பது நிகழ்ந்தது. பாரதியின் எழுத்துகள் அரசுடைமை ஆக்கப் பட்டதாக கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபையில் அறிவித்தார்.
இதுவரை நிகழ்ந்தையும், மகாகவி பாரதியின் படைப்புகளைப் பொது வுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, வேகமாக வலுப்பெற்று, மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய நீண்ட கதையை அரசின் அறிவிப்புக்குப் பின்னரும் அரசு இயந்திரத்தின் மெத்தனத்தால் 8 ஆண்டுகளுக்குப் பின்னரே ! பாரதியின் எழுத்துகள் அவன் விரும்பியபடி தீப்பெட்டி, மண்ணெண்யை விட மலிவாகக் கிடைத்தது என்பதைச் சொல்லும் அரிய ஆவணம் இந்தப் புத்தகம்.