நீட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26/7/17

கருகிய கனவுகள்


மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவர் ஆக முடியாது 
தமிழக அரசு கடந்த சில மாதங்களாக,மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பி வந்த நீட்  (NEET) பிரச்சனையில் உயர் நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் நீட் தேர்வில் தகுதிபெறாத தமிழக மாணவர்கள் +2 வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட   மருத்தவ கல்லூரிகளில் சேரமுடியாது. 
 நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது.
இந்த நடைமுறைகளை மாற்றும் வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை முடிவு செய்தன. இதை எதிர்த்து வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில்  கடந்த 2013 ஜூலை 18-ம் தேதி தேசிய நுழைவுத் தேர்வு நடத்தத் தடை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததின் விளைவாக  2013ல் பிறபித்த தடையுத்தரவை ரத்து செய்து தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த  உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது 
இந்த  உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்திய மருத்துவ கல்வியில் ஒரு மிகப்பெரிய மாறுதலை உருவாக்கியது இளநிலை படிப்புகளுக்கு மட்டுமல்லாது முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் நாடு முழுவதும் ஒரே முறையில் நடத்தப்படும் நீட் தேர்வு தமிழகத்திலும் மத்திய அரசு கட்டாயமாகி உள்ளது. என்றும் அறிவித்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காகவே தனி அமைப்பையும் உருவாக்கியுள்ளது.  கடந்த மே மாதம் 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 11.3 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.      தமிழகத்தில்  எழுதியவர்கள் 83000க்கும் மேற்பட்டவர்கள் அதில் தேர்வு பெற்றிருப்பவர்கள் 32570 பேர். இதில்மிகப் பலர் சிபிஎஸ் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் காரணம் இந்த நீட் தேர்வின் கேள்விகள் 80% சிபிஎஸ் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டவை.
  மாநில பாடத்திட்டத்தில் +2 படித்த மாணவர்கள் இந்தத் தேர்வை சரிவரச் சந்திக்க முடியாமல் போய்விட்டது   என்பதைக் கணித்த அரசு  தமிழக அரசுஇந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறுவதற்காக தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வாங்கிடலாம் எனஅறிவித்தும் விட்டது. ஆனால்  இரண்டு சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற  மத்திய அரசு  அனுப்ப வில்லை. தங்களது சொந்தப் பிரச்சனைகளில் மத்திய அரசின் தயவை நாடி நிற்கும். மாநில அரசும் போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுக்க வில்லை
. இவ்வாண்டு, நீட் மூலம் தான் தமிழ்நாட்டிலும் மாணவர் சேர்க்கை என அறிவித்து அதற்கான பணிகளை வாரியம்  துவங்கியிருந்தது. இந்த விஷயத்தில் தங்கள் முயற்சிகள் தோல்வியடைந்ததை உணர்ந்த மாநில அரசு அதை மறைப்பதற்காக, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்குத் தனி ஒதுக்கீடு கொண்டு வர  ஒரு அரசாணை பிறப்பித்தது. அதாவது, தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் 15 விழுக்காடு இடங்கள் போக மீதி உள்ள 85 விழுக்காடு இடங்களில் 15 விழுக்காடு இடங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும், 85 விழுக்காடு இடங்களை மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கிட அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையைத்தான்  செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்புக்கான முக்கிய காரணங்களாக நீதி மன்றம் சொல்லியிருக்கும் விஷயங்கள் இரண்டு. ஒரே வகுப்பில் படித்த மாணவர்களிடையே வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்தவர்கள் என்பதால் தகுதி நிலையிலேயே  வேறுபாடுகாட்டுவது  எல்லோருக்கும் சமத்தவம் என்ற நிலைக்கு மாறுபட்டதாகிவிடும். இரண்டாவது இந்த அரசாணையை  வெளியிட்டிருப்பது அரசின் செயலாளர்கள். ஒரு அரசின் கொள்கை முடிவுகள் அமைச்சரவையால் பரிசிலிக்கபட்டு ஒரு ஆணையாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது  சட்டமன்றத்தில் சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டு,ம்  ஆனால் இது அப்படிச் செய்யப்படவில்லை. 
தமிழக அரசு  உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது  
ஆனால் . இப்படி வெவ்வேறு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டரீதியாக செல்லுமா? தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டும்  85 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் ஏற்குமா? என்பது  மிகப்பெரிய கேள்விக்குறி.  ஏனெனில், அரசியல் சட்டப்படி, சமூக ரீதியாக கல்விரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். இப்படிப்பட்ட ஒதுக்கீடுகள் சட்ட ரீதியாகச் செல்லுபடியாகும் எனச்சொல்ல முடியாது. மேலும் 50 விழுக்காட்டுக்கு மேல் எந்த இட ஒதுக்கீடும் செய்யக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியுள்ளது, ஏற்கனவே, குஜராத் உயர் நீதிமன்றம் இதுபோன்ற ஒரு ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. எனவே, தமிழக அரசின் இந்த ஒதுக்கீடு  அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம். .

மாநில அரசு என்ன செய்ய வேண்டும்?                            
இதைக் கெளரவ பிரச்சனையாக கருதாமல் நீட் தேர்வை ஏற்று நமது மாநில பாடதிட்டங்களை மாற்றி அமைத்து தமிழக கல்வித்தரம் சிபிஎஸ் பாடத்திட்டத்தைவிட உயர்ந்தது என நீருபிக்க வேண்டும் 
 நீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்(qualifying test).அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test). என்பதை உணர்ந்து நமது மாநில மாணவர்களை அதற்கு தயாரிக்கும் வகையில் பாடத்திட்டங்கள்  செழுமையாக்கப்படவேண்டும். இதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு அண்மையில் செய்திருக்கிறது. இதை அறிவிப்போடு நிறுத்தாமல் உண்மையாகவே செயலாக்கவேண்டும். 
குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி ரூபாய்வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப்பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும்கொடிய வழக்கம் இந்தத் தேர்வு முறையினால்  முடிவுக்கு வருகிறது. பத்துக்கோடி ரூபாய்கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவஇடம் கிடைக்காது. என்று எழுந்திருக்கும் நிலையை வரவேற்க வேண்டும்.
சட்டம். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், புதிய கல்விக் கொள்கை எனப் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மருத்தவ கல்லூரி கனவுகளுடன் மாநில பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும்  மாணவர்களும், கருகிய அவர்களின் கனவுகளை கண்டு கண்ணீர் விடும் அவர்கள்  பெற்றோர்களும் தான்.