நிலம் கைக்கப்படுத்தும் அவசர சட்டம் அவசியமா?
இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஓர் அவசர சட்டம் அறிவிக்கப்பட்டு, அது பாராளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேறி ஆனால் மாநிலங்களவையில் நிறைவேறாமல் காலாவதியாகும் கடைசிகட்டத்தில் மீண்டும் ஒரு முறை அவசர சட்டமாக பிரகடனபடுத்தபட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போது இப்படி ஓர் அவசர சட்டத்தை குடியரசுத்தலைவர் அறிவிக்க முடியாது. என்பதற்காகவே தொடரின் இடையில் மாநிலங்களின் அவை கூட்டத்தொடரை மட்டும் முடிந்ததாக அறிவித்து விட்டு அவசர சட்டம் மீண்டும் அறிவிக்கப் பட்டிருக்கிறது. இப்படி அவசர அவசரமாக அறிவிக்கப் பட்ட சட்டம்
-நிலம் கைகபடுத்தும் அவசர சட்டம்.
இது என்ன சட்டம்?
நிலம் என்பது மக்களின் உணர்வுகள் சார்ந்த ஒரு விஷயம் என்பதை உலக சரித்திரம் நமக்குச் சொல்லுகிறது. காலம் காலமாக மன்னர்கள் போரிட்டதும், மக்களாட்சி மலர்ந்த பின்னரும் குடும்பங்கள் நிலத்திற்காக உறவுகளை மறந்து பிளவுபட்டு வழக்காடிக்கொண்டிருப்பதும் இந்திய மண்ணுக்கே உள்ள சில தனிப்பெருமைகளில் ஒன்று. நிலத்தின் மதிப்பு என்பது இங்கு வெறும் பணத்தினால்மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. மக்களின் வாழ்வியல், மொழி, கலாச்சாரம் போன்ற பலவற்றிற்கு நிலம் ஒரு முக்கிய அடிப்படையாக இருக்கிறது. ஒவ்வொரு துண்டு நிலத்துக்குபின்னாலும் . சிலவற்றில் ரத்தம் சிந்தப்பட்டகதைகள் உட்பட ஒரு வரலாறு இருக்கிறது. இந்த நிலையில் ஆங்கில ஆட்சிக்காலத்தில் அரசின் திட்டங்களுக்கு மக்களின் நிலங்களை எடுத்துக்கொள்ள 1894ல் ஒரு சட்டத்தை இயற்றியது. இதன்படி அரசு எப்போது வேண்டுமானலும் எங்கு வேண்டுமானாலும் தேவையான அளவு நிலத்தை எடுத்துக்கொள்ளலாம். அதற்கான நஷ்ட ஈடு அரசாலேயே நிர்ணயக்கபட்டு. தாமதமாகத்தான் கொடுக்கப்படும். என்ற அளவிலிருந்த ஒரு மோசமான சட்டம். பிரிட்டிஷ் ஆட்சி கொடுத்துவிட்டுப்போன பல சட்டங்களைப்போல இதையும் சுதந்திர இந்திய அரசு பயன் படுத்திக்கொண்டு வந்தது. மக்களுக்கு தங்கள் உரிமை குறித்த விழிப்புணர்வு இல்லாத காலகட்டம் அது. இந்த துருப்பிடித்த சட்டத்தைக்கொண்டே அரசுபல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை எடுத்து அதன் திட்டங்களுக்கு பயன் படுத்தியது. ஆங்கில ஆட்சிக்கும் இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம். நிலங்கள் எடுக்கபட்டபின்னர் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்து அதை தலைமுறைகளை தாண்டியும் போராடுவார்கள் ஒரு கட்டத்தில் ஒய்ந்து போவார்கள். உதாரணம். தமிழகத்தில் நெய்வேலி சுரங்கத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கான நஷ்டஈடு வழக்குகள் இன்னும் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.
1894 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வந்த நிலச்சட்டத்தைத் தான் இந்திய அரசு 2007 வரை பயன்படுத்தி வந்தது. எப்பொழுதெல்லாம் நிலம் கையகப்படுத்துதலில் பிரச்சனை ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அதற்குத் தேவையான சிறு மாற்றங்களை மட்டும் அந்தச் சட்டத்தில் அரசு செய்து கொண்டிருந்தது. தொண்ணூறுகள் வரை இதில் பெரிய அளவில் பிரச்சனையில்லை, ஏனென்றால் அரசு மட்டுமே பெரிய அளவில் நிறுவனங்களைக் கொண்டிருந்தது. அரசுக்கு மட்டுமே பெரிய அளவில் நிலத்தேவை இருந்தது. இந்தச் சட்டத்தின் மிகமுக்கியமான பிரச்சனை நிலத்திற்குண்டான மதிப்பை விட மிகக்குறைவான தொகை வழங்கப்பட்டது, நிலத்தை இழப்பவர்களுக்கு உரிய மறு வாழ்வு பற்றியோ, மீள் குடியமர்வு பற்றியோ இந்தச் சட்டம் பேசவேயில்லை என்பதே. அதனால் நிலங்களை மட்டுமே நம்பி வாழ்ந்த பழங்குடி, பட்டியலின் மக்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து பிடுங்கி வெளியேற்றப்பட்டனர். உள்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் மக்களில் இவர்களின் எண்ணிக்கையே அதிகம். சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் இம்மக்களின் குரல் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு எட்டவேயில்லை.
1990ஆம் ஆண்டு முதல் இந்தியா தனியார்மயத்தைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் தொடங்கியது. இதற்குப் பின்னர் தனியாரும் நிலம் கையகப்படுத்தலில் கலந்து கொண்டதாலும், அரசு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாலும் நிலங்களை வைத்திருந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகரித்தன. இப்பொழுது சமூகத்தின் நடுத்தர வர்க்கமும் பாதிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துதலினால் பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. நர்மதா அணைக்கு எதிரான போராட்டம், நந்திகிராம், சிங்கூர், கலிங்கநகர், நியாம்கிரி போராட்டங்கள் எல்லாம் இது குறித்து ஒரு தெளிவான சட்டம் அவசியம் என்பதை அரசுக்கு உணர்த்தின.
. இந்தப் போராட்டங்களின் விளைவாக அன்றிருந்த காங்கிரசு தலைமையிலான அரசிற்குப் புதிய சட்டத்தை வடிவமைக்க வேண்டிய தேவையேற்பட்டது.
இதற்காக 2007 ஆம் ஆண்டும், 2009ஆம் ஆண்டும் இரண்டு பாராளுமன்ற கூட்டுக்குழுவை உருவாக்கியது, இந்த இரண்டு குழுவிற்கும் தலைமை வகித்தது பா.ஜ.கவினரே – முதல் குழுவிற்குக் கல்யாண சிங்கும், இரண்டாவது குழுவிற்குச் சுமித்ரா மகாஜனும் (இன்றைய பாராளுமன்ற சபாநாயகர்) தலைமை வகித்தனர். 2013 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொழுது அதை ஆதரித்துப் பா.ஜ.க வாக்களித்தது. இந்தச் சட்டம் வெறும் நிலத்தைக் கையகப்படுத்துதல் என்பதை மட்டும் பார்க்காமல், நிலத்தை விற்றவருக்கான மறு வாழ்வு, மீள் குடியமர்வு, அந்த நிலத்தை நம்பி பணிபுரியும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு, நிலம் கையகப்படுத்துதலினால் ஏற்படும் சமூகப் பாதிப்பு என விரிவாகப் பேசியது, மேலும் நிலத்திற்கான தொகையும் முன்பு போல் இல்லாமல் கிராமப்புற பகுதிகளில் சந்தை மதிப்பை விட நான்கு மடங்காகவும், நகர்ப்புற பகுதிகளில் சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கும் தர வேண்டும் என நிர்ணயத்துள்ளத்து. அன்று இந்த சட்டத்தைவடிவமைத்தில் தலைமை தாங்கி, ஆதரவளித்த பா.ஜ.க இன்று ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை-
அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து நீர்த்துப் போகச் செய்திருப்பது .இது இந்தத் தேசம் அடிக்கடி சந்திக்கும் அரசியல் ஆச்சரியங்களில் ஒன்றுதான் என்றாலும் இந்தத் திருத்தங்களுக்கு அரசியல் காரணங்கள் கற்பிக்கப்பட்டு காங்கிரஸும் மற்ற கட்சிகளும் எதிர்க்கின்றன. என்னவானாலும் இதை சட்டமாக விடமாட்டோம் என சவால் விடுகின்றன.
சட்டவடிவில்/ திருத்தங்களில் அப்படி என்ன பிரச்சனை?
இந்தச் சட்டப்படி அரசு அரசுத் திட்டங்களுக்காகவும் , தனியார் நிறுவனங்களுக்காகவும் நிலத்தை மக்களிடம் இருந்து அரசு கையகப்படுத்தலாம்.
இந்தச் சட்டம் மூலம் என்ன காரணங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தலாம் என ஒரு பெரிய பட்டியல் போட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அடங்காதது எதுவுமே இல்லை. இது போதாது என்று அரசு நினைத்தால் இந்தப் பட்டியலில் எப்போது வேண்டுமானாலும் எதையும் சேர்க்கலாம் என்ற வாசகத்தை அரசு சேர்த்துள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால் மக்களின் நிலங்களை அரசு விரும்புபோது எளிதாக எடுத்துக் கொள்ளமுடியும் என்பதுதான்.
2013 ஆம் ஆண்டுச் சட்டம் சில திட்டங்களுக்கு 70 விழுக்காடு, சில திட்டங்களுக்கு 80 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதல் கட்டாயம் வேண்டும் எனச் சொல்கின்றது, இன்று பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ள திருத்தத்தின் மூலம் நில உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலேயே நிலங்களை அவர்களிடமிருந்து வாங்க முடியும்.
2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் ”பெரும்பான்மைத் திட்டங்கள்” என்று சொல்லப்பட்டிருந்தது.. ஆனால் இன்று பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ள திருத்தத்தில் பின்வரும் திட்டங்களுக்கு
“சமூகப் பாதிப்பு ஆய்வு, விசாரணை” (Social Impact Assessment, Investigation) , “உணவு பாதுகாப்பிற்கான சிறப்பு ஏற்பாடு”,
“நில உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறுதல்” (Consent from Land Owners) போன்ற பிரிவுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
அதாவது கீழ்கண்ட இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல்பெற,மக்கள்விருப்பங்களை அறிய, விளைநிலங்களை எடுக்க அனுமதி தேவையில்லை.
அ) தேசத்தின் பாதுகாப்புத் தொடர்பான திட்டங்களுக்கு
ஆ) கிராமப்புற கட்டமைப்புத் தொடர்பான திட்டங்களுக்கு (மின்னுற்பத்தி திட்டங்களையும் சேர்த்து)
இ) கட்டுப்படியாகும் வீட்டுமனை திட்டங்கள், ஏழை மக்களுக்கான வீட்டுமனைத்திட்டங்களுக்கு
ஈ) தொழிற்பாதைகள் தொடர்பான திட்டங்களுக்கு (எ.கா – சென்னையிலிருந்து பெங்களூர் வரை ஒரு தொழிற்பாதையாகும்)
உ) கட்டுமானப்பணிகள் தொடர்பான திட்டங்களுக்கு, இதில் அரசு-தனியார் கூட்டுத்திட்டங்களும் அடக்கம்.
இந்தத் திட்டங்களின் படி வகைப்படித்தினால் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் பணிகளில் குறைந்த பட்சம் 90 விழுக்காடு பணிகளை இந்த ஐந்து திட்டங்களில் ஒன்றாக வகைப்படுத்தமுடியும். இதன் மூலம் இந்த 90 விழுக்காடு திட்டங்களுக்கான நிலக்கையகப்படுத்துதல் சட்டத்தின் முக்கியமான பிரிவுகளிலிருந்து விழக்களிக்கப்படுகின்றது.
இதுமட்டுமின்றி மேலும் சில திருத்தங்களையும் புதிய சட்டம் மூலம் பா.ஜ.க அரசு செய்துள்ளது. முந்தைய சட்டத்தில் அரசு அதிகாரிகள் தவறிழைத்தால் அந்தத் துறையின் தலைமை நிர்வாகி தண்டிக்கப்படுவார் என இருந்தது இன்று அதை மாற்றி அரசு அதிகாரிகள் தவறிழைத்தால் அந்தந்த அரசின் – மத்திய,மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் வழக்கே பதியக்கூடாது எனச் சொல்கிறது திருத்தம்
இதில் மிக முக்கியமானது விட்டுமனைத்திட்டங்கள்/கட்டுமானப்பணிகள். இதில் அரசுடன் தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து(private and public participation) பெரிய அடுக்குமாடிகளும் வீடுகளும் உருவாக்கும் திட்டங்களும் அடங்கும்.
இதில் பெரும் முதலாளிகளுக்கு ஏழைமக்களின் நிலங்களை அரசே வாங்கி கொடுத்துவிடும் அபாயம் இருக்கிறது என்கின்றன எதிர்க்கட்சிகள்
இல்லை இது நாட்டை வேகமாக வளர்ச்சிபாதைக்கு இட்டுச்செல்லும் திட்டம் என்கிறது அரசு.
அவசர சட்டத்தை நடைமுறை சட்டமாக தீவிரமாக இருக்கிறது மத்திய அரசு. மிக மிக அரிதாகச் செய்யக்கூடிய பாரளாமன்ற மரபான இரு அவைகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தை கூட்டி பெரும்பான்மை பலத்தின் மூலம் மசோதாவை நிறைவேற்றவும் கூட தயங்காது ஆளும் கட்சி என்ற நிலை இப்போது உருவாகியிருகிறது.
ஆனால் இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் இல்லாவிட்டாலும் மாநில அரசுகள் அவர்கள் வசம் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்தி கொண்டும் பன்னாட்டு நிறுவனங்களை பயன் படுத்த அனுமதித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இதில் முன்னணியிலிருப்பது தமிழ் நாடு என்பது ஓர் ஆச்சரியமான உண்மை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கார தொழிற்சாலை அமைக்க 2300 ஏக்கர், நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே சோலார் திட்டத்திற்காக 1,500 ஏக்கர் என விளைநிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதுவும் நீர் ஆதாரத்தோடு விளங்கும் விளைநிலங்களை அரசு கையகப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு 2300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகாவில் சிப்காட் சார்பில் புதிய உற்பத்தி மண்டலம் அமைக்க( நியூ மேனுபேக்சரிங் ஜோன்) தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக 2012 நவம்பர் 21ம் தேதி தொழில்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மொத்தம் 2,300 ஏக்கர் நிலம் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக சூளகிரி ஒன்றியம் அட்டக்குறுக்கி, தோரிப்பள்ளி, நல்லகானகொத்தப்பள்ளி உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் 834 ஏக்கர் விளைநிலத்தைக் கையகப்படுத்த வருவாய்த்துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
.* பெருந்துறை பகுதியில் 72 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு,300கோடி மூலதனத்தில் கோக நிறுவனம் தனது ஆலையை அமைத்து காவிரி ஆற்றில் தினமும் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து குளிர்பானமும், குடிநீரும் தயாரிக்க உள்ளது. இந்தியாவில் கோக நிறுவனம் 40 இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்திருக்கின்றன. அவற்றில் பலவற்றில் சுழலை மாசு படுத்தியதாக வழக்குகள் போராட்டங்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றன.
கேரளாவின் பிளாச்சிமடா பகுதி மக்கள் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி கோக ஆலை நிர்வாகத்தை அங்கிருந்து அகற்ற கேரள மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது அந்தத் தொழிற்சாலை தமிழகத்திற்கு இடம் பெயர்கிறது. அரசு இடம் தந்திருக்கிறது.
ஒருபுறம் மாநிலஅரசுகள் இப்படி நிலங்களைகையகபடுத்திக் கொண்டிருந்தாலும் மத்திய அரசு ஏற்கனவே கையகப்படுத்தியிருக்கும் நிலங்களும், பெரும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் எந்தப் பணியும் நடைபெறவே இல்லை என்பது மற்றொரு முரண்.
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பாரளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்காளரின் அறிக்கைப்படி “சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக” (SEZ) கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 38 விழுக்காடு இன்னும் பயன்படுத்தப்படவேயில்லை என்கிறது. 2006 ஆண்டு அம்பாணி நவி மும்பை சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகக் கையகப்படுத்திய 1250 ஏக்கரையும் இன்னும் பயன்படுத்தாமல் அப்படியே வைத்துள்ளார், அதே போல அத்தானிக்கு குறைவான விலைக்கு வழங்கிய வனப்பகுதியும் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இப்படி நிலங்களை வாங்குவதன் மூலம் வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள், அவற்றைப் பயன்படுத்தாமல் பின்னாளில் தங்களது விருப்பம் போல பயன்படுத்திக்கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது.
நாட்டின் 120 கோடி மக்களுக்கு உணவளிக்கும் விவசாயத்துறை உள்நாட்டு உற்பத்தியில் மொத்தம் 14 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது.. 60 சதவீத மக்கள் விவசாயத்தால் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஆனால் அரசாங்கள் இதில் போதிய அக்கறை செலுத்தாதால் மக்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
நாட்டின் 120 கோடி மக்களுக்கு உணவளிக்கும் விவசாயத்துறை உள்நாட்டு உற்பத்தியில் மொத்தம் 14 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது.. 60 சதவீத மக்கள் விவசாயத்தால் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஆனால் அரசாங்கள் இதில் போதிய அக்கறை செலுத்தாதால் மக்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில்மட்டுமே 9 லட்சம் பேர் விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டனர். கடந்த 2011ல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கண்டறியப்பட்ட புள்ளி விவரம் இது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம். இது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கு நிரந்த ஆபத்தை ஏற்படுத்தும்.தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்த இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், மற்ற மாநிலத்துடன் போட்டி போட்டு வருகின்றது, அதனால் வரும் தொழிற்சாலைகளுக்கு அனைத்து சலுகைகளையும் அவர்களுக்கு அளிக்கின்றன, மாநிலங்களுக்கு அப்படி வரும் பெரும் திட்டங்களுக்கு மாநில அரசு மக்களின் விளை நிலத்தைப் பறித்து தந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இப்போதைய நடைமுறைகளை இந்தச் புதியசட்டம் எளிதாக்கிவிடும் என்ற அச்சம் மக்களிடையே வேகமாகப் பரவத்துவங்கியிருக்கிறது.
நிலம் என்பது மக்களின் சொத்து. நிறுவனங்கள் அதை வாங்க விரும்பினாலோ அல்லது அரசு தன்னுடைய திட்டங்களுக்காக வாங்க விரும்பினாலோ முடிந்த அளவு குறைவாக வாங்க வேண்டும். அதுவும் மக்களின் விருப்பம் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். அந்த வகையில்தான் நில கையகப்படுத்தும் சட்டங்கள் அமைய வேண்டும்நாட்டின் அனைத்து கட்சிகளும் சமூக அமைப்புகளும் விவசாயிகளுக்கு எதிரான இச் சட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும்போது, அதன் நியாய பக்கத்தை அலசி ஆராயமல் பெரும்பான்மை பலத்தின் மூலம்மட்டுமே சட்டங்களை நிறைவேற்ற முயற்சிப்பது நல்லாட்சிக்காக ஓட்டளித்த மக்களின் மேலுள்ள அக்கறையைக் காட்டவில்லை.
நிலம் என்பது மக்களின் சொத்து. நிறுவனங்கள் அதை வாங்க விரும்பினாலோ அல்லது அரசு தன்னுடைய திட்டங்களுக்காக வாங்க விரும்பினாலோ முடிந்த அளவு குறைவாக வாங்க வேண்டும். அதுவும் மக்களின் விருப்பம் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். அந்த வகையில்தான் நில கையகப்படுத்தும் சட்டங்கள் அமைய வேண்டும்நாட்டின் அனைத்து கட்சிகளும் சமூக அமைப்புகளும் விவசாயிகளுக்கு எதிரான இச் சட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும்போது, அதன் நியாய பக்கத்தை அலசி ஆராயமல் பெரும்பான்மை பலத்தின் மூலம்மட்டுமே சட்டங்களை நிறைவேற்ற முயற்சிப்பது நல்லாட்சிக்காக ஓட்டளித்த மக்களின் மேலுள்ள அக்கறையைக் காட்டவில்லை.
இந்திய அரசியலில் ஆளும் கட்சியினர் அவசரமாகச் செய்த தவறுகளுக்கு மிகப்பெரிய விலையைக் கொடுத்திருக்கின்றன.
பிஜெபிக்கு அந்த நிலை ஏற்பட்டுவிடுமோ?
பிஜெபிக்கு அந்த நிலை ஏற்பட்டுவிடுமோ?
-------------------------------------------------------------------------------------------------