காசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21/8/18

இது இறைவனின் செயல்



பெயரைக் கேட்டவுடனேயே புண்ணிய, புனித பூமி ஒரு முறையேனும் போய்ப்பார்க்க வேண்டும் என்று  இதுவரை பார்க்காதவர்களுக்கும்,  மீண்டும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை பார்த்தவர்களுக்கும்  எழுப்பும் மந்திரச்சொல் காசி.   காசி என்ற சொல்லுக்கு பிரகாசமானது என்று பொருள். வாரணாசி என்பது அறிவிக்கப்பட்ட பெயராகயிருந்தாலும் உலகம் முழுவதும் இந்த நகரம் அறியப்பட்டிருப்பது காசியாகத்தான்.
வேதங்கள் பிறந்த இடமாக நம்பப்படும்  காசி நகரம் நூற்றுக்கணக்கான சக்திவாய்ந்த கோயில்களால் சூழப்பட்டு ஒரு சக்தி வளையமாகத் திகழ்கிறது இந்தக் கோவில்களின் நடுவில் இருப்பது காசி விசுவநாதர் கோவில். மிகப் பழமையான கோயில் பலமுறை படையெடுப்புகளால் தகர்க்கப்பட்டிருக்கிறது. மூன்று முறை முழுவதுமாக இடிக்கப்பட்டு மீண்டும் எழுந்தது இந்தக்கோவில் என்கிறது வரலாறு... .
1779-ம் வருடம், இந்தூர் மகாராணி அகல்யா பாய் ஹோல்கர் இப்போது இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை எழுப்பினார். மகாராணி கட்டிக்கொடுத்த கோவில் பனாரஸை ஆண்ட மன்னர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. அவ்வப்போது சிறு மராமத்து பணிகள் நடந்ததே தவிர இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் எதுவும் நடைபெற்றதில்லை.

239 வருடங்களுக்குப் பின்னர் , இப்போதுதான் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் முதல் முறையாக நடைபெற்றது என்பதை விட ஆச்சரியமான செய்தி அதைச்செய்திருப்பவர் ஒரு தமிழர். காரைக்குடியருகிலிருக்கும் வலையபட்டியைச் சேர்ந்த திரு சுப்பு சுந்தரம்.   மிகக் குறுகிய காலத்தில் திட்டமிட்டபடி பலர் வியக்கும் வண்ணம் அதைச் செய்து முடித்திருக்கிறார்.அவர் சென்னையிலிருக்கும் ஒரு ஏற்றுமதி- இறக்குமதி நிறுவன அதிபர்.  பல நகரத்தார் கோவில்களின் ஆன்மீக பணிகளில் பங்குகொண்டவர். .

இவர்  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அடிக்கடி செல்லும் பக்தர்களில் ஒருவர் இல்லை. காசி நகரில்  பிஸினஸ் எதுவுமில்லை.  பின் ஏன் இவர் இதைச் செய்தார்.?  என்ற நம் கேள்விக்கு ஒரு வார்த்தையில் “தெய்வச்செயல்” என்கிறார்.
“நான் வேறு சில பணிகளுக்காகக் காசி சென்றிருந்தபோது.  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலிருக்கும் அன்னபூரணி கோவிலுக்குச் சென்றிருந்தேன். அது ஆந்திரமக்களால் நிறுவப்பட்டு  மிகவும் பிரபலமாகயிருக்கும் ஒரு கோவில். அந்தக் கோவில் நிர்வாகத்தினர் அதற்கு  3  வெள்ளி கதவுகள்  அமைக்க விரும்பி உதவி கேட்டு என்னை அணுகினர். . நான் சம்மதித்திருந்தேன். ஆனால் கடந்த தீபாவளி சமயத்தில் நான் காசி சென்றபோது   அந்தக் கோவில் நிர்வாகத்தினர் ஒரு உள்ளூர் குடும்பம் அதைச் செய்ய ஏற்றுகொண்டுவிட்டதாகச்,சொல்லி  என் உதவியை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. கோவில் கையங்கரியத்துக்கு உதவச் சம்மதித்தும் ஏற்க படவில்லையே என்ற எண்ணத்துடன் அருகிலிருக்குக் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்து விட்டு பிரஹாரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தேன்.
  அந்தச் சமயம் ஒருவர் என்னை அணுகி இந்தக் கோவிலின் ஒரு முக்கிய பணியை  நீங்கள் செய்து கொடுக்க முடியுமா? என்றார்.  முன் பின் தெரியாத அந்த நபர், இன்னும் சொல்லப்போனால் ஏதோ பண உதவி கேட்கப்போகிறவர் என நினைத்து  ஒதுக்கியவரின் இந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாகயிருந்தது.. வாருங்கள் என்று கோவிலின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அவர் அந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரி அரசால் நியமிக்கப்பட்ட IAS அதிகாரி என்பது அங்குப் போய் சில நிமிடங்களில் புரிந்தது.. என்ன பணி செய்ய வேண்டும் என்று கூட கேட்காமல் என் உள்மனம் கட்டளையிட்டபடி செய்து கொடுக்கிறேன் என்றேன். எதையும் யோசித்து நிதானமாகப் பேசும் நான்   எப்படி அந்த வார்த்தைகளைச் சொன்னேன் என்பது இன்று  வரை புரியாத ஆச்சரியமான புதிர். 
அவர் கேட்டவிஷயம்  என்னைச் சிலிர்க்க வைத்தது. காசி விஸ்வநாதர் சன்னதி என்பது நான்கு புறமும்  வாயில் கொண்ட ஒரு அறை.. அதன் நடுவில் தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது தான் மூலவர்.. அதற்குத் தான் தினசரி   அபிஷகம், பூஜைகள் எல்லாம். அந்த மண்டபத்தின் மூன்று நுழை வாயில்கள்  வெள்ளி கவசமிட்டவை. வடக்கு புறமிருக்கும் வாசலை வெள்ளிக்கவசமிட்டுக் கொடுக்க முடியுமா? என்பது தான் அவர் கேள்வி
.எங்கோ தமிழ் நாட்டிலிருந்து வந்த என்னை, அதுவும் நான் யார் என்று தெரியாத நிலையில் ஏன் இப்படியொரு கேள்வியைக்கேட்டார்? என்பதையெல்லாம் சிந்திக்காமல் சரி முயற்சிக்கிறேன் என்றேன். வரும் சிவராத்திரிக்குள் முடிக்க வேண்டும் என்றார். அவர், 
மற்ற மூன்று வாசல்களும் 1841ல் போன்ஸ்லே குடும்பத்தினர்  அமைத்துக்கொடுத்திருக்கின்றனர். . இத்தனை நாளும் இந்த வாசலுக்கு கவசமிடவேண்டும் என்று எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.  எனக்குத்தான் அந்த வாய்ப்பைக் காசி விஸ்வநாதர்  தருகிறார் என்று எண்ணினேன்.  காரைக்குடியிலிருந்து நமது வெள்ளி ஆசாரிகளை அழைத்துப் போய் அளவுகள் எடுத்தோம்.  முதலில் எளிதாக முடித்துவிடலாம்  என்று சொன்ன ஆசாரிகள் வேலைத்தொடங்கியவுடன்  அதன் கஷ்டத்தை உணர்ந்தனர். ஒவ்வொரு சதுர அங்குலமும் சலவைக்கல்லில் செய்யப்பட்ட பூ வேலைகளுடன் கூடிய அந்த வாயிலுக்கு வெள்ளிக்கவசமிடுவது அத்தனை சுலபமாகயிருக்கவில்லை. இரவு பகல் எப்போதும் அந்தப்பணியைச் செய்ய  அந்த கர்ப்பகஅறையின் இரண்டு வாசல்களை இணைத்து  மறைத்து  வசதி செய்து கொடுத்தனர். பணி முடியும் வரை வரை நான் அவர்களுடன் அந்த கர்ப்பகிரகத்தில் விஸ்வநாதர் அருகிலேயே அமர்ந்திருந்திருந்தேன். விஐபிகளுக்கு கூட  அதிக பட்சம் 20 நிமிடங்கள்  ஒதுக்கப்படும் அந்த சன்னதியில்  இரவு பகலாக. இருக்கும் பாக்கியம் நான் பெற்றேன்.   தெய்வ அருளால் சிவ ராத்திரிக்குள் அந்தப் பணி முடிந்தது. 
இந்தப் பணியில்  மிகுந்த ஈடுபாட்டுடன் நேரடியாக நானே கவனித்துச்செய்து  கொண்டிருந்த கவனித்த கோவில் பண்டாக்களும் அதிகாரிகளும் மற்றவர்களும் மிகவும் நெருக்கமானார்கள். அன்புடன் பழகினார்கள். பணிமுடிந்தபின்னர் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது உலகப்புகழ் பெற்ற இந்த கோவிலில் சுத்தம் சரியாக பேணப்படவில்லை.அடிப்படை வசதியான குடிநீர் கூட இல்லை. இதற்கு நீங்கள் ஆவன செய்ய வேண்டும் என்றேன்.  நமது மீனாட்சியம்மன், ஶ்ரீரங்கம் கோவில்களை எப்படி பாரமரிக்கிறோம் என்று சொன்னேன். படங்களைக் காட்டினேன்.  ஆச்சரியபட்டுபோனவர்கள் இதை இங்கு உங்களால் செய்ய முடியுமா? என்றார். 
ஒரு கோவில் என்பது தொடர்ந்து நல்ல நிலையில் பராமரிக்கப் பட வேண்டும். ஒரு முறை செய்துவிட்டு ஆண்டுக்கணக்கில் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான்  தமிழகத்தில் கோவில்கள் கும்பாபிஷகம் செய்யப்படுகிறது என்றேன். அது என்ன? என்றுகேட்டவர்களுக்கு நமது கும்பாபிஷகம் பற்றி விளக்கிச்சொன்னேன்.  காசிக்கோவிலுக்கும் அதைச்செய்ய ஆர்வம்  காட்டிய அவர்கள் அரசிடமும் அவர்களது நிர்வாகக் குழுவிடமும் ஒப்புதல் பெற இப்படிச் செய்ய வேண்டிய முறைகள் பற்றிய ஆவணங்கள்  இருக்கிறதா? என்று கேட்டார்கள். பிள்ளையார் பட்டி தலைமை சிவாச்சாரியார் சிவ ஶ்ரீ பிச்சை குருக்கள் சிவன் கோவிலில் எத்தனை வகை எந்த மாதிரி கோவில்களுக்கு எந்த முறையில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற விபரங்கள் கோவில் ஆகம விதிகளில் சொல்லப்பட்டிருப்பதையும் அது பல நூற்றாண்டுகளாகத் தமிழக கோவில்களில் பின்பற்றபட்டுவருவதையும் ஒரு ஆவணமாக்கிக்கொடுத்தார். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பிவைத்தேன்.
சில நாட்களில் காசி விஸ்வநாதஎ கோவில் தமிழக தொழிலதிபர் சங்கர சுப்புவால் தமிழகக்கோவில்கள் முறைப்படி  கும்பாபிஷேகம் செய்யப்படவிருக்கிறது என்ற செய்தி உள்ளூர் தினசரிகளில் வந்திருப்பதாக நண்பர் போன் செய்தார். “மறுநாளே அரசிடமிருந்து  கும்பாபிஷகப் பணிகளைச்  செய்யும் பொறுப்பை  எனக்கு வழங்கி  கடிதம் வந்தது.  எல்லாமே கனவைப்போல இருந்தது எனக்கு” என்கிறார்.  பலமுறை காசி காரைக்குடி சென்னை என்ற தொடர்ந்த முக்கோணப் பயணங்களின் போது இந்தப் பணிக்கு   அவசியமானவற்றை சென்னையிலிருந்து  செய்தவர் இவரது மனைவி  திருமதி அன்னபூரணி. 
ஒரு வட நாட்டுக் கோவிலில் அதுவும் காசி போன்ற பண்டாக்கள் ஆதிக்கம் செலுத்தும் கோவிலில் அவர்களுக்குப் புதிதாக இருக்கும் விஷயங்களை எப்படி இவர் அவர்களை ஏற்க வைத்திருக்கிறார்  என்பதை அறிய ஆச்சரியமாகயிருக்கிறது.  கும்பாபிஷேகத்துக்காகத்  தமிழகத்திலிருந்து 50க்கு மேற்பட்ட சிவாச்சாரியார்களை  அழைத்துப்போயிருந்தாலும் 10 ஹோம குண்டங்களுடன்  யாகசாலை அமைப்பதிலிருந்து  முதல் குடமுழுக்கு தீர்த்தம் விடுவது வரை அனைத்துப் பணிகளிலும் அவர்களை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்.   கும்பாபிஷேகத்திற்காக யாக சாலையில் பூஜிக்க கங்கையிலிருந்து  கலசங்களில் நீர் கொண்டுவருவதிலிருந்து ஹோமங்களில் முதல் அக்னியிடுவது வரை  காசி கோவில் பண்டாக்கள் தான் துவக்கியிருக்கிறார்கள். பின்  நம்மவர்கள் தொடர்ந்திருக்கிறார்கள். இந்தச்செயல்கள்  அவர்களுக்கு நமது கோவிலுக்குத்தான்  நம் மூலமே இவர்கள் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒத்துழைத்திருக்கிறார்கள்..
இவர்களைபோலவே அந்தக் கோவிலின் நேர்மையான அதிகாரி ,விஷால் சிங்  மற்றும்  மாநில அளவில் கோவில்களின் தலமைப்பொறுப்பிலிருந்த கமிஷனர் தீபக் அகர்வாலும்  செய்த உதவிகளும் அளித்த ஆதரவும் மறக்க முடியாத ஒன்று என்கிறார் இவர் 
யாக சாலை அமைப்பு,  ஹோம குண்டங்கள், தினசரி  பூஜைகள் எல்லாம்  உள்ளூர் மக்களின் ஆர்வத்தை மேலும்  அதிகமாக்கி    பணிகளை எளிதாக்கியிருக்கிறது.. மாயவரத்திலிருந்து யாக சாலை அமைக்க வந்தவர்கள் கேட்ட பெரிய இடத்தைக் கோவிலுக்குள் ஒதுக்க முடியவில்லை.   கோவில் வாயில் எதிரே பல ஆண்டுகளாகக் கொட்டி கிடந்த மண்ணும் குப்பையும் ஒரே இரவில் எடுக்கப்பட்டு  சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டது.  இது  இந்தப்பணியில் உள்ளூர் நிர்வாகத்தின் ஆர்வத்துக்குச் சாட்சி.  மேலும்   அந்த இடத்தில் அழகாக நிமாணிக்க பட்ட யாகசாலை குண்டங்கள் அப்படியே இருக்க வேண்டும் எனப் பக்தர்கள் விரும்பியதால் அந்த இடத்தில் அது இன்னும் தொடர்கிறது. கோவிலுக்கு வரும் பக்கதர்கள் அதையும்  வணங்குகிறார்கள் கலச தீர்த்தம் கங்கையிலிருந்து  தமிழ் நாட்டுமேளதாளங்களுடன்  கொண்டு வரப்பட்டபோது மலர் தூவி மக்கள் வரவேற்றிருக்கிறார்கள்.. 
பிரச்சனைகள் எழாமல் இல்லை.  காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பு  துணை ராணுவத்தினர் வசம் இருக்கிறது. கோவிலின் கோபுரம் முழுவதும் ஒரு டன்  தங்கத்தாலானது என்பதால் மட்டுமில்லை மிக அருகிலேயே மசூதியும் இருப்பதால் செக்யூரிட்டி கெடுபிடிகள் எப்போதுமே அதிகம். கும்பாபிஷகத்துக்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்த  போது கோபுரகலசத்துக்கு  அருகில் செல்ல படிகள் அமைக்க சாரங்கள் அமைக்க  முயன்ற போது அனுமதி.  மறுக்கப்பட்டிருக்கிறது. மேலே போய் ஏன் தண்ணீர் விடவேண்டும்? கிழேயிருந்து  ஒரு ஹோஸ் பைப்மூலம் பீச்சலாமே என்ற யோசனை வேறு.. சொல்லியிருக்கிறாகள் பாதுகாப்பு அதிகாரிகள். கலங்கிப்போனார் சுப்பு சுந்தரம்.. அதிகாரியிடம் விவாதம்   செய்து காரியம் கெட்டுவிடாமல் அவரிடம் மென்மையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நீண்ட உரையாடலுக்குப்  பின்னர் அனுமதிக்கப்பட்டது.
 ஆனால் விதிக்கப்பட்ட நிபந்தனை  சாரத்தின் எந்தக் கம்பமும் கோபுரத்தின் மீது படக்கூடாது.  அந்த அளவு நேர்த்தியாக சாரம் கட்டுபவரை இந்தக் காசியில் எப்படித் தேடிக்கண்டுபிடிப்பது? என்ற குழம்பிய நிலையில் இருந்தவரிடம் வந்து பேசிய ஒருவர்  “கவலை வேண்டாம்  பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லுவது போல் நான் செய்துகொடுக்கிறேன்” என்ற சொன்ன போது அது காசி விஸ்வநாதரின் வார்த்தைகளாகத்தான் என் காதில் கேட்டது. என்கிறார் சுப்பு சுந்தரம்.   பின்னால் கோவில் அதிகாரிகள் மூலம் அறிந்த செய்தி அவர் நகரத்தின் மிகப்பெரிய காண்டிராக்டர் தற்செயலாகக் கோவிலுக்கு வந்தவர் பாதுகாப்பு அதிகாரியின் உடையாடலைக் கேட்டு உதவமுன் வந்தவர் என்பது. இரண்டே நாளில் மிக அழகாகக் கோபுரத்தின் எந்தப்பகுதி மீதும் படாமல்,  வசதியாக ஏறிச்செல்ல அகலமான படிகளுடன்  சாரம் அமைக்கபட்டுவிட்டது.
பாதுகாப்பு காரணங்களால் குறிப்பிட்ட சிலருக்கே அனுமதி அளிக்கப்பட்ட அந்த கும்பாபிஷம் முடிந்தவுடன் மக்கள் அன்று இரவு முழுவதும் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த கும்பாபிஷகத்துக்காக பக்தர்களிடம் நன்கொடை பெறப்படவில்லை. யாகசாலைக்குப் பார்க்கவந்த பத்தர்கள் லட்சகணக்கில்வழங்க முன்வந்த போதும் ஏற்க வில்லை. பெரும் பகுதியை சுப்பு சுந்தரம் ஏற்றிருக்கிறார்.  தமிழக தொழில்நிறுவனங்கள் கேசிபி, முருகப்பா குழுமம் ஈரோடு சிவகுமார் குடும்பத்தினர்   சலவைக்கல் தளமிடுவது,  யாக சாலை அமைப்பு,  சுகாதார வசதிகள் போன்றவகைகளில் உதவியிருக்கிறார்கள்.

காசி விஸ்வநாதர் சன்னதியருகே இருக்கும் அன்னபூரணியின் கோவிலின் நுழை வாயிலிலிருக்கும்  ஒரு கல்வெட்டு  100  ஆண்டுகளுக்கு முன்னர் நகரத்தார் தினசரி அன்னதானம் வழங்க நிறுவிய ஒரு  அறக்கட்டளையின் விபரத்தைசொல்லுகிறது.  அந்த நகரத்தார் பாரம்பரியத்தை இந்த நூற்றாண்டில் தொடரும் வாய்ப்புப் பெற்ற சுப்பு சுந்தரம் தம்பதியினருக்கு நம் வாழ்த்தைச்சொன்னபோது. பணிவுடன்  “இந்தப்பெரிய செயல் எங்களுடையதில்லை ஒவ்வொரு கட்டத்திலும் உதவிசெய்து கருவியான  எங்கள் மூலம் ஈசன் செய்த செயல்தான் இது” என்கிறார்கள்  சுப்பு சுந்தரம், அன்னபூரணி தம்பதியினர்.