அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3/3/16

ஈர்ப்பு விசையை -இசையாகக் கேட்கலாம்.

அறிவியல் அற்புதம்!


கடந்த சில வாரங்களுக்குமுன் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு அறிவிக்கப் பட்டிருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிகளில் மிகவும் முக் கியமானதாகக் கருதப்படும்ஈர்ப்பு விசை அலைகள்பற்றி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பு நிலை கோட்பாடு எனும் இயற்பியல் தத்துவத்தில் விளக்கி இருந்தார். ஈர்ப்பு விசைபற்றி ஐன்ஸ் டீன் விளக்கம் அளித்து இருந்தாலும், சில சந்தேகங்களையும் தனது ஆய்வு கட்டுரையில் எழுப்பி இருந்தார். விண்வெளியில் உள்ள கருந்துளைகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது வெளிப்படும் அதிர்வலைகள் தான்ஈர்ப்பலைஎனப்படுகி றது.
இந்தஈர்ப்பலைஒளியின் வேகத்துக்கு இணையாகச் செல்லக் கூடியது. இதன் ஆற்றலை எதைக் கொண்டும் தடுக்க முடியாது.இந்த அலைகள் வெளிப்படுவது வெறும் கண்ணுக்குத் தெரியாது. இதைப்பார்க்க முடியுமா என்பதும் அதன் வேகத்தை அளக்க முடியுமா என்பதும் சந்தேகமே இதை நிரூபிக்க இயலாது என்றும், அத்தகைய அலைகள் மிகவும் நுட்பமானவை என்றும் அவர் கட்டுரையில் கூறியிருந்தார்.

.அணுவைத் துளைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும் அறிவியல் ஆய்வுகள்மூலம் இந்த ஈர்ப்பாற்றல் அலையையும் அதன் வேகம் போன்றவைகளைத் தான் இப்போது கண்டறிந்துள்ளனர் லிகோ விஞ்ஞானிகள். லிகோ என்பது ஒரு சர்வ தேச விஞ்ஞான ஆய்வகம்.(. Laser Interferometer Gravitational Wave Observatory (LIGO) —
அமெரிக்காவில் ஹான்போர்ட் என்ற இடத்தில் திறந்த வெளியில்  பெரும் செலவில் உருவாக்கிப் பல ஆண்டுகளாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி லிகோஆய்வு மையங்களை உலகின் பல பகுதிகளில் நிறுவத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்காக அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

4 கீமி நீளத்தில் ல் L வடிவத்தில் அமைக்கப் பட்ட  நீண்ட கான்கீரிட் குகைகளில் வெற்றிடத்தை உருவாக்கி அதில் ஈர்ப்பு சக்தியின் கூறுகளை ஆராய்ந்தார்கள். 2010 வரை ஈர்ப்பு சக்தி என்பது ஒரு அலையாக இருக்கிறதை அவர்களின் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்க முடியவில்லை, ஆனால் நம்பிக்கையுடன் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார்கள். இந்த ஆண்டு ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற லீகோ அறிவியல் அறிஞர்கள். . ஈர்ப்பாற்றல் அலைகளை ஒலி வடிவமாக்கி ஏற்றத் தாழ்வுகளுடன் ஒலிக்கும் இசையைப்போல அதைக் கணினியில் காட்டியிருக்கிறார்கள்.
அந்த ஈர்ப்பு அலைகளில் வேறு பொருட்கள் மோதினால் உண்டாக்கும் தாக்கத்தையும் கணினியில் காட்டினார்கள்.

இந்த வரலாற்றுப் பெருமை மிக்க வெற்றி சாதனையில் இந்தியர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. . லிகோவிற்காக உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான விஞ்ஞானிகள் தீவிரமான ஆய்வு மேற் கொண்டு வந்தனர். இந்தியாவிலிருந்து 37 விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர். புனேவில் உள்ள வானியல் மற்றும் விண் வெளி இயற்பியல் பல்கலைக் கழக மையத்தில் பணி யாற்றும் சஞ்சீவ் துரந்தர் மற்றும் சத்ய பிரகாஷ் எனும் விஞ்ஞானிகள் நவீன தொழில் நுட் பத்தின் மூலம் ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவது பற்றிக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரைகள் வெளியிட்டிருக்கின்றனர். .அதன் அடிப்படையில் தொடர்ந்த அனைத்து விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளினால்தான் தற்போது ஈர்ப்பு விசை என்பது அலைவடிவிலிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அளவிட முடியாது எனக் கருதப்பட்ட ஈர்ப்பு விசை ஒலியைப் போல அலையாகப் பரவும் தன்மை கொண்டது என்பதை அந்த விசையை ஒலி வடிவமாக்கிக் காட்டியிருக்கின்றனர் லிகோ விஞ்ஞானிகள்.

இந்தக் கண்டுபிடிப்பால் என்ன பயன்?
வானொலி அலைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இயற்பியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. தகவல் தொழில்நுட்பத்தில் மெல்ல, மெல்லப் பல மாற்றங்கள் ஏற்பட்டு இன்று உலகம் முழுவதும் இணைய வலைக்குள் பின்னிக்கிடக்கிறது. அதே போன்று, ஈர்ப்பாற்றல் அலைகளின் அடுத்தகட்ட ஆய்வுகள் பயனுறும் அறிவியலாக மாறும்போது வானவியலில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். நாம் கனவிலும் கூட நினைத்திராத, அல்லது சில அறிவியல் புதினங்களில் நாம் படித்து வியந்த பல விஷயங்கள் நடைமுறை வாழ்வில் வரக்கூடும். ஆய்வு படிப்படியாக நகர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்த உலகம் எப்படி உருவானது? என்ற கேள்விக் கூட விடை கண்டுபிடிக்க உதவப்போகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்தப் பேரண்டத்தில் உள்ள கோள்கள் எப்படித் தடம் மாறாமல் அந்தரத்தில் சுழலுகின்றன?.என்ற கேள்விகளுக்கு ஈர்ப்பாற்றல் அலைகள் ஒரு புதிய பதிலைக் கொடுக்கக்கூடும்.

.8 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கத் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் ஒரு லிகோ ஆய்வு மையம் 1000கோடி செலவில் அமைக்கும் அறிவிக்கப்பட்ட திட்டம் அமைச்சகங்களில் சிவப்பு நாடாக்களுக்குள் தூங்கிக் கொண்டிருந்தது. இப்போது ஆராய்ச்சியின் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் மோடி கொள்கையளவில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார். ஆனால் செயலாகக் குறைந்த பட்சம் 8 ஆண்டுகள் ஆகும் என இந்து பத்திரிகை எழுதியிருக்கிறது.

.சர்வதேச அளவிலான இது போன்ற ஆராய்ச்சிகளில் இந்திய விஞ்ஞானிகள் பங்கேற்று பெரும் பங்களித்திருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை தரும் விஷயமாக இருந்தாலும். , இந்தியாவிலேயே இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள இதுவரை நமது அரசு நம் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.21/2/16

என்று தணியும் இந்தத்தாகம் ?
அறிவியலாளர்கள் ஆச்சரியங்களை நம்புவதில்லை. எந்த ஒரு நிகழ்வுக்கும் அறிவுபூர்வமான காரணங்களைச் சொல்லுவார்கள் அல்லது ஆராய்ந்து கண்டுபிடிப்பார்கள். ஆனால் நமது எல்லையில் சியாச்சின் மலைச்சரிவில் நிகழந்த ஒரு பனிப்பாறைசரிவில் சிக்கிய ராணுவ வீரர் ஒருவர 25 அடி ஆழத்தில் உறைபனிகளுக்கு நடுவில் மைனஸ் 45 டிகிரி குளிரில் ஆறு நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டிருக்கும் செய்தி அறிவியல் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
காஷ்மீரின் லடாக்கின் பனி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 600 அடி உயரத்திலிருக்கும் சியாட்சின் பனிமலைப்பகுதிதான். உலகிலேயே மிக அதிக உயரத்தில், ஆபத்துகள் மிகுந்த போர்க்களமாக அறியபட்டிருக்கும் பகுதி. வருடம் முழுவதும் உறைபனியும், 60 டிகிரி குளிரும், மணிக்கு 100கீமி வேகத்தில் பனிக்காற்றும் வீசும் பகுதி. புல் பூண்டு எதுவும் இல்லாத இந்தப் பனி பாலைவனப்பகுதியை ஒரு நாளைக்கு 6 கோடி செலவில் இந்திய ராணுவம் பாதுகாக்கிறது.அதிரடி தாக்குதலுக்குப் பெயர் பெற்ற மெட்ராஸ் ரெஜெமெண்ட்க்கு தான் இந்தப் பணி.  1949 கராச்சி ஒப்பந்தம் 1972 சிம்லா ஒப்பந்தம் எதிலும் இந்த மலைப்பகுதியின் எல்லைப்பிரச்சனை தெளிவாக வரையறுக்கப்படாதால், இந்தியா-பாக்கிஸ்தான் இரு நாடுகளும் ”போர் தயார்” நிலையிலேயே எப்போதும் இந்த பகுதியைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
இங்குள்ள பாகிஸ்தான் எல்லைக்கு 5 கீமி அருகே மெட்ராஸ் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் முகாமிட்டிருந்தனர். அப்போது அங்கு 800 அடி உயரம், 400 அகலம் உள்ள பனிப்பாறை ஒன்று சரிந்து முகாமின்மேல் விழுந்து 10 வீரர்களை 25 அடி ஆழத்தில் புதைத்தது. இவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பனியில் 25 அடிக்குக் கீழே புதைந்த வீரர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், விமானப் படைப்பிரிவினரும் ஈடுபட்டனர். உடனடியாக மீட்க முடியாததால், 10 பேரும் இறந்ததாகக் கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டனர்.
போரே நடக்காத இந்தப் பகுதியில் இதுவரை 869 வீரர்கள் இறந்ததாகப் பாராளுமன்றத்தில் பதிவு செய்யபட்டிருக்கிறது. இவர்கள் பனியின் சீற்றத்திற்கு பலியானவர்கள். இவர்களைத்தவிர பலநூற்றுகணக்கானவீரர்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள்
ஒரு ராணுவ வீரன் பணியிலோ அல்லது போரிலோ இறந்தால் அவரது உடலைத் தகுந்த மரியாதைகளுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதனால் இறந்த வீரர்களின் உடல்களைத் தேடும் பணி துவங்கியது. விடா முயற்சியுடன் 150 வீரர்களும், டாட் மற்றும் மிஷா என்ற இரண்டு மோப்ப நாய்களும் மீட்புபணியில் இறங்கின. எலக்ட்ரிக் ரம்பம் மூலம் பனிப்பாறைகள் அறுக்கப்பட்டு, ரேடார், ரேடியோ சிக்னல் கருவிமூலம் வீரர்களின் உடல்கள் தேடப்பட்டன. இரவு நேரத்தில் வெப்ப நிலை மைனஸ் 55 டிகிரி வரை சென்றதாலும், கடும் குளிர் காற்று வீசியதாலும் மீட்பு பணி அவ்வப்போது பாதிக்கப் பட்டது. அதையும் மீறிப் பனிப்பாறைகளைத் தோண்டியதில் ஹனுமந்தப்பா என்ற வீரர் உயிருடன் புதைந்திருந்ததை மீட்பு குழுவினர் கண்டு பிடித்தனர். பனியில் புதைந்து 6 நாட்களுக்குப் பின் அவர் உயிருடன் இருந்தது மீட்பு குழுவினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது.
அதிர்ச்சியில் சோர்வாக இருந்த ஹனுமந்தாவின் உடல் சூடான ஆக்ஸிஜன் மற்றும் ஹீட்டர்கள் மூலம் சூடேற்றப் பட்டு ஹெலிகாப்டரிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டுபாட்டு கேந்திரத்தில் காத்திருந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம்மூலம் உடனடியாக டெல்லி மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டார். காத்திருந்த சிறப்பு மெடிகல் டீம் தங்கள் பணியைத் தொடர்ந்தது. அனைத்தும் மின்னல் வேகத்தில் சில மணிநேரங்களில் நடந்தது .ஆனால் ஆறு நாட்கள் ஆச்சரியமாக உயிர்பிழைத்திருந்த ஹனுமந்தப்பாவை சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தும் காப்பாற்றமுடியவில்லை. பிராத்தனை செய்து கொண்டிருந்த தேசம், வருந்தியது
பனிச்சரிவுகளில் மீட்பு பணி மிகச் சவாலானது. நம் வீரர்களுக்கு இதற்கான பயிற்சிகளும் அளிக்கபட்டிருக்கிறது. போட்டிருக்கும் அத்தனை பாதுகாப்பு உடைகளையும் தாண்டி எலும்பைத் தாக்கும் குளிரில் மிகவும் சிக்கலான கருவிகளைத் திறம்பட இயக்கி இறந்தவர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். புதைந்திருப்பது எந்தப் பகுதி என்பதை கண்டறிய ஒலிக்கதிர்களை விமானத்திலிருந்து அந்தப் பகுதியில் செலுத்தி கண்டுபிடித்தபின் அந்த இடங்களில் சக்திவாய்ந்த ட்ரில்லர்கள் மூலம் துளையிட்டு அதன் மூலம் மின் அலை சிக்கனல்களை அனுப்பினார்கள். சியாச்சினில் பணியிலிருக்கும் ராணுவத்தினர் தங்களிருப்பிடத்தை அறியும் சிக்னல் எழுப்பும் கருவி அணிந்திருப்பார்கள். சில இடங்களிலிருந்து அந்த சிக்னல்கிடைத்தவுடன்  அந்த இடங்களில் விசேஷ கட்டர்களை செலுத்தி பனிப்பாறைகளை அறுக்க வேண்டும். கல், கான்கீரிட் போன்றவைகளைவிட கடுமையான இந்தப் நீலப்பனிப்பாறைகளை அறுக்கும் கத்திகள் இயங்க தேவையான அதிசக்தி மோட்டர்கள் அதற்கான பேட்ரிகள் எல்லாம் அடிவாரத்திலிருந்து ஹெலிகாப்படரில் கொண்டுவரபட்டது. அவைகள் இயங்க நின்றநிலையில் ஒரு ஹெலிகாப்டர் என்ஜின் ஒடிக்கொண்டிருந்தது.  மீட்புப் பணிகளைப் பகலில் கடுங்குளிருடன் கண்பார்வையை இழக்க செய்யும் அளவிற்கான வெண்பனியில் பட்டுத் திரும்பும் சூரிய ஓளியிலும், இரவில் மைனஸ் 35 டிகிரி குளிரிலும் செய்திருக்கிறார்கள்.
.கடும் போராட்டத்துடன் நடந்த இந்த மீட்பு பணியில் மற்ற 8 வீரர் களின் உடல்களும் மீட்கப் பட்டு விட்டன.

செய்திஅறிந்தவுடன் பிரதமர் டிவிட்டரில்''ஹனுமந்தப்பாவை பார்க்கப் போகிறேன். அவர் உடல் நலம் தேறி வர வேண்டுமென்று நாடே வேண்டுகிறது'' எனக் குறிப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றிருக்கிறார். பிரதமரின் இந்தச் செய்கை ராணுவவீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.
இறந்த வீரர்களுக்கு அஞ்சலியும் சவாலான மீட்புபணிகளை வெற்றிகரமாகச் செய்த வீரர்களுக்குப் பாரட்டுகளை தெரிவிக்கும் ஒவ்வொரு இந்தியனின் மனத்தில் எழும் கேள்வி


என்று தணியும் இந்த எல்லைப் பிரச்சனையின் தாகம்?