இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையைச் சீரழித்த பெருமழை வெள்ளத்துக்கு சில நாட்களுக்குப் பின் நண்பர் ஒருவருக்கு ஒரு போன் அழைப்பு. “உங்கள் பகுதியிலிருந்து உதவி கேட்டு ஒர் கடிதம் வந்திருக்கிறது. நீங்கள் சென்று பார்த்து உண்மையாக இருந்தால் நீங்கள் சார்ந்திருக்கும் தொண்டு நிறுவனம்மூலம் உதவுங்கள். ஆகும் செலவை நான் நன்கொடையாகத்தருகிறேன்.” நண்பருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, மகிழ்ச்சி. காரணம் போனில் பேசியவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான நானாபடேகர். நண்பருக்குச் சில மாதங்களுக்கு முன் மும்பையில் ஒரு ஷேர் டாக்சி பயணத்தில் கிடைத்த அறிமுகம் தொடர்ந்து நட்பாக மலர்ந்திருந்திருந்தது.
உதவியைக்கோரிய அந்த வேண்டுகோள் உண்மையானது என்பதால் நண்பரின் குழு அந்தப் பணியைச் செய்கிறது. செலவிடபட்ட கணிசமான பணத்தை விடக் கூடுதலாகவே தன் நன்கொடையை இந்த விஷயம் மீடியாவுக்கு போக வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் அனுப்புகிறார் நானா படேகர்.
இந்திய சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் பலர் அவ்வப்போது தொண்டு நிறுவனங்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தன் வருவாயில் பெரும் பகுதியை(70%) எந்த ஆர்பாட்டமும் இல்லமல் நன்கொடையாக வழங்கிக்கொண்டிருப்பவர் நானா படேகர் மட்டும் தான்
எந்த இந்திய மொழிப் படமானாலும் ஹீரோவைவிட வலிமையானவராகப் படைக்கப்பட்ட வில்லனுடன் போராடி ஹீரோ ஜெயிக்கும் படங்களில் அந்த வில்லன் தன் நடிப்பால் மக்களின் மனதில் தனியிடம் பிடித்துவிடுவார். அவரது நெகட்டிவ் கேரக்டர் கொண்டாடப்படும் அளவுக்குப் பேசப்படும். படம் ஹிட்டாவதற்கு அவரும் ஒரு காரணமாக அமைந்துவிடுவார். ரசிகர்களால் போற்றப்படுவார்.
இன்றைய சூப்பர் ஹிட்டான ரஜனியின் “காலா” வில் வில்லானக நடித்திருக்கும் மராட்டிய நடிகர் நானாபடேகர் அப்படிப்பட்ட ஒரு கலைஞர். ஏராளமான பாலிவுட் படங்களில் ஹிரோவாக, வில்லனாக, மட்டுமில்லாமல் முக்கியப்பாத்திரங்களிலும் நடித்துத் தனியிடத்தைப்பிடித்து தக்க வைத்துகொண்டிருப்பவர்
“உணர்வுகளை வெறும் வசன்ங்களில் கொண்டுவர முடியாது. முக அசைவு, உடல்மொழியில் தான் அவற்றை வெளிகாட்டும் கலைஞதான் மக்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்” என்று சொல்லும் நானா மராத்தி, இந்தி, கன்னடம், தமிழ் எனத் தனது நடிப்பின் எல்லயை உலகிற்கு புரிய வைத்து., இதுவரை 3 தேசிய விருதுகளையும் பல பிலிம் ஃபேர் மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர்.
சினிமாவிற்காக நானாவான விஷ்வநாத் படேகர் கடந்து வந்தது மிகக்கடுமையான பாதை. ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திறந்தாலும் பள்ளிப்பருவம் அவருக்கு இனிமையானதாக அமைய வில்லை. தந்தையின் துணிவியாபாரத்தில் அவரது பார்ட்னர் ஏமாற்றியதால் ஒரே இரவில் ஏழையாகிப் போனது அவரது குடும்பம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே குடும்பத்துகாகப் பகுதி நேர வேலை செய்து பள்ளிக்குப் போனவர்.அப்போது செய்த வேலை சினிமா போஸ்டர் ஒட்டுவது. அதிலிருந்து எழுந்தது தான் நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் வெறி எல்லாம். ஆனால் பாலிவுட் இவரை உடனே ஏற்க வில்லை. உயரம், கருப்புநிறம். முகம் எடுப்பாகயில்லை.ஹிந்தி உச்சரிப்பில் அதிக மாராட்டிய வாசனை போன்ற பல காரணங்கள் சொல்லி நிராகரிக்கப் பட்டவர். பின்னாளில். இது அனைத்துமே இவரது தனித்துவமாகப் பாரட்டப்பட்டது வேறு விஷயம்
.
தனக்குப் பிடித்த ஒவியத்தில் பட்டம் பெற ஜே ஜே காலேஜ் ஆப் ஆர்ட்ஸில் சேர்ந்தார். ஆனால் தொடர்ந்து படிக்கப் பணமில்லை.மாரத்தி நாடகங்களில் நடித்துக்கொண்டே
சினிமா வாய்ப்புடன் வேலையையும் தேடிக்கொண்டிருந்தார். உனக்கு என்ன தெரியும்? எனக் கேட்டவரிடம் தன் ஓவியத்திறமை நம்பி ““பெயின்ட்டர்” (டிராயிங் ஆர்டிஸ்ட் என்று சொல்லதெரியாதால்) என்ற சொன்னவருக்குக் கிடைத்த வேலை ரோடுகளில் மக்கள் கடக்கும் போடுகளை பெயிண்டால் போடும் வேலை.
70களின் பிற்பகுதியில் நானா படேகர் தனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பில் தன் திறமையை நிருபித்ததால் கிடைத்த வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு பாலிவுட்டில் தன் இடத்தைப் பிடிக்கிறார். கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். முதன் முதலாக வில்லன் மற்றும் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர்களுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கலாம் என்ற ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தவர் நானா படேகர்.
.
அதிக அளவில் பணமும் புகழும் சேர்ந்தாலும் மிக எளிமையான வாழ்க்கைமேற்கொண்டவர். கோடிகளில் சம்பாதித்தாலும் தன் அம்மாவுடன் ஒரு சிங்கள் பெட் ரூம் பிளாட்டில் வசிப்பவர். தன் வாழ்க்கையில் சந்தித்த வலியையும், துயரங்களையும் மறக்காமல் கஷ்டபடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவர். அவ்வப்போது பலருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்த இந்த மனிதரின் இந்தக் கருணை முகம் பெரிய அளவில் வெளிப்பட்டது சில வருடங்களுக்கு முன்னர் மஹாராஷ்டிர மாநிலம் பெரும் வறட்சியை சந்தித்தபோது தான். விவசாயம் பொய்க்கவே ஏரளமான விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டபோது தான். நானாப்டேகர் நேரடியாகக் களத்துக்குச் சென்று பார்த்த அதிர்ந்து போனார். உடனடியாகத் தன் சொந்தப்பணத்திலிருந்து இறந்த 62 விவசாயிகளின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 15000 ரூபாய் அன்றே கொடுத்தார்.
"தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டால் உடனே என்னை அழையுங்கள்.... உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன்...... உயிரை மட்டும் விட்டு விடாதீர்கள்...... நீங்கள் தான் இந்த நாட்டின் சொத்து"
விவசாயிகளுக்கு மத்தியில் அன்று பேசிய நானா படேகர் கூறிய வார்த்தைகள் இவை. இதை வெறும் மேடைப்பேச்சாக இல்லாமல் இதற்கான பணிகளைத் தொடர்ந்து இதைச் சிறப்பாகசெய்ய “ நாம் என்ற அமைப்பை உருவாக்கி நன்கொடைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
துவக்க நாளிலே கிடைத்த பணம் 80 லட்சம். சில நாட்களில் சில கோடிகளைத்தொட்டது. இன்று அந்த அறக்கட்டளை கிராமங்களில் விவசாயிகளுக்கு வேலை, குளங்கள் தூர் வாருதல் போன்ற பல சமூகப்பணிகளை சிறப்பாகச் செய்கிறது. பல நேரங்களில் நானாவே நேரடியாகக் கிராம சபை கூட்டங்களில் குறைகள் கேட்டு உதவிகளைத் திட்டமிடுகிறார்
.
விவசாயிகளுக்கு உதவுவது மட்டுமில்லாமல் விதவைகளின் மறுவாழ்வில் கவனம் செலுத்துகிறார். இன்று மஹராஷ்டிர கிராமங்களில் அரசியல் வாதிகளைவிட பிரபலமான இவர் ஒரு கட்சி துவங்கி அரசியிலுக்கு வந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி. ஆனால் அதில் எனக்கு ஆர்வமில்லை என்கிறார்.
தான் செய்யும் எந்தப்பணியையும் அரப்பணிப்புடன் செய்பவர். நானா படேகர். அவரே எழுதி, இயக்கி நடித்த திரைப்படம் ப்ரஹார். இதில் நானா ஒரு ராணுவ வீரன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் நடிப்பதற்கென்றே இரண்டு ஆண்டுகள்வரை உண்மையாகவே ராணுவப் பயிற்சி எடுத்தார். இந்திய ராணுவத்தை சிறப்பாகக் காட்ட இப்படி இவர் செய்த நல்ல பணிக்காக இந்திய ராணுவத்தின் கெளரவ கேப்டன் ரேங்க் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
சினிமாத்துறையைச் சாரத நணபர்கள் பலர் இவருக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்கள்மூலம் பலருக்கு சத்தம் இல்லாமல் நிதியுதவிகளைச் செய்து வரும் நானா படேகர், இதுகுறித்து தனது பேட்டிகளில் கூடப் பதிலளிக்க மறுத்துவிடுவார்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் மனதில் பட்டதை பட்டென்று வெளிப்படையாகப் பேசும் இவர் அதனால் கோபக்காரர் என்ற பெயரையும் பெற்றவர். அரசியல் வாதிகளையும், சிவ சேனா போன்ற அமைப்புகளையும் கூடக் கடுமையாக விமர்சனம் செய்தவர். பாஜகா பிரமுகர்கள் இருந்த கூட்டத்திலேயே நம் நாட்டில் ஜனநாயகம் வளர்ந்திருப்பதிற்பதற்கு காங்கிரஸ் காரணம் என்று சொன்னவர்.
993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்செய் தத்திற்கு சர்ச்சைக்குரிய முறையில் பரோல் வழங்கப்பட்டபோது இம்மாதிரி செய்வது தவறு என்று துணிந்து சொன்ன ஒரே நடிகர் இவர்தான்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அனைவரும் வரவேற்றபோது, "ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது... அவரின் குணத்திற்கு அரசியல் அவர் புகழை இழக்க வைத்து விடும்" என்று சொன்னவர் நானா படேகர். காலாவில் வில்லன் ரோலை ஏற்க தயங்கிய அவரை ரஜினி சந்தித்து ஊக்குவித்து அதை ஏற்க செய்த நேரம் அது.
எழுத்தாளர், இயக்குனர், கவிஞர், சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர் என்று பன்முகம் கொண்ட கலைஞர் நானா படேகர். மொழி என்ற எல்லைக்கு அப்பாற்பட்டு தன் பயணத்தைத் தொடங்கிநடிகன் என்ற இடத்திலிருந்து நல்ல மனிதன் என்ற பெயருடன் மக்கள் மனங்களில் அமர்ந்திருக்கிறார். இந்த உயரத்தை இதுவரை இந்திய சினிமாவில் யாரும் எட்டியதில்லை
.
படத்தில் ஹீரோவாக வாழும் பலர் நிஜவாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் பல படங்களில்,வில்லனாகவே முன்னிறுத்தபட்டிருக்கும் நானா படேகர் நிஜத்தில் ஹீரோவாகவே பல குடும்பங்களைக் காப்பற்றி வருவது ஒர் ஆச்சரியமான உண்மை