மேடைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேடைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24/4/16

வாருங்களேன்..

#################################################################################


எழுத்துப்பிழையினால் கொள்ளையிலிருந்து தப்பிய 80 கோடி டாலர்கள்


வளர்ந்துவரும் இணயதொழில்நுட்பம் நம் வாழ்க்கை முறையில் பலமாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்று வங்கிக்கணக்கை ஆன் லையன் மூலம் பயன்படுத்துபவர்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர். அதில் பயன் படுத்தும் ரகசிய எண்களையும் கடவுச்சொல்லையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து பல வகைகளில் வலியுறுத்திக்கொண்டு இருக்கின்றன. ஆனால் அண்மையில் அமெரிக்கப் பெடரல் வங்கியிலிருக்கும் ஒரு நாட்டின் மத்திய வங்கி கணக்கு ஹாக் செய்யப்பட்டு முகம் தெரியாதவர்களால் பெருமளவில் அதிலிருந்து பணம் பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தியினால் உலகின் அத்தனை வங்கிகளும் அதிர்ந்து போயிருக்கின்றன.
பெஃடரல் ரிசர்வ் என அறியப்படும் அமெரிக்க மத்திய வங்கியில் நமது ரிசர்வ் வங்கியைப் போல இயங்கும் பல நாடுகளின் மத்திய வங்கியின் கணக்குகள் இருக்கின்றன. 250 நாடுகளுக்கும் மேல் இப்படிப்பட்ட கணக்குகளை வைத்திருக்கின்றன. இந்த வங்கிகணக்குகளை அந்தந்த நாட்டின் மத்திய வங்கி சர்வதேச பணபரிமாற்றங்களுக்குப் பயன் படுத்தும். அண்மையில் பங்களாதேஷ் நாட்டின் வங்கிக்கணக்கில் 81 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஒரு மில்லியன்= 10 லட்சம்) இணையம் வழியாகத் திருடப்பட்டிருக்கிறது.
வங்கிகளுக்கிடையே நிகழும் இத்தகைய இணையப் பரிமாற்றங்களை நிர்வகிக்க SWT என்ற அமைப்பு இயங்குகிறது. இது எந்த ஒரு தனி வங்கியையும் சேராத ஆனால் வங்கிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு இது. அதிவேக, அதிநவீனதொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த அமைப்பின் தலைமையகம் பெல்ஜியம்  நாட்டிலிருக்கிறது. இதன் கம்யூட்டர்களின் வழியாகத்தான் பல நாட்டின் வங்கிகளுக்கிடையேயான பணபறிமாற்றம் மட்டுமில்லை அனைத்துச் செய்தி பரிமாற்றங்களும் நடைபெறுகிறது. வங்கிகளுக்கு இந்த அமைப்பு தரும் குறீயிட்டு எண்கள்,பாஸ்வேர்ட்கள்  பலகட்ட பாதுகாப்புக்குள்ளானது.
இந்தக் குறீயிட்டு எண்களையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தித்தான் பங்களாதேஷ் வங்கி தருவது போல் அமெரிக்க மத்திய வங்கிக்குப் பணம் மாற்றக் கட்டளைகள் கொடுக்கப்பட்டு அந்தக் கணக்கிலிருந்து பணம் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு வங்கிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மிகப் புத்திசாலித்தனமாகத் திட்டமிடப்பட்டிருக்கும் திருட்டு, இந்த ஆண்டுப் பிப்ரவரி மாதம் 4ம்தேதி  நிகழ்ந்திருக்கிறது. அன்று வியாழன். மறுநாள் வெள்ளி பங்களாதேஷில் வங்கிகளுக்கு விடுமுறை. சனி, ஞாயிறு நியூயார்க்கில் வங்கிகளுக்கு விடுமுறை, திங்களன்று பிலிப்பைன்சில் சீன புத்தாண்டுக்காக வங்கி விடுமுறை. இதனால் பங்களாதேஷ் வங்கி தங்கள் கணக்கில் இருப்பு குறைந்திருப்பதைக் கண்டுபிடிக்கவே நான்கு நாட்களாகியிருக்கிறது.
பணம் ஒரு வங்கிக்கணக்குத்தானே போயிருக்கிறது.பணம் சேர்க்க பட்டிருக்கும் கணக்கின் சொந்தக்காரர்களை மடக்கிவிடமுடியாதா? இங்கே தான் கில்லாடித்தனத்தின் உச்சக்கட்டம்.
கடந்த சில ஆண்டுகளில் பிலிப்பைன் நாட்டின் பல நகரங்களில் சூதாட்ட கிளப்களான காசினோக்கள் பிரமாண்ட அளவில் வளர்ந்திருக்கின்றன. சீனாவில் இப்போது காசினோக்கள் தடை செய்யபட்டுவிட்டதால் பிலிப்பைன்ஸ் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின் படி அவர்கள் இங்கு வந்து கடை விரித்திருக்கிறார்கள். இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் முதலீடுகளுக்கும், சூதாட அனுப்பப்பட்ட பணத்திற்கு வரி கிடையாது என்பது மட்டுமில்லை அந்தப் பணத்திற்குக் கறுப்புப் பணச் சலவை (money landuring) சட்டத்திலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைச்செம்மையாகப் பயன் படுத்திக் கொண்டுவிட்டனர் கொள்ளையர்கள். வந்த டாலர்கள் பிலிப்பைன் பிசோக்களாக மாற்றபட்டு பல காசினோகளில் அதன் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் கணக்கில் சேர்க்கப் பட்டிருக்கிறது. இதில் பலபேர் சூதாட்டத்தில் இழந்ததற்காகக் கிளப்புக்கு தர வேண்டிய நிலுவை பாக்கி. என்றும் அது  இப்போது வசூல் செய்யபட்டுவிட்டதாகவும் கணக்குக் காட்டபட்டுவிட்டது.
இந்த இணையக்கொள்ளையர்கள் இப்படி அந்த இரவில் மாற்றத் திட்டமிட்டிருந்தது 1  ஒரு பில்லியன் டாலர்கள் (100கோடி) அதற்காக உலகின் பல இடங்களில் உள்ள வங்கிகளுக்கு மாற்ற. பங்களாதேஷ் வங்கி அனுப்பியதைப் போல 36 வெவ்வேறு கட்டளைகளை அமெரிக்க ஃபெடரல் வங்கிக்கு அனுப்பியிருக்கிறார்கள். அப்படி அனுப்பட்ட ஒன்று இலங்கையில் உள்ள ஒரு தொண்டுநிறுவனத்தின் கணக்கிற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் . அந்தக் கணக்கு இருப்பது ஒரு சிறிய கிராமத்தின் வங்கிகிளையில்.  SWIFT மெசேஜ் கிடைத்ததும் அந்த வங்கி அதில் சேர்க்கப்படவேண்டிய கணக்கின் பெயரில் ர் எழுத்துப் பிழை இருந்ததாலும் (foundation என்பது fandation என்று இருந்திருக்கிறது) பணம் பெரிய அளவில் இருந்ததாலும் பங்களாதேஷ் வங்கியைத் தொடர்பு கொண்டு உறுதி செய்யக் கேட்டபோது, விழித்துக்கொண்டது பங்களாதேஷ் வங்கி. உடனடியாக அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்றதுடன் , மற்ற போலி பணமாற்ற கட்டளைகளையும் நிறுத்தியது. இந்த எழுத்துப் பிழையினால் அந்தத் தேசத்தின் பணம், 80 மில்லியன் டாலர் தப்பியது.
”நாங்கள் இத்தனை ஆண்டுகளில் ஒரே நாளில் இப்படிப் பல நாடுகளுக்குப் பணம் மாற்றியதில்லை. நீங்கள் எங்கள் கணக்கைக் கவனமாகக் கையாளவில்லை”. எனப் பங்களாதேஷ்  அரசு அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கிமீது குற்றம் சாட்டி வழக்குப் போட்டிருக்கிறது.
எங்களது கணினி கட்டமைப்பின் மூலம் எந்தத் தவறும் நிகழவில்லையென உறுதியாகச்சொல்லுகிறது பெல்ஜியத்திலிருக்கும்  SWIFT( Society for Worldwide Interbank Financial Telecommunication) (“SWIFT”)

பங்களாதேஷ் மத்திய வங்கியின் கணணி கட்டுப்பாட்டில் மிகப்பெரிய அளவில் ஊடுருவல் நிகழ்ந்து அதன்மூலம்  வெளி நாட்டிலிருந்து யாரோ  கணக்கை இயக்கியிருக்கலாம் என்கிறார்கள் ஐரோப்பிய கணணி வல்லுநர்கள்.
இது எங்கள் மத்திய வங்கியின் கெளரவம். நம்பிக்கை சார்ந்த விஷயம் என்று  எப்.பி விசாரணையை முடிக்கிவிட்டிருக்கிறது அமெரிக்க அரசு.
இலங்கை, பிலிப்பைன்ஸ் என்று எல்லாஇடங்களிலும் அரசுகள் புலன் விசாரணை துவங்கி விட்டது. அமெரிக்கப் பெடரல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அத்தனை நாடுகளும் தங்கள் கணக்குகளைச் சரிபார்க்க ஆரம்பித்திருக்கின்றன.

கணனி தொழில் நுட்பம் ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகளை வழங்கித் தன் இனிய முகத்தைக் காட்டுகிறது. ஆனாலும் ஹாக்கிங், ஆபாசம், ஸ்பாம் போன்ற தனது கோர முகத்தையும் அவ்வப்போது காட்டுகிறது. வரும் காலங்களில் இந்த ஆபத்தான முகத்தைச் சமாளிப்பதுதான் மிகப்பெரிய சவாலாகயிருக்கப் போகிறது