தீபாவளி மலர்களில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி மலர்களில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28/11/18

நதியென்னும் கடலிலே ....


கடலென விரிந்திருக்கிறது பிரம்மபுத்திரா.. கண்ணுக்கெட்டியவரை  நீர்பரப்பு.  ஒரு  நதியில் பயணிக்கிறோம் என்ற உணர்வே இல்லை.நாம் போக வேண்டிய  தீவுக்கு ஒரு மணிநேரப்பயணம். என்றும் திரும்பும் போது  நதியை எதிர்த்துப் பயணிப்பதால்   இரண்டு மணிநேரமாகுமாம். என்பதைக்கேட்டபின்னர் தான் நதியின் வேகம் நமக்குத் தெரிகிறது. 


அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. நதியின் நடுவிலிருக்கும் அந்தத் தீவின்  பெயர் மஜோலி.

கெளஹாத்தியிலிருந்து 300 கீமி தொலைவிலிருக்கும் இந்தத்தீவு அஸ்ஸாமின் கலாச்சாரம் பிறந்த தொட்டில் என வர்ணிக்கப்படுகிறது.. 144  சிறிய கிராமங்களைக் கொண்டது  இந்தத் தீவு

நதிக்கரைகள் நாகரிகம் பிறந்த தொட்டில்கள்  எனச்சொல்லப்படுகிறது. அப்படிப் பட்ட தொட்டில்களில் பல காலப்போக்கில்  தொழில் நகரங்களாகி நதிகளையே மாசுபடுத்தி அழித்துக்கொண்டிருக்கின்றன.    விதிவிலக்காக  ஒரு சில இடங்களில் அப்படிப் பிறந்த கலாச்சார நாகரிகங்கள் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. அதில் ஒன்று இந்த மஜோலித் தீவு. அதைக்காணத்தான் இந்தப்பயணம்.  

 குளிர் காற்று முகத்தில்  தாக்கும் அந்தப் படகு பயணத்தில் கடக்கும் நதியின் பிரம்மாண்டம்  அதைப்பற்றி எண்ண வைக்கிறது.  ஆசியாவின் பெரிய நதிகளில் ஒன்றான இந்த பிரம்மபுத்திரா இமயத்தில் 8000 அடிஉயரத்திலிருக்கும் கன்ஜன்சிங்கா  சிகரத்தில் மனோசாவர் ஏரிக்குச்  சற்று மேலே உருகும் பனிப்பாறைகளிலிருந்து பிறந்து திபேத்,   பங்களாதேஷ்  இந்தியா  என்று மூன்று நாடுகளின் வழியே பாய்ந்து பெருகி இறுதியில் வங்காளத்தில் கடலில் சேருகிறது.  இமயத்தில் துவங்கும் இதன் பயணம் பல நதிகளைப் போல ஒரே திசையில் வளைந்து நெளிந்து ஓடாமல்  அருணாசலபிரதேசத்தில் ஒரு யூ  வளவு எடுத்து எதிர்த் திசையில் பாய்வது இயற்கை விடுக்கும் புரியாத புதிர்களில் ஒன்று. இந்த ஒரு நதிக்கு ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பெயர். திபேத்தில் ஸாங் போ( TASNG PO))   என்றும் பங்களா தேஷில் ஜமுனா (யமுனா இல்லை) அருணாச்சலபிரதேசத்தில் திஹாங் என்றும் அழைக்கப்படுகிறது. பெயர் எதுவாக யிருந்தால்  என்ன?  புனிதமான கைலாசத்திலிருந்து வரும் ஒரு மகா நதியில் பயணத்துக்கொண்டிருகிறோம் என்ற எண்ணம் சிலிர்க்கவைக்கிறது. உண்மையிலேயே இது மகா நதி. மொத்தம் 2900 கீமி ஓடுகிறது. இதில் திபேத் பகுதி உயர்ந்த மலைகளிலிருந்து கணவாய்களில் விழும் பிரம்மாண்டமான அருவியாகவும், காடுகளை உடைத்தெறிந்து கோபமாய்  ஒடி அருணாச்சல பிரதேச  சமவெளியில்  சாந்தமாகி  அங்குள்ள திபாங், லோகித் நதிகளை இணைத்துக்கொண்டு  பிரம்புத்திராவாக அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைகிறது. பல இடங்களில் இந்த நதி அகலமாக மட்டுமில்லை மிக ஆழமாகவும் இருக்கிறது.  சராசரி ஆழம் 124 அடி என்ற தகவலை மெல்ல நம் படகைக்  கடந்து போகும்  அஸ்ஸாம் சுற்றுலாத்துறையின் எம்.வி மஹாபானு.  என்ற பெரிய சொகுசுக் கப்பல். உறுதி செய்கிறது  டாலரில் கட்டணம் வசூலிக்கும் இந்தக் கப்பல் மஜோலியைப் பார்க்கவரும் வெளிநாட்டினருக்காக. கெளகுவாத்தியிலிருந்து வருகிறது.

தீவை அடைந்தவுடன்  நமக்குச் சற்று அதிர்சியாகயிருக்கிறது. ஒருகாலத்தில் கலைகளையும், கலைஞர்களையும் போற்ற மட்டுமே உருவாக்கப் பட்ட இந்தத் தீவு இன்று அதன் அடையாளங்களை இழந்து ஒரு சராசரி இந்திய நகரமாகிவிட்டதைப்பார்த்ததும் .  நாம் போகப்போவது பாரம்பரிய மிக்க இடத்துக்குத்தானா? என்ற சந்தேகம் கூடத் தலைதூக்கியது.  நாம் போக வேண்டிய கிராமம் சற்று தொலைவிலிருக்கிறது என்று அழைத்துப்போனார்கள்   மணல் மேடுகளான பாதையில் கிராமத்தை நோக்கிச்செல்லும் நம்மை நிறுத்துகிறது ஒரு அசத்தலான சின்ன ஏரி. பிக்சர் போஸ்ட் கார்ட் போல அழகான தோற்றம் ஒருமணி நேரப்யணத்துக்கு பின் சட்டென்று ஒரு அசலான கிராமத்துக்குள் நுழைகிறோம்

15ஆம் நூற்றாண்டில் அன்றைய மன்னர்களின் ஆசியுடன்  ஶ்ரீமத் சங்கரதேவும் அவரது சீடர் மஹாதேவ்வும் புதிய வைஷ்ணவ சம்பிரதாயங்களை பரப்ப இங்கு ஸத்ரா என்ற அமைப்புகளை நிறுவினர். கலைகளை முறையாகக் கற்று அதில் ஒரு முகமாக மனத்தைச் செலுத்துவது உயர்ந்த பக்தி என்பதைக் கற்பிக்க  இந்த ஸத்ராக்கள் இயங்கின. இதில்   இசை, நடனம் , நாடகம், உபன்யாசம்,ஓவியம், கைவினைக்கலைகள்  கற்பிக்க தனித்தனி ஸத்தராக்கள் நிறுவப்பட்டு .   அவற்றில் குரு பரம்ரையில் கலைகள் கற்பிக்கப்பட்டன அவற்றில்  சில இன்றும் இயங்குகின்றன.

இந்தக் கிராமத்தில் தான் அஸ்ஸாமின் மரபுக் கலைகளில் ஒன்றான முகமூடிகள் தயாரிக்கும் கலை 5000 ஆண்டுகளாகக்  கற்பிக்கப்பட்டு, போற்றப்படும் சாமகுரி ஸத்ரா (Samaguri Satra)  இருக்கிறது. இதன் பரம்பரையில் வந்த  இன்றைய ஸத்திரதிகார் (தலைவர்). குஷ்கந்தா தேவ் கோஸ்வாமியை சந்திக்கிறோம்

“முகமூடி என்பது சரியான சொல் இல்லை. ஆங்கில மாஸ்க் என்ற பதம் முகம் அடையாளம் தெரியாமல் மூடிக்கொள்வதைக் குறிப்பது,.  நாங்கள் செய்வது முகங்கள்.. இதில் முக்கியமான விஷயம்  அந்தக் கலைஞர்களே அதைத்தயாரிக்கிறார்கள். ஆங்கிலத்தில் தெளிவாக பேசும்  இவர் இந்தக்கலைஞர்களின் பரம்பரையில் வந்தவர். நாடகலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சங்கீத நாடக அகதமியின் விருது பெற்ற கலைஞர்.. . முதலில் மூங்கில் இழைகளால் உருவாக்கப்பட்ட முக அவுட்லைன். அந்த இழைகள் ஈரமாகியிருக்கும்போது செய்யப்படுவதால் அது நல்ல வெயிலில் உலர்ந்த பின் அதன்மீது மிக மெல்லியதாக நெய்யப்பட்ட கைத்தறி துணி போர்த்தப்பட்டு அதன்மீது  ஒரு கலவை பூசப்படுகிறது. இந்தக்கலவை பிரம்மபுத்திராவின் வண்டலிருந்து சலித்தெடுத்த மென்மையான மண், பசுவின் சாணி, வாழைமட்டைச்சாறு, மரப்பட்டைகளிலிருந்து எடுக்கப்பட்ட பசை இவை கலந்து உருவாக்கப்பட்ட  ஒரு கலவை. இதை அந்தத் துணியின் மீது பூசி விரல்களால் அழுத்தி அந்த கதா பாத்திரத்தின் முகத்தை உருவாக்க வேண்டும். இதை  நிழலில் 3அல்லது 4 நாள் உலர வைக்கவேண்டும். பின்னர்  அவற்றில் கண் உதடு போன்ற இடங்களை மெல்லிய கத்தியால் செதுக்கி சீராக்க வேண்டும். பின்னர் அதற்குப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் வண்ணங்கள் பூச வேண்டும். இந்த வண்ணங்களும் இயற்கைப்பொருட்களான, பச்சை இலை, மஞ்சள், எலுமிச்சை சாறு, வாழைப்பூ கடுக்காய் போன்றவற்றால்  தயாரிக்கப்படுகிறது. இத்தனையும் கலைஞர்களாலும், அவரது குடும்பத்தாராலும் மட்டுமே செய்யப்படுகிறது

அணிந்து கொள்ளும் முகம் அதிக எடையில்லாமல் ஆடையைப்போல எளிதாக அணியக்கூடியதாக இருக்கவேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தும் நிலையிலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை மெனக்கிடல். ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாடக கலைஞர்கள் இங்கு வந்து தங்கி இதைக்கற்கிறார்கள். அவர்களின் காதாபாத்திரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்

 இந்தக்கலையைப்போல் அருகிலிருக்கும் கிராமங்களில் இசை, நடனம் மட்பாண்டங்கள், ஓவியம்  கற்பிக்கும் ஸத்ராக்கள்  இருக்கின்றன. இந்த ஸத்ராக்களின் முகப்பு ஒரு கோவில் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  அதன்   பெரிய கூடத்தில் நடன,இசைப்பயிற்சிகள் வகுப்புகள் நடக்கின்றன எல்லாம் குருகுல முறையில்தான். . மாணவர்களில் அதிகமானவர்கள் 7,அல்லது 8  வயது மதிக்கக்கூடிய வருங்கால நடன கலைஞர்கள்.  சின்ன பஞ்சகச்சம் மாதிரியான உடை,அழுத்தமான ஆரஞ்ச் கலர் ஜிப்பாவில் பயிற்சி பெற்றுகொண்டிருக்கிறார்கள். 

ஆனால்  வைஷண கலாச்சாரம் பிறந்த இடம் என்று சொல்லுப்படும் இந்த தீவில்  ஒரு கோவில் கூட இல்லாதது ஆச்சரியமாகியிருக்கிறது.

மஜோலியைப்போல மணல் திட்டாக பிரம்மபுதிரா நதியின் நடுவே எழுந்த மேலும் சில தீவுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் ஒரு தனி மனிதர் உருவாக்கிய காடு கூட இருக்கிறது. மேலும் சிலவற்றில் பழங்குடிகள் வாழ்வதால் அனுமதியில்லை. அவற்றை தொலைவிலிருந்து பார்த்துவிட்டுக் கரை திரும்புகிறோம்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா  பாயுமிடங்களில் கரைகளின் இரு புறமும் எல்லாக்  கிராமங்களிலும் கோவில்கள். பல கோவில்களில் நதி கோவிலினுள்ள குளத்தில் நீரை நிரப்பும் முறை.   சிலகோவில்களின் வயது  2000 ஆண்டு என்ற செய்தி நம்மை நதியின் வயதை யோசிக்க வைக்கிறது.

இவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருக்கும் இந்த நதி ஏன் வெள்ளம் வரும்போது  நதிக்கரைக்கிராமங்களையும் தீவுகளையும் கடுமையாக தாக்குகிறது.?

 மற்ற நதிகளைப்போலப்  பெண்ணாக இல்லாமல் ஒரு ஆண் பெயரில்  நதியாக இருப்பதால் அவ்வப்போது தன் ஆண்மையின் லட்சணங்களில் ஒன்றான ருத்திரத்தை காட்டிவிடுகிறதோ என்ற எண்ணத்துடன்  மாநிலப்  பயணத்தைத் தொடர்கிறோம்.  

9/11/18

நம்மை அழைக்கும் நாச்சியார் மாளிகை


  

" மென்னடை யன்னம் பரந்து விளையாடும்
  வில்லிப்புத் தூருறை...
என்று தன் பிறந்த ஊரான ஶ்ரீவில்லிபுத்துரை பெருமையுடன் நாச்சியார் திருமொழியிலும்
விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
என்று பெரியாழ்வாரும் அ/றிமுகப்படுத்தும் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு நாச்சியார் திரு மாளிகை என அழைக்கப்படும் ஆண்டாள் கோவிலைக்காண பயணித்துக் கொண்டிருக்கிறோம் ந்தக் கோவில் தமிழகப் பழமையான கோவில்களில் ஒன்று. பரவலாக அது ஆண்டாள் கோவில் என்று அறியப்பட்டாலும் உண்மையில் அந்தக்கோவில் வடபத்ரசயனர் கோயில். இந்தப் பெருமாளுக்குத் தான் ஆண்டாள் தன் மாலையைச் சூடிக்கொடுத்தாள் என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன. இந்த வடபத்ரசயனர் கோவிலின் ராஜகோபுரம் மிகப்பெரியது. நுழைவுவாயில் இருக்கும் இராஜகோபுரம். . தமிழகக் கோவில்களின் கோபுரங்களிலியே மிக உயரமானது .
இந்த ராஜகோபுரம் பெரியாழ்வாரால் ஸ்ரீவல்லபதேவ பாண்டிய மன்னன் (கிபி 765-815) உதவியோடு கட்டப்பட்டதாகவும்,. இந்தக் கோபுரத்தின் விமானம் முற்காலப் பாண்டியர் முதல் பிற்காலத்தில் வந்த மதுரை நாயக்கர் வரை தொடர்ந்து திருப்பணி செய்துள்ளதற்கான சான்றுகளைக் கல்வெட்டுகள் பேசுகின்றன..
.கவிச்சக்கரவர்த்திக் கம்பன் இந்தக் கோபுரத்தை மேரு மலைக்கு இணையானது என்று பாடியிருக்கிறார். அந்தப் பாடலின் கல்வெட்டும் இங்கு இருக்கிறது.
கோபுரம் அண்மையில் நடந்த கும்பாபிஷகத்தினால் பலவண்ண எனாமல் பெயிண்ட்டில் மின்னுவதால் அதன் தொன்மையைச் சற்று இழந்து நிற்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது. ஷேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றைத் துரத்தி செல்கிறான். அவனைப் புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியைத் தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையைக் கூறுகிறார். பின்னர்த் தாம் இங்குக் 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கப்போவதாகவும் கூறி, இந்தக் காட்டை அழித்து நாடாக்கி தமக்குக் கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். சிறிய கோவிலாக ஒரு குளத்தின் நடுவில் எழுந்த அதற்கு, பின்னாளில் ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையான பெரியாழ்வார் தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்றுசொல்லுகிறது ஸ்தல புராணம்.
. அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிக் கொண்டு, தாம் பெற்ற பொன் முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் 11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. பெரியாழ்வார் காலத்தில் ஒரு ரூபாய்க்கு 196 காசுகள் மதிப்பிருந்ததாம். இதன் அடிப்படையில் அவர், இந்த உயரத்தில் கோபுரம் கட்டியதாகச் சொல்கிறார்கள். .
இந்த வடபத்ரசயனர் கோவிலுக்கும் அதன் ஒரு பகுதியாக இப்போது ஆண்டாள் சன்னதி இருக்கும் கோவிலுக்கும் இடையிலிருந்த நந்தவனத்தில் தான் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டு. பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள் கோதை. பெருமாளுக்குச் சாற்றப்படும் மலர் மாலையை, அவள் ஒவ்வொரு முறையும் அணிந்து அழகு பார்த்ததற்குப் பின் கொடுத்திருக்கிறாள். இதனை அறியாத பெரியாழ்வார் பெருமாளுக்கு அந்த மாலையைச் சாற்றுகிறார். ஒருமுறை பூவில் தலைமுடி இருப்பது கண்டு பெரியாழ்வார் அஞ்சி, அதைத் தவிர்த்து வேறு மாலையைச் சூட்டினார்.
உடனே இறைவன், “ஆழ்வார்! கோதையின் கூந்தலில் சூட்டிய பூவையே நான் விரும்புகிறேன். அதையே எனக்குச் சூட்டுஎன்றார். இன்றளவும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்குச் சாத்தப்படுகிறது.

ராஜ கோபுரத்தின் வழியே நுழைந்தவுடன் வலது புறம் இருப்பது வடபத்ரசயனர் போவில் நேர் எதிரே இருப்பது ஆண்டாளின் சன்னதி. அது நேர் எதிரில் கண்ணில் பட்டதால் எல்லோரும் செய்வது போல நாமும் அங்கு தான் முதலில் செல்கிறோம்.
நுழையும் பந்தல் மண்டபத்தின் மேற்கூரை மூங்கில்களினால் எழுப்பி அதன் மீது ஓலைக்கூரை வேய்ந்ததைப் போலவே கல்லில் வடிக்கப்பட்டிருப்பது நம்மைப் பிரமிக்கச்செய்கிறது. மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடு. எத்தனைபேர் எவ்வளவு காலம் உழைத்தார்களோ?
அந்த மண்டபத்தின் முழுவதும் உள்ள தூண்களில் அழகான சிற்பங்கள். எல்லாவற்றையும் ரசித்துப் பார்க்க முடியாமல் கடைகளின் ஆக்கிரமிப்பு...
பந்தல் மண்டபத்தைக் கடந்து கல்யாணமண்டபத்திற்குள் நுழைகிறோம். கம்பீரமாகப் பிரம்மாண்ட உயரமாக நாயக்கர்கால இராமாயண ஓவியங்களுடன் பெரிய யாழித்துண்களுடனும் இருக்கிறது. இங்குதான் பங்குனி மாதத்தில் ஆண்டாளுக்குக் கல்யாணவைபவம் கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து நுழையும் துவஜஸ்தம்ப மண்டபம் என்ற கொடிமர மண்டபத்தில் கொடிமரம் தங்க முலாமுடன் மின்னுகிறது. அதில் பதிக்கப்பட்டிருக்கும் ராஜ கோபுரத்தின் சிறிய வடிவம் நம்மை நிறுத்துகிறது. .கொடிமர மண்டபத்தின் இருபுறமும் இருக்கும் தூண்களிலிருக்கும்  கலை நயம்மிக்க பெரிய ராம லஷ்மண, சரஸ்வதி. வேணு கோபாலன், மோகினி சிற்பங்கள் ஒவ்வொன்றும் நம்மை  மாளிகைக்குள் அழைக்கின்றன.  

இந்த மண்டங்களைகடந்து சன்னதிக்குள் நுழையும் நம்மை வரவேற்பது தங்க வண்ணத்தில் பளிச்சென்று மின்னும் வெள்ளிக்குறடு என்ற ஊஞ்சல் மண்டபம். வெள்ளி தோறும் ஆண்டாள், தரிசனம் கொடுக்குமிடம். அதன் பின்னே அர்த்த மண்டபத்தில் குறுகிய வாயிலுடன் கர்பகிரஹம். உற்சவ மூர்த்திகள் பெரிய அளவில் பிரமாதமான அலங்காரத்தில் முன்னால் இருப்பதால் மூலவரைச் சட்டென்று முழுவதுமாகக் காண்பது சற்றுச் சிரமாகயிருக்கிறது ஆனால் அதற்குத் தீபாரதனை காட்டும் போது செங்கோல் ஏந்திய ரங்கமன்னாரின் வலது புறம், தன்இடது தோளில் கிளியுடனும் சாய்ந்த கொண்டையுடனும் ஆண்டாளும் அருகில் கருடாழ்வாரும் மின்னும் தங்ககவசங்களில் ஜொலிக்கிறார்கள். கண்டது சில நிமிடங்கள் என்றாலும் அந்தக் கம்பீரமான காட்சி கண்ணை விட்டு அகல வெகுநேரமாகிறது. இந்தக் கோயிலில் மட்டும் தான் பெருமாளுடன் கருடாழ்வார் ஆண்டாளுக்குப் பக்கத்தின் நின்றுகொண்டு காட்சியளிக்கிறார்..

சன்னதியை விட்டு வெளியே வரும் போது ஆண்டாள் நீரில் தன்னை அழகு பார்த்துக்கொண்ட கிணறு. இப்போது தங்களை அதில் பார்க்க விரும்புகிறவர்கள் எட்டிப்பார்த்து காசுகளை வீசி எறிந்து பாழ் பண்ணுவதால். கிணற்றைகண்ணால் மூடி அதைச்சுற்றி அருகில் போட்ட காசு தெரிய ஒரு கண்ணாடி உண்டியலை அமைதிருக்கிருக்கும் நிர்வாகத்தின் சாதுரியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

இந்த ஆண்டாள் கோவிலை நாச்சியார் திருமாளிகை என்று
அழைக்கிறார்கள். அண்மையில் நடந்த ஆண்டாள் கோவில் திருப்பணிகள் ஒன்று தங்கவிமானம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவிமானத்தைவிடப் பெரிய அளவில் அமைக்கப்பட்டு உள்ளது. நின்று இதை நன்றாகப் பார்த்து தரிசிக்கப் பிரஹாரத்தில் தரையில் ஒர் இடம் குறித்திருக்கிறார்கள்.. பளிச்சென்ற சூரிய ஒளியில் தகதகக்கும் தங்க கோபுர தரிசனம்.
இந்தக்கோவில் தனியாகபிரசித்திப் பெற்றிருப்பதுடன் மற்ற பல முக்கிய வைணவத்தலத்தின் வழிபாடுகளிலும் இணைந்திருக்கிறது. திருப்பதி பெருமாளுக்குப் புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாளுக்குச் சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்குத் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார். அவர் வைகையாற்றில் இறங்கும் போது அணியும் வண்ண வஸ்திரம் இங்கிருந்து தான் போகிறது.

ஆண்டாள் கோவிலில் இருந்து வெளியே வந்து ராஜ கோபுரத்துகருகிலிருக்கும் வடபத்திரசயனர் சன்னதிக்குச் செல்லுகிறோம். மற்ற வைஷ்ண கோவில்களிலிருந்து இது சற்று மாறுபட்டிருக்கிறது. கோவிலின் தரைதளத்தில் நம்மாழ்வாரும் இராமானுஜரும் இடது புறமும், பெரியாழ்வார் வலதுபுறமும் இருக்கச் சன்னதியில் நரசிம்மர். அருகில் அதன் வழவழப்பில் பதிந்த பலகோடி பாதங்களின் அடையாளத்தையும், காலத்தையும் சொல்லும் படிகளேறி முதல் தளத்தை அடைந்துதான் மூலவரைத் தரிசிக்க வேண்டும். பெருமாள் சயனக்கோலத்தில் ஶ்ரீ தேவி பூதேவியுடன் தரிசனம் தருகிறார். சுற்றிலும் நிறையச் சுதையிலான உருவங்கள்

சன்னதியின் வெளியே வந்து நாம் நிற்குமிடம் வசந்த மண்டபம். இந்த இடத்தில் தான் ஆண்டுத் தோறும் அரையர் சேவை என்ற வழிபாடு நடைபெறுகிறது. ஒரு பழைய தேரிலிருந்து எடுக்கப்பட்ட அற்புதமான மரச்சிற்பங்களை அழகாகப் பொருத்திச்செய்யப்பட்ட மேற்கூரையுடைய பெரிய கூடம் அது.

அங்கு . அரையர் பரம்பரையின் இன்றைய அரையரான பாலமுஹூந்தாச்சாரியார் ஸ்வாமிகளைச் சந்திக்கிறோம். பிரபந்தங்களையே எப்போதும் சுவாசிக்கும் அவரிடம் அரையர் சேவை பற்றிக் கேட்கிறோம்.சிவந்த மேனி நல்ல உயரம். மெல்லிய குரல்

நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை ராகத் தாளத்தோடு ஆடிப் பாடி வழிபடுவது தான் அரையர் சேவை. பலநூற்றாண்டுகளாக 108 திவ்ய தேசங்களிலும் நடைபெற்று வந்த இந்த விசேஷ வழிபாடு இப்போது ஶ்ரீவிலிபுத்தூர்,ஆழ்வார் திருநகரி, ஶ்ரீரங்கம் ஆகிய மூன்று கோவில்களில் மட்டுமே நடைபெறுகிறது. இது ஆடல் பாடல் வழி பாடுதான் என்றாலும் எல்லோரும் இதைச் செய்ய முடியாது. இதனைப் பரம்பரையாகச் செய்துவரும் குடும்பத்தில் ஆண்கள் மட்டுமே செய்யமுடியும். இதன் தாளங்களும், நடன முத்திரைகளும் பாவங்களும் சாஸ்திரிய நடனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. விரும்பினாலும் நாங்கள் மற்றவர்களுக்குக் கற்று கொடுக்கும் வழக்கமில்லை.
 திருமதி அனிதா ரத்தினம் கூட இங்கு வந்து இதை ஆராய்ந்தார். . ஆனால் அவர் விரும்பியபடி அதை முறையாகக் கற்றுக்கொடுக்க இயலவில்லை. கமலஹாசன் தன்னுடைய தசாவதாரம் படத்தில் அரையர் காட்சிகளைப் புகுத்த விரும்பி என்னை நேரடியாகவும் நண்பர்கள் மூலமாகவும் நல்ல சன்மானம் தரமுடியும் என்றும் அணுகினார். நான் ஏற்கவில்லை. இது பணத்துக்காகச் செய்யும் கலையில்லை. பகவானுக்குச் செய்யும் வழிபாடு.. கோவிலில் கூட நாங்கள் ஊழியர்களோ அர்ச்சகர்களோ இல்லை. எங்களுக்குக் கோவிலிலிருந்து சம்பளமோ சன்மானமோ கிடையாது. பரம்பரையாக நாங்கள் செய்யும் இறைப்பணி இது. நான் எங்கள் பரம்பரையில் 49வது தலைமுறை இதை எனக்குப் பின் என் பிள்ளை தொடர்வார்

இதே மண்டபத்தில் பல நூற்றாண்டுகளாகப் பகல் பத்து என்ற உற்சவத்தின் போது பக்தர்கள் இருபுறமும் உட்கார்ந்திருக்க நடுவில் எங்கள் முன்னோர்கள் பாசுரத்தை அபிநயங்களுடன் பாடியிருப்பதைப் போலவே இன்றும் நாங்கள் செய்கிறோம். மைக், விசேஷலைட் எதுவும் கிடையாது. ஊசிவிழுந்தால் ஓசை கேட்கும் அளவுக்கு அமைதிகாத்துக் கேட்பார்கள்.  என்கிறார் அரையர் ஸ்வாமிகள்
வருமானத்துக்காகக் கோவில்கள் வணிகமயமாகிவரும் இந்த நாளில் வருமானம் எதுவும் பெறாமல் தெய்வப்பணியாகத்தான் இதைச்செய்கிறோம் என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இவர்.. இந்தச் சேவையின் போது இவர்கள் துணியாலான ஒரு விசேஷ கீரிடம் அணிகிறார்கள். மற்ற நேரங்களில் அது அவர் வீட்டில் பூஜையில் வைத்து வழி படப்படுகிறது என்பதிலிருந்தே அதன் புனிதம் புரிகிறது.
.
இந்தக் கோவிலின் தேரோட்டம் மிகப்பழமையானது. அதைப்பற்றி இந்த நகரில் பலஆண்டுகளாக வாழும் பக்தர் திரு ரத்தின வேல் அவர்களிடம் பேசிய போது
ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. முன்னால் ஓடிக்கொண்டிருந்த பழைய தேரில் சாலிவாஹன் சகாப்தம் 1025 என்று பொறிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு பழமையானது. கலைநயமிக்கப் பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்குச் சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்பக் கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடங்களும் இருக்கும். தேரோட்டத்தின் போது சுற்றுவட்டாரத்தில் 5 மைல் வரை தேர் எந்த ரதவீதியில் நிற்கிறது என்று தெரியும்.
தேரோட்ட உற்சவத்தில் வடம் பிடித்து மக்கள் இழுக்க, நின்ற தேர் நகர முடியாதபோது தேரின் பின் சக்கரங்களில் பெரிய கனமான மரத்தடியால் உந்தித் தள்ளுவர்.(நெம்பு தடி) எண்ணைத் தடவிய கனமான மர சற்றுக்குக்கட்டைகளால் தேரை நிறுத்தவும் பக்கவாட்டில் திருப்பவும் செய்வார்கள்.. முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி இழுத்து நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும்.
காலப்போக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிகச் செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. மாற்றாகச் சிறிய தேர் பயன்பட்டது. மீண்டும் பெரிய தேரைச் சீரமைத்து இழுத்தபோது அலங்கார மேலடுக்குச் சாரம், கலசம் சரிந்து கீழே விழுந்து பல உயிர்ப்பலி நேர்ந்தது. அதனால் பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிச்சட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்துத் தேர் நவீனப்படுத்தப்பட்டது.
இப்போது தேரை உந்தித் தள்ள ஜேசிபிக்கள் பயன்படுத்துகிறது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே) என்று சொல்லும் திரு. ரத்தின வேல் இப்போது தேர் நாளில் பெருமளவில் இளைஞர்கள் வருவது மகிழ்ச்சியாகியிருக்கிறது என்கிறார்.

செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத்தோளில் கிளி இருக்கும். இங்கு ஸ்ரீஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி இருக்கிறது. ஏன் கிளி? ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் சொல்லுகிறது.
இந்தக் கிளி ஆண்டாளுக்கு அணிகலகனில்லை. மாலைகளைப் போலத் தினமும் புதிதாகச் செய்யது அணிவிக்கப்படுகிறது . . கிளியின் மூக்கு மாதுளம் பூ, மரவள்ளிக்கிழங்குச்செடியின் இலையில் கிளியின்உடல்;, – நந்தியாவட்டை இலை,பனைஓலையில் இறக்கைகள் கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள் பயன் படுத்தியும்,  கிளியின் கண்களுக்குப் பளபளக்கும் மைக்கா துண்டுகளைப் பயன்படுத்தியும். கிளியைத் தினசரி மாலை நேர பூஜைக்காக ஒரு குடும்பத்தினர் உருவாக்குகின்றனர்.. இந்தக் கிளியை மறுநாள் காலை பூஜைகள் முடிந்தவுடன் அகற்றிப் பிரசாதமாக வழங்குவார்கள்என்கிறார் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வரும் பக்தரும் , கோவிலிலும், நகரிலும் பலரை அறிந்திருப்பவருமான திரு. அழகர் ராஜா


திரும்பும் பயணத்தில் நீண்ட நேரம் கண்ணில் தெரிந்துகொண்டிருந்த அந்தக் கம்பீரமான கோவில் மெல்ல மறைகிறது. ஆனால் நாடு முழுவதும் மார்கழி காலைகளில் ஒலிக்கும் இனிய திருப்பாவையை அருளிய ஆண்டாளை அவரது மாளிகையிலேயெ கண்குளிர தரிசித்தது மனதில் மறையாமல் நிற்கிறது.


15/10/17

ஆச்சாரியன் நிர்வகித்த அரங்னின் ஆலயம்


இருள் பிரிந்து பொழுது புலர்ந்து, மெல்லிய வெளிச்சம். பரவிக்கொண்டிருக்கிறது. முதல் நாள் பெய்த மழையினால் வீசும் குளிர்ந்த காற்றும் இதமாக இருக்கிறது. ஶ்ரீரங்கத்தின் அமைதியான அந்த வீதியில் கம்பிரமான ராஜ கோபுரத்தின்*1 நுழை வாயிலைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறோம். தெற்கு உத்தரவீதியில் பளிச்சென்ற விளக்கில் மின்னும் ஶ்ரீ ரெங்கா என்று மூன்று முறை எழுதபட்டிருக்கும் வார்த்தைகளை நம்மையறியமலே படிக்கும்போதே அரங்கனின் திருநாமத்தைச் சொல்லித்தான் அந்தச் சிறிய கோபுர வாயில்*2 நுழைய வேண்டும் என்ற நியமத்தைச் செய்கிறோம். அரங்கனின். விஸ்வரூப தரிசனம் காணச்சென்று கொண்டிருக்கிறோம்
6மணி. தரிசனத்தை தவறவிட்டுவிடக் கூடாது என்ற அவசரத்தில் ரெங்க விலாச மண்டபத்தைக் கடந்து செல்லும்போது பிரமாண்டமாக நிற்கும் கருடாழ்வருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு சந்நதி மண்டபத்தை அடைகிறோம். தங்ககவசமிடப்படிருக்கும் நுழைவாயிலின் வெள்ளிக்கதவுகள் திறந்திருக்கிறது ஆனால் ஒரு பட்டுத் திரையால் சன்னதி மூடப்பட்டிருக்கிறது.
அந்த நுழை வாயிலுக்கு எதிரே மேனியில் பளிச்சிடும் திருமண்களுடன் ஒருவர் வீணை வாசித்துக்கொண்டே மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருக்கிறார். அருகில் உட்காரந்த பின்னர்தான் அது அரங்கனுக்கான, தொண்டரடிப்பொடிஆழ்வார்அருளிய திருப்பள்ளியெழுச்சியெனப் புரிகிறது. இனியமையான குரல் வீணையெழுப்பும் நாதத்துடன் இழைந்து கேட்கிறது. திருப்பள்ளியெழுச்சி முடிந்தபின்னரும் காலைநேர ராகமான பூபாளத்தில் வேறுசில பாடல்களும் பாடுகிறார். அருகில்நிற்கும் மற்ற விரல்களை மடக்கி ஆள்காட்டி விரலை மட்டும் உயர்த்தி நிற்கும் பிரம்மாண்டமான விஜயன், ஜெயன் வெண்கல சிலைகளையும் அவற்றிக்கு பட்டு உடுத்தியிருக்கும் நேர்த்தியையும் பாடல்களையும் ரசித்துக்கொண்டிருக்கிறோம். வந்திருக்கும் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் கோவில் ஊழியர் உரத்தகுரலில் கட்டளையிட்டுக்கொண்டிருக்கிறார்.

அரசியல்வாதி என்ற அடையாளங்களைச்சொல்லும் உடையில் வந்த ஒருவரும் அவரது குடுமபத்தினரும் வீணை வாசிப்பவருக்கு மிக அருகிலேய அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு இடையூறுகளுக்கும் இடையே அந்த மனிதர் ஆத்மார்த்தமாக வீணைவாசித்த வண்ணம் பாடிக்கொண்டே இருப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறோம்.
திடுமென நகரா ஓசை கேட்கிறது. அந்த இடத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.வாத்தியங்கள் முழங்கப்பவனியாகவந்த சிவிகையென அழைக்கபடும் பல்லக்கு நுழைகிறது. சிவப்பு தலைப்பாகை அணிந்து வெள்ளித்தடியேந்திய ஒருவர் கட்டியம் கூறிக்கொண்டே வருகிறார். பல்லக்கின் உள்ளே சிறிய உருவில் அரங்கன். இரவு தயார் சன்னதிக்கு சென்றவர் அவரிடத்துக்கு திரும்புகிறார் என்கிறார்கள். சில நிமிடங்களில் மீண்டும் வாத்திய முழக்கம். யானை, காரம்பசு, வெள்ளைக்குதிரை*2a பவனியாக வந்து கொண்டிருக்கிறது. முதலில் யானை படிகள் ஏறி நாம் அமர்ந்திருக்கும் மண்டபத்திற்குள் வருகிறது. அந்தப் படிகள் மிக அகலமாக இருப்பதின் காரணம் புரிகிறது. பின்னர் பசு. தொடர்ந்து குதிரை வருகிறது. யானை ஆண்டாள் மூலஸ்தானத்தை நோக்கியும், பசு பின்புறம் திரும்பியும் தயாராக நிற்கிறது. அருகில் வெண்குதிரை. ராமானுஜன். நிற்கிறார்கள். அரங்கன் கண்முழிக்கும்போது முதன் முதலில் இந்த மங்களங்களில் தான் முழிக்கப்போகிறார். மணியோசனையுடன் திரைவிலகும்போது யானை மூன்று முறை பிளறுகிறது. “ரெங்கா” எனச்சொல்லுவது போலக் கேட்கிறது. மீண்டும் திரையிடுகிறார்கள். வாத்திய முழக்கங்களுடன் யானை ஆண்டாளும், அவரது நண்பர்களும் திரும்பியபின் திரை திறக்கப்பட்டு நாம் அனுமதிக்கப்படுகிறோம்.
கர்ப்பகிரஹத்தில் அனந்த சயனத்தில் அரங்கன். அவர் முன்னே நல்ல உயரத்தில் உற்சவர். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் தைலக்காப்பு என்ற நடைமுறையினால் அரங்கனின் மேனி முழுவதும் காப்பிடபப்ட்டிருப்பதால் முகத்தை மட்டுமே அன்று தரிசிக்க முடிந்தது. எப்போதும் சர்வ அலங்கார ஆபரணங்களுடன் இருக்கும் உற்சவர் மிகச் சிம்பிளாகப் பளிரென்று இருந்ததால், சங்கு சக்கரம் ஏந்திய நான்கு கைகளையும் பார்க்க முடிகிறது. இந்த ஒரு சமயத்தில் மட்டும் தான் இந்தக் காட்சி கிடைக்கும் என்றார்கள். இந்த விஸ்வரூப தரிசனம் குறைவான நேரம் என்பதால் குறைந்தஅளவுஎண்ணிகையிலேயேபக்தர்கள்அனுமதிக்கபடுகிறார்கள்.
அவர்கள்தரிசித்தபின்னர்அரங்கனின் ஆராதனைகளுக்காகச்சன்னதி மூடப்படுகிறது. நாம்தயாரை தரிசிக்க வெளியேறுகிறோம்
.
அந்தக் காலைநேரத்தில் பளிசென்ற மஞ்சள் பட்டாடையில் வெறும் மல்லிகை மாலைகள் மட்டுமணிந்து அதிக ஆபரணங்கள் இல்லாமலேயே ஜொலித்துக்கொண்டிருந்தார் தாயார். இங்கு மூலவராக இரண்டு தயார்கள். ஆதியில் பிரதிஷட்டை செய்யபட்ட உருவத்தை அன்னியர் படையெடுப்பிலிருந்து காப்பாற்ற வேறு இடத்தில் பத்திரப்படுத்தபட்டிருக்கிறது. மீண்டும் கோவிலை நிர்மாணிக்கும்போது அது கிடைக்காதால், புதிதாக ஒன்று நிறுவபட்டிருக்கிறது. பின்னாளில் ஆதி உருவம் கிடைத்தவுடன் அதையும் இதே சன்னதியில் நிறுவிப் பூஜிக்கிறார்கள். அதனால் இரண்டு மூலவர்கள்.
தயாரை தரிசித்து வெளிய வரும்போது எதிரே கவிச்சக்ரவர்த்தி கம்பன், பார் போற்றும் தன் காவியத்தை அரேங்கிற்றிய மண்டபம். அரங்கனின் சன்னதியில் வீணை வாசித்தவரை அங்குச் சந்திக்கிறோம். “திருப்பள்ளியெழுச்சி பாடுவது என்பது ராமனுஜர் ஏற்படுத்திய வழிபாடு முறை. பரம்பரையாக எங்கள் குடும்பம செய்துவரும் பணி இது. நான் 45 வது பரம்பரை” என்கிறார் திரு சீனிவாசன்*2c இவர் ஒரு ஆடிட்டர். இது தெய்வகட்டளையாகத் தன் குடும்பத்தினர் மட்டுமே செய்யக்கூடிய பணி என்பதில் பெருமையடையும் இவரது தந்தை வீணை ரெங்கராஜனுடனும் தன் மகன்களுடனும் ஒரே நேரத்தில் சன்னதியில் வாசிக்கக் கிடைத்த வாய்ப்பை வாழ்க்கையில் பெற்ற பெரும் பாக்கியமாகக்கருதுகிறார்
. திருப்பள்ளியெழுச்சியைத்தொடர்ந்து நீங்கள் பாடிய பாட்டுக்களை நீங்களே தேர்ந்தெடுப்பீர்களா? என்ற நாம் கேட்டபோது, “திருப்பள்ளியெழுச்சிபாட என்ன பாடல்? அதற்கு என்ன ராகம்? என்பதை நாதமுனிகள் வகைப்படுத்தியிருக்கிறார். அதை மாற்றமுடியாது- கூடாது. மற்ற பாடல்களைத் தேர்ந்தெடுத்து பாடும் உரிமை எங்களுக்கு உண்டு. மழை பொய்த்துவிட்டதால், அமிர்தவர்ஷ்ணி ராகப் பாடல் இன்று பாடினேன் என்கிறார்.

அலகில்லா விளையாட்டுடையார் அவர் என்று சொன்ன கம்பனின் பாதம் பட்ட அந்த மண்டபத்தில் அமர்ந்து ஆயிரம் ஆண்டுகளாகத்தொடர்ந்து பாடப்பெற்றுவரும் பாடலைப்பாடும் பரம்பரையின் இந்தத் தலைமுறையைச் சந்திக்க நமக்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.

ஆலயத்தின்பிரகாரங்களைச்சுற்றி வரலாமெனப்புறப்படுகிறோம். இந்தக் கோவில் மிகப்பெரிது.156 ஏக்கர் பரப்பில் செவ்வக வடிவில் அமைந்த இதில் 7 பிரகாரங்கள். ஒவ்வொன்றிலும் சில சன்னதிகள் மொத்தம் 54 சன்னதிகள் இருக்கின்றன. அனைத்தையும் ஒரு நாளில் தரிசனம் செய்ய முடியாது. இயன்றவற்றை பார்க்கலாமென வலது புறமிருக்கும் சக்கரத்தாழ்வார்சன்னதியிலிருந்து துவங்கலாமென நடக்கத் துவங்குகிறோம்.
போகும் வழியில் நம்மை நிறுத்துவது அருகிலிருக்கும் 5 பிரமாண்டமான தானியகளஞ்சியங்கள்*3ஆலயத்துநிலங்களில்விளையும்தானியங்களையும், காணிக்கையாகச்செலுத்தபடும் தானியங்களையும் சேமிக்கஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கபட்டிருந்த*2b இவற்றை இப்போது புதுபித்திருக்கிறார்கள்*3
. 20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட இந்தக் கிடங்குகளில் மூன்று தளங்கள் மரப்பலகைகளால் அமைக்கபட்டிருக்கின்றன. மொத்தமாக 1500 டன் தானியங்களைச் சேமிக்க முடியும் என்பதைக்கேட்டு ஆச்சரியப்படும் நாம் கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல் இல்லாதாதால் இப்போது காலியாகதான் இருக்கிறது என்பதைக் கேட்டு வருந்துகிறோம். தானியங்களை நீண்ட நாள் சேமிப்பது என்பது மிகப்பெரிய சவால்.தட்பவெப்ப நிலைமாற்றங்களால் அவை வீணாகும் வாய்ப்பு அதிகம். அதனால் பசுஞ்சாணி, வைக்கோல்.கருப்பட்டி, பதனீர் பதப்பட்ட களிமண், ஒருவகை இலை போன்றவற்றை கலந்து அரைத்த கலவையால் இதன் சுவர்களை உருவாக்கியிருக்கிறான் அன்றை தமிழன். . அந்தக் கலவையின் ரகசியங்களைக் கண்டுபிடித்து அதை இயந்திரங்களின் மூலம் தயாரித்து சிதைந்து கிடந்த இந்தக் களஞ்சியங்களை இப்போது புதுபித்திருக்கிறார்கள். எல்லாம் இந்த ஆலய நிர்வாக அதிகாரியின் ஆர்வத்தினாலதான் என்கிறார் இதன் பொருப்பாளார்.
அந்த நீண்ட பிரகாரத்தின் மறுமுனையில் 1000 கால் மண்டபத்தை அடையும்போது ஏதோ மாறுதலை உணர்கிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாம் இந்த இடத்தை இப்படி பார்த்த ஞாபகம் இல்லையே? என்ற எண்ணம் தாக்குகிறது. காரணம் அந்த அழகான யானையின் சிற்பம்.*3a/4 வாலை முறுக்கி உயர்த்திக்கொண்டு மிக வேகமாக ஒடும் அதன் பின்னே அதை விரட்டும் பாகன். 12 அடி உயரமிருக்கும்.*3ato4b
“நீங்கள் மட்டுமில்லை. நான் இந்த ஊரிலேயே பிறந்து 40 ஆண்டுகளாக வாழ்ந்தவன். நானே இதைக் கடந்த சில மாதங்களாகத்தான் பார்க்கிறேன். இந்த யானையின் உயரத்துக்கு 12 அடிக்கு மண்மேடிட்டு அதனுள் புதைந்து போயிருந்திருக்கிறது. அந்த மேட்டில் புதர் மண்டிக்கிடந்ததால் யாரும் வரக்கூடமாட்டார்கள். அதனால் இப்படியொரு சிலை இருப்பதே யாருக்கும் தெரியாது. நல்ல வேளையாக இப்போது இருக்கும் நிர்வாகம் கண்டுபிடித்துச் செம்மைப்படுத்தியிருக்கிறார்கள்” என்றார் திரு ராமன்.*4a
வினோமான பச்சைவண்ணஜாடமுடி ஹேர்ஸ்டைலுடன் அருகிலிருந்த இருந்தஒருஜெர்மானியப்பெண்ணும்*6நமக்குச்சொல்லபட்ட விபரங்களைக்கேட்டு ஆச்சரியபட்டு போனார். ஒரு டிவி சானலில் பணிபுரியும் லில்லியும் அவரது அம்மா இல்காவும் கோவில்களைப்பார்க்க இந்தியா வந்திருக்கிறார்களாம்.*5&7 இத்தனை நாள் மண்ணில் புதைந்திருந்த அந்த மண்டபத்தின் பக்க சுவர் மலர்ந்த தாமரை இதழ்களின் மேல் நிற்பது போல அமைக்கபட்டிருக்கிறது அதன் மீது அழகிய சிற்பங்கள்.

அதைக்கடந்து வந்ததும் நம்மை நிறுத்துகிறது வெள்ளை வண்ணத்தில் நிற்கும் ஒரு பிரமாண்டமான கோபுரம். இதற்கு இனிமேல் வர்ணம் பூசு வார்களா? எனக் கேட்ட நமக்கு “இல்லை இது தான் பல ஆண்டுகளாக அதன் வண்ணம்” என்று சொன்னார் தினசரி இரு முறை இந்தக் கோவிலுக்கு வரும் திரு. ரெங்கராஜன்.7a திருச்சி BHELலிலிருந்து ஒய்வு பெற்ற இந்த அதிகாரி கோவிலின் அத்தனை விபரங்களையும் விரல்நுனியில வைத்திருக்கிறார். “இந்தக் கோபுரம் ஒரு தியாகத்தின் சின்னம். மூஸ்லீம் மன்னர்கள் படையெடுத்து இந்தக் கோவிலைச் சூறாடியபோது கோவிலின் நகைகளை ரகசியமாகப் பாதுகாத்த அமுதனார் என்பவரை அவை இருக்குமிடம் கேட்டுச்சித்தரவதை செய்துகொண்டிருந்தான் படைத்தளபதி. தளபதியின் கவனத்தை தன் அழகால் திருப்பிய ஒரு தேவதாசி தனக்கு நகைகள் இருக்குமிடம் தெரியும் எனச்சொல்லி இந்தக் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துசென்று அங்கிருந்து அவனைத் தள்ளிவிட்டுவிட்டு தானும் குதித்து இறந்துவிட்டார். அவர் பெயர் வெள்ளையம்மாள். அவர் நினைவாக இந்தக் கோபுரத்துக்கு வெள்ளை தவிர வேறு வண்ணம் பூசுவதில்லை”. என்றார். அரங்கனின் நகைகளைக் காத்த அந்த ஆடலழகிக்கு ஒரு கோபுரத்தையே நினைவுச்சின்னமாக்கியிருக்கிறார்கள். என்று எண்ணிக்கொள்கிறோம்.
“இதைக் கவனித்தீர்களா? என அருகிலிருக்கும் சேஷ ராய மண்டப சிலைகளைக் காட்டுகிறார் திரு. ரெங்கராஜன்*7a. வரிசையாக நிற்கும் எட்டுத்தூண்கள். ஒவ்வொன்றும் ஒரே கல்லில் வடிக்கபட்டவை. முன்னெங்கால்களைத்தூக்கிப் பாயும் குதிரைகள்மீது போர்வீரர்கள். தங்களை தாக்க வரும் மிருகங்களுடனும் மனிதர்களுடன் போரிடும் காட்சிகள். குதிரைமீதிருக்கும் சேணத்தின் மெல்லிய சங்கிலியிலிருந்து, பாய்ந்த வேல் மிருகத்தின் வயிற்றை கிழித்து வெளியே வரும் வரை நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.*9to13 நாளெல்லாம் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம். அத்தனை தத்ரூபம். பொதுவாகக் கோபுரங்களின் அருகில் இப்படி பெரிய மண்டபங்கள் காணப்படுவதில்லையே- இங்கு எப்படி? எனக் கேட்கும் நமக்கு “இது கிருஷ்ண தேவராயர் பரம்பரையில் வந்த சேஷராயர் ராஜகோபுரத்தின் முதல் நிலையாக அமைக்க வடித்திருக்கிறார்கள். பிரித்துக் கோபுரத்தின் மீது நிறுத்துமுன் சரிபார்த்த அசெம்பளி மாடல் இது. மொட்டைக்கோபுர முதல் மாடத்தின் அளவுகளும் இதன் அடிப்பகுதி அளவுகளும் கச்சிதமாகப் பொருந்துகின்றன. தொடர்ந்த போர்களினால் கோபுரம் மொட்டைக்கோபுரமாக நின்றதைப் போல இது இங்கேயிருந்துவிட்டது “என்கிறார் அவர்
.
அடுத்து நாம் நிற்பது திராவிட தமிழ் வேதமான திவ்ய பிரபந்தத்தை, மக்களின் மனதில் ஆழ பதியச் செய்து, மதத்தில் பல புரட்சிகளைச் செய்த, ராமானுஜரின் சன்னதியில்.*13ato16. ராமனுஜர் என்பது ஒரு பெயர்மட்டுமில்லை. அந்தசொல்லே இரு இயக்கம் என்று சொல்லுமளவுக்கு வைணவத்தை வளர்த்த ராமனுஜருக்கும் இந்தக்கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உருவாக்கியவர். கோயிலொழுகு என்று அவர் வாய்மொழியாகச் சொன்னவை, சுவடிகளில் பதியபட்டு இன்று புத்தகங்களாகவே வெளியாகியிருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படிதான் அனைத்து வைஷணவ கோவில்களும் இயங்குகின்றன
.
“பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களைத் திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இதிலிருப்பது அவரது உடல் என நம்பப்படுகிறது.அதனால் தினசரி அபிஷேகங்கள் கிடையாது ஆண்டுக்கு ஒரு முறை பச்சைகற்புரம் குங்கமப்பூ அரைத்த கலவை பூசப்படுகிறது. அந்தச் சமயத்தில் அதைசெய்துகொடுக்க இங்கு பக்தரகள் வந்து உதவுவார்கள் என்று சொல்லும் பூஜா பரிசாகர் அரவிந்தன்*14 அதற்கான அம்மிகள் இருக்கும் அறையைக் காட்டுகிறர்.*15,15a இவர் அரங்கனின் பல்லக்கை சுமக்கும் தனிஉரிமைபெற்ற ஶ்ரீபாதம் தாங்கிகள் என்ற 16 குடும்பங்களின் ஒன்றின் பரம்பரையில் வந்தவர். *14 சன்னதியை சுற்றியிருக்கும் சிறிய பிரகாரத்தில் இராமனுஜரின் வாழ்க்கை கதையைச் சொல்லும் 108 தஞ்சாவூர் படங்கள். ஒவ்வொன்றும் பேசுகிறது. அருகில் புதர்மண்டிக்கிடந்த இடம் இன்று நந்தவனமாக மாறியிருக்கிறது.
அரங்கனின் ஆலயத்தைக் காத்த ஆச்சாரியனின் சன்னதிக்கு*16 அவரது 1000மாவது ஆண்டில் வந்ததை எண்ணி மகிழ்கிறோம். “பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே சமூக நீதிகாத்த அந்த வேதாந்தி தமிழுக்கு காட்டிய மரியாதை மிக அதிகம். சன்னதியில் ஆராதனை முடிந்தவுடன் நாங்கள் மணிஅடித்தவுடன் வெளியே சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் வேதகோஷங்கள் நிறுத்தப்பட்டுவிடும். ஆனால் தமிழில் பிரபந்தம் சொல்லபட்டால் நிறுத்தப்படாது அது முடியும் வரை சன்னதி திறக்கப்படாது இந்த முறையைக் கொண்டுவந்தவர் இராமானுஜர். கோவில் பணிகளைப் பிரித்துப் பலருக்கு பகுந்தளித்ததைபோலக் கெளரவங்களை தரவும் ஒழுங்கு செய்திருக்கிறார். விழாநாட்களில் அர்ச்சகரான எனக்குப் பரிவட்டம் கட்டி கோவில் மரியாதைசெய்வதைப் போல மேளவாத்திய கலைஞரும் ஒரு நாள் கெளரவிக்கப்படுவார். இது மட்டுமில்லை நிர்வாகத்தில் இன்று கடைப்பிடிக்கும் பல விஷயங்களை அவர் அன்றே நிர்ணயத்திருக்கிறார். உதாரணமாகக் கோபுரத்தின் மீது தீப்பந்தம் வைத்துத் திரும்பும் தொழிலாளிக்குத்தான் அர்ச்சகர் முதல் சடாரி சாத்துவார். இது அந்தத் தொழிலாளி பத்திரமாகத் திரும்பியதை உறுதிசெய்து கொள்வதற்கும் தான் என்கிறார் சுந்தர் பட்டர்.*17a

நாம் சந்தித்த பலரும் பாராட்டிப் பேசும், கோவிலின் நிர்வாக அதிகாரியைச் சந்திக்க விரும்புகிறோம். உண்டியலிகளிலிருந்து கொட்டும் பணமழையை பிரித்துக் கணக்கிடுவதில் ஈடுபட்டிருக்கும் சமுக சேவர்களின் பணியின்*17 மேற்பார்வையில் இருந்த அவர் “இது முடிந்தபின் பேசுவோமே?” என்கிறார். கோவிலின் இணை ஆணையர் திரு பொன் ஜெயராமன்
.
கோவிலின் நுழைவாயில் எளிதாகத் திறக்கக் கூடிய நவீன அமைப்பில் தசாவதார சிற்பங்களுடனிருக்கும் புது மெருகு கலையாத பிரமாண்டமான தேக்கு கதவுகளைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கிறோம். எண்ணங்கள் சிறகடிக்கின்றன.*18
இந்தக் கோவில்தான் எத்தனை சரித்திர சம்பவங்களுக்குச் சான்றாக நின்றிருக்கிறது-? சோழ, பாண்டிய சாளுக்கிய, நாயக்க என்று எத்தனை அரசு குலங்களையும் படையெடுப்புகளையும், வாரிசு சண்டைகளையும் போர்களையும் கொள்ளைகளையும் சந்தித்திருக்கிறது? அரங்கனை காப்பாற்ற எடுத்தச்சென்ற பயணத்தின் அஞ்சாத வாசத்திற்குபின் அவரது மீள் குடியேற்றமும், கோயிலொழுகு-, கம்பனின் காவியம், அருணாசலகவியின் ராமநாடகம் பிறந்த இடம் - எனக் காலப்பெட்டகமாகயிருக்கும் இந்தக் கோவில் சவாலை வெல்லும் சாதனையாளர்களை அடையாளம் காட்டிக்கொண்டேதானிருக்கிறது.
பல நூறண்டுகளாக மொட்டையாக நின்ற கோபுர அடிப்பகுதியின்மேல் தனது 85வது வயதில் பல போரட்டங்களுக்கிடையே 13 தளங்களுடன் ராஜகோபுரமாக எழுப்பிய சாதனையைச் சில ஆண்டுகளுக்கு முன் நமக்குக் காட்டியவர் ஜீயர் ஶ்ரீமத் அழகிய சிங்கர்.
ஆணையரிடமிருந்து அழைப்பு வருகிறது. “எப்படி இதைச்சாதித்தீர்கள்? என்ற நம் கேள்விக்கு “எல்லாம் அரங்கனின் ஆசி” என்ற அவரின் ஒற்றை வரி பதிலில் திருப்தியடையாமல் நாம் எழுப்பிய பல கேள்விகளுக்கு மிகப்பொறுமையாகப் பதில் சொன்னார். திரு ஜெயராமன். “இந்தக் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் திரு வேணு சீனிவாசன்*20. அவர் பொறுப்பேற்றபின் தான் இந்தப் பணிகள் தொடங்கபட்டன. முதலில் கோவிலைச் சுத்தம் செய்து சீராக்குவது தான் திட்டம். ஆனால் சில மண்டபங்களில் ஆகமவிதிகளின் படி தூண்களின் உயரத்துக்கும் விதானத்துக்கு ஏற்பத்தரைத்தளங்கள் இல்லையென உணர்ந்தபோதுதான் கிழ்பாகங்கள் புதையுண்டு போயிருக்குமோ? எனச் சந்தேகம் எழுந்தது. தொல்பொருள் ஆய்வாளார்களின் உதவியோடு பணியைத்துவக்கினோம். பல இடங்களில் 10 அடிக்கும் மேல் மண்மேடிட்டிருப்பது தெரிந்தது. அதை அப்புறப்படுத்தவது என்பது சவால். எங்கே என்ன இருக்கிறது என்றே தெரியாத நிலையில் சிற்பங்கள் பாழாகிவிடாமல் அதைச் கவனமாகச் செய்ய வேண்டியிருந்தது. அகற்றபட்ட மண் 60 டன்களுக்கும் மேல். கோவிலின் பூஜைபணிகள் பாதிக்கமல் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் சிறிய லாரிகளில் இரவு நேரங்களில் அகற்றினோம். சில பிரச்சனைகளும் எழுந்தன” என்கிறார்**19.

இந்தக்கோவிலின் நிர்வாகம் ஒரு வினோதமான கட்டமைப்பில் இருக்கிறது. அறநிலைத்துறை வசம் கோவில் இருந்தாலும் ஆகம விஷயங்கள் பல பரம்பரையாகத் தொடரும் குடுமபத்தினரிடமே இருக்கிறது. ஸ்தலத்தார் என்றழைக்கப்படும் அவர்கள் “காலங்காலமாக இருப்பதை எல்லாம் ஏன் மாற்றுகிறீர்கள்?” என இந்த மாறுதல்களை எதிர்த்திருக்கிறார்கள். வழக்குகள் போட்டிருக்கிறார்கள். “அசைக்கவே முடியாமல் துருப்பிடித்த கீல்களுடன் இருந்த கதவுகளை மாற்றியபோது பாரம்பரிய கதவுகளை விற்றுவிட்டோம் எனப் புகார் செய்தார்கள். அவர்களில் பலர் இன்றைய நிலையைப் பார்த்தபின் பாராட்டுகிறார்கள். இன்னும் சில தீவிர பழமை வாதிகள் தொடர்கிறார்கள் வழக்குகளும் இருக்கின்றன. அவற்றை அரங்கன் பார்த்துக்கொள்வான்” என்கிறார்

இந்தப் பிராஜக்கெட்டை செய்தது தொழிலதிபர்*20 திரு வேணு சீனுவாசனின் நிறுவனங்கள். அதன் அதிகாரிகளும்.பொறியிலாளர்களும் இரவு பகலாகப் பணிசெய்தார்கள். பலகட்டங்களில் அவரே பார்வையிட்டார். பல கோடிகள் செலவான இந்தத் திட்டத்தில் பெரும்பகுதி அவருடைய நன்கொடை என்கிறார்.திரு ஜெயராமன். தென்மாவட்டத்தைச்சேர்ந்த இவர் சட்டம்படித்தபின் தமிழக அரசுப்பணியில் தணிக்கைத்துறையில் சேர்ந்தவர். தான் அறநிலைததுறைக்கு மாறியபோது ஒரு கோவிலில் இத்தனை விஷயங்கள் இருப்பது தனக்கு தெரியாது என்கிறார். “செய்யும் தொழிலே தெய்வம்” என்கிறார் பட்டுக்கோட்டையார். இவர் தெய்வங்களைக் காக்கும் தொழிலைத் திறனுடனும் செய்நேர்த்தியுடனும் செய்கிறார்.
இந்த மனிதர் அறநிலைத்துறையில் மாநில அளவில் உயர் பதவிபெற்றால் தமிழக கோவில்களுக்கும் பக்தர்களுக்கும் நல்லது என்ற எண்ணம் எழுகிறது
.
ஓளி மங்கிய மாலை இரவாக மலர்கிறது. விடைபெற்றுக் கிளம்புகிறோம். ‘ஒரு மனிதன் செய்யும் பெரிய சாதனைகளுக்குக் காரணமாக இருப்பது அவனுக்குள் இருக்கும் தெய்வ சக்திதான்’ என்கிறது உபநிஷத்.
அத்தகைய மனிதர்களான திரு வேணு சீனிவாசன், ஜெயராமன் போன்றவர்களை இந்தக்கோவில் பெற்றிருப்பது அரங்கனின் திருவுள்ளம்.

கல்கி திபாவளி மலரில்(2017) எழுதியது

15/2/16

இசை அரசியின் ஏழு ஸ்வரங்கள்
தமிழ் இந்து 2016 பொங்கல் மலரில் வெளியாகியிருக்கும்  எனது கட்டுரை.


அவர் பெயரைக்கேட்டவுடனேயே மகிழ்ச்சியைச் சொல்லும் பளிச்சென்ற ஒரு முகமும் இனிய குரலும் மனதில் மின்னும் அளவிற்குத் தன் இசையால் எண்ணற்றவர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் எம்,எஸ். இசையோடு பிறந்து, இசையோடு வளர்ந்து இசையில் புதிய உயரங்களைத் தொட்ட அவரது இசை ஒரு சகாப்தம். மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் ரசிகர்கள் போற்றிப் பாராட்டும் இடத்தில் இருக்கும் இந்தக் கலைஞர் கடந்துவந்த பாதை ரோஜாமலர்களால் மட்டும் நிறைந்தது அல்ல. என்பதையும், முட்களும், தடைகளும் கொண்டிருந்தது என்பதையும் அவரது வாழ்க்கை கதை நமக்குச்சொல்லுகிறது. பலர் நடந்து பழக்கமான பாதையிலிருந்து விலகித் துணிவுடன் அவர் முதலில் நடந்து அமைத்த புதிய பாதையில்தான் இன்று இசையுலகில் பலர் எளிதாகப் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள்.
10வயதில் துவங்கி 77 ஆண்டுகள் தொடர்ந்த நீண்ட இசைப்பயணம் இவருடையது. இது ஒரு உலகச் சாதனை. பல இசைக்கலைஞர்களால் இன்று தெய்வத்துக்கு நிகராகப் போற்றப்படும் இந்தப் பெண்மணியின் இத்தகைய வெற்றிக்குக் காரணம், இவருக்கு வாய்த்திருந்த தெய்வீக குரலா, எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றலா, இசைஞானமா, முன்னணியிலிருக்க இவரது கணவர் செய்த தொடர்ந்து மார்கெட்டிங்கா என்பதை இவரது வாழ்க்கை பாதையுடன் சென்று ஆராய முற்பட்டபோது, இவற்றையெல்லாம் தாண்டி சில விஷயங்கள் புலப்படுகின்றன.
இவர் இசை உலகில் காலடி எடுத்துவைத்த காலத்தைச் சற்று உற்று நோக்குவோம். இசைக் கவிதை, இலக்கியம், ஏன் கல்வி கூட ஆண்களுக்கு மட்டுமே உரிய ஏக போக சாம்ராஜ்யமாக இருந்த காலம் அது. பெண் மேடையில் பாடும் பாடகியாக இருந்தால் குடும்பப்பெண்ணாக இருக்க முடியாது என நம்பப்பட்ட காலம். ”கானல்வரி கவிதை” புனைந்த நடனக்காரி மாதவி காலத்திலிருந்து தொடர்ந்த பாரம்பரியம் அது. இசைத்துறைக்கு வந்த பெண்களைப் பற்றிய சமூக மதிப்பீடுகள் மிக மோசமானதாக இருந்த காலம். இந்தக் காலகட்டத்தில் தான் மதுரை நகரில் வாழ்ந்த வீணைக் கலைஞரான எம்.எஸ்ஸின் தாய் சண்முகவடிவு தன் மகளின் குரல் வளத்தைக் கண்டுணர்ந்து அவரை ஒரு இசைக்கலைஞராக்கமுடிவு செய்கிறார். மகிழ்ச்சியில்லாத போராட்டமான அவரது வாழ்க்கையிலும் இதைச் சவாலாக ஏற்று வெற்றிகரமாகச் செய்கிறார் அந்தத் தாய். தேவதாசி குடும்பங்களுக்கென்று ஒரு தனி இசைப்பராம்பரியம்/ பாணி உண்டு. அந்தப் பாணி இசையில்லாமல் சாஸ்திரியமான கர்நாடக இசையை மேடைகளில் பாடுமளவிற்கு மகளுக்கு முறையாக குரு மூலம் கற்பிக்கிறார். மிகுந்த ஆர்வத்துடன் இசை கற்றகொண்ட அந்தசிறுபெண் பாடி வெளிவந்த முதல் இசைதட்டு பெரும் வெற்றியை அடைகிறது, தொடர்ந்து அம்மாவுடன் மேடையில் பாடத்துவங்கிய அந்தப் பெண் ஒரு கட்டத்தில் இசை தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரம் என்பதை உணர்ந்து அதில் தான் சிறப்பாக வளரவேண்டும் எனத் துடிக்கிறார், ஆனால் தங்கள் குல வழக்கப்படி இசையை நன்கு அறிந்த கலையை ஆதரிக்கும் ஒரு பெரிய மனிதரின் ஆதரவில் வசதிகளுடன் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையுடன் தன் மகள் இசையைத் தொடரவேண்டும் எனத் திட்டமிடுகிறார் சண்முகவடிவு.. அதுவரை அம்மாவின் சொல்லே வேதம் என வளர்ந்த சுப்புலட்சுமி இந்தக் கட்டத்தில் அம்மாவின் வார்த்தைகளை ஏற்க மறுக்கிறார். அந்த இளம்வயதிலேயே ”நான் தேவதாசி வாழ்க்கை முறையை ஏற்க மாட்டேன். முறையாக ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தலைவியாகத்தான் வாழ்வேன்” எனத் துணிவுடன் சொல்லுகிறார் சுப்புலட்சுமி. இந்த முடிவைச்சொன்ன அந்தப் பெண் பள்ளி சென்று படித்தவரில்லை, நாகரிக சமூகத்தின் முகங்களைச் சந்திக்க வாய்ப்பில்லாத, வசதிகள்அதிகமில்லாத சூழலில் வளர்ந்தவர்.
பின்னாளில் இசையரசியாகப் போற்றப்பட்ட எம்.எஸ் இளமைக்காலத்தில் கொண்டிருந்த அசைக்கமுடியாத தன்னம்பிக்கையைக் காட்டும் இந்தச் செயல் அந்தக் குலத்தில் பின்னாளில் எழுந்த சமூக மாற்றங்களுக்கு விழுந்த ஒரு வித்து என்பதைச் சரியான முறையில் வரலாற்றாளர்கள் பதிவு செய்யவில்லை. இந்தத் தன்னம்பிக்கையும் துணிவும் அவருடைய நீண்ட இசைப்பயணத்தில் பல வெற்றிகளைச் சாதிக்க உதவியிருக்கிறது
17 வயதில் சுப்புலட்சுமி சென்னை சங்கீத வித்வ சபையில்(மியூசிக் அக்கடமி) செய்த முதல் கச்சேரி நகரமே பேசும் கச்சேரியாகி பலரால் பாராட்டப்படுகிறது. இதனால் மகளின் இசைக்கச்சேரிகளுக்குச் சென்னையில் வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்குக்கும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு இடம்பெயர்கிறது குடும்பம். இசைக்கச்சேரிகளுக்கான வாய்ப்புகளுடன் அந்த அழகிய பெண்ணுக்கு எதிர்பாராதவிதமாக அவர் விரும்பிய குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பும் கிடைத்தது ஆனந்தவிகடன் பத்திரிகைக்காகச் சந்தித்த துடிப்பான அழகான இளைஞர் சதாசிவத்தால் ஈர்க்கப்படுகிறார்.தொடர்ந்த சந்திப்புகளிலும் ,பயணங்களிலும் காதல் கனிகிறது. நமக்குக் குடும்ப வாழ்க்கையை அளிக்க ஏற்ற நல்ல மனிதர் இவர் என்ற எண்ணம் சுப்புலட்சுமிக்கு மிக அழுத்தமாக எழுகிறது. ஆனால் அவருடைய அன்பான அம்மா இந்தக் காதலை ஏற்கவில்லை. அதற்கு முக்கியமான காரணம் மகள் விரும்பும் சதாசிவம் ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர். அதனால் அவர் சுப்புலட்சுமியை துணைவியாக மட்டும்தான் ஏற்பார் திருமணம் செய்து கொள்ளமாட்டார் எனத் தீர்மானமாக அவர் நம்பினார். ஏன் தன் பெண் இப்படி ஒரு வாழ்க்கையைத் தேடிப்போகிறார் என்ற சஞ்சலத்துடன் மகளின் காதலை மறுக்கிறார். தான் தன் வாழ்க்கையில் அதிக வருமானமில்லாத ஒரு சதாரணக் குடும்பஸ்தருக்குத் துணையாகிப்போய்க் கஷ்டப்பட்டதைப்போலத் தன் மகளுக்கும் நேர்ந்துவிடக்கூடாது எனத் துடித்தது அந்தத் தாய்யுள்ளம். ஆனால் சுப்புலட்சுமி தன்னை இரண்டாம் தாராமாகச் சதாசிவம் திருமணம் செய்துகொள்வார் என்பதில் உறுதியாக இருந்தார். அவருடன் காதலும், அன்பாக வளர்த்த அம்மாவுடன் சண்டைகளும் தொடர்ந்தது. இறுதியில் காதல் தாய்ப் பாசத்தை வென்றது. சுப்புலட்சுமி சதாசிவத்தின் குடும்பத்துடன் திருமணம் செய்து கொள்ளாமலே வாழத்துவங்கிறார். சண்முகவடிவு மனமுடைந்து மதுரை திரும்புகிறார். இந்தக் கட்டத்தில் சுப்புலட்சுமி எடுத்த முடிவு அவர் தான் நம்புவதைச் செயலாற்றக்கூடிய ஒரு மிகத்துணிச்சலான பெண் என்பதைப் புரியவைக்கிறது. இரண்டாம்தாரம் என்பது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட காலம் அது. ஆனால் அந்தப்பெண் வேறு சமூகத்தினராக இருந்தால் மனைவியாக மதிக்கப்படாத காலம் அம்மாதிரியான ஒரு காலகட்டத்தில் பிராமணர்கள் மட்டுமே வசிக்கும் அக்கிரகாரத்தில் முதல் மனைவி குழந்தைகளுடன் இருக்கும் ஒரு குடும்பத்தில் தன் வாழ்க்கையைத் துவக்கிய இவரது துணிச்சல், தன் காதலர் நிச்சியம் தன்னைத் திருமணம் செய்துகொள்வார் என்று அவர் மீது கொண்ட அதீத நம்பிக்கை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. எதிர்பார்த்தபடி சதாசிவம் உடனடியாக அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை
அதனால் ஏமாற்றமடைந்து மனமுடைந்து அம்மாவிடம் திரும்பவில்லை சுப்புலட்சுமி. தான் நம்பியவர் நிச்சியம் வாழ்வுதருவார் எனக் காலம் கனிந்துவரும் வரை பொறுமையுடன், நம்பிக்கையுடன் காத்திருந்தார். பொறுமையுடன் நம்பிக்கையுடன் இருந்தால் நினைத்த சாதிக்க முடியும் என்ற இவருடைய இந்தக் குணம் பின்னாளில் பல கட்டங்களில் வெளிப்பட்டிருக்கிறது
புதிய வாழ்கையில் தான்விரும்பியபடி ஒரு பிராமணகுடும்பத்தலைவியாகத் தன்னைச் சுவீகரித்துக்கொண்டு, நடை, உடை, பாவனை அனைத்தையும் மாற்றிக்கொண்டு சதாசிவத்தின் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்திய சுப்புலட்சுமிக்கு அந்தக் காலகட்டத்தில் தன்வாழ்க்கையின் அடிநாதமான இசை கூட இரண்டாம்பட்சமாகத்தான் இருந்திருக்கிறது. அந்த அளவுக்குக் குடும்ப வாழ்க்கையில் ஆர்வம். சதாசிவத்தின் முதல் மனைவியையின் குழந்தைகளின் அளவற்ற பாசம், அவரது குடும்ப மூத்த உறுப்பினர்களிடம் மீது காட்டிய மரியாதை எல்லாம் இவரது குல பின்னணியை மறக்கச்செய்து மற்றவர்களை நேசிக்கச் செய்திருக்கிறது. தேசபக்தராகத் தன் வாழ்க்கைதுவக்கிய சதாசிவம் நாட்டின் விடுதலைக்குப் பின்னர் தான் அந்தஸ்தும் செல்வாக்கும் கொண்ட ஒரு வாழ்க்கையை அடையவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். விகடனிலிருந்து விலகிய ஆசிரியர் கலகியுடன் இணைந்து புதிய பத்திரிகையைத் துவக்க திட்டமிடுகிறார். தமிழ் சினிமா புதிய வியாபார எல்லைகளை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்த சமயம் அது. தன் முயற்சிகளுக்கு நிதி ஆதாரம் தேட சுப்புலட்சுமியின் நடிப்பில் ஒரு சினிமா எடுக்கத் தீர்மானிக்கிறார். அப்போது சினிமாவில் நடித்துப் பணமும் புகழும் பெறுவது என்பது பல தேவதாசிகுடும்பத்தினரின் கனவாகவே இருந்தது. ஆனால் அதில் நாட்டமில்லாமல் விலகி சந்தோஷமான குடும்பப்பெண்ணாக வாழ்க்கையைத் துவக்கியிருந்த சுப்புலட்சுமிக்கு இந்த எண்ணம் பிடிக்கவில்லை. ஆர்வம் அதிகம் காட்டாமல் தவிர்க்க முயற்சிக்கிறார். ஆனால் சதாசிவம் தீர்மானமாகவிருக்கிறார். இறுதியில் காதல் கணவரின் கட்டளையை மீற முடியாமல் ஏற்கிறார். மீரா திரைப்படம் உருவாகிறது. படம் மீராவின் கதையாக இருந்ததால் கிடைத்த நல் வாய்ப்பைப் பயன்படுத்தித் தன் இசைத்திறமை முழுவதையும் நடிப்போடு வெளிப்படுத்தினார். தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தான் செய்ய வேண்டியதை மிகுந்த சிரத்தையுடன் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு மிகச்சிறப்பாகச் செய்திருந்தார். ஒரே காரணம் அது தன் அன்பு கணவரின் கட்டளை என்பது
தான். இதைப்போல் இறுதிநாள் வரை எந்த விஷயத்திலும் தன் கணவர் சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார். இதைப் பதிபக்தி என்ற சின்னச் சொல்லில் மட்டும் அடக்கிவிடமுடியாது. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் செயலும் சதாசிவத்தினால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சுப்புலட்சுமி அதைத் தான் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதை பெருமிதத்துடன் சொல்லியிருக்கிறார். ஒரு பெண் கணவனின் சொற்படி நடப்பது சதாரண விஷயம் என்றாலும் பல கலைஞர்களின் வாழ்க்கையில் நெருடலை ஏற்படுத்திய விஷயம் இது. கலைஞர்களின் வாழக்கையில் வெற்றிகள் குவியும்போது குடும்பத்தினரின் குறுக்கீடுகள் விபரீதமான விளைவுகள் ஏற்படுத்தியதை பார்த்திருக்கிறோம். கலைஞர் தன் கலையலக வாழ்க்கை அல்லது குடும்பம் என்று ஏதாவது ஒன்றை இழக்கும் நிலை உருவாகும். ஆனால் எம்.எஸ் இந்த சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்கவே இல்லை.
எதிர்பார்த்த படி மீரா படம் பெரிய வெற்றி. தலைநகர் டெல்லியில் பிரதமர் நேரு குடும்பத்தினர் உட்படப் பல தலைவர்கள் பங்கு கொண்ட முதல் காட்சியுடன் துவங்கிய அந்தப் படம் தேசம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிய ஒரு படம். இன்றைய சினிமா பாஷையில் சொல்லவேண்டுமானால் அருமை டூப்பர் சக்ஸஸ். தொடர்ந்த வந்த வாய்ப்புகளை அவர் பயன்படுத்திகொண்டிருப்பாரேயானல் திரை வானில் ஒரு நட்சத்திரமாக மின்னியிருப்பார் இந்திய இசையுலகம் எம்.எஸ்சை இழந்திருக்கும். ஆனால் தன் முதல் காதலான இசையின் பல பரிமாணங்களைக் கற்று அதில் தனியிடம் பெறவேண்டும் என்ற தன் எண்ணத்தில் உறுதியாக இருந்த எம்.எஸ் அந்த வாய்ப்புகளை மறுத்தார். பணமும் புகழும் எளிதில் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைவிடத் தான் நேசித்த விஷயத்தில் சாதிப்பதற்காகக் காத்திருப்பதையே விரும்பினார். பலருக்குக் கனவாகவே இருந்த கனவு தொழிற்சாலையின் அழைப்புத் தன்னைத் தேடிவந்தபோதும் அதை ஒதுக்குவதற்கு அந்த வயதில் ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். அத்தகைய துணிச்சலும் அதன் விளைவுகளைச் சந்திக்கும் மனோ பலமும் பெற்றவராக இருந்திருக்கிறார் இந்தப் பெண்மணி.
,சதாசிவம் சுப்புலட்சுமி தம்பதியின் வாழக்கையை ஆழ்ந்து நோக்கும் போது புரியம் மற்றொரு விஷயம் இருவரும் தங்கள் பலங்களை உணர்ந்திருக்கிறார்கள்.பரஸ்பரம் அதைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழக்கையைச் சிறப்பித்திருக்கிறார்கள் என்பது. அன்பு மனைவிக்குச் சினிமாவில் தொடர விருப்பமில்லை இசைத்துறையில் தான் சாதிக்க விரும்புகிறார் என்பதை உணர்ந்த சதாசிவம் அதற்கானவற்றைச் செய்கிறார். ஹிந்தி மீராவால் நாடு முழுவதும் புகழ்பெற்றிருந்த ஒரு நடிகையின் இசைக்கலைஞர் என்ற மற்றொரு முகத்தை அந்தப் புகழின் வாயிலாகவே அறிமுகப்படுத்துகிறார் மார்க்கெட்டிங் ஸ்ட்டிரஜிஸ்ட் சதாசிவம். மிகக்குறுகிய காலத்திலேயே எம்.எஸ் என்பது நாடுமுழுவதும் அறிந்த பெயராகிறது. அப்போது தென்னிந்திய கர்நாடக சங்கீத கலைஞர்கள் பின்பற்றிய பாணியான வெறும் சாஸ்த்திரிய சங்கீதம் என்ற நிலையை மாற்றி அந்தந்த பிரதேசங்களின் புகழ்பெற்றஆசிரியர்களின் பாடல்கள்,பஜன்கள் போன்றவற்றைக் கச்சேரியில் பாடுகிறார். இந்தப் பாணியினால் தங்கள் மொழிபாடல்களை ஒரு தென்னிந்தியப் பெண்ணின் வசீகரமான குரலில் கேட்டு மயங்கினார்கள் ரசிகர்கள். இசையில் எம்.எஸ் தனியிடம் பெற இது பெரிதும் உதவிற்று. இந்த வெற்றிக்கு முழுக்காரணம் சதாசிவம் தான். எம்.எஸ்ஸின் திறமையை நன்கு புரிந்திருந்திருந்த இவர் அதில் எங்கு எதை எப்படி அழகாகக் காட்ட முடியும் என்பதைச் சரியாகக் கணித்திருந்தார். ஒவ்வொரு கச்சேரியையும் அந்தந்த இடத்துக்கேற்ப, முன்னணி ரசிகர்களைக் கவரும் வகையில் திட்டமிட்டு அமைப்பார். இன்று பல இசைக்கலைஞர்கள் பின்பற்றும் இந்த முறைக்கு முன்னோடி இவர்தான். ”ஒவ்வொரு கச்சேரியிலும் நான் என்றபாடவேண்டும், எந்த வரிசையில் பாடவேண்டும் என்பதை மாமாதான் முடிவு செய்வார். எதையும் மாற்றமுடியாது” என்று எம்,எஸ் சொல்லியிருக்கிறார். நாடு முழுவதும் தன் கந்தர்வகுரலால் இசைஞானத்தால் புகழ்பெற்ற எம்.எஸ் பிரதமரால் இசைஅரசி என்று புகழப்படும் அளவிற்குப் புதிய உயரங்களைத் தொட்ட அவரை அடுத்த கட்டமாக சர்வதேச இசை அரங்குகளை நோக்கி நகர்த்த சதாசிவம் முயற்சித்து வெற்றிஅடைகிறார். இங்கிலாந்தில் எடின்பர்க் இசைவிழா, எகித்து அரசின் அழைப்பு, ஐரோப்பிய அமெரிக்கப்பயணங்கள். என இசைப் பயணம் தொடர்கிறது.
  
புகழின் உச்சிக்குச் சென்ற பின்னர் ஒரு கலைஞர் அவர் சார்ந்த கலையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டுக் கௌரவிக்கப் படுவார். எம் எஸ் ஸின் விஷயத்தில் அவர் தமிழகத்தில், தென் இந்தியாவில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் இசையின் அடையாளமாக அறியப்பட்டார். அதன் முக்கியக் காரணம் அவர் பக்தி இசைக்குக் கொடுத்த முக்கியத்துவம். பல இந்திய மொழிகளில் குறைந்த பட்சம் ஒரு பக்தி பாடலாவது பாடியிருப்பவர் அவர். கண் மூடிக் கேட்பவர்களுக்கு அவர் பாடலில் துதி செய்யும் கடவுள் காட்சி தரும் அளவுக்குப் பக்தியும் இசையும் இழைந்தோடும் குரல் அவருடையது. இசை ஆன்மீகத்தின் ஒரு வடிவம் என்பதை உணர்ந்த அவர் 80களில் நிறையப் பக்தி பாடல்கள்தான் பாடியிருக்கிறார். இந்தக் கட்டத்தில் அவர் ஆன்மீகத்தின் பக்கம் அதிகம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.
1954ல் சதாசிவம் மனசஞ்சலத்தில் இருந்தார். அன்பு மனைவி எம்.எஸ் உடல் நிலை பாதிக்கப் பட்டிருந்தது. மகள் ராதாவின் திருமணம் நிச்சியம் ஆவது தாமதமாகிக் கொண்டிருந்தது. அந்தக் கட்டத்தில் காஞ்சி பெரியவாளை தரிசனம் பண்ணுங்கோ எல்லாம் சரியாகும் என யோசனை சொன்னவர் சதாசிவத்தின் அருமை நண்பர் செம்மங்குடி. அதை ஏற்று இருவரும் காஞ்சி பெரியவர் முகாமிட்டிருந்த தலத்தில் போய்ச் சந்தித்தனர். அந்த முதல் சந்திப்பிலேயே எம்.எஸ் பெரியவரின் காந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்தார். இவர் தான் உன் ஆன்மீக குரு என்று உள்ளே ஒரு குரல் ஒலித்தது.. அவர்களைப் பக்தர்களாக ஏற்றுக்கொண்ட காஞ்சி முனிவரைக் கடவுளாகவே வழி பட்டனர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரைச் சந்தித்து அவர் முன்னிலையில் மணிக்கணக்கில் பக்தி பரவசத்தோடு பாடுவார். அதி தீவிர பக்தர்களாகிவிட்ட இந்தத் தம்பதியினர். எம்.எஸ். எந்தப் பணியைத் தொடங்கினாலும் குருவிடம் ஆசி பெறுவதையும் எந்த விஷயத்தின் வெற்றிகளையும் அவருக்குச் சமர்ப்பிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த ஆசிகள் எம்.எச்சின் இசைவாழ்க்கையின் தொடர்ந்த வெற்றிகளுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.
ஆன்மிக குருவிடம் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தைபோலவே தனக்கு இசையை, அதன் நுணுக்கங்களைக் கற்பித்த பல மூத்தவர் வித்துவான்களின் மீது அவர் பெருமதிப்புக் கொண்டிருந்தார். மத்தியபிரேதேச அரசு காளிதாஸ் சன்மான் என்ற விருதைப் பணமுடிப்போடு அளிக்க அழைத்தபோதும், திருப்பதி தேவஸ்தானம் ஆஸ்தான வித்துவான் கெளரவம் அளிக்க வந்தபோதும் தன் குருவிற்கு அளிக்கப்படாத விருது தனக்கு வேண்டாம் என மறுத்தார். தன்னுடைய அன்னைக்கு அடுத்தஸ்தானத்தில் குருவைப் போற்றியவர்.
உலகளவில் புகழ் பெற்று உச்சத்தைத் தொட்டாலும் எம்.எஸ் மிக எளிமையாக எவருடனும் பழகுபவராகவும் அன்பும் பாசமும் கொண்டவராகவும் இருந்தார். சங்கீதக்காரர்கள் மட்டுமில்லை சதாரண மக்கள் கூட ”நம்ப எம் எஸ்” என்று பெருமிதத்துடன் வணங்கும் நிலையை அடைந்தவர். இவர் அந்த நிலையை அடைய உதவியது அவரது தனித்தன்மை கொண்ட தெய்வீக குரல், ஆண்டவனின் அருள், முன்பிறவியில் அவர் செய்த புண்ணியம், சதாசிவத்தின் தனித்திறமையான மேல்மட்ட தொடர்புகள் எனப் பலவிதமாகப் பலரால் வர்ணிக்கப் பட்டாலும், உண்மையான அடிப்படையான காரணம் இவற்றையெல்லாம் தாண்டி அவர் தன் திறனை உணர்ந்த பின்னர் அதை வளர்த்துக்கொள்ள, செழுமைப்படுத்திக்கொள்ள அவர் மேற்கொண்ட கடினமான உண்மையான உழைப்பு தான், எப்போதும் தாம் கற்றது கையளவு மட்டுமே என்ற எண்ணத்தில் கற்றுக்கொள்வதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததுதான். இதை அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
மீரா சினிமாவில் நடிக்கப் போனபோது இந்திப் பாடல்களை எப்படி கவனமாகக் கற்றுக்கொண்டு பாடினாரோ அதைப்போல வாழ்நாள் முழுவதும் மாணவியாக இருந்து கற்றுக்கொண்டே இருந்திருக்கிறார். பெங்காலி பாடல்களை திலிப் குமார், ஹிந்தி பாடல்களைச் சித்தேஸ்வரி தேவி என அந்தந்தத் துறை வல்லுநர்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் கற்றுக்கொண்டவர்.
60 ஆண்டுகள் இசையே தன் உயிர் மூச்சாக வாழ்வே சங்கீதமாகவே வாழ்ந்த எம்.எஸ் அவர்கள் கிட்டதட்ட 2500 பாடல்களை மனப்பாடமாகத் தெரிந்துவைத்திருந்தார். எட்டு வயதில் எப்படித் தன் முதல் குருவிடம் மிககவனமாகப் பயின்றாரோ அதே கவனத்துடன், தன் 80 வது வயதிலும் புதிய பாடல்களை விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார்.
தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் மலையாளம், ஹிந்தி மராத்தி குஜராத்தி மொழிப்பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒரு ஆங்கிலப் பாடலும் பாடியிருக்கிறார்.. பள்ளிக்கூடம் சென்று முறையாகக் கல்விகற்றவர் இல்லை எம்.எஸ். ஆனால் ஒரு பாடலை சரியாகச் சிறப்பாகப் பாடவேண்டும் என்றால். அதன் மொழி, வார்த்தைகளின் சரியான அர்த்தம், அது அந்தப்பாடலில் கையாளப்பட்டிருக்கும் பாங்கு சரியான உச்சரிப்பு இவற்றை உணர்ந்து நன்றாகக் கற்றுக்கொண்ட பின் பல முறை சரிபார்த்துகொண்டபின்னர்தான் பாடுவார்.
பாடலை முதலில் தன் கைப்பட நோட்டில் எழுதிக்கொள்வார். எழுதி என்றால் வெறும் காப்பி எடுத்துக்கொள்ளவதில்லை. முதலில் பாடலின் மொழியில் பதம் பிரித்து இடைவெளியிட்டு எழுதி அதன் கீழ் தமிழில் அந்த வார்த்தைகளின் தமிழ் அர்த்தம் பின் அதன் கீழே ஒவ்வொரு வார்த்தையும் பாடலில் எப்படி உச்சரிக்கப்படவேண்டும் என்ற நொட்டேஷன் மாதிரியான குறிப்பு இப்படி ஒவ்வொரு பாடலையும் எழுதி பயிற்சி செய்திருக்கிறார். ஒவ்வொரு புதிய பாடலைக் கற்கும் போதும் இதைச் செய்திருக்கிறார். இவ்வளவு அருமையாகத்  குறிப்புக்கள் தயாரிக்கப் பட்டிருந்த போதும் ஒரு பாடலைக்கூட அவர் நோட்டுபுத்தகத்தைப் பார்த்துப் பாடியதில்லை. ஒரு முறை எழுதி மனப்பாடம் செய்துவிட்டால் இந்தக் குறிப்புகள் பாடும் போது அவர் மனக்கண் முன்னே வருமோ என்னவோ அப்படியே பாடுவார். தனக்கு அடுத்த தலைமுறை புத்தகம் பார்த்து பாடுவதைக் கண்டு வருந்தியிருக்கிறார். ஒரு பாடலை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளாமல் பார்த்துப் பாடினால் அந்தப் பாடலை எழுதியவரை அவமதிப்பதாகும் என்று சொல்லுவார்,
வார்த்தைகள் மனதில் இருந்து வராவிட்டால் பாடலில் எப்படி உணர்ச்சிகளை வெளிக்காட்டமுடியும் என்பது அவருடைய கேள்வி.
பாடல்களை மனப்பாடம் செய்வதோடு மட்டும் எம். எஸ் நிறுத்திக்கொள்வதில்லை. அதை வார்த்தைகளில் உச்சரிப்புத் திருத்தமாக இருக்கிறதா வார்த்தைகளுக்கு இடையில் சரியான இடைவெளியில் பாடுகிறரா என அந்தப் பாடல் சம்மந்தப்பட்ட வல்லுநர்களிடம் பாடி காட்டி ஒப்புதல் பெற்றபின்னரே மேடையில் பாடுவார். கம்பராமாயணப் பாடல்கள் என்றால் கம்பனில் கரைகண்ட நீதியரசர் பாடலை கேட்டு ஒப்புதல் தந்தபின்னர்தான் ரிக்கார்டிங். சம்ஸ்கிருத, தெலுங்கு கீர்த்தனைகளைச் சரியாகப் பாட வேண்டும் என்பதற்காக அந்த மொழியை முதலில் கற்றவர். அவரது சம்ஸ்கிருத உச்சரிப்பை காசிநகர பண்டிதர்களே வியந்து அருமையாக இருக்கிறது என்று பாராட்டியிருக்கிறார்கள்.இப்படி ’என்றென்றும் கற்கும் மாணவியாக’ இருந்ததால் தான் பலவாழ்நாள் சாதனைகளை இவரால் நிகழ்த்த முடிந்திருக்கிறது.
 “நெஞ்சக் கனகல் நெகிழ்ந்துருக…
பாடும்பணியே பணியாய் அருள்வாய்” என்று முருகனிடம் வேண்டுகிறார் அருணகிரிநாதர்.  அதை தன் வாழ்வில் இசைப்பணியை இறைப்பணியாகவே தன் வாழ்வில் நீண்டநாள் செய்தவர் எம்.எஸ்.
அவர் அமரான செய்திகேட்ட உடன் சென்னைக்கு வந்த அப்துல் கலாம் சமர்ப்பித்த தனது அஞ்சலி கவிதையை
 ”யாழிசையில் பிறந்த ஏழிசை கீதம் நீ” எனத் துவக்குகிறார்.
தனக்குத் தெய்வம் தந்த இசையின் ஸ்வரங்களோடு தன் வாழ்க்கைப்பாடலை 
ஆர்வம்,நம்பிக்கை,கடினஉழைப்பு,புலமை பக்தி,ஈதல்.எளிமை 
என்ற எழுஸ்வரங்களுடன்  
அமைத்துக்கொண்டு வாழ்ந்து காட்டியவர் எம் எஸ்