அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28/4/19






























எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும், வரலாற்று ஆய்வாளருமான எஸ்.முத்தையா அண்மையில் அவரது 89ஆம் வயதில் காலமானார்  


சென்னையின்  காதலர்




ஹிந்து நாளிதழலில்  ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளிவரும் ஒரு தொடர் பகுதி  “மெட்ராஸ் மிஸ்லேனி”. சென்னை நகரின் மிகப் பழைமையான  கட்டிடங்கள்,  நிகழ்வுகள், மனிதர்கள் புத்தகங்கள் போன்ற பாரம்பரியச் சின்னங்களைப்பற்றிய  சுவராஸ்யமான கட்டுரைகளை நகைச்சுவையோடும் அரிய புகைப்படங்களுடனும் எழுதிவந்தவர் திரு. எஸ் முத்தையா. 1999 ஆம் ஆண்டு துவக்கிய இந்தச்  செய்திகட்டுரைகளின் தொடர்  அண்மைக்காலம் வரை  தொடர்ந்தது   ஒருவாரம் கூட இடைவெளியில்லாமல் 20 ஆண்டுகளுக்குமேலாகத்  தொடர்ந்து ஒரேவிஷயத்தை பற்றித் தனிப்பகுதி எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர் உலகிலேயே இவராகத்தான் இருக்க முடியும்.


இவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு  “பீப்பிள்-பிளேஸஸ்-பாட்பூரி என்ற பெயரில்  புத்தகமாகவே வெளிவந்திருக்கிறது.  சில ஆண்டுகளுக்கு முன்.. மேற்கு வங்க முன்னாள் கவர்னர் திரு கோபாலகிருஷ்ண காந்தி  இந்தப்புத்தகத்தை வெளியிட்டபோது   “வாரம் தோறும் தொடர்ந்து எழுதும் சில பத்திரிகையாளர்கள் தினசரியில் இடத்தை நிரப்ப உதவுவார்கள். சில பத்திரிகையாளர்கள் தங்கள்  எழுதும் பகுதியினால் தினசரிக்குப் பெருமை சேர்ப்பார்கள். முத்தையா இரண்டாவது ரகம். சென்னையின் பெருமைமிக்க பழைய கட்டிடங்களின் மீது முத்தையா கொண்டிருக்கும் அலாதி காதலினால், அவர் தொடர்ந்து அதுபற்றி எழுதி வந்ததால்தான் பல கட்டிடங்கள் இடிக்கப்படாமல் காப்பற்றப்பட்டிருக்கின்றன. அதற்குச் சென்னை நகரம் அவருக்கு  நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது” “. என்றார்



திரு முத்தையாவின் கட்டுரைகள் வெளியான உடனேயே  அது தொடர்பான பிறசெய்திகள், சமந்தபட்டவர்களின் வாரிசுகள் இப்போது இருக்குமிடம், எழுதியதிலிருக்கும் தவறு, புதிய தகவல்கள் பற்றி வாசகர்களிடமிருந்து  வெளிநாட்டு வாசகர்களிடமிருந்தும்  வாரந்தவறாமல் வரும்   தகவல்களையும் வெளியிடுவதற்காகவே “தபால்காரர் கதவைத் தட்டியபோது” என்று தன் பத்தியில் ஒரு  பகுதியைச் சேர்த்தார். இப்படி தான்   எழுதிய   விஷயத்தையே முழுமையாக்கியதனால் இவரின் இந்தப் பகுதி ஹிந்து நாளிதழில் வாசகர்களிடையே  பெறும் வரவேற்பை  பெற்றிருந்தது.  


“நீண்ட ஆராய்ச்சிகளுக்குப்பின்னர்,  ஆனால் அந்த ஆராயச்சிகளின் வாசனை சிறிதுமில்லாமல், சிக்கனமானவார்த்தைகளில், அழகான ஆங்கிலத்தில் சுவராஸ்யமான  கட்டுரைகளை ஒவ்வொரு வாரமும் சரியான நேரத்திற்கு அனுப்பிவைப்பவர் முத்தையா”  என்கிறார் ஹிந்து பதிப்புகளின் குழும தலைவர்   திரு என்.  ராம்.


 அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருந்த  இந்த எழுத்தாளாரின் ஆய்வுகளினால் தான் சென்னை நகரம் பிறந்த தினம் கண்டுபிடிக்கப்பட்டு  இப்போது அந்த நாள் மெட்ராஸ்டே  என்று ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில்  பெரும்   விழாவாக   கொண்டாடப்படுகிறது.  ஒரு நாள் விழாவாகத் துவங்கிய இது இப்போது பல வடிவங்களில் நகரின் பலபகுதிகளில் மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 


செட்டிநாட்டின் பள்ளத்தூர் கிராமத்தில் பிறந்த முத்தையா மிகச் சிறுவயதிலியே இலங்கை சென்று அங்கு வளர்ந்தவர். அங்கு பத்திரிகையாளராக வாழ்க்கையை துவக்கி டைம்ஸ் ஆப் சிலோன் என்ற நாளிதழில் முதல் நிலை ஆசிரியராகத் தன் 38 வயதில் உயந்தவர். பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக ஒரு சிங்களரே இருக்க முடியும் என்பது விதி என்பதால்  இவரை ஆசிரியராக்குமுன்  இவருக்குக் கெளரவக் குடிமகன் உரிமைக்குச் சிபார்சு செய்யபட்டிருந்தது. ஆனால் அப்போது நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தால் அது கிடைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் இரண்டாம் நிலை ஆசிரியராக இருக்க விரும்பாத முத்தையா மனம் வெறுத்து போய்ச் சென்னை திரும்பிப்  பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளில்  வேலைக்காக முயற்சித்துகொண்டிருந்தார். கிடைத்தது டி டி கே குழுமத்தின் மேப்புகள் அச்சிடும் புதிய நிறுவனத்தின் பொறுப்பு. அதன் ஒரு பதிப்பாகச்  சென்னையைப் பற்றிய புத்தகம் தயாரிக்கத் துவங்கியதில் ஏற்பட்ட ஆர்வத்தில்  இவருக்கு இந்த நகரத்தின் மீது பிறந்த காதல் வாழ்நாள் முழுவதும்  தொடர்ந்தது.  



சென்னைக்கு அடுத்து இவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த விஷயம் செட்டிநாட்டு கலாசாரம். அங்குள்ள கட்டிடங்களின் வரலாறு குறித்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். திரு முத்தையாவின்    பாரம்பரியச் சின்னங்களின் பாதுகாப்பு பணிக்காக  இங்கிலாந்து  அரசு  அரசியின்  MBE  விருது அளித்துக் கெளரவித்திருக்கிறது.


“தொடர்ந்து  வேலைகள் செய்து கொண்டிருப்பதால்  வாழ்க்கை இனிமையாக இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டிருந்த இந்த எழுத்தாளர் இன்றைய  ஈமெயில், வாட்ஸப் யுகத்திலும் தன் கட்டுரைகளைத் தானே டைப்ரைட்டரில் , டைப் செய்துதான் அனுப்புவார். சரளமாக தமிழ் பேசிய     இவருக்குத் தமிழ் எழுதத்தெரியாது என்பது ஒர் ஆச்சரியம்.


மதுரையைப் போல்,தஞ்சையைப் போல் இல்லை என்றாலும் இந்தச் சென்னைக்கும் ஒரு வரலாறு உண்டு என்பதைத் தனது எழுத்துகள் மூலம் அடையாளம்  காட்டிய இவரும் இன்று   சென்னை வரலாற்றின்  ஒரு  அழியாத அடையாளமாகியிருக்கிறார். 
(கல்கி 5/5/19)












8/11/17

எழுத்து மேலாண்மையின் அடையாளம் இவர்


 அஞ்சலி 



ஒரு இலக்கிய கூட்டத்தில் பேசும்போது "நல்ல படைப்புகளைப் படைக்க ஒரு எழுத்தாளன் பள்ளியிலோ கல்லூரியிலோ போய்ப் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை, தன்னை, தான் வாழும் சூழலையும் சமுத்த்தையும் கூர்ந்து கவனித்து அதைத் துணிவுடன் சொல்லும் திறன் இருந்தால் போதும்" என்றார் திரு ஜெயகாந்தன்.
இதை அப்படியே செய்து காட்டியவர் தி மேலாண்மைப்பொன்னுசாமி. விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த பொன்னுசாமி வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.
இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். தந்தைக்கு உதவ ஒரு மளிகைகடையில் வேலி செய்தவர் பின்னாளில் தானே கிராமத்தில் ஒரு சிறிய கடையைத்துவக்கினார்.. அந்தச் சிறிய மளிகைக் கடையை நடத்துவதே இன்றளவும் இவரது பிரதான தொழிலாக இருந்தது கடையின் முதலாளியாக இருந்தாலும். இட து சாரி கொள்கைகளினால் ஈர்க்கபட்டவர்.
5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் கவரப்பட்டு எழுத்துவங்கினார். அதனாலோ என்னவோ இவரது படைப்புகளில் பலவற்றில் இடது சாரி சிந்தனைகளின் தாக்கம் அதிகம் இருக்கும்
கரிசல் பூமி தந்த சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் எழுதுவதில் தலை சிறந்தவர். சிறுகதை செம்மல் என அழைக்கப்படும் பொன்னுச்சாமி பல விருதுகளைத் தனது படைப்புகளுக்காகப்பெற்றவர். இவரது மின்சரப் பூ என்ற சிறுகதை தொகுப்புக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கேந்திரிய சாஹித்திய அகதமி விருதும் பரிசும் பெற்றது.

உழைப்பவர்களுக்காக ஒரு உறுதியான அமைப்பு இருக்க வேண்டும் என்ற சித்தாந்தைச் சொல்லும் மார்க்ஸிஸ்ட் கனம்னியூஸ்ட் கட்சியில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கென்றும் ஒரு சங்கம் அவசியம் எனக் கருதி அதை  நிறுவியவர்களில் இவரும் ஒருவர். இறுதி நாள்வரை அதன் செயலாளாரக இருந்தவர்.
மேலாண்மை பொன்னுச்சாமி இதுவரை 24 சிறுகதைத் தொகுப்பு, 6 நாவல்கள், 6 குறு நாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். இவரது முதல் படைப்பைத் தொடர்ந்து பல நல்ல கதைகள் கல்கியில் வெளியானவை.

பத்திரிகைகளுக்குக் கதைகள் அனுப்பும்போது கடித உறைகளின் மீது அவரது சுய விலாசம்” மேலாணமை பொன்னுச்சாமி மேலாண்மறைநாடு என்று மட்டுமே குறிப்பிட்டிருப்பார். வீட்டு இலக்கம் தெருவின் பெயர் மவட்டம் பின் கோட் எதுவுமிருக்காது.ஒரு ஊரின் அடையாளாமாக ஒரு எழுத்தாளன் வாழ்வதென்பது எலோருக்கும் வாய்க்காது என்கிறார் எழுத்தாளார் பா. ராகவன்.
66 வயதில் உடல் நலக்குறைவால் பாதிக்கபட்டு இறைவனடி சேர்ந்த மேலாண்மை போன்னுச்சாமியின் இழப்பு எழுதுலகின் பேரிழப்பு 
 ( கல்கி12/11/17ல் எழுதியது) 










30/9/12


”இந்து”வாகவே வாழ்ந்தவர்

இந்திய வரலாற்றில் எப்படி ”இந்து” நாளிதழக்கு ஒரு முக்கிய இடமிருக்கிறதோ அதே போல் இந்து நாளிதழின் வரலாற்றில் சமீபத்தில் கால மான அதன் ஆசிரியர் திரு ஜி கஸ்தூரி அவர்களுக்கும் ஒரு அழியாத இடமிருக்கிறது. 135 வயதாகும் இந்து நாளிதழில் 25 ஆண்டு காலத்திற்கும் மேல் தொடர்ந்து ஆசிரியராகயிருந்த பெருமை இவருக்கு மட்டுமே  இந்திய அரசியல் பாக்கிஸ்தான் போர், அணுகுண்டு சோதனை, நாணய மதிப்பு குறைப்பு,(Devaluvation) எமர்ஜென்சி, இந்திராகாந்தியின் படுகொலை,போபர்ஸ் ஊழல் அம்பலம் போன்ற  பல அதிரடிகளையும் திருப்பங்களையும் சந்தித்த காலகட்டமான 1965 முதல் 91 வரை  ஆசிரியராக இருந்தவர். வலிமையான தலையங்களையும், விரிவான கட்டுரைகளையும் எழுதி இந்துவின் வாசகர்வட்டத்தை விரிவாக்கினவர். போபர்ஸ் ஊழல் தொடர்பான திடுக்கிடும் கட்டுரைகளை அன்றைய உதவியாசிரியார்  எழுதி வந்தபோது இறுதி பகுதியில் தகுந்த செய்திகளாக இல்லை என வெளியிட மறுத்த துணிவான ஆசிரியர். அந்த உதவிஆசிரியர் இந்து குடும்பத்தை சேர்ந்த திரு ராம்.
ஒரு நாளிதழ் காலத்தின் கட்டாயத்திற்கேற்ப தன்னை மாற்றி புதிபித்துகொள்ள வேண்டிய அவசியத்தை புரிந்துகொண்டு இந்து நாளிதழின் முகப்பு, வடிவம், செய்திவெளியிடும் பாணி புதிய பகுதிகள் என பலவற்றை மாற்றிஅமைத்தவர். வண்ணபடம், ஃபேக்ஸ் மூலம் பல இடங்களிலிருந்து பதிப்பு,  கணனியில் பக்கங்களை அமைத்தது  அதை கணனியின் மூலமே ஒருங்கிணைத்தது போன்ற பல   “முதல்“களை இந்திய நாளிதழ்களில் கொண்டுவந்தவர். இருபது வயதில் M.A பட்டத்துடன் பத்திரிகையாளாரக சேர்ந்து 15 ஆண்டுகளுக்குபின் இணையாசிரியாராகவும் பின் ஆசிரியராகவும் உயர்ந்து நீண்டகால பணிக்குபின் ஒய்வு பெற்றபின்னரும் இறுதி மூச்சுவரை பத்திரிகையை நேசித்து அதனுடைய ஒவ்வாரு கட்ட வளர்ச்சியையும் கவனித்து  மகிழ்ந்தவர். மிகவும் பிடித்த பல விஷயங்களில் ஒன்று போட்டோகிராபி. புகைப்படதொழிலின் நுணுக்கங்கள் அனைத்தும் அத்துபடி.  ” “என்னை இண்ட்ர்வீயூ செய்யும் போது இந்த  படம் எத்தனை மணிக்கு எடுத்தீர்கள்? என நான் தந்திருந்த படங்களில் ஒன்றை எடுத்து காட்டி கேட்டார், காலை 11 மணி இருக்கும் என்றேன். நன்றாக நினைவுபடுத்திச்சொல்லுங்கள் சேபாக் மைதானத்தில்  மதியம் 3 மணிக்கு தான் இப்படி நிழல் விழும் என்று அவர் சொன்னவுடேனேயே வேலை கிடைத்தாலும் இந்த ஜாம்பாவனிடம் ஜாகிரதையாக இருக்கவேண்டும் என தோன்றிற்று “ என்கிறார் டி. கிருஷ்னன். இவர் இந்துவின்போட்டோ எடிட்டர்.
வளரும் டெக்காலஜியை கற்று கொள்ள வயது ஒரு தடையே இல்லை என நிருபித்த இவர்  ஆப்பிள் நிறுவனத்தின் ஐ மேக் என்ற கம்யூட்டரில்(இது பத்திரிகை தொழிலில் பயன்படுத்தபடும் லேட்டஸ்ட் டெக்னாலாஜி) இந்துவின் 75 போட்டாகிராபர்கள் எடுத்த படங்களையும் செய்திகளையும் பார்த்து தன்  கருத்துகளை உடனே பதிவு செய்துவிடுவார். 80 வயதை கடந்த நிலையிலும் பிரமிக்க வைக்கும் சுறுசுறுப்புடன் இந்துவின் இன்றைய தலைமுறை இளம்பத்திரிகையாளர்கள் பலருடன் தொடர்பிலிருந்தவர். மரணத்தின் முதல் நாள் மாலை இந்துவின் 134 வது ஆண்டுவிழா நிகழ்ச்சி யில் பங்கேற்றதை நெகிழ்வுடன் நினைவு கூறும் திரு ராம்,”இந்து. பத்திரிகையின் அத்தனை பிரிவுகளைப்பற்றியும் முழுமையாக அறிந்த அவருக்கு  இறுதிவரை இந்துவும் அதுபற்றிய எண்ணங்களுமே தான் வாழ்க்கையாக இருந்தது ” என்கிறார்.
நல்ல பத்திரிகைகளை போல நல்ல பத்திரிகையாசிரியர்களையும்  சரித்திரம் மறப்பதில்லை.

23/9/12


மனது வைத்தால் நிச்சயம் மாற்றம் இங்கே சாத்தியம்

புதியதலைமுறை 20/9/12 இதழ்






இந்தியாவில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கோடி விவசாயிகள் தினசரி வருமானம் பெறுகிறார்கள்.  இந்தப் புரட்சியை நிகழ்த்தியவர் குரியன்







இந்தியாவில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கோடி விவசாயிகள் தினசரி வருமானம் பெறுகிறார்கள்.  இந்தப் புரட்சியை நிகழ்த்தியவர் குரியன்

குஜராத் மாநிலத்தில் ஒரு சிறு கிராமம். அங்கிருந்த விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை. தங்களது பசு, எருமை மாடுகளிடமிருந்து கறந்துகொண்டு வரும் பாலை போல்சன் டைரி என்ற நிறுவனத்திடம் விற்பனைக்காக ஒப்படைப்பார்கள். ஆனால் பணம் வராது. காரணம், விற்பனைக்காக மும்பைக்கு அனுப்பப்படும் அந்தப் பால் மும்பை போய்ச் சேர்வதற்குள் திரிந்துவிடும். கெட்டுப்போன பாலுக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

அந்த மக்களுக்கு உதவ விரும்பினார், சர்தார் வல்லபாய் படேலின் சீடரான திருபுவன்தாஸ் படேல். அந்த மாவட்டத்தில் இருந்த விவசாயிகளைக் கொண்டு கூட்டுறவுப் பால்பண்ணை ஒன்றை உருவாக்கினார். ஆனாலும் பிரச்சினை தீரவில்லை. அங்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்த இளைஞரிடம் ஆலோசனை கேட்டார். ‘பாலை நீங்கள் பதப்படுத்தினால்தான் அது விரைவில் கெட்டுவிடாமல் பாதுகாக்க முடியும். அதற்கு நீங்கள் பிளேட் பாஸ்ட்ரைசர் என்ற ஒரு இயந்திரத்தை வாங்க வேண்டும்’ என்றார் இளைஞர். ‘ஆனால் அது உங்களால் முடியாது’ என்றார். ‘ஏன்?’ என்றார் திருபுவன்தாஸ். ‘அதன் விலை 60 ஆயிரம் ரூபாய்’ என்றார் இளைஞர். 1949ல் அறுபதினாயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை. ‘முடியும், நம்மால் முடியும்’ என்ற திருபுவன்தாஸ், கிராமத்து மக்களிடம் பேசினார். நூறு, இருநூறு எனச் சிறுகச் சிறுக ஒவ்வொருவரும் பங்களித்தனர். அந்த இளைஞர் அசந்து போனார். எளிய மக்களைக் கொண்ட கூட்டுறவு இயக்கம் எத்தனை வலிமையானது என அவருக்குப் புரிந்தது. பயிற்சி முடிந்து ஊரைவிட்டுக் கிளம்பவிருந்த அவர், அங்கேயே தங்கி அந்த இயந்திரத்தை நிறுவினார். அதன் பின் கடந்த ஞாயிறன்று தனது 90வது வயதில் இறந்து போகும்வரை அதுவே அவரது வாழ்விடமாயிற்று.

பாலைப் பதப்படுத்த முடியும் என்று தெரிந்ததும், பால்வரத்து அதிகமாயிற்று. அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது. திரவமாக இருப்பதால்தானே பால் கெட்டுப் போகிறது, அதைப் பவுடராக்கி விட்டால்? என அவர் யோசிக்க ஆரம்பித்தார். அப்போது ஐரோப்பாவிலும், நியூசிலாந்திலும் பாலில் இருந்து பால் பவுடர் தயாரிக்க ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் இங்கு அதில் ஒரு பிரச்சினை இருந்தது. ஐரோப்பாவில் கொழுப்புச் சத்து குறைந்த பசும்பாலில் இருந்து பவுடர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். இங்கு கிடைப்பது எருமைப்பால்.

அந்தக் கிராமத்தில் உருவாகி இருந்த நவீன பால் பதப்படுத்தும் நிலையத்தைப் பார்வையிட வந்திருந்த நியூசிலாந்து நாட்டின் பால்வள ஆராய்ச்சி நிலையத் தலைமை அதிகாரி, அதன் கட்டமைப்பைக் கண்டு அசந்துபோனார். நிலையத்தின் நிர்வாகியாகயிருந்த அந்த இளைஞரைப் பெரிதும் பாராட்டி, ‘இவ்வளவு புத்திசாலியாகயிருக்கும் நீ ஏன் முட்டாள் தனமாக, உலகில் யாராலும் செய்ய முடியாத திட்டத்தில் நேரத்தையும் பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டபோது அந்த இளைஞர் சொன்ன பதில், ‘இதை நான் செய்து காட்டுவேன்.’

சொன்னபடியே செய்துகாட்டி, உலகிற்கே அந்த விஷயத்தில் வழிகாட்டினார் அந்த இளைஞர். அவர் வர்கீஸ் குரியன், செய்த விஷயம், எருமைப்பாலைப் பயன்படுத்தி பால் பவுடர் தயாரிப்பது. இன்று இந்தியா ஆண்டுக்கு 65,000 டன் பால் பவுடர் தயாரிக்கிறது. இது நியூஸிலாந்து தயாரிப்பதைவிட பல மடங்குகள் அதிகம்.

பால் விநியோகம், பால் பவுடர் என வர்த்தகம் விரிந்து கொண்டிருந்தபோது, அவர் அந்தக் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களிடம் சொன்னார்: ‘நாம் இப்படியே பாலை வாங்கி விநியோகிக்கிற அமைப்பாகவே இருந்தால் முன்னேற முடியாது. நாம் மார்க்கெட்டிங்கில் இறங்க வேண்டும். அதற்கு நமக்கு ஒரு ‘பிராண்ட்’ வேண்டும்.’ அப்போது உருவானதுதான் அமுல். Anand Milk Union Limited என்பதன் சுருக்கம்தான் அமுல். ஆனந்த் என்பது அந்தக் கிராமத்தின் பெயர்.

அமுல் செய்த புரட்சி ஒரு வரலாறு. நெஸ்லே, பிரிட்டானியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை ஓரங்கட்டிவிட்டு தன் வெற்றிக் கொடியை நாட்டியிருக்கிறது அமுல். இன்று இதன் வெற்றியை கோ ஆப்ரேட்டிவ் கேபிடலிசம் என வகுப்பறைகளில் போதிக்கிறார்கள்.

ஆனால் அமுலின் உண்மையான வெற்றி, கந்துவட்டிக்குக் கடன் வாங்கித் தவித்துக் கொண்டிருந்த விவசாயிகளை ‘முதலாளி’களாக்கியது. இன்று இந்தியாவிலேயே பாலுக்கு அதிகக் கொள்முதல் விலை கொடுப்பது, குஜராத் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்புத்தான். 1948ல் 430 பேரிடமிருந்து நாளொன்றுக்கு 5,000 லிட்டர் பால் வாங்கிக் கொண்டிருந்த அமுல், இன்று 30 லட்சம் பேரிடமிருந்து நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டருக்கு மேல் கொள்முதல் செய்கிறது.
 

அமுலின் பிசினஸ் மாடல் இன்று இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. இதனால் இன்று இந்தியாவில் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கோடி விவசாயிகள் தினசரி வருமானம் பெறுகிறார்கள்.
 

ஆச்சரியமான விஷயம்... ஓசையில்லாமல் இந்தப் புரட்சியை நிகழ்த்திய குரியன் பால் அருந்துவதில்லை. ‘எனக்குப் பால் பிடிக்காது என்பார் அவர். குரியன் சென்னையில் படித்தவர். 1940ல் சென்னை லயோலா கல்லூரியிலும் பின், கிண்டி பொறியியல் கல்லூரியிலும் படித்த இவர், வெளிநாட்டில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். பெரிய குடும்பப் பின்னணி கொண்டவர். அவரது தாத்தா ஜான் மத்தாய், இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர். அவர், டாடா குழுமத்தைச் சேர்ந்த டிஸ்கோவின் தலைவராக இருந்தபோது குரியனுக்கு டிஸ்கோவில் வேலை போட்டுக் கொடுத்தார். அந்த வேலையையும் பின், யூனியன் கார்பைடில் கிடைத்த வேலையையும் விட்டுவிட்டு அந்த குஜராத் கிராமத்திலேயே தன் வாழ்நாள் முழுதும் தங்கி விட்டார்.

அதன் பலன் அந்தக் கிராமத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே கிடைத்தது. இளைஞர்கள் மனது வைத்தால் இந்தியாவை மாற்ற முடியாதா என்ன?