அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22/6/16

வெற்றிப் பயணமா? வெறும் பேச்சா?

பதவியேற்றதிலிருந்து பறந்துகொண்டேயிருக்கிறார். பார்லிமெண்டில் நாற்காலியில் உட்கார்ந்தால் கூட சீட் பெல்ட்டைத் தேடுகிறார் என்று சமுக ஊடகங்களில் கிண்டல் அடிக்கப் படும் மோடியின் வெளிநாட்டுப்பயணங்களில் லேட்டஸ்ட் “5 நாடுகளின் பயணம். அதிலும் குறிப்பாக அமெரிக்கப் பயணம். இது மிகவும் வெற்றிகரமான பயணம், NSG அமைப்பில் இந்தியா இணைந்து அணு உலகிற்குள் அடி எடுத்துவைக்கப் போகிறது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்பதைப் பார்க்கும் முன் அது என்ன என்.எஸ் ஜி? அதில் இந்தியா இடம்பெற வேண்டியது அவசியமா?? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அணு எரிபொருள் வினியோக கூட்டமைப்பான NSG(nuclear supply group)யில் இப்போது உறுப்பினராக 48 நாடுகள். அணுசக்தி தொடர்பான வர்த்தகங்களைத் தொழில்நுட்பங்களை இவை தங்களுக்குள்ளாகவே பரிமாறிக்கொள்கின்றன. வளர்ர்சியடைந்த நாடுகளூம், வல்லரசுகளும் உறுப்பினராக இருக்கும் இதில் இந்தியா உறுப்பினராக அனுமதிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் நாம் அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டம் என்று உலகின் பல நாடுகள் ஒப்புக்கொண்ட விதிகளை நாம் ஏற்கவில்லை. இதில் கையெழுத்திடாதால் இந்தியாவை என்.எஸ்ஜியில் சேர்க்கக் கூடாது என்ற தடுத்தவர் அன்றைய அமெரிக்க அதிபர் புஷ். அவரைத்தொடர்ந்து வந்த அமெரிக்க அதிபர்களும் இதே நிலையைத்தான் தொடர்ந்தார்கள். இந்திரா காலத்திலிருந்தே இந்தியாவும் தன் நிலையில் அணுஆயுத பரவல் சட்டத்தை ஏற்கமாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருந்தது. தனித்து இருந்தோமா, தனிமைப்படுத்தப்பட்டோமா என்பது வேறு விவாதம்.
இப்போது காலம் கனிந்திருக்கிறது, காட்சிகள் மாறப் போகிறது. என்.பி.டியில் கையெழுத்திடாமலேயே என்.எஸ்.ஜியில் அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளின் ஆதரவோடு இந்தியா உறுப்பினராகப் போகிறது. இதற்கான அறிவிப்புக்கள் வெளியாகியிருப்பது தான் இந்தப் பயணத்தின் வெற்றி. ஆனால் இந்த நிலைக்கான முழுப்பெருமையையும் மோடி எடுத்துக்கொள்ள முடியாது. என்றாவது ஒரு நாள் இந்த நிலைவரும் என்று நம்பி பிடிவாதமாக இருந்த இந்திரா, நரசிம்மராவ், மன்மோகன் போன்ற முந்தைய பிரதமர்களுக்கும் பங்கு இருக்கிறது, ரிலே ரேசில் கடைசியாக ஓடி வெற்றி கோட்டைத் தொடும் வீரன் கைதட்டல் பெறுவதுபோல நிகழ்ந்திருக்கும் விஷயம் இது.
இப்படி இந்தியாவிடம் தீடிரென்று அமெரிக்கா கரிசனம் காட்டுவதற்குக் காரணம் மோடியின் கோரிக்கையும் பயணமும் மட்டுமில்லை. சும்மா ஆடாத சோழியனின் குடுமி போல அமெரிக்கா எதையும் பலன் இல்லாமல் செய்யாது.
சீனா என்.எஸ்ஜியில் இந்தியா இடம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. உலக போலீஸாக தன்னை கருதிக்கொள்ளும் அமெரிக்கா, தென் பசிபிக் கடல் பிரதேசத்தில் இந்தியாவுடன் இணைந்து கூட்டாகப் பாதுகாப்பு பணிகளைச் செய்யது சீனாவிற்கு செக் வைக்க விரும்புகிறது.. இதற்காகத் தரவேண்டிய விலையாக இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு ஆதரவுநிலையை எடுத்திருக்கிறது.
அதைவிட முக்கியமான விஷயம் சர்வ தேச சந்தையில் டாலரின் மதிப்பு சரிந்து யூரோ எழுச்சி பெற்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம் விழுந்துகொண்டிருக்கிறது என்ற இன்றைய நிலையில் அமரிக்காவிற்கு அதன் வெளிநாட்டு வாணிகத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் ஏற்றுமதியில் முக்கிய இடம் மற்ற நாடுகளின் ராணுவத்திற்கான ஆயுதம் மற்றும் தளவாடங்கள்தான். 60 சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்யும் இந்தியாவில். ஆட்சிக்குவந்தவுடனேயே இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்படும் என்ற மோடியின் அறிவிப்பினால் முழித்துக்கொண்டது அமெரிக்கா.
தொடர்ந்து ராணுவ அமைச்சராகப் பொறுப்பேற்ற மனோகர் பரேக்கர் முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட ஆயூத சப்ளை காண்டிராக்ட்களை நிறுத்திவைத்தார். அமெரிக்கா. இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது எனத் திட்டமிடத்தொடங்கியது. அதற்காக இந்தியாவை எதையாவது செய்து தஜா செய்ய வேண்டிய நிலைக்கு வந்தது. மேலும் இந்தியாவின் மின் உற்பத்தியில் அணு உலைகள் முக்கிய இடத்தைப்பிடிக்கபோவது திட்டங்களில் வெளியாகியிருப்பதால் அணுசக்தி துறைக்கு உதவக்கூடிய கட்டுமானம் மற்றும் இதர தொழில் நுட்பத் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் நீண்ட கால முதலீடு செய்யும் வாய்ப்புகளையும் உணர்ந்திருக்கிறது. அணு உலைகளுக்கான மூலப்பொருள் தராளாமாகக் கிடைக்காவிட்டால் இந்த வாய்ப்பு அவைகளைத் இப்போது இந்தியாவிற்குத் தந்து கொண்டிருக்கும் வேறு நாடுகளுக்குப் போய்விடும்.

இந்த அமைப்பில் சேருவதனால் இந்தியாவிற்கு என்ன பயன்?
அணுசக்தி ஆராய்ச்சிக்கு முக்கிய தேவை யுரேனியம். இது இந்தியாவில் மிகக் குறைவாகவே கிடைப்பதால், நாம் இறக்குமதியைச் சார்ந்திருக்கிறோம். இந்த என்.எஸ்ஜி அமைப்பைபில் இடம் பிடித்துவிட்டால் நமக்குத் தாராளமாக யுரேனியம் கிடைக்கும். அணுஆயுதம் அல்லாத, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பொதுப் பயன்பாட்டு திட்டங்களுக்கு மூலப்பொருட்களையும், தொழில் நுட்பத்தையும் பெற இந்த அமைப்பில் உடனடியாக உறுப்பினராவது அவசியம் என்ற நிலைப்பாட்டை, வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற்ற விரும்பும் மோடியின் அரசு எடுத்திருக்கிறது அணுதொடர்பான நமது ஆராய்ச்சிகள் இனி புலிப் பாய்ச்சலில் இருக்கும். ஏவுகணை தொழில் நுட்பத்தில், அக்னி, பிரமோஸ் பிருத்வி போன்ற உலகத்தரம் வாய்ந்த ஏவுகளைகளை செலுத்தி உலக அரங்கில் நம் திறனைக் காட்டியிருக்கும் நாம் அந்த டெக்னலாஜிகளை உறுப்பு நாடுகளுடன் வணிக ரீதியாக விற்பனை செய்ய முடியும்.

இந்தப் பயணத்தின் உடன் விளைவாக 6 புதிய அணுமின்நிலையங்களை இந்திய அணுமின்கழகமும் அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனமும் அமைக்கப் போகின்றன. இதன் மூலம் உடனடியாக, அமெரிக்காவும், கட்டமைப்பு பணிகளில் ஈடுபடப்போகும் அதானி, ரிலெயன்ஸ் நிறுவனங்கள்தான் என்ற குரல் எழு ஆரம்பித்திருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் அணு உலைகளின் ஆபத்துகுறித்து குரல்கள் வலுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தப் பயணம் உண்மையிலேயே வெற்றிதானா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கப் போகிறது.

பாக்ஸ் 1 சில் வரவேண்டியது

Nuclear Non-Proliferation treaty எனப்படுகிற (NPT)) அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்கைய்ழுத்து இடும் நாடுகள் எவ்வித நிபந்தனையுமின்றி தங்கள் அணு ஆயுத தயாரிப்பு வசதிகளைச் சர்வ தேச அணுசக்தி ஏஜின்சியின் சோதனைக்கு அனுமதிக்க வேண்டும். அணு ஆயுத உற்பத்தியையும் அடையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா,சீனா, பிரான்ஸ் பிரிட்டன் போன்ற நாடுகள் அணு ஆயுதங்களைத் தயாரித்து அடுக்கி வைத்துக்கொண்டு வளரும் நாடுகளைத் தடுப்பது நியாமில்லை என்று இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட  மறுத்து  கொண்டிருக்கிறது.

பாக்ஸ் 2ல் வரவேண்டியது
1968 என் பி டியி கையெழுத்திடமாட்டோம் என அறிவிக்கப்பட்டது
1974-முதல் அணுகுண்டு சோதனை
1998-இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனைகள் (5 முறை நடந்தது)
2006-அமெரிக்க செனட் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு சட்டத்தை நிறைவேற்றியது
2007= இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் 123 கையெழுத்தானது
2016 -என்.எஸ்.ஜியில் இந்தியா இணைய அமெரிக்கா ஆதரவை அறிவித்தது.

(கல்கி 23/06/16 இதழலில் இருந்து)

/


10/3/16

அடுத்த அமெரிக்க அதிபராவாரா? இந்தப் பெண்மணி

250 ஆண்டு அமெரிக்க வாலாற்றில் இதுவரை ஒரு பெண்மணி அதிபரானதில்லை. இந்த ஆண்டு நடக்கப்போகும் அதிபர் தேர்தலில்அதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. அடுத்த அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெறவிருக்கிறது. அமெரிக்க தேர்தல் முறைப்படி பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும்முன் அவர்கள் கட்சியினால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உட்கட்சி ஜனநாயகம் வலுவான அரசியல் அமைப்பு முறையுள்ள அமெரிக்க அரசியலில் கட்சிகள் இந்தத் தேர்தல்களை மாநிலந்தோறும் நடத்தி எந்த வேட்பாளர் அதிகமான மாநிலங்களில் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறாரோ அவரைத் தங்கள் கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். அவர்களில் ஒருவரை மக்கள் நேரிடையாக வாக்களித்து அதிபராகத் தேர்ந்தெடுப்பார்கள்.
இப்போது அமெரிக்க அரசியல் கட்சிகளான குடியரசு, மற்றும் ஜனநாயக கட்சிகளில் உட்கட்சி தேர்தல்களம் சூடுபிடித்துவிட்டது. ஜனநாயகக் கட்சியின் முதல் உட்கட்சி தேர்தல் அய்வோவா மாநிலத்தில் துவங்கியது. அதில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். இந்த மாநிலத்தின் முதல் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தான் அதிபர் தேர்தல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனால் ஹிலாரியின் வெற்றி ”அமெரிக்காவிற்கு ஒரு பெண் அதிபர்” என்பதற்கான அறிகுறிதென்படுவதாக ஊடகங்கள் பேசின.
இந்த முதல் வெற்றிக்குப் பின் நடந்த இரண்டாவது நீயூஹெமிஸிபியர் மாநில தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கும் போட்டியாளர், பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி யிருந்தது. அதில் ஹிலாரி வெற்றி பெறவில்லை. இது கட்சி வட்டாரத்தில்; அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது. இந்த மாநிலத்தில்தான் முந்திய கட்சி வேட்பாளர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டு ஹிலாரி வெற்றிபெற்றிருந்தார். ஆனால் ஒரு மாநில தேர்தல் முடிவு மட்டும் முழுவெற்றியாகிவிடாது இன்னும் 48 மாநில தேர்தல்கள் இருக்கிறது என்ற எண்ணமும், ஹிலாரி சேமித்திருக்கும் தேர்தல் நிதியும் நம்பிக்கை தருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படும். அதற்காகக் கட்சிகள் மட்டுமில்லாமல் வேட்பாளர்களும் தனியாக நிதி திரட்டுவார்கள். அரசுப் பதவியில் அமைச்சராக இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், பதவியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பதவி விலகி நிதி சேர்க்க ஆரம்பித்த விட்ட ஹிலாரியிடம் இப்போது 100 மில்லியன்(1 மில்லியன் 10 லட்சம்) டாலர்களுக்கும் மேல் இருக்கிறது. இந்தப் பணவசதி, பிரச்னைகளை எதிர் நோக்கும் துணிவு, அயலுறவு அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் எல்லாம் இவருடைய பலம். இவர் அமைச்சராக இருந்தபோது அரசாங்க விஷயங்களுக்குத் தன்னுடைய சொந்த இ மெயிலை பயன் படுத்தினார் என்ற குற்ற சாட்டுக்கான 11 மணி நேர பாராளுமன்ற குழுவின் விசாரணையை சந்தித்தவர். மேலும் கணவர் கிளிண்ட்டன் தேர்தலுக்காகப் பணியாற்றிய காலத்திலியே தேர்தலைச் சந்திக்கும் யுக்திகள் தெரிந்த ஸ்டிரஜிஸ்ட்டாக மதிக்கப்பட்டவர். இவற்றினால் இவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் எனப் பத்திரிகைகள் கணிக்கின்றன.
இதைப் போல மற்றொரு கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் இம்மாநிலத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். பிரபல தொழிலதிபரான இவருடைய அதிரடி அணுகுமுறையால் அமெரிக்க தேர்தல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர் வல்லவரா ? அல்லது வடிவேலுவா? என்று பொதுமக்களும் ஊடகங்களும் குழம்பிப் போய்க் கிடக்கிறார்கள். முதலில் யாருமே சீரியஸாக கண்டுகொள்ளாத இவர், ஒருவேளை வெற்று பெற்று அதிபரும் ஆகி விடுவாரோ என்ற நிலை தற்போது நிலவுகிறது. டொனால்ட் ட்ரம்ப் அதிரடி பேச்சுகளில் நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை. முன்னதாக இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். 'நான் அதிபர் ஆனால் ஒரு டாலருக்கு ஒரு காலன் பெட்ரோல் தருகிறேன்' என்று தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். சவுதி அரேபியாவிடம் அமெரிக்கா சரியாக 'டீல்' செய்தால் பெட்ரோல் மலிவாகக் கிடைக்கும். தொழிலதிபரான தனக்கு வியாபார டீல் என்பது கை வந்த கலை. மற்ற அதிபர் வேட்பாளர்களுக்கு அது தெரியாது. மேலும் ஐஎஸ் ஐஎஸ் வசம் உள்ள பெட்ரோலை கைப்பற்றுவேன். அதன் மூலம் பெட்ரோல் விலை 50 சென்ட்கள் (அரை டாலர்) வரை குறையும்.
பெட்ரோல் விலை சாமானிய அமெரிக்கர்களின் அன்றாட பிரச்சனை. நம்ம ஊரில் ரூபாய்க்கு 3 படி அரிசி, கிலோ ஒரு ரூபாய் அரிசி, இப்போது இலவச அரிசி திட்டங்கள் மாதிரிதான் உலக சந்தையில் பெட்ரோல் விலை அடிமாட்டு விலைக்குக் குறைந்துள்ள நிலையில், தானாகவே ஒரு டாலருக்கு விலை குறைந்தாலும் ஆச்சரியமில்லை. இந்தப் போக்கு தொடர்ந்தால் 'வாரத்திற்கு பத்து காலன் இலவச பெட்ரோல் தருகிறேன்' என்று கூட டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி தரக்கூடும்!
இந்த மனிதர் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும், ஹிலாரிகிளிண்ட்டன் ஜனநாயக கட்சி வேட்பாளராகவும் இறுதி முடிவானால் ’சபாஷ் சரியான போட்டி’ என்று இருக்கும். ஆனால் சதுரங்க ஆட்டத்தின் முதல் மூவ்களில் முடிவைக் கணிக்க முடியாதைப் போல இந்த முதல் கட்டத்தில் எதுவும் சொல்ல முடியாது.
கடைசி மூவ் யாருடையது என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது
 (கல்கி 7/3/16)
.  
30/6/15

ஒபமா நல்லவரா? கெட்டவரா?


அமெரிக்காவில் கடந்த 1980ல் 2 லட்சம் இந்தியர் வேலைப் பார்த்தனர். இப்போது இந்தியாவில் இருந்து சென்று அங்கு வேலைப் பார்ப்போர் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாகச் செல்வோருக்கு எச்1பி என்ற விசா வழங்கப்படுகிறது.. அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களே இந்த விசாவுக்காக விண்ணப்பிக்கும். அமெரிக்காவில் சாப்ட்வேர் பணிக்கு ஆள் தேவைப்படும் நிறுவனங்களில் இந்த ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்படுவர். இப்படிப் பணியமர்த்தப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக எச்1பி விசா எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த விசா மூலம் வரவழைக்கப்பட்டு அமெரிக்காவில் பணியமர்த்தப்படும் இந்தியர்களால் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு நல்ல லாபம் . இவர்களை அனுப்பும் டிசிஎஸ் உட்பட நிறுவனங்களுக்கும் லாபம். ஆனால், அமெரிக்காவில் இப்படி எச்1பி விசா மூலம், உள்ளூர் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அமெரிக்கர்களுக்கு வேலைப் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. அமெரிக்கர்களை நியமித்தால் அதிகச் சம்பளம் தர வேண்டும் என்பதால் அமெரிக்கக் கம்பெனிகள்,  இப்படி வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை இறக்குமதி செய்கின்றன. இந்த விவகாரம் இப்போது பரபரப்பான பிரச்சினையாகியிருக்கிறது. . தெற்கு கலிபோர்னியாவில் உள்ள எடிசன் எலக்ட்ரிக் கம்பெனி,டிஸ்னி வேர்ல்ட் போன்ற நிறுவனங்களில் சமீபத்தில் சில நூறு அமெரிக்க ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில் இந்தியர்களை நியமித்தது தான் இது பெரியஅளவில் வெடிக்க எழுந்த முதல் புள்ளி 
வெளிநாட்டினருக்கு வேலைப் அளித்து மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தரவில்லை என்பது எதிர்காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தி விடும். இப்போதே கட்டுப்படுத்தி விடுவது நல்லது என்று அமெரிக்காவில் வேலையின்மைக்கு எதிராகவும், மண்ணின் மைந்தர்களுக்கு ஆதரவாகவும் போராடும் அமைப்புகள், குடியேற்றத்துறை அமைச்சகத்துக்கு மனுக்களை அனுப்பியிருக்கின்றன.. 

இந்திய நிறுவனங்கள் தங்களது எ 1 விசா பெறும் உரிமைகளைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவிலிருந்து கொண்டுவரும் நபர்களை வேறு நிறுவனங்களில் வேலைசெய்ய அனுமதிக்கின்றனர் என்பது இப்போது எழுந்திருக்கும் குற்றச் சாட்டு டிசிஎஸ், இன்போசிஸ் உட்பட முக்கியநிறுவனங்களூம் இதைச்செய்கின்றன என்று சொல்லுகிறது அமெரிக்கக் குடியேற்றத் துறை. விசாரணை துவங்கியிருக்கிறது. இதனால் முன்னணி நிறுவனங்களில் சார்பில் அமெரிக்கா சென்று பணியாற்றும் ஊழியர்களின் வேலைக்குச் சிக்கல் ஏற்படலாம்; அவர்களின் எச்1பி விசா ரத்து செய்யப்படலாம் வருங்காலத்திலும் இந்த நிறுவனங்கள் அனுப்பும் ஊழியர்களுக்கு எச்1பி விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது கடந்த ஆண்டே இதுபோல் பிரச்சனை எழுந்து 13 நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப் பட்டது. 
அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தின் இந்த அதிரடி இந்திய நிறுவனங்களால் ஒரு கெட்ட செய்தியாகப் பார்க்கப்பட்டு ஆடிப்போயிருக்கும் நேரத்தில் மற்றொரு ‘நல்ல’ செய்தியை அறிவித்து இந்தியர்களை ஆச்சரியப் படுத்தியிருக்கிறது ஒபாமா நிர்வாகம். 
அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து முடித்ததும், இந்திய மாணவர்களுக்கு உடனே வேலைப் கிடைக்கும். சூப்பர் சலுகை திட்டம் அது. 
அமெரிக்காவில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் விசா எப்1. இதைப் பெற்று அவர்கள் பட்ட, மேற்படிப்பை முடிக்கலாம். ஆனால் படிப்பு முடித்தபின் வேலைப் செய்ய முடியாது.. இந்தப் புதிய முறைப்படி, 6 ஆண்டு தங்கிக் கொள்ளலாம் வேலைகளில் பயிற்சி பெறலாம்.. அதற்காக அவர்களுக்கு விசா தரப்படும் இந்த ஆண்டுப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் 

வெளிநாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படும் இந்த விசா சலுகையை எதிர்க்கிறார்கள் திரு சக் கிராஸ்லி போன்ற எம்பிக்கள், . இந்தத் திட்டத்தின் மூலம் எச்1 விசா அளிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்கள், அமெரிக்காவிலேயே தங்கிவிடுவார்கள் இது அமெரிக்க மாணவர்களுக்கு ஆபத்து’ என்பது அந்த எம்பிக்களின் பார்வை. 

ஒபாமவின் முந்திய ஆட்சி காலத்திலும், இரண்டாம் முறை அதிபர் பதவி ஏற்றபின்னரும், அமெரிக்கஇந்தியர்கள் பலர் உயர் பதவியில் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். எச்1பி விசாவில் பணி செய்யும் வெளிநாட்டவர், தன் மனைவியை அழைத்து வரலாம்; அது மட்டுமின்றி, அவர்கள் அமெரிக்காவில் பணியும் செய்யலாம் என்றும் சலுகையும் அளித்தார். 
ஏன் ஓபமா இப்படி வாரி வழங்குகிறார்? 

ஒபாமா, இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களின் திறமைக்கு அதிகம் மதிப்பு தருபவர். இந்திய மாணவர்களிடம் உள்ள கணித, அறிவியல், தொழில்நுட்ப அறிவைப் போல அமெரிக்க மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்பே ஒருமுறை அவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார். 

அமெரிக்காவில் மேற்படிப்பில் முக்கியமானது ‘ஸ்டெம்’ என்று செல்லமாக அழைக்கப்படும் படிப்புகள் தான். STEM என்பது முதலெழுத்தில் துவங்கும் சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், கணிதம். இந்தப் படிப்புகளில் படித்து மேற்படிப்பு முடித்த அமெரிக்க மாணவர்கள் குறைந்து வருகின்றனர். இதில் திறமையான மாணவர்கள் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களை இப்படி ஈர்ப்பதன் மூலம் வருங்காலத்தில் அமெரிக்கா பெரும் பயன்பெறும் என்ற தொலை நோக்கு என்கிறார்கள் கல்வி, சமூக ஆய்வாளார்கள் 
நாம் வல்லரசாவதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒபமா.அமெரிக்கா தனது வல்லரசு நிலையை இழந்துவிடக்கூடாது என்பதற்கான தேவையானதைச் செய்யத் துவங்கி விட்டரோ ?.

944902215

23/5/15

ஒபாமா பொய் சொன்னாரா?


”ஆப்ரேஷன் நெப்டியூன் ஸ்பியர்” நினவிருக்கிறதா? 
2001-ம் ஆண்டு, செப்டம் பர 11-ம் தேதி அல-கொய்தா தீவிர வாதிகள் வாஷிங்டனில்அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பெண்டகன், நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரம் ஆகிய தாக்குதல்களில் 3 ஆயிரத் திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மூளையாக இருந்து செயல்படுத்தியவர் அந்தஇயக்கத் தின் தலைவர் ஒசாமா பின்லேடன். இவரைப் பிடிக்க அமெரிக்கா தீவிரமாக, உலகெங்கும் தேடிக்கொண்டிருந்தனர். 
10 ஆண்டுகள் தேடுதலுக்குப் பின்னர் ”ஆப்ரேஷன் நெப்டியூன் ஸ்பியர்” என்ற பெயரில் ஜேம்ஸ்பாண்ட் சினிமாவைப்போல ஒர் அதிரடி நடவடிக்கையில் 2011- மே 2-ம் தேதி பாக்கிஸ் தானின் அபோட்டா பாத பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமாவை சிறிய விமானங்களில் சென்று அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது.. முழுநடவடிக்கைகளையும் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து ”லைவ்” வாக்க பார்த்துக்கொண்டிருந்தார். என்பதுதான் மறுநாள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக இருந்தது. 
அமெரிக்க உளவு, மற்றும் ராணுவத்துறைகளின் மிகப்பெரிய ராணுவ சாதனையாக வர்ணிக்கப்படும் இதில் முழுவதும் உண்மையில்லை என்கிறார். சேய்மோர் எம்.ஹெரிஸ் (Harsh) என்ற புலானாய்வு பத்திரியாளார். இவர் லண்டன் புக ரிவ்யூ என்ற இதழில் எழுதியிருக்கும் கட்டுரையை இஸ்லாமபாத்திலிருந்து வெளிவரும் டான் பத்திரிகையும் வெளியிட்டிருக்கிறது. இவர் அமெரிக்க வியட்நாம் போர்களில் அமெரிக்க நடவடிக்கைகள் பற்றியும் அமெரிக்கச் சிஐஏ பற்றியும் புத்தகங்கள் எழுதியிருப்பவர். மிக நீண்ட புலானாய்வுகளுக்குப் பின்னர் எழுதுபவர். உலகின் பெரிய பத்திரிகைகளின் நம்பிக்கை பெற்றவர். 
இந்தப் பரபரப்புக் கட்டுரையில் இவர் சொல்வது. அமெரிக்கா பின்லேடனை ஆப்கானிஸ்தான் மலைக்குகைகளில் தேடிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே 2006 முதல் பின்லேடன் பாக்கிஸ்தானில் ரகசிய இடத்தில் கைதியாக . சவுதிஅரேபிய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ஐஎஸ்ஐ என்ற பாக்கிஸ்தான் உளவு நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டார். அல்கொய்தாவிற்கு உதவிகள் செய்து வந்த சவுதி அரசு இந்தப் பாதுகாப்பு செலவுகளை ஏற்பதாகவும் எந்தக் காரணத்திற்காகவௌம் அவர் கொல்லப்படக்கூடாது என்றும் சொல்லியிருந்தது. 
இந்தக் கைதியை அமெரிக்காவிற்குத் தருவதின் மூலம் தங்கள் உளவு நிறுவனங்களுக்குப் பெருமளவில் அமெரிக்க நிதி மற்றும் ஆயூத உதவிகளைப் பெற பாக்கிஸ்தான் திட்டமிட்டிருந்தது. அதற்கான நேரத்திற்காகக் காத்திருந்தது. இதற்கிடையில் அமெரிக்கா பின்லேடனை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 25 கோடி டாலர் பரிசுத்தொகை அறிவித்து இருந்தது. பாக்கிஸ்தானில் பின்லேடனை ரகசியமாகக் காக்கும் பொறுப்பேற்றிருந்த ஜெனரல் பர்வேஷ் ஆஷ்பஃ கியானி, மற்றும் உளவுத்துறை தலைவர் அஹமது ஷுஜா பாசா அமெரிக்கப் பரிசு தொகைக்காகத் தங்கள் தேசத்திற்குத் துரோகம் செய்து ரகசியத்தை விற்றுவிட்டனர் என்கிறார் ஹெரிஸ். பாகிஸ்தானிலுள்ள அமெரிக்கச் சிஅய் ஏவின் அதிகாரி இவர்கள் சொல்வது உண்மைதான் என்று உறுதிசெய்யது கொள்ளப் பொய் சொல்லவதைக் கண்டறியும் டெஸ்ட்களைக் கூடச் செய்திருக்கிறார்கள். விஷயத்தை உறுதி செய்துகொண்டதும் அமெரிக்க ராணுவம் செயலில் இறங்கியது. 
சாட்டிலைட்கள் மூலம் பின்லேடனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, கூரியர் தபால் தருபவர் மூலம் உறுதி செய்து கொண்டு, தடுப்பூசிபோடுபதாகச் சொல்லி ரத்த சாம்பில் எடுத்து DNA டெஸ்ட் செய்து பின்லேடன் இருப்பதை உறுதி செய்து கொண்டு சிறிய அதிவேக விமானங்களில் அதரடியாகச் சென்று பின்லேடன் வசித்துவந்த வீட்டிற்குள் சென்று ஆயுத போரட்டம் நடத்தி அவரைச் சுட்டு கொன்றோம் என்று அமெரிக்கா சொல்லியிருக்கிறது. இது பொய் என்கிறார் கட்டுரையாசிரியர். 
இருக்குமிடத்தை அறிவித்துத் தாக்குதல் நடத்தும்போது பாக்கிஸ்தான் ராணவ கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, மின் இணைப்புகளைத் தூண்டித்து ஆப்ரேஷன் நெப்டியூன் ஸ்பியர் சரியாக நடக்க எல்லா வசதிகளையும் இந்த ஐஸ்ஐ அதிகாரிகள் செய்து கொடுத்தனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாக்கிஸ்தான் அரசு ஆப்ரேஷன் பற்றி அறிந்ததும். இது எங்கள் ராணுவத்துக்குப் பெரிய இழுக்கு. அதனால் ஒருவாரத்திற்குப் பின்னர் செய்தியை வெளியிடுங்கள். எங்கள் உதவியுடன் செய்ததாக உலகிற்கு அறிவியுங்கள்.. என்று அமெரிக்க அதிபரை வேண்டியது. 
ஆனால் ஓபாமா உடனையாக அறிவித்துவிட்டார். அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லுகிறார் ஹெரிஸ் (Harsh) ஒன்று  அந்த சமயத்தில் அமெரிக்கத் தேர்தலில் மறுமுறை போட்டியிட தீர்மானித்திருந்த ஒபாமா இதைத் தன் அரசின் சாதனையாக மட்டுமே இருப்பதை விரும்பினார், மற்றொன்று இந்த ஆப்ரேஷனில் ஒர் அமெரிக்க ஹெலிகாப்டர் பின் லேடன் வசித்துவந்த கட்டிடத்தில் மோதி நொறுங்கிவிட்டிருந்தது. அது அமெரிக்க விமானம் இல்லை என்று மறைப்பது கடினமான செயல். எல்லாவற்றையும் விட ஒரு சின்ன நாடு அமெரிக்காவை ஏமாற்றிவிட்டதே என்ற அவரின் கோபம் 
பின்லேடன் பிடிபட்டபோது அவர் நிராயத பாணியாக இருந்தார். பாதுகாவலர்கள் இல்லை அமெரிக்கச் சீல் (SEAL) ராணுவம் மிக எளிதாக வீட்டின் உள் நுழைந்து அவரைச் சுட்டுக் கொன்றது. அமெரிக்கா சொல்லுவது போலக் கடலில்விமானம் தாங்கி கப்பலில் எடுத்து சென்று  அவர் உடல் இறுதி முகமதிய மதசடங்குகளுடனும் மரியாதைகளுடன் யுடன் அடக்கம் செய்யபடவில்லை. தூண்டு துண்டான உடலை இந்துகுஷ் மலைப்பகுதிகளில் எறிந்தனர் என்றும் எழுதியிருக்கிறார்.பின்லேடனின் இறுதிச் சடங்கு படங்களை வெளியிடாதற்கு இதுதான் காரணம் என்கிறார், 
இந்தக் கட்டுரை ஆதாரமற்றது என அமெரிக்க அதிபர் மாளிகை அறிவிப்புச் சொல்லுகிறது. . 
உலகின் சில அரசியல் தலைவர்களின் மரணங்களுக்குப் பின் ஏற்படும் சர்ச்சைகள் மரணமடைவதில்லை. பல ஆண்டுகள் அவை தொடர்ந்துகொண்டே இருக்கும். அந்த வரிசையில் ஓசாமா பின்லேடனும் இப்போது சேருகிறார். 

944902215
170515

19/5/15

அட நம்ம ஊர்காரர் மாப்பிள்ளை!

இங்கிலாந்து தேர்தல் ஒரு புதிய பாடம் 


பொதுத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளும், மீடியாக்களின் ஜோசியங்களும் பொய்த்துப்போனது இந்தியாவில் மட்டுமில்லை இங்கிலாந்திலும் தான்.
இங்கிலாந்தில், சமீபத்தில் நாடாளு மன்றத் தேர் தல் நடை பெற்றது. இதில், பல்வேறு கட்சி கள் போட்டி யிட்டாலும், தற்போதை பிரதமர் டேவிட்கேம்ரூனின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழி லாளர் கட்சிக்கும் இடையே தான் இதுவரை நடந்த எல்லாத் தேர்தல்களையும் விடக் கடுமையானபோட்டி நிலவியது. கருத்துக்கணிப்பு நடத்திய இங்கிலாந்தின் மிகப்பெரிய மீடியாக்கள் சொன்ன விஷயம் இந்தத் தேர்தலில் எவருக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு பாராளு மன்றம் அல்லது ஒரு பெரிய கட்சி உதிரிகட்சிகளுடன் இணைந்த கூட்டணி ஆட்சி என்பது. ஆனால் தற்போதை பிரதமர் டேவிட்கேமரூனின் இன்னும் 5 ஆண்டுகள் 10 டவுனிங்கில் ஸ்டீரிட்டில் வசிக்கட்டும் என்பது மகேசன்களான மக்கள் சொன்ன தீர்ப்பு

மொத்தம் உள்ள 650ல், 330 தொகு தி களில், கன்சர் வேட்டிவ் கட்சி வெற்றி வாகை சூடியது. இத்தனை இடங்கள் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லைஎன்று ஆச்சரியப்பட்ட டேவிட் கேமரூன்.இங்கிலாந்தின் பிரதமராக 2வது முறையாகப் பதவியேற்றிருக்கிறார். இந்தத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் மாபெரும் வெற்றியைப் போலவே எதிர்க்கட்சியான லேபர் கட்சியும் அதன் தலைவர்களும் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருப்பது மற்றொரு ஆச்சரியம். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் இளைஞர்கள். 30%க்கு மேல் பெண்கள். ( இதற்கான சட்டம் எதுவும் இல்லை)

தேர்தலில் டேவிட் கேமருனின் இந்த வெற்றிக்கு கணிசமான அளவில் உதவியிருப்பவர்கள் இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியினர். பொதுவாக இவர்களில் லேபர்கட்சியை ஆதரிப்பவர்கள்தான் அதிகம் என்ற நிலை இருந்தது. ஆனால் தலையெடுத்திருக்கொண்டிருக்கும் நாலவது தலைமுறை மாற்றிச் சிந்திக்கத் துவங்கியிருக்கிறது. இங்கிலாந்தில் மூதலீடு செய்திருக்கும் பெரிய நாடுகளில் இந்தியா 3 வது இடத்தில் இருக்கிறது. 700க்கும் மேற்பட்ட கம்பெனிகளலிட்டிருக்கும் மொத்த மூலதனம் 1.3 பில்லியன் பவுண்ட்கள்(100 கோடிகளுக்கு மேல்). கடந்த ஒர் ஆண்டில் மட்டும்3500 வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். கேரூனின் இந்திய- இங்கிலாந்து நட்புறவு 21ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று
அறிவிப்பும் கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை இந்தியாவிற்குத் தொழில் அதிபர் குழுக்களுடன் இந்தியாவிற்கு வருகை தந்திருப்பதும் இந்த இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது. நீண்ட காலமாக இந்தியவம்சாவளியினர் இங்கிலாந்தின் அரசியலில் பங்கு பெற்றிருந்தாலும் சமீபகாலங்களில் அதிக அளவில் இளைஞர்கள் எல்லாக் கட்சியிலும் இருக்கிறார்கள். தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 59 இந்தியர்களில் 10 பேர் வென்று எம்பியாகியிருக்கிறார்கள், அப்படி வென்றவர்களில் ஒருவர் ரிஷி சுனாக். ஆக்ஸ்போர்ட் ,ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்தவர். ரிச்மோண்ட் என்ற தொகுதியில் நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்ற இந்தக் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் , இன போ சிஸ் நிறுவனத் தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன்,

இங்கிலாந்தின் வளரும் தொழிலதிபரான இவர் நாராயணமூர்த்தியின் ஒரே மகள் அக்க்ஷதாவை(Akshata) திருமணம் செய்து கொண்டிருப்பவர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது நாராயணமூர்த்தி லண்டனில் இருந்தார்.
இம்முறை பாரளுமன்றதேர்தலில்போட்டியிட்ட லண்டன் நகர மேயரும் வெற்றிபெற்றிருக்கிறார், இவரது மனைவி இந்தியவம்சாவளியினர். இந்திய மருமகன்கள் ஜெயித்துகொண்டிருக்கிறார்கள்எனச் செய்தி வெளியிட்டது ஒரு தினசரி.
.ஸ்காட்லாந்து பகுதி வாக்காளர்களின் முடிவு இந்தத் தேர்தலில் மற்றொரு ஆச்சரியம் அங்குத் தனிநாடு கேட்டுப் போராடிக்கொண்டிருக்கும் ஸ்காட்டிஷ் நேஷனல் பார்ட்டி அதிரடியாக 59 சீட்டுகளில் 56ல் வென்றிருக்கிறது.. 8 மாதங்களுக்கு முன் ஸ்காட்லாந்து தனிநாடாகவேண்டுமா? என்ற பொதுவாக்கெடுப்பில் வேண்டாம் என்பது பெரும்பான்மையினரின் விருப்பமாக இருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டஇளைஞர்கள் பெற்றிருக்கும் வெற்றி தனிநாடாக விரும்பும் ஒரு புதிய செய்தியைச் சொல்லுகிறது. இந்தக் கட்சியின் வெற்றி வேட்பாளர்களில் ஒருவர் மெய்ரி பிளாக். வயது 20. கல்லூரி மாணவி. இங்கிலாந்து பாரளுமன்றச் சரித்திரத்திலேயே இந்த வயதில் எம் பியானவர் இவர்தான். ஸ்காட்லாந்து அரசியல் இளைஞகர்ளின் தலமையில் எழுந்து கொண்டிருக்கிறது.
இதுதான் கேம்ரூனுக்குத் தலைவலியாக இருக்கப் போகும் ஒரு விஷயங்களில் ஒன்று. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் தொடர்வது குறித்துப் பொதுவாக்கெடுப்பு 2017ல் நடத்துவோம் எனத் தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். ஸ்காட்லாந்து மக்கள் ஐரோப்பியயூனிலில் தொடரவே விரும்புகிறார்கள். இங்கிலாந்தில் அதை விரும்பாதவர்கள் தான் அதிகம். இந்த நிலையில் பொதுவாக்கெடுப்பின் முடிவுகள் ஸ்காட்லாந்து மக்களின் விருப்பத்திற்கு எதிராக அமைந்தால் அவர்கள் தனிநாடக பிரியும் அபாயமிருக்கிறது. ஐக்கியத் தேசம் ஒரு வலிமையான கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, ஸ்காட்லாந்து தனிநாடகி அதில் உறுப்பினாராகும் என்ற புதிய வரலாறு கேம்ருனின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்துவிடுமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

., “நீங்கள் குறிப் பிட்டது போலவே, இந்த முறையும் கேமரூன் அரசு (பிர் ஏக பார், கேம ரூன் சரக் கார) அமைய உள்ளது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று ததியிருக்கிறார்,இந்தத் தேர்தல் முடிவுகளுக்காகத் தனது இங்கிலாந்து பயணத்தை ஒத்திபோட்டிருந்த பிரதமர் மோடி.. இந்தியாவுடன் நட்புடன் இருக்கும் கேம்ருன் ஐக்கியநாட்டு சபையின் நிரந்தர உறுப்பினர் நாடாக இந்தியா வரஉதவுவதையும், இந்தியாவுடன் வணிக உறவுகள் அதிகரிக்கவும் விரைவில்மோடி இங்கிலாந்துக்குப் பயணம் செய்யவிருக்கிறார்.


ஒருகாலத்தில் இந்தியாவின்மீது ஆதிக்கம் செலுத்தி அனைத்தையும் முடிவு செய்து கொண்டிருந்த இங்கிலாந்தின் அரசியலின் தலைவிதியை நிர்ணயப்பதில் இன்று இந்தியர்களின் பங்களிப்பு இருப்பது என்பது உலக அரசியலில் ஒரு புதிய பாடம் .
கல்கி 24/05/15 இதழில் எழுதியது13/4/15

உறங்கிக்கொண்டிருக்கும் புயல் மீண்டும் வருகிறதா?

 புதிய தலைமுற 16/4/15 இதழில் எழுதியது 

(பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் சதி திட்டம் தீட்டியதாக பாஜ மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள்  கைவிடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்கும்படி எல்.கே. அத்வானி, ஜோஷி உள்பட 20 பேருக்கு நோட்டீஸ்  அனுப்ப சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.  இந்தவழக்கு, இந்த  அதிரடி உத்தரவின் பின்னணியைப் பற்றிய ஒரு அலசல் ).
டிசம்பர் 6 1992. இந்திய வரலாற்றில்  ஒர் கருப்பு பக்கம். ராமஜன்ம பூமியாக வர்ணிக்கபடும்  அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் கால் நூற்றாண்டை கடந்த பின்னரும் அழியாவடுக்களாக இன்றும்  பலர் மனதிலிருக்கிறது.  கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டார்கள் என்று சொல்ல பட்ட இந்த ”விபத்து” குறித்து, நீண்ட காலம் தொடர்ந்து , வழக்குகளும் கமிஷனின் விசாரணைகளும் நடந்து ஒய்ந்திருக்கும் நிலையில்  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட   ஒரு மனுவின் அடிப்படையில்  இந்த நோட்டீஸ்கள் அனுப்ப பட்டிருக்கிறது. . பதில்களை ஏற்று உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்குமானால் மீண்டும் உயிர் பெறப்போவது வழக்கு மட்டுமில்ல. சில அரசியல் பிரச்னைகளும்தான்.
என்ன வழக்கு? ஏன் தலைவர்கள் மீது வழக்கு?
அயோத்தி நகரம் கடவுள்-அரசர் இராமர் பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் ருதப்படுகிறது.  1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின்பெயரால் அயோத்தியில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகின்றனர். ராமர் சிலைகள் பின்னாளில் கொண்டுவந்து வைத்து வழிபட்டனர் இந்துக்கள் என்று இஸ்லாமியர்கள் சொல்லுகின்றனர். ஆனால்  பல ஆண்டுகளாக இந்த இடம்  இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆங்கிலேயேர் ஆட்சிகாலத்திலியே இடத்திற்கு உரிமை கோரி வழக்குக்குள் இருந்த போதிலும் அது மத மோதலாகவோ கலவரமாகவோ இல்லை.  இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி புதிய வழக்குகளைத் தொடர்ந்தன.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 1989 தேர்தலின்  இந்த அயோத்தி பிரச்சனையை தேர்தல் களத்தில் வைத்தது. . செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் எல். கே. அத்வானி அயோத்தி பிரச்னையை நாடெங்கும் எடுத்துச் செல்லும் வழியாக ஓர் இரதப் பயணத்தைத் (இரத யாத்திரை) தொடங்கினார். இதனால் நாடெங்கும் மதவாத உணர்ச்சி அலைகள் வீசத்துவங்கின.  இன்னும் அந்த அலைகள்  ஒயவில்லை.
அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே நாங்கள் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டப் போகிறோம்என்ற பழிக்குப் பழிபாலிடிக்ஸ்தான் இதன் அடிப்படை. ‘1996&ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி  பகல் 12.15 மணிக்கு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும்என்று வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டுதான் அயோத்தியை நோக்கி கிளம்பினார்கள் பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தொண்டர்கள். சுமார் 2 லட்சம் பேர். பெருங்கூட்டமாக குவிந்துவர அயோத்தி குலுங்கியது. உணர்ச்சிபூர்வமான பேச்சு  ஒருங்கிணைக்கப்ட்ட கூட்டு நடவடிக்கையின் விளைவுவாக  475 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.
தேசமே அதிர்ந்துது போனது. கலவரங்கள் வெடித்தன,  சட்டம் மெதுவாக அதன் கடமையை செய்ய ஆரம்பித்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்தது. மசூதியை இடித்ததாக `பெயர்  தெரியாத லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக பாஜ மூத்த தலைவர்  எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்பட 20 பேர் மீது மற்றொரு  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தவிர மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டது, உள்பட  பல்வேறு பிரிவுகளின் கீழ் அத்வானி உள்ளிட்டோர் மீது மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 சதி திட்டம் தீட்டியதாக அத்வானி, ஜோஷி உள்ளிட்ட பலர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவற்றை கைவிடுவதாக 2001,
  மே 4ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது
. அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010 மே 21ம் தேதி அளித்த தீர்ப்பில், சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை  என்று அத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.
ஆனால், அத்வானி உள்பட பிறர் மீது  கூறப்பட்டுள்ள மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து ரேபரேலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்தது.
அலகாபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அரசு முடிவெடுத்தது.  ஆனால் 6 மாதங்களுக்குள்ளாக செய்திருக்கவேண்டிய மேல் முறையீட்டை 8 மாதத்திற்கு பின்தான் செய்தது வழக்கை குறிபிட்ட கால கெடுவுக்குள் செய்யாமல் தாமதபடுத்தி செய்திருந்தது. இம்மாதிரியான நடைமுறை வீதிமீறல்கள் செய்வது  எதிர்வாதம் செய்யபவர்களுக்கு அனுகூலமாக முடியும்.ஆனால் உச்ச நீதிமன்றம் தாமதத்தை கண்டித்து காரணம் கேட்டு சிபிஐயை விளாசியது. தாமதத்திற்காக சொல்லபட்ட காரணம் ”வழக்கில் சம்பந்தபட்டவர்கள்  அனைவரும் மிக முக்கிய அரசியல் வாதிகள் என்பதால் மிக ஜாக்கிரதையாக கையாளுகிறோம்” என்பது. அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி. அவர்கள் இந்த வழக்கைஏன் தமாதப்படுத்தினார்கள்? என்பது இந்திய அரசியலில் புரிந்து கொள்ள முடியாத புதிர்களில்  ஒன்று.
இப்போது மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
 இந்த கட்டத்தில் தான்  தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அத்வானி உள்ளிட்டோர் மீதான சதி திட்டம் தீட்டிய வழக்கில் மேல்முறையீடு செய்வதில் சிபிஐ  காலதாமதம் செய்து வருகிறது.  வழக்கை நீர்த்துபோகும் வகையில் சிபிஐ செயல்படுகிறதுபிஜே பி கட்சியின் செல்வாக்கு மிகுந்தவர்கள் ஆட்சியிலும் மூக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள். மேலும் இந்த வழக்கில் தலைவர்கள் விடிவிக்கபட்ட்து நீதிமன்ற வரலாற்றில்  வழங்கப்பட்ட முக்கியமா அநீதி.  செயலைதூண்டியது, அதைச்செய்யவசதிகள் செய்துகொடுத்தது மசூதியை உடைத்தது எல்லாமே ஒரு சதிச்செயலின் அடிப்படையில் எழுந்த விஷயம். அப்படியிருக்க சதித்திட்டத்தைமட்டும் தனியாக பிரித்து குற்றத்திற்கான ஆதாதரம் இல்லை என சொல்லியிருப்பது நீதிமன்ற த்தின் தவறு என்பதால்  . அத்வானி உள்ளிட்டோர் மீதான சதி திட்டம் தீட்டிய வழக்கை  மீண்டும் முழுமையாக விசாரிக்க உத்தரவிட  வேண்டும் என்ற ஹாஜி மக்மூத் அகமதுவின் மனுவை  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து  தலைமையில் நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் ஏற்றுகொண்டு நோட்டீஸ்கள் அனுப்பிருக்கிறது.

அயோத்தி நிகழ்வும் அரசியலும்.
பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு இந்திய அரசியலில்  சில புதிய அத்தியாங்களை உருவாக்கின. மதவாதத்துக்கும் வாக்குபெட்டிக்கும்  உறவு வலிமையானது..
‘‘இந்திய முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிரான சக்தியாக மாற்ற பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ. எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் இஸ்லாமியர்கள் நாங்கள் இந்தியர்என்று ஒருங்கிணைந்து நின்றார்கள். பாபர் மசூதியை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும்,  ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒரே நாளில் செய்து முடித்தன’’  என்று இந்திய உளவு நிறுவனம் ராவின் முன்னால் உளவு அதிகாரி ராமன் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.நெருக்கடி நிலையை முழுமுச்சாய் எதிர்த்து அரசியலில் ஜனநாயகவாதிகளாக நிலை நாட்டிக் கொண்டவர்கள் மதவாத அரசியல்வாதிகளாக அடையாளம் காணப்பட்டார்கள்.
பார் மசூதி இடிப்பை தொடர்ந்து கிரிமினல் வழக்குகளைத் தவிர மத்திய அரசு ஒரு கமிஷன் அமைத்தது.விசாரணைக் கமிஷன் தலைவர் லிப்ரான்.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்திற்கும் 1992 ல் டிசம்பர் பதினாறாம் தேதி அதாவது பாபர் மசூதி இடிக்கபட்ட பத்து நாட்களுக்குப் பின நீதிபதி லிப்ரான் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கபட்டது. சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடித்ததில் மாநில அரசு - முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் மதவாத அமைப்புகளின் பங்கு என்ன? உத்திரப்பிரதேச அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் என்ன? இவை பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கமிஷனை மத்திய அரசுகேட்டுக்கொண்டது.விசாரணைக் கமிஷனின் கெடு காலம் மூன்று மாதம் என்றும் அறிவித்தது.
48 முறை நீடிக்கபட்ட கமிஷன் விசாரணை செய்ய நீதிபதி லிப்ரன் பதினேழு ஆண்டு காலம் எடுத்து கொண்டார். பதினேழு ஆண்டு விசாரணைக்கு மத்திய அரசு செலவு செய்த தொகை எட்டு கோடி ரூபாய். கமிஷனின் ரகசிய அறிக்கை அதிகாரபூர்மாக வெளியிடப்படாமலேயே கசிந்து வெளியாகிவிட்டது. அத்வானியின் ரத யாத்திரை, மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றிச் சென்ற வாஜ்பாய், இடிக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி பால்தாக்கரே, கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் (ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது?’ &ஜெயலலிதா) என்று பல ஆதாரங்கள் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தாலும்  கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எந்த வழக்கையும்  தொடரவில்லை.
தினசரிகளில் அவ்வபோது 4 பக்கத்தில் தலைகாட்டிக்கொண்டிருந்த இந்த விஷயம் மெல்ல மறக்கப்பட்டுகொண்டிருந்தபோது  கடந்த ஆண்டு  துவக்கத்தில்
பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும்,  இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பலிதானி ஜாதாஎனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கபட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவற்றை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்த படைக்கு லக்‌ஷ்மண சேனை என்று பெயர்.  என ஒரு அதிரடி செய்தியை வெளியிட்ட்து கோப்ரா போஸ்ட். கோப்ரா போஸ்ட் என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (டெஹ்ல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர்  கே ஆஷிஷ்  பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாக  சொல்லி , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்துள்ளார்இவர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் ஜென்மபூமிஎன்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டிருக்கும்  'கோப்ரா போஸ்ட்'  இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு. அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால் விட்ட்து. ஆனாலும் ஐமு அணி அரசு  அசையவில்லை யார் மீதும் வழக்கு எதுவும் போடவில்லை.

இனிமேல்  என்ன நடக்கலாம்? 
அரசியலின் போக்கை நீதிமன்ற வழக்குகளின் முடிவுகளும், அரசின் முடிவுகள் வழக்குகளின் போக்கையும் மாற்றும் என்பதை சமீப அரசியல் சரித்திரங்கள் நமக்கு சொல்லுகின்றன.  இந்த வழக்கை உச்சநீதி மன்றம்  தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தால், சமீபகாலமாக அது கடைப்பிடிக்கும் வழிமுறையான ஒரு சிறப்பு புலனாய்வை அமைத்து நேரடியாக தங்களிடம்  அறிக்கைகள் தந்து  குறிப்பிட்ட கால கெடுவுக்குள்  வழக்கை முடிக்க செய்யும். அல்லதுசிபிஐயை கண்டித்து உடனடியாக வழக்கை நடத்தி முடிக்க முடுக்கிவிடும்.
கிளமாக்ஸாக மனுவே தள்ளுபடியும் செய்யபடலாம். (வாய்ப்பு மிக குறைவு. விபரங்கள் கேட்டபின் பொதுவாக தள்ளுபடி செய்யப்படுவதில்லை)
எப்படி நடந்தாலும் அது அரசியலில் நேரிடையான தாக்கத்தை விளைவிக்கும். காரணம் எவ்வளவு விரைவாக நடைபெற்றாலும் வழ்க்கு முடிய ஒராண்டு ஆகும்
 இந்த வழக்கின்  முடிவுகள் வரும்போது 2016ல்  சில மாநிலங்கள் தேர்தலை சந்திக்கிறது. அதில் ஒன்று இந்த காட்சிகளின் களனான உத்திரபிரதேசம்,
இப்போது உபி சட்டமன்றத்தில் 403 சீட்டுகளில் வெறும் 47 மட்டுமே வைத்திருக்கும் பிஜெபி. கடந்த நாடாளுமன்றத்தில் கூட்டணியோடு 83 சீட்டுகளில் 70ஐ பெற்றிருப்பதால் 2017 ல் அங்கு மாநில ஆட்சியை பிடிக்கும் கனவில் இருக்கிறது.  இந்த வழக்கில் தலைவர்கள் வீடுவிக்க பட்டால் தங்கள் மீது பூசப்பட்டிருக்கும் மதவாத கரை மறைந்து விட்டதாக அறிவித்துவிடுவார்கள். மாறாக தண்டிக்கபட்டால் ராமருக்காக நாங்கள் செய்த தியாகம் என அந்த அனுதாபத்தை ஓட்டாக மாற்ற முயற்சிப்பார்கள்.
வழக்கு தீவிர கட்டத்தை அடைவதற்குள் காங்கிரஸின் தலைவராகியிருக்கும் ராகுல்  இந்த வழக்கினையே ஆயூதமாக கையிலெடுத்து பிஜேபியின் மதவாத அரசியலை  கண்டனம் செய்து களமிறங்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஆட்சியிலிருந்த போது கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டவர்கள் இதையாவது கோட்டைவிடாமல் செய்யவார்களா என்ற  கேள்வியும் எழுகிறது. .
எந்த பிரச்னையிலும் ஒரு வாய்ப்பை கண்டுபிடிப்பவர்கள் அரசியல் வாதிகள். பிஜெபி தங்கள் உட்கட்சி அரசியல் பிரச்னைகளை சரி செய்ய  இந்த வழக்கை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.. மோடி பிரதமரான நேரத்தில்  கட்சியின் மூத்த தலைவர்கள் ஒரங்கட்டபட்டார்கள்:. இந்த வழக்கில் சம்பந்தபட்டவர்களும் அவர்கள்தான். காங்கிரஸ் ஒரு கட்டத்தில்  முன்னாள் பிரதமர்  நரசிம்ம ராவை ஒதுக்கி அவர் மீதுள்ள வழக்குகளை அவரே சமாளித்துகொள்ள வேண்டும் என சொன்னது போல  இவர்களையும் பிஜேபி ஒதுக்கி விடும் ஒரு நிலையும் ஏற்படலாம். அதன் மூலம் இன்றைய தலைவர்கள் தாங்கள் மதவாத தீவிரவாதிகள் இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கலாம்.
எப்படியாக இருந்தாலும் இந்த வழக்கு 2016 மாநில தேர்தலுக்குமுன் மக்களின் மிக கவனம் பெரும் வழக்காக இருக்கும்.

”இந்திய அரசியலின் முக்கிய முடிவுகள் இப்போது கோர்ட்களில் எடுக்கபடுகிறது. மக்கள் தேர்தல் முடிவுகளைப் போல சில  வழக்குகளில் நீதிமன்றத்தின் முடிவுகளை காண  ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என ஒரு ஆங்கில நாளிதழின் மூத்த செய்திஆசிரியர் எழுதுகிறார்.

அது இந்த வழக்குக்கும் பொருந்தும்.