நூல்கள்

கங்கைக்கரை ரகசியங்கள்இலக்கியம்
என்பதை தேர்வு செய்ததும் ஏனோ முதலில் கையிலிருந்த இந்தப்புத்தகம் தான் எழுத, படிக்க ஈர்த்தது !

கதை, சிறுகதை, நாவல், கவிதைத்தொகுப்புகள் என்றிருக்க..சமூகம் சார்ந்த , எதோ ஒரு ஈர்ப்பை..இன்னமும், இனி வரும் காலங்களிலும் புனிதத்தை தன்பெயரில் கொண்டுள்ள கங்கையைப்பற்றிய புத்தகம் என்றதும் கைகள் தானாக தழுவியது இதனை !

யார் எழுதியது..என்ன மாதிரியான புத்தகம் இது ?

பயணக்கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல் ! பயணக்கட்டுரைகளில் சில , 
நேராக உள்ளதை உள்ளபடி சொல்லும் கட்டுரைகள், சில பயணத்தின் போதே பார்த்தது , எண்ணக்கிடங்கில் விளைந்தது என நம் மனதிலும் விதைக்கும் கட்டுரைகள் ! இரண்டாவது ரகம் இந்தப்புத்தகம்.மொத்தமே 112 பக்கங்கள். 
ஆனால் ஒவ்வொரு வரிகளும் பலமுறை படிக்க வைப்பவை. அப்படியென்ன ஸ்பெஷல்..?

மேலே படிங்களேன் !

இந்த கங்கைக்கரை ரகசியங்கள் அப்படித்தான் நம்முள்ளும் பல ரகசியங்கள், ஆசைகள்..வேட்கைகளை விதைக்கின்றன, எழும் எண்ணக்கேள்விகளுக்கு விடைகளையும் அளிக்கின்றன.

காலைப்பொழுது , கடலாக விரிந்திருக்கும் அறுபது அடி ஆழம் கொண்ட நதி, படித்துறைகளில் நாக்குகளாய் நாவாய்கள் 
இப்படித்தான் இழுத்துப்போடுகிறது இழைந்தோடும் வர்ணனை. மெல்ல எழுத்தாளரின் கைப்பிடித்து சிறுப்பிள்ளையாய்
அவர் கால்களுடனே..பயணிக்க நாமும் ஆரம்பிக்க , பிரமிப்பை தன் தோள்களில் ஏற்றிக்காட்ட , கைப்பிடித்து தோழமையுடன் எண்ண அலைகளோடு அழைத்துச்செல்கிறார்.

கங்கைக்கரை என்றதுமே நினைவில் வருவது காசி நகரம் தான் !

கிரேக்க், எகிப்திய, பாரசீக நாகரீகங்கள் அழிந்து உருமாறியப்போதும் மாறாத இந்திய நாகரீகத்தின் அந்த தொன்மையினைப் பாதுகாப்பது சக்தியை, ஆற்றலை பிரதிஷ்டை எனும் கருவியாகக்கொண்டு எழுப்பப்பட்ட ஆலயங்கள், அதனால் உருவான நகரங்கள் தான் என்கிறார் ஆசிரியர்.

காசி..சிவனே வாழ்ந்த ஊர், அவரது சூலாயுதத்தின் நேர்க்கோட்டில் அமைந்த ஊர்.. 25,000 கோயில்களைக்கொண்ட ஊர் தற்போது 648 கோயில்களாகவும் மையப்புள்ளிகளாக மூன்று கோயில் கள், வடக்கே ஆம்கார் ஈஸ்வர், மையத்தில் விஸ்வ நாதர் , தெற்கில் கேதார் ஈஸ்வர் என அனைத்துக்கோயில்களுமே ஐந்தடுக்குப்பாதையில் அமைந்திருப்பதாக விளக்குகிறார் ஆசிரியர் அதற்கான மேற்கோள்களுடன் !

ஈஷா யோகமையம் ஏற்பாடு செய்யும் யாத்திரை யில் பங்கேற்பவர், அதன் சிறப்பான செயல்பாடுகளையும், நடு நடுவே தனக்கான சந்தேகங்களை நம் மன மொழியைப்போலவே எதிரொலிக்கும் விதமாக சத்குரு ஜக்கி குரு வாசுதேவ் அவர்களிடன் கேட்டு நமக்குமான பதில்களைப் பெற்றுத்தருகிறார்.

காசி நகரம் கங்கையின் கரையில் உள்ளதையும் , கங்கையின் அழகையும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் ஆசிரியரது  பார்வையில் அவர் மயங்கியதை நமக்கும் கடத்தி மயங்கச்செய்கிற்து அவர் நடை!

எல்லாக்கோவில்களுக்கும் செல்லும் குறுகலான பாதை, அதிகாலையில் செல்லும்போது ஏற்படும் அசௌகர்யங்கள், அங்கே நகரத்தார் கட்டிவைத்த நாட்டார் கோட் சத்தர் , அவர்கள் செய்யும் பால் வழங்கும் திருப்பணி, கட்டிவைத்த கோயில்கள் என முதல் நாள் பார்த்ததில் பகிர்கிறார்.

3 நாட்கள்..இதில் விஸ்வ நாதர் ஆலயம் பற்றிய பகிர்வில் அவரது சிலிர்ப்பையும், அங்கு ஏற்படும் அதிர்வையும் நாமும் உணரமுடிகிறது ! சைக்கிள் ரிக்ஷா , படகுக்காரர்களின் தன்மை, அணுகும் விதம் என அணைத்து செல்லும் நடையில் பல காட்கள் எனப்படும் படித்துறைகளிலும் அவருடன் ஏறி நாம் இறங்குகிறோம் !

குளித்து எழுகிறோம் !

காசி , வாரணாசி என்ற அழைக்கப்படுவதில்..பனாரஸ் என்பது தனி நகரம் என்றும் அங்கு பட்டுத்தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்வில் வண்ணங்கள் இல்லை எனவும் பதிகிறார்!

அச்சச்சோ என நாமும் இரக்கம் கொள்ள உடனே படகுப்பயணம் , அங்கிருந்து..மணிகர்ணிகா காட் என தாவும் எழுத்துக்களால்..மாறினாலும் கனத்துப்போகிறோம் !

ஒரு நாளைக்கு குறைந்தது 50 இறந்த உடல்கள் (இப்படித்தான் குறிப்பிடுகிறார்..பிணங்கள் என்றில்லை) வர..பாதி எரிந்த உடல்கள் அடியே தள்ளப்பட, இதனை 6 உதவியாளர்களுடன் நிர்வகிக்கும் சத்திய நாராயண சௌத்ரி என்பவரது நிலையையும் குறிப்பிட.. ஆவென திறந்த வாய் மூட மறுக்கின்றன.

பனாரஸ் மன்னர்களுக்கான குளியல் கட்டம் அதில் கங்கை உள் நுழைவதென அனைத்துப்படித்துறைகள் , அதன் கரையில் அமைந்துள்ளக்கோயில்கள் என விவரிக்கப்பட்டு அங்கு ஆங்கிலேயர், முகலாயர் , புத்த மத ஈடுபாட்டினையும் சொல்லி..புத்தருக்கும் காசிக்குமான தொடர்பு, அவர் ஞானம் பெற எப்படி வந்தார் என்ற தகவல்களுடன்

மெதுவாக அவருடன் நாமும் சார நாத் பயணிக்கிறோம்.
அங்குள்ள காட்சியகம் அதிலுள்ள உண்மைகள் , அதைச்சார்ந்த தகவல்கள், புகைப்படங்கள் என ஆசம் ஆசம் என்ச்சொல்லி நம்மை நகர வைக்கின்றன பக்கங்கள் .

சார நாத் அடுத்து புத்த கயா..!

சார நாத்ல் புத்தர் சமணர்களுடன் இணைந்து தவமிருந்து, வெறும் உடல் மட்டும் மெலிந்து ஞானத்திற்காக போதி மரம் தேடி கயா க்கு செல்கிறார். அதை விளக்கும் காரணங்கள், 
செல்லும் வழியில் தம்மை பாதித்த விஷயங்கள் என அனைத்தையும் ரசிக்கும் விதத்தில் அள்ளித் தருகிறார்.

புத்தகயா அமைந்துள்ளது காசியிலிருந்து 250கிமீ தள்ளியுள்ளது எனவும் அங்கு அமைந்துள்ள புத்த விஹார்கள், புத்த சபாக்கள், அங்கு ஒவ்வொரு விஹார்கள் , வழிபடும் முறை..ஏன் புனிதத்தன்மைப்பெறுகிறது அங்கெல்லாம் புத்தர் என்ன போதித்தார் என தகவல்களைப்படிக்க முடிகிறது!

நாளந்தா.. கிமுவில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வானியல், மருத்துவம், மொழி, ஆன்மீகம் சார்ந்த படிப்புகள்..மாணக்கர்களைக்கொண்டிருந்ததை வரிகளால் விளக்கி , படங்களுடன் நம் மனதில் பதியமாகிறது!

கில்ஜி படையினரால் அழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் படிக்கும் போதே கண்ணீர்துளிக்க, நாகரீகமே தெரியாத உலகில்..சிகரமாக வாழ்ந்திருக்கிறோமே என்ற உணர்வை எழுப்புகிறது!

கில்ஜி யின் அழிப்பினால்..தொடர்ந்து பாதிக்கப்பட்ட காசி நகரம், நம் மன்னர்கள் கோட்டைகள், கயா, நாளந்தா என மனம் புரண்டு அழுகிறது படிக்கும் போது !

சமணர்கள் தவம் செய்த, புத்தரின் புனித இடமாகவும் அவர் சீடர்களுக்கு போதித்த இடமும் ஆன ஏழு மலைகளுக்கிடைப்பட்ட ராஜ் கீர் என்ற இடமும் முன்னர் மகத நாட்டின் தலை நகர் அதற்கான விவரிப்புகள் அங்கு செல்லும் வழி என நகைச்சுவை இழையோட நமக்கும் தெரிவிக்கிறார்.

மீண்டும் பாட்னா வருகை, அங்குள்ள தானியம் சேமிக்கும் கோடவுன், படகு சவாரி, கங்கைக்குளியல் என நாமும் களிக்கிறோம்!

கடைசியாக எதோ மிஸ்ஸிங் போலவே என நாம் நினைக்கும் போதே..கங்கையின் ஆர்த்தியும் கண்களில் காமிக்கப்பட்டு..புத்தகம் நிறைவுறுகிறது !

வழுவழுப்பான கவிதா பப்ளிகேஷனில் வெளிவந்துள்ள இந்தப்புத்தகம் கல்கியில் தொடராக வெளிவந்ததன் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

மிக அழகான படங்களுக்கும், வர்ணனைகளுக்கும், வரிகளுக்கும், சிந்தனைகளுக்கும் சொந்தக்காரரன அந்த ஆசிரியர், எழுத்தாளர் திரு. ரமணன் அவர்கள்.
Ramanan Vsv அவர்கள்.

இவர் வங்கியில் உயர்பதவி வகித்தவர், சமூகம்,அரசியல், வரலாறு என பல ஜான்ர்களில் விரிவாக தன் படைப்புக்களை புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்.

அவரது முன்னுரை, பதிப்பாளரது பதிப்புரை..நம் ஆவலைத்தூண்டி உள் தள்ளிட..நிறைவான நெகிழ்வான பயண அனுபவத்தைப்பெறுகிறோம் !

ஆனாலும்..நாமும் பார்க்கவேண்டுமே இந்த இடங்களை என்ற ஆர்வமும் அதிகமாகி, இவரைப்போலவே இணைந்தப்பல விஷயங்களைக்கூச்சமின்றி கேட்டு தெளிவுறவேண்டும் என நினைக்கிறது மனம் !

கங்கைக்கரை ரகசியங்கள் , கங்கை காசியை உணர்ந்துக்கொள்ளவேண்டிய பார்க்கவேண்டிய சக்தி அதிர்வுகளின் ஆணி வேராக அறிய வைக்கும் பயணப்படத்தூண்டும் புத்தகம் .

அகோரிகள், கங்கையில் மிதக்கும் பிணங்கள் பற்றி நாம் டாகுமெண்ட் ரி க்களில் பார்த்தவை இதில் இல்லாமல் போனாலும் கங்கையின் வாசத்தை புராதனத்தை , அறிவை நிறைவைத்தருகிறது !

கங்கைக்கரை ரகசியங்கள் பற்றிய ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்த நான் நாளை ..வேறொரு புத்தகத்துடன் சந்திக்கிறேன் !

கவிதா பதிப்பகம், ஏப்ரல் 2016 ல் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை 140 ரூ.


சுமிதா ரமேஷ்    ஷார்ஜா 

---------கடைசிக் கோடு: இந்தியாவின் வரைபடம் பிறந்த கதை 


ஒரு தேசத்தின் முகவரி அதன் வரைபடம். இன்றைக்கு அதைத் தயாரிக்க வளர்ந்த தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. வரைபடம் தயாரிப்பதற்காகவே படங்கள் எடுக்கும் விசேஷ காமிராக்கள் பொருத்தப்பட்ட விமானங்கள், விண்ணிலிருந்து படமெடுத்து வினாடிகளில் அனுப்ப செயற்கைக் கோள்கள், அந்த விபரங்களை சரிபார்ப்பதற்கென்றே தயாரிக்கப்பட்ட மென்பொருளுடன் தரையில் காத்திருக்கும் கணணி எனப் பல வசதிகளுடன் மேப்கள் தயாரிப்பது என்பது தனியொரு இயலாகவே வளர்ந்திருக்கிறது.

ஆனால் இந்திய தேசத்தின் முதல் சரியான வரைபடம் உருவான காலத்தில் இந்த வசதிகளை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. 1800ஆம் ஆண்டு துவங்கி 40 ஆண்டுகள் போராட்டமான நீண்ட 1600 மைல் பயணத்தில் சுட்டெரிக்கும் வெயில், கடும் மழை, வெள்ளம் புயல் போன்ற பெரும் இயற்கையின் சீற்றங்களுடன் போராடி, விஷக் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களினால் நேர்ந்த பல ஆயிரக்கணக்கான உழைப்பாளர்களின் மரணம்.

அதிகார வர்க்கத்தின் ஆணவம், மக்கள் எதிர்ப்பு போன்ற சவால்களுடனும் போராடி, அங்குலம் பிசகாமல் மிகுந்த கவனத்துடன் நாட்டின் நீள, அகலங்களை அளந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது நமது இந்திய தேசத்தின் முதல் வரைபடம்.

காடுகளிலும், மலைகளிலும், சிறிய கிராமங்களிலும், நதிகளிலும், ஆபத்தான இடங்களிலிருந்தும் அளவுகளைக் குறித்து, கணக்கிட்டு, சரிபார்த்து இந்த வரைபடத்தை தயாரித்து முடிப்பதற்குள் இந்தப் பணியில் பலியானவர்களின் எண்ணிக்கை அந்த காலகட்டத்தில் நடந்த எந்த ஒரு போரைவிடவும் அதிகம். நீண்ட அந்த சர்வே பணியின் இறுதியில் வரைபடத்தின் கடைசிக் கோடு முடிந்த இடம் இமயத்தின் பாதம். "அறிவியல் வரலாற்றிலேயே மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரமாண்டமான, பிரமிப்பான பயணம்" என புவியியல் ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நீண்ட நெடும்பயணத்தின் முடிவில் கிடைத்தது, இந்திய தேசத்தின் வரைபடம் மட்டுமில்லை. உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரம் இந்தியாவில் இமயமலைப் பகுதியில் இருப்பது என்பதையும்தான். அந்த மலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் உயர்ந்த சிகரத்திற்கு ஏன் எவரெஸ்ட் என்று பெயரிடப்பட்டது என்பதற்கான காரணத்தை அறியும்போது நம் நெஞ்சம் நெகிழ்வது நிஜம்.

 

கருணை (சிறுகதைத் தொகுப்பு)

கல்கி இதழின் முன்னாள் ஆசிரியர் திரு வி. எஸ். வி. ரமணனின் இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரெண்டு கதைகள். எல்லாக் கதைகளுமே நம்மைச் சுற்றி எங்கோ நடந்த உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொன்றும் வேறு வேறு களம். வேறு வேறு பிரச்சனைகள். சில சொல்லப்பட்ட தீர்வுகள். சில சொல்லப்படாமல் படிப்பவரின் புரிதலுக்கு விடப்பட்ட தீர்வுகள்.

முதலில் ”முகம்”. போரில் மாண்டு போகும் ஒரு ராணுவ வீரனின் இறுதி சடங்கை விவரிக்கும் கதை. கதையைப் படிக்கும் போது இத்தனை விதிமுறைகளா என்று யோசிக்கத் தோன்றுகிறது. அதுவும் குண்டு பட்டு சேதமடைந்த அந்த வீரனின் முகத்தைப் பார்க்கக் கூட உறவினர்கள்.. முக்கியமாக கர்ப்பிணி மனைவி அனுமதிக்கப் படாமல்.. படித்து முடித்ததும் நெஞ்சு கனத்தது. கண்கள் கலங்கின.. பாதிப்பு நீங்கி அடுத்த கதைக்குச் செல்ல ரொம்பவே அவகாசம் தேவைப் பட்டது.

செருப்பு” கதையில் வரும் கணபதிக்காக நம் மனம் அழுகிறது. காதர் பாய் கடையில் பார்த்து வைத்திருக்கும் செருப்பை வாங்க பணம் சேர்க்க வேண்டும். அதற்காக அரசியல் கூட்டத்தில் பிளாஸ்கைத் தூக்கிக் கொண்டு மாங்கு மாங்கென்று டீ விற்கிறான். ஆனால் இறுதியில் நடப்பது என்ன? நாமே கணபதிக்கு அந்த செருப்பை வாங்கிக் கொடுத்து விடலாமா என்று நினைக்க வைக்கிறது இந்தக் கதை.

புத்தகத்தின் தலைப்புக் கதை ”கருணை”. பிறந்ததிலிருந்து பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகி இயங்காமல் கிடக்கும் மகளின் கருணைக் கொலைக்கு மனு தாக்கல் செய்து வழக்கு தொடுக்கிறாள் ஒரு அபலைத் தாய். ஆனால் நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் அவளை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இறுதியாக ஒரு வழியாக தீர்ப்பு வரும் சமயத்தில்.. தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியாத குழப்பத்தில்.. கருணை அடிப்படையில் இயற்கையின் தீர்ப்புடன் இன்னல்கள் முடிவடைகிறது. முகம் கதையைப் போலவே இந்தக் கதையைப் படித்த பின்னும் நெஞ்சில் பாரம் ஏறியதை தவிர்க்க முடியவில்லை.

புலம்பெயர்ந்த கட்டிடத் தொழிலாளர்களின் பிரச்சனையை அலசும் ”இடைவெளி”, காணாமல் போகும் மறதிக்கார ”அப்பா”வை தேடும் தவிப்பு, பள்ளிக்குச் சென்ற குழந்தை வீடு திரும்பாமல் போக பெற்றவர்களின் ”தேடல்” தவிப்பு.. அப்பாவி இளைஞர் எப்படி அரசியல் விளையாட்டுக்கு அடிமையாகிறான் என்பதை விவரிக்கும் “ஆடு”.. இப்படி ஒவ்வொரு கதையும் நிச்சயம் மனதைத் தொடும்.

எத்தனையோ நிரபராதிகள் தீவிரவாதிகளாக குற்றம் சாட்டப்பட்டு பல சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவனான காஷ்மீரைச் சேர்ந்த அப்ஸலின் கதி என்ன ஆகிறது? அவனை விடுவிக்க போடப்பட்ட வழக்கின் தீர்ப்பு அவனுக்கு சாதகமாக முடியுமா? இது தான் “தீர்ப்பு” கதையின் ஓட்டம். அப்ஸலின் தீர்ப்பை அறிவிக்காமலே கதை முடிகிறது. முடிவு.. வாசகரின் கற்பனைக்கு..

போர் மூண்ட யுக்ரேன் நாட்டில் தவிக்கும் இந்திய மாணவர்களின் தவிப்பை படம் பிடித்துக் காட்டியது “நம்பிக்கை” என்ற கதை.

ன“வைராக்கியம்” எதிர்பார்த்த முடிவு தான் என்றாலும் பல கோபால்சாமி நாயகர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அதே சமயத்தில் கிரிஷ் தம்பதியரைப் போல் நல்லுள்ளங்களும் இருக்கத் தான் செய்கின்றன.

கடிதம்” ஒரு விழிப்புணர்வு கதை. மனைவியை மதிக்காமல் தவறு செய்கிறோம் என்பது உரைக்காமலே இருக்கும் கணவன்மார்களுக்கு ஒரு பாடம். அதுவும் வி.ஆர்.கே. மனைவியின் குற்றச்சாட்டு கடிதத்தை பத்திரிகையில் பிரசுரிக்கச் சொல்வது வித்தியாசம். தொடர்ந்து மனைவியின் எழுத்தாற்றலை ஊக்குவிப்பது பிராயசித்தம். பெண் என்பவள் கணவனையும் புகுந்த வீட்டையும் விட்டுக் கொடுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் ஆசிரியர் கதையை முடித்திருக்கிறார்.

ஆடம்பரமில்லாத சாதாரண வார்த்தைப் பிரயோகங்கள். எளிதான அதே சமயத்தில் வழுக்கிக் கொண்டு போகும் நடை.

ஒரே மூச்சில் படித்து விடலாம் என்று நான் சொல்ல மாட்டேன். காரணம் ஒவ்வொரு கதையைப் படித்த பின்பும் அதில் ஆழ்ந்த்து அசை போடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வளவு தாக்கம்..

அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்..

--- எஸ். எல் நாணு 

-----------------------------------                               ------------------------------------


அவரது 'கடைசிக் கோடு' புத்தகம், ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று!

பள்ளி நாட்களில் இந்தியாவின் வரைபடத்தையும், அதில் தலைநகரங்கள், ரயில்,விமான மார்க்கங்கள் எனக் குறிப்பது பரிட்சையில் மார்க் வாங்க மட்டும் தெரிந்து கொண்டது! அந்த வரைபடம் உருவான கதையை, ஆதாரபூர்வமாக மிக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் திரு ரமணன் !

அன்றைய பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள், கர்னல், கவர்னர்கள், அவர்கள் எண்ணங்கள், திட்டங்கள், நடைமுறைகள் என 19 ஆம் நூற்றாண்டுக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்.

லாம்டன், எவரெஸ்ட், ஸ்காட் வாக் ஆகியோரது விடாமுயற்சியும், உழைப்பும் பிரமிப்பூட்டுபவை! வசதிகளே இல்லாத காலத்தில், குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவை சர்வே செய்து - மிமி கூட பிசகாமல் - இந்திய வரைபடத்தை - எல்லைகள் மட்டுமின்றி, நீள,அகல உயரங்களையும் அளந்து - நமக்களித்துள்ளனர்!

அதே அளவு முயற்சியெடுத்து, இப்புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் ரமணன் என்றால் அது மிகையல்ல!

மூன்று அடி உயர தியோடோலைட் , நூறு அடி நீளமுள்ள சங்கிலி (இரண்டரை அடி நீளமுள்ள 40 சிறிய இரும்புப் பாளங்கள் பித்தளைக் கீல்களால் இணைக்கப் பட்டது) இவை இரண்டும் பயன் படுத்தப் பட்டத்தையும், இவற்றின்மீது கர்னல் லாம்படனுக்கு இருந்த காதலையும், டிரிக்னோமெட்ரிக் சர்வே செய்முறையையும் உணர்ச்சிபூர்வமாய் விவரித்துச் செல்கிறார்!

அன்றைய இந்திய சமஸ்தானங்களின் ஒற்றுமை, வலிமையையும், தென்னிந்திய தொழிலாளிகளின் அறிவு கூர்மை, உழைப்பு, திறமையையும் பெருமையுடன் சொல்கிறார்!

எவரெஸ்ட் சிகரம்தான் உலகிலேயே உயரமானது என்பது கண்டறியப் படுவதை, ஒரு துப்பறியும் நாவலின் சுவையுடன் சொல்கிறார்! சீடன் மேஜர் வாக், தன் குருநாதர் எவரெஸ்டின் பெயரை அந்த உயரமான சிகரத்துக்கு சூட்டி மகிழ்வதை, "குருபக்தியின் எவரெஸ்ட்" என வியக்கிறார்!

கர்னல் லாம்படன், டிபி நோய் தாக்கப்பட்டு, இந்தியாவிலேயே இறக்கிறார். நாகபூரிலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள ஹன்ஸ்காட் என்ற கிராமத்தில் அவரது கல்லறை கேட்பாரற்றுக் கிடக்கிறது. 20 ஆண்டுகள் இந்திய வரைபடத்தின் சர்வேக்காகத் தொடர்ந்து உழைத்து, உயிரை விட்ட நல்ல அதிகாரிக்கு, இங்கு அளிக்கப்படும் மரியாதை குறித்து வருத்தப் படுகிறார் - ஆத்மார்த்தமான வருத்தம்.

'குமர்ப்பூ' என்ற தமிழ்நாட்டுப் பெண்ணை லாம்படன் மணந்து கொண்டுள்ளார்.

பதேபூர் சிக்கரியில் சர்வே செய்யும்போது, அக்பர் சமாதியின் பெரிய தூணின் உயரம் குறைக்க, மேல்பகுதியில் கொஞ்சம் உடைத்துவிடுகிறார்கள். உள்ளூர் காஜியின் படை வீரர்கள் இவர்களைக் கைது செய்துவிட, எவரெஸ்ட் ( லாம்படனின் முதல் உதவியாளர்) மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, தூணையும் சரி செய்தபிறகே மேலே சர்வேயைத் தொடர முடிகிறது!

இடையே எழும் இயற்கைக் சீற்றங்களும், எதிர்பாரா நிராகரிப்புகளும், ஆச்சர்யமான திருப்பங்களும், மலேரியாவும், இறப்புகளும் ஒரு சுவாரஸ்யமான நாவல் வாசிக்கும் அனுபவத்தைத் தருகின்றன!

" ஒரு தேசம் உருவானத்தைச் சொல்வது சரித்திரம். அந்த தேசத்தின் வரைபடம் நமக்குச் சொல்லுவது பூகோளம். இந்த கடைசிக் கோடு ஒரு இந்திய பூகோளப் படம் எழுந்த சரித்திரத்தைச் சொல்லுகிறது!"

 

 _______________________________ -------------------------------------------------------------

இன்றைய தினமலர் வாரமலர் மூத்தபத்திரிகையாளர் சுதாங்கன் எழுதியிருப்பது

பார்த்தது,படித்தது, ரசித்தது.

அந்த நெல்லைக் காரரின் புத்தகம் தபாலில் வந்தது!

பிறகு படிக்கலாம் என்று தான் புரட்டினேன்!

ஆனால் அந்த புத்தகம் என்னை அப்படியே உள்ளே இழுத்தது!

151 பக்கம் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்!

புத்தகத்தின் தலைப்பு: நேருவின் ஆட்சி ! பதியம் போட்ட 18 ஆண்டுகள்!

எழுதியவர் ரமணன்!

இவரை எனக்கு 1980 களுக்கு முன்னாலிருந்தே தெரியும்!

நடுவில் பல ஆண்டுகள் அவருடைய வங்கி அதிகாரி வேலை அவர் அதிகமாக எழுதுவதிலிருந்து தள்ளி வைத்திருந்தது!

இப்போது படுவேகமாக எழுத ஆரம்பித்திருக்கிறார்!

எழுதுவதற்காக படிப்பது ஒரு வகை!

படிப்பதை ஒரு ஆர்வமான காதலாக கொண்டவர்கள் இன்னொரு வகை!

ரமணன் இரண்டாவது வகை!

அதனால்தான் இந்திய சுதந்திர ஆரம்ப நாட்களை இத்தனை ஆழமாகவும் அழுத்தமாகவும் இவரால எழுத முடிந்திருக்கிறது!

இது ரசனையுள்ள வாசகனுக்கான புத்தகம் மட்டுமல்ல! அரசு பணியில் சேர விரும்புகிறவர்களுக்காக ஒரு இந்திய சரித்திரத்தின் சுருக்கமான வரலாறு!

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு நேரு ஆட்சி குறித்து பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது!

திடிரென்று புதிய ஆட்சியாளர்கள் மறந்து போன வல்லபாய் படேலை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்!

அவரை மதவாதி என்கிறது காங்கிரஸில் ஒரு கூட்டம் !

ஆனால் ஆர்.எஸ்.எஸ்.. இயக்கத்தை தடை செய்ய வேண்டுமென்று தீவிரமாக இருந்து அதை செய்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் படேல் என்பதை ஆழமாக பதிய வைத்திருக்கிறது இந்த நூல்!

பாரபட்சமற்ற ஒரு பத்திரிகையாளனுக்கே உரிய ஒரு நேர்மையான எழுத்தாளப் பார்வையை இந்த புத்தகத்தில் பார்க்கமுடிகிறது!

நேருவை போற்றவும், தூற்றவும் செய்வதற்கு முன்னால் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது!

இன்றைய இந்தியாவின் பெருமைகள், சிறுமைகள் இரண்டிலுமே நேரு தான் கதாநாயகர்!

ஜனநாயகம்,நேர்மை, நல்லாட்சி , தொலைநோக்குப் பார்வை இவை நேரு ஆட்சிக் காலத்தின் அடையாளங்கள்!

மொழிப் பிரச்னை, எல்லைப் பிரச்னை, நதிநீர் விவகாரம், வெளியுறவுக் கொள்கை குளறுபடிகள் இதன் தொடக்கப் புள்ளியும் நேருவின் ஆட்சிக் காலமே!

காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. சபைக்கு கொண்டு போனதும் நேருதான் என்கிறார்கள்!

உண்மைதான்! அதை எந்தப் பின்னனியில் கொண்டு சென்றார்?

அதற்கு பதில் இங்கே உள்ளது!

சீனாவுடனான யுத்தத் தோல்விக்குக் காரணம் நேருவின் தவறான கணிப்பு என்கிறார்கள்!

இதன் பின்னனி என்ன ? இங்கே பதிவு உண்டு!

அடுத்த தலைமுறை மீது அக்கறை கொண்ட ஒரு சரியான மனிதரின் அக்கறையான பதிவு இந்த புத்தகம்!

இது சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் வெளியிடு!

(நன்றி: நெல்லை தினமலர் வாரமலர்!)


 ____________________________    


காற்றினிலே வரும் கீதம்.

சொற்களால் ஒரு சினிமா

சொன்னால் நம்புவதற்கு சிரமமாகத்தானிருக்கும். ஆனாலும் சொல்கிறேன். நான் திரைப்படம் பார்த்து வெகுநாளாயிற்று.அரங்கிற்குச் சென்று மட்டுமல்ல, வீட்டிலிருந்தே கூட. நான் எந்த ஓடிடி தளங்களுக்கும் சந்தாதாரர் இல்லை. பிரைமில் சேர்ந்து கொள் டெலிவரி இலவசம் என்று அமேசான் ஆசை காட்டிய போதும் அதை திடமாக நிராகரித்திருக்கிறேன்.

பார்க்கக் கூடாது என்ற வைராக்கியம் ஏதுமில்லை. என்னவோ அதற்கான உந்துதல் இல்லை, அவ்வளவுதான்.இத்தனைக்கும் ஒரு காலத்தில் இணை சினிமா என்று சொல்லப்படுகிற உள்நாட்டு, வெளிநாட்டுத் திரைப்படங்களைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு வாரமும் தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு ஓடி வந்தவன்தான் நான். 70களின் தொடக்கத்தில் நானே கூட ஒரு குறும்படம் -16 எம் எம்மில்- தயாரித்திருக்கிறேன்

வெகு நாள்களுக்குப் பின் இன்று ஒரு திரைப்படம் பார்த்தேன்.. வண்ணத்திரையிலோ சின்னத் திரையிலோ அல்ல. என் மனத்திரையில். அரங்கிலோ, இணையத்திலோ அல்ல. புத்தகத்தில்!

ஆம்! புத்தகத்தில்! இதோ உங்கள் கையிலிருக்கும் புத்தகத்தில் நீங்களும் பார்க்கலாம். கற்பனை செய்யும் திறமை என்றெல்லாம் தனியே எதுவும்  வேண்டாம். வெறுமனே படித்துக் கொண்டே வாருங்கள். உங்கள் மனதில் காட்சிகள் தானே விரியும். அப்படி ஒரு எழுத்து நடை

அப்படி ஒரு வாழ்க்கையும் கூட.! மனைவி என்ற அந்தஸ்தைப் பெறாத தாய், அவருக்கு ஒரு சாதனைப் பெண், அந்தக் குழந்தைக்காகத் தன்னைத் தியாகம் செய்து கொள்ளும் அம்மா, மகளுக்கு அந்த அன்னையின் மீது மட்டற்ற பாசம் ஆனால் அதே நேரத்தில் கைவிடமுடியாத காதல், பெறாத குழந்தையைப் பேணி வளர்க்கும் தாய், எதிர்பாராத சினிமா பிரவேசம், அதில் இமாலய வெற்றி, வெற்றியைத் தொடர்ந்து விலகல், உலகப் புகழ், தேசத்தின் உச்ச பட்ச விருது, அநாதை இல்லங்களுக்கு வாரி வாரிக் கொடுத்த கை சொந்த வீடு இல்லாமல் நொடிக்கும் துயரம், அந்த நேரத்தில் அவர் மீது பொழியப்படும்  ஆண்டவன் அருள்!

இதை திரையில் பார்க்க நேர்ந்தால் பார்ப்பவர்கள் வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்வார்கள். விழியோரம் நீர் துளிக்க விசும்பலோடு எழுந்து வருவார்கள். எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றி எவருக்கேனும் என்றைக்கேனும் பயோபிக்எடுக்கும் எண்ணம் எழுந்தால் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்தப் புத்தகமே வார்த்தைகளால் அமைந்த ஒரு பயோபிக்தான். A verbal biopic. தமிழுக்கு இது ஒரு புதுவகை

நானும் கூட விழியோரத்தில் நீர் திரளத்தான் நூலை மூடி வைத்தேன். உலகத்தையே தன் குரலால் வசப்படுத்திய இசை அரசி தன் இறுதி நாள்களில், இசைக் கச்சேரி கேட்க நேர்ந்தால் ஐயோ, அதை கொஞ்சம் நிறுத்துங்களேன்எனக் கோருவது எத்தனை பெரிய துயரம்!

என் நினைவுகளை அது கிளறியது. அபூர்வ சகோதரர்கள் படம் வெளியானபோது கமல்ஹாசன் பற்றி இந்தியா டுடேயில் ஒரு கட்டுரை எழுதத் தீர்மானித்தோம். அதில் சிவாஜிகணேசனின் ஒரு மேற்கோள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. சிவாஜி அப்போது இதயத்தில் பிரசினை ஏற்பட்டு உடல் நலம் தேறிக் கொண்டிருந்தார். அப்பாயின்மெண்ட் வாங்கிக் கொண்டு அவரை சந்திக்க அன்னை இல்லம்போனபோது ராம்குமார் என்னை வரவேற்றார். “அப்பாவை டாக்டர்கள் அதிகம் பேச வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் ஐந்து நிமிடத்தில் வேலையை முடித்துக் கொண்டு வந்து விடுங்கள்” என்றார். “எனக்குத் தேவையானது ஒரு ஐந்து வரி மேற்கொள். அதனால் அதிக நேரம் வேண்டியிருக்காதுஎனச் சொன்னேன்.

நான் சிவாஜியின் அறைக்குள் நுழைந்த போது அவர் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ கெளபாய் படம். குதிரைகள் மணலை வாரி இறைத்துக் கொண்டு பறந்து கொண்டிருந்தன. டுப் டப் என்று இரண்டு நிமிஷத்திற்கொரு முறை ஒருவரையொருவர் சுட்டுக் கொண்டிருந்தார்கள். “என்ன இதைப் பார்த்துக் கொண்டிருக்கீங்க?” என்று நான் கேட்டேன். இதழியலில் அது ஒரு உத்தி. ஐஸ்பிரேக்கிங் என்று சொல்வார்கள். பேட்டி அளிப்பவரை அவருக்கு செளகரியமான இடத்திலிருந்து பேசத் தொடங்க வைக்கப் பயன்படும் உத்தி. “அதையேன் கேக்கறீங்க” என்றார் அந்த அறையில் அமர்ந்திருந்த அவரைக் கவனித்துக் கொள்ள அமர்த்தப்பட்டிருந்த செவிலியர்.” நானும் சொல்லிட்டிருக்கேன். தில்லானா மோகனாம்பள் போடுங்க, கட்ட பொம்மன் போடுங்க, கப்பலோட்டிய தமிழன் போடுங்கனு. அவர் கேக்கமாட்டேங்கிறாரு!” என்றார்.அடுத்த கணம் சிவாஜி பட்டென்று சொன்னார்: “ஐயோ அதையெல்லாம் பார்த்தால் நான் செத்துருவேன்!”

சிகரங்களைத் தொட்டவர்களுக்கு தங்கள் உடல் நலிவுற்றிருக்கும் போது அதைத் திரும்பிப்பார்த்தால் இப்படியொரு எண்ணம் எழும் போலும்!

ஆனால் நான் என் மரணத்தறுவாயில் ஏதேனும் கேட்க விரும்பினால் அது எம்.எஸ்சின் விஷ்ணு சகஸ்ரநாமமாகத்தானிருக்கும். எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. அந்தத் தோத்திரத்தின் அர்த்தம் தெரியாது. ஆனால் அந்தக் குரலில் இருக்கும் கம்பீரம்,குழைவு, இனிமை! அதற்கு இணையேதும் இல்லை.

இன்னும் அது யுகங்களுக்கு நீடிக்கும். அவர் குரல் நீடிக்கும் வரை அவர் நினைவு நீடிக்கும். அவர் நினைவு இருக்கும் வரை இந்தப் புத்தகம் நின்று நிலைக்கும்

ஏனெனில் அவர் குரலில் நாம் சந்திக்கிற அதே கம்பீரத்தை இதன் நடையில் காணலாம். சாதனைகளுக்குப் பிறகும் செருக்கில்லாத அவரது  எளிமையை இதன் விவரிப்பில் காணலாம். இதில் அவரைப் பற்றிய புகழ்ச்சி ஏதும் இல்லை.ஆனால் அவர் மீதான வாஞ்சை இருக்கிறது. மிகையாக ஏதும் சொல்லப்படவில்லை.ஆதாரங்களோடு அவர் வாழ்க்கை பேசப்படுகிறது.

ஒருவகையில் இது சதாசிவத்தின் வரலாறும் கூட. எளிய மனிதர்கள் எம்.எஸ்ஐ அறிந்த அளவு அந்த மனிதரை அறிய மாட்டார்கள். இதழியலில் புழங்கிய ஒரு தலைமுறையினருக்கு அவர் ஒரு லெஜண்ட், எம். எஸ் க்கு வேராக இருந்ததும். வேருக்கு நீராக இருந்ததும் அவர்தான். எம்.எஸ் என்ற பறவை இமயத்தின் முகடுகளுக்கும் மேலே எழுந்து பறந்ததென்றால் அதன் சிறகாக இருந்ததும் அவர்தான்

இந்த நூலைப் படிக்கும் முன் எம் எஸ் என்பவர் என் மரியாதைக்குரியவராக இருந்தார். அதற்குக் காரணம் அவர் கல்கி என்ற இதழ் தொடங்க நிதி அளித்தார் என்பது. என்னைப் பொறுத்தவரை கல்கி இதழ் தமிழ் இதழியலில் ஒரு சாதனைக் கல்.தமிழ்ப் புனைவுலகிற்கு அது அளித்த கொடைகள் ஏராளம். தேசியச் சிந்தனையை விதைத்து வளர்த்த முன்னோடி.

ஆனால் இந்த நூல் எம்.எஸ்சின் வேறு பல பரிமாணங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது.அவரது தன்னம்பிக்கை, அவரது முற்போக்கான பார்வை, கடைசிவரை இருந்த கற்கும் ஆர்வம். கடின உழைப்பு இப்படி அவரது ஆளுமையின் பல பக்கங்களை இதன் மூலம் அறிந்து கொண்டேன். நூலாசிரியர் ரமணனுக்கு நன்றி

அவர் இன்னும் பல சொற்களால்  அமைந்த வாழ்க்கைச் சித்திரங்கள் (verbal biopics) அளித்து தமிழின் அந்தத் துறையை வளப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்

மாலன்    

 

__________________________________________-----------------


 ·        வாய்ப்பு

·        வர்த்தகம்

·        விவசாயம்

இதழ்கள்  தினமணி கதிர்

ஒன்ஸ் மோர்

Last Updated on : 02nd October 2016 12:00 AM  |   + -   |  

 

 

அடையாற்றின் கரையில் உள்ள கோட்டூர்புரம் ஓர் அமைதியான பகுதி. நுங்கம்பாக்கத்திலிருந்து மாறி இந்த அதிகம் சந்தடியில்லாத இடத்திலிருந்த "சுபம்சிவம்இல்லத்தில்தான் சதாசிவமும் எம்.எஸ்ஸும் வசித்து வந்தனர். சிறிய அந்த அழகான வீடு எப்போதும் இசையால் நிரம்பியிருக்கும். நுழையும்போதே தம்பூரா ஒலி பூஜை அறையிலிருந்து பரவிக் கொண்டிருக்கும்.

கல்கி தோட்டம்போல பரபரப்பாக இல்லாவிட்டாலும், தினசரி சந்திக்க வருபவர்களுக்குக் குறைவில்லை. வருபவர்களை அவருக்கே உரிய இயல்பான இன்முகத்தோடு வரவேற்று உபசரிப்பார் எம்.எஸ். வருபவர்களை இளையவர்களானால் வாஞ்சையோடு, "பாட்டு கற்றுக் கொள்கிறீயா?'' எனக் கேட்டு பாடச் சொல்லிக் கேட்பார்.

ராதாவின் துணையில்லாததால் மனம் சோர்ந்திருந்தவருக்கு உடல் நலமும் குன்ற ஆரம்பித்தது. சர்க்கரை நோய், மூட்டு வலி போன்ற உபாதைகளினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். கச்சேரிகள் செய்வதற்கான அழைப்புகளை ஏற்காதிருந்தார். இந்தக் கட்டத்தில்தான் எதிர்பாராமல் நிகழ்ந்தது சதாசிவத்தின் மரணம். இது அவரை மிகவும் தாக்கியது. வாழ்க்கையே இருண்டு போனதுபோல் உணர்ந்தார். எப்போதும் அவரின் நினைப்பில் தனிமையில் இருந்தார். பூஜை அறையில் மட்டும் பாடிக் கொண்டிருந்தார். மகள் ராதா, பேத்தி கௌரி, விஜயா வந்தால் அவர்களுடன் சேர்ந்து ஏதாவது பாடுவார்.

கனத்த மனத்துடன் வாழ்க்கையில் பற்று குறைந்துகொண்டு வந்த நிலையில்தான் "பாரத ரத்னா' அறிவிக்கப்பட்டது. ஆத்மா போன்றவர்களின் வற்புறுத்தலால் தில்லி சென்றாரே தவிர, முழு மனமகிழ்வுடன் அதை அவர் பெற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து தில்லி அரசு அறிவித்த வாழ்நாள் சாதனை விருதைப் போய் வாங்கவில்லை. அவரது அன்புப் பேத்தி சீதா ரவி (கல்கி இதழின் ஆசிரியர்) தான் அவர் சார்பில் பெற்றார். அதில் கிடைத்த பரிசுத் தொகை 11 லட்சத்தையும் உருவாகிக் கொண்டிருந்த காஞ்சி முனிவரின் நினைவு மண்டபப் பணிக்குத் தரச் சொல்லிவிட்டார்.

நாட்கள் செல்லச் செல்ல உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது. பல நாட்கள் அமைதியாகி, பூஜை அறையில் பாடிக் கொண்டிருந்ததையும் நிறுத்தியிருந்தார். ஒருநாள் ராதாவின் வீட்டுக்குப்போன இடத்தில் விழுந்து இடுப்பில் அடிபட்டது. எலும்பு முறிவு இல்லையென்றாலும் அதற்கான சிகிச்சை பல மாதங்கள் தொடர்ந்தது. அது முழுவதும் சரியானபோது மறுபடியும் அதேபோன்று விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. அதனால் அறுவை சிகிச்சை, அதைத் தொடர்ந்து நீண்ட நாள் சிகிச்சை என்று துன்பங்கள் தொடர்கதையாயின. சிகிச்சைகள் மெல்ல  பலன் அளித்துக் கொண்டிருந்தாலும், மனம் அமைதியாக இல்லாமல் தவித்தார். அந்தக் கட்டத்தில் அவரைத் தாக்கியது மறதி நோய். இரண்டாயிரம் பாடல்களையும் ராகங்களையும் நினைவிலிருந்து எதையும் பார்க்காமல் பாடும் பாடகிக்கு மறதி நோய் வந்திருந்ததை ஆத்மா மிகுந்த வருத்தத்துடன் சொல்லக் கேட்டபோது மனம் உடைந்து போனது நிஜம்.

அதைவிடச் சோகம் வானொலி, தொலைக்காட்சியில் ஏதாவது கர்நாடக இசையைக் கேட்டால், "அதை நிறுத்து'' என ஆத்மாவிடம் சொல்லியிருந்ததுதான்.
 
உடல் நிலை மோசமானதால் 2004, டிசம்பர் 2-ஆம் தேதி இஸபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் எம்.எஸ். பத்து நாள் போராட்டத்தில் மருத்துவர்கள் தோற்றார்கள். விதி வென்றது. மல்லிகை தேசத்தில் பிறந்து மலர்ந்த அந்த தாமரை கடைசி விநாடியில் ஆத்மாவின் கையைப் பிடித்துக்கொண்டே வாடி விழுந்தது.

புனேவிலிருக்கும் திலிப் ராய் என்ற ஆன்மிக குருவின் ஆசிரமத்தில் எம்.எஸ். தங்கிப் பாடியபோது ஒரு நிகழ்ச்சியில் அவர் எம்.எஸ்ஸுக்காக எழுதிப் பாடிய கவிதை இது.
 

"இடையறாது பாடிக் கொண்டே
  
எங்களை அழகிலிருந்து
 
ஆனந்தத்திற்கு இட்டுச் செல்
 
ராதா கிருஷ்ண ஜோதியின்
 
நிரந்தர தீபமாய்
 
சுடர்விட்டுக் கொண்டே இரு''


எவ்வளவு அருமையான வார்த்தைகள். ஆசிரியர் கல்கி, வீணை பவானி என்ற கதையில்,  "பவானியை மற்ற மனிதர்களைப் படைத்ததைப்போல பிரம்மா படைக்கவில்லை. மோகனத்தையும் செஞ்சுருட்டியையும் சேர்த்துப் படைத்திருக்கிறார். பவானி செத்துப் போகும்போது அவளுடைய உடம்பு அப்படியே கரைந்து உருகி ராகங்களாகக் காற்றில் போகும்

 என்று வர்ணித்திருப்பார்அமரர் கல்கியின் இந்த வரிகள் எம்.எஸ்ஸுக்கானது என்றால் தவறில்லை.
 
பல்வேறு ராகங்களாகக் காற்றில் கரைந்து போன எம்.எஸ்., நமக்காகத் தினமும் காற்றிலே வரும் கீதமாக ஒலித்துக் கொண்டுதானேயிருக்கிறார்?

 

"காற்றினிலேவரும்கீதம்: இசையரசியின் வாழ்க்கைப் பயணம்'          என்ற நூலில் ரமணன்.

தொகுப்பு: கேசி

------------------------_--------------- - - -----------   ------


கருணை 

என் ரசனையைப் பற்றி எனக்கு எப்போதுமே ஒரு உயர்ந்த அபிப்ராயம் உண்டு. அதனாலேயே லேடீஸ் ஸ்பெஷலுக்கு வரும் படைப்புக்களைப் படிக்கும் போது ,எழுதியவரின் பெயரை நான் முதலில் பார்ப்பதில்லை. படிக்க ஆரம்பித்து விடுவேன்.
என்னை விறு விறு வென்று படிக்க வைத்தால் அது சுவாரசியமான படைப்பு, வாசகர்களுக்கும் அது பிடிக்கும் என்பது நிச்சயம்.
அப்படி என்னை மூன்று மணி நேரத்தில் கீழே வைக்க விடாமல் படிக்க வைத்த புத்தகம் தான் திரு.ரமணன் அவர்களின் “கருணை” சிறுகதைத் தொகுப்பு.
கவிதை உறவு அமைப்பில் சிறந்த சிறுகதை நூலாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட இந்த நூலை அந்தப் பரிசளிப்பு விழாவில் ஆசிரியர் எனக்குப் பரிசளித்தார்.
வரும் எல்லா நூலையும் புரட்டுவது போல் தான் அன்று இரவு
9 ½ மணிக்கு இந்தப் புத்தகத்தையும் திறந்தேன்.
மூன்று மணி நேரத்தில் கீழே வைக்காமல் படித்து முடித்து விட்டேன்.
“முகம்" முதல் கதை. ராணுவக் கணவன் ஆறுமுகத்தின் மேல் வள்ளியின் அன்புக் காதலில் ஆரம்பிக்கும் கதை,விறு விறுவென்று செந்தில் நாயக்கரின் கலக்கம், ஊரின் அதிருப்தி, ராணுவக் கட்டளை, கர்னல் ரவியின் கவனமான வார்த்தைகள் என்று நகர்ந்து கண்ணீர் மறைக்கும் வள்ளியின் கண்கள்,அசோக சக்கரத்தில் தெரியும் ஆறுமுகத்தின் முகம் என்று முடிகிறது.
நாம் எல்லோருமே படித்திருக்கும் ஒரு சம்பவத்தின் பாதிப்பு தான் இந்தக் கதை என்று தெரிந்தாலும் அதை இவ்வளவு உணர்ச்சி பொங்க சொல்ல முடியுமா என்று வியக்கும் வண்ணத்தில் எழுதப்பட்ட கதை.
தொடரும் “செருப்பு", “கருணை”,”இடைவெளி",”அப்பா” என்று இன்னும் எல்லாக் கதைகளிலுமே நமக்குத் தெரிந்த ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சியின் பாதிப்பு தான் கதையாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் அதை ஒட்டிய விவரணைகளில் தான் ஆசிரியரின் தனித்துவம் புலப்படுகிறது.
ஆசைப்பட்ட செருப்பே வேண்டாம் என்று முடிவெடுத்த கணபதி,
மகளைக் கருணைக் கொலை செய்ய கோர்ட் படி ஏரும் சீதா,
குழந்தைக்குத் தான் கொடுத்த பாலில் விஷம் கலந்திருக்கிறது என்று தெரியாமலேயே கணவனுக்கு எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் லக்‌ஷ்மி,அப்பாவைத் தொலைத்து விட்டுப் பரிதவிக்கும் சுபஸ்ரீ, குங்குமப் பூ விற்கப்போய் என்ன குற்றம் செய்தோம் என்று தெரியாமலேயே ஜெயிலில் அடைக்கப்பட்ட அப்ஸல்,காந்தி படத்தின் பிரேமுக்குள் வீட்டுப் பத்திரத்தை மறைத்து வைத்ததோடு நில்லாமல் சூசகமாக மகனுக்குக் க்ளூவும் கொடுத்த சூப்பர் இண்டெலிஜெண்ட் கோதை,அமெரிக்காவுக்குப் போய் அன்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கும் அப்பா கோபாலசாமி.....
இப்படி கதாபாத்திரங்கள் பார்வையில் கதையை நகர்த்தி இருக்கும் பாங்கு தான் சிறுகதைகளுக்கு சுவாரசியம் கூட்டுகிறது.
ரமணன் அதிகம் பேசாதவர் என்பதுதான் என் எண்ணம்.அதற்கு பதில் அவரது கதா பாத்திரங்கள் ரசனையாய் பேசுகின்றன.
“சட்டங்களைத் தான் மறந்துட்டீங்க, சொந்தமா சிந்திக்கறதையுமா?”
“என்னை இங்கே தனியா விட்டுட்டு நீ எங்கம்மா போய்ட்டே?”
“”அங்கிள் தான் டாம் அன்ட் ஜெர்ரி போடாம நியூஸெ போடரார்.”
“போன் பண்றது தெரியாம பாகெட்டுக்குள்ள வெச்சு அமுக்கி கொடுக்கணும்"
டயலாக்கிற்குக் கூட நிறைய யோசித்திருக்கிறார் ஆசிரியர். காட்சிகள் ஒரு படம் ஓடுவதைப் போல நம் மனதில் விரிகின்றன.
சிறுகதைகள் படிக்க எல்லோருக்குமே பிடிக்கும்.
படிக்க வைக்கும் சிறுகதைகள் நச் சென்று சுருக்கமாக இருக்கும். அதற்குள் நிறைய விஷயங்கள் இருக்கும். வாசகனை கை பிடித்து கூட்டிச் செல்லும். முடிவு, மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
அட என்று வியக்க வைக்கும்.சில வேளைகளில் மறுபடி ஆரம்பத்தில் இருந்து மீண்டும் படிக்க வைக்கும்.
இந்த எல்லாமும் ரமணனின் “கருணை”தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளுக்கு உள்ளன.
நல்ல சிறுகதைகள் எழுத வேண்டும் என்று ஆசைப்படும், எல்லோருமே ஒருமுறை படிக்க வேண்டிய புத்தகம்.
புஸ்தகா வெளியீடு.
விலை ரூ160/-
Ph:+91 7418555884
May be an image of 1 person and text that says '몸 ரமணன் கருணை சிறுகதைகள் 남코 อ1ที'

All reactions:
Bhaskaran Jayaraman, Vedha Gopalan and 45 othersககடை


 

 

Top of Form

கடைசிக் கோடு 

முகநூலில் கருணாகரனின்  பதிவு 20/07/2 மீள்


கடைசிக் கோடு ".
இந்தியாவின் வரைபடம் சிறந்த கதை .
ரமணன் .சபரீஷ் பாரதி வெளியீடு .
முதல் பதிப்பு 2013 .
விலை ரூபாய் 80/-மொத்த பக்கங்கள் 112.
(சற்று நீண்ட பதிவு .ஆனால் அவசியம் படிக்க வேண்டும்)
"அப்பா அப்பா " என்ற அழைப்பு குரல் கேட்டு கனவுலகிலிருந்து நினைவுலகிற்கு வந்தேன் .
இன்று காலை(18.07.22) தஞ்சை பெரிய கோவிலில் சுற்றிப் பார்த்து வருகையில் ,வில்லியம் லாம்டன், ஜார்ஜ் எவரஸ்ட் ஆகியோரால் நடத்தப்பட்ட பெரிய இந்திய நெடுவரைவில் மாபெரும் முக்கோணவியல் நில ஆய்வு கருவி (தியோடோலைட்டு)
எங்கு எப்படி எடுத்துச் சென்று இருப்பார் ,;எந்த இடத்தில் வைத்திருப்பார் ;எங்கிருந்து கீழே விழுந்திருக்கும் ;எப்படி எல்லாம் அது
சிதறி உடைந்து இருக்கும் ,தியோடோலைட்டு கருவியைச் செப்பனிட்டுக் கொடுத்தவர்கள் திருச்சி தரங்கம்பட்டி கிராமத்து தொழிலாளர்கள்
என்ற கற்பனையிலேயே மூழ்கி விட்டேன்.
மகனது குரல் கேட்டு நினைவுக்கு வந்தேன். வழி எல்லாம் வரும்போது ரமணன் அவர்கள் எழுதிய கடைசி கோடு புத்தகம் படித்ததின் விளைவாக இந்த கனவுலக காட்சி .
அந்த சமயம் அங்கே வந்த கைடு அவர்களிடம் கேட்டேன் வில்லியம் லாம்டன்,மாபெரும் முக்கோணவியல் நில ஆய்வு கருவி (அரை டன் எடை கொண்ட
தியோடோலைட்டு கருவி)குறித்து தெரியுமா , அக்கருவி மேலே கொண்டு செல்லும் பொழுது கீழே விழுந்தது தெரியுமா என்றால் அவர் பேந்த பேந்த விழித்தார் .
கோபுரத்தின் உச்சியில் 32 ரிங்கு RING இருப்பதாகவும் அதன் எடை 220 டன் என்றும் கூறத் தெரிந்த அவருக்கு, தியோடோலைட்டு கருவி குறித்த ஏதும் தெரியாதது எனக்கு ஆச்சரியம் தரவில்லை .
காசுக்கேற்ற பணியாரம் போல் வருகின்றவர்களுக்கு ராஜராஜ சோழன் மன்னன் ,பெரிய கோயில் கட்டுமானம்அது மட்டுமே சொல்ல தெரிகிறது .
அதற்கு ஒப்பு நோக்கத்தக்க அளவில் நடைபெற்ற பெரு நில அளவு சரித்திர நிகழ்வினை அவரால் சொல்ல முடியவில்லை.
######
இந்திய நில அளவைத் துறையானது (Survey of India) வரைபடம் தயாரித்தல் மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் நடுவண் பொறியியல் முகமை ஆகும்.
இது 1767 ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தாரால் ஏற்படுத்தப்பட்டது.
வில்லியம் லாம்டன், ஜார்ஜ் எவரஸ்ட் ஆகியோரால் நடத்தப்பட்ட பெரிய இந்திய நெடுவரைவில் மாபெரும் முக்கோணவியல் நில ஆய்வு மற்றும் எவரெஸ்டு சிகரம் கண்டுபிடிப்பு ஆகிய சிறப்பு வாய்ந்த வரலாற்றினை இத்துறைக் கொண்டுள்ளது.
இது இந்தியத் தலைமை அளவையாளரின் கீழ் செயல்படுகிறது.
தடைசெய்யப்படாத வகையினைச் சேர்ந்த வரைபடங்களை நியாயமான விலைகளில் பெற முடியும்.
வரையறுக்கப்பட்ட வகையிலான வரைபடங்களுக்கு அரசாங்க அதிகாரிகளிடமிருந்து அனுமதி தேவை.
ஒரு இந்தியக் குடிமகன் மட்டுமே நில வரைபடங்களை வாங்க முடியும். எந்தக் காரணத்திற்காகவும் இது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படக்கூடாது.
அ) முதல் இந்திய ஆய்வு பாரா மகால் : தற்போதைய தர்மபுரி,கிருஷ்ணகிரி மற்றும் வடக்கு ஆற்காடு ஆகியவை பாரா மகால் என்று அழைக்கப்பட்டன. சேலம் மற்றும் பாரா மகாலின் மேற்பார்வையாளரான கார்டினல் அலெக்சாண்டர் ரீடு என்பவர் உத்திரவு படி 1793 ஆம் ஆண்டு டபிள்யு. மாதர் தலைமையின்கீழ் ஆரம்பித்து 1796இல் நிறைவு செய்யப்பட்டது.
ஆ) பெரிய இந்திய நெடுவரை வில் ஆய்வு 1802 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் பிரித்தானிய நில அளவையாளர் கார்டினல் வில்லியம் லாம்டனால் தொடங்கப்பட்டது.
இது சென்னையில் புனித தோமையார் மலையில் இருந்து இமயமலை அடிவாரம் வரை நடத்தப்பட்டது. 12 கி.மீ. அடிப்படை கோடு அளவிட 57 நாட்கள் எடுத்துக் கொண்டது. 36 அங்குல பெரிய ½ டன் எடைகொண்ட தியோடோலைட்டு அளவிடப் பயன்படுத்தப்பட்டது. இந்த 5-பத்தாண்டுகள் திட்டம் சர்வே ஜெனரல் லெப்டினண்ட் ஜார்ஜ் எவரெஸ்டால் 1852 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.
இது இந்தியாவில் திட்டமிடப்பட்ட நிலப்பரப்பு வரைபடத்தின் தொடக்கமாகவும், உலகின் பழமையான கணக்கெடுப்பு மற்றும் வரைபட முகமையாகவும் கருதப்படுகிறது.
டேராடூனைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய நில அளவைத் துறையானது, 18 சிவில் பொறியியல் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அலைகளின் கணிப்பு முதல் வான்வெளி ஆய்வு வரையிலான பணிகளை மேற்கொள்கின்றன.
இவற்றின் பணி கீழ்கண்டவாறு:
அனைத்து விதமான புவிபகுப்பளவியல் கட்டுப்பாடு(கிடையான மற்றும் செங்குத்தான) மற்றும் புவிக்கோள மற்றும் புவி அமைப்பியல் நில அளவை.
அனைத்து புவி அமைப்பியல் சார்ந்த கட்டுப்பாடு, நில அளவைகள் மற்றும் இந்திய எல்லைக்குள் நிலப்படங்கள் வரையும் பணி.
புவியியல் சார்ந்த நில வரைபடங்கள் மற்றும் வானுார்தியியல் சார்ந்த வரைபடங்கள் வரைந்து தயாரித்தல்
வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான நில அளவைப் பணிகள்.
காடுகள் குறித்த நில அளவை, பாசைறைகள் குறித்த அளவை, பெரிய அளவிலான நகரங்களின் அளவைப் பணி, வழிகாட்டி வரைபடங்கள், நில எல்லை அளவை மற்றும் பிற...
புவியியல் பெயர்களை உருவாக்குதல்.
இந்தியக் குடியரசின் வெளிப்புற எல்லைகளைக் குறித்தல், இந்தியாவில் வெளியிடப்படும் நில வரைபடங்களை உருவாக்குதல், அங்கீகரித்தல் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான எல்லலைகள் குறித்தல் மற்றும் எல்லைகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல்.
இப்படிப்பட்ட தான வரைபடம் வரைதல் சரித்திரத்தை ஆசிரியர் *ரமணன்* அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையில் நல்ல நோக்கத்தோடு இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். சிறப்பாக உள்ளது.
வரைபடம் வரைதல் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வத்தோடு பல நாள் காத்திருந்தேன் .இன்று தான் இந்த புத்தகத்தை படிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது.
####
ஆசிரியர் குறிப்பு:
கல்கி பத்திரிகையின் ஆசிரியர் ரமணன் அவர்கள் நல்ல பண்பாளர் அன்பாளர்.
மதியமர் ஆண்டு விழாவின் போதும் திருமாலன் அவர்களுக்கு தமிழக அரசு அளித்த ஒரு பரிசளிப்பின் போதும் இரு முறை சந்தித்திருக்கிறேன் .
வங்கியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். பத்திரிக்கையாளர் மாலனின் சகோதரர்.
பழகுவதற்கு இனிய அவர் நிறைய புத்தகங்களை எழுதி இருக்கிறார் .
புதியவர்களை இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்துவதில் மிகவும் நேர்மையானவர்.
இந்தப்புத்தகம் திருப்பூர் தமிழ் சங்க விருது பெற்றது. கல்கி இதழ் சிறந்த தமிழ் வார இதழுக்கான தமிழக அரசின் பெற்றிருக்கிறது.
####
திரு மாலன் அவர்கள் தனது அணிந்துறையில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:
40 ஆண்டு பயணத்தைச் சுவைபட ஒரு நாவலைப் போலச் சொல்லும் நூல் இது. கணிதத்தைக்கூடக் கதை போலச் சொல்கிறார் இதன் ஆசிரியர் ரமணன். .
இந்தத் தகவல்களைத் திரட்ட, திரட்டியதை கோர்வைப்படுத்த, கோர்வைப்படுத்தியதைச் சரிபார்க்க சற்றும் சளைக்காக உழைப்புத் தேவை.
இதற்குச் செலவிட்ட உழைப்பில் ஒரு நாவல் எழுதிவிடலாம். அது பெயரையும் பொருளையும் கூட கொண்டு வந்து கொடுக்கும். ஆனால் ரமணன் அதைச் செய்வதில்லை.
அவரது மனம் புதுமையை விரும்புகிற மனம். தமிழில் சொல்லப்படாத செய்திகளை இங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பது அவர் ஆசைகளில் ஒன்று. அதற்குக் காரணம் அத்தகைய முயற்சிகள் தமிழுக்கு வளம் சேர்க்கும் என்பது மட்டுமல்ல. அவை வாசிப்பவர்களின் அறிவைப் பெருக்கும்;
மெய்யான தவங்கள் பொய்யானதில்லை."என்கிறார் மாலன் அவர்கள்.
###
"பயணத்தின் முடிவில்" என்று ஆசிரியர் ரமணன் அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார்:
இந்திய தேசத்தின் முதல் சரியான வரை படம் உருவான காலத்தில் எந்த வசதிகளையும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது.
1800ஆம் ஆண்டு துவங்கி 40 ஆண்டுகள் போராட்டமான நீண்ட 1600 மைல் பயணத்தில் சுட்டெரிக்கும் வெயில், கடும் மழை, வெள்ளம் புயல் போன்ற பெரும் இயற்கையின் சீற்றங்களுடன் போராடி, விஷக் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களினால் மரணம்நேர்ந்த ஆயிரக்கணக்கான உழைப்பாளர்களின் பல அதிகாரவர்க்கத்தின் ஆணவம் மக்கள் எதிர்ப்பு போன்ற சவால்களுடனும் போராடி, அங்குலம் பிசாகமல் மிகுந்த கவனத்துடன் நாட்டின் நீள, அகலங்களை அளந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது நமது இந்திய தேசத்தின் முதல் வரைபடம்.
காடுகளிலும், மலைகளிலும், சிறிய கிராமங்களிலும் நதிகளிலும் ஆபத்தான இடங்களிலிருந்தும் அளவுகளை குறித்து, கணக்கிட்டு,சரிபார்த்து இந்த வரைபடத்தை தயாரித்து முடிப்பதற்குள்
இந்த பணியில் பலியானவர்களின் எண்ணிக்கை அந்த காலகட்டத்தில் நடந்த எந்த ஒரு போரைவிடவும் அதிகம்.
நீண்ட அந்த சர்வே பணியின் இறுதியில் வரைபடத்தின் கடைசிக் கோடு முடிந்த இடம் இமயத்தின் பாதம் .
"அறிவியல் வரலாற்றிலேயே மேற்கொள்ளப்பட்ட மிகப்பிரமாண்டமான, பிரமிப்பான பயணம்'' என புவியியல் ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நீண்ட நெடும்பயணத்தின் முடிவில் கிடைத்தது இந்திய தேசத்தின் வரைபடம் மட்டுமில்லை,உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரம் இந்தியாவில் இமயமலைப்பகுதியில் இருப்பது என்பதையும்தான்" என்கிறார் ரமணன் அவர்கள்.
###₹₹
இனிய இந்த புத்தகம் குறித்து பார்ப்போம்:
1. வெள்ளைக் கூடாரமும் மஞ்சள் கொடியும்
2. முதல் கோடு
3. கேப்டனின் கனவு
4. தெய்வச் செய்தி
5. ஆதிவாசிகளிடம் கற்ற அறிவியல்.
6. தமிழ் நாட்டு காதலி
7. தஞ்சை பெரிய கோயிலில் நடந்தது சதியா? விதியா?
8. நெளிந்த சக்கரமும் உடைந்த மனமும்
9. விருதுகளும் விரிந்த பணிகளின் எல்லைகளும்.
10. எதிர்பாராமல் வந்த எவரெஸ்ட்
11. யானை கற்றுக் கொடுத்த பாடம்
12. ஒரு கற்பனைக் கோட்டின் விலை பதினைந்து உயிர்கள்
13.கட்டடங்களின் ஜெயிலில் இந்தியா
14.விளக்கொளியில் படித்த செய்தி 15.எங்கள் வாழ்நாள் சாதனை.
16. நடுவில் நின்று போன நடுக்கோடு.
17. மேதையை தொடர்ந்த பிடிவாதமான கெட்டிக்காரன்
18.கடைசிக்கோட்டின் முதல் அடி.
19.வெள்ளிப் பனிமலை சொன்ன ரகசியம்
20. நிச்சயமாக இது தானா ?
21. குரு பக்தியின் இமயம்
22. இந்தியாவின் முகவரி.
ஒரு தேசத்தின் முகவரி அதன் வரைபடம் .இன்றைக்கு வரைபடம் தயாரிப்பதற்காகவே படங்கள் எடுக்கும் விசேஷ காமிராக்கள் பொருத்தப்பட்ட விமானங்கள், விண்ணிலிருந்து படமெடுத்து வினாடிகளில் அனுப்ப செயற்கை கோள்கள், அந்த விபரங்களை சரிபார்ப்பதற்கென்றே தயாரிக்கப்பட்ட மென்பொருளுடன் தரையில் காத்திருக்கும் கணணி எனப் பல வசதிகளுடன் மேப்கள் தயாரிப்பது என்பது தனியொரு இயலாகவே வளர்ந்திருக்கிறது.
இமயமலையின் மற்ற சிகரங்கள் எல்லாம் கைலாஷ். நங்கபர்வதம், நீல்கண்ட் என இந்து புராணங்களுக்கு சாட்சி சொல்லும் பெயர்களாலோ அல்லது கிஞ்சன்ஜங்கா போன்று அந்த பிரதேசத்தின்
பெயராலேயே அழைக்கப்படும் போது,உலகிலேயே உயரமான சிகரமான ஏவரெஸ்ட்டுக்கு மட்டும் ஏன் அந்த பெயர்?
இந்தியத் துணைகண்டத்தின் முதல் மேப்பை சரியான அளவுகளுடன் தயாரிக்க 1802இல் கர்னல் வில்லியம் லாம்ட்ன் என்ற சர்வேயர் சென்னை மெரீனா கடற்கரையில் முதல் கோடிட்டு மேற்கொண்ட ஒரு மிக சவாலான 40 ஆண்டு பயணத்தின் இறுதியில் நிகழந்த ஆச்சரியம் தான் "எவரெஸ்ட்"!
"உலக புவியியல் வரலாற்றில் சர்வேக்களுக்காக மேற்கொண்ட பயணங்களிலேயே மிகக் கடினமானதாக வர்ணிக்கப்பட்டிருக்கும் இந்த பயணங்களில், பணியில் பலியானவர்களின் எண்ணிக்கை அந்த காலகட்டத்தில் நடந்த எந்த ஒரு
போரை விடவும் அதிகம்.
கர்னல் லாம்டன் எழுதி குவித்திருக்கும் பயணக்குறிப்புகளும், அன்றைய ஆங்கிலேய நிர்வாகம் பதிவு செய்திருக்கும் குறிப்புகளும் இன்றும் அலுவலக அலமாரிகளில் தூங்கிக்கொண்டிருக்கின்றன.
கொல்கத்தா மற்றும் டேராடூன் புவியியல் சர்வே அவற்றில் சிலவற்றின் அடிப்படையிலும், சில ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளின் அடிப்படையிலும் இந்திய வரைபடம் உருவாகியிருப்பதை இந்த 'கடைசிக் கோடு' உண்மை கதை சொல்லுகிறது.
ஒரு தேசம் உருவானதைச் சொல்லுவது சரித்திரம்.
அந்த தேசத்தின் வரைபடம் நமக்குச் சொல்வது பூகோளம்.
இந்த கடைசிக் கோடு ஒரு இந்திய பூகோளப் படம் எழுந்த சரித்திரத்தை சொல்லுகிறது.
இன்று தொழில்நுட்பம் எத்தனையோ விஷயங்களுக்குத் தீர்வு கண்டுவிட்டது. அதில் வரைபடமும் ஒன்று. ஆனால் இரு நூற்றாண்டுகளுக்கு முன் அது அத்தனை எளிதான காரியம் அல்ல. காரணம் அதற்கான கருவிகள் கிடையாது. அதுவும் தவிர இந்தியா போன்ற கடலும் மலையும் நதியும் வனமும் பாலையும் பட்டிணமும் கொண்ட ஒரு தேசத்தை அளந்து வரைபடம் தயாரிப்பதைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
ஆனால் அதைக் கனவு கண்டவன் போரில் தோற்று போர்க் கைதியாக அமெரிக்காவில் அடைபட்டுக் கிடந்த ஒரு ஆங்கிலேயன் லாம்டன்.
இந்தியாவை அளப்பதற்கான முதல் நடவடிக்கை சென்னை கடற்கரையில்தான் துவங்கியது. எத்தனையோ சிகரங்களை அளந்த அந்தக் கருவி தஞ்சைப் பெரிய கோவில் மீது ஏறிய போது உடைந்து கீழே சிதறியது .
( சரி செய்ய ப்பட்ட மாபெரும் முக்கோணவியல் நில ஆய்வு கருவி (தியோடோலைட்டு)
பெட்டியும் சங்கிலியும் இன்னும் நல்ல நிலையில் டேராடூனிலுள்ள அருங்காட்சியகத்திலிருக்கிறது.)
முதல் கட்டமாக மதராஸின் சரியான கடல்மட்டத்தை கண்டுபிடிக்கும் பணியை துவக்குகிறார் லாம்டன்.
சில நாட்களில் சீறிப்பாயும் அலைகளினால் உயர்ந்தும், சில நாட்களில் தாழ்ந்துமிருக்கும் கடலின் சரியான மேல்மட்டத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?
தான் செய்யப்போகும் முக்கியமான பணிக்கு இந்த கடல்மட்டம் என்பது ஆதாரசுருதியான விஷயம் என்பதனாலும்,
தொடர்ந்து ஏழு நாள் பணியில் 48 முறை எடுத்த அளவுகளின் சராசரியை கணக்கிட்டு மதராஸ்பட்டணத்தின் சரியான கடல்மட்டத்தை குறிக்கிறார்.
120 டிகிரி பாரன்ஹீட் வெயிலில் லாம்டன் தன் பணியை துவக்குகிறார். கடற்கரையின் அருகில் இருந்த ஒரு சிறிய குன்றிலிருந்து தொலைவிலுள்ள செயிண்ட் தாமஸ் மலைவரை ஒரு நேர்கோட்டை அளந்து அதன்பின் அங்கிருந்து கடல்மட்டம் கம்பத்தை கோணமானியால் அளந்து உறுதிசெய்து முதல் கோட்டையும் (Base line) அதன் மீது 'கற்பனை முக்கோணங்களையும் உருவாக்க திட்டம். அதற்கான பணி துவங்குகிறது.
1802 ஏப்பரல் 18ஆம் தேதி மதராச பட்டண கடற்கரை அருகில் லாம்டன் துவக்கிய இந்த முதல் கோடு தான் இந்திய தேசத்தின் வரைபடத்திற்காக போடப்பட்ட பிள்ளையார் சுழி .
ஏழரை மைல் நீளமான அந்த அடிப்படை நேர்கோட்டை அளக்க சங்கிலியை 400 முறை பயன் படுத்தவேண்டியிருந்தது .மொத்தம் 57 நாட்களாயிற்று.
இன்னறைக்கு கம்ப்யூட்டர்கள் செய்யும் "மைக்ரோ பிரிசிஷ்யன் மெஷர்மெண்ட்" களை அன்றைக்கே இந்த ஆங்கிலேய அதிகாரி மிக துல்லியமாக, இந்திய தேசத்தின் வரைபடம் உருவாவதற்கான முதல் கோட்டை வரைந்தார்.
எப்படி வரைந்தார் என்பதை ஆசிரியர் ஒரு படம் மூலம் விளக்குகிறார்:
இந்த ABC முக்கோணத்தில் AB என்பது அடிப்படைக் கோடு. இது இரண்டு இடங்களுக்கிடையே சங்கலி அளவீட்டு முறையினால் துல்லியமாக அளக்கப்பட்ட தூரம் C என்பது ஒரு உயரமான இடத்தில் கொடியிட்டு அடையாளம் செய்யப் பட்டிருக்கும் முனை. இப்போது இந்த முக்கோணத்தின் கோணக்கான திபோலைட் கருவியின் மூலம் சரியாக நிர்ணயித்த பின்னர் Cக்கும் Bக்கும் இடையிலுள்ள தூரம் கணக்கிடப்படும். இப்போது இந்த கற்பனை முக்கோணத்தின் ஒரு பகுதியான BCயை ஒரு புதிய அடிப்படைக் கோடாக கொண்டு அதன் இரு முனையிலிருந்தும் தியோலைட்டை நிறுவி D என்ற புதிய உயரமான இடத்தை அளந்து குறிக்கப்படும். இப்போது இது அடுத்த கற்பனை முக்கோணத்திற்கு அடிப்படைக் கோடான CD கிடைக்கிறது. இதிலிருந்து அடுத்த முக்கோணம் அதிலிருக்கும் அடிப்படை கோட்டிலிருந்து எழுப்பப்படும் மற்றொரு முக்கோணம் என சங்கிலியாக. தொடரும். புதிய முக்கோணங்களால் பின்னப்பட்ட சிலந்தி வலைகளினால் தேசத்தின் முழு நீளமும் அகலமும் அளந்து குறிக்கப்படும். பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய இது டிரிகனா மெட்ரிகல் சர்வே முறை என்று அழைக்கப்படுகிறது.. இந்த முறையைப் பயன்படுத்தித்தான் லாம்டன் இந்திய வரைபடத்தின் முதல் பேஸ் லைன் என்று சொல்லப்பட்ட அடிப்படைக்கோட்டை மதராஸ் பட்டணத்தின் மெரீனா கடற்கரையில் துவக்கியிருக்கிறார்.
பகலில் வரைபடம் அளந்து வரைந்து இரவில் நட்சத்திரங்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார் லாம்டன்.
தனது பணி தொடர்பான குறிப்புகளை தெளிவாக எழுதியிருக்கும் லாம்டன் காரணத்தாலோ தனது குடும்பம், தனிப்பட்ட அனுபவம் பற்றி கால எதுவுமே எழுதவில்லை.
இவர் "குமர்ப்பூ" என்ற தமிழ்நாட்டு பெண்ணை காதலித்து மணந்து கொண்டிருக்கிறார். ஒரு மகன் பிறந்து வளர்ந்து இவருடைய பணியிலேயே சேர்ந்து பணியாற்றுகிறான்.
பணிச்சுமை அதிகமாகவே எவரெஸ்ட் என்கிற உதவியாளரை பிரிட்டிஷ் அரசாங்கம் நியமிக்கிறது..
சென்னையில் இருந்து பெங்களூர் மங்களூர் மேற்கு தொடர்ச்சி மலை என்று வேலை தொடர்ந்து திருவாங்கூர் சமஸ்தானம் வரை பணி முடிக்கப்பட்டு வடக்கு நோக்கி கல்கத்தா இமயமலை அடிவாரம் வரை அளவிடும் வரபட பணி தொடர்கிறது.
கிட்டதட்ட 32 லட்சம் சதுர கிமீ பரப்பு கொண்ட மலை தோன்றுகிற காடு, பாலைவனம் நதி கடல் தீவுகள் என எல்லாமாக பரவியிருந்த இந்த பாரத தேசம் ஒரே தேசமாகயில்லாததால் ஒரு முழுமையான வரைபடமில்லாதிருந்தது.
லாம்டன் பெரிய மேதையாகையால் தென் இந்தியாவில் வரைபடபணியை செய்யும்போதே அந்த அடிப்படையில் மிகச்சரியாக செய்து கொண்டிருந்தார்.
இன்று இந்திய வரைபடத்தை சற்று உற்று நோக்கினால். வரைபடத்தில் கன்னியாகுமரி, ஹைதராபாத். நாக்பூர். ஆக்ரா எல்லாம் ஒரே கோட்டில் அமைந்திருப்பதை பார்க்கலாம். லாம்ட்ன் அந்த கோட்டை முதலில் நட்சத்திரங்களின் உதவியுடன் உறுதி செய்துகொண்டு அதே நேர்கோட்டில் தனது அடிப்படை முக்கோணங்களை 'முதுகெலும்பாக" உருவாக்கிகொண்டு அதன் பக்கவாட்டில் இரண்டாம்நிலை முக்கோணங்களை நிறுவி தூரம் உயரம், பள்ளம் ஆகியவற்றை கணக்கிட்டு வரைபடம் தயாரிக்கும் பணியை துவக்க திட்டமிட்டு அதற்கு ஹைதராபாத்தை முக்கிய முதல் புள்ளியாக கொண்டு ஆரம்பிக்கிறார்..
15000 மனித உயிர்களை காவு கொடுத்து ஒரு கற்பனை கோட்டை வரைந்திருக்கிறார் லாம்டன் .
1823 ஜனவரி மாதம் மகராஷ்டிர பகுதியில் ஒரு கிராமத்திலிருந்து இரவில் தொலைவில் கல் தூண் மேடையின் மீது தெரியும் நீல விளக்கின் சுடரை டெலிஸ்கோப்பில் உற்று நோக்கி கொண்டிருந்த எவரெஸ்ட்டிடம் ஹைதிராபாத் ரெஸிடென்ஸி சார்லஸ் மெக்ஃபே யிடமிருந்து வந்த விசேஷ தூதன் அந்த அவசர செய்தியை தருகிறான்.. அது
"கிரேட் டிரிகானமெட்டிரிகல் சர்வே ஆப் இந்தியாவின் சூப்ப்ரெண்டெண்ட் கர்னல் வில்லியம் லாம்ட்ன் இறந்துவிட்டார்.' . படிக்கும் போது எனக்கு மனம் கனத்துப் போகிறது.
20 வருடங்கள் லாம்ப்டன் செய்த பணியை எவரெஸ்ட் தொடர்ந்து 20 வருடம் செய்திருக்கிறார்.
டெல்லி-டேராடூன் அடிப்படைகோடுதான் இந்திய வரைபடத்தின் கடைசிகோடு. அதை எழுப்பி முக்கோணத்தை நிறுவினால் இந்திய வரைபடத்தின் கடைசி கட்டம் முடிந்துவிடும். 60 ஆண்டுகளுக்கு முன் மதராஸ்பட்டிணத்தின் மெரினாவில் முதல் அடியில் துவங்கிய அந்த முதல் கோடு இங்கே முடியப்போகிறது..
எவரெஸ்ட் உடல் நலம் குன்றிய பிறகு அவரது சீடர் *மேஜர் ஆண்ட்ரூ ஸ்காட் வாக்*அந்த பணியை தொடர்ந்து செய்து முடிக்கிறார்.
அந்த உயர்ந்த 29002அடி (8849மீட்டர்)உயர சிகரத்தை ஒருமுறை கூட பார்க்காத எவரெஸ்ட்டின் பெயர் உலகின் உயர்ந்த சிகரத்திற்கு சூட்டப்பட்டதற்கு காரணம் அவரை குருவாக மதித்த மேஜர் ஆண்ட்ரூ ஸ்காட் வாக்கின் குருபக்தி.
இந்திய துணைக்கண்டத்தின் வரை படத்திற்காக தன் வாழ்க்கையை கழித்த லாம்டனுக்கும், எவரெஸ்ட்டுக்கும் ஒரு சிலையோ, ஒரு நினைவுசின்னமோ அவர்கள் பெயரில் ஒரு அரசாங்க கட்டடமோ கூட எழுப்பட வில்லை.. அவர்களது கடினமான பணிகளும், தியாகங்களும் என்ன காரணங்களுக்காகவோ இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
######
இந்தியாவின் முகவரி
மனித குல வளர்ச்சியின் வெளிப்படாக வாழ்ந்த இடத்தின் வரைபடத்தை தயாரிப்பது.
.இரண்டாம் நூற்றாண்டிலேயே இந்த உலகிற்கான ஒரு வரைபடத்தை தயாரித்திருக்கிறார் கிளாடியஸ் பாத்த்லோமி என்ற கிரேக்க பூவியல் ஆராய்ச்சியாளர்.
இந்தியாவை பொருத்தவரை நாட்டின் வரைபடங்களுக்கு மிகப்பெரிய பாரம்பரியமிருந்திருக்கிறது.
இந்து சமவெளி நாகரிகங்களின் ஆய்வுகளிலேயே வரைபடங்கள் இருந்தற்கான சான்றுகள் காணப்படுகிறது.
தொடர்ந்து 9ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை பெர்ஷ்யர், அரேபியர்கள், ஐரோப்பியர்கள், பிரான்ஸ் நாட்டு வல்லுனர்கள் இந்திய வரைபடத்தை பல கட்டங்களில் எழுதியிருக்கிறார்கள்.
முகமதியர் ஆட்சிக் காலத்தில் இருந்த மேப்பை "எம்ப்யர் ஆப் கிரேட் மொகல்' என்ற பெயரில் 1717லியே இங்கிலாந்தில் அச்சிசீருக்கிறார்கள்.
ஆங்கிலேய அதிகாரிகள் அந்தந்த ரெஸிடென்சிகளின் ஆணைப்படி வரைபடங்கள் எழுதும் பணிகளை துவக்கியிருந்தார்கள்.
ஒரு பிராந்தியத்திற்கான மேப்புகளை அட்லஸ் எனப்படும். இதில் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்திய பகுதிகள் வரையப்பட்டுமிருந்தன,
முழுதேசத்தின் படத்தை சரியாக நிர்ணயிக்கபட்ட அளவுகளுடன் உருவாக்க கனவுகண்ட லாம்டன் துவக்கி, எவரெஸ்ட் , ஆண்ட்ரு ஸ்காட் தொடர்ந்த கடினமான பயணங்களின் முடிவில் தான் இந்திய தேசம், உலக உருண்டையில் 64 டிகிரியிலிருந்து 92டிகிரி வரையி லுள்ள தீர்க்க ரேகைகளுக்கும் 8இலிருந்து 36 வரையிலிருக்கும் அட்சகோடுகளுக்கிடையே இருக்கிறது எனபதை கண்டுபிடித்து அதை இந்த தேசத்தின் முகவரியாக்கி அதை வரைபடமாக்கும் பணியை துவக்கினார்கள். .
கல்கத்தாவிலிருக்கும் ''கம்ப்யூட்டர்'கள் சரிபார்த்து இங்கிலாந்துக்கு அனுப்பி அங்கு மேப்களை தயாரித்து அச்சிடும் தொழில் வல்லுனர்களான ஜான் வாக்கர் நிறுவனம் ,
சர்வேயர் ஜெனரலிடம் அனுமதி வாங்கிய பின் அச்சிட மேலும் 6 வருடங்களாகிறது.
1862ல் முழு இந்தியாவின் முதல் மேப் தயாராகிவிட்டது. இம்ப்பிரியல் கெஜட்டியர் அட்லஸ் ஆப் இந்தியா' என்ற பெயரில் பிரிட்டிஷ் இந்தியா சிவப்பு வண்ணத்திலும், பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்பில் இருக்கும் சம்ஸ்தானங்கள் பிங்க் வண்ணத்திலும், பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்காமல் இருக்கும் சம்ஸ்தான்ங்களை மஞ்சள் நிறமிட்டும் காட்டி வெளியான அந்த மேப் அதிகாரபூர்வமான அரசு ஆவணமாக அறிவிக்கபட்டது. ஆங்கிலேய ஆட்சிப் பிரதிநிதி களுக்கும், மன்னர்களுக்கும் மட்டும் அனுப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின்னரே மக்களுக்கு எளிதில் கிடைக்க வசதியாக அச்சடிடபட்டது. அன்று ஆங்கில அரசாங்கம் சர்வேயர் ஜெனரல் அனுமதில்லாமல் மேப்புகள் அச்சிட்டால் அது குற்றம் என்று இயற்றிய சட்டம் இன்றும் அமலில் இருக்கிறது.
சரித்திரம் எனபது காலத்தால் மறந்து போக்கூடியது. பூகோளம் என்பது காலம் கடந்து நிலைத்து நிற்பது.
அடுத்த முறை இந்திய வரைபடத்தைப் பார்க்கும் போது இதன்பின்னே தியாகங்களும் போராட்டங்களும் நிறைந்த ஒரு சரித்திரம் அதற்கு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
May be an image of map and text
All reactions:
You, Karuna Murthy, Krishnaswami Cvr and 7 others
2
Like
Comment
Share

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்