ஸ்படிகம் போல ஜலம் எனச் சொல்லுவதைக்கேட்டிருக்கிறேன். இந்தப் பயணத்தில் அதைப் பார்க்கும் ஒரு வாய்ப்பு. ஷில்லாங்கிலிருந்து 85 கீமியில் ஒரு மலைச்சிகரத்துக்கு அருகில் ஒடுகிறது துவாக்கி (DAWKI) என்றழைக்கப்படும் நதி. மிக மிக அமைதியாக அழகாக இருக்கிறது, (Jaintia Hills Dawki-Tamabil) ஜெய்நிதா, துவாக்கி என்ற இரண்டு மலைச்சரிவுகளுக்கிடையே ஓடும் இந்த நதி பங்களாதேஷ் வரை செல்லுகிறது. இந்த மலைகளை இணைக்கும் பாலத்தின் ஒரு முனையில் தான் இந்திய -பங்களாதேஷ் எல்லை
இருபுறமும் கட்டிய கல்சுவர்கள் போல செதுக்கிவைக்கபட்ட வடிவில் நிற்கும் மலைகளின் பாறைகள். துவாக்கி கிராமப் பகுதியில் ஓடும் ஆறு இது. மலைச்சரிவுகளில் இறங்கி இந்த ஏரியின் கரையை அடைய வேண்டும். அங்குள்ள நீர் தெள்ளத்தளிவாக இருக்கிறது. மரகதப்பச்சை வண்ணத்தில் நீர் மிக மெல்லிய வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. கண்ணாடி மூடியிட்ட தொட்டிக்குள் பார்ப்பதுபோல் பளிச்சென்ற தெளிவு. அருகில் போகும் படகின் அடிப்பகுதியும் அதன் நிழல் நீரின் ஆழத்திலிருக்கும் மணல் தரையில் விழுவதையும் துல்லியமாகப் பார்க்க முடிகிறது. படகு செல்லுமிடத்தில் நீரின் ஆழம் 12 அடிக்கும் மேல் என்று சொன்னார்கள். ஆனால் கீழே கிடக்கும் பளிங்கு கற்கள் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது போல் பளிச் சென்று தெரிகிறது. துள்ளிவிளையாடும் மீன்களைக் கண்ணாடி பெட்டிக்குள் பார்ப்பதைப் போல பார்க்க முடிகிறது. ஓரிடத்தில் நதி வழிந்து சற்று கீழே பாயும் முனையில்தான். பங்களாதேஷின் எல்லை துவங்குகிறது. அதைத்தாண்டி அனுமதியில்லாத படகுகள் செல்லமுடியாது.
ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி என்பதையே உணர முடியாத அளவிற்கு அமைதியாக இருக்கும் இந்த ஏரியில் கிடைக்கும் மீன் மிகச் சுவையானதாம். ஆனால் எளிதில் தூண்டிலில் சிக்காதாம். அதனால் படகுகளில் அசையாமல் சிலைகளைப் போல் மணிக்கணக்கில் உட்கார்ந்து உள்ளூர் மக்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் ஏடிம் கியூ ,2000க்கு சில்லறை கிடைக்காத பிரச்சனைகள் எல்லாம் இல்லாத கவலையில்லாத மனிதர்கள்.
ஏரியின் நடுவே ஒரு திட்டு. அதில் ஒரு ஸ்நாக் கடை. அந்த ஆள் இல்லாத கடையில் வெறும் காப்பிஆற்றும் நிலை, பற்றி கவலைப்படாமல் சின்ன சோலர் பேனலில் இணைக்கப்பட்டிருக்கும் சிஸ்டத்தில் சுகமாகப் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன் முதலாளி.
வெளிநாட்டிலிருந்து டிரெக் செய்ய வருபவ ர்களுக்கு தங்க டெண்ட் வாடகைக்குத் தருகிறார். ஒரு நாளைக்கு 1000 ருபாயாம். பிரஷ்ஷாக பிடித்த மீன்களைச் சமைத்து சாப்பாடும் கொடுப்பாராம்
மலையிருக்கும் ஒரு சுனையிலிருந்து குடிநீரை நதியின் வழியே குழாய் மூலம் கொண்டு வந்து அதை பல துளைகளிட்ட ஒரு மூங்கிலில் இணைத்து 24x7 குடிநீர் வசதி செய்துண்டிருக்கும் புத்திசாலி
.
நதியில் படகு போகும் போது தலைக்கும் மேலே தெரிந்த பாலம் ஒரு இன்டர்நேஷன்ல் பிரிட்ஜ் என்றார் படகுக்காரர். அது என்ன இன்டர்நேஷனல் பாலம் என்று போய்ப் பார்க்கலாமா?
(வடகிழக்கு மாநிலங்களில் பார்த்தது, கேட்டது. கற்றது. பெற்றது தொலைத்தது பற்றி எல்லாம் விரிவாக புத்தாண்டில் எழுதவிருக்கிறேன்
. அதற்குமுன் இந்த குறிப்புகள்-
சினிமாக்கார்கள் பாஷையில் சொன்னால்- டீஸர்கள்
மேகங்கள் வாழும் சொர்க்கம் டிஸர் 3 இது)
முக நூலிலில் இருந்து
முக நூலிலில் இருந்து