அடேஅப்படியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடேஅப்படியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5/4/24


அக்பரின் தாயார் வாசித்த இராமாயணம்


மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தார் மிகப்பழமையானது. பாரம்பரிய இஸ்லாமியக் கலாசாரங்களைப்போற்றும் நாடு.

பல ஆண்டுகள் இங்கிலாந்து அரசால் பாதுகாக்கப்பட்ட ஒருநாடாயிருந்த இது 1971ல் சுதந்திரம் பெற்றது. இன்றும் மன்னர்

ஆட்சி முறையைத் தொடரும் இந்த நாடு கடந்த 20 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதன் தலைநகரம் தோஹா.

அண்மைக்காலமாக உலகக் கால்பந்துப்போட்டி முதல் பலவிதமான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்திக்கொண்டிருப்பதால்நகரில் நவீன பாணிக் கட்டிடங்கள்சர்வதேசஅரங்குகள்ஆடம்பர ஹோட்டல்கள் உருவாகியிருக்கின்றன,

நகரின் கடற்கரையில் அப்படி எழுந்திருக்கும் ஓர் அதிநவீனக்கட்டிடத்தில் தான் இயங்குகிறது மியூசியம் ஆஃப் இஸ்லாமிக்ஆர்ட் என்ற அருங்காட்சியகம்.


இஸ்லாமியப் பண்பாக்களின் முறைப்படி தோன்றி வளர்ந்த பலகலைகளின் காட்சியகமாயிருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்காகக்கத்தார் மன்னர் குடும்பத்தினர் உலகெங்குமிருக்கும் பண்டையஇஸ்லாமியக் கலைப்படைப்புகளை வாங்கிச் சேமிக்கிறார்கள்.இந்த அருங்காட்சியகத்திலிருக்கும் ஒரு காட்சிப் பொருள்அண்மையில் பேசு பொருளாகியிருக்கிறது. 

அது ஒரு ராமாயணக்காவியத்தின் பிரதி.

உலகின் பல நாடுகளின் அருங்காட்சியகங்களில் இராமாயணத்தின் பிரதிகளும் படங்களும் இருக்கின்றன. ஆனால் இந்தராமாயணத்தின் பிரதி வித்தியாசமானது. முகலாய அரசவையின்அரச குடும்பத்தினரும்பேரரசர் அக்பரின் தாயுமான ஹமிதாபானுபேகம் அவரது கைப்பட எழுதப்பட்ட ராமாயண உரையை வைத்திருந்தார். இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகிஇராமாயணத்திலிருந்து பாரசீகத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது.

மன்னர் அக்பர் பெரிய இலக்கிய ரசிகர். உலகின் சிறந்த காவியங்கள்இலக்கியப் படைப்புகள் எல்லாம் பெர்ஷ்யன்மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார். இதற்காகவே அவரது அவையில் பன்மொழி வல்லுனர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.மன்னர் விரும்பியதின் பேரில் வியாசரின் மஹாபாரதமும்,வால்மீகியின் ராமாயணமும் பாரசீக மொழியில்   மொழிபெயர்க்கப்பட்டன. சம்ஸ்கிருதத்திலிருந்து முதலில் இந்தியிலும் பின்னர் பெர்ஷ்யமொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன.மொழிபெயர்ப்புகளில் சில பெயர்கள் சிதைந்து மாறியிருக்கின்றன.

தசரதன் ஜெஸ்ரதன் ஆகியிருக்கிறார்.அகஸ்தியரை ஒரு நட்சத்திரமாகப் புரிந்து கொண்டு பெர்ஷ்ய மொழியில் உள்ள அந்த நட்சத்திரத்தின் பெயரையே அவருக்குச்  சூட்டியிருக்கிறார்கள். அசோகவனம் ராவணனின் அரண்மனையாகியிருக்கிறது.

பாரசீக மொழியில் அச்சிடும் வசதிகள் இல்லாத அக்காலகட்டத்தில் புத்தகங்கள்அழகான கையெழுத்துப் பிரதிகளாக உருவாக்கப்பட்டன. அழகான எழுத்துகளை எழுதுவது ஒரு கலையாகவே (calligraphy)  மன்னர் அக்பர் காலத்தில் போற்றப்பட்டது


.

அப்படி மன்னர் அக்பருக்காக அழகாகஉருவாக்கப்பட்ட புத்தகப் பிரதிகளில் அவர் அரசு முத்திரையிடப்படும். இதைப் பார்த்துமன்னரின் அனுமதியுடன் அரசவையில் இருந்தவர்களில் பலர் தங்கள் சொந்தப் பிரதிகளை உருவாக்கிக்கொள்வார்கள்.

ஆனால் பேரரசர் ஹூமாயூனின் மனைவியும் மன்னர் அக்பரின் தாயாருமான அரசி ஹமீதாபானு இப்படிப் பிரதி எடுக்கச் சொல்லாமல் அவருடைய இராமாயணப் பிரதியை அவரே கைப்படப் பாரசீக மொழியில் எழுதியிருக்கிறார்.

அவரது ராமாயணத்தின் பிரதி முதலில் 56 பெரிய விளக்கப்படங்களுடன் 450 பக்கங்களைக் கொண்டது. புத்தகம் மென்மையான தங்கஉருவங்கள் மற்றும் மலர்களுடன் திறக்கிறது. காதா மற்றும் ஸ்லோகா என்ற சமஸ்கிருத வார்த்தைகளுடன் அத்தியாயங்கள் குறிக்கப் பட்டிருக்கின்றன.

அரசியின் ஆலோசனைப்படி பாடல் வரிகளுக்கான படங்கள் லாகூரில் உள்ள ஒரு சிறிய ஓவியக் கலைஞர்களின் குழுவால் உருவாக்கப்பட்டன என்கிறது குறிப்பு.. இந்தப் புத்தகப் பொக்கிஷம் தான் இப்போது தோஹா அருங்காட்சியகத்திலிருக்கிறது.

இந்த நூல் தோஹா அருங்காட்சியகத்தை அடைவதற்கு முன் நீண்ட பல பயணங்களைச் சந்தித்திருக்கிறது 1604 ஆம் ஆண்டில் ஹமிதா பானோ மறைந்த பின்னர் அரச குடும்பம் நூலை மத்திய முகலாய நூலகத்திற்கு மாற்றியதுபின்னர் அங்கிருந்து காணாமல் போய் பலருக்கு விற்கப்பட்டிருக்கிறது .

இந்தப் பயணத்தில் புத்தகம் நீரினாலும், பூச்சிகளினாலும் சேதமடைந்திருக்கிறதுசிலபக்கங்கள் காணாமல் போயிருக்கின்றன.புத்தகத்தின் அட்டைகளின் விளிம்புகள் கிழியத் தொடங்கியிருந்தன.


ஆனாலும் 2000 ஆம் ஆண்டு கத்தார்அரசர் ஷேக் சவுத் அல் தானி பெரும் விலை கொடுத்து இந்தப் பொக்கிஷத்தை வாங்கி நூலகத்தில் சேர்த்திருக்கிறார். காணாமல் போன பக்கங்களிலிருக்கும் பெரும்பாலான படங்களை மீண்டும் உருவாக்கிப் புத்தகத்தில் சேர்த்திருக்கிறார்..1990கள் வரை இந்த ராமாயணம் பற்றிஎ வருக்கும் தெரியாதிருந்த நிலையில் இன்று தோஹா ராமாயணம் என்று உலகெங்குமிருக்கும்ஆர்வலர்களால் பேசப்படுகிறது

இந்தப் புத்தகம் மொகலாயர்களுக்கு இராமாயணத்தில் எவ்வளவு ஆர்வமிருந்தது?     ன்பதையும் அதை எப்படி போற்றியிருக்கிறார்கள்? என்பதையும் மட்டுமல்ல இன்றைய அரபு நாட்டு மன்னர் பரம்பரையினர் அதை எப்படித் தொடர்கிறார்கள் என்பதையும் சொல்கிறது.

அமுத சுரபி 2024 ஏப்ரல் இதழில் எழுதியது 

 




 


6/6/19

நாடுகளுக்கிடையேயான  நட்பூ


இறைவனின் படைப்பில் மிகவும் அழகானவை என்று போற்றப்படுபவை மலர்கள். சில மலர்களுக்கு மகத்தான மருத்துவ குணங்களுண்டு என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம்.    மனித மன  உணர்வுகளைப்  பண்படுத்தும்  மலர்களின் ஆற்றல்களைப் பற்றி,  கூறியிருக்கிறார் அரவிந்த அன்னை.  ஆனால் ஒரு மலர் போரில் ஈடுபட்ட இரு நாடுகளுக்கிடையே அமைதியையும் நட்புறவையும் மலரச்செய்திருக்கிறது என்கிறது வரலாறு.அந்த மலர்தான் செரிபிளாசம்
ஏப்ரல் மே மாதங்களில் அமெரிக்காவின் பல பகுதிகளில் பூத்துக்குலுங்கி வசந்தத்தை வரவேற்கும் மலர்  செரிபிளாசம்.  அடர்ந்த மரங்களில் இலையே தெரியாமல் மலர்கள் நிறைந்து அந்த சூழலையே தன் வண்ணத்தால் நிறைக்கும் இந்த  செரிபிளாசம்  அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட மலர் இல்லை.  100 ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மலர்.  இன்று  அமெரிக்க நாடு முழுவதும் பரவியிருக்கும் இந்த மலர் மலரப்போகும் நாளை முன்னதாகவே அறி வித்து  அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில்  கோலாகலமாக ஒர் மாத விழாவாகவே கொண்டாடுகிறார்கள்.  இசைக்குழுக்களின் கச்சேரி, நடனம், பார்ட்டிகள், பேஷன் ஷோக்கள் என அமர்களப்படும். உள்ளூர்காரர்களைத்தவிர இதற்காகவே வரும் அண்டை மாநில மக்கள்; ஹோட்டல்களில் டிஸ்கவன்ட் எல்லாம்
அமெரிக்க ஐக்கிய நாடு உருவாகி வளர்ந்து கொண்டிருந்த போது உலகின் மிகச்சிறந்த உணவுப்பயிர்களையும் தாவரங்களையும் அமெரிக்காவிற்கு    கொண்டுவரவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த அன்றைய அமெரிக்க அரசு அதற்காகவே  தனித்துறைகளை  உருவாக்கியிருந்தது. அதில் வேளாண்மைத்துறையில் ஒரு பிரிவின்  வேலை  உலகின் நல்ல  உணவுப்பயிர்களைத்தேடி  கண்டுபிடித்து கொண்டுவருவது. 
இயற்கையிலேயே தாவரங்களில் ஆர்வம் கொண்ட  டேவிட் ஃபேர்சைல்ட் (David Fairchild) என்ற இளைஞருக்கு அந்தப்பொறுப்பு தரப்பட்டிருந்தது. இவர்தான் இந்தியாவிலிருந்து மாம்பழம், சீனாவிலிருந்து பீச்,  சிலியிலிருந்து பட்டர் பழம் போன்ற அமெரிக்கா அறிந்திராத  பழவகைகளையும் காய்கறி வகைகளையும் அந்த  நாட்டுக்குக்  கொண்டுவந்தவர்.  அவர் ஒவ்வொரு பயணத்தின் போதும் அந்தந்த  நாடுகளிலிருந்து கொண்டுவரும் மலர்ச்செடிகளை தன் வீட்டுத்தோட்டத்தில்  நட்டுச்  சோதிப்பார். 1902ல்  ஜப்பான் பயணத்தில் இவர் பார்த்தது சக்கூரா  என்ற பூக்களால் நிறைந்த மரங்கள்.  அது பூக்கும் காலத்தை ஜப்பானியர்கள்  அதன் மரத்தடியில்  குடும்பங்களாக  பிக்னிக்  வந்து மகிழ்ச்சியாக கழிப்பதையும் பார்த்த டேவிட் அதை கொண்டுவந்து தன் வீட்டின் முன்  வளர்த்தார். அவரது இளம் மனைவிக்கு இதன் பூக்கள்  மிகவு பிடித்துவிட்டது. அதற்கு “செரிபிளாஸம்” எனப் பெயரிட்டார்.  அந்தப் பூக்கள் பார்ப்பவர்களைக்  கவர்ந்தது. அதற்காகவே அவர் வீட்டுக்கு நிறைய விஸிஸ்டர்கள். பார்ட்டிகள். அந்த மலர்ச்செடிகளை  பெரிய அளவில் அமெரிக்காவிற்கு  இறக்குமதி செய்ய விரும்பினார் டேவிட்.   
அப்போது முன்னாள் அதிபர்களின்  நினைவாலயங்களுடன்  உருவாகிக் கொண்டிருந்த வாஷிங்டன் டிசி   வளாகம் பெரும் பொட்டல் காடாக இருப்பதைக்கண்ட .  அன்றைய அமெரிக்க அதிபர்  ரூஸ்வெல்ட்  (Teddy Roosevelt)  அந்த நினைவு வளாகத்தை அழகான மலர் தோட்டமாக்க  யோசனைகளை  மக்களிடமிருந்து வரவேற்றிருந்தார்.  அவரைத்  தொடர்ந்து 1909ல்  பதவிக்கு வந்த  அதிபர்  ஹாவர்ட் டப்ஃட் ( William Howard Taft)டின்  மனைவி  ஹெலனுக்கு  டேவிடின் வீட்டு செரி மலர் பிடித்துப் போயிற்று. 
அதிபர் இந்த மலர் மரங்களை அந்த வளாகத்தில் நடுவதை ஆதரித்தற்கு  அமெரிக்காவின் முதல் பெண்மணிக்கு பிடித்தது மட்டும் காரணமில்லை.   ஜப்பானுடன் அமெரிக்கா போர் செய்த காலத்தில் அவர் போர் விவகார  செயலராக இருந்தவர் அந்த அதிபர். .  இந்த மரங்களை ஜப்பானிலிருந்து கொண்டுவருவதின் மூலம்  போரினால் எழுந்திருந்த   இரு நாட்டு மக்களிடமிருக்கும் பரஸ்பர வெறுப்பு குறையும் இரு நாடுகளுக்கிடையே  நல்லுறவு தொடங்க நல் வாய்ப்புக்கான ஆயுதமாக இந்த மரங்கள் நடுவதைக் கருதினார்.
ஏற்பாடுகளைச்செய்ய அதிபர்   டேவிட்டுக்கு ஆணையிட்டார். 300 மரங்களின் இறக்குமதிக்காக  ஜப்பானுக்கு ஆர்டர் அனுப்பப்பட்டது.
மகிழ்ந்தது டேவிட் மட்டுமில்லை. ஜப்பானியர்களும்தான். தங்களுடையதை  விடப்பெரிய  நாட்டில் நமது  சக்கூரா மரங்கள் காலத்திற்கும் நமது  கலாச்சார பெருமையைப் பேசப்போகிறது  என மகிழ்ந்தார்கள்.
டோக்கியோ நகர மேயருக்கு  மிகச்சிறந்த சக்கூரா  மரங்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்காவிற்கு  அனுப்பும்  பணி  ஒதுக்கப்பட்டது.. ஜப்பானிய அரசு  இதைப்  பெரிய கெளரவமாக கருதியதின் விளைவு   300  மரங்களுக்கும்  பதிலாக 2000  மரங்களைக்  கப்பலேற்றினார்.  அந்த மேயர்.

1909 டிசம்பரில் ஸியாட்டில் துறைமுகம் வந்த அந்த மரங்கள் 13 நாள் ரயில் பயணத்துக்கு பின்  வாஷிங்டன்  வந்து  சேர்ந்தது.  ஒவ்வொரு கட்டத்தையும் மேற்பார்வை செய்து வந்த  டேவிட்டின்  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தான் கனவு கண்டதைப்போலவே  இந்த இடம் ஒருநாள் செரிமலர்கள் பூத்துக்குலுங்கி  மலர்க்காடாகும் என்ற  தன் கனவு நனவாகப் போவதை  எண்ணி  மகிழ்ந்தார்..
ஆனால் அது  நீடிக்க வில்லை. வில்லனாக வந்தது அமெரிக்க அரசின் பூச்சியில் துறை. வெளிநாட்டுத் தாவரங்களை அனுமதித்தால் அதன் மூலம் புதுவகையான பூச்சிகள். நுண்கிருமிகள்  அமெரிக்காவிற்குள் வந்து விடும் அவை தாவரங்களுக்கு மட்டுமில்லை மனித உயிர்களுக்கும் ஆபத்து  விளைவிக்கக்கூடியதாக  இருக்கலாம். அதனால் இந்த மரங்களை நடக்கூடாது. என்று பிரச்சனையைக் கிளப்பினார்கள்.

அமெரிக்க அரசின் தலைமைச்செயலர், செரி மலரினால்  அயல்நாட்டுடன் நல்லுறவு, அமெரிக்க இயற்கை வளத்துக்கு ஆபத்து இதில் எதைத் தவிர்ப்பது  எனத்தீர்மானிக்க முடியாமல் தவித்தார். அதிபரின் கட்டளைக்காக காத்திருந்தனர். அதிபர் இறக்குமதி செய்யபட்டிருக்கும் மரங்களைத் தீவிர பரிசோதனை செய்து அறிக்கை கேட்டார்.  வல்லுநர்களின் அறிக்கை மரங்களில் பூச்சிகளும் நுண்ணுயிர்  உருவாதற்கான  அணுக்களும் இருப்தாகச் சொல்லியது.. 
அதிபர் உடனடியாக அந்த  மரங்களை எரிக்க ஆணையிட்டார்.
  
இதற்கிடையில் முன்னதாக தீர்மானிக்கப்பட்டபடி  முதல் மரத்தை நடும் விழாவிற்காக  டோக்கியோ மேயர்  தன் குழுவுடன்  வாஷிங்டன்  வந்துசேர்ந்துவிட்டார். அவரை வரவேற்கும் பொறுப்பை ஏற்றிருந்த டேவிட்டுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. முதல் மரம் நடும் விழாவிற்கு  தன் மனைவியுடன் வந்திருப்பவரிடம் மரங்கள்  எரிக்கப்படப்  போவதைச்சொல்லி. தன் அரசின் சார்பாக மன்னிப்பைக் கேட்க வேண்டிய அவல நிலை.  
ஆனால் அவருக்கு காத்திருந்தது ஆச்சரியம். உருவத்தில் அமெரிக்கர்களை விட சிறியவர்களாக இருந்த ஜப்பானியரின் உண்மையான உயரம் அந்த  மேயரின்  வார்த்தைகளில் தெரிந்தது.
 “நாங்கள் தவறு செய்து விட்டோம்  மரங்களில் இப்படிப் பட்ட ஆபத்து இருப்பதை நாங்கள் உணர்ந்து அனுப்பும் முன் சரி செய்து பாதுகாத்திருக்க வேண்டும். நல்லவேளை உங்கள் அதிபர் எரிக்க  உத்திரவிட்டிருக்கிறார். நடப்பட்டிருந்தால் காலம் முழுவதும் அமெரிக்கா விற்கு  கிருமிகளையும் பூச்சிகளையும் அனுப்பிய பழிச்சொல்லுக்கு  ஜப்பான் ஆளாகியிருக்கும்”.

மறுநாள் மேயரின்  மனைவி அதிபரின் மனைவியைச் சந்தித்து ஜப்பானின்  தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.. விரைவில் வேறு மரங்கள் அனுப்புவதாகவும் அதை ஏற்க வேண்டும் என்றும் வேண்டினார்.
.
மேயர் ஊர் திரும்பியவுடன் ஜப்பானின் அனைத்து தாவர  வல்லுநர்களும்  டோக்கியோவிற்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் மேற்பார்வையில் பூச்சிகள் இல்லாத, நன்கு மருந்திட்டுப் பராமரிக்கப்பட்ட   உடனடியாக பூக்கக்கூடிய 3020 மரங்கள் தயார் செய்யப்பட்டு கப்பலில்  அடுத்த ஆண்டே  ஜப்பானிய மக்களின் பரிசாக அமெரிக்க மக்களுக்கு அனுப்பப்பட்டது

1912ல் அமெரிக்க அதிபரின் மனைவியும் அமெரிக்க முதல் பெண்மணியுமான  திருமதி  ஹெலன் முதல் செரிமரத்தை நட, ஜப்பானியத் தூதுவரின் மனைவி இரண்டாவது மரத்தை நட்டார். தொடர்ந்து  பொட்டாமாக் நதிக்கரை முழுவதும் மரங்கள் நடப்பட்டன. அடுத்த ஆண்டே பூக்க ஆரம்பித்த அவைகள் இப்போது அந்த வளாகம் முழுவதும்  ஆண்டுதோறும்  தங்கள் மகிழ்ச்சியை மலர்களாக்கிக்  காட்டிக்கொண்டிருக்கிறது.   



20/3/19

பியானோ இசை பிடித்திருக்கிறது இந்த யானைகளுக்கு...


  யானைகளை நேசிக்கும் தேசம் தாய்லாந்து.   அவர்களது பாரம்பரியத்திலும்  கலாச்சாரத்திலும் யானைகளுக்கும்  முக்கிய பங்குண்டு. யானை தாய்லாந்து நாட்டின்  தேசிய மிருகம் மட்டுமில்லை. 8 மாநிலங்களின் அரசு முத்திரைகளிலும்  யானை இடம்பெற்றிருக்கிறது. ஆண்டு தோறும் மார்ச் மாதக் கடைசி வாரத்தில் யானைகள் தினம் கொண்டாடுகிறார்கள்.

 உலகின் பல நாடுகளைப்போலத்  தாய்லாந்திலும் காடுகள் அழிந்து நகரங்களாகிக்கொண்டிருப்பதால், 100 ஆண்டுகளுக்குமுன் ஒரு லட்சத்துக்குமேல் இருந்த இந்த யானைகள் இப்போது  நான்காயிரமாகச்  சுருங்கிவிட்டது...பல நூற்றாண்டுகளாக யானைகளை மரம் இழுப்பது, கட்டுமான பொருட்களைச் சுமப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவதற்காக  வீடுகளில் வளர்க்கப்படும் ஒருமிருகமாக அனுமதிக்கப்பட்டிருப்பதால் இன்றும் சில கிராமங்களில் வீட்டுவாசலில் யானை கட்டிப்போடப்பட்டிருப்பதைப்  பார்க்கலாம். கடந்த 20 ஆண்டுகளாக இந்தநாட்டின்  கிராம மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று, வேலையுமில்லாமல், வளர்க்கவும் முடியாமல் வயதாகிக்கொண்டிருக்கும் யானைகளை என்ன செய்வது? என்பது தான்.

கால்நடை மருத்துவர்  சாம்ராட்(Dr. Samart,) அவரது மனைவி கூன் ஃபூன் ( Khun Fon) இந்த வயதான யானைகளை பாங்காக் நகரிலிருந்து 30 கீமி தொலைவிலிருக்கும் காஞ்சனாபுரி  வனப்பகுதியில் யானைகள் உலகம்” (Elephant world) நிறுவிப்  பாதுகாக்கிறார்கள். தாய்லாந்தில் வனவிலங்கு சரணாலயங்கள் தனியார்தொண்டு நிறுவனமாகங்களாக இயங்குபவை. .  ஓரளவு நிதியுடன் அரசு  நிலத்தை ஒதுக்கி தரும். ஆனால் நிர்வாக, பாரமரிப்பு செலவுகளை இந்த அமைப்புகள்தான் செய்து கொள்ளவேண்டும்.   இதற்குப் பெரிய நிறுவனங்கள் நன்கொடைகள் அளிக்கிறார்கள்.யானை  வீட்டில்    வளர்க்க முடியாதவர்களும், வயதான நோயுற்ற  யானைகளை சர்க்கஸ்  நிறுவனங்களும் .  இங்கு அனுப்பிவிடுகிறார்கள். சிலர் அதன் பராமரிப்புக்கு பணமும் கொடுக்கிறார்கள்.
       
பசுமை படர்ந்திருக்கும் மலைச்சரிவுகளுக்கும் சலசலக்கும்  ஒரு சிற்றாற்றுக்கும் இடையிலிருக்குக்கிறது இந்த ரம்மியமான இடம்.   யானைகளுக்கான முதியோர் இல்லமா? என்று கேட்டால் திருமதி  சாம்ராட் வருத்தப்படுகிறார்.   மனிதர்களின் முதியோர் இல்லம் போல   இங்குக் கட்டுப்பாடுகள்,  ஒதுக்கப்பட்ட தனியிடங்கள். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உணவு என்றெல்லாம்  இல்லை.  இங்கு அவர்கள் இஷ்டம் போல சுதந்திரமாகச் சுற்றலாம், விரும்புமிடத்தில் நிற்கலாம் விளையாடலாம். என்கிறார்.  2008ல் இரண்டு யானைகளுடன்  தொடங்கப்பட்ட   இதில் தற்போது 32 யானைகளிருக்கின்றன.  இந்த குடும்பம் ஆண்டுதோறும் பெரிதாகிக்கொண்டிருக்கிறது.

வரவேற்பு கூடத்தில் அங்கிருக்கும் யானைகளின் படத்துடன்   அதன் பெயர், வயது, அங்கு வந்துசேர்ந்த நாள்  அதன் விசேஷ குணம் ஆகிய விவரிக்கப்பட்டிருக்கின்றன. “ நாக் மாயிஎன்ற 88 வயது பெண் யானைதான் இவர்களில் சீனியர். 18 வயதான காந்தா தான் இருப்பதில்  இளையவர்.  யானைகளைப்பார்க்கும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது எனச்சொல்லுகிறார்கள். அதில் முக்கியமானது செல்பி எடுத்துக்கொள்ளாதீர்கள். நமது யானை நண்பர்கள் அதை விரும்பவில்லை”.

மேற்கூரையுடன் அமைக்கப்பட்ட  ஒரு நீண்ட மரப்பாலாம்.  அதில் நாம்  நடந்து செல்லும்போது  அதனருகில்  வரும்  யானைகள் நமக்கு ஹலோ சொல்லுகிறது .அந்தப்பாப்பாதையில் யானைகளைப் பார்த்தபடி நாம் நடக்கலாம்.  சில இடங்களில் குழந்தைகள் உட்கார்ந்து  அருகில் வரும் யானைகளைத்தொட்டுப் பார்க்கிறார்கள்.
பாதுகாப்புமாகத் தொடங்கப்பட்ட இது கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பேசப்படும்ஒரு  சுற்றுலாத்தலமாகியிருக்கிறது. பாதுகாப்பகத்தின் பணியாளர்கள் தவிரப் பல தன்னார்வலர்களும் டூரிஸ்ட்களுக்கு உதவுகிறார்கள்.  ஒரு நாள், இரண்டு நாள் முகாம்களும் நடத்துகிறார்கள்.
யானை வளர்ப்பு, பராமரிப்பு முறைகளை மாவுத்என்ற ஆறு மாத பயிற்சியும் அளிக்கிறார்கள். பயிற்சிக்கு இந்தோனிஷியா, கம்போடியா, வியட்நாம்  நாடுகளிலிருந்து  வந்திருக்கிறார்கள்.   சில  பல்கலைக்கழக  மாணவர்கள் இங்கு தங்கி யானைகளைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.   குழந்தைகளும், இளைஞர்களும் அதிகம் வருகிறார்கள். யானைகளுக்குத்தரும் அரிசிச் சாதத்தைச் சமைத்து  பெரிய கவளமாக உருட்டி அதன் நடுவில் பூசனி, வெள்ளரிக்காய்  போன்றவற்றைப் பதித்து,   டைனிங் ஹாலில் வரிசையாக காத்திருக்கும் யானைகளுக்கு வழங்கும் பணியில் இவர்களும் பங்கேற்கிறார்கள். தாங்கள் சமைத்ததைச்  சாப்பிடும் யானைகளைப்பார்த்து இவர்கள் போடும் சந்தோஷ கூச்சல் யானைகளின் பிளிரலை விட அதிகமாகயிருக்கிறது.  
வனத்தில் யானைகள் விரும்பிச் சாப்பிடக்கூடிய புல் வளர்க்கிறார்கள். அதைக் குழந்தைகளே அறுத்து  யானைகளின் அருகில் சென்று  கொடுக்கிறார்கள்.
யானைகள் குளிப்பதற்கென்று ஒரு  சின்ன நீர்த்தேக்கம் இருக்கிறது.  அதில் யானைகளை  குளிப்பாட்டிக்கொண்டு  டூரிஸ்ட்களும் குழந்தைகளும் குளிக்கிறார்கள்.  யானைகளும் அவர்கள் மீது   தண்ணீரை பீய்ச்சியடித்து விளையாடுகிறது.  
இங்கு வாழும் யானைகளைப்பற்றி அனைத்தும் அறிந்த சாம்ராட்  தம்பதியினரும் இங்கேயே வசிக்கின்றனர். நாள் முழுவதும் சுற்றிச்சுற்றி வந்து இவர்களை கவனித்துக்கொள்கிறார்கள்.  அருகிலிருக்கும் ஒரு யானையை காட்டி கடந்த சில நாட்களாக நான்  பெயர் சொல்லிக் கூப்பிட்ட போது இவர் திரும்பிப் பார்க்கவில்லை. காதில் ஏதோ பிரச்சனை என் நினைக்கிறேன். ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்என்கிறார் டாக்டர்  சாம்ராட். பெரிய ஹ்யரிங்அய்ட்  வைப்பாரோ என எண்ணிக்கொள்கிறோம்

இங்கிலாந்த்தைச்சேர்ந்த பால் பார்ட்ன்(PAUL BHARTON) ஒரு புகழ்பெற்ற பியானோ  இசைக்கலைஞர். லண்டன் ராயல்  அக்கடமி ஆப்  ஆர்ட்ஸ்ஸில் பணிபுரிந்துவந்தவர்.  57 வயதாகும் இவர்  தன் பணி ஓய்வுக்குபின் இந்த காஞ்சனா புரியின் அருகிலிருக்கும் கிராமத்தில் வசிக்கிறார்.  அவர் வாரந்தோறும் தன் பியானோவைத் தனது
சிறிய டிரக்கில் கொண்டுவந்து இந்த யானைகளுக்காக  மேற்கத்திய  சாஸ்திரிய இசையை வாசிக்கிறார்.  யானைகள் ரசித்துக் கேட்கின்றன. நான் ஒரு புதிய ராகம் வாசித்தால் மிக கவனமாகக் கேட்கும். ஏற்கனவே வாசித்தாக இருந்தால் தலையை ஆட்டி, ஆட்டி  ரசிக்கும்.  என்கிறார். லாம் டியூன் (lamp Duin)  என்ற பார்வையை இழந்த யானை இவர் வந்தவுடனேயே ஆஜாராகிவிடுமாம். சில யானைகள்  இசையைப்பற்றிக்  கவலைப்படாமல் இவரை கண்டுகொள்ளாமல்  சுற்றிக்கொண்டு போய்விடுமாம். . 
இவர்  வாசிக்கும் போது  பியானோவிற்கு  மிக அருகில் வந்து யானைகள் ரசிப்பதைத்   தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான்  அச்சமாகயிருக்கிறது. பால் பார்ட்டன் தன் இசையில் மட்டுமே  கவனமாகயிருக்கிறார். கடந்த சில மாதங்களாக பியானோ வாசிக்கும் போது  தன் பேத்தியையும்  மடியிலிருத்திக் கொண்டு அவரையும்   வாசிக்கச்செய்கிறார்.
 நினைவாற்றல். சொல்வதைப்புரிந்துகொள்ளும் திறன் போல இசையைப் புரிந்துகொள்ளும் திறனும், ராகங்களின் வேறுபாடுகளும்  அவர்களுக்குப் புரிகிறது.  கோபமாக அல்லது சோர்வுற்றிருக்கும்  யானைகளைப்  பால் பியோனா வாசிக்கும் போது கொண்டுபோய் நிறுத்தினால் அமைதியாகி புத்துணர்வு அடைகிறார்கள் என்கிறார்  டாக்டர் சாம்ராட்..
நமது கோவில்களில் சிறை கைதிகள் போல மண்டபங்களில்  அடைக்கப்பட்டிருக்கும் யானைகளுக்கும், சின்னதம்பி, ஒற்றைக்கொம்பன் போன்ற ரவுடி யானைகளுக்கும் இதுபோல ஒரு இடம் தமிழக வனப்பகுதியிலும்  அமைக்கப்பட்டால் எவ்வளவு  நன்றாகயிருக்கும்.?