நீலக்கடலுக்கடியில்...
சோலார் பேனல் தொப்பிகள் அணிந்திருக்கும் உயர்ந்த தெருவிளக்குகள் அணிவகுத்து நிற்கும் விசாகபட்டின கடற்கரைச் சாலையில் செல்லும் நம்மை நிறுத்துவது கடற்கரையிலிருக்கும் அந்தப் பிரம்மாண்டமான கறுப்பு சப் மெரின். ஆம். ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கரையில் நிற்கிறது. இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குர்சுரா என்ற நீர்முழ்கிகப்பலை தரையில் நிறுத்தி ஒரு அருங்காட்சியகமாக்கியிருக்கிறார்கள்.
சதாரணமாக ஒரு நீர் மூழ்கிக் கப்பலை உள்ளே சென்று பார்க்க முடியாது என்பதால்,1969லிருந்து 2001 வரை இந்திய கடற்படையில் ஒரு லட்சம் கிமீக்கும் அதிகம் பயணித்து ஓய்வு பெற்ற இந்த ரஷ்ய நீர்முழ்கிகப்பலை ஒரு அருங்காட்சியகமாக்கியிருக்கிறார்கள்.
படிகள் ஏறி 300 அடி நீளமுள்ள அந்த நீர் மூழ்கிகப்பலுக்குள் நுழையும் நம்மை வரவேற்று அந்தக் கப்பலின் கதையை விவரிக்கிறார் ஒரு முன்னாள் கடற்படை வீரர். 1971 பாக்கிஸ்தான் போரில் அரபிக்கடலில் ரோந்து பணியிலிருந்தபோது அங்கு நுழைய முயன்ற பாக்கிஸ்தான் கப்பல்களை அடையாளம் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது.
இரண்டு பேர் மட்டுமே நடக்கக்கூடிய சிறிய பாதை. இரண்டு பக்கமும் பலவகை குட்டி இயந்திரங்கள், கருவிகள். குழாய்கள், வயர்கள் எல்லாம். சற்று வேகமாகத் திரும்பினால் எதாவது ஒரு கருவியில் முட்டிக்கொண்டுவிடுவோம். இந்தக்கப்பலில் 67 கடற்படை வீரர்களும் 8 அதிகாரிகளும் மாதக்கணக்கில் வசித்திருக்கிறார்கள். எந்தக் கருவிகளை இயக்கினால் கப்பல் எந்த வேகத்தில் எவ்வளவு ஆழம் கடலில் மூழ்கும், எந்த வேகத்தில் வெளியே வரும் என்பதை விளக்குகிறார்கள். பிரமிப்பாகியிருக்கிறது. நீண்ட நாட்கள் கடலில் மூழ்கியே யிருக்கும் இந்தக் கப்பலில் குறுகலான இடத்தில் அடுக்குப் படுக்கைகள். உணவு வேளையில் அதில் ஒன்று டைனிங்டேபிளாக மாற்றப்படும். இரண்டே டாய்லெட், இரண்டு வாஷ் பேசின்கள் மட்டுமே. டெலிபோன்பூத் சைஸில் ஒரு சின்ன கிச்சன். இவற்றில் நம் வீரர்கள் எப்படி இயங்கினார்கள் என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரியவைக்க அந்தந்த இடங்களில் வீரர்களின் பைபர் உருவங்களை அமைத்திருக்கிறார்கள். நமது பாதுகாப்புக்காக இந்தக் கடற்படை வீரர்கள் எத்தனைக் கடினமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எளிதாக உணரவைக்கும் காட்சிகள்
ஒரே நேரத்தில் கடலுக்கடியிலிருந்து ஆறு டார்பிடோக்களை செலுத்தித் தாக்கும் வசதி கொண்ட இந்தக் கப்பலில் அது எப்படி இயங்கும் என்பதை விளக்குகிறார்கள். அந்த டார்பிடோக்களில் ஒன்றும் கப்பலுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கிறது.
ஆசியாவிலேயே இப்படி ஒரு கப்பலையே அருங்காட்சியகமாக்கியிருப்பது இங்குத்தானாம், எழுந்த எண்ணத்தைச் செயலாக்கியவர் அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதை இப்படி கரையில் இழுத்து நிறுத்தப் பல பெரிய இயந்திரங்களை நிறுவி 18 மாதங்கள் உழைத்திருக்கிறார்கள். செலவு 14 கோடி ரூபாய்கள்.
மறு முனையிலிருந்து படிகளிலிறங்கி கீழே வரும்போது அந்தக் கம்பீரமான கப்பலை ப்போலவே நமது கடற்படையின் கம்பீரமும் நம் மனதில் அழியா காட்சிகளாகத் தங்குகிறது.
ஒரு நீர்மூழ்கி கப்பலைப்பார்த்த பிரமிப்புடன் வெளியே வரும் நம்மை ஆச்சரியப்படுத்துவது சாலையின் ,மறுபக்கத்தில் நிற்கும் ஒரு போர் விமானம். அது TU142 என்று அழைக்கப்படும் இந்திய விமானப்படையின் விமானம். அதன் பணி கடலுக்கடியில் நகரும் சப்மெரின்களை ஒலியின் மூலம் கண்காணித்து அறிந்து அதிரடி வேகத்தில் தாக்குவது. ரஷ்யத்தயாரிப்பான இது இந்திய வான் படையில் 30000 மைல்கள் பறந்து 29 ஆண்டுகளுக்குப்பின் ஓய்வு பெற்றிருக்கிறது.
இதை இங்கு நிறுத்தி ஒரு அருங்காட்சியகமாக்கவேண்டும் என்ற யோசனையும் அன்றைய முதல்வர் திரு சந்திரபாபுவுடையது தான். கடந்த 2017ஆம் ஆண்டு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த். திறந்துவைத்திருக்கிறார்.
ஒரு விமானத்தின் உள் பகுதியைப் போலவே ஒரு காட்சிகூடத்தை அமைத்திருக்கிறார்கள். ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும் அந்தக்கூடத்தில் விளக்கப் படங்கள், காணொளி காட்சிகள் போர் விமானத்திலிருந்து வீசும் குண்டுகள் பாரசூட், உடைகள் எல்லாம் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். விமானியின் காக்பிட் சீட்டில் அறையில் நாமே உட்கார்ந்து பார்க்கலாம்.
விமான விபத்து ஏற்படும் போதெல்லாம் செய்திகளில் அடிபடும் “பிளாக் பாக்ஸ்” இருக்கிறது. பெயர்தான் கருப்பு பெட்டியே தவிர அது ஒளிரும் ஆரஞ்சு வண்ணத்திலிருக்கிறது. எளிதில் எங்கிருந்தும் அடையாளம் காணமுடியும் என்பதற்கான வண்ணமாம் அது
ஆல்பட்ராஸ்(ALBATROSS) என்பது ஒரு கடல் வாழ்பறவை. மிக அதிக உயரத்தில் மிக வேகமாகப் பறக்கக்கூடிய பறவை. ஒரு நாளைக்கு 1000 கிமீக்கள் கூட பறக்கும் சக்திகொண்டது. அந்த பறவையின் வடிவில் இந்த விமானம் அமைக்கபட்டிருப்பது என்பதை விளக்க அதன் வடிவத்தின் நிழல் இந்த விமானம்போல் விழுவதைக்காட்சியாக வைத்திருக்கிறார்கள்.
அந்த விமானம் தன் பணிக்காலத்தில் செய்த சாதனைகளையும் அதைச்செய்த வீரர்களின் படங்களையும் விமான வால் பகுதியைப்போலவே வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட் செய்துவிட்டு வெளியே வந்தால் நாம் இத்தனை நேரம் பார்த்து விவரங்கள் அறிந்த விமானமே நிற்கிறது. அதன் உள்ளே சென்று பார்க்கிறோம். இத்தனை சின்ன இடத்திலா இவ்வளவு விஷயங்களையும் அடக்கியிருக்கிறார்கள் என்று எழும் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.
விமானத்தைச் சுற்றி நடந்து வரும்போது திறந்திருக்கும் அதன் அடிவயிற்றுப் பகுதியிலிருந்து தான் எதிரியின் இலக்கைத் தாக்கும் குண்டுகள் பாயும் என்பது புரிகிறது. வயதானாலும் விமானத்தைப் புத்தம் புதிது போல சீராக்கி பாரமரிக்கிறார்கள். விமானத்தைப் பல பகுதிகளாகப் பிரித்து இங்குக் கொண்டுவந்து இணைத்து உருவாக்கியிருக்கிறார்கள். கண்காட்சி அமைக்கச் செலவு 14 கோடி என்கிறது தகவல் பலகை.
நம் வான்படையின் வலிமையை நாமும் நமது மாணவர்களும் தெளிவாகப் புரிந்துகொண்டு பெருமிதம் அடைய இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது இது ஒரு நல்ல முதலீடுதானே என்று தோன்றிற்று.
ஒரே நாளில் நமது கடற்படை, வான் படையின் வலிமையை, பெருமைகளை அறிய ஒரு வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியுடன் திரும்புகிறோம்.