மங்கையர் மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மங்கையர் மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27/1/19

எல்லாருக்கும் பெய்யும் மழைசமூக வலைத்தளங்களில் தொடர்ந்து  எழுதுவதின்  மூலம் பெரிய அளவில் என்ன  சமூக சேவை செய்துவிடமுடியும்? சமூகத்துக்கு  ஏதாவது ஒரு நல்ல பணியைச் செய்ய வேண்டுமென்றால்  அடைப்படையான தேவை பணம். அது  தொடந்து எழுதிக்கொண்டிருப்பதால் மட்டுமே எப்படிக்  கிடைக்கும்?  என்று எண்ணும் நம்மைப்போலப் பலரை திகைக்க வைக்கிறார் கொங்கு மண்டல இளைஞர் வா.மணிகண்டன். தன் வலைப்பூவில் எழுதுவது  மூலமே பெரிய அளவு நிதி திரட்டி உதவிக்கொண்டிருக்கிறார்.

கரட்டடிபாளையம்(ஈரோடுவட்டம்) என்ற கிராமத்துக்காரரான இவர் கணனியிலில் முதுகலைப்பட்டதாரி. தொடர் பணிமாற்றங்களுக்கும், முயற்சிகளுக்கும், பயிற்சிகளுக்கும்  பின்னர் பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில்  நல்ல பணியிலமர்ந்தவர்.  கவிஞரான இவரது வலைப்பூ “நிசப்தம்?.  பேர்தான் நிசப்தமே தவிர மனிதர்  மனித உணர்வுகள் வாழ்வின் யாதர்த்தங்கள், சமூக அவலங்கள் அரசியல் போன்ற பல விஷயங்களில் தன் கருத்தை உறக்கச் சொல்பவர்.  அதனாலேயே இவரது நிசப்தத்தின் வாசகர் வட்டம் குறுகிய காலத்தில்  மிகப் பெரிதாக வளர்ந்தது.


ஒரு முறை இவரது வாசகர் ஒருவர் கேட்டக்கொண்டதற்கு ஏற்ப. கல்விச்செலவுக்கு வந்த வேண்டுகோளை தன் வலைப் பூவில் வெளியிட அதற்கு வந்த ஆதரவைக்கண்டு ஆச்சரியப்பட்டுப்போனார் மணிகண்டன். தன்வாசகர்களில் இத்தனை பேர் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையும்,உதவிகள் செய்வதில் ஆர்வமும் கொண்டிருப்பதை கண்டு ஊக்கமடைந்து தொடர்ந்து அதுபோல உதவிகள் செய்யத்துவங்கினார். உள்நாடு வெளிநாடு என்று பல இடங்களிலிருந்து முகமறியாத மனிதர்களிடமிருந்து பணம் வரத்துவங்கியது.  ஆரம்பகாலங்களில் தனது பெயரிலேயே நன்கொடைகளைப் பெற்று உதவி வந்த இவர் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் நிசப்தம் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் அறப்பணிகளை நிர்வகித்து வருகிறார். கடந்த இரண்டாண்டில் மட்டும் இந்த அறக்கட்டளை செய்திருக்கும் உதவிகள்  ஒரு கோடிக்கும் மேலிருக்கும். நல்ல இலாபத்தில் இயங்கும் ஒரு கார்பேர்ட்,  தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு தன்னார்வல நிறுவனம்  இதைப்போல செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஒரு தனி மனிதன்,அதுவும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மனிதர் செய்திருப்பதை அறியும்போது  பிரமிப்பாகயிருக்கிறது 
அறக்கட்டளையின் வரவு செலவுகளை மாதந்தோறும் வங்கியின் அறிக்கையோடு தன் நிசப்தம் வலைப்பூவில் வெளியிடுகிறார். வங்கியின் ஸ்டேட்மென்ட்டில் வரிசை எண்ணிட்டு அவை பெறப்பட்ட நாள் நன்கொடை/ வேண்டுகோளின் விபரங்கள்(எந்த மாதிரி உதவி கோரப்பட்டிருக்கிறது)   அதன் தற்போதைய நிலவரம், போன்ற விபரங்களை ஒரு பட்டியலாக  இணைத்து வெளியிடுகிறார்.  “உரியத் தளராத ஆர்வத்துடனும் மங்காத அறவுணர்ச்சியுடனும்  வா மணிகண்டன் பணியாற்றிவருகிறார். அவரது நிசப்தம் அறக்கட்டளை ஆதரவற்றவர்களுக்கான மருத்துவ உதவிக்கும், எளியோரின் கல்விக்கும் பெரும்பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்முன் இதற்காக  தலைவணங்குகிறேன்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். 
கல்வி மருத்துவ உதவிகளைத்தாண்டி சமூகப்பணிகளையும் செய்கிறது நிசப்தம். அறக்கட்டளை. 2015  பெரு வெள்ளத்தில்  அரசு நிவாரணப்பணிகள் அடையாத கிராமங்களைத் தேடிச் சென்று உதவியிருக்கிறார்கள்.  கடந்த ஆண்டு முதல் ஏரி குளங்களை தூர்வாரி மீட்டெடுத்தல், சமுதாய காடுகள் உருவாக்கம் போன்றவற்றைச் செய்யத் துவங்கியிருக்கிறார்கள் . 
வேமாண்டம்பாளையம் ஒரு  சிறிய கிராமம்.   ஒரு வருடத்துக்கு முன்பாக அந்த ஊரில் இருந்த குளத்தில் இருந்த சீமைக் கருவேல மரத்தையெல்லாம் நிசப்தம் சார்பில் அழித்துக் கொடுத்திருக்கிறார்கள்.. குளம் மட்டுமில்லை- பஞ்சாயத்து முழுவதிலும் இருந்த சீமைக் கருவேலம் அழிக்கப்பட்டன. கிட்டத்தட்ட அறுபது ஏக்கர் குளம். சில ஊர்களில் இருக்கும் குளங்கள் அக்கம்பக்கத்து ஆறுகளில், ஓடைகளில் நீர் ஓடினால் நிரம்ப வாய்ப்பிருக்கிறது. இந்தக் குளத்துக்கு அந்த வாய்ப்பில்லை. மழையைத் தவிர வேறு எந்த வழியுமில்லை. வானம் பார்த்த பூமி. காய்ந்து கருவாடாக்கிக் கிடந்த அந்தக்குளம். மழையால்  இப்போது  நிரம்பியிருக்கிறது.. ஒரு வருடக் காத்திருப்புக்குப் பிறகான பெரு மகிழ்ச்சி இது.  என்கிறார் மணிகண்டன்.. பல ஆண்டுகளாகக் காய்ந்து கிடந்த பூமியில் நீர் நிரம்பிக் கிடப்பதை பார்க்க யாருக்குத்தான் மகிழ்வாக இருக்காது? அடுத்த இரண்டாண்டுகளுக்கு அந்தக் கிராமத்தில் தண்ணீருக்கு பிரச்சனையில்லை.  நிரம்பிய நீரைக்கண்டு மனம் நிறைந்திருக்கும் நிசப்தம்  இதுபோல மேலும் இரண்டு கிராமங்களுக்குச் செய்திருக்கிறார்கள்.


 இம்மாதிரி நீர் நிலைகளின் அருகில் அடர் வனம் என்ற முறையில் நிறைய மரங்களை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அடர்வனம் என்பது ஒரே இடத்தில் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களைத் தேர்ந்தெடுத்து மிக நெருக்கமாக நட்டு வளர்ப்பது,. மிக வேகமாக வளரும் அந்த மண்ணின் தன்மைக்கேற்ற மரக்கன்றுகளைக் கண்டுபிடித்து நடுகிறார்கள்  ஒரு அல்லது இரண்டு ஆண்டுகளில் அந்த இடத்தில்  ஒரு சின்ன  அடர் வனம் உருவாகிறது. கோட்டுப்புள்ளாம்பாளையம் என்ற கிராமத்தில்  இரண்டாயிரம் செடிகளுடன் ஒரு வனத்தை உருவாக்கி அது செழித்து என அந்தப்பகுதி இப்போது பக்கத்துகிராம்மக்களுக்கு டூரிஸ்ட்ஸ்பாட்டாகியிருக்கிறதுஇத்தனை பெரியபணிகளை எப்படி இவரால் சாதிக்க முடிகிறது.? “தொடர்ந்த  முயற்சிகள் தான் சார்” என்கிறார்.  முதலில் கிராமங்களில் இளைஞர்களை அழைத்துபேசுகிறோம். நிறையவே பேசுகிறோம்.. அரசியல் வாதிகளிடம் பெற்ற அனுபவத்தால்  மிகத் தயங்குவார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கையைப் பெற்றபின் திட்டங்களை விளக்கினால் முன்வருவார்கள்.  முன் வந்துவிட்டால் பின் வாங்குவதில்லை.வேமாண்டம்பாளையத்தில் அத்தனை பணிகளையும் செய்தது உள்ளுர் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தான். அதிகாரிகளை சந்தித்துபேசினால் 95% பேர்  உதவுகிறார்கள்  என்று சொல்லும் இவர் சில கிராமங்களில்  சவால்களையும் சந்தித்திருக்கிறார்.  ஆனால் மனம்தளாரமல் தொடர்கிறார்.


“நல்லவர்கள் நான்கு பேர் கொடுக்கும் பணத்தை வாங்கித் தனிப்பட்ட நபர்களுக்கு உதவுவது  என்பது  ஒரு சங்கிலித் தொடராக இருக்க வேண்டும். உதவி செய்கிறவர்களைவிடவும் உதவி பெறுகிறவர்களிடம் இந்த எண்ணம் வலுக்க வேண்டும். அதுதான் நாம் படுகிற அத்தனை சிரமங்களுக்குமான அர்த்தமாக இருக்கும். நாம் விதைக்கிற ஒவ்வொரு ரூபாயும் அடுத்தடுத்த சந்ததிக்கான விளைபொருட்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். என்று சொல்லும் மணிகண்டன் இப்போது பங்களுரிலிருந்து பணிமாறி  கொங்கு நாட்டில் கோவைக்கு வந்திருக்கிறார்
இவர்களைப் போன்றவர்கள் ஓய்வு நேரம் வார விடுமுறைகளை தியாகம் செய்து  சமூக சேவைசெய்வது அவர்களுக்கு அது உள்ளூர அளிக்கும் ஒரு நிறைவுக்காக, விடுதலைக்காக. 
நம்மைப்போன்ற பலரால் அதைச் செய்யமுடியாது. 
மணிகண்டன் போன்றவர்களை முன்வைத்தே 
‘எல்லாருக்கும் பெய்யும் மழை’

3/9/16

இரும்பு பட்டாம்பூச்சி

இந்த மாத மங்கையர் மலரில் எழுதியிருப்பது  


 இரும்பு பட்டாம்பூச்சி 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், முதல்வர் திரு இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில், சீனாவின் தூண்டுதலுடன், அவ்வப்போது, போராட்டங்கள் வெடித்து வந்ததால், பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்பட்டது. மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டவரின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் அங்கு 1958-ஆம் ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் முழுக்க முழுக்க பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டுக்குள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட முடியும். மேலும் சந்தேகப்படும் நபர்களை யும் கைது செய்ய முடியும். அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது. 
பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச்சட்டம் வழங்குவதால் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கடந்த 2000-ஆம் ஆண்டு மணிப்பூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 10 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், இதுதொடர்பாக பாதுகாப்புப்படையினர் முறையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தச் சம்பவமே சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளாவை போராட்டத்தில் இறங்கத் தூண்டியது. இதன் தொடர்ச்சியாக, மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், அவரது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என இரோம்ஷர்மிளா அறிவித்தார்.மணிப்பூர் மாநில உரிமைகளை மீட்கக் கோரி பொதுமக்களுடன் இணைந்து பல்வேறுகட்ட போராட்டங்களில் அவர் ஈடுபட்டார்.
இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து, 16 ஆண்டுக்காலம், இரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்தார். உணவு, தண்ணீர் குடிக்க மறுத்து வரும் அவரை, தற்கொலைக்கு முயன்றதாக அரசு கைது செய்தது. 2006ம் ஆண்டு, டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டார்; பின், விடுவிக்கப்பட்டார். எனினும், மணிப்பூர் திரும்பிய அவர், மீண்டும் கைதானார். உணவருந்தாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மீது தற்கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஷர்மிளா, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. 
 இம்பாலில் உள்ள, ஜவகர்லால் நேரு மருத்துவமனையில், வலுக்கட்டாயமாக அவருக்கு மூச்சு குழாய் வழியாக உணவு செலுத்தப்பட்டுவந்தது. . தொடர்ந்து, 16 ஆண்டுகளாகப் போராடி வரும்  இரும்பு பெண் என  வர்ணிக்கப்பட்ட அவர்  சிலவாரங்களுக்கு முன் இம்பால் நீதிமன்றத்தில் ஆஜரானபோது  “:ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை, உண்ணாவிரதத்தால் மட்டுமே, முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியாது. எனவே, ஆகஸ்ட் 9ம் தேதியுடன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன் என நீதிபதியிடம் தெரிவித்தார்.  
.உண்ணாவிரதப் போராட்டம் இருந்த வரை அவருக்கு இருந்த ஆதரவு அத்தனையும் அவரது அறிவிப்பு வந்தது  முதல் எதிர்ப்பாகிப் போனது. அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு  மணிப்பூர் தனிநாடு கோரும் தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இரோம் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்த அதே நேரத்திலேயே அவருக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. 
தன்னுடைய  உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் இரோம் ஷர்மிளா. ஆனால் தாய், சகோதரர்கள் உட்பட உறவினர்கள் யாரும் அவரை வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை. இதற்குத் தீவிரவாதிகள் வந்து தாக்குதல் நடத்துவார்களோ என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம்.  இரோம் ஷர்மிளா சென்ற இடமெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள்தான் நடந்தன... பின்னர் காவல்துறை அவரை மருத்துவர் தியாம் சுரேஷ் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அங்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் வேறுவழியின்றி இரோம் ஷர்மிளா காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஒருவழியாக அவர் இதுவரை சிறைவாசம் அனுபவித்த 'மருத்துவமனை'யில் தங்க வைப்பது என  முடிவு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கே அவர் திரும்ப நேரிட்டதுதான் சோகம்!
மறுநாள்  பத்திரிகையாளர் கூட்டத்தில் “எனது உண்ணாவிரதத்தால் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. எனவே அரசியலில் இணைந்து அதன்மூலமாக எனது போராட்டத்தை தொடருவேன். வரும் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் குரால் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிடுவேன். இதில் வெற்றி பெற்று முதல்வரானால் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நிச்சயம் ரத்து செய்வேன்’’ என்று இரோம் ஷர்மிளா அறிவித்திருக்கிறார்..
எந்த  ஒரு அரசியல்கட்சியின் பின்னணியும் இல்லாமல் ஒரு மிக நீண்ட போரட்டத்தை நடத்திய இந்த இரும்பு பெண் அரசியலுக்கு வரப் போவதை நமது  அரசியல் வாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்? திருமதி ஜோதிமணி (தேசிய காங்கிரஸ்)
நான் பெரிதும் மதிக்கும் ஓர் ஆளுமை இரோம் ஷர்மிளா. வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி அண்ணல் காட்டிய சத்தியாகிரஹ வழியில் 16 ஆண்டுகள் உண்ணாவிரதமிருந்து போராடியவர். தனது இளமையையே பலி கொடுத்த அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவர் அரசியலுக்கு வருவது என்பதை என் போன்ற பெண் அரசியல்வாதிகள் பெருமையாகப் பார்க்கும் விஷயம். அவருடைய சமூகப் பார்வையும் போராட்ட குணமும், துணிவும் அரசியலில் ஈடுபடுவோருக்கான தகுதிகள்

ஆனால் அவர் இந்த முடிவை அறிவித்தவுடன் அங்குள்ள போராளிகள் வரவேற்காமல் எதிர்ப்பு தெரிவித்திருப்பது எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்த விஷயம். இது இம்மாதிரி போராட்டங்களை மேற்கொள்பவர்களின் மன உறுதியை குலையச் செய்யும் கவலையளிக்கும் விஷயம். தன் குறிக்கோளை நோக்கிச் செல்ல அவர் வேறுபாதையைத் தேர்ந்தெடுக்க முயலுவதைத் தவறு என்று சொல்லுவது எந்தவகையிலும் நியாயமாகாது. அதேபோல் அவர் தன் திருமணம் பற்றி அறிவித்திருப்பதும் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிரஷட்டமானது. திருமணம் செய்தபெண் அரசியலுக்கு வரக் கூடாது என்று .பேசப்படுவது பெரும் துயரமான அதிர்ச்சி
வடகிழக்கு மாநிலங்களின் எங்கள் கட்சி பொறுப்பாளராக நான் இருந்திருக்கிறேன். அதனால் அங்குள்ள பிரச்சனைகளின் முழுத்தீவீரமும் அறிந்திருக்கிறேன். சுயேட்சையாக வெற்றி பெற்று முதல்வராக முடிந்தால் கூட அவரால் மட்டும் இந்தச் சட்டத்தை நீக்கிவிட முடியாது. அது முழுக்க முழுக்க மத்திய அரசின் கையில் இருக்கிறது. இப்போது மணிப்பூரில் இருக்கும் காங்கிரஸ் அரசும் இந்தச் சட்டத்தை நீடிக்க விரும்பவில்லை. ஆனால் நாட்டின் பாதுகாப்பை கருதி எல்லைப்பகுதியில் இப்படியொரு சட்டதேவையை ராணுவ அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் உணர்ந்ததனால் அங்கு இது இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அது அத்துமீறி மக்களுக்கும் குறிப்பாகப் பெண்களும் பெருமளவில் பாதிக்கப்படும்போது அதுகுறித்து பெரிய அளவில் விவாதம் செய்யப்படவேண்டிய விஷயம் என்பதை ஏற்கிறேன்
--------
திரு அருணன். (இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சி)


   16 ஆண்டுகள் இப்படி உலகில் யாருமே செய்யத்துணியாத ஒரு உண்ணாநிலையை நிகழ்த்தித் தன் நோக்கத்தை உலகமறியச் செய்த இந்தப் பெண்மணியின் மகத்தான தியாகத்தை ஒரு அரசியல் வாதி என்ற முறையில் நான்  போற்றி பாராட்டுகிறேன். 28 வயதில் துவங்கி 44 வயது வரை இப்படித் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தவரை உலகம் இதுவரை சந்தித்தில்லை என் கார்டியன் பத்திரிகை எழுதியிருக்கிறது. இவர் செய்துவந்தது ஒரு தியாக வேள்வி. அதன் மூலம் தன் இலக்கை அடைவதில் வெற்றிபெற முடியவில்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்து தானே அதைக் கைவிடவும், ஆனாலும் தொடர்ந்து தன் லட்சியத்துக்காக வேறு வழியில் போராட துணிந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

7 சகோதரிகள் என்றழைக்கப்படும் இந்த மலைப்பகுதிகளில் அமுலாக்கியிருக்கும் வலிமைவாய்ந்த இந்தச் சட்டத்தின் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு இந்திய ராணுவம் அளித்த வலி, வேதனை இந்த நாட்டில் பலருக்குத்தெரியாது. அன்னிய ஊடூஉருவலையும், தீவிரவாதிகளையும் தடுக்க உதவும் இந்த சட்டத்தைத் துஷ்பிரோயகம் செய்து அங்குள்ள மக்கள் குறிப்பாகப் பெண்கள் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதைக்கண்டு கொதித்தெழுந்த இரோம் ஷர்மிளா   தன் போராட்டத்தைத் துவங்கினார். ஒரு கட்டத்தில் மக்கள் ஆதரவு திரண்டு பெண்கள் நிர்வாணமாக நின்று சாலைமறியல் செய்தார்கள். எந்த அளவு அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இதைச் செய்திருப்பார்கள்?. அவர்களின் இந்த நிலையை, ராணுவத்தின் அத்துமீறலை நாட்டுமக்களின், உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தது இவரின் போராட்டம் தான். இன்று அவர்  உண்ணாவிரதத்தைக் கைவிட்டதை அங்குள்ள சிலர் எதிர்ப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது எந்தவகையிலும் நியாமில்லை. கொள்கைக்காக 16 ஆண்டுகள் போராடிய ஒரு போராளியை யாரும் வாழ்நாள் முழுவதும் தொடரும் படி நிர்ப்பந்திக்க முடியாது. அது தவறு.

இரோம் ஷர்மிளா  அரசியலில் களம் இறங்குவேன் என்ற அறிவிப்பு வரவேற்கப்படவேண்டிய ஒன்று. இம்மாதிரி தீவிர கொள்கைப்பிடிப்பு இருப்பவர்கள் இந்திய அரசியலுக்கு வரவேண்டியது இன்றைய சூழலுக்கு மிக அவசியம். ஆனால் சுயேட்சையாக நின்று முதல்வராகி சட்டத்தை நீக்குவேன் என்பதுதான்  சற்று புதிராக இருக்கிறது. மணிப்பூர் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். அதில் 31 பேர் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றால் தான் இது முடியும். மிகச்சவாலான இது இன்றைய பெரும்பான்மை கட்சி ஜனநாயகத்தில் இந்தக் கனவு சாத்தியப்படும் என்று தோன்றவில்லை. சிலநாட்கள் முன் அவர் ஒரு புதிய கட்சி துவக்கி களம் காணுவார் என்ற செய்திகள் வந்தனஒருக்கால் அப்படி நிகழ்ந்தால் இவரது கனவு நனவாகும் வாய்ப்புகள் அதிகம்
-------
திருமதி வாசுகி ( தலைவி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்)


இதுநாள்  வரை ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்து  தனிநபர்  சத்தியாகிரஹ போராட்டத்திற்குக் கிடைத்த மக்கள் ஆதரவை  உணர்ந்த அவர் தன் போராட்டவடிவை மாற்றி   அரசியல் தளத்திற்கு வர முடிவுசெய்திருப்பது  மிகவும்  வரவேற்கத்தக்க விஷயம்.
சுயேட்சை வேட்பாளராக  மக்கள் ஆதரவுடன் தேர்தலில் அவர் பெரிய வெற்றி பெறலாம். ஜெயிக்கும்கட்சி  அல்லது அணி அவரை அமைச்சராகக் கூட அறிவிக்கலாம். ஆனால் அவருடைய இலக்கை அடைய  அரசியலில் அவர் எடுக்கப்போகும் நிலைப்பாடு மிக முக்கியம். அவர் இத்தனை நாள் போராடிய. விஷயத்தை ஆதரிக்காத கட்சிகளுடன் இணைந்தாலோ அல்லது சுயேட்சையாக இருந்து அவர்களின் ஆதரவைப்பெற்றாலோ  இதுநாள் வரை அவர் போராடியது அர்த்தமில்லாமல் போய்விடும்,

மணிப்பூரைப் போன்ற சுழலில் இருக்கும் திரிபுராவிலும் இந்தச் சட்டம் இருக்கிறது. அங்கு இருக்கும் இடதுமுன்னணி கூட்டணி ஆட்சி அதை அவசியமான எல்லைப்பகுதிகளில் மட்டும் தேவையான அளவில் செயல்படுத்துகிறது. அதைப்போல ஒரு நிலை மணிப்பூரில் ஏற்பட இடது சாரிகளுடன் இணைந்து தோள்கொடுப்பதுதான் அவர் எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடு என் நான் நினைக்கிறேன். இது பலவகையில் பலன் தரக்கூடிய முடிவாக இருக்கும் .
  மங்கையர் மலர்  அக் 16


26/7/16

நாலு நூற்றாண்டுகளாக நடக்கும் நாடகங்கள்உலகம் போற்றும் நாடகஆசிரியர் ஷேக்ஸ்பியரின் 400வது நினைவு நாள் கடந்த மாதம் இங்கிலாந்தில் தேசிய விழாவாக நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஷேக்ஸ்பியர் பிறந்த கிராமத்தில் அந்த விழாக்கள் துவங்கியது. அதைப் பார்ப்பதற்காகவே அங்குச் சென்ற திருமதி சந்திரா திலீப் தனது அனுபவங்களைப் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

சிறுவயதில், பள்ளிக்காலத்திலிருந்தே நான் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை படித்துப் பிரமித்தவள் நான். தொடர்ந்து கல்லூரி, வங்கி வேலை என்று வாழ்க்கை தொடர்ந்த போதும் ஷேக்ஸ்பியரின் எழுத்துகளைத் தேடி தேடிப் படித்தேன். அவர் பிறந்த வீட்டையும் வாழ்ந்த ஊரையும் பார்க்க வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று. சில முறை வெளிநாடுகள் சென்றிருந்தாலும் இந்த வாய்ப்பு கிட்டவில்லை. ஷேக்ஸ்பியரின் 400 வது நினைவுநாளை இந்கிலாந்தில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப் போகிறார்கள் என அறிந்ததும் அதைப் பார்க்க, அதில் கலந்துகொள்ள, ஆவல் கொண்டு என் விருப்பத்தை என் கணவர் திலீப்பிடம் தெரிவித்தபோது, அவரும் உடன் வரச் சம்மதித்தது ஆச்சரியம். காரணம் அவருக்கும் ஆங்கில இலக்கியத்தில் மிகவிருப்பம் என்றாலும் என்னளவு ஷேக்ஸ்பியரின் பயங்கர ரசிகரில்லை.
ஸ்டார்ட்போர்ட் அப் ஆன் ஆவோன்(Stratford-upon-Avon) என்பது இங்கிலாந்தில். லண்டனிலிருந்து 163 கிமீ தூர ரயில் பயணத்தில் இருக்கும். ஒரு சின்ன கிராமம். ஸ்டார்ட்போர்ட் பெயரில் வேறு நகரங்கள் இருந்ததால் ஆவோன் நதிக்கரையிலிருக்கும் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இது இன்றும் போன நூற்றாண்டின் சாயல் மாறாமல் மிக அழகாக இருக்கிறது.

இது தான் ஷேக்ஸ்பியர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த(1564-1616) கிராமம். இங்குள்ள அரங்கத்தில் தான் அவரது நாடகம் முதலில் அரங்கேயிருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளையொட்டி (ஏப்23)வரும் வார இறுதியில் இசை நாடக நிகழ்ச்சிகளை விழாவாகக் கொண்டாடுவார்கள். 25000 பேர் மட்டுமே மக்கள்தொகை கொண்ட இந்தக் கிராமத்துக்கு ஆண்டுக்கு 5 லட்சம் சுற்றாலா பயணிகள் வருகிறார்கள்.
இந்த வருடம் அவரது 400 வது நினைவு நாளை மிகப்பெரிய அளவில் இங்கிலாந்து நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த இடத்திலிருந்து துவங்கியது. இதற்காகத் தனி இணைய தளம், கமிட்டிகள், அரசாங்க அறிவிப்புகள் என ஆறு மாதமாக அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அங்கு இரண்டுநாள் தங்கி நடைபெறும் நாடக/ இசை விழாக்களில் பங்குபெறக் கட்டணம், ஹோட்டல் எல்லாவற்றிருக்கும் முன்பதிவு செய்து உதவப் பல டிராவல் கம்பெனிகள் அறிவித்துக் கொண்டிருந்தன.

இந்தச் சின்ன நகரத்தில் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் இருக்கின்றன. அவர் பிறந்த விடு, படித்த கிங் எட்வர்ட் பள்ளி, அவர் மனைவியின் குடும்ப வீடு, மகள் வசித்த வீடு, அவரது பெற்றோர்கள் வீடு அவர் வாங்கி வாழ்ந்து பின் இறந்த வீடு முதல் நாடகம் அரங்கேறிய தியட்டர், அவருக்கு ஞானஸ்தானம் செய்விக்கப் பட்ட சர்ச், அதில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதி இப்படி எல்லாம்,

அவரும் ஒரு பங்குதாராரக இருந்து இங்குத் துவக்கிய ராயல் ஷேக்ஸ்பியர் தியட்டர் என்ற நாடக அரங்கம் கடந்த சில ஆண்டுகளில்;புதுப்பிக்கப்பட்டு அதிநவீனமாக இருக்கிறது.
இந்த இடங்களுக்குக் குழுக்களாக அழைத்துச்சென்று கைடு விளக்குகிறார். மறு நாள் 400வது நினைவுநாள் விழாவிற்கான எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்த நகரம் அமைதியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
38 நாடகங்களும், 154 14 வரிப் பாடல்களும், இரண்டு நீண்ட கவிதைகளும் எழுதியிருக்கும் ஷேக்ஸ்பியரின் படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளோ. அவரைப் பற்றி அவர் எழுதிய குறிப்புகளோ எதுவுமே இன்று இல்லை. அவருடைய போட்டோ கூடக் கடையாது. அவர் புத்தகத்தின் முதல் பதிப்பில் இருக்கும் ஒரு கோட்டுஒவியத்தின் அடிப்படையில்தான் பின்னாளில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

அவர் மறைந்த 7 ஆண்டுகளுக்குப் பின் அவரது நண்பர்கள் ஜானும் ஹென்றியும் 1623ல் வெளியிட்ட “முதல் பக்கம் என்ற தொகுப்பின் முலம்தான் ஷேக்ஸ்பியரை எழுத்துவடிவில் இந்த உலகம் அறிந்துகொண்டது. . இந்தப் புத்தகத்தைக் கண்ணாடிப்பேழையில் அவர் வாழ்ந்த வீட்டில் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

இன்று ஷேக்ஸ்பியரைப் பற்றி நாம் அறியும் பலவிஷயங்கள் நீண்ட ஆராய்சிகளுக்கும் அலசலுகளுக்கும் பின்னர் கிடைத்தவை., இதைச்செய்தவர்கள் இங்குள்ள ஷேக்ஸ்பியர் சொஸைட்டி. இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். இன்று ஆராய்ச்சி நிலையமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இதில் பலர் ஷேக்ஸ்பியர் எழுதியவற்றை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்
.
முதல் நாள் இந்த இடங்களைப் பார்த்தபின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் நாடகங்களில் ஒன்றைத்தேர்ந்தெடுத்துப் பார்த்தோம். மறுநாள் காலையில் நகர மேயர் ஆட்சிமன்ற குழுவினருடன் முன்னணியில் செல்ல, பள்ளி மாணவர்கள் சீருடையில் அணிவகுக்க, நகர இசைக்குழுவின் இசையில் “ஷேக்ஸ்பியர் வாக் என்ற நடைப்பயணம். அந்தக் கிராமத்தின் குறுகிய வளைந்த தெருக்களில் சென்றது. அவர் இந்த வீதிகளிலேதானே நடந்திருப்பார், இந்தப்பள்ளியில்தானே படித்திருப்பார், இந்த வீட்டில்தானே மனைவியைச்சந்திருப்பார், என்ற எண்ணஓட்டங்களுடன், எங்களைப்போலக் கடல்கடந்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், இங்கிலாந்தின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள். பக்கத்து ஊர்கார்கள் எனப் பலர் அதில் இணைந்தனர்
.
தெருமுனைகளில் உள்ளூர் இசைக்குழுவினரின் வரவேற்பு, ஷேக்ஸ்பியரின் பாத்திரங்களின் வேடமணிந்து உற்சாகமூட்டம் நண்பர்கள் என விழாக்கோலம். ஆங்காங்கே பள்ளிகளிலும் பொது மண்டபங்களிலும் நாடகங்கள். பெரிய மேடை செட்டுக்கள் எல்லாம் கிடையாது. தரைதளத்தில் தொட்டுவிடும் தூரத்தில் நடிகர்கள் சற்று தள்ளி இசைக்கலைஞர்கள்.

விழாவின் இறுதியில் பவனியின் பங்கு பெற்றோரும் அதைப், பார்த்துக்கொண்டிருந்தோரும், இந்த விழாவிற்காகத் தயாரிக்கப்பட்டிருந்த ஷேக்ஸ்பியரின் முகம் பதிக்கப்பட்ட ஒரு முகமூடியை அணிந்து கொண்டு அந்த மேதைக்கு 3 முறை வாழ்த்தொலி எழுப்பினார்கள். மிக அற்புதமாக உணர்ந்த நிமிடங்கள் அவை.

பவனியின் இறுதியில் ஷேக்ஸ்பியரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஹோலி டிரினிடி சர்ச். இங்கு அவருக்கும் அவரது மனை.விக்கும் அருகருகே சமாதிகள். அவைகள் மீது எங்களுக்கு முன் வந்தவர்கள் வைத்திருந்த அழகான மலர்கொத்து. கல்லறை வாசகம் லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. அதன் அருகே

இந்த தூசிபடிந்த இடத்தில் தோண்டும் அன்பான நண்பரே
யேசுபெருமான் மன்னிப்பாராக
கல்பலகைகளை விட்டுவைப்பவர்களை வாழ்த்துகிறேன்
என் எலும்புகளை எடுப்பவர்களை சபிக்கிறேன்.”
.
 என்று சொல்லும் ஆங்கில மொழிபெயர்ப்பு. அந்த காலகட்டத்தில் கல்லறைகளிலிருந்து எலும்புகள் திருடப்படுவது வழக்கமாம். அத்னால் இந்த வாசகங்கள் என்றார் கைடு.
அன்றைய விழாவிற்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்ஸும் அவரது மனைவி கேமிலாவும் வந்திருந்தனர். இளவரசர் சார்லஸ் போட்டோக்களில் பார்ப்பதைவிட சற்று வயதான ஆனால் கம்பீரமான தோற்றத்தில் இருக்கிறார். .அன்று அரச தம்பதியினர் ராயல்ஷேக்ஸ்பியர் தியட்டரில் ஒரு நாடகமும் பார்த்தனர்.
ஆண்டுதோறும் நமக்கும், இந்த உலகிற்கும் வயது அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் சில விஷயங்கள் எப்போதுமே அழியாத இளமையுடன் இருக்கின்றன. அதில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் ஒன்று.


சந்திப்பு     ரமணன்


 மங்கையர் மலர் ஜுலை இதழிலிருந்து