9/1/13

தெருகூத்தில் ஷேக்ஸ்பியரின் மாக்பெத்.


ஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால்  கடந்த மாதம் அவரின் உலகப்புகழ் பெற்ற மாக்பெத் நாடகம் அந்த அரங்கில் ”தெரு கூத்தாக” போடபட்டது தான் ஆச்சரியம்.
மேடை நாடக்கலையை முறையாக சொல்லிகொடுத்து அதை வளர்ப்பதற்காக  1975ல் உருவானது டெல்லியில்உள்ள தேசிய நாடகபள்ளி. இங்கு மூன்றாண்டு நாடக்கலையை பட்ட படிப்பாக கற்பிக்கிறார்கள். நாட்டின் பல மாநிலங்களின் மரபுகலை நாடக பாணிகளையை அறிவதும், பயிற்சிபெறுவதும் இதில் ஒரு அங்கம், இந்த ஆண்டு இதன் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கபட்டது தமிழ்நாட்டின் பாரம்பரிய நாடக வடிவான  தெருகூத்து. இந்த கலையின் மிக முக்கிய அம்சம் கூத்து கலைஞர்களுக்கு பாடவும் வசனம் பேசும்பொழுதே நடனமாடியேபடி இடம் மாறிக்கொள்வதும். உடல், மனம், குரல் இவைகளை தெருகூத்து அடவுகளுடன் ஒருங்கிணைக்கும் பயிற்சியை இவர்களுக்கு அளித்தவர் புரிசை சம்பந்த தம்பிரான். தமிழக கூத்துகலையின் முன்னோடிகளின் ஐந்தாவது தலைமுறையான இவர் கூத்துபட்டறையில் பயிற்சிபெற்று தெருகூத்து பாணியை செம்மைபடுத்தியிருப்பவர். புராண இதிகாச கதைகள் மட்டுமே நடந்து கொண்டிருந்த கூத்தில் நவீன பாணிநாடகங்களை தெருகூத்தின் மரபுகளை மீறாமல் நிகழ்த்தி புகழ்பெற்றவர். இந்தியாவின் பல இடங்களிலும் பலவெளிநாடுகளிலும் தனது குழுவுடன் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். 
இந்த ஆண்டு சங்கீத நாடக அகடமியின் விருது பெறுகிறார். கடந்த ஆண்டு கொலாம்பிய நாட்டில் நடைபெற்ற சர்வதேச பாரம்பரிய நாடகவிழாவில் அவர்கள் நாட்டு புகழ்பெற்ற நாவலாசிரியர் எழுதிய  “மிகபெரிய சிறகுகள் கொண்ட தொண்டுகிழவன்”“என்ற நாடகத்தை தன் தமிழ்நாட்டு மாணவர்களுடன் தமிழில்  நடத்தியிருக்கும் சம்பந்த தம்பிரானிடம் ஸ்பானிஷ் மொழிபேசுபவர்களுக்கு தமிழ் எப்படி புரிந்தது என்று கேட்டபோது கதை தெரிந்தவர்களுக்கு கூத்தின் பாத்திரங்கள் உணர்ச்சிகள் எளிதாக புரியும் அதுதான் கூத்தின் சிறப்பு என்றார்.

இவர் தந்த 40 நாள் பயிலரங்க பயிற்சியில் கூத்துபாணியை கற்று தேசிய நாடகபள்ளி மாணவர்கள் நடத்தியது தான் மாக்பெத்.
டன்கன் என்ற அரசனின் தளபதிகளில் ஒருவன் மாக்பெத். போரில் வெற்றிபெற்ற அவனது வீரத்திற்காக மன்னரால் பாரட்டபட்டபடுகிறான்., அரசனை கொன்று விட்டு ஆட்சியை கைபெற்ற அவனை தூண்டுகிறாள் அவனது பேராசைக்காரியான மனைவி. முதலில் தயங்கிய மாக்பெத் கொலைக்குபின் மன்னனாகிறான். பதவியை தக்க மேலும் ஒரு கொலை என நல்ல திருப்பங்களும் விறுவிறுப்பும் கொண்ட இந்த கதையை ஷேக்ஸ்பியர் மனித மனத்தின் பல்வேறு கூறுகளை, மனவியல் கோணங்களை காட்டி நாடகமாக்கியிருக்கிறார். .
 இதை கூத்துபாணியில் நாடகமாக்குவது எளிதல்ல. அதை மிக திறமையாக நிர்வகித்து நடத்தியவர் தமிழ் நாடக மைய இயக்குனர் சண்முக ராஜவும், பயிலரங்க இயக்குனர் ராஜேந்திரனும். ஒரு புகழ்பெற்ற ஆங்கில நாடகத்தை, கருநீலதிறையின் பின்னணியில் இருவர் மறைத்து பிடித்திருக்கும் துணியின் மறைவில் பாத்திரங்கள் நிற்க கட்டியகாரன் சொல்லும் அறிமுகத்துடனும் தமிழ் பாரம்பரிய இசையுடனும் பார்ப்பது புதிய அனுபவம். மாக்பெத்க்கு கிரிடம் சூட்டும் காட்சியில் கெட்டிமேளம் ஒலித்தது.
.அன்று  நடந்த மாக்பெத் நாடகம் ஹிந்தி மொழியில் என்று அறிவிப்புகளில் சொல்லப்படாதால் தமிழ் நாடகம் என நினைத்து வந்தவர்களில் பலருக்கு  பாத்திரங்கள் பேசியது புரியாத போதும்  அமைதியாக ரசித்துகொண்டிருந்ததைபார்த்த போது சம்பந்த தம்பிரான் சொன்ன கூத்தின் மொழி    புரிந்தது
கல்கி 13/01/13

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்