3/6/13

“ஏர்போர்ஸ் ஒன்” என்பது அமெரிக்க  ஜனாதிபதிகள் மட்டும் பயன் படுத்தும் விமானம். சகலவசதிகளுடனும் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும்  இருக்கும் இந்த விமானத்தை அமெரிக்க அதிபர்கள் தங்கள் உள்நாட்டு வெளிநாட்டு பயணங்களுக்கு  பயன்படுத்துவார்கள். அதிபர் குடும்பத்தினர், அவரது விருந்தினர்கள் மட்டுமே பயணிக்கும் இந்த பெரிய விமானத்தில் குறைவான இருக்கைகள் அதிகமான வசதிகள். அதிபருக்கு வெள்ளமாளிகை “ஓவல் ஆபிஸ்” போல ஒரு  அறை,குடும்பத்தினருக்கு தனி அறைகள், ஜிம்,  அதிகாரிகள் கூட்டத்திற்கான கான்பிரன்ஸ்ரூம்,தொலைதொடர்பு வசதிகளுடன் பத்திரிகையாளர்கள் அறை, அதிபரின் குரூப் ரத்ததின் சேமிப்புடன் ஒரு குட்டி ஆஸ்பத்திரி  என எல்லாம் இருக்கும்.
அவசியமானால் பறந்துகொண்டிருக்கும்போதே மற்றொருவிமானத்திலிருந்து பெட்ரோல் நிரப்ப வசதி,  தரையிலிருந்து பாயும் ஏவுகணைகள் விமானத்தை தாக்க முடியாத பக்க சுவர்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள்,  வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையுடன் எப்போது தொடர்பிலிருக்கும் ஹாட்லைன். உலகின் எந்த நாட்டு அதிபரையும்  தொடர்புகொள்ளும் வசதியுள்ள டெலிபோன்கள் போன்ற சகல வசதிகளுடன் கூடிய  ஒரு பறக்கும் ”வெள்ளை மாளிகை” இது


1990லிருந்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜெரால்ட் ஃபோர்ட், ஜிம்மி கார்ட்டர், ரொனல்ட் ரீகன், ஜார்ஜ் எஸ்.புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யு.புஷ் ஆகியோர் பயணம் செய்த போயிங்  DC9-32 வகையை சேர்ந்த இந்த ஏர்போர்ஸ் ஒன் விமானத்தை  இப்போது ஏலம் போடபோகிறார்கள். இதைவிட இன்னும் அதிகமான பாதுகாப்பு  மற்ற வசதிகளுடன் கூடிய புதிய விமானத்தை அதிபர் ஒபாமாவின் பயன்பட்டிற்காக வாங்கியிருப்பது தான் காரணம். இம்மாதிரி அதிபரின் ஏர்போர்ஸ் ஒன்  விமானத்தை ஏலம்போடுவது இதுதான் முதல்முறை.  ஆன்லைனில் நடைபெறும் இந்த ஏலத்திற்கு 50000 டாலர்கள் குறைந்த பட்ச தொகை என்று நிர்ணயத்திருக்கிறார்கள்.  ”நாங்கள் இப்படி ஒரு சரித்திர சம்பங்களுக்கு சாட்சியான அரிய பொருளை அடிக்கடி விற்பதில்லை. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என விளம்பரபடுத்தி எவரும் பங்குகொள்ளகூடிய ”ஆன்லைன்” ஏலத்தை அறிவித்திருக்கிறது GSA(Govt. Service Agency). இவர்கள் தான் அமெரிக்க அரசாங்க அலுவலக சொத்துகளை பராமரிப்பவர்கள்.   ஏலத்தில் கேட்கபடும் அதிக தொகைக்கு விமானம் விற்கபடும்.. அரிசோனா மாநிலத்தில் போனிக்ஸ் விமான நிலையத்தில்  நிற்கும் இந்த விமானத்தை அப்படியே அங்கிருந்து எடுத்து செல்லும் பொறுப்பு வாங்குகிறவர்களுடையது
விமானத்தை வாங்கியவர்கள் ”ஏர் போர்ஸ் ஒன்” என்ற பெயரையோ அல்லது அதிபரின் சின்னத்தையோ பயன்படுத்தமுடியாது. ஏனென்றால் ஏர்போர்ஸ் ஒன் என்பது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும்  விமானத்தின் அடையாள எண்.  அதிபர் அந்த விமானத்தில் இருந்தால் மட்டுமே அந்த பெயரால் அழைக்கபடும் என்கிறது அமெரிக்க விமானதுறை சட்டம். .இது மிக அதிகமான் செலவில்  தயாரிக்கபட்ட விமானம் என்பதால் இதன் உதிரிபாகங்கள் அதைதயாரித்த நிறுவனத்திடம் மட்டுமே கிடைக்கும் அதுவும் மிக அதிக விலையில்தான் இருக்கும் அந்த விலைக்கு புது ஜெட் விமானமே வாங்கிவிடலாமாம். அப்படியானால் யார் வாங்குபவர்கள்? வாங்கி  என்ன செய்வார்கள்.?

”அருமையான கிச்சன் வசதி இருப்பதால் அதை அப்படியே நிறுத்தி ரெஸ்டோரண்ட் நடத்தலாம்..” ஆபிஸ் அருகில் நிறுத்தி கான்பிரன்ஸ் போன்ற தங்கள் அலுவ்லக மீட்டிங்களுக்கு பயன்படுத்தலாம். பணக்காரர்கள் தங்கள் வீட்டு வாசலில் நிறுத்தி “ நான் சின்ன பையானாக இருந்த போது இதில்தான் நம் பிரெஸிடெண்ட் போவார் என்று பேரகுழந்தைகளுக்கு காட்டலாம் என்ற ரீதியில்  இணைய தளத்திலும் பேஸ் புக்கிலும் பல ஐடியாக்கள் கொட்டுகின்றன. விமானத்திற்கு விலையை சொல்லுபவர்களை விட விதவிதமான யோசனைகள்  சொல்பவர்கள் தான் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள். ம்ம். யார்வீட்டு வாசலில்  இது நிற்கபோகிறதோ?

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்