16/9/13

உப்பிற்கு உயிரிட்டவர்.




அயோடின் என்பது ஒரு முக்கிய நுண் உயிர்சத்து. குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு அதுவும் முளைவளர்ச்சிக்கு உதவும் நுண் உயிர்சத்து. 80களில் இந்த ஊட்ட சத்தின் குறைபாட்டினால் உலகெங்கும் எண்ணற்ற குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது உணரபட்டது. இன்று அயோடின் உயிர்சத்தின் அவசியத்தை புரியவைத்து அதை   உலகின் பலநாடுகளில் எல்லோருக்கும்  எளிதில் கிடைக்கச் செய்தவர்களில் முக்கியமானவர் -ஒரு இந்தியர்.- ஒரு ”நம்ப தமிழன்”, . திரு.ஜி,கே வெங்கடேஷ் மன்னார்.
இன்று உலகெங்கும் மிகவும் பிரபலமாக அறியபட்டிருக்கும் ”அயோடினஸைட் சால்ட்” என்ற  உயிர்சத்து சேர்க்கப்பட்ட உப்பை அறிமுகபடுத்தியவர் இவர்தான்.  மிக மலிவான, தினமும் உணவில் பயன்படுத்தபடும் உப்பில் இந்த  நுண்உயிர்சத்தை சேர்ப்பதின் மூலம் எளிதாக விரைவாக மக்களை அடையும் என்பதினால் அதற்கான முயற்சிகள் எடுத்து மிக கடினமான அந்த தயாரிப்புமுறைகளை தன் ஆராய்ச்சிகள் மூலம் எளிதாக்கியவர் இவர். இன்று இந்த வகை உப்பை பயன் படுத்தியதின் மூலம் உலகம் முழுவதும் 2000 கோடி குழந்தைகள் நுண் உயிர் சத்து குறைபாட்டின் விளைவுகளில் இருந்து காப்பாற்றபட்டிருக்கின்றனர். இவரின்தயாரிப்பு முறைப்படி நுண் உயிர் செறிவுட்டபட்டிருக்கும் உப்பில் ,  இயற்கையான  ருசி, மணம், நிறம், எதுவும் மாறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால்  செரிவுட்டம் நிகழந்திருப்பதையே சொன்னால் தான் புரிந்து கொள்ள முடியும்.
ஜி. கே வெங்கடேஷ் மன்னார் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை ஐஐடியில்  கெமிகல் எஞ்னியரிங் படித்த பின் அமெரிக்க பல்கலைகழகத்தில் மேற்படிப்பை தொடர்ந்தவர்.  1970 களில் இந்தியா திரும்பி தன்னுடைய குடும்பத்தொழிலான உப்பு உற்பத்தியை நவினமாக்கி டேபிள் சால்ட் தயாரிப்பு முறையை மலிவு விலையில் அறிமுகபடுத்தினார்., அந்த தயாரிப்பு முறையை பல  உப்பு தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்ற உதவினார். 70களின் இறுதியில் உப்பை எப்படி ஒரு உயிர்சத்துள்ள பொருளாக்கி அதை எளிதில் எல்லோருக்கும் கிடைக்க செய்வது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது ஐக்கிய நாட்டு சபையின் ஒரு அங்கமான யூனிஸீப்(UNICEF)  உலகின் சில நிருவனங்களுடன் இணைந்து இதை செய்ய முற்சிப்பதை அறிந்து அவர்களுடன் இணைந்து தன் முயற்சியை தொடர்ந்தார். சில ஆண்டுகளிலேயே  இத்தகைய முயற்சிகளிலீடுபட்டிருக்கும்  பல சர்வ தேச நிறுவனங்களின் ஆலோசகரானார். 1993ல் யூனிஸஃப்பின் குழு தலைவர்களில் ஒருவராகி 40க்கும் மேற்பட்ட நாடுகளில்  உப்பில் நுண்ணுயிர் சத்து சேர்க்கபடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அரசு அதிகாரிகளுக்கும், தொண்டுநிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்தார்.இதன் விளைவாகத்தான் இன்று பலநாடுகளில் உப்பு தயாரிப்பு முறைகளில் அயோடின்சேர்ப்பது கட்டாயமாகபட்டிருக்கிறது.  கனடா நாட்டின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற இவர் இப்போது அங்கு தனது சொந்த ஆராயச்சி நிறுவனத்தை  துவக்கி தன் பணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.  இவரது நிறுவனம் இன்று  உலகின் 11 நாடுகளில் பல ஆலோசகர்களுடன் இயங்குகிறது, வருடந்திர பட்ஜெட்400 லட்சம் டாலர்கள்.  இன்னும் பல நாடுகளில் குறிப்பாக தென் ஆப்பிரிக்க நாடுகளில் இதன் அவசியம் உணரப்படவில்லை அங்குள்ள அரசுகளின் உதவியுடன் செய்ய ஆரமபித்திருக்கிறோம் என்று சொல்லும் இவர் குழந்தைகளுக்கு எளிய முறையில் நுண்ணுயிர்சத்து கிடைக்க செய்ய வேண்டியதும்  அது எளிதில் மக்களுக்கு கிடைக்க கூடிய வகையில் மிகமலிவான விலையில் இருக்க வேண்டியதும் அரசாங்களின் கடமையாக இருக்க வேண்டும் என்கிறார்.பங்களாதேஷைவிட  சில ஆப்பிரிக்க நாடுகளைவிட, இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில்தான் ஊட்டசத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் என்கிறார்,
  தனது நிறுவனத்தின் அடுத்த கட்டபணியாக இவர் தேர்ந்தெடுத்திருப்பது குழந்தைகளுக்கு பள்ளியிலேயே வைட்டமின் ஏ மாத்திரைகள், வயிற்றுபோக்கை நிறுத்த துத்தநாகசத்து(ZINC TABLETS) மாத்திரைகள் வழங்குவது. இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் துவக்கபட்டிருக்கிறது.

கனடா நாட்டின்  உயரிய விருதான ”ஆர்டர் ஆப் கனடா” என்ற விருது இந்த ஆண்டு இவருக்கு உலகில் ஊட்ட சத்து குறைபாடுகளை ஒழிக்க செய்யும் சிறந்த பணிக்காக வழங்கபடுகிறது.  சில வெளிநாட்டவரே ஆர்டர் ஆப் கனடா கெளரவத்தை பெற்றவர்கள்.
உப்பிட்டவரை உள்ள்ளவும் நினைக்க சொல்வது தமிழர் பண்பாடு. உப்பை நுண் உயிர் சத்துடன் உலகெங்கும் வழங்க வழி செய்த இந்தமனிதரை உப்பு உள்ளவரை உலகம் மறக்காது.
கல்கி13/9/13


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்