21/6/15

கங்கை கரை ரகசியங்கள் .... 4பகல் முழுவதும்  பல இந்திய மொழிகளாலும், சைக்கிள் ரிக்‌ஷாவின் மணிஓசைகளினாலும் நிறைந்திருந்த அந்த காசி நகர வீதிகள்  மெளனமாக இருக்கும்  இருண்ட காலைப்பொழுது. மணி 3. பஸ்கள் நிறுத்த பட்டிருக்கும் இடத்திலிருந்து முன்னால் தலைவர் வண்ண கொடியுடன் வழிநடத்த நம் குழு கால பைரவர் கோவிலுக்கு நடக்க துவங்கியது.
விஸ்வநாதர்  கோவிலுக்கு செல்லும் அதே பாதையில்  நுழைந்து மற்றொரு சந்தின் வழியே போகவேண்டும். காசியில் எந்த கோவிலாக இருந்தாலும் அது ஒரு மிக குறுகிய சந்தில் தான் இருக்கிறது.  தெரு விளக்குகள் இல்லாத அந்த இருட்டில்
ஏற்கனவே நடந்த அனுபவம் கைகொடுக்க மிக கவனமாக ”கோமாதா”க்களை கடந்து கோவிலை அடைகிறோம். போகும் வழியில் இருக்கும் சாட்சி விநாயகரை முதல் நாள் தரிசிக்காமல் வந்ததை நினைவூட்டி  நிறுத்தினார் குழுவில் இருந்த ஒரு டாக்டர். காசிக்கு வரும் அவரிடம் நம் பெயர், தந்தையின் பெயர், மகனின்
பெயரை சொல்லி வேண்டுமாம். அப்பா பெயர் அவர் இங்கு வந்திருக்கிறா என்று சரி பார்பதற்கும், மகன் பெயர் பின்னாளில் நம் மகன் வந்து நம் பெயரை சொல்லும்போது வினாயகர் சரி பார்ப்பதற்குமாம். கால பைரவர் கோவிலின் முகப்பு கதவுகள் மூடப்படுவதேயில்லையாம். கோவிலில் நம் குழுவினரை தவிர வேறு  எவரும் இல்லை.   ”நல்ல வேளை பகல் நேரங்களில்  கோவில் முழுவதும் நிறைந்திருக்கும் பண்டாக்களும்.பூசாரிகளும் இல்லை.  அவர்கள் கையிலிருக்கும் மயிற்பீலிகட்டுகளினால் நம் முதுகில் அடித்து !  ஆசிர்வாதம் செய்து  பணம் கேட்பார்கள் தராவிட்டால் பாக்கெட்டிலிருந்தே எடுத்து கொள்வார்கள்” என்றார். முன்னால் இந்த கோவிலுக்கு வந்திருக்கும் நண்பர்.  கோவில் முழுவதும் ஒரு இடம் பாக்கியில்லாமல் அழுத்தமான சிவப்பு வண்ண ஆயில் பெயிண்ட் பூசபட்டிருக்கிறது.
சன்னதி திறக்க காத்திருக்கிறோம். மிக சின்ன கோவில். பிகாரத்தில் பாதி கயிறு ரட்சைகாப்புகள் விற்பனைசெய்யும் கடைகளால் நிறைந்திருக்கிறது.. காலியாக இருப்பதால்வசதியாக அதில் நின்று கொண்டிருக்கிறோம். தலமை அர்ச்சகர், விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று  விஸ்வநாதரின் அனுமதி வாங்கியபின்தான் இங்கு வந்து பூஜைகள் செய்வாரம். அவர் வருவதற்குள்  யார் இந்த கால பைரவர் அவருக்கு ஏன் இங்கே கோவில்? என்ற புராணக்கதையை தெரிந்து கொள்வோம்.
ஒரு முறை இந்த மூவுலகத்தையும் படைத்த பிரம்ம தேவருக்கும், அதை பாதுகாத்து பராமரிக்கிற விஷ்ணு பகவானுக்கும் இடையில் ஒரு வாக்குவாதம் எழுந்தது இரண்டு பேருக்குள்ள யாரு பெரியவர் என்பதுதான் வாக்குவாதம். பல நாட்கள் நடந்த இந்த வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சிவன் ஒரு பெரிய ஒளிப்பிழம்பா அடியும், முடியும் தெரியாத அளவுக்கு தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். அப்பவும் வாக்குவாதத்தை விட முடியாத பிரம்மன் அன்னப்பறவையா உருவம் எடுத்து இந்த ஒளிப்பிழம்போட ஆரம்பத்தை கண்டுப்பிடிக்க கிளம்பினார். மகாவிஷ்ணுவோ வராக உருவம் எடுத்து இந்த ஒளியோட அடியை கண்டுபிடிக்க போயிட்டார். பல யுகங்களாக தேடிக்கிட்டே இருந்தாங்க. விஷ்ணு சிவனின் அடியை காண முடியாமல் தன் தேடலை கைவிட்டு, சிவனின் முன்பு வந்து வணங்கி நின்றார். பிரம்மனோ தன் தோல்வியை ஒத்துக்க மனமில்லாமல் சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியா வைச்சு தான் ஒளிப்பிழம்போட ஆரம்பத்தை பார்த்து விட்டதாக சொன்னார்.
 இப்படி பொய் சொன்ன காரணத்திற்காக இதனை தண்டிக்கும்விதமாக அந்த ஒளிப் பிழம்பிலிருந்து மிகுந்த தீவிரமும், பயங்கரத் தோற்றமும் கொண்ட காலபைரவர் வெளிப்பட்டார். வந்த வேகத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்தார். ஒரு பிரமாணராகிய பிரம்மனை கொன்றதால் கால பைரவர் ‘பிரம்மகத்யா’ என்ற பாவத்திற்கு உள்ளானார். இதனால், பிரம்மனின் தலை காலபைரவர் கையில் ஒட்டிக் கொண்டது. இதிலிருந்து விடுபடுவதற்காக கால பைரவர் கபால விரதம் பூண்டு, பிரபஞ்சம் முழுவதும் மண்டையோட்டில் பிக்ஷ்ஷை எடுத்து சுற்றித் திரிந்தார். இதனைக் கண்ட மஹாவிஷ்ணு பைரவரிடம், எங்கே சிவபெருமான் தன்னுடைய சுயரூபமான ஒளிப் பிழம்பை வெளிகாட்டினாரோ, அங்கே செல்லும்படி சொன்னார். பைரவர் காசியில் கால் வைத்தவுடன் கையில் ஒட்டிக் கொண்டிருந்த கபாலம் கீழே விழுந்தது. இந்த இடத்தில் தான் கால பைரவர் கோயிலும், கபால மோட்சனத் தீர்த்தக் குளமும் தற்போது அமைந்துள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவங்களை களைந்து அருள்பாலிக்கிறார்.. தன் தவத்தால் காலத்தை வென்று அதை நிறுத்தும் சக்தி பெற்றிருக்கும் இந்த  தெய்வத்தை வழிபட்டால்  நம்முடைய வாழ்நாள் காலம் முழுவதும் மரணபயம் தாக்காமல் 9 விதமான அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிவப்பு வண்ண பஞ்சகச்சவேஷ்ட்டி மஞ்சள் துண்டு சந்தனகோபியில் பளிரென்ற பெரிய குங்குமப்பொட்டு சகிதமாக மோட்டர்சைக்கிளிலிருந்து  இறங்கினார் தலமை அர்ச்சகர். நேரடியாக சன்னதிக்குள் சென்று பூஜைகளை துவக்கினார். நாம் சன்னதி அருகிலிருந்தாலும்  மெல்லிய குரலில் சொல்லுவதால் மந்திரங்கள் கேட்கவில்லை. பைரவி காயத்திரி என்ற அந்த மந்திரங்களை தகுந்த முறையில் உபதேசம் பெற்றவர்கள் மட்டுமே சொல்லமுடியும் என்பதை தெரிந்து கொள்கிறோம். மணிகளின் ஒலி முழங்க  ஆர்த்தியுடன் பூஜை முடிகிறது.
சுயம்புவாக எழுந்திருக்கும் மூர்த்தி சிறியதாக இருக்கிறது.  பெரிய கண்களும் மீசையும் கொண்ட முகம். வெள்ளிகவசம் சாத்தியிருக்கிறது. பார்க்க சற்று பயமாகத்தான் இருக்கிறது.  பூஜை முடிந்தபின்னர் சன்னதியின் பக்க வாயில்வழியே உள்ளே சென்று மூர்த்திக்கு பால் அபிஷேகம் செய்யலாம். கறுப்பு ரட்சை கயிற்றை பூஜித்து வாங்கிக்கொள்ளலாம்.  சன்னதிக்குள் இருக்கும்போது சக்தி அலைகளின் அதிர்வுகளை உணரமுடிகிறது. தியானம் செய்ய தூண்டும் அதிர்வுகள். முழுபயிற்சிகளையும் முடிக்காதாவர்கள் அங்கு தியானம் செய்யவதை தவிர்க்கும்படி சொல்லபட்டிருந்தது. கூட்டம் நெருக்கடிகள் இல்லாதால் மீண்டும் ஒரு முறை தரிசித்து  திரும்புகிறோம்.  இந்த காலபைரவர் காசிநகர காவல் தெய்வமும் கூட.. இவரின் கீழ் காசியின் 8 திக்குகளிலும் பைரவர் சன்னதிகள் இருக்கின்றன. அனைத்திலும் ஒரே நேரத்தில் இந்த அதிகாலை பூஜைகள் நடைபெறுகின்றன.  ஈசன் ஸத்யோகம்,வாமதேவம்,அகோரம்,தத்புருஷம், ஈசானம்  என்று ஐந்து முகங்களில் தன் அருளை வழங்கியிருக்கிறார் அதில் ஒன்று இந்த சிவாம்சமான பைரவமூர்த்தி  என்றும் சொல்லபடுகிறது.  வெளியில் வந்து வெளிச்சம் மெல்ல வரத் துவங்கியிருக்கும்  அந்த பொழுதில் நம் செருப்பை தேடி கண்டுபிடித்து நடக்க துவங்குகிறோம். 
ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  மற்றொரு சந்தின் மத்தியில் காசி
விசாலாட்சி கோவில்.  கோபுர முகப்பும், அதிலிருக்கும் உருவங்களும் அதன் வண்ணங்களும்  அது தமிழக கோவில் என்பதை அடையாளம் காட்டுகிறது. 1908ல் புதிபிக்கபட்டதைச் சொல்லும் கல்வெட்டு. வாசல் நிலையில் கஜலெட்சுமி. சிறியகோவில்தான் ஆனால் பளிச்சென்று விளக்குகளின் வெளிச்சம் நிறைந்திருக்கிறது. பலநூறு ஆண்டுகளாக இருக்கும் இந்த கோவிலை நிர்வகிப்பவர்கள் தமிழக நகரத்தார் சமூகத்தினர். மிக சக்திவாய்ந்த இந்த சக்திபீடத்தை தரிசிக்க காசி விஸ்வநாதரை தரிசித்தபின் வருகிறார்கள்.  தொடர்ந்து பூஜைகள் நடப்பதால் எப்போதும் கூட்டம்.
அர்ச்சகர்கள் உள்ளூர்கார்கள். தமிழ் பேசினால் புரிந்து கொள்கிறார்கள். அலங்காரம் நம்மூர் பாணியில் செய்யபடுகிறது. குங்கும அர்ச்சனையும் செய்கிறார்கள். அம்மனுக்கு புடவை/சிவப்பு வளையல் சாற்றி பெற்றுகொள்கிறார்கள். நகரத்தார் சமூகத்தினர் குழுவாக வந்து பிராத்திக்கிறார்கள். ஆண்டுதோறும் வரும் குழுக்களும் உண்டு. கோவிலின்
உள்ளே 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு திருப்பணியின் விபரங்களை  அன்றைய பாணி தமிழ் எழுத்துகள் சொல்லுகிறது.  நகரத்தார் அறக்கட்டளை இந்த கோவிலை நிர்வகிப்பது மட்டுமில்லை விஸ்வநாதர் கோவிலுக்கும் தினசரி  அபிஷேகத்திற்கு 30 லிட்டர் பால் தருகிறார்கள். இதை தமிழக மங்கல வாத்தியமான நாதஸ்வரம், மேளம்  ஒலிக்க கோவிலுக்குக்கு
எடுத்துச்செல்லுகிறார்கள். 1500 கீமிக்கள் கடந்து இருக்கும் ஒரு தெய்வ சன்னதிக்கு தினசரி அபிஷேக பால் வழங்குவது தமிழர்கள்.   பலநூறு ஆண்டுகளாக காசிக்கும் கங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும்  தொடரும் இந்த பந்தம் நம்மை சிந்திக்கவைக்கிறது. --------------------------------------------------------------------------------------------------
சத்குருவின் பதில்கள்
“‘காலபைரவர்’ இந்த பெயரைக் கேட்டாலே பயமாக இருக்கு   காசியில் அந்த அமானுஷ்ய சக்தி நிறைந்த சன்னதிக்கு ஏன் போக சொல்லுகிறீர்கள்?பயம் என்று எதைச்சொலுகிறீர்கள்? காலம் என்றாலே மரணம் என நாம் எண்ணிக்கொள்வதினால்தானே? மரண பயங்களை தாண்டி நிற்பவன் கால பைரவன். நம் வாழ்க்கை என்பது என்ன?  சக்தியும் காலமும் இணைந்தது. சக்தி என்பது நமக்கு வேண்டியதை நாமே தீர்மானித்துகொள்வது. அது உடல் சக்தியானலும் சரி. ஆன்மிக சக்தியானலும் சரி. ஆனால் காலம் எவராலும் கட்டுபடுத்த முடியாத ஒன்று. அதனால் தான் மரணம்டைந்தவரை நாம் காலமானவர் என்று சொல்லுகிறோம். ஒரு வினாடி யோசியுங்கள். காலம் நின்றுபோனால் என்னவாகும்? பிறப்பு,இறப்பு, பூமியின் சுழற்சி இயற்கையின் மாற்றம் எதுவுமே இருக்காது இல்லையா? பயம் என்பதே இருக்காது. அந்த நிலையில் இருக்கும் ஒரு சக்தி தான் கால பைரவர். அவர் சிவனா? என்று கேட்டீர்கள்/ சிவா என்பதின் உண்மையான பொருள்  முழுமையான ஒரு வெறுமை- ஒன்றுமே இல்லாத ஒரு நிலை. பூமி, பிரபஞ்சம் காலம் எல்லாவற்றையும் கடந்த நிலை அந்த நிலையில் இருக்கும் சக்தி உடல் தாண்டி போன உயிர்களுக்கு  வேறு ஒரு உடலை தேடாமல் நிலைகொள்ளச் செய்யும் ஆற்றல் கொண்டது.  நம் காலம் முடியும் போது இந்த சக்தியை உணர்ந்து இதை அடைய   உயிர் உள்ள போதே ”காலபைவர கர்மா சாதனா” செய்ய வேண்டும். ஆனால் அதற்கு மிகக்கடினமான, அதி தீவிரமான பயிற்சிகள் வேண்டும். அதைச்சொல்லி கொடுக்க மிக குறைந்த அளவில்தான் இருக்கிறார்கள். ஒரு கைவிரல் எண்ணிக்கைகள் கூட இல்லை.  மேலும் அவைகளை எல்லோராலும் செய்ய முடியாது. அதனால் தான்.  அந்த சக்திகள் இருக்கும் காலபைரவனை தரிசிக்க சொல்லுகிறேன். போவதற்கு எந்த பயமும் தயக்கமும் வேண்டாம்.  நீங்கள் அங்கு போய் எதுவும் வேண்டிக்கொள்ள வேண்டாம். தியானம் செய்ய வேண்டாம். அந்த அதிர்வுகளை உணருங்கள் அதுவேபோதும்
கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்