27/1/15

திட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா? அரசியலா?



பிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின்   உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும்  நாட்டின் திட்ட குழு  நீக்கபடும்.  அதற்கு பதிலாக ஒரு புதிய அமைப்பு நிறுவப்படும். என்பது. அறிவிக்கபட்ட படி மறுநாளே திட்டகுழு ஒழிக்கபட்டுவிட்டதின் அடையாளாமாக அதன் இணைய தளம் மூடப்பட்டு ஆவணகாப்பகமாக்கப்பட்டது.  ஆனால் திட்ட குழுவிற்கு மாற்றாக உருவாக்கபட்டிருக்கும் புதிய நிருவனத்தினைப் பற்றி அறிய நாடு ஆறு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது. 
மோடி அரசின் புத்தாண்டு பரிசாக “நீதி ஆயோக்” என்ற அமைப்பு திட்ட குழுவிற்கு மாற்றாக அறிவிக்க பட்டது. இந்தியாவை மாற்றியமைக்கும் தேசிய அமைப்பு (என்.ஐ.டி.ஐ) என்கிற "நீதி ஆயோக்' இனிமேல் திட்டக் குழுவின் பணிகளை ஏற்று நடத்தும். திட்டக் குழு, "நீதி ஆயோக்' அல்லது மத்திய கொள்கைக் குழு என்று பெயரில் அழைக்கபடும் என தெரிவித்த அறிவிப்பில் மற்ற விபரங்கள் உடனேயே வெளியிடவில்லை.. தொடர்ந்து வெளியாகியிருக்கின்ற விபரங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன.  
திட்ட கமிஷனின் வரலாறு.
திட்டமிடல் "Planing" என்பது ஒரு விசாலமான பார்வை. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு போகும் பல அம்சங்களில் ஒரு பகுதி. அறிவையும் - ஆற்றலையும் இணைத்து மக்களுக்கு சேவை செய்வதற்காக பட்டை தீட்டப்பட்ட கனவு.
இந்தியாவில் திட்டமிடல் என்ற கொள்கையை உருவாக்கியவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள். முதலாவது, விஞ்ஞானி மெக்னாட் சாகா இரண்டாவது, பொறியாளர் எம்.விஸ்வேஷ்வரய்யா. மூன்றாவது ஸ்காட்லாந்து நாட்டவரான பல்துறை வல்லுனர் பேட்ரிக் கெட்டெஸ் (Patrick Geddes). இவர்கள் இந்திய விடுதலைக்கு பல காலம் முன்னரே பிறக்கப்போகும் புதிய தேசத்தின் வளர்ச்சிக்காக 1938லேயே  தொலை நோக்குடன் திட்டமிட துவங்கியவர்கள்
விஞ்ஞானியான சாகா காந்திய பொருளாதாரகொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவர். அறிவியல் அடிப்படையலான ஒரு சமூகம் பற்றிய கனவுகள் அவரிடம் நிறைய இருந்தது. 
போல்ஸ்விக் புரட்சிக்கு பின்னர் ரஷ்யாவின் லெனினின் திட்டமிட்ட வளர்ச்சி பாதையையே நாமும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்ற கருத்தைக்கொண்டிருந்தார். .கனியூச சித்தாந்த்த்தில் நம்பிக்கை இல்லாத  பொறியிலாளாரான விஸ்வேஸ்வரய்யா தேசம் முழுவதுற்குமான பிரமாண்ட கட்டுமானங்கள் அணைகள் போன்ற திட்டங்களை தயாரித்துகொண்டிருந்தார். அன்றைய காங்கிரஸ் கட்சியின்  மாநாட்டில் திட்டமிடல் பற்றிய இந்த மாறுபட்ட கருத்துக்கள் விவாதிக்க பட்டிருக்கின்றன.   சீனாவின் ஐந்தாண்டு திட்டங்களை சென்று பார்த்தவந்திருந்த நேருவின் திட்டங்கள் பற்றிய பார்வை மக்கள் சார்ந்ததாக இருந்தது.  இறுதியில்  அரசியலையும், அறிவியலையும் உள்ளடக்கிய திட்டங்களை வடிவமைபதற்கு கட்சியில் தேசிய திட்டகுழு ஒன்று அமைக்கபட்டு அதன் தலைவராக ஜவஹர்லால் தேர்ந்தெடுக்கபட்டார்.

நாட்டின் விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, 1950-ஆம் ஆண்டு, சக அமைச்சர்களை, மூத்த அதிகாரிகளை, சில பொருளாதார நிபுணர்களை அழைத்துப் பேசினார். அந்த கூட்டத்தில் தேசத்தில் வளர்ச்சியும் முன்னேற்றமும் விரைவாக நடைபெற வேண்டும். அதற்கு சோவியத் ரஷியாவின் பாணியில்  திட்டக் குழுவை ஏற்படுத்துவது பற்றி விவாதிக்க பட்டது நமக்கும் ரஷியாவுக்கும் ஆட்சி அமைப்பு முறை வித்தியாசமானது. அவர்களது சேமிப்பு 30 சதவீதம், நமது சேமிப்பு 5 சதவீதத்திற்கும் குறைவானது. அவர்களால் அதிக முதலீட்டைத் திரட்ட முடியும், நம் நாட்டில்பெரிய திட்டங்களுக்கு முதலீடுகளை அதிகம் திரட்டுவது கடினம் என்பது ஆதிகாரிகளின் வாதமாக இருந்தது..
இருப்பினும் நாட்டில் சீரான, முறையான வளர்ச்சிக்கு திட்டமிடுதல் அவசியம். திட்டக் குழுவும் அவசியம் என்று முடிவு எடுக்கப்பட்டது. 1950 மார்ச் 15-ஆம் நாளன்று திட்டக் குழு அமைக்கப்பட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தீட்டிய திட்டங்களை செயல்படுத்துவதில் பிரதமர் நேரு மிகுந்த  ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும்.காட்டினார். அமைச்சரவை கூட்டங்களில் திட்டங்களின் முக்கியப் பகுதிகளை எடுத்து விளக்குவார்.திட்டங்கள் செயல்படும் விதத்தையும், வேகத்தையும் அடிக்கடி தானே ஆய்வு செய்வார். அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்ட தோடு, வல்லுனர்களின் ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் திட்டக் குழுவுக்குக் கிடைப்பதை உறுதி செய்தார்அப்படி உதவிய மேதைகளின் பட்டியலில்,  பெரிது. புள்ளியியல் நிபுணர் மகனலோபிஸ், பொருளாதார மேதை பி.எஸ்.லோகநாதன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், மேதை பிதாம்பர் பட் ஆகியோர் முக்கியமானவர்கள்.. .
அதேபோல், மேல் நாட்டு அறிஞர்கள் சுமார் 15 பேர் இந்தியாவுக்கு வந்து, தங்கி திட்டக் குழுவுக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.. நமது நாட்டுக்கு திட்டமிட வெளிநாட்டு நிபுணர்கள் அவசியமா? என  விமர்சிக்கப்பட்டதற்கு நேரு சொன்ன பதில்  "நான் வெளிநாட்டுப் பொருள்களை இறக்குமதி செய்ய விரும்பவில்லை. மாறாக, வெளிநாட்டிலிருந்து சிறந்த நவீன சிந்தனைகளை இறக்குமதி செய்ய விரும்புகிறேன்' 
இத்தகைய பின்புலத்தில் பிறந்த,, தொடர்ந்து 60 ஆண்டுகள் இயங்கி வந்த, பல முறை விமர்சிக்கபட்ட திட்டகமிஷன்  அமைப்பு தான் இப்போது  தேவை இல்லை என ஒழிக்க பட்டிருக்கிறது. 
இந்த திட்ட குழு வே தேவையில்லை என குரல் எழுந்திருப்பது இது முதல் முறையில்லை. திட்டக் குழு பிறக்கும் போதே, . "நிதி திரட்டுவதையும், ஒதுக்குவதையும் நிதி அமைச்சகமும், பிற அமைச்சகங்களும் பார்த்துக் கொள்ள முடியும். திட்டக் குழு தேவை இல்லை. அது நிதி அமைச்சகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடும்' என்று எதிர்ப்புத் தெரிவித்து, தன் பதவியையே ராஜிநாமா செய்திருக்கிறார் அன்றைய நிதி அமைச்சர் ஜான் மத்தாய்.
திட்ட இலக்குகள், அதில் முன்னுரிமை போன்றவைகளை இந்த திட்டகுழுவே முடிவு செய்தது. முதல் திட்டத்தில் விடுபட்டு இறுதியில் அசோக் மேத்தா சுட்டிகாட்டிய பின்னர் சேர்க்க்க பட்ட விஷயம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல். அறிவியல் ரீதியாக திட்டங்கள் வகுப்படவேண்டும் என்பதை நேரு விரும்பினாலும், உடன் இருந்தவர்கள் பலவித நம்பிக்கைகளூம் எண்ணங்களும் கொண்டவர்களாக இருந்தனர். நாட்டின் முதல் ஐந்தாண்டு திட்ட அறிக்கை திட்டகுழுவின் ஒப்புதலுக்கான கூட்டத்திற்கு  குறிக்க பட்ட நாள் 07/07/1951.மாலை 7 மணி. எல்லாவகையான சோதிடத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த  அமைச்சர் நந்தா தேர்ந்தெடுத்தது இது. எல்லாவற்றிலும் 7 என்ற எண் வருகிற்து என்பது காரணம்.  இதில் எல்லாம் நமபிக்கை இல்லாத நேரு  மாலையில் வேறு நிகழ்ச்சி இருப்பதால் நேரத்தை மாற்றச் சொன்னார்.  மாற்றிய நேரம் 3.30.மணி 7ல் பாதி  வருவதால் பாதகமில்லை என அமைச்சர் நந்தா ஏற்றார்.  இப்படி அறிஞர்களின் கருத்துகளுக்கும் தனிநபர்களின் நம்பிக்கைகளுக்கும் மதிப்பு கொடுக்கபட்டு    உருவாகி, அறிஞர்களின் வழி காட்டுதலில் இயங்கி வந்த திட்டக் குழுதான் இப்போது கலைக்க பட்டிருக்கிறது.
ஏன் மோடி அரசு இந்த குழுவை கலைத்தது? 
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், முதல் 5 ஆண்டுத் திட்ட காலத்தில் (1951-1956) 3.5 சதவீதம் மட்டுமே. அது 6-ஆவது திட்ட காலத்தில் 5.5 ஆகக் கூடியது. 10-ஆவது திட்ட காலத்தில் 7.6 சதவீதமாகவும், 11-ஆவது திட்ட காலத்தில் 7.9 சதவீதமாகவும் (2007-2012) உயர்ந்துள்ளது. 12-ஆவது திட்ட காலத்தில் (2012-2017) இந்த வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதமாக ஆக்க வேண்டும் என்பதே திட்டக் குழுவின் இலக்காகும்.
உலகமே பொருளாதார மந்தத்தில் சிக்கியிருக்கும் இன்றைய சூழலில், இத்தகைய பொருளாதார வளர்ச்சி திருப்திகரமானது மட்டுமல்ல, பாராட்டத் தக்கதும் கூட என்பது உலகலவிளவில் பல பொருளாதார நிபுணர்கள் ஏற்று கொண்ட கருத்து.
.ஆனால் இன்று ஆளும் கட்சியாக பொறுப்பு ஏற்றிருக்கும் பிஜெபியின் பார்வை வேறாக இருக்கிறது. 
இந்தியா சுதந்திரம் அடைந்திருந்த நிலையில் திட்டக் குழுவுக்கான அவசியம் இருந்தது. அதுவரை தனித்தனியாக இயங்கி வந்த பல சமஸ்தானங்களையும், பிரிட்டிஷ் ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்ட பகுதிகளையும் ஒருங்கிணைத்து இந்தியா என்கிற நாடு உருவாகி இருந்த காலகட்டம் அது. இந்தச் சூழலில் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்தால் மட்டுமே, ஒருங்கிணைந்த இந்தியாவை ஒற்றுமை குலையாமல் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை.
விவசாயம் சார்ந்த தேசமான இந்தியாவில் நீர்ப்பாசன வசதிகளோ, நீர்ப்பாசனத்தை உறுதி செய்யும் நீர்ப்பாசனத் திட்டங்களோ அப்போது கிடையாது. அதேபோல, தொழிற்சாலைகள் என்று எடுத்துக் கொண்டால் நூற்பாலைகள் மட்டும்தான். அதுவும் இந்தியாவின் ஒரு சில நகரங்களில் மட்டுமே காணப்பட்டன. கனரக தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான முதலீடு தனியார் துறையிடம் இல்லாமல் இருந்த நிலைமை.
அப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும், சமச்சீரான வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கவும், நீர்ப்பாசன, நீர்மின் நிலையத் திட்டங்களை நிறுவுவதற்கும் அரசால் மட்டுமே முதலீட்டைக் கொணர முடியும் என்கிற சூழலில் திட்டக் குழுவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. வெளிநாடுகளிலிருந்து அரசு கடனுதவி பெற்று, கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும், கனரகத் தொழிற்சாலைகளை சமச்சீராக பல்வேறு மாநிலங்களில் நிறுவவும் திட்டமிடல் தேவைப்பட்டது.
1991-இல் பொருளாதார சீர்திருத்தமும், தனியார்மயமும் வந்தபோது, திட்டக் குழுவின் அவசியம் குறைந்துவிட்டது. காலப்போக்கில் திட்டக் குழு என்பது தேசத்தின் நிதி வருவாயை, மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் அமைப்பாகவும், மாநிலங்கள் அந்த நிதி ஒதுக்கீட்டை எப்படி செலவு செய்கின்றன என்பதைக் கண்காணிக்கும் அமைப்பாகவும் மாறிவிட்டது.
இந்த நிலையினால் இன்று இப்படி ஒரு திட்ட குழு அவசியமில்லை. மாறாக இன்றை சூழலுக்கு ஏற்ப இந்தியாவை மாற்றியமைக்கும் தேசிய  என்ற அமைப்பு (என்.ஐ.டி.ஐ) தேவை அது இந்த திட்டமிடலை செய்யும் என மோடியின் அரசு அறிவித்திருக்கிறது. 
 உலகமயமாதல் அடிப்படையில் கார்ப்பரேட்டுகள் வளரவும்,  மெல்ல பொதுத்துறை தனியார் வசமாவதுமாக எழுந்திருக்கும் இன்றைய சூழலில் திட்டக்குழுவே தேவை இல்லை என்பது பிஜபியின் வாதம்.  நியாயமாகப் பார்த்தால் கி.பி. 2000-த்திலேயே திட்டக்குழு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், தனியார்மயமாதல் மற்றும் கார்ப்பரேட்டுகள் வளர்ச்சி தேவை என்ற சூழ்நிலை வந்துவிட்ட பின் திட்டக் குழுவுக்கு வேலை இல்லையே! கடந்த 15 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற நிதித் துறைச் செயலாளர்களுக்ம், வேறு துறை நிபுணர்களும் பழைய செல்வாக்குடனும், அதிகார மிடுக்குடனும் வலம்வரக்கூடிய ஒரு புகலிடமாக மாறிவிட்டது.
இப்போது  தொழிற்துறையில் அரசின் முலதனம் குறைந்துவிட்டது. தனியார் மூதலீடுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன அதனால் இந்த திட்ட கமிஷன் அவசியமில்லை என்ற காரணத்தை தாண்டி வேறு சில அரசியல் காரணங்களும் இருக்கின்றன.
மத்திய அரசின் ஆட்சியில் இருக்கும் கட்சியின் கைப்பாவையாக கடந்த 20 ஆண்டுகளாகத் திட்டக் குழு செயல்பட்டு வந்தது. தங்களுக்குச் சாதகமாக உள்ள மாநில அரசுகளுக்கு அதிக ஒதுக்கீடும், எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு பாரபட்சமான ஒதுக்கீடும் திட்டக் குழுவால் செய்யப்படுவதாக தொடர்ந்து சில மாநில அரசுகள் குரல் எழுப்பி கொண்டிருந்தது.. திட்டகுழு புள்ளிவிபரங்களுடன் மறுத்தாலும், மாநில முதலமைச்சர்கள் குரல் எழுப்பி கொண்டிருந்தனர். அப்படி குரல் எழுப்பியவர்களில் அன்று மாநில முதல்வராக இருந்த மோடியும் ஒருவர். 
 ஒவ்வொரு ஆண்டும் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை திட்டக் குழு நடத்துவதுண்டு.  ஆனால் இது ஒரு அரசின் சடங்காகிவிட்டது.  கடந்த ஆட்சி காலத்தில் அப்படி ஒரு முறை அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூட்ட முடிவில் பேட்டி அளித்தபோது, "தில்லிக்கு வந்து திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசிய பிறகு, அலுவாலியா "உங்கள் திட்டச் செலவுக்கான நிதி ஆதாரத்தை நீங்களே தேடிக் கொள்ள வேண்டியதுதான் என்று கூறுகிறார். இந்தப் பதிலைக் கேட்க எனக்கு ஒரு தில்லிப் பயணம் தேவைதானா?' என்றார். தமிழ்நாடு மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லாத இதர மாநில முதலமைச்சர்கள் எல்லோருக்கும் அதே பதில்தான். மோடி முதலமைச்சராயிருந்த காலகட்டத்தில் திட்டக் குழுவுடன் பலமுறை மோதல்கள் நிகழ்ந்ததுண்டு. ஆகவே, திட்டக்குழுவுக்கு மோடி முடிவு கட்டுவார் என்பது எதிர்பார்த்ததுதான்.
திட்ட குழு என்ற அமைப்பு அரசியலமைப்புச் சட்ட அதிகார எல்லைகளுக்கு உட்பட்டதில்லை. சுயாட்சி கொண்ட அமைப்பு. அதனால் ஒரு அறிவிப்பின் மூலம் அதை மோடியால் கலைக்க முடிந்துவிட்டது.

புதிய அமைப்பு- அரசியல் வாதிகளின் பார்வை 
எதிர்பார்த்த படி இந்த புதிய திட்டமிடும்  அமைப்புக்கு  எல்லா அரசியல் கட்சிகளிடையேயும்  வரவேற்பு இல்லை  தமிழகத்தில் மத்திய அரசின் அறிவிப்புகளையும், திட்டங்களையும் ஆழந்து ஆராயும் பாமா கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இதை வரவேற்கவில்லை. அவர் “

” சீர்திருத்தம் என்ற பெயரில் செய்யப்படும் இந்த தொலைநோக்கற்ற மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளை விட பாதிப்புகள் தான் அதிகமாக இருக்கும். தொடக்கத்தில் திட்டக் குழு அதன் பணியை சிறப்பாகவே செய்து வந்தது. அதன்பின் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய திட்டக் குழுவை சீரமைக்க வேண்டிய  தேவை ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான். ஆனால்,  திட்டக் குழுவையே அடியோடு கலைத்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்துவது தேவையில்லாதது.
இதுவரை நடைமுறையில் இருந்த மத்திய திட்டக் குழு வளர்ச்சிக்கு வழி வகுத்தது ஒருபுறமிருக்க, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சமநிலையை பராமரிக்கும் ஒழுங்குமுறை அமைப்பாக செயல்பட்டது. ஆனால், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிதி ஆயோக், வளர்ச்சி மற்றும் கொள்கை தொடர்பான விஷயங்களில் மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாக திகழுமே தவிர முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் என்று தோன்றவில்லை.
 தனியார் துறையினர் அல்லது பெரு நிறுவனங்களின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி என்று கருதும் மெத்தப்படித்த வல்லுனர்கள் நிதி ஆயோக்கில் இடம் பெறும் பட்சத்தில், அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை சொல்லித் தெரியவில்லை. மேலும் இத்தகைய வல்லுனர்கள் பொதுவாக மானியங்களுக்கு எதிரானவர்களாக இருப்பர் என்பதால், கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான மானியங்களையும் குறைக்கும்படி நிதி ஆயோக் நெருக்கடி எழும். அதற்கு அரசு பணிந்தால் அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது.
மத்திய திட்டக்குழு இருந்தவரை அதன் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசு திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது. அதுமட்டுமின்றி, மாநில அரசுகளுக்கான திட்ட ஒதுக்கீட்டை திட்டக்குழு தான் தீர்மானிக்கும். இதில் பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதற்காக நிலையான விதிகள் வகுக்கப் பட்டிருந்தன. ஆனால், புதிய அமைப்புக்கு அத்தகைய அதிகாரங்கள் எதுவும் இல்லை. எனவே, மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குவதாக இருந்தாலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதாக இருந்தாலும் பிரதமரின் முடிவு தான் இறுதியாக இருக்கும். அத்தகைய சூழலில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியும், மற்ற மாநிலங்களுக்கு குறைவான நிதியும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் மேலாக எல்லா அதிகாரங்களும் பிரதமரிடம் குவிக்கப்பட்டால், அது நன்மைக்கு வழி வகுக்காது; மாறாக, நாட்டில் சர்வாதிகாரம் பெருகுவதற்குத் தான் வழி வகுக்கும்.
மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளை பாதிக்கும் இந்நடவடிக்கை மிகவும் ஆபத்தானது ஆகும்.
எனவே, மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்கும் அறிவிப்பை இரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே செயல்பட்டு வந்த திட்டக்குழுவை சீரமைத்து செயல்படுத்த வேண்டும்.” என  அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 
நாடளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் ஒர் பொது கருத்தை உருவாக்கமல் இப்படி அதிரடியாக செய்வது அதிகாரங்களை தங்கள் வசப்படுத்திகொள்வது ஜனநாயகமில்லை என இடது சாரிகட்சிகளும் அறிவித்திருக்கின்றன.
புதிய அமைப்பு
இந்த புதிய அமைப்பிற்கு NATIONAL INSTITUON OF TRANSFORMING INDIA (NITI) என்று பெயரிடப்பட்டிருக்கிறது இதன் சுருக்கமாக  NITI (நீதி)  என அழைக்கபடும்.இதன் தலைவர் பிரதமர். துணைத்தலைவரும் ஒரு தலைமைச் செயல் அதிகாரியும் முழுநேர பணியாளாராக இருப்பார்கள். பல்கலைகழகங்களிலிருந்து இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் மற்றும் நான்கு மத்திய அமைச்சர்களும் குழுவிலிருப்பார்கள். எல்லா மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை ஆளுனர்கள் கொண்ட  நிர்வாக குழுவும் இயங்கும். இதைத்தவிர அண்டை மாநிலங்களுடன் இணைந்த வட்டார கவுன்சில்கள் அமைக்க படும். தேசிய வளர்ச்சி திட்டங்களுக்கான முன்னுரிமைகளும், துறைகளும், அதற்கான  வழிமுறைகளையும் மாநில அரசுகளின் பங்கேற்புடன் உருவாக்கப்பட வேண்டும் என்பது இதன் முக்கிய குறிக்கோளாக அறிவிக்கபட்டிருக்கிறது. இதை அறிவிக்கும் போது பிரதமர் co-opertive fedralisim  ”மாநிலங்களின் கூட்டுறவு” என்ற வாசகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். 
இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், சோஷலிச பார்வை கொண்ட திட்டகமிஷனின் பணிகளை இன்றைய  சுழலுக்கு ஏற்ப மாற்றியமைப்பது, இதில் பேசப்படும் இரண்டு முக்கியமான விஷயங்கள் 
1)திட்டங்களில் “மேலிருந்து கீழ்” என்ற  முறையை மாற்றி திட்டங்கள் கிழீருந்து அதாவது . திட்டங்கள் மேலே வகுக்கப்பட்டு கீழே திணிக்கப்படுகிறது. மாறாக, கீழே இருந்து திட்டங்கள் உருவாகி மேலே செல்ல வேண்டும் என்பதாகும்.
2) மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது 
இந்த புதிய அமைப்பின் திட்டங்களையும், இருக்கும் திட்டகுழு செயல்பாடுகளையும் ஒப்பீடும் முன்  இப்போதிருக்கும் திட்ட குழு இயங்கும் முறைகளை பார்ப்போம்.
தற்போது  நடைமுறையில், ஒவ்வொரு துறையிலும் (விவசாயம், கல்வி, மருத்துவம்) உள்ள மாவட்ட அளவிலான நிர்வாகிகள் களத் தேவைகளை அறிந்து, கலந்து பேசி, திட்டங்களை தனது துறையின் மாநிலத் தலைவருக்கு அனுப்புகிறார்கள்.
அவைகளை ஆய்வுக்குப்பின், துறைத் தலைவர்கள் மாநிலத் திட்டக் குழுவுக்கு அனுப்புகிறார்கள். அது, முதல் அமைச்சர் தலைமையிலான நிரந்தர நிதிக் குழுவினால் விவாதிக்க பட்டு  முழுவடிவம் பெறுகிறது. அதன்பின் மத்திய திட்டக் குழுவிற்கு அனுப்பப்பட்டு விவாதத்திற்குப் பின்பு ஒப்புதல் தரப்படுகிறது. இது தான் உண்மையில் கீழிருந்து மேல் திட்டம். இதில் என்ன மாற்றம் வரப்போகிறது என்பதை பொறுத்துதிருந்துதான் பார்க்க வேண்டும்
அடுத்தது நிதி ஒதுக்கீடு.  இந்த ஒதுக்கீடு சில அடிப்படை விதிகளின்படி விகிதசார முறைப்படி ஒதுக்கபடுகிறது.இந்தியா போன்ற ஒரு பரந்த தேசத்தில் எல்லா மாநிலங்களின் வ்ருவாயும், செலவினங்களும் ஒரே மாதிரி இருக்க முடியாது. தேசிய வளர்ச்சி என்ற கண்னோட்டத்தில் இந்த விகிதாசாரங்கள் வல்லுனர்களார் விவாதிக்கபட்டு தீர்மானிக்கபட்ட ஒரு விஷயம். இது அவ்வப்போது மாறுதலுக்கும் உள்ளாகிறது. மாநில தேவைகள் எல்லாவற்றையும் எல்லா சமயங்களிலும்  பூர்த்தி செய்ய இயலாது. அதிலும் மாநில கட்சிகளின் அரசியல் அறிவிப்புகளினால் ஏற்படும் அதிக சுமைகள் மறுக்கபடும்போது “பாரபட்சம் காட்டப்படுவதாக” குற்ற சாட்டுகள் எழுவது தவிர்க்க முடியாத ஓன்று.
நிதிNITI அமைப்பும்- திட்டகமிஷன்- ஒரு ஒப்பீடு

செயல்பாடுகள்          திட்ட கமிஷன்                               நிதி(NITI) அமைப்பு     

முழு நேர உறுப்பினர்கள்
ஒழிக்கபடும்முன்  இறுதியாக இருந்தவர்கள் 
8 பேர்
திட்ட கமிஷனை விட குறைவானது(எண்ணிக்கை அறிவிக்கபடவில்லை)
மாநிலங்களின் பங்களிப்பு
தேசிய வளர்ச்சி குழு கூடங்களில் திட்ட விவாதங்களில் மட்டுமே மாநிலங்கள்பங்கேற்கின்றன.
மாநிலங்களின் அதிக அளவு பங்கேற்புஎதிர்பார்க்கபடுகிறது
உறுப்பினர்/
செயலர்
செயலர்கள் அரசின் வழக்கமான முறையில் நியமிக்கப்படுவார்கள்
இவர் தலைமை செயல் அதிகாரி என அழைக்கப்படுவார்
பகுதி நேர உறுப்பினர்கள்
பகுதி நேர உறுப்பினர்கள் கிடையாது
தேவைக்கேற்ப பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்க படுவார்கள்
நிதி ஆதாரம்
மாநிலங்களுக்கும் மத்திய அமைச்சரகங்களுக்கும்  நிதி வழங்கும் அதிகாரம் பெற்றது
இது ஒரு ஆலோசனை வழங்கும் அமைப்பு. நிதிவழங்கும் அதிகாரம் இல்லை
            



இந்த ஒப்பிட்டை சற்று உற்று நோக்கினால் தெரியம் ஒரு விஷயம். திட்ட கமிஷனுக்கு இருந்த மிக முக்கியமான  நிதி வழங்கும் அதிகாரம்பறிக்க பட்டுவிட்டது. அது நிதிஅமைச்சகத்துக்கு மாற்றபட்டுவிட்டது. அதாவது அமைச்சரவை தீர்மானிக்க கூடிய ஒரு விஷயமாகிவிட்டது. இந்த அமைப்பு ஒரு ஆலோசனை வழங்கும் அமைப்பாக சுருக்க பட்டுவிட்டது. இதன் மூலம் மத்திய அரசில் ஆட்சியில் இருக்கும் கட்சி தங்கள் கட்சி சார்பில்லாத  அரசுகள் இருக்கும் மாநில அரசுகளை கட்டுபடுத்த முடியும். இப்போது சொல்லப்படும்  நிதி பங்கிட்டில் பாரபட்ச குற்ற சாட்டுக்கள் பெரிய அளவில் தொடர வாய்ப்புகள் அதிகம்.
இதைப்புரிந்து கொள்ள திட்டங்களுக்கான  நதி ஒதுக்கீடுகளயும்  தெரிந்துகொள்ள வேண்டும். 
திட்டங்களுக்கான,  நிதி ஒதுக்கீடுகளை மூன்று வகையாக அரசின் நிலயான நிதிக்குழு பிரித்துள்ளது. 
அவைகள்1 திட்டம் சார்ந்த செலவுகள் (P​aSc), 2மத்திய அரசு பரிந்துரைத்த திட்டங்கள் (C​aSSc)​:​​ 3திட்டம் சாரா செலவுகள் - N​P​aSc:​​
(1) திட்டம் சார்ந்த செலவுகள் (P​aSc)​:​​ இவை தான் மத்திய திட்டக் குழுவால் ஒப்புதல் பெறப்படுபவை. இதற்குரிய செலவை மத்திய, மாநில அரசுகள் ஒரு விகிதாசாரத்தில் பகிர்ந்து கொள்கின்றன.
(2) மத்திய அரசு பரிந்துரைத்த திட்டங்கள் (C​aSSc)​:​​ இத்திட்டங்களின் செலவை, மத்திய, மாநில, நகராட்சி, ஊராட்சிகள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் மத்திய அரசின் பங்களிப்பு அதிகம் இருக்கும்.
(3) திட்டம் சாரா செலவுகள் - N​P​aSc:​​ இவை மாநில அரசின் திட்டங்கள். இவற்றிற்கான செலவை, மாநில அரசே தன் வரி வருவாய் மூலம் ஏற்க வேண்டும்.
இந்த முறையில் எந்த மாற்றங்களும் அறிவிக்க படவில்லை என்பதால். முதல் இரண்டு வகை திட்டங்களுக்கும் மாநிலங்களுக்கு அளிக்க பட வேண்டிய நிதியை மத்திய அரசு தீர்மானிக்கப் போகிறது.   முந்தை திட்ட கமிஷனிலும்  மத்திய அரசுக்கு அதிகாரங்கள் இருந்தபோதிலும், திட்ட குழு ஒரு ஆலோசனை குழுவாக இல்லாமல் அதிகாரங்களுடன் இருந்த்தால் அதை ஏற்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது. இப்போது அது இல்லை.
கீர்த்தி பரேக் முன்னாள் திட்ட கமிஷன் உறுப்பினர். அரசுக்கு ஆலோசகராக இருந்தவர். இந்த புதிய  அமைப்பை பற்றி அவர் CNBCக்கு அளித்த பேட்டியில் “ இந்த புதிய அமைப்பில் எந்த மாற்றத்தையும் நான் புரிந்து கொள்ளவில்லை. திட்ட கமிஷன் தேசிய வளர்ச்சிக்குழுவிடம் தன் அறிக்கைகளை கொடுத்த்து. இப்போது நிர்வாக குழுவிடன் தரப்போகிறது. இந்த நிர்வாக் குழுவில் இருக்க போகிறவர்கள் தேசிய வளர்ச்சி குழுவில் இருந்த  மாநில முதலமைச்சர்கள் தானே? மாநிலங்களிலிருந்து திட்டம் என்பது நல்லது தான். ஆனால் ஒதுக்க பட்ட நிதி ஆதாரத்துக்குள் இயலாத திட்டங்களை கொண்டுவந்தால் எப்படி சமாளிக்க முடியம். ?  அண்டை மாநிலங்களுக்கிடையேயான வட்டாரகுழுக்கள் இப்போதும்  சில மாநிலங்களுக்கிடையே இருக்கிறது. இது புதிது என சொல்வதிற்கில்லை”. என சொல்லியிருக்கிறார்.
மாநிலங்களுக்கான  நிதி ஒதுக்கிடு அதிகாரத்தை மறைமுகமாக இந்த மாற்றத்தின் மூலம் மத்திய அரசு எடுத்துக்கோண்டுவிட்டது என்பது பரவலாக  விமர்சிக்கபடுகிறது. 

64 ஆண்டுகள் நிலைத்து நின்று தேசத்தின் வளர்ச்சிக்கு திட்டமிட்டு தந்த ஒரு அமைப்பை கலைக்காமல் திருப்தியில்லாத அதன் செயல்பாடுகளை  தக்க ஆய்வுகள்மூலம்  மாற்றங்களையும்  கண்காணிப்பு முறைகளையும் அறிமுகபடுத்தி புதுரத்தம் பாய்ச்சி சீராக்கி திறன் மிக்க ஒரு அமைப்பாக மாற்றியிருந்தால் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் புதிய அரசின்  மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கும்
(ஆழம் பிப் 15 இதழுக்காக எழுதியது.)


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்