6/4/15

அண்ணலின் ஆன்மா வாழ்கி’றது இங்கே …..


இந்த இனிய தேசத்தின் வரலாற்றில் அழியா இடம்பெற்றிருக்கும் சில மனிதர்கள் போல சில கட்டிடங்களும் உண்டு. அதில் ஒன்று புனே நகரில் இருக்கும் ஆகாகான்(AGAKHAN) மாளிகை. அண்ணல் காந்தியின் வாழக்கையின் நிகழந்த மறக்க முடியாத 2 சிலநினைவுகளுக்கு சாட்சியாக நின்ற இந்த மாளிகை, தனியாக நாடு இல்லாத ஒரு மன்னருடையது. முகம்மது நபியின் உறவினரின் வாரிசாக பெர்ஷிய நாட்டில்  பிறந்த முதலாம் ஆஹாகானை தொடர்ந்து வரும் பரம்பரயினர் முஸ்லீம் இனத்தின் ஒரு பிரிவினருடைய தலைவராகவும் மன்னராகவும் மதித்து போற்றப்படுபவர்கள்.  உலகின் பலநாடுகளில் பெரும் சொத்துக்கள் இருக்கும் உலகபணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர் இன்றைய கரீம் ஆகாகான்..உலகெங்கும் கல்வி, மருத்துத்துபணிகளுக்கு உதவுகிறது இவரது பல அறக்கட்டளைகள்

இவரது தாத்தா இந்தியாவிற்கு வந்த போதுவாங்கிய நிலத்தில் அந்த நாட்களில் இந்த பகுதியில் நிலவிய பஞ்சத்தின் வேலையிழந்த விவசாயிகளுக்கு வேலையும் கூலியும் கொடுத்து உதவுவதற்காக.1892ல் இந்த மாளிகையை எழுப்பியிருக்கிறார். 1000பேர் உழைப்பில் 5 ஆண்டுகாலம்  12 லட்சம் செலவில் உருவான இந்த மாளிகையில் மன்னர் குடும்பம் வாழந்த்தாக தெரியவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இது அரசின்பொறுப்பில் இருந்தது. அதனால்1942ல் ”வெள்ளையனே வெளியேறு” என்ற போராட்டத்தை அறிவித்த அண்ணலையும் அவரது செயலாளர் மஹாதேவ்பாய் தேசாய், கஸ்தூர்பா,  சரோஜினி நாயுடு,சுசேதா கிருப்பளானி ஆகியோரும்  கைது செய்யபட்டு  இங்கே  இரண்டு ஆண்டுகள் சிறைவைக்கபட்டிருக்கிறார்கள்
அந்த காலகட்டம் காந்தியடிகளின் வாழ்க்கையில் மிக துயரமான நாட்கள். இந்த சிறைக்கு வந்த  ஒரே வாரத்தில்   அவருடன் கைது செய்யபட்ட 35 ஆண்டுகள் அவருடன் பணியாற்றிய அவரது செயலாளர் மஹாதேவ் பாய் ஜெயில் அதிகாரிகளூடன் தங்களுக்கு செய்தி தாட்கள் தரபடவில்லை என வாதாடிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பால் இறந்துவிடுகிறார்.

மாளிகையில் சிறையாக மாற்றப்பட்டிருந்த 6 அறைகள் இப்போது கண்காட்சி கூடங்களாகியிருக்கின்றன. அறைகளின் நடுவில் மாறுதலான காந்தி சிலைகள் நம்மை கவர்கின்றன.  சுற்று சுவரில் இருக்கும் குறிப்புகளும் படங்களும், அண்ணலின் பொருட்களும் அபூர்மானவை. அவரது செயலாளர் மரணம் குறித்து வைக்கபட்டிருக்கு இந்த குறிப்பைப் படிக்கும் போது மனம் நெகிழ்ந்தது நிஜம்.
மஹாதேவ்பாய்

யின் சடலத்தை குளிப்பாட்டி சந்தனமிட்டு பூக்கள் இட்டு  புத்தாடைஉடுத்தி  . ” இதையெல்லாம் நீ என் மரணத்துக்கு பின் எனக்கு  நீ தான்  செய்யப்போகிறாய் என நினைத்துகொண்டிருந்தேன்,  ஆனால் உனக்கு நான் செய்யும் துர்பாக்கிய நிலைக்கு என்னை ஆளாக்கிவிட்டுவிட்டு போய்விட்டாய்” என்று அழுதார்..
 மரணமடைந்த கைதியின் உடலை புதைக்கவேண்டியது அரசின் கடமை என்பதால் அந்த உடலை எடுத்துச்செல்ல லாரியுடன் போலீஸ் வந்தது. .”இறந்தவர் கிரிமினல் குற்ற கைதி இல்லை  அரசியில் கைதி அவருக்கு இந்த விதி பொருந்தாது, மேலும் இந்து சமய முறைகளின் படிஇறந்த மகனின் இறுதிச்சடங்குகளை செய்ய வேண்டியது தந்தையின் பொறுப்பு. மகனின் சடலத்தை மற்ற எவரிடமும் தந்தை கொடுக்க மாட்டார்”.  என்ற சொன்ன காந்தியிடம், இந்த சிறைகட்டிடத்தை விட்டு வெளியே போக உங்களுக்கு அனுமதியில்லை. என்கிறார் பிரிட்டிஷ் அதிகாரி. உங்கள் சிறை விதிகளை மதிக்கிறேன்.  அப்படியானால் இந்த மாளிகையின் தோட்டத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்கிறார் காந்தி. திகைத்துபோன அதிகாரி  டெல்லியை தொடர்பு கொள்ள, அவர்கள் இங்கிலாந்தை தொடர்பு கொள்ள தந்திகள் பறக்கின்றன.  இறுதியில் காந்தியின் விருப்பத்தை நிர்வாகம் ஏற்கிறது. இந்த மாளிகையின் தோட்டத்திலேயே காந்தி தீ சட்டிஏந்தி இறுதிசடங்குகள் செய்ய மஹாதேவ் பாய் தேசாய் அடக்கம் செய்யபட்டார்..
இதைத்தொடர்ந்து நீண்டகாலம் நோய்வாய்பட்டிருந்த கஸ்தூரிபா காந்திக்கு டாக்டர்கள்   இங்கிலாந்திலிருந்து வந்த ஊசிமருந்துகளைச் செலுத்த காந்தி அனுமதிக்க வில்லை.    அவர் இறந்து போகிறார். அவரது உடலும் இந்த மாளிகையின் தோட்டத்திலேயே  தேசாயின் சமாதி அருகே அடக்கம் செய்யபட்டிருக்கிறது. கஸ்தூரிபா தன் இறுதி மூச்சை அண்ணலின் மடியையில் தான் விட்டிருக்கிறார். அந்த காட்சியை பெரிய அளவு ஓவியமாக்கி அந்த அறையில் நிறுத்தியிருக்கிறார்கள். மனதைத் தொடும் படம்.

இந்த சிறையிலிருந்த இரண்டு ஆண்டுகளும் ஜன 26ல் அண்ணல் இங்கு கொடியேற்றியிருக்கிறார்.. அவர் வாழ்வின் தொடர்புடைய இடம் என்பதால் காந்தியின் மறைவுக்கு பின் அவர் அஸ்தியின் ஒரு பகுதி இங்கு வைக்கபட்டிருந்த இடத்தில் நினைவுக்கல் எழுப்ப பட்டிருக்கிறது.

19 ஏக்கர் பரப்பில் 6ஏக்கர் பரப்பளவில்  கம்பீரமாக நிற்கும் இந்த அழகிய மாளிகையையும் தோட்டத்தையும் அண்ணலின் கொள்கைகளால் கவரப்பட்ட ஆஹாகான் இளவரசர் 1972ல் இந்தியாவந்தபோது இந்திய அரசுக்கே நன்கொடையாக கொடுத்திடுத்திருக்கும் செய்தி  மாளிகையைப் போல அவரது மனமும் பெரிது என்பதைச்சொல்லுகிறது
.

40களிலேயே ஒரு இஸ்லாமிய அரசரின் மாளிகையில்  ஆழ்ந்த மதப்பற்றுள்ள இரண்டு இந்துக்களின் சமாதி அமைக்குமளவுக்கு  நல்லுறவு இருந்த இந்த தேசத்தில் ஏன் மதங்களின் பெயரால்  இன்னமும் சச்சரவும் சண்டையும்   எழுந்துகொண்டிருக்கிறது?


படங்கள் :ரமணன்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்